Sunday, July 31, 2005

38. Down Down Hindi.../இந்தி எதிர்ப்புப் போராட்டம்'65

1965 'தமிழ் வளர்த்த' மதுரை தியாகராசர் கல்லூரி. முதுகலை படித்துவந்த காலம். அப்போதெல்லாம் நம் மாநிலத்திலேயே மொத்தம் ஐந்தே கல்லூரிகளில் என் பாடம் இருந்தது; கல்லூரிக்கு 15 மாணவர்கள் - சென்னையில் 3; மதுரையில் 2. [அப்போதே அவ்வளவு சிறப்பு வாய்ந்த எங்கள் மதுரையை இப்போதும் ஒரு 'கிராமம்' என்றழைப்பவர்களை இத்தருணத்தில் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆனாலும், இந்த மதுரைக்காரர்களைப் பாருங்களேன். தமிழ்மணத்தில் யாராவது மதுரைக்காரர்கள் இருக்கிறீர்களா என்று கேட்டுப்பார்த்து விட்டேன். ஆட்கள் யாரையும் இதுவரை காணவில்லை. சங்கம் வளர்த்த மதுரையின் நிலைமை இப்படியா? ஏதோ நான் ஒருத்தனா இந்த 'மண்டபத்தில்' நின்று கொண்டு பெனாத்தி/புலம்பிக்கொண்டு மதுரையின் மானத்தைக் காப்பாற்ற வேண்டியதாயிருக்கிறது!] சரி..நம் கதைக்கு வருவோம்.

எனது வகுப்பிலிருந்த 8 மாணவர்களில் நான் ஒருவனே வீட்டிலிருந்து வந்து படித்தவன்; மற்ற எல்லோருமே விடுதி மாணவர்கள். அந்தக் காரணத்தை வீட்டில் சொல்லி நானும் பெரும் பொழுதை விடுதியில் கழிப்பதுண்டு. பிள்ளை விடுதியில் இருந்து நல்லா படிக்கும்னு வீட்டில நினைச்சுக்குவாங்க. நான் விடுதியிலே அதிகம் இருந்ததால் பலர் என்னையும் விடுதி மாணவனாக நினைத்தது உண்டு; விடுதித் தேர்தலுக்கு என்னிடம் ஓட்டுகூட கேட்பார்கள். அப்போதெல்லாம் எங்கள் கல்லூரிக்குத் தமிழை வைத்து ரொம்ப நல்ல பெயர். அடிக்கடி பெரிய தமிழ் அறிஞர்கள் அழைக்கப்பட்டுச் சிறப்புக் கூட்டங்கள் நிறைய நடக்கும். முத்தமிழ் விழா மிக நன்றாக இருக்கும். கல்லூரி நிர்வாகத்தினரே 'தமிழ்நாடு' என்றொரு நாளிதழ் நடத்திவந்தார்கள். தமிழ்ப் பேராசிரியராக அப்போது இருந்த இலக்குவனாரின் தமிழார்வ தாக்கத்தால் கல்லூரி நிர்வாகமும், அதன் தமிழ் ஈடுபாட்டால் மாணவர்களிடமும் தமிழ்ப் பற்று நிறைந்திருந்தது. அதே சமயத்தில் தமிழ்நாட்டு அரசியலில் தி.மு.க.வின் கை ஓங்கிக் கொண்டிருந்தது. அதற்கு ஏற்றாற்போல் அவர்கள் இந்தி எதிர்ப்பைக் கையில் எடுத்துக்கொண்டார்கள். காங்கிரஸ் மேல் மக்களுக்குப் பரவலாக இருந்த அதிருப்தியை வெறுப்பாக மாற்றும் நிலையை ஆளுங்கட்சியாக இருந்த அவர்கள் இந்தி எதிர்ப்பை எதிர் கொண்ட வகையில் ஏற்படுத்திவிட்டார்கள்.

தி.மு.க.வினரின் இந்தி எதிர்ப்பு மாணவர்கள் மத்தியிலும் பரவியது. இந்தியை எதிர்த்து மாநில அளவில் ஜனவரி 25-ம் நாள் ஒரு பெரிய போராட்டம் நடத்த மாணவர்கள் தயாரானார்கள். எல்லா ஊர்களிலும் ஊர்வலங்கள் நடத்தத் திட்டம். ஆனால் எங்கள் கல்லூரி மாணவர்களில் சிலருக்கு போராட்டத்தை அதன் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் யோசனை கொடுக்கப்பட்டது. எங்கள் தமிழ்ப் பேராசிரியரின் முழு ஆதரவு அதற்கு இருந்தது. திட்டம் தீட்ட உயர் குழுக் கூட்டம் என் வகுப்பு நண்பனின் விடுதி அறையில் நடந்தது. அவன், விடுதிக்கே சார்மினார் சிகரெட் தானம் பண்ணும் புண்ணியவான் என்பதைத் தவிர வேறு ஏதேனும் காரணம் இருந்ததாகத் தெரியவில்லை. அன்று நானும் விடுதியில் தங்கியிருந்தேன்.

நண்பன் ஏற்கெனவே சொல்லியிருந்தான் அந்தக் கூட்டத்தப்பற்றி. இரவு 11 மணிக்கு ஓரளவு விடுதி அடங்கியபின் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்க நான் ஒரு பார்வையாளனாக அறையின் ஓரத்தில் நண்பனோடு அமர்ந்திருந்தேன். கூட்டம் சேர ஆரம்பித்தது. முக்கிய முன்னணி மாணவர்கள் - காமராசன், காளிமுத்து. முன்னவர் எனக்கு ஓராண்டு ஜுனியர்; பின்னவர் இரண்டாண்டு. அப்போதெல்லாம் கல்லூரியே காமராசனுக்கு விசிறிதான். பேச்சில் இயற்றமிழும், கவிதை நடையும் கொஞ்சும். அவர் பேசும்போது அவர் வாய் ஒருவிதமாகக் கோணும்; அதுவும் அழகுதான் , போங்கள். பெருந்தலைவர் காமராஜர் எங்கள் கல்லூரிக்கு ஒருமுறை வந்தபோது, 'தலைவர் காமராஜருக்கு மாணவன் காமராசன் தரும் வரவேற்பு' என்று பேசிய வரவேற்புரை, ரோடை ஒட்டி இருந்த அந்த அவசர மேடை எல்லாமே இன்னும் நினைவில் இருக்கிறது. காமராஜரே அசந்து நின்றார்; தன் உரையில் அதைக் குறிப்பிடவும் செய்தார். அதுபோன்ற உரைதரும் நிகழ்ச்சிகளுக்கு கல்லூரிக்கே அவர் ஒரு show-piece'. அவரைப்பேச வைத்து மாணவர்களைக் கேட்க வைப்பதற்காகவேகூட சிறப்புக்கூட்டங்கள் நடத்துவதுபோலத் தோன்றும். அவரில்லாவிட்டால் 'substitute'ஆக வருவது காளிமுத்து. இவருடைய தமிழ், ஆற்றொழுக்கு. ஆனால், காமராசனது வீச்சோ கல்லும் காடும் தாண்டி வரும் காட்டாறாகவும் வரும்; மற்றொரு நேரத்தில் சோலைகள் ஊடேவரும் தென்றலாகவும் வரும். பின்னால் கவிஞன் காமராசன் என்று கொஞ்சகாலம் எல்லோருக்கும் தெரிபவராக இருந்தார். 'கருப்புப் பூக்கள்' என்று நினைக்கிறேன் - அவரது பேசப்பட்ட கவிதைத் தொகுப்பு. சில சினிமா பாடல்கள்கூட எழுதினார். அடுத்தவர்தான் இப்போதைய சட்டசபையின் அவைத்தலைவர்.

