Tuesday, March 11, 2014

725. இந்து மதம் எங்கே போகிறது ? --- 2





*



***



இந்து மதம் எங்கே போகிறது?

                            அக்னிஹோதரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்



*


உபநிஷத்துகள் ‘கடவுளுக்கு உருவம் இல்லை’ என்கிறது. ஆனால் உபநிஷத்தையும் தாண்டிக் குதித்து தமிழகத்தில் சிலைகளுக்கு முன்னால் மந்திரம் சொல்ல ஆரம்பித்தனர்.

இலக்கியங்கள் சித்தரிப்பது போல் ‘களவியல்’ என்பது தான் பழந்தமிழர்களின் திருமண முறை. (34)

களவியல், கற்பியல் இரண்டு விஷயங்களிலுமே முன்னணியில் இருந்த தமிழர்களின் கல்யாணங்களில் தாலி வந்த கதை சுவாரஸ்யமானது. திருநெல்வேலி போன்ற பனைமரங்கள் அதிகம் இருந்த பகுதிகளில் ஒரு ஆண் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் பனையோலை ஒன்றை சிறிய அளவில் நறுக்கி அதில் ‘இந்தப் பெண் இந்த ஆணுக்கு உரியவள்’ என எழுதி ஒரு நூலில் கோர்த்து கழுத்தில் கட்டி விடுவார்கள். பனை மரத்திற்கு ‘தால்’ என்றும் பெயர் உண்டு. பனையோலையில் எழுதிக் கட்டுவதால் அந்த சிறு ஓலைக்கு தாலி என்று பெயர் வந்தது.

கல்யாணக் கலாச்சாரத்தில் மாற்றங்கள் கொண்டு வந்தார்கள் பிராமணர்கள். (36)

தமிழனின் களவியல், கற்பியலில் மந்த்ர இயல் புகுந்தது.

 “மேலோர்க்கு யாத்த கரணம் கீழோர்க்கு ஆன காலமும் உண்டு” என்கிறது தொல்காப்பியம். (அப்போதே மேலோர், கீழோர் என்று பிரிந்து விட்டது.)(39)

கல்யாண முறை மட்டுமல்லாது அனைத்து வழிகளிலும் சூத்திரர்களை கீழ்ப்படுத்தினார்கள். இதற்கு மநு ஸ்மிருதி தான் ரொம்ப உதவியாக இருந்தது. சண்டாளர்களுக்கு அதிகமான கொடுமைகளைச் செய்தார்கள்.

யாரிந்த சண்டாளர்கள்? (40) பிராமண ஸ்திரிகளுக்கும் சூத்திர ஆண்களுக்கும் பிறந்த சந்ததியை சண்டாளர்கள் என்று பெயரிட்டு ஒதுக்கி வைத்தனர். இதே போல் பிராமண ஆண்கள் சூத்திர பெண்களுடன் கள்ளத்தனமாக உறவு கொண்டனர். இந்த சந்ததியரும் சண்டாளர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்களை ஊரை விட்டே ஒதுக்கி வைத்தார்கள். (43)

A stable society அதாவது ஒரு நிலையான சமூகக் கட்டுமான அமைப்பு அமைய வேண்டுமென்றால் அது சாதியாகப் பிரிக்கப்பட்டால் தான் உறுதியுடன் இருக்கும் என்பது பிராமணர்களின் கணிப்பு. (44)

முறை கேடான சாஸ்திரங்களை சாகடிக்கக் கூடிய வகையில் கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்கு இரண்டு அளவு கோல் வைத்துப் பார்த்தார் மநு. அவை – அனுலோம சங்கரம்; ப்ரதிலோம சங்கரம் சங்கரம் – சபிக்கப்பட்ட உறவுகள் என்று பொருள்.

ஆண் மேல் ஜாதிக்காரனாக இருந்து பெண் கீழ் ஜாதிக்காரியாக இருந்தால் அது அனுலோம சங்கரம்.  மேல்ஜாதி ஆண் என்பதால் இவர்கள் சண்டாளர்கள் இல்லை.(45)

மேல்ஜாதிப் பெண்ணை கீழ்ஜாதி ஆண்கள் கவர்ந்து பறித்து சுகர்ந்து விட்டால் மநுவின் பார்வையில் இது ப்ரதிலோம சங்கரம். இந்த சந்த்தியினர் சண்டாளர்கள். இவர்கள் ஊரை விட்டு விரட்டப்பட்டார்கள். (46)

 சங்கரர் – கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து சில தொலைவில் அங்க மாலி என்ற ஊர். அதிலிருந்து சிறிது தொலைவில் காலடி. இதுவே சங்கரர் பிறந்த இடம்.

