Sunday, December 09, 2012

612. இலங்கைப் பயணம் ...4 - பண்ணைகள் (2)
*

*

 17.10.2012

இன்று அடுத்து ஒரு மீன் பண்ணை. இடத்தின் பெயர் பிளியண்டால (Piliyandala).  
இங்கு பார்த்த மீன்களையும் மீன் பண்ணையையும் பற்றிச் சொல்வதை விட அதன் உரிமையாளர், அவர் வீடு, அவரது அழகுணர்ச்சி பற்றி நிறைய சொல்லலாம்.
அவர் ஒரு ஆங்கிலோ-இலங்கைக்காரர். நாங்கள் பார்க்கச் சென்றது வீட்டோடு உள்ள அவரது சின்னப் பண்ணை. மொத்தம் நான்கு பண்ணைகள் வெவ்வேறு இடத்தில் உள்ளன.

ஒவ்வொன்றையும் அழகழகாகச் செய்திருக்கிறார். நுழைந்ததுமே பெரிய கொப்பரைத் தேங்காய் மரம் சில நிறைய காய்கள் சுமந்து வரவேற்கின்றன. குட்டையான மரங்கள். கை தொடும் உயரத்தில் பெரிய தேங்காய்கள். பண்ணையும் முறையாக நிர்வகிக்கப்பட்டு இருந்தது. பண்ணையச் சுற்றிப் பார்த்து விட்டு, வீட்டிற்குப் போனோம்.

எல்லாம் நல்ல ஒரு ஒழுங்கு முறையில் இருந்தன. முன் வாசல் வழியே போய் வீட்டின் பின் பக்கம் போனோம். அட ... ! ஒரு சிட் அவுட். அதிலிருந்தே ஒரு சின்ன தடாகம். சிட் அவுட்டுக்கு எதிர்ப்புறம் ஒரு சிறு நீர்வீழ்ச்சி போல் ஒரு அழகான அமைப்பு.
தடாகத்திற்குள் லில்லி மலர்கள்.


சிட் அவுட்டுக்கு நேர் எதிர்த்தாற் போல் ஒரு குடையின் கீழ் சில நாற்காலிகள் போட்ட ஒரு அமைப்பு.


என்னத்தைச் சொல்ல ... ஒரு சின்ன dream house தான். வீடும், வீட்டைச் சார்ந்த தடாகமும், சின்ன அலைகள் வீட்டுச் சுவற்றைத் தழுவி நிற்பதுவும் .... சிட் அவுட்டில் போட்டிருந்த மேசை கூட இயற்கை மரத்தை அப்படியே வைத்து செய்தது.


 வீட்டின் உள்ளேயும் அதே அழகுணர்ச்சி இருந்தது.


மழைக்காக காமிராவை காருக்குள் வைத்திருந்ததால் அவரது வீட்டை அதிகமாகப் படங்கள்  எடுக்க முடியவில்லையே என்று ஒரு ஆதங்கம்.

வீடும் பண்ணையும் நேர்த்தியான அழகு. பார்த்துப் பார்த்துச் செய்தது. அவரது மனைவியும் தொழிலில் முனைப்போடு இருப்பதாக அறிமுகம் செய்வித்தார். அவர் எனது போட்டி வியாபாரி என்றார் நகைச்சுவையாக.
நன்றாக இனிமையாகப் பேசிக்கொண்டிருந்தார். சிறிது ஆண்டுகள் இலங்கை ராணுவத்தில் இருந்திருப்பார் போலும். அதைவிட்டு வெளியே வந்ததை மகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டார்.

*   *   *   *

அங்கிருந்து அம்பலங்கோட என்ற இட்த்தில் உள்ள இன்னொரு நண்பர் வீட்டுக்கும், அருகிலிருந்த பண்ணைக்கும் சென்றோம். இலங்கையின் ஒரே ஒரு நெடுஞ்சாலை வழியே பயணித்தோம்.

அமலா பால் மாதிரி இல்ல ...?


இடப்பக்கம் மலை. வலப்பக்கம் ஊர்கள். எங்கேயும் ஊர்கள் நெடுஞ்சாலையை வழி மறிக்கவில்லை.

நண்பரின் பண்ணை மற்றவர்களைக் கவர்ந்த்தோ என்னவோ; ஆனால் எனக்கு இரண்டு விஷயங்கள் மிகவும் பிடித்தன. ஒன்று .. அந்த வீட்டின் புராதன வேலைப்பாடு மிகுந்த இருக்கைகள்.