கூட்டம் ஆரம்பமானது. முதலில் போராட்டத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. எனக்கோ ஆச்சரியமான ஆச்சரியம்.அந்த முன்னணி மாணவர்களின் 'தீரத்தை'விட என்னை அதிகம் பாதித்தது அவர்களது'சுதந்திரம்'. நானோ வீட்டுப்பறவையாக, முளைத்த சிறகுகள் வெட்டி விடப்பட்டனவா, இல்லை அவைகள் அன்று வரை மட்டுமல்லாது அதற்குப் பிறகும் பல ஆண்டுகளுக்கு வளராமலே இருந்துவிட்டதா தெரியவில்லை; பாவப்பட்ட ஜென்மம்போல வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கத்தான் முடியும். ஆனால் இவர்கள் மட்டும் எப்படி 'வீட்டுப்பறவைகளாக' இல்லாமல் 'விடுபட்ட' பறவைகளாக இருக்கிறார்கள் என்ற ஆச்சரியம்.அந்த 'விடுபட்ட' பறவைகள், குறிக்கப்பட்ட நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே 'அண்டர்கிரவுண்ட்'ஆகிவிடவேண்டுமென்றும்,போராட்ட நாளில் கல்லூரி மாணவர்கள் அனைவரையும் கல்லூரி வாசலில் திரட்டி வைத்திருக்க வேண்டுமென்றும், அப்போது நமது முன்னணி மாணவர்கள் 'டிராமெட்டிக்'காகத் தலைப்பாகை சகிதம் சாதாரணத் தோற்றத்தில் வந்து மாணவ கூட்டத்தில் கலந்துவிடவேண்டுமென்றும், அன்று அந்த அறையில் இருந்த மாணவர்களுக்கு மட்டுமே அது தெரியுமாதலால் அவர்கள் அந்த முன்னணி மாணவர்களைச் சூழ்ந்து போலீஸிடமிருந்து தனிமைப்படுத்திவிட வேண்டுமென்றும், சட்ட எரிப்பைப் போலீஸ் தடுப்பதற்குமுன்பே முடித்துவிடவேண்டுமென்றும், அவர்கள் கைது செய்யப்பட்ட பின் மாணவர்களை மதுரையின் நான்கு மாசி வீதிகளைச் சுற்றி ஊர்வலம் செல்ல திரட்டிச்செல்லவேண்டுமெனவும் திட்டம் தீட்டப்பட்டது. அப்போது ஒரு அப்பாவிக்குரல் கேட்டது, சட்ட எரிப்புக்கு சட்டப்புத்தக்திற்கு எங்கே போவது என்று. பட்டென வந்தது ஒரு பதில். ஏதாவது நம்ம நோட்ஸ் ஒண்ணை எரிச்சால்போதும் என்று ஒரு பதிலும், அதை அடுத்து, எரிச்சிட்டா அதுக்குப்பிறகு சட்டமும், நம்ம நோட்சும் எல்லாம் ஒண்ணுதான் என்ற தத்துவமும் வந்தது. அப்படியாக, கடைசிச் சட்டப்பிரச்சனையும் தீர்த்துவைக்கப்பட்டது.

குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில், கல்லூரி வாசலின் முன் உள்ள மண்டபத்தின் அருகில், தலையில் முண்டாசுடன் 'எரிப்பாளர்கள்' வந்து சேர்ந்தது; மாணவர்கள் மத்தியில் புகுந்தது; மாணவர் கூட்டம் அரண் அமைத்தது; நடுவில் நின்று'சட்டம்' எரித்தது - எல்லாமே 'மிலிட்டரி ப்ரஸிஷனோடு' நடந்தேறியது. சட்டம் எரித்தவர்கள் கைதானார்கள்; புதிய வேகம் பிறந்தது. மாணவர் ஊர்வலம் நகருக்குள் மாசி வீதிகளில் வலம் வந்தது. கீழவாசலுக்கு வரும்போதே மற்ற கல்லூரி, பள்ளி மாணவர்களால் ஒரு பெரும் பேரணி உருவானது. தெற்கு மாசி வீதி வரை அமைதி காத்தேன் -ஏனெனில் அதுவரை நம்ம ஏரியா! யாராவது பாத்துட்டுப் போய் வீட்டுல வத்தி வச்சா என்ன பண்றது? மேற்கு மாசி வீதி அடைந்தபோது கூட்டம் பெருகியது; மாணவர்களின் உற்சாகம் கரைபுரண்டது. மாணவர்களின் வரிசையிலிருந்து விலகி, கோஷம் போடும் பணி தரப்பட்டது.

"டவுண்...டவுண்.."என்று லீட் கொடுக்க, மற்ற மாணவர்கள் "இந்தி" என்று பதில் தர வேண்டும். என்ன, ரொம்ப சாதாரணமாகத் தெரிகிறதா? அதுதான் இல்லை.திடீர் திடீர் என்று பல சுருதிகளில், ஏற்ற இறக்கங்களோடும், நீ...ட்...டி முழக்கியோ, டக்கென்றோ நான் கூற பதில் அதற்குச் சரியாக அதே காலக்கட்டுப்பாட்டோடு, அதே சுருதியோடு, அதே ஸ்தாயியில் கொடுக்கப்பட வேண்டும்; எவ்வளவு கவனத்துடன் சொல்லவேண்டும் தெரியுமா? வெறும் 'மெக்கானிக்கலாக' சத்தம் போட்டதாக நீங்கள் நினைத்துவிடக்கூடாது. இதோடு, 'பிஸிக்கல் இன்வால்வ்மெண்ட்'டும் தேவை; கையை ஆட்டி, குதித்து... தொண்டை தாங்குமளவிற்கு லீட் கொடுத்தேன். மேலமாசி வீதியிலிருந்து வடக்கு மாசி வீதியில் பாதிவரை தொண்டை ஒத்துழைத்தது. அவ்வப்போது வீட்டு ஞாபகம் வந்து பயமுறுத்தினாலும் பணி தொடர்ந்தது. ஆனாலும் அப்பாவுக்கு வேண்டியவர் ஒருவர் ஊர்வலத்தில் என்னைப்பார்த்துவிட்டு, அப்பாவிடம் 'வத்தி' வைக்க (சும்மா சொல்லக்கூடாது; உங்க பையன் நல்லாவே கோஷம் போட்டு லீட் பண்ரான்.) அது பிறகு வீட்டில் 'வெடித்ததும்' - ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..

