Monday, April 14, 2014

744. தருமி பக்கம் (17) - கிணத்துத் தண்ணி ...







*


அதீதம் இணைய இதழில் வெளியான என் கட்டுரையின் மறுபதிப்பு ....




*



ஒன்றரை தெருக்கள் மட்டுமே இருந்த எங்கள் ஊரின் வடக்கு கோடியில் ஒரு கிணறு இருந்தது. அது ஊர்க்கிணறு என்று அழைக்கப்பட்டது, எனக்கு அந்த காலத்தில் கிடைத்த தகவலின் படி இந்தக் கிணறு என் பூட்டனாரால் அவரது நிலத்தில் ஒரு வறட்சிக் காலத்தில் தோண்டப்பட்டது என்று கேள்விப்பட்டேன். ஆனால் என் அப்பா, சித்தப்பாமார்களில் கேட்ட போது அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது என்று தான் சொன்னார்கள். ஆனால் இந்தக் கிணற்றினை ஒட்டி இருந்த சிறிய நிலம் ஒன்று கீரைப் பாத்தி வயல் என்று எங்கள் குடும்பத்தின் பெயரில் இருந்தது. இந்தக் கிணற்றில் எல்லோரும் அவரவர் தண்ணீர் எடுத்துப் போவார்கள். நீளக் கயிற்றில் பனை ஓலையில் செய்த பட்டையில் தண்ணீர் எடுத்துப் போவார்கள். ஆனால் இதோடு கிணற்றில் ஒரு ஏற்றம் ஒன்றும் இருந்தது. அதை எல்லோரும்
தண்ணீர் இறைக்கப் பயன் படுத்துவதிலை; அதற்கும் ஒரு டெக்னிக் இருந்திருக்கும் போலும். சிலர் மட்டும் அதைப் பயன் படுத்துவார்கள். ஆனால் தண்ணீரோ உப்புத் தண்ணீர் தான். ஏற்றத்தில் தண்ணீர் இறைக்கும் போது இக்கிணற்றில் குளித்திருக்கிறேன். அதென்னவோ தெரியவில்லை … நீச்சல் பழகாத வரை கிணற்றுப் பக்கம் போகவோ .. கிணற்றுக்குள் எட்டிப் பார்க்கவோ அதிகமாகப் பயப்படுவேன். நீச்சலுக்குப் பிறகு அந்தப் பயம் போயிற்று. இந்தக் கிணற்றில் குளித்த காலத்தில் உள்ளே லேசாக எட்டிப் பார்த்திருக்கிறேன். பயமாக இருந்தது.

இந்தக் கிணற்றை ஒட்டி கிழக்குப் பக்கம் ஒரு கோயில் இருந்தது. பத்ரகாளியம்மன் கோயில். இக்கோவிலும் பூட்டையா கட்டியதாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதனை ஒட்டி கிழக்குப் பக்கம் பாட்டையா நடத்திய பள்ளிக்கூடக் கட்டிடங்களும், வளாகமும் இருந்தது. கிணறு, பத்ரகாளியம்மன் கோவில், பாட்டையாவின் பள்ளிக்கூடம் எல்லாம் ஒரே இடத்தில் ஒன்றையொன்று ஒட்டியிருந்த்தால் பழைய காலத்தில் கேட்டது போல் இவையெல்லாம் பூட்டையாவிடம் இருந்திருக்கலாம்.

இந்த ஊர்க்கிணற்றுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய வேப்ப மரம் இருந்தது. அதைச் சுற்றி உயர மேடை ஒன்றைக் கட்டி வைத்திருப்பார்கள். வேப்ப மர நிழலும், அமர்ந்து கொள்ள மேடையும் ... ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த போது அந்த மேடை, வேப்ப மரம் எல்லாம் காணாமல் போயிருந்தது. காலத்தில் கரைந்து விட்டன போலும் ...

எங்கள் ஊருக்கு மேல் பக்கம் தான் நல்லூர் இருந்தது. இங்கே நூறு ஆண்டுகளுக்கு மேம்பட்ட உயர்நிலைப் பள்ளியிருக்கிறது. அந்த ஏரியாவில் புகழ் வாய்ந்த பள்ளியாக இருந்தது. பிரிவினைக் கிறித்துவர்கள் ஆரம்பித்த பள்ளி. இதனால் அங்கு வேலை பார்ப்பவர்கள், அவர்களது வீடுகள் என்று நல்லூர் பிரிவினைக் கிறித்தவர்களின் ஊராக இருந்தது. படித்தவர்கள் அதிகம் இருந்த பகுதி.

