பதிவு: 1 https://dharumi.blogspot.com/2025/10/1.html
3.10,25
29.9.2025
ஏதோ ஒரு விதத்தில் இந்த நாள் ஒரு முக்கியமான நாளாக
வாழ்நாளில் அமைந்துவிட்டது என்று நினைக்கிறேன். என்ன பெரிதாக அன்று நடந்தது என்று கேட்கலாம். பெரிய
விஷயம் ஒன்றுமில்லை. சில நாட்களுக்கு முன்பு வயதாகிப் போய்விட்டதா .. சில கோளாறுகள்
வரத்தானே செய்யும் .. பார்வையில் ஒரு சிறு
கோளாறு. கண்ணில் தெரியும் பிரேமில் இடது பக்கம் ஓரத்தில் சில பொருட்கள் கண்ணுக்கு
தெரியாமல் போனது. மருத்துவர்கள் இது பிரச்சனை இல்லை; சரியாகிவிடும்
என்றார்கள். சரியாக ஆகிறதோ இல்லையோ நான் அதற்காகப் பழகிக் கொண்டிருக்கிறேன். அன்று
வாசிக்க முடியவில்லை; எழுத முடியவில்லை; கணினியில் வேலை செய்ய முடியவில்லை. இப்பொழுது அதற்கெல்லாம் பழகிவிட்டேன்.
நேரம் ஆக ஆக அந்தப் பழுதோடு பழகிவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன். இப்போது
வாசிப்பதில், எழுதுவதில், கணினியில்
அதிகப் பிரச்சனையில்லை. ஆனால் வண்டி ஓட்டும்போது எல்லாம் கண நேரத்தில் என்ன
வேண்டுமானாலும் நடக்கலாமென்று எல்லோரும் பயமுறுத்திக் கொண்டு இருந்தனர். பார்வையிலும்
கோளாறு என்றால் எதற்காக வண்டி ஓட்ட வேண்டும் என்று ஒரு நல்ல புத்தி மனதிற்குள்
லேசாக எட்டிப் பார்த்தது. அதுவுமில்லாமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நான்
ஹெல்மெட்டோடு ஒரு படத்தை முகநூலில் போட்டிருந்தேன். நண்பர்கள் பலரும்
திட்டினார்கள். இந்த வயதிலுமா வண்டி ஓட்டுகிறாய் என்ற கண்டனங்கள். வீட்டில் ஏற்கனவே பிள்ளைகளும் துணைவியாரும் போட்ட
தடைகளைத் தாண்டி அவர்களுக்குத் தெரிந்தும், தெரியாமலும்
கொஞ்சம் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன். எல்லாவற்றையும் நினைவுபடுத்திப் பார்த்த
பிறகு. சரி போதும் ... வண்டி ஓட்டியது
போதும்; எல்லோரும் எதிர்பார்ப்பது போலவே நம் கையைக் கட்டி
காலைக் கட்டி அதாவது வண்டி ஓட்டுவதை நிறுத்தி விடுவோம் என்று நினைத்தேன். ஆனாலும் வண்டி
கண்முன்னே நின்றால் அதை ஓட்டாமல் இருக்க முடியவில்லை. துருதுருவென்றிருந்தது. என்ன
செய்யலாம்?
பிள்ளைகளிடம் யாருக்கு
வண்டி வேண்டும் என்று கேட்டேன். பெரியவள் எனக்கு வேண்டாம் என்றாள். சின்னவள்
சரியென்றாள். சரி உன் டிரைவரை அனுப்பு என்றேன். செல்வம் வந்தார். வண்டியை
எடுத்தார். ஒரு பத்தடி சென்றதும் வண்டி
நின்று விட்டது. நான் பக்கத்தில் போனேன். செல்வம் சொன்னார்: ‘வண்டிக்கு உங்களை விட்டுப் போக மனமில்லை
போலும்’ என்றார்.
பக்கத்தில் போய் வண்டியைத்
தட்டிக் கொடுத்து, ‘போய்
வா’ என்று சொன்னேன். வண்டியும் உடனே புறப்பட்டு விட்டது. வண்டி
சென்றது .. வண்டி சென்று விட்டது.
இதில் என்ன பெரிய
விசேஷம் என்றா கேட்கிறீர்களா?