இப்போது 'மாணவ அலை' வடக்கு மாசி வீதிக்குள் பாதி நீளத்தைத் தாண்டியது. அங்குதான் காங்கிரசின் மாவட்ட காரியாலயமிருந்தது. அந்தக் காலத்தில் அந்த வீதியே மதுரை அரசியலில் ஒரு 'சென்சிட்டிவான'பகுதியாக இருந்து வந்தது.அந்தப் பகுதியில் தெருவே கொஞ்சம் சுருங்கி இருக்கும். ஊர்வலத்தின் எங்கள் பகுதி அங்கே போய்ச்சேருவதற்குள் அங்கே ஏதேதோ நடந்துவிட்டிருந்தது. காரியாலயத்தின் முன் நிறுத்திவைக்கப் பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் ஜீப் எரிந்து கொண்டிருந்தது. எங்களுக்கு முன்பே சென்றிருந்த மாணவக் கண்மணிகளின் வேலைதான் அது. அதில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் அதில் அதிகம்பேர் பள்ளி மாணவர்கள்! தீயணைப்பு வீரர்கள் வந்து சேர்ந்திருந்தார்கள். நாங்கள் அந்தப் பகுதிக்குப் போய்ச் சேரும்போது ஒரு கயிறிழுப்புப் போட்டியே நடந்துகொண்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் தங்கள் நீர்க்குழாய்களோடு ஜீப்பை நோக்கி வருவார்கள்; ஜீப்பின் முன்னால் வந்து சரியாக அவர்கள் தண்ணீரைத் திறந்துவிட்டவுடன் ஒரு பெரிய மாணவர்கூட்டம் அப்படியே அவர்களை மறித்து பின்னேறச்செய்யும். தீயணைப்புப்படையின் மேலதிகாரிகள் மாணவர்களைச் சமாதானப்படுத்த முயற்சிப்பார்கள். மீண்டும் நீர்க்குழாய்கள் ஜீப்பை நோக்கி வரும்; மீண்டும் அவர்கள் திசை திருப்பப்படுவார்கள். இந்த 'விளையாட்டு' தொடர்ந்தது. மாணவர்களுக்கு ஜீப் முழுமையாக எறிந்துவிட வேண்டுமென்ற உயர்ந்த குறிக்கோள்; தீயணைப்புப் படையினருக்கோ எரியும் ஜீப் வெடித்து உயிர்ச்சேதம் ஏதும் நடந்துவிடக்கூடாதே என்ற பதைபதைப்பு.

இதற்குள் போலீசும் வந்தது. கூட்டத்தை அடக்கமுடியாதலால் கண்ணீர்ப்புகை குண்டு போட முடிவெடுத்தார்கள். முதல் குண்டு நான் இருந்த பகுதியிலேயே, நான் நின்ற இடத்திற்குச் சிறிதே முன்னால் வந்து விழுந்தது. ஒரே புகை மூட்டம். கூட்டம் சிதறியது. முகமெல்லாம் எரிச்சல். கண்களின் எரிச்சல் தாங்க முடியவில்லை. பக்கத்தில் ஒதுங்க இடம் தேடினேன். எல்லா வீட்டுக்கதவுகளும் மூடியிருந்தன். ஏதோ ஒரு வீட்டின் உயர்ந்த திண்ணை இடம் கொடுத்தது. ஆனால் நான் போவதற்குள் அது 'ஹவுஸ்புல்'. எப்படியோ ஓரத்தில் தொற்றிக்கொண்டேன். திடீரென்று என் காலைக் கட்டிப்பிடித்துக் கொண்டு என் இடுப்பு உயரமே ஒரு பள்ளிச்சிறுவன் - சிறிது நேரம் முன்பு வரை அவனும் நானும் ஒரேமாதிரி 'போராளிகள்'- அழுதுகொண்டு தொற்றிக்கொண்டான். எல்லோரும் ஒருவர் மீது ஒருவராக பெருகிவந்த கண்ணீரோடு போராடிக்கொண்டிருந்தோம். எங்களுக்குப் புகலிடம் கொடுத்த வீட்டுக்குள்ளிருந்து பெரியவர் ஒருவர் கை நிறைய சின்ன வெங்காயங்களோடு வந்தார். 'இதைக்கசக்கி கண்களில் தேய்த்துக்கொள்ளுங்கள்' என்றார். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என்பார்களே, அப்படித்தான் தோன்றியது. என்ன சதித்திட்டமோ என்றுதான் நினைத்தோம். அவரோ 'எனது சுதந்திரப்போராட்ட அனுபவத்தில் சொல்கிறேன்; சும்மா பயப்படாமல் தேய்த்துக்கொள்ளுங்கள்' என்றார். நான்தான் முன்னால் நின்று கொண்டிருந்ததால் நான்தான் முதல் பலிகிடா மாதிரி அவர் கசக்கிக்கொடுத்த வெங்காயத்தை முகத்திலும், கண்களிலும் தேய்த்தேன். பயங்கர ஆச்சரியம். அடுத்த வினாடியே எரிச்சல் போய், முகம் கண் எல்லாம் குளு குளுவென்றாச்சு. எரிச்சல் எல்லாம் 'போயே..போச்சு'. அந்தச் சின்னப் பையனுக்கும் தேய்த்துவிட்டேன். திண்ணையைவிட்டு இறங்கினோம். 'போராளிகள்' எல்லாம் எங்கே? சிதறிய நெல்லிக்காய்கள்தான்!

ஜீப் மட்டும் தனியாய், முழுவதுமாய் எரிந்து எலும்புக்கூடாய் நின்றது.

33 comments:

வசந்தன்(Vasanthan) said...

