Tuesday, November 08, 2005

102. மரணம் தொட்ட கணங்கள்…3

* முதல் கணம் ...

* இரண்டாவது கணம் ...


1990 ஜனவரி முதல் நாள்; புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து இரவு வீடு திரும்பிய அப்பா நெஞ்சு கரிக்கிறது என்று சொல்லி, அம்மாவிடம் சுக்கு மல்லி காஃபி கேட்டு, குடிச்சிட்டு படுத்திட்டாங்க. இரவு இரண்டு மணிக்கு அம்மா என்னை எழுப்பியபோது அப்பாவின் மூச்சு சரியாக இல்லை; தொண்டைக்குள் கரட்..கரட் என்று சத்தம். எதிர் வீட்டு டாக்டர் நண்பர் வந்தவர் ‘எல்லாம் முடிஞ்சிடுச்சி’ என்று சொன்னபோது மணி 2.20.

அப்பாவின் இறப்புச் சான்றிதழ் வாங்கும் விஷயத்திற்காக டாக்டரிடம் சென்ற போது, டாக்டர், நண்பர் என்ற முறையில், ‘Sam, அப்பாவுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை; அவரே இப்படி சட்டுன்னு போய்ட்டார். ரெண்டு பெண்பிள்ளைகளை வைத்துக்கொண்டு இப்படி சிகரெட் பிடிக்கிறீர்களே’ என்றார். ஏற்கெனவே நானும் இதைப்பற்றி நினைத்ததுண்டு; பயப்பட்டதும் உண்டு.

ஆறாம் தேதி இரவு; வீட்டில் சும்மா வெளியே நின்று கொண்டிருந்தவனை நண்பன் அரசரடி வரை டீ குடிக்கக் கூட்டிப்போனான்; நாலைந்து பேர் சேர்ந்தோம். டீ, அரட்டை என்றாகி புறப்படும்போது இரண்டு சிகரெட் வாங்கி ஒன்றைப் பற்ற வைத்துக்கொண்டு நண்பனின் வண்டியில் பின்னால் உட்கார, தெரு முனையில் விட்டுவிட்டுச் சென்றான். வீடு நோக்கி நடந்து கொண்டிருக்கும்போது இந்தச் சனியனை விட்டால் என்ன என்று நினைத்து கையில் இருந்ததை ஆழமாக இழுத்து, உறிஞ்சி…நசுக்கினேன். பையில் இருந்த இன்னொரு சிகரெட்டை எடுத்து வீசி எறிந்தேன். ஒரு கம்பீரம் வந்த மாதிரி தோன்றியது. ஒரு பத்துப் பதினைந்து அடிதான் அந்தக் கம்பீரம் எல்லாம். திரும்பிப்போய் தூர எறிந்த சிகரெட்டைத் தேடிப் பிடித்து எடுத்துக் கொண்டேன்; வீட்டிற்குச் சென்று, அந்த சிகரெட்டைப் பற்ற வைத்து மீண்டும் ஆழமாக உறிஞ்சி…சூழும் புகை மண்டலத்திற்குள் லயித்திருந்து, கடைசியாக ஆஷ் ட்ரேயில் அதை நன்றாக நசுக்கி…நாளையிலிருந்து சிகரெட் குடிக்கக்கூடாது என்று ஒரு முடிவெடுத்தேன் - வாழ்க்கையில் அதுபோன்று சிகரெட்டுக்காகவே ஏற்கெனவே எடுத்த முடிவுகளின் எண்ணிக்கை ஒரு இருபதிலிருந்து முப்பதாவது இருக்கும். இது முப்பத்தொன்று என்று வைத்துக்கொள்வோமே; (Mark Twain சொன்னதை இப்ப நான் வேறு சொல்லணுமா, என்ன?)எப்படி என்று தெரியவில்லை… அதன் பிறகு இந்த நிமிடம் வரை குடிக்கவேஏஏஏஏஏஏஏஏஏ இல்லை! வீட்டில், வெளியில், கல்லூரியில் எங்கும் எல்லோருக்கும் அப்படி ஒரு ஆச்சரியம். எத்தனை நாளைக்குன்னு பார்ப்போம் என்று சொன்னவர்கள்தான் அதிகம்.