வேதம், பகவத் கீதை, ப்ரம்ம சூத்திரம் எல்லாம் கற்று அதன் பின் புத்தரின் கொள்கைகளையும் வாசிக்க ஆரம்பித்தார். புத்தர் சங்கருக்குள் வெளிச்ச விழுதுகளை இறக்க ஆரம்பித்தார். இறுதியில் ஒரு தெளிவிற்கு வந்தார். புத்தன் சொன்ன ஞானத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். இவ்வுலகில் உள்ள அனைத்தும் பொய். அதுதான் எனக்குக் கிடைத்த ஞானம். (55)

இவ்வுலகில் ஞானம், அஞ்ஞானம் ஆகிய இரண்டு தான் உண்டு. வேதம் சொன்ன கர்மாக்கள் எல்லாம் பொய் – கடவுள் என்பதைத் தவிர என சங்கரர் உபதேசம் செய்ய வைதீகர்கள் சங்கரரை எதிர்க்க ஆரம்பித்தனர். தனது அத்வைதத்தை ஊர் முழுக்க பரப்பினார். (56)

தனது கருத்துகளை பஜகோவிந்தம் (கோவிந்தனை பஜனை செய்கிறேன் என்று பொருள்) என்ற நூலில் எடுத்துக் காட்டியிருக்கிறார்.(59)

தீவிர கட்டுப்பாடுகளுடன் சந்யாசத்தைத் தழுவிக்கொண்ட சங்கரர் வேத கர்மாக்களை எதிர்ப்பதிலும் ஆர்வம் காட்டினார். தான் சந்யாசியான ஷணத்திலேயே தலையை மொட்டையடித்துக் கொண்டார். ய்க்ஞோபிதம் அதாவது பூணூலை அவிழ்த்து எறிந்தார் சங்கரர். இந்த இரண்டும் சங்கரர் மீது வேதக்காரர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. (61)

உபநிஷது – ’ஜானாதீ இச்சதீ யததே’ என்கிறது. ஆசைப்பட்டவைகளை அடைவது ஆனந்தம். ஆசைப்பட்டு அடைய முயற்சிகள் செய்து முயற்சியில் வெற்றி பெற்று ஆனந்தப்படுவது தான் அறிவு என்கிறது உபநிஷது. (62)

இக்கருத்துகள் சங்கரரின் அத்வைதத்திற்கு எதிராக இருந்தன.

வேதக்காரர்களின் எதிர்ப்பை சமாளிக்க சங்கரரே ஒரு முரண்பாட்டை சூடிக்கொண்டார். சித்த சுத்தியுடன் வேதம் சொன்ன கர்மாக்களை செய்தால் மோட்சம் எளிதில் பெறலாம் என்று சொல்லி அத்வைத குட்டையை சங்கரர் குழப்பி விட்டார்.

ஆதி சங்கரருக்கும் ஆகமக்காரர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் வெடிக்கத் தொடங்கியது. ஆகமம் என்றால் வழி முறை; இவைகளை உபதேசிப்பவர்கள் ஆகமக்காரர்கள்.

 வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு இரண்டு ஆகமங்களும், சைவ சம்பிரதாயத்துக்கு 63 ஆகமங்களும் இருக்கின்றன.(63)

ஆகமக்காரர்களின் அறிவுரைகளை நம்பிக் கொண்டிருந்தால் மோட்சம் கிட்டாது; கடவுளின் கடாட்சமும் கிட்டாது. (64)

உலகியல் பற்று குறையும் போது உன் மனம் மோகத்தை முழுமையாக விட்டு விடுகிறது. மோகத்தை நீ விட்டு விட்ட போது  உனக்கு சலனம் இல்லாத சித்தம் வாய்க்கிறது. சித்தத்தில் சலனம் இல்லாமல் இருந்தாலே உனக்கு மோட்சம் கிடைக்கும். இதற்காக கர்மா, வழிபாடு எல்லாம் தேவையில்லை என்கிறார் சங்கரர்.

ஆதி சங்கரர் தன் 32 வயதிலேயே மோட்சம் அடைந்த்தாகச் சொல்கிறார்கள். அவரது காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு என்கிறார் நேரு தனது Discovery of India என்ற நூலில். (65)

புத்தரிடமிருந்து தனக்கான அத்வைதத்தின் சாரத்தைப் பெற்ற சங்கரர் வைஷ்ணவர்களால் ’ப்ரசன்ன புத்தர்’ என்றே அழைக்கப்பட்டார். ஆதி சங்கரரின் சிஷ்யர்கள் புத்த விஹார்களை முன்னோடியாக வைத்து மடங்களை நிர்மாணிக்க ஆரம்பித்தனர்.(67)

இம்மடங்களில் எந்த வித பூஜை புனஸ்காரங்களுக்கும் இடம் கிடையாது. அத்வைதம் காட்டும் ஞான மார்க்கத்தின் படி, விக்ரக வழிபாடுகள் கிடையாது; ஆகமங்கள் கிடையாது. வேதங்கள் சொன்ன கர்மாக்கள் கூடாது. (68)

தெற்கே சிருங்கேரியிலிருந்து, வடக்கே பத்ரிநாத், கிழக்கே பூரி, மேற்கே துவாரகா என்ற இடங்களில் மடங்கள் உள்ளன.