மிக நன்றாக இருக்கிறது.
சுவாரசியமாகவும் எழுதியுள்ளீர்கள்.
வலைப்பதிவர்களில் நீங்கள் தான் மிக மூத்தவரென்று நினைக்கிறேன்.
இன்னும் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்.

ஜோ/Joe said...

தருமி,
சுவாரசியமான பதிவு.ஆனா ஒரு சின்ன சந்தேகம் ..'இந்தி எதிர்ப்பு' என்றே குறிப்பிடுகிறீர்கள் .நான் இது வரை 'இந்தி திணிப்பு எதிர்ப்பு' என்று தான் புரிந்து வைத்திருக்கிறேன்

மாயவரத்தான் said...

பார்ப்பனிய எதிர்ப்பு என்ற பெயரில் கண்மூடித்தனமாக பிராமணர்களை எதிர்ப்பது போன்றது இந்தி திணிப்பு எதிர்ப்பு என்ற பெயரில் இந்தியை எதிர்த்ததும். 'லேபிள்' எப்படி இருந்தால் என்ன 'சரக்கும், அது உள்ளே சென்ற பிறகு ஏர்படத்தும் தாக்கமும்' ஒன்று தான். அவரவர் விருப்பப்படி அந்த போராட்டத்திற்கு பேர் வைத்துக் கொள்ள வேண்டியது தான். சிலருக்கு ஹிந்தி எதிர்ப்பு. சிலருக்கோ ஹிந்தி எதிர்ப்பு என்ற பெயரில் அனைவருக்கும் ஹிந்தியை அனுமதிக்காமல், அதன் மூலம் முப்பது ப்ளஸ் ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்ப வாரிசிற்கு அந்த மொழியை ஒரு பிளஸ் பாயிண்ட்டாக வைத்து பதவி பெறச் செய்வது.

Sri Rangan said...

தங்கள் அநுபவம் சிறப்பான பதிவாக மாறியுள்ளது.மதுரையென்றால் நமது பக்கம்(யாழ்ப்பாணத்தில்)தமிழ் என்றே அர்த்தம்.இந்த மதுரையைப் பார்க்க நம்மில் பலருக்கு அதிக ஆசை.ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.மற்றது தமிழ் வளர்த்த நகரம்,வரலாற்றுச் சங்கதிகளைக் காணும் அவா.இதானால் விஜயகாந்தைக்கூட ஒரு பாசத்தோட பார்ப்பதுண்டு.அவரது படம் பார்க்கும்படி அமையாதுபோகினும் தமிழரென்று ஒரு துடிப்புண்டு.என்னவோ மதுரையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.அது தமிழரின் குறியீட்டு நகரம்.

-L-L-D-a-s-u said...

தருமி அவர்களே ..

அந்த போராட்டத்திற்காக நீங்கள் பெருமை படுகிறீர்களா?

தருமி said...

"அந்த போராட்டத்திற்காக நீங்கள் பெருமை படுகிறீர்களா? "


ஆம்.

Anonymous said...

//பெருமை படுகிறீர்களா?//

பெருமை'ப்' படுகிறேன் என்பது நெத்தியடி.

Anonymous said...

Ayya Dharumi,
Hindi thinippu matrum athai ethirthu porattam patri inge pathivu seiyungalen.
Ippodaya thalaimurai (ennayum serthu) hindi thinippu patri avvalavu vivaram ariyaamal irukirom, ippodaya thalaimurai dravida katchigal arasiyal laabathirtku mattume hindi-yai ethirthathaagaa ninaikiraargal.

Abu Umar said...

//தமிழ்மணத்தில் யாராவது மதுரைக்காரர்கள் இருக்கிறீர்களா என்று கேட்டுப்பார்த்து விட்டேன். ஆட்கள் யாரையும் இதுவரை காணவில்லை.//

தமிழ்மணத்தில் மதுரை பதிவர்கள் எனக்குத் தெரிந்து உண்டு.

மருதைகாரன் உண்டா என்று கேட்டால் பதில் சொல்லக்கூடும்.

மற்றபடி கட்டுரை நன்றாக உள்ளது.

Anonymous said...

meenaks maduraikkarar allava??

Anonymous said...

என்ன இப்படிச் சொல்லீட்டிங்க? நாங்கெல்லாம் மருதக்காரவுக இருக்கோம்ல. எழுதுறதுதான் இல்லை மத்தபடி அடிக்கடி வந்து படிப்போம்ல. நானும் உங்கள மாதிரித்தேன் இங்க வந்த புதுசுல நம்மூர்ப் பயலுகளத் தேடினேன். ஒருத்தனும் ஆகப்படல. அட சும்மா விடுங்க பாஸு.

துளசி கோபால் said...

//தமிழ்மணத்தில் யாராவது மதுரைக்காரர்கள் இருக்கிறீர்களா என்று கேட்டுப்பார்த்து விட்டேன். ஆட்கள் யாரையும் இதுவரை காணவில்லை.//

என்ன இப்படிச் சொல்லிட்டீங்க தருமி?

நான் பொறந்ததுமட்டும்தான் கரூர். 12 வயசுவரை வளர்ந்தது மதுரை மாவட்டம்தான். அப்ப உங்களுக்கு என் வத்தலக்குண்டு கதைகளை ஒவ்வொண்ணா எடுத்துவிடவேண்டியதுதான் பொல.

கோபால் கூட மருதைக்காரர்தான், சொந்த ஊர் போடி.

Anonymous said...

madurai malli ??/

Na.Kannan (thiribhuvanam)

மாலன் said...

அன்புள்ள தருமி,

அந்த ஜ்னவ்ரி 25ஐ மிக அருமையாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். நானும் பள்ளி மாணவனாக அந்த ஊர்வலத்திலும் போராட்டத்த்லும் கலந்து கொண்டேன். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் முன் அடி வாங்இய தழும்பு இப்போதும் என் இடதுகாலில் இருக்கிறது. அது வாழ்க்கையை மாற்றிய நாள். அதுவரைக்கும் படிப்பு கிரிக்கெட், வெட்டி அரட்டை என்று இருந்த என் வாழ்க்கையில் அரசியல் மீது கவன்ம் திரும்பியது அன்றுதான்.மிகத் தற்செயலாகத்தான் நான் அந்த ஊர்வலத்திற்குப் போனேன். பள்ளியில் எல்லோரும் போனதால் நானும் போனேன்.(நான் படித்தது சேதுபதி உயர்நிலைப் பள்ளி)

வடக்குமாசி வீதியில் கிருஷ்ணன்கோவில் தாண்டி, ராமாயண்ச்சாவடி அருகில் ஜீப் எரிந்ததும்,அப்போது எம்.பியாக இருந்த என்.எம்.ஆர் சுப்புராமன் ஓடி வந்ததும், எஸ்.பி.யாக இருந்த ஸ்ரீபால் மண்டபத்தின் மேலேறி ஒருகையால் தூணைப் பிடித்துக் கொண்டு கலைந்து போகுமாறு எச்சரித்ததும், பின் தடியடி நடத்தியதும், கலைந்து ஓடியவர்கள் மீது கண்ணீர் புகை வீசியதும், ஒரு சின்மா போல இன்னும் மனதில் இருக்கிறது.