A smoker is always a smoker - என்பதற்கு ஏற்றாற்போல இன்னுமும் சிகரெட் ஆசை என்னவோ விடவில்லை! பேனா மூடி, பென்சில் இப்படி ஏதாவது ஒன்றை வாயில் வைத்துக்கொண்டு ‘பழைய நினைப்பில்’ மூழ்கி, வீட்டில் திட்டு வாங்கும்போதெல்லாம், ‘என் இரண்டாம் மகளின் கல்யாணம் முடிந்த அன்றைக்குப் பாருங்கள்; தண்ணி, தம்முன்னு அடிச்சி ஒரு ‘அலப்ஸ்’ கொடுக்கிறேனா இல்லையான்னு’ சொல்லிக்கிட்டே இருப்பேன். அதே மாதிரி அவள் கல்யாணம் முடிந்த அன்று இரவு ‘ராஜ மாளிகை’யில் என்னோடு தம் அடிக்கப் பழகிய ஆல்பர்ட்டிடமும், இன்னொரு நண்பனிடமும் ஒரே ஒரு சிகரெட் ஓசி கேட்டேன்; பாவிப் பசங்க தரமாட்டேன்னுட்டாங்க! அதனால், இரண்டில் ஒன்றை மட்டும் செய்து என் வாக்குறுதியில் 50% மட்டும் நிறைவேற்றிக்கொண்டேன். இன்னும் ‘ஆசை இருக்கு தம் அடிக்க; அதிர்ஷ்டம் இல்லை பத்த வைக்க!’

எண்பதுகளின் நடுவரை டென்னிஸ் விளையாட்டு. அதன் பிறகு கஷ்டமாகத் தோன்றியது. உள்ளதே backhand என்றாலே அலர்ஜி; எப்படியோ அள்ளி அள்ளி போடணும். இப்ப அந்த சைடில் பந்து வந்தாலே ஒரு பெரிய philosophy-யே உருவாயிடுச்சி. என்ன, அந்த பந்தை எடுத்தாலும், அள்ளி அடுத்த சைடுக்குப் போட முடியவா போகுது; அப்ப, ஏன் வெட்டியா ஓடணும்? இதன் அடுத்த நிலையாக forehand-க்கு வரும் பந்தைப் பற்றியும் அதே தத்துவம் வர ஆரம்பிக்கும் நிலையில் ஒரேயடியா ரிசைன் பண்ணிட முடிவு செய்தேன். நல்ல வேளை வீட்டுக்குப் பக்கத்தில் மூன்று நண்பர்கள் shuttle cock பிரிட்டோ பள்ளி மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். நாலாவதாக நான் போய்ச் சேர்ந்தேன். நாலில் மூன்று பேர் சிகரெட் குடிப்பவர்கள். எங்களுக்கு warming up என்றாலே தம் அடிப்பதுதான். ஆட்டம் ஆரம்பிக்கும் முன்னும், பிறகு பின்னும் warming up கட்டாயம் உண்டு.


1990 செப்டம்பர் காலை. வழக்கம்போல விளையாட அரைக்கால் சட்டை போட்டுகிட்டு, shoe மாட்டப் போகும்போது திடீரென இடது கையின் மேற்பாகத்தில் சுரீர் என்று ஒரு வலி. ஏதோ பிடித்திருக்கும் போல என்று நினைத்து, துணைவியாரைச் சிறிது தேய்த்துவிடச் சொன்னேன். அடுத்த கையிலும் அதே வலி. புரிந்தது. அப்பா இறந்த போது மாரடைப்பின் விதங்கள், அறிகுறிகள் என்று பலர் சொல்லித் தெரிந்தது அப்போது கைகொடுத்தது. அப்படியே எதிர் வீட்டு டாக்டர் நண்பரிடம் சென்றேன். உறுதி செய்தார். வேறு ஒரு மருத்துவமனைக்கு அனுப்பினார்.

வழக்கமான மயக்க ஊசிகள், I.C.C.U., சுற்றியும் monitors, பதட்டத்தை அதிகமாக்கும் டாக்டர்களின் வருகைகள், கதவின் வட்டக் கண்ணாடி வழியே தெரியும் ஆதங்கம் நிறைந்த முகங்கள் …இப்படியே நாலைந்து நாட்கள்; எல்லாமே ஒரு பனிமூட்ட effect-ல். பின்பு ஒரு பத்துப் பனிரெண்டு நாட்கள் மருத்துவமனை வாசம். முதல் நான்கைந்து நாட்களுக்குப் பின் குடும்பத்தினர் முகத்தில் இருந்த இறுக்கம் மறைய, உடனிருந்த நண்பர்களின் வால்தனமும் கூடியது. வருபவர்கள் எல்லாரும் ஒரே மாதிரி Horlicks, Grapes, Oranges என்று வாங்கிக் குமிக்க, நண்பர்கள் ரவியும், சூரியும் கதவில் ஒரு போஸ்டரே ஒட்டிவிட்டார்கள்: There are many brands other than Horlicks!, Only seedless grapes accepted! என்று!
மெடிக்கல் லீவ் முடிந்து கல்லூரி திரும்பியபோது பல தரப்பட்ட comments! எனக்கு வந்தது heart attack-ஆக இருக்காது என்ற நம்பிக்கை சிலருக்கு. பல காரணங்கள்: சிகரெட் விட்டாச்சு - நல்ல active-ஆக இருக்கிற ஆளுதானே - எதையும் சீரியஸா எடுக்காத ஆளல்லவா {நம்ம போடுற ஆட்டம், அடிக்கிற கூத்து, போட்டுக்கிற சட்டை துணிமணி-கல்லூரியில் ஆசிரியர்கள் மத்தியில் ‘முதல் ஆள்’ என்று பெயர் (!?) வாங்கிய விஷயங்கள் பல

