*
‘என் கதை’ என்று இதற்குப் பெயர் வைப்போமா; ‘என் வாழ்க்கை’ என்ற பெயர் வைக்கலாமா என்று ஒரு
சின்ன குழப்பம். யோசித்துப் பார்த்தேன். வாழ்க்கை என்று வைத்தால் எல்லாமே மிகச்
சரியாக சொல்லப்பட்டிருக்க வேண்டும். பலவற்றை மறைக்க முடியாத ஒரு சூழல் உருவாகும். நாம்
என்ன சத்திய சோதனையா எழுதுகிறோம். இல்லியே. பின் எதற்கு அந்த வம்பு என்று நினைத்து, என் கதை என்ற பெயரையே வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். இப்போதுதான்
உள்ளதையும் சொல்லலாம்; குறைத்தும் சொல்லலாம்; கூட்டியும் சொல்லலாம். எல்லாம் என் இஷ்டம் என்பது போல் ஒரு சுதந்திரம் கிடைத்துவிடும். அதுதான்
நல்லது என்று தோன்றுகிறது கதை என்றால் புதுப் பாத்திரங்களை உருவாக்கலாம்; இருக்கும் பாத்திரங்களை மறைக்கலாம்; எத்தனை வசதி ..
எத்தனை வசதி. ஆகவே என் கதை என்பதே சரியான தலைப்பாக இருக்கும் என்று முடிவு
செய்துவிட்டேன்.
ஆல்வின் டாப்ளர்(Alvin Toffler)எழுதிய பியூச்சர் ஷாக்(Future Shock) என்ற புத்தகம் எழுதி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகத்தில் எல்லாமே மாறும். அந்த மாற்றங்கள் எல்லாமே அதிர்ச்சி தரும் மாற்றங்களாக நாளை இருக்கலாம் என்று அவர் ஒரு ஜோசியம் சொன்னார். உண்மைதான். அதுவும் என்னைப்போல் நீண்ட வாழ்க்கை வாழும் - நான் எண்பதைத் தாண்டி விட்டேன் - மக்களுக்கு இந்த வாழ்க்கை ஒரு ஆச்சரியமான வாழ்க்கைதான். காலணா கொடுத்து ஒரு நாட்டு வாழைப்பழம் சாப்பிட்ட காலம் ஞாபகம் வருகிறது; இன்று அதே பழத்தை 10 அல்லது 12 ரூபாய் கொடுத்து வாங்கும் ஒரு சூழலும் தெரிகிறது. இரண்டையும் பார்த்து விட்டோம். ஒரு ஸ்கூட்டர் வாங்க ஆறு ஆண்டுகள்; ஒரு போன் தொடர்பு வாங்குவதற்கு ஆறு ஆண்டுகள் என்று இருந்த காலம் மாறி விட்டது. இன்று கனவு கண்டாலே பைக் வாங்கிக் கொள்ளுங்கள் என்று காலையில் கதவைத் தட்டுகிறார்கள். இன்று கடைக்குப் போனால் சிம் கார்டு உடனே வாங்கி ஒரு போன் வாங்க முடியும்; எல்லாம் கணத்தில் முடிகிறது.
நான் சிறுவனாக பள்ளிப்படிப்பிலிருந்த பொழுது பள்ளிக்கு அருகில் ஒரு எல்ஐசி அலுவலகம் இருந்தது. அதில் திடீரென்று ஒரு நாள் வேலை நிறுத்தம் நடந்தது. அப்பொழுதிருந்த என்னுடைய அறிவுக்கு அவர்கள் சொன்னது என்னவென்றால், கம்ப்யூட்டர் வந்துவிட்டது; ஆகவே எங்களுடைய வேலை வாய்ப்புகள் போய்விடும். அதனால் கம்ப்யூட்டர் வேண்டாம் என்றார்கள். அப்போது பஞ்ச் கார்டு கார்டு பயனுக்கு வந்தது. அது வந்தால் எங்களுக்கு வேலை வாய்ப்பு விடும் என்று அச்சப்பட்டார்கள். இன்று பன்ச் கார்டு வந்தது; பிளாப்பி வந்தது; மென்தகடு வந்தது; எல்லாற்றையும் தாண்டி இப்பொழுது செயற்கை அறிவு வந்துவிட்டது. அன்று பஞ்ச் கார்டு பயமுறுத்தியது; இன்று செயற்கை அறிவு பயப்படுத்துகிறது. சினிமாவில் வந்தது போல் செயற்கை அறிவு நம்மை ஆள ஆரம்பித்து விடுமோ என்ற அச்சம் மக்கள் மனதில் இருக்கிறது. இந்த இரண்டு வெவ்வேறு முனைகளை வாழ்க்கையில் நாங்கள் பார்த்து விட்டோம்.