காளிமுத்து காமராசன் மட்டுமல்ல, மேத்தா, பா.செயப்பிரகாசம், இவர்களும் உங்கள் கல்லூரி மாணவர்கள்தான். உங்களுக்கு நினைவிருக்கலாம், மேத்தா அப்போது காங்கிரஸ் ஆதரவாளர்.

நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள். நன்றி

தருமி said...

அனானிமஸ்காரர்களுக்கு,
ஏதாவது ஒரு புனைப்பெயரிலாவது வாங்களேன். இப்படி பொத்தாம் பொதுவாக 'அனானிமஸ்'னா பதில் கொடுக்கிற 'மூட்' வரமாட்டேங்குது, please.

வசந்தன் -"நீங்கள் தான் மிக மூத்தவரென்று நினைக்கிறேன்" - அதுதான் நானே பட்டம் சூட்டிக்கொண்டேனே!
"உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்"
வயசான ஆளுகளுக்கு இந்த மாதிரி சந்தர்ப்பம் கிடைச்சா விடமாட்டாங்க, தெரிஞ்சுக்குங்க! ஜாக்கிரதை.

ஜோ - 38-ன் பின்குறிப்பு-2 ல் உங்கள் கேள்விக்கு விடையளிக்க முயல்கிறேன்; சரியா?

மாயவரத்தான் - 'நம்பர் 1'அல்லவா, அதுதான் நீங்கள் 'எங்கோ' போய்விட்டீர்கள்; அவ்வளவு உயரம் என்னால் ஏறிவரமுடியவில்லை; மன்னிக்கவும்.

ஸ்ரீரங்கன் - 40வது பதிவை உங்களுக்காகவே பதிந்துள்ளேன். மருதக்காரர்கள் அனைவரின் சார்பாக - மிக்க நன்றி.

அபு உமர் - கொஞ்சம் லிஸ்ட் கொடுங்களேன்.

கணேசன் - உங்கள் 'முதல் எழுத்து' பதிவைப்பார்த்தேன். தொட்டது.

உங்களுக்காக 41-ம் பதிவு.

ஆமா, நானும் வாத்தியார் வீட்டுப் பிள்ளை. அது எப்படி, நீங்க மட்டும் என்னைமாதிரி தரிசாகாம ஒழுங்கா படிச்சு நல்ல பிள்ளையா ஆயிட்டீங்க? சந்தோஷம்.

துளசி - Baட்லகுண்டு ஆளா நீங்க? வத்லகுண்டுக்கும்,போடிக்கும் வாழ்த்துக்கள்.

மாலன் - இந்தப் பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் நன்கு மனதை நிறைத்தன. இவ்வளவு பேர் இருப்பது அறிந்து மகிழ்ச்சி. நீங்கள் மதுரைக்காரரென அமெரிக்கன்கல்லூரி ஆங்கில முதுகலைத்துறைக்கு ஒரு உரையாடலுக்காக வந்தபோதுகூட கூறவில்லையே!
உங்கள் அனுமதியோடு நீங்கள் சரியாகக் கொடுத்துள்ள போராட்ட தேதியை என் பதிவில் சேர்த்துக்கொள்கிறேன். 'அந்த நாள்' எதுவென அறிய மிகவும் தேடினேன்; நன்றி.
என்னைக் கட்டிப்பிடித்த ஒரு பையனைப் பற்றி எழுதியிருந்தேனே; அது நீங்களாக இருந்திருந்தால் "யாதோன்கி பாராத்..?
மாதிரி நிஜமாகவே cinematic-ஆக இருந்திருக்குமே!!

தருமி said...

"மண்ணிக்கவும்" - இது நீங்கள் எழுதியதை cut-n-paste செய்தது.
"மண்ணிக்கவும்"(!) ஆ.உ., அவர்களே,
உங்கள் பின்னூட்டம் வாசித்ததும் ஆங்கிலப் பழமொழி ஒன்று நினைவுக்கு வந்தது: Picking holes in the pancake - always!

தருமி said...

Dharumi said...
"மண்ணிக்கவும்" - இது நீங்கள் எழுதியதை cut-n-paste செய்தது.
"மண்ணிக்கவும்"(!) ஆ.உ., அவர்களே,
உங்கள் பின்னூட்டம் வாசித்ததும் ஆங்கிலப் பழமொழி ஒன்று நினைவுக்கு வந்தது: Picking holes in the pancake - always!

மாலன் said...

ஆரோக்கியம் உள்ளவருக்கு:
இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி எனக் குறிப்பிடப்பட்டாலும்,அது இந்தி ஆதிக்கத்திற்கான கிளர்ச்சி. இந்திய் அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது எது நாட்டின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்ற விவாதம் அரசமைப்பு சட்ட மன்றத்தில் நடந்தது. அப்போது ஒரு முடிவுக்கு வரமுடியாததால், 15 ஆண்டுகள் ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்கும் பின்னர் இந்தி ஆட்சி மொழியாகும் என் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இடையில் நாடாளுமன்றத்தில் நாஞ்சில் மனோகரன் எழுப்பிய விவாதத்தின் போது நேரு, 'இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் நீடிக்கும்' என்று ஓர் உறுதி மொழி கொடுத்தார். 1964ல் நேரு காலமாகிவிட்டார். சாஸ்திரி பிரதமராக ஆனார். அவர் 15 ஆண்டுக் காலம் முடியும் 1965 ஜனவ்ரி 26 முதல் இந்தி ஆட்சி மொழியாகும் என அறிவித்தார். நேருவின் உறுதிமொழி சட்டமல்ல, அதனால் அதனை நடைமுறைப்படுத்தத் தேவை இல்லை என்ற வாதமும் வைக்கப்பட்டது. அதனால்தான் ஜனவ்ரி 25 போராட்டநாளாகக் குறிக்கப்பட்டது.