இளவயதில் மரணமடைந்த சங்கரர் கால் நடையாகவே நடந்து அத்வைதத்தைப் பரப்பி வந்திருக்கிறார். ஆகவே அவரே  இந்த மடங்களை ஏற்படுத்தினார் என்பது உண்மைக்குப் புறம்பானதாகவே இருக்க வேண்டும். (70)

நான்கு மடங்களிலும் உள்ள வழிபாடுகளும் வேறு வேறு.

ஸ்தீரிகளை மடத்தில் சேர்க்கக் கூடாது.

வேறு பிரதேசத்துப் பிராமணர்களும் மடங்களுக்குள் செல்ல முடியாது. சிருங்கேரி மடத்தின் உள்ளே தமிழ்நாட்டு பிராமணர்கள் தடுக்கப்பட்டார்கள். (75)

இதனால் புதியதாக  கும்பகோணத்தில் ஒரு மடம் ஆரம்பிக்கப்பட்டது. இது நாயக்க மன்னர்களால் வளர்க்கப்பட்டது. அம்மடத்தின் மடாதிபதியாக ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் ஆனார். (79)

பின்னால் இந்த மடம் மதராஸிற்கு அருகில் இருக்க வேண்டும் என்பதற்காக காஞ்சிபுரத்திற்கு மாற்றப்பட்டது. (81)





*

1 comment:

வவ்வால் said...

தருமிய்யா,

அக்னிஹோத்திரம் புக்கை முழுசா நான் படிச்சதில்லை, நக்கீரனில் வந்த போது அங்கொன்றும் ,இங்கொன்றும்னு படிச்சது தான் ,இந்து வைதீக மதத்தினை விமர்சிக்கிறார் என்ற வகையில் தான் கவனிச்சது,மற்றபடி அவரும் "அக்குத்தா" தான் கருத்துக்களை முன் வைத்துள்ளார்.

#//சங்கரம் – சபிக்கப்பட்ட உறவுகள் என்று பொருள்.//

சங்கரம் என்றால் சபிக்கப்பட்ட என்ற "ஸ்ட்ரிக்ட்டா" கூட சொல்ல இயலாது ,கலப்பது,கடப்பது என்று தான் பொருள், உ.ம்: மகர சங்கராந்தி ,மகர ரேகையை தொட்டு கடந்து ,கலந்து வருவது என அப்படி சொல்கிறார்கள்.

//புத்தர் சங்கருக்குள் வெளிச்ச விழுதுகளை இறக்க ஆரம்பித்தார். இறுதியில் ஒரு தெளிவிற்கு வந்தார். புத்தன் சொன்ன ஞானத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். இவ்வுலகில் உள்ள அனைத்தும் பொய். அதுதான் எனக்குக் கிடைத்த ஞானம்//

புத்த மடங்களை அபகரித்து , அதனை சைவ மடமாக்கினார் என பல வரலாற்று ,சமூகவியலாளர்கள் சொல்கிறார்கள்.

ரவிக்குமார் (எம்.எல்.ஏவும் கூட) ஒரு கட்டுரை இதைப்பற்றி எழுதியுள்ளார்.

புத்தமடங்கள் ,விகாரைகளை ,சைவ ,வைணவ மடங்களாக அக்காலத்தில் மாற்றியதற்கு ஏகப்பட்ட சான்றுகள் உள்ளன.

காஞ்சியில் உள்ள பலக்கோயில்கள் புத்த மடங்களாக இருந்து , சைவ,வைணவ கோயில்களாக மாற்றப்பட்டுள்ளன.

//ய்க்ஞோபிதம் அதாவது பூணூலை அவிழ்த்து எறிந்தார் சங்கரர். இந்த இரண்டும் சங்கரர் மீது வேதக்காரர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. (61)//

அவரது அம்மா இறந்த போது , பிராமணர்கள் சடங்கு செய்ய வரவில்லை என்ற கோபத்தில், கோயிலில் உழுவாரம், இசைக்கருவி வாசிக்கும் இனத்தினருக்கு பூநூல் அணிவித்து ,இவர்களும் பிராமணர்கள் தான் என சொல்லி சடங்கு செய்ய வைத்தார், எனவே இன்றும் அவ்வழக்கம் கேரளாவில் தொடர்கிறது.