மருத்துவமனையில்….




- உதாரணமா, முதல்ல ஜீன்ஸ் போட்டது, ஜிப்பா பைஜாமாவோட வர்ரது, வலது கையில் வாட்ச்(ஆனா, இப்போவெல்லாம் இடது கையில்தான்; அதுக்காக வலது கையில் கட்றவங்களை நான் ஒண்ணுமே சொல்லலையே!!) இதோடு, பூனக்குட்டிய இடுக்கிகிட்டு இருக்கிறது மாதிரி எப்போதும் தோளில் தொங்கும் காமெரா, குட்டியூண்டு வெள்ளெழுத்து கண்ணாடி போட்டுக்கிட்டு அதையும் கயித்தில கட்டி தொங்க விட்டுக்கிறதுன்னு ஒரு பெரிய லிஸ்ட் — இதல்லம் வச்சு பல மக்கள் freaky என்பார்கள், சிலர் trendy என்பார்கள். எது எப்படியாயினும், நான் எனது மூன்றாம் கட்டளையைப் பின்பற்றி செய்த விஷயங்கள் இவை.

இதையெல்லாம் போற்றுவோர் போற்றட்டும்…ம்ம்… அதுக்குப் பிறகு என்னமோ சொல்லுவாங்களே அதுமாதிரி கண்டுக்காம போயிடறது. இந்த மாதிரி இருந்ததாலேயே மக்கள் அப்படி நினைச்சாங்க; சொன்னாங்க. ஒருத்தர் ‘you’ve become very fair’அப்டின்னார். Dont envy. Got it by paying a heavy price for that’ என்றேன். ஏதாவது gas problem இருக்கும் என்று சொன்னது பலர். நானும் அடுத்த செக்கப் போகும்போது டாக்டர் அதே மாதிரி சொல்லிட மாட்டாராவென நினைத்தேன். sure case of myocardial infarction. left ventricle wall has become thicker- அப்படின்னு ஒண்ணுக்கு மூணு டாக்டர்கள் சொல்லிட்டாங்க! கொழுப்பும் (cholesterol) கூடிப்போச்சுன்னாங்க. (யாருங்க அது? ‘இது’ தெரிஞ்சதுதானே அப்டீங்றது?) ஒரு முறை ‘அட்டாக் கேசுகள்’ நாலஞ்சு பேராசிரியர்கள் சேர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது - வேறெங்கே, காலேஜ் கான்டீன்தான் - ஒருவர் கேட்டார். நாம எல்லாருக்குமே personal habits ரொம்ப வித்தியாசமா இருக்கு; ஆனா ஒரே மாதிரி அடிபட்டு இருக்கோமே, காரணம் என்னவாக இருக்கும் என்றார். ஆங்கிலப் பேராசிரியர் வசந்தன் ரொமப் சிம்ப்ளா ஒரு தியரி சொன்னார்: heart-ன்னு ஒண்ணு இருந்தா heart attack-ன்னு ஒண்ணு வரும்!

இதில என்ன வருத்தம்னா, அப்போ என் மகள்கள் இருவருமே இதன் gravity-யைப் புரிந்துகொள்ள முடியாத வயதினர்; மூத்தவள் அப்போ படித்தது XI; அடுத்தவள் VIII. துணைவியார் அப்போது வேலை எதுவும் பார்க்கவில்லை. அதனாலேயே, வேலை தேட, ஒரு வேலையும் சீக்கிரம் கிடைத்தது பெரும் ஆறுதலாக இருந்தது. ஆனால், என் emotional balance-யை முற்றிலுமாக இழந்தேன்; இன்னும் அந்தப் பிரச்சனை உண்டு. அதைப் பற்றித் தனியா பேசணும். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க முயற்சித்தேன்.