உலகத்துத் தீமைகள் அனைத்திற்கும் தீ மூட்ட உன அண்ணனது கரங்கள் வலுவற்றிருக்கலாம் ஆனால் உன்னை இரண்டாம் தரக் குடிமகனாக்கும் இந்திக்குத் தீ மூட்ட் அவை துவளப்போவதில்லை என்ற வாசகம் கொண்ட சுவ்ரொட்டிகள் நகரெங்கும் ஒட்டப்பட்டிருந்தன. அதிலிருந்த இரண்டாந்தரக் குடிமகன் என்ற வார்த்தை என்னை வதைத்தது. என் தந்தை பாட்டன் இருவருமே இந்திய சுதந்திரத்திற்காகப் போரடியவர்கள். என்னுடைய நாட்டில் நான் இரண்டாம்தரக் குடிமகனாக இருக்கவா அவர்கள் போராடினார்கள் என்ற கேள்வி என் மனதில் இருந்தது. இவைதான் நான் ஊர்வலத்தில் பங்கேற்கத் தூண்டின. "பள்ளியில் எல்லோரும் போனதால் நானும் போனேன்" என்று நான் சொன்னது அந்த ஊர்வலத்திற்கான initiativeஐ நான் எடுக்கவில்லை என்ற அர்த்தத்தில்.
தமிழுக்கு எதிராக ஓர் ஊர்வலம் போனால் அதில் கலந்து கொள்ள மாட்டேன். தமிழ் யாரையும் அடிமைப்படுத்த வேண்டாம். அதற்காக அது அடிமையாகவும் இருக்க வேண்டாம்.

2.கூட்டத்தில் தமிழிலும் முழக்கங்கள் எழுப்பப்பட்ட்ன.உடல் தமிழுக்கு உயிர் மண்ணுக்கு என்ற முழக்கம் பிரபலமானது அப்போதுதான்.
தருமி, பொதுவாக நான்,என் சொந்த விவரங்களை மேடைகளில் பகிர்ந்து கொள்வதில்லை.மைக்ரோசாப்ட் தளத்தில் உள்ள எனது பேட்டியில் என் மதுரைத் தொடர்பைப் பற்றிப் பேசிய்ருக்கிறேன். என் மூதாதையர்கள் ஊர் நெல்லை. ஆனால் என் படிப்பு முழுதும் மதுரையில் கழிந்தது. நீங்கள் அமெரிக்கன் கல்லூரி மாணவரா? டாக்டர். நெடுமாறன் உங்கள் ஆசிரியரா? இல்லை சகாவா? டாக்டர்.போத்தி ரெட்டியுடன் பழக்கம் உண்டா?
அன்புடன்
மாலன்

arulselvan said...

-----------------------
>>>
இந்திய் அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது எது நாட்டின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்ற விவாதம் அரசமைப்பு சட்ட மன்றத்தில் நடந்தது. அப்போது ஒரு முடிவுக்கு வரமுடியாததால், 15 ஆண்டுகள் ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்கும் பின்னர் இந்தி ஆட்சி மொழியாகும் என் முடிவு செய்யப்பட்டது.
---------------------------
ஹிந்தி தேசியமொழி என்ற முடிவும் எப்படி சற்றும் நடுநிலைமையின்றி செய்யப்பட்டது என்பதை அரசியலமைப்புக் குழுவின் உறுப்பினராக இருந்த சி. சுப்பிரமணியம் தான் உயிருடன் இருக்கும் வரையில், ஹிந்துவில் மொழிப்பிரச்சினை பற்றி யார் தவறான கருத்துத் தெரிவித்தாலும் உடனே ஆசிரியருக்கு கடிதங்கள் பகுதியில் எழுதிவிடுவார். நடுவண் அமைச்சில் கூட்டாட்சி இயல்பாக வந்த விபிசிங் காலம் முதற்கொண்டு இம்மொழிப்பிரச்சினை அவ்வளவு பெரிதாக இல்லை. அப்படி தவறாக ஏதோ தேச எதிர்ப்பு போல் இதைக்காட்டிப் பேச ஆளில்லாததால் இப்போது விவாதமும் இல்லை. மற்றபடி தமிழகத்தில் நடந்த மொழிப்போராட்டங்கள் அத்தனையும் நியாயமானவைதான். அதில் பங்குபெற்ற என் முந்தைய தலைமுறை மாணவர்களுக்கு எங்கள் நன்றி எப்போதும் உண்டு.
அருள்

குழலி / Kuzhali said...

உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி, நிதானமாக படிக்க வேண்டுமென்றே பதிவிட்ட உடன் படிக்கவில்லை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தி எதிர்ப்பு பற்றிய போராட்டத்தை படிக்கின்றேன், அப்படியே நேரில் பார்ப்பது போன்றதொரு உணர்வு உங்கள் பதிவை படித்த பிறகு.

இந்தி ஆட்சி மொழியாக்க நடந்த வாக்கெடுப்பில் பாதி ஆதரவாகவும் பாதி எதிர்ப்பாகவும் விழுந்ததென்றும் இரண்டு பக்கமும் சமமான வாக்குகள் இருந்ததால் சபாநாயகர் தன் வாக்கை இந்தி மொழிக்கு ஆதரவாக அளித்ததால் சட்டம் நிறைவேறியதாகவும் எங்கேயோ படித்தேன்.

மேலும் மிக மொட்டையாக வைக்கப்படும் வாதம் என்னவெனில் பெரும்பான்மையினர் பேசும் மொழி இந்தி என்பது. வட மாநிலங்களில் கூட பல மாநிலங்களுக்கு தனித்தனியான மொழி உண்டு என கேள்விப்பட்டுள்ளேன், ஆனால் இன்று அந்த மொழிகளின் நிலை என்ன? அவர்களெல்லாம் தன் தனித்துவத்தை இழந்து நிற்கின்றனர், தன் அடையாளத்தை இழந்து இந்தி என்ற நிழலின் கீழ் நிற்கின்றனர்.

பெரும்பான்மையோனோர் பேசும் மொழியென்பதற்காக தேசிய மொழியாக்கினால் நம் நாட்டில் காக்கை தான் தேசிய பறவையாகவும், நாய்தான் தேசிய விலங்காகவும் இருக்க வேண்டும் என கிண்டலாக யாரோ எழுதியிருந்ததை படித்தேன்.

பத்திரிக்கைகளில் படிப்பதை விட பங்கேற்றவர்களின் நேரடியான எழுத்துகள் ஒரு புதிய அனுபவத்தை தரும், தொடர்ந்து எழுதுங்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.

நன்றி

தருமி said...

மாலன்,
உங்கள் பின்னூட்டத்தினை எனது பதிவில் மேற்கோள் காட்ட நினைத்துள்ளேன்; அனுமதி உண்டுதானே?

"நீங்கள் அமெரிக்கன் கல்லூரி மாணவரா? "
இல்லை. இதோஎன்னைப்பற்றி.