 எல்லாமே அந்தக் காலத்து பெரிய, முரட்டு ஆனால் வேலைப்பாடு மிகுந்த மேசை .. நாற்காலிகள் .. சாய்வு நாற்காலிகள் .. மேலே தொங்கிய பழங்கால எண்ணெய் விளக்குகள். வீட்டுக்குள் 19-ம் அல்லது 20-ம் நூற்றாண்டு பொருட்கள் சூழ்ந்திருந்தன. அவைகளே ஒரு கலை விருந்து.


பிடித்த இரண்டாவது விஷயம் சிகப்பரிசியும்,மீன் குழம்பும் சாப்பிட்டு முடித்த பின் கொடுத்த desserts – மண் சட்டியில் கட்டி எருமைத் தயிர். பக்கத்தில் ஒரு சீசாவில் கூப்பனி. அதாவது பதினி(தெலிஜ)யைக் கருப்பட்டியாக்க காய்ச்சும் போது நடுவில் அரைக் கெட்டிப் பதமாக இருக்கும் கூப்பனி(பெனி) சீசாவில் இருந்தது. தயிரோடு சேர்த்து சாப்பிடணுமாம். கூப்பனியை என் அப்பம்மாவிடம் காட்டுக்குள் இருக்கும் விடிலியில் வாங்கிச் சாப்பிட்ட சின்னப் பிள்ளை நினைவு எனக்கு வந்தது. அந்தச் சுவையும் நினைவுக்கு வந்தது. சுடச் சுட கூப்பனியை பனைமரத்து ஓலைப் பட்டையில் வாங்கிச் சப்பிச் சாப்பிட்டது நினைவுக்கு வந்தது. நினைவுகளோடு கலந்த அந்தச் சுவை எனக்கு மிகவும் பிடித்தது. நண்பர்களுக்குப் பிடிக்கவில்லை என்றார்கள். நான் ‘ரெண்டு ரவுண்டு கட்டினேன்’.

அங்கு நாம் ‘பட்டை’ என்றழைக்கும் Cinnamon (கருவாப் பட்டை) மரம் நிறைய இருந்தது. பட்டை உரிப்பது .. காய வைப்பது என்று ஒரு டெமோவே எங்களுக்காக நடந்தது.

*            *             *                *

இங்கிருந்து காலி Gale என்ற இடத்திற்குச் சென்றோம். கடற்கரை ஓரம். வருகை தரும் வெளி நாட்டுப் பயணிகள் அதிகமாகத் தென்பட்டனர். மாலை மயங்கிய பின்னே நாங்கள் அங்கே சென்றோம். படங்கள் அதிகமாக எடுக்க முடியாது போயிற்று. கடலும் கோட்டையும் வைத்து ஓரிரண்டு நண்பன் ரவி முயற்சி செய்தான்.
காலி டச்சுக்காரர்களின் ஆக்கிரமிப்பில் இருந்திருக்கிறது. அவர்கள் கட்டிய கோட்டையைப் புது விதமாகப் பாதுகாத்து வருகின்றனர்.

கோட்டையினுள்ளே சுற்றி வந்தோம். அரையிருட்டில் சுற்றி வந்தோம்.  பழைய வீடுகளும் தெருக்களும் அப்படியே காப்பாற்றி வைக்கப்பட்டுள்ளன. அதன் வழியே நடந்து செல்வது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பழைய தெருக்கள் போலவே சிறிதாக, வளைந்ததாக இருந்தன. அதன் வழியே செல்லும் போது வீடுகள் கடைகளாக மாறியிருந்தன. வெளிநாட்டுப் பயணிகளுக்காக வித்தியாசமான சிறு கடைகள் இருந்தன. மெல்லிய விளக்கொளியில் ஏதோ ஒரு பழைய நாட்டுக்குள் நடந்து வந்தது போலிருந்தது.


இளம் இரவில் கொழும்பிற்குத் திரும்பினோம்.

நல்ல மழை. இரவுப் பயணத்தை ’சில்லென்று’ இனியதாக்கியது.*
அடுத்த பதிவு: இலங்கைப் பயணம் ...5 - கண்டதும் கேட்டதும் (1)

*

இன்னும் சில படங்கள் --------> இங்கே ....


*10 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இந்த ஐரோப்பிய கலப்பினத்தவரை இலங்கையில் பறங்கியர் என்போம்.