அவ்வாறு சங்கரர் பூநூல் அணிவிக்கப்பட்டவர்களே கேரளாவில் மாரர் ஜாதியாக அழைக்கப்படுகிறார்கள், அதில் ஒரு முடி மாரர், இரு முடி மாரர் என ரெண்டு பிரிவு இருக்கு, இவர்கள் ,நாயர்கள்,நம்பூதிரிகளுக்கு அடுத்த நிலை , கோயிலில் இசை வாத்தியங்களை வாசிக்கலாம், உழவாரப்பணி செய்யலாம்,ஆனால் கருவறைக்குள் செல்ல கூடாது. கேரள இசைவேளாளர்கள் என கருதப்படுபவர்கள்.

நாயர்கள் திருமணத்தில் கூட மாரர்கள் தான் சடங்கு செய்யணும்னு அப்போ சங்கரர் சாபம் விட்டதாகவும், இப்பவும் தொடர்வதாகவும் சொல்கிறார்கள்,இம்முறை இப்பவும் இருக்கானு தெரியலை.

எனவே சங்கரர் பூநூலுக்கு எதிரான முற்போக்கு வாதினு சொல்லிக்க முடியாது.

#//ஆகவே அவரே இந்த மடங்களை ஏற்படுத்தினார் என்பது உண்மைக்குப் புறம்பானதாகவே இருக்க வேண்டும். (70)//

//இதனால் புதியதாக கும்பகோணத்தில் ஒரு மடம் ஆரம்பிக்கப்பட்டது. இது நாயக்க மன்னர்களால் வளர்க்கப்பட்டது. அம்மடத்தின் மடாதிபதியாக ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் ஆனார். (79)

பின்னால் இந்த மடம் மதராஸிற்கு அருகில் இருக்க வேண்டும் என்பதற்காக காஞ்சிபுரத்திற்கு மாற்றப்பட்டது. (81)//

சங்கரரே எல்லா மடத்தினையும் உருவாக்கினாரானு சொல்ல முடியாவிட்டாலும் ,அவரது காலத்தில் உருவானவை எனலாம்.

ஆனால் கும்பகோண மடமோ ,காஞ்சி மடமோ சங்கரர் காலத்தில் உருவாகவேயில்லை.

நாயக்கர் காலம் என்ன ,சங்கரர் காலமா? கிருஷ்ண தேவராயர் காலத்தில் தான் நாயக்கர்கள் தமிழகம் வந்தார்கள்.

மேலும் கும்பகோண மடம் தான் ஒரிஜினல், கும்பகோண மடாதிபதி காஞ்சிபுரம் பக்கம் வந்தால் தங்கி இளைப்பார என காஞ்சி மடம் கட்டப்பட்டது.

மேலும் ,ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமி ஒன்னும் மடாதிபதியே கிடையாது, அவருக்கு முன்னரே காஞ்சியில் இருந்து கவனிக்க பலர் நியமிக்கப்பட்டார்கள்,அது மடாதிபதிப்பதவியாக அல்ல ,வெறும் நிர்வாகியாக, கும்பகோண மடாதிபதி இறந்த பின் அடுத்து யார் என நியமிப்பதில் பிரச்சினை உருவாகவே சில காலம் மடாதிபதியாக யாருமே இல்லாமல் இருந்த சூழலில் ,காஞ்சியில் இருந்த சந்திரசேகரா தன்னைத்தானே "மடாதிபதி" அறிவித்து காஞ்சி மடத்தினை கைப்பற்றிக்கொண்டார்.

இதுப்பற்றி ,கும்பகோண மடத்துக்கும், காஞ்சி மடத்துக்கும் வழக்கே நடந்துள்ளது. காஞ்சி சந்திரசேகரர் ,அப்போதைய வெள்ளைக்கார ஆட்சி முடிவில் இருந்த சூழலில் , தமிழக முதல்வராக இருந்த இருந்தவர்களை வளைத்து(ராஜாஜி செய்தார் என பேச்சு) "காஞ்சி" மடத்தினை தனக்கு வரும்படி செய்துவிட்டார்.

காஞ்சியில் சங்கரராமன் என்பவரை கொல்லக்காரணமே இந்த பழைய விவகாரத்தினை எல்லாம் தோண்டியதால் தான் அவ்வ்!

இதெல்லாம் அப்போ படிச்சது நினைவில் இருந்து சொல்கிறேன், ராஜாஜியாக இல்லாமல் கூட இருக்கலாம்,ஆனால் அப்போதைய தமிழக முதல்வரை வளைத்து தான் காஞ்சியை கைப்பற்றினார்கள், அது உண்மையான சங்கர மடமும் அல்ல, அதில் இருப்பவர்கள் மடாதிபதியாக யாராலும் பட்டமும் கட்டப்படவேயில்லை. எல்லாமே கோல்மால் அவ்வ்!

Post a Comment