"டாக்டர். நெடுமாறன் உங்கள் ஆசிரியரா? இல்லை சகாவா? "
தியாகராசர் கல்லூரியில் contemporaries. அமெரிக்கன் கல்லூரியில் colleagues. வாடா, போடா, மாப்ள - உறவு

:டாக்டர்.போத்தி ரெட்டியுடன் பழக்கம் உண்டா"
வாருமைய்யா, போரும்மையா - பழக்கம்.

அதைவிட நான் 4/5-வது முறை சிறை சென்றபோது(!) நாங்கள் மூவரும்தான் சென்றோம். போத்தி நித்தமும் மாலைகளில் நாட்டுப்பாடல்கள் பாட, நெடு மீராவின் கவிதைகளைப் பற்றிப்பேச (மீராவும் 'உள்ளே'தான் இருந்தார்), நான் முழுநேரப் பணியாக 'scrabble'யை சக 'கைதி'களுக்குச் சொல்லிக்கொடுக்க - (அமெரிக்கன் காலேஜ் ஆளுக ரொம்ப அலம்பல்'பா! )

இப்போதுதான் தோன்றுகிறது - ஜெயில் அனுபவத்தைப் பற்றிகூட எழுதலாமே!

மாலன் said...

>>உங்கள் பின்னூட்டத்தினை எனது பதிவில் மேற்கோள் காட்ட நினைத்துள்ளேன்; அனுமதி உண்டுதானே?<<
தாரளமாக. அது இனி பொதுச் சொத்து. சேதம் விளைவிக்காமல் யார் வேண்டுமானலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அன்புடன்
மாலன்

Unknown said...

//பார்ப்பனிய எதிர்ப்பு என்ற பெயரில் கண்மூடித்தனமாக பிராமணர்களை எதிர்ப்பது போன்றது இந்தி திணிப்பு எதிர்ப்பு என்ற பெயரில் இந்தியை எதிர்த்ததும். 'லேபிள்' எப்படி இருந்தால் என்ன 'சரக்கும், அது உள்ளே சென்ற பிறகு ஏர்படத்தும் தாக்கமும்' ஒன்று தான். அவரவர் விருப்பப்படி அந்த போராட்டத்திற்கு பேர் வைத்துக் கொள்ள வேண்டியது தான். சிலருக்கு ஹிந்தி எதிர்ப்பு. சிலருக்கோ ஹிந்தி எதிர்ப்பு என்ற பெயரில் அனைவருக்கும் ஹிந்தியை அனுமதிக்காமல், அதன் மூலம் முப்பது ப்ளஸ் ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்ப வாரிசிற்கு அந்த மொழியை ஒரு பிளஸ் பாயிண்ட்டாக வைத்து பதவி பெறச் செய்வது.//

இன்னும் எத்தனை காலத்திற்கு தான் இதே பாட்டைப் பாடுவிங்க மாயவரத்தாரே?

இந்தி படிக்காததால் தமிழ்நாடு எந்த விதத்தில் முன்னேறவில்லை என்று சொல்லமுடியுமா?

முகமூடி said...

அருமையான பதிவுங்க இது... (காலத்தின் கல்வெட்டு) அடுத்த தலைமுறைக்கு தெரிய வேண்டிய நிறைய விஷயங்கள்... அதை விட உங்கள் நடை...

அப்படியே ஜெயில் அனுபவங்கள் பத்தி மட்டுமல்லாமல், உங்கள் பொது வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தயுமே எழுதுங்கள்...

// 'போராளிகள்' எல்லாம் எங்கே? சிதறிய நெல்லிக்காய்கள்தான் // ஆராவது கல்லக்குடியில உண்மையா என்ன நடந்துச்சின்னு எழுதுங்கய்யா...

Anonymous said...

தருமி, உங்களது நீண்ட பதிவுக்கு நன்றி! எங்களுக்கு அது பல செய்திகளைச் சொல்கிறது. மாலனின் விளக்கத்துக்கும் நன்றி.

இந்திய ஒன்றியம், பல தேசிய இனங்கள் அடங்கிய கூட்டாட்சி அமைப்பு. அதில் எல்லா மொழிகளும் சமமான அந்தஸ்தும், உரிமையும் பெறமுடியவில்லை எனில் அதற்காக போராடவேண்டியது மிகவும் அவசியமானது. ஏனெனில் அது மொழி என்பதைத்தாண்டி ஆரசியல் அதிகாரத்தைப் பற்றி பேசுவதாக அது ஆகிறது. தமிழன் தான் தமிழ்நாட்டைத் தாண்டி வடக்கே போய்விட்டால் ஒரு மொழி தெரியவில்லையே என்பதற்காக தன்னையே சபித்துக்கொள்ளும் நொய்ந்த மனதுடையவனாக இருப்பான் போல. இந்த மொழிப்பிரச்சனையை அறிவியல் மிக எளிதாக தீர்க்கமுடியும்; மத்தியில் ஆளுவோரின் அதிகாரத்திமிரே இது இன்னமும் ஒரு பிரச்சனையாக இருப்பதன் காரணம்.

குழலி / Kuzhali said...

//மத்தியில் ஆளுவோரின் அதிகாரத்திமிரே இது இன்னமும் ஒரு பிரச்சனையாக இருப்பதன் காரணம்.
//
இதற்கு ஆளுபவர்கள் மட்டுமல்ல காரணம், இந்தி பேசும் மக்களின் மனப்பாண்மையும் தான், இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற பேதமே இல்லை, மெத்த படித்து மென்பொருள் துறையில் இருப்பவர்களிலிருந்து பெங்களூரிலே படுக்கை விரிப்பு விற்க தெரு தெருவாக கூவி விற்றுக்கொண்டு போகும் இந்தி பேசும் மனிதன் வரை அவர்களுக்குள்ள மொழி ஆதிக்க மனப்பாண்மைதான் மிக முக்கிய காரணம்.

Anonymous said...

thamizh software illai mannikkavum...
Inge silar mozhi ethirpayum mozhi thinippu ethirpayum ondraaga ninaipathu pola ullathu... Hindi ethirpu poraatam mozhi thinippu ethirpu poraatam, mozhi ethirpu poraatam alla.
Mozhi thinippu ethirppu matrum mozhi unarvu irupathil thavarondrum illaye?