இவர்கள் இலங்கை பூராகவும் உள்ளார்கள்.
அதிகம் போத்துக்கேய குடும்பப் பெயர்களுடையோராக இருப்பார்கள்.
அழகுணர்வில் சற்று விஞ்சியவர்கள், வருமானம்= செலவு என்பது அவர்கள் அடிப்படையில் கலந்தது.
அதனால் சேமிப்பை விட செழிப்புடன் வாழ செலவு செய்வதைக் கொள்கையாக உடையவர்கள்.
தமிழருக்கு நேர் எதிர்க் கொள்கை, தமிழருடன் வாழ்ந்த போதும்.

தமிழ்ப் பகுதியில் வாழ்வோர் தாய் மொழி தமிழ், ஆங்கிலத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

போத்துக்கல் அடியாக இருந்தபோதும் , அது பற்றி
அக்கறையில்லை. குடும்பப் பெயருடன் அத் தொடர்பு முடிந்தது.

பலர் கலப்பு மணமும் செய்துள்ளார்கள்.

நீங்கள் எருமைத் தயிருடன் உண்டது.
கித்துள் பாணி, கித்துள் பனைபோன்ற ஒருவகை சிங்களப் பிரதேசத்தில் மாத்திரம் உண்டு.

அதன் பதநீரில் வெல்லம் தயாரிப்பர்கள். வெல்லமாக்குமுன் எடுப்பது, இந்தப் பாணி.

Gale-காலி என எழுதவும்.
Cinnamon- கருவாப் பட்டை என்போம்.
உங்கள் அனுபவம் அருமை!

M. Shanmugam said...

போட்டோகள் அருமை
நல்ல ஒரு தகவல் உங்கள் பதிவில்.
மிக்க நன்றி.

Canada Tamil News

Riyas said...

தருமி ஐயா..

உங்கள் இலங்கைப் பயணத்தின் போது பார்த்த இடங்களை அழகாக விபரிக்கிறீர்கள்.

படங்களும் அழகு..


தருமி said...

//அதிகம் போத்துக்கேய குடும்பப் பெயர்களுடையோராக இருப்பார்கள். //

இவர் பிரித்தானிய - இலங்கை வழி வந்தவராகத் தம்மைப் பற்றிக் கூறினார்.

அவரது ஆங்கிலமும் நன்கிருந்தது.

‘காலி’க்கு நன்றி.

வேகநரி said...

படங்கள் எல்லாமே நல்லாயிருக்கு அந்த மேசை அழகாயிருக்கு.

வல்லிசிம்ஹன் said...

மிக அழகான படங்கள். இயற்கையின் வளம் அப்படி. அவருடைய கலைஉணர்வை நீங்கள் விவரித்திருப்பதே அருமையாக இருக்கிறது.
பழமையைப் போற்றிக் காப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்.

தருமி said...

//பழமையைப் போற்றிக் காப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். //

100%

தருமி said...

இன்னும் சில படங்கள் சேர்த்துள்ளேன்.

எஸ் சக்திவேல் said...

சிங்களவர்கள் தமிழர்களை விட அழகுணர்ச்சி உள்ளவர்கள். பாட்டுள, ஓவியம், கலைகள் எல்லாவற்றிலும் சிங்களவர்கள் வல்லவர்கள். தமிழர்கள் கடின உழைப்பாளிகள். அத்தோடு அதிகம் பேர் (percentage wise ) டொக்டர்கள் , எஞ்சினியர்கள் என உள்ளார்கள்

புரிய முடியாதது - சிங்களவர்கள் எப்படி இவ்வளவு கொடுமைகளைத் தமிழர்களுக்கு இளைத்தார்கள் என்பது. எனது அனுமானம் "தானுண்டு , தன் அளவானா உழைப்புண்டு " என்று வாழும்/ வாழ்ந்த சிங்களவர்களைத் தூண்டிக் கொடூடர்களாக்கியது அரசியல்வாதிகளும் பௌத்த இனவாதிக்களும்தான். நேரம் கிடைத்தால் "அநாகரிக தர்மபால" என்பவர் பற்றி வாசியுங்கள். அவர்தான் சிங்களவர்களைத் தூண்டிவிட்ட முதல் புண்ணியவான்.

ஒரு பகுதியினர் கொடுமைகள் செய்தாலும், பலருக்குத் "தமிழர் வெறுப்பு " இருந்தாலும் அற்புதமான பேர்வழிகளையும் காணலாம்.

தருமி said...

எஸ் சக்திவேல்

கட்டாயம் நீங்கள் சொன்னவரைப் பற்றி வாசிக்கிறேன்.

நன்றி

Post a Comment