கணக்குப் போட்டுப் பார்த்தேன். எழுவதில் இருந்து 55
ஆண்டுகள் ஏதோ ஒரு வாகனத்தோடு இருந்திருக்கிறேன். 1970
அக்டோபர் மாதம் ஜாவா MDA 2107
என்று ஒரு வண்டியை வாங்கினேன். 22
வருடம் அந்த வண்டி என்னுடன் இருந்தது. கவசாக்கி என்றொரு
புது வண்டி வாங்கி, பழைய
ஜாவாவை கடைசியில் விற்று, அதை ஒரு நண்பன் வந்து எடுத்துக்
கொண்டு போனான். அந்த வண்டியை அனுப்பிவிட்டு திரும்பிப் பார்த்தால் பின்னால் என்
சின்ன மகள் அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு அந்த வண்டியைப் பிரிவது அத்தனை சிரமமாக, கஷ்டமாக இருந்தது. ஏனென்றால் பிள்ளைகள் பிறக்கும் முன்பே அந்த வண்டி
என்னிடம் இருந்தது. அவர்களோடு சேர்ந்து வளர்ந்த ஓர் உயிர் போல அவள் நினைத்து கண்
கலங்கி நின்றாள்.
அது எனக்கு இன்று
நினைவுக்கு வந்தது. சின்ன மகள் அழுது கொண்டிருந்ததும், இன்று வண்டி என்னை விட்டுப் போகும் பொழுது
எனக்குக் கொஞ்சம் பழைய நினைவுகள் வந்தன. ஜாவா வண்டி வாங்கி 22
வருடம் வைத்திருந்தேன். பிறகு இரு சக்கர வண்டிகள் நிறைய வாங்கி மாற்றி
மாற்றிக் கொண்டிருந்திருக்கிறேன். அதன்பின் நான்கு சக்கர வண்டி மூன்று - முதலில்
ஒரு பியட், அடுத்து ஒரு
எஸ்டீம், இறுதியில் புதிய I.10. மூன்றையும் 20
- 25 வருடம் ஓட்டியிருப்பேன். சென்னைக்கு “மாற்றலாகி” வந்தபின் காரை
அதிகமாக ஓட்ட முடியவில்லை. வழியும் தெரியாது; ஒண்ணும் தெரியாது. வீட்டுக்கு வெளியே மெட்றோ வேலை. எல்லாவற்றையும் தலையைச்
சுற்றி மூக்கைத் தொடுவது போலிருந்தது. காரை பேரனிடம் கொடுத்து விட்டேன். அதன் பின்
நாலாண்டுகளாகப் பக்கத்து தெருவுக்குள் மட்டும் இருசக்கர வண்டியில் போய் வந்தேன்.
ஊர்சுற்றல் அத்தனை சுருங்கி விட்டது.
ஆனால் இன்று வாகனம் ஏதும்
இல்லாமல் தனியாக, மொட்டையாக
நிற்பதாக ஒரு சின்ன நினைப்பு வந்தது. 55 ஆண்டுகளுக்குப் பிறகு வண்டியேதும் இல்லாமல் தனியாக நிற்பது
போன்ற ஓர் உணர்வு. உணர்வு என்பதை விட ஓர் உறுத்தல். அதைவிட இனிமேல் என்ன செய்வது? 55 வருட பழக்கம் .. நினைத்தால் வண்டி எடுத்துக்கொண்டு போகும்
ஒரு எளிய வாழ்க்கை இருந்தது;
எளிய வாழ்க்கை என்றால் பக்கத்தில் உள்ள கடைக்குப் போக வேண்டும் என்றால் கூட
வண்டியை எடுக்கும் பழக்கம் தொத்திக் கொண்டு விட்டது. இனிமேல் அப்படி இருக்க
முடியாது என்பது ஒரு சின்ன ... நெருடல் என்பது சரியான வார்த்தையாக இருக்கலாம்
என்று நினைக்கிறேன். அவ்வளவுதான். சிறகுகளை தானே வெட்டிக் கொண்ட பறவை போல் நிற்கிறேன்.
இன்று நான் ‘தனியாக’ நின்று கொண்டிருக்கிறேன்.
No comments:
Post a Comment