Aanal, ithu pondra sila vishayangal, arasiyal prachanai aagum pothu, satru thisai thirumbi taan poyvidugirathu. Aravazhi poraatam poi sila adavadi seyalgalum sernde nadakindrana. athu hindi ethirpin pothu nadantha sambavangalaagattum, ippothu thamizh kaakka maruthuvar ramadas matrum thirumaavin muyartchi agattum...
Ivargalin muyartchi nichayam thevai, aanal poraatta vazhigalai satru maatri kondaal, sernthu kural koduthaal, nalla palan irukkumendru thondrugirathu. ithu pondra mozhi kaakkum muyartchigal illa vittaal, ilaya thalaimurai thamizh pesuvathaye vittu, mozhiye azhinduvidum abaayam irukirathu (unesco article tamil 50 aandugalil azhindu poi vidum abaayam irukirathendru sonnathaaga nyabagam, google-seithaal kidaikkavillai)

PK: mozhi, niram, saathi, vyaathi - ivartrai kondu matravar nammai mattamaaga paarka anumathikkamal, paarthalum athai porutpaduthaamal poikonde irukka vendum enbathu en karuthu.

aathirai said...

என் அண்ணின் நண்பர் ஒருவர் இந்த போராட்டத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு
மண்டையை போட்டார். அவர்கள் குடும்பத்தில் யாரும் மந்திரியாகவும், பல்லாயிரம்
டிவி சேனல்களுடன் கோடிகோடியாக சம்பாதிக்கவில்லை.

இந்தியை எதிர்த்தார்கள். சரி. அதே நேரத்தில் தமிழகத்தில் திரும்பிய திசையெல்லாம்
வேலை வாய்ப்புகள் கொட்டி வைத்திருந்தால், எவனுக்கு தேவை இந்தி?ஆதை செய்யத்
தவறியதால்தானே பம்பாய்க்கும், டெல்லிக்கும் வேலைக்காக ஓடுகிறார்கள்?

இது ஒரு குழு மனப்பான்மையை சீண்டிவிட்டு அதில் குளிர் காயும் டெக்னிக். அவ்வளவுதான்.
சில கட்சிகள் மதக்கூட்டங்கள் வைத்து வியாபாரம் செய்யும். சிலர் மொழி,
சாதி கூட்டத்தை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள். அவ்வளவுதான். எல்லாம் சதவிகித கணக்கு
கண்டிபிடித்தவனால் வந்த பிரச்சினை.

-L-L-D-a-s-u said...

தமிழ் பேசினால் கௌரவம் என்ற மனநிலை தமிழனுக்கு இருந்தால் அவன் எத்தனை மொழிகள் கற்றாலும் தமிழுக்கு அழிவில்லை. தமிழ் பேச கூச்சப்படுபவனுக்கு , ஆங்கிலமோ ஹிந்தியோ தெரியவேண்டியதில்லை சைகை மொழியே போதும், தமிழை அழிக்க. விரட்ட வேண்டியது ஹிந்தியையோ ஆங்கிலத்தையோ இல்லை, தமிழரின் மனநிலையைத்தான் .

நான் ஹிந்தி வழி கல்வியை ஆதரிக்கவில்லை. அறிவியலை , வரலாறை நாம் நம் தமிழிலே கற்கலாம் .. அல்ல .. கற்கத்தான் வேண்டும் . ஹிந்தியை அதற்குரிய இடத்தில் முன்றாவது மொழியாக வைப்பதில் தவறில்லையே .ஹிந்தியை மூன்றாம் மொழியாக உள்ள கர்னாடக்கத்திலோ கேரளாவிலோ மொழிகள் அழிந்தாவிட்டது? அங்கே இலக்கியம் வளரவில்லையா? ஹிந்தி மட்டுமே நம் வளர்ச்சிக்கு தேவை என்று நான் சொல்லவில்லை . நம்முடைய திறமைகளால் இமயம் அளவு நாம் முன்னேறியிருந்தாலும் , ஹிந்தியும் தெரிந்திருந்தால் ஒரு இன்ச் அளவு அதிகமாக நாம்
முன்னேறியிருப்போமே?
http://lldasu.blogspot.com/2005_02_01_lldasu_archive.html

ஜோ/Joe said...

தமிழ் நாட்டுல தமிழ் கண்டிப்பா ஒரு பாடமாகவாவது படிக்கணும்-னு கொண்டுவர முடியல்ல .இந்த லட்சணத்துல இந்தி கண்டிப்பா படிக்கணும்னு உளறல்கள்..கொடுமைடா சாமி!

ஜோ/Joe said...

தாஸ் அவர்களின் பதிவை படிப்பவர்கள் பின்னூட்டங்களில் சொ. சங்கரபாண்டி அவர்களின் விளக்கங்களையும் படிக்கவும்.

Thekkikattan|தெகா said...

தெற்கு மாசி வீதி வரை அமைதி காத்தேன் -ஏனெனில் அதுவரை நம்ம ஏரியா! யாராவது பாத்துட்டுப் போய் வீட்டுல வத்தி வச்சா என்ன பண்றது?//

அவ்வப்போது வீட்டு ஞாபகம் வந்து பயமுறுத்தினாலும் பணி தொடர்ந்தது.//

:-)) கடமையில் கண்மணியாக இருந்து ஆற்றும் பொழுது உங்களுக்கு அவ்வப்பொழுது வீட்டுப் பயம் பிடித்து ஆட்டியிருக்கிறது... சிறகு வெட்டப்பட்ட வீட்டுக் குருவி ;-)

அப்ப நீங்கள் எல்லாம் சேர்ந்துதான் எனக்கு நியாயமாக கிடைக்கக் கூடிய ஹிந்திக் கல்வி பள்ளியில் கிடைக்காம போச்சா, பாருங்கய்யா... :-))

வீட்டுக்குள்ளிருந்து பெரியவர் ஒருவர் கை நிறைய சின்ன வெங்காயங்களோடு வந்தார். //

அன்னிக்கு அந்த பெரியவர் பாவம் நிறைய சின்ன வெங்காயம் அள்ளி வெளியே விட்டுருப்பார்... இருந்தாலும் அந்த ரகசியத்தை இங்க பகிர்ந்து கிட்டீங்க இப்ப நடக்கிற இந்த WTO சந்திப்பின் பொழுது நடக்கும் கண்ணீர் புகை போரட்டத்திற்கு இது உதவும். பரப்பிபுடுவோம்...

காளிமுத்து உங்க கோஷ்டியா? யம்மாடியோவ்... பார்த்துத்தான் இருக்கணும் இனிமே ;-)

கோமதி அரசு said...

அப்பாவுக்கு வேண்டியவர் ஒருவர் ஊர்வலத்தில் என்னைப்பார்த்துவிட்டு, அப்பாவிடம் 'வத்தி' வைக்க (சும்மா சொல்லக்கூடாது; உங்க பையன் நல்லாவே கோஷம் போட்டு லீட் பண்ரான்.) அது பிறகு வீட்டில் 'வெடித்ததும்' - ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..//

நல்ல நினைவலைகள்.

Post a Comment