Youtube - இதனைத் தோண்டினால் தேனூறும் என்பது தெரிந்ததே.
ஆனால் இன்று எனக்கொரு ஆச்சரியம். இங்கே மூன்று நான்கு பேரைப் பற்றிப் பேச வேண்டுமென்ற
ஆவல்.
முதல் ஆள்; மதுரைக்கார இளைஞர் மதன் கெளரி. இவரின் மீதான
ஆச்சரியத்திற்குக் காரணம் அவரது 80 லட்சத்திற்கும் அதிகமான subscribers. Great achievement. நல்ல உழைப்பு.
அடுத்தது பேராசிரியர் முரளி.
தத்துவப் பேராசிரியர். அறிவியல் பாடம் நடத்தும் என் போன்ற ஆசாமிகளுக்கு வகுப்பில் point by point ஆகப் பேசும் பழக்கம்
இருக்கும். ஆனால் humanities ஆசிரியர்கள் அது போன்றில்லாமல் ஒட்டு மொத்தமாக ஒரு கருத்தைப் பற்றித் தொடர்ந்து
பேசுவது கொஞ்சம் ஆச்சரியமான ஒன்று தான். அழகாக இதைச் செய்கிறார். அனுபவம் பேசுகிறது.
மூன்றாவதும் ஓர் இளைஞர்
தான். Mr. GK என்ற பெயரில் எல்லாவற்றையும்
பற்றிப் பேசுகிறார். Quantum physics பற்றியெல்லாம் எளிதாகப் பேசிச் செல்கிறார். இது போன்ற பல அறிவியல்
கருத்துகளை எளிதாகப் பேசிச் செல்கிறார். அதோடு ‘உருட்டுகள் பலவிதம்’ என்ற தலைப்பில் பல மூட
நம்பிக்கைகளைச் சாடுகிறார். Bundle of information. இத்தனையையும் எப்படி காலமெடுத்துத் தயாரிக்கிறார் என்பது அடுத்த
ஆச்சரியம். பாராட்டப் பட வேண்டிய இளைஞர்.
இன்று புதிதாக ஒருவரைப் பார்த்தேன். (கற்க கசடற) karka kasadara என்ற தலைப்பில் அவரைத்
தேடியடையலாம். எல்லோரிலும் வயது குறைந்த இளைஞர். Sapiens புத்தகத்தின் சுருக்கம்
என்று பேசினார். 57 நிமிடம் 40 வினாடிகள் ஏறத்தாழ
ஒரு மணி நேரம். மூச்சு விடாமல் பேசினார். கையில் எந்தக் குறிப்பும் கிடையாது.
(அப்படிப் பழக்கப்பட்ட எனக்கு பெருத்த ஆச்சரியத்தை அளித்தது. எப்படிதான் முடியும்?) எந்தத் தடங்கலோ எதுவும் இல்லாமல் தொடர்ந்து
அந்நூலின் உள்ளடக்கத்தைத் தந்தார். நானும் இந்த நூலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாசித்திருக்கிறேன்.
உடனே அந்த நூலைப் பற்றி அன்று என்னிடம் கேட்டிருந்தால் பத்துப் பதினைந்து நிமிடத்தில்
நினைவில் இருப்பதைச் சொல்லியிருப்பேன். ஆனால் இவரோ பிரவாகமெடுத்த வெள்ளமாகக் கொட்டித்
தீர்த்தார். சொல்லும் முறையும் அத்தனை இனிமை. நடுவில் நிறுத்த வேண்டியதிருந்தும் என்னால்
நிறுத்த முடியவில்லை. அந்தக் காணொளியும் விட்டு விட்டு துண்டு துண்டாக எடுத்தது போல்
தெரியவில்லை – just one sequence. இத்தனைக் கருத்துகளைக் கோவையாகப் பேச வேண்டுமென்றால் ... அம்மாடி, என்னால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. (37
ஆண்டுகள் பேராசிரியர் பணி என்று சொல்லிக் கொள்ளலாம்! அதிலும் வேகமாகப் பேசி விடுகிறேன்
என்று முதுகலை வகுப்புகளில் குறை சொல்லப்பட்டதுமுண்டு.)
சேரன் செங்குட்டுவன் நாடக வசனத்தை சிவாஜி கணேசன் மேக்கப் போடும் போது, ஒரே ஒரு முறை செவியால் கேட்டு, அப்படியே ஒரே டேக்கில் பேசினார் என்று சொல்வார்கள். நானும் அந்த நாடகத்தைப்
பார்த்திருக்கிறேன். நடுவில் cut ஏதும்
இருக்காது. இந்த இளைஞரும் அவ்வாறு அற்புதமாகப் பேசினார். Teleprompter ஏதும் இருந்திருக்காது!
பல தலைப்புகளில் நிறைய பேசியிருப்பார் போலும். நான் வாசித்திருக்கும் ‘The psychology of money’ பற்றியும் பேசியிருக்கிறார். கேட்கணும். இன்று மாலை walk time-ல் அவரது தாவோயிசம் கேட்கப் போகிறேன்.

No comments:
Post a Comment