நிச்சயமாக என் வயதுக்காரர்கள் எல்லோருமே கொஞ்சம் அதிர்ஷ்டசாலிகள்தான் நாங்கள் ஃபியூச்சர் ஷாக்கில் சொன்ன அதிர்ச்சி தரும் எதிர்காலங்களைப் பார்த்து விட்டோம். நாங்கள் நினைக்காததெல்லாம் நடக்கிறது. ஒரு காலத்தில் தொலைபேசியில் பேசுபவர்கள் அடுத்த பக்கம் கோபமாகப் பேசினார்களா என்றால், அவர்கள் முகமாக தெரிகிறது என்று சொன்ன காலம் போய் இன்று வீடியோ கால்கள் வந்தாச்சு. குழந்தைகள் கூட அவைகளை மிகவும் எளிதாகப் பயன்படுத்துகிறார்கள்.
எனக்கு இன்னும் ஓர் ஆச்சரியம்.
முதல் முதலாக ஒரு கைத்தொலைபேசியில் ஒரு போட்டோவைத் தொட்டு அப்படியே கையை வைத்து இழுத்ததும்
படம் பெரிதாகத் தோன்றியது. அப்போது நான் போட்டோகிராபியில் அதீத ஆர்வத்தோடு
இருந்தேன். எனக்கு அது அத்தனை ஆச்சரியமாக இருந்தது. ஒரு படம் - அதை இரண்டுவிரல்
வைத்து இழுத்தால் படம் பெரிதானது. இப்போது கைப்பேசியில் புகைப்படம் எடுத்ததோடு
வீடியோவும் எடுக்கிறோம். இன்னும் எத்தனையோ வித்தைகளைச் செய்கிறோம். எல்லாம் ஒரு
கணத்தில் நடக்கிறது. கனவுகளாக இருந்தவைகள் எல்லாம் நினைவுகளாக மாறிக்கொண்டே
வருகின்றன. அதுவும் மிக மிக வேகமாக, எங்களைப் போன்றவர்கள் எட்டிப்பிடிக்க முடியாத
அளவிற்கு வெகுவேகமாக வளர்ச்சியில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. செயற்கை
நுண்ணறிவு பற்றி இப்பொழுதுதான் பேச ஆரம்பித்தோம் ஆனால் நானோ பனானா(Nano Banana) என்று ஒரு புதிய
ஆப் வந்திருக்கிறதாம். நம் எதிர்பார்ப்புகளையும் தாண்டி அது ஏதோ பல வித்தைகள்
செய்கின்றது.
நடக்கும் மாற்றங்களைக்
கணிக்கவும் முடியவில்லை;
புரிந்து கொள்ளவும் முடியவில்லை; ஜீரணிக்கவும் முடியவில்லை.
என்ன, ஏது என்று தெரிவதற்குள் புதியதொரு மாற்றம். அன்று
ஃபியூச்சர் ஷாக் என்றார்; ஆனால் அதை வாழ்க்கையில் நேரடியாகப்
பார்த்து, அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு பக்கம்
மகிழ்ச்சி; ஒரு பக்கம் அதிர்ச்சி; மற்றொரு
பக்கம் அச்சம். எல்லாமே நடக்கின்றன. அந்த அச்சத்தை தவிர்த்து விட்டு, ஆச்சரியப்பட மட்டும் பழகிக் கொண்டே இருக்கிறோம். எங்கள் காலம்
முடிவதற்குள் இன்னும் எத்தனை எத்தனை பார்க்கப் போகிறோமோ?
யாருக்குத்தான் தெரியும்! நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது
என்பார்கள். அது ஒரு தத்துவமாகப் பேசப்பட்டது. ஆனால் இப்பொழுது அனுபவமாக
இருக்கிறது. அறிவியல் மாற்றங்கள் அத்தனை வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் விமானங்கள் வைத்துக் கொண்டு போர் நடந்தது.
ஹிரோஷிமா நாசகாகி அழிந்தன; ஆனால் இப்பொழுது மனிதர்கள் போரிடுவதில்லை; ட்ரோன்கள் போரிடுகின்றன. ட்ரோன்கள் ஆட்களைக் கொல்கின்றன; உடைமைகளை அழிக்கின்றன. இன்னும் அடுத்த அறிவியல் மாற்றத்தில் ரோபோக்கள்
சண்டையில் இறங்கும். சினிமாவில் பார்த்த ரோபோ போலவே இங்கேயும் ரோபோ யுத்தம் புரியும்.
ஏன் காதலும் செய்யும்போலும்!!!
ஏதோ ஒரு ட்ரோன் இன்னொரு
ட்ரோனை காதலித்தால் அதோடு நின்று விட்டால் நல்லது. நம்மையும் காதலிக்க
ஆரம்பித்தால் நிலைமை என்ன ஆகுமோ!
.... தொடரும்
No comments:
Post a Comment