நான் என் வாழ்க்கையில் பரிசுகள் என்று அதிகம் ஏதும் வாங்கியதில்லை. ஆனால் என் வாழ்க்கையின் முதல் பரிசு இந்த நல்லூர் பள்ளியில் தான் வாங்கினேன். விடுமுறைக்கு ஊருக்குப் போயிருந்தேன். அப்போது நல்லூர் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் நடந்து கொண்டிருந்தன. நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். யாரோ என்னையும் விளையாட்டில் சேர்த்து விட்டார்கள். நல்ல போட்டி .. ஒரு கயிற்றில் வரிசையாக முருக்கு தொங்கப்போட்டு, சின்னப் பசங்க கைகளை பின்னால் கட்டிக் கொண்டு, எகிறி தொங்கும் முருக்கைக் கடிக்க வேண்டும். முருக்கு நமக்குப் பிடிச்ச ஐய்ட்டம் அல்லவா .. ஒரே தாவலில் வாயில் முருக்கு. முதல் பரிசு எனக்கு. ஒரு டப்பா ஒன்று பரிசாக வந்தது.

பின்னாளில் கொஞ்சம் ‘வயதுக்கு வந்த பிறகு’ இந்தப் பள்ளிக்கூடம் இன்னொரு காந்தம் வைத்திருந்தது. அது எங்களை அங்கே இழுத்துக் கொண்டு போய்விடும். எங்கள் வீட்டுப் பக்கத்தில் இருந்த கிணற்றுத் தண்ணீர் உப்புத் தண்ணீர்; குடிக்க முடியாது. ஆனால் நல்லூர் பள்ளியின் முகப்பில் இருந்த கிணற்றுத் தண்ணீர் நல்ல தண்ணீர். எங்கள் ஊர், ஆலடி, நல்லூர் என்று எல்லா பகுதி பெண்களும் தண்ணீர் எடுக்க அங்குதான் வருவார்கள். மாலையில் தேவதாஸ் சித்தப்பா நம்மை அந்தப் பக்கம் இழுத்துக் கொண்டு போய் விடுவார்.

வயசுப் பசங்க இந்த நேரத்தில் தான் அந்தப் பக்கம் உலாத்துவார்கள். சித்தப்பா அவரது ‘ஆளைப் பார்க்க’ நானும் கூடவே போய் அப்படியே நமக்கு ஏதும் தேறாதா என்று பார்த்தேன். ஒன்று மட்டும் நினைவுக்கு வருகிறது. வர்ர பெண்களைப் பற்றிச் சொல்லி அவர்களுக்கு ‘தனிப்பெயர்’ சூட்டும்படி சித்தப்பா உத்தரவிடுவார். அதாவது எங்களுக்கு மட்டும் புரியும் பெயர் அவர்களுக்குச் சூட்டணும். அனேகமாக அவர்கள் பெயர்களை மாற்றி விடுவோம். சரஸ்வதி என்ற பெண்ணின் பெயர் book என்று மாற்றினோம். அதாவது சரஸ்வதி படிப்பு சாமி இல்லையா ... அதனால் நாங்க வச்ச பெயர்: book. காளி = terror; புஷ்பம் = flora, லஷ்மி = கடாட்சம், முத்து = தூத்துக்குடி ... இப்படியாக நம் மக்களுக்கு பல  பெயர்கள் சூட்டினோம் -  ஆங்கிலத்திலும், தமிழிலும் ...

ம் .. ம்.. இதெல்லாம் அந்தக் காலம் ..!




*

3 comments:

துளசி கோபால் said...

:-)))))))))))))

தருமி said...

டீச்சர்,
இம்புட்டு சிரிப்பா ..? ஆமா ... எதுக்கு?

அ. வேல்முருகன் said...

அதென்னமோ ஊருக்குள்ளே இருக்கும் கிணத்துல சப்பைத் தண்ணி கிடக்கு. ஊருக்கு வெளியேதான் நல்ல தண்ணி கிடைக்கு

அப்பா ஊரான காசியாபுரம் கொஞ்சம் பரவாயில்லை. அம்மா ஊரானா காளத்திமடத்தில நல்ல தண்ணிக்கு ஒன்னரை கிலோமீட்டர் நடக்கணும். சும்மாடு வைச்சு தலையில ஒரு குடம் இடுப்பில ஒரு குடம் இப்படி நல்ல தண்ணி சுமந்த காலம் போய்

நல்லியில விட்டுக்கு முன்னாடி தண்ணிபிடிக்கும் காலம் வந்தாச்சு

Post a Comment