இருந்தும் 5 வருடங்கள் ஆன பிறகு, 95-ல் இரண்டாம் முறையாக ‘அட்டாக்’. மறுபடியும் மருத்துவமனை, I.C.C.U.; I.C.U., சோகங்கள், பயங்கள், ஆறுதல்கள், இறுக்கங்கள் என இன்னொரு சுழற்சி. அதிலிருந்தும் வெளியே வந்து, மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தாகி விட்டது. அதற்கு அடுத்த வாரம் உறவினர்கள் வேளாங்கண்ணி போவதாக முடிவு செய்து, என் மகள்களையும் கூட அழைத்து சென்றார்கள். அவர்கள் திரும்பி வரும் இரவுக்கு முந்திய காலையில் மறுபடி எனக்குப் பிரச்சனை வர, முந்திய மருத்துவமனை மீது திருப்தி இல்லாத காரணத்தால் நண்பர்கள் மூலம் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். இரவு வீடு திரும்பிய மகள்களுக்கு நான் மறுபடி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டேன் என்ற சேதி மட்டும் கிடைத்தது. எந்த மருத்துவ மனையென்பதோ, என்ன ஆயிற்று என்பதோ ஒன்றும் தெரியாது. பாவம், குழந்தைகள் உறவினர்களோடு பழைய மருத்துவ மனைக்குச் சென்று நான் அங்கு இல்லாதது கண்டு வேறு சில மருத்துவமனைகளை முயற்சித்து அங்கும் தோல்வி கண்டு என்ன செய்வதென்று அறியாமல் உறவினரின் வீட்டில் தங்கியிருக்கிறார்கள். நீண்ட, சோகமான, கொடுமையான இரவு என்று அவர்கள் மனதில் அந்த இரவு இன்றுவரையும் ஆழமாகப் பதிந்து விட்டது. அந்த வயதில் வரக்கூடாத சோகங்களும், வேதனைகளும் பிள்ளைகளுக்கு. அவர்களைப் பார்த்து எனக்கு அந்த நோய்க்குப் பின் வரக்கூடாத மன அழுத்தங்கள். குரங்கை நினைக்காம மருந்து சாப்பிடு என்பது போன்ற கதைதான். ரொம்ப டென்ஷன் வச்சுக்கக் கூடாதுன்னு சொன்னாதானே, டென்ஷனே வருது. ‘ஆசையை அடக்கு’ன்னு புத்தர் சொன்னாராம்; ஆனா, அதுவே ஒரு ஆசைதானே. another oxymoron in our lives! வேறென்ன சொல்ல? ஆயினும் வாழ்க்கை நல்லாவேதான் போச்சு - 2001 வரை.

அதுவரை இருந்த ‘சிலாவத்தான’ (care free) வாழ்க்கையைக் கொஞ்சம் மாற்றி இப்போ ஒரு ஒழுங்கான வாழ்க்கைக்கு மாறினேன். ஒரு காலத்தில் dark room-க்குள் போனால் நாளும், நேரமும் மறந்தே போகும். photography-ன்னு ஒரு கிறுக்கு; b & w processing and printing என்று நேரம் காலம் மறந்ததெல்லாம் இப்போ பழைய கதையாயிற்று. சொன்னது மாதிரி 1995 -2001 வரை நடந்த நல்ல விஷயங்கள் பல: தலைக்கு மேல் ஒரு கூறை (1996)- ரொம்ப காலம் தாழ்ந்ததாயினும் ஒரு மன நிறைவு; மூத்த மகள் கல்வி முடித்து, கல்யாணமும் (1997), சின்னவளின் படிப்பு முடித்து, வேலையிலும் சேர்ந்தது, மூத்த பேரன் பிறந்தது (2001). இதோடு நீண்ட நாள் கனவான கார் ஒன்று வாங்குவதும் அந்த ஆண்டே. ஜாவா பழகியது போலவே காரும் பழகினேன். எப்போதோ ஒரு நண்பனின் காரை ஓட்டிய அனுபவம். அதை வைத்தே நாலு நாள் நம்ம ஏரியாவில் - ஊரைவிட்டு ஒதுங்கி வீடு கட்டியதில் இந்த ஒரு லாபம் - ஓட்டிவிட்டு ஊருக்குள்ளும் போயாகிவிட்டது. கார் வாங்கி ஓரிரு மாதத்தில் வலது கையில் கொஞ்சம் வலி. கார் ஓட்டியதில் வந்த வலியென்று நினைத்து பேசாதிருந்து விட்டேன். வலி கொஞ்சம் இடம் மாறியது - migratory pain என்று சொல்வார்களே என்று ஒரு சின்ன நினைப்பு. சரி, ரெகுலர் செக்கப் செய்தும் நாளாயிற்றே என்று டாக்டரிடம் போனேன். அது 2001 செப்டம்பர் மாதத்தின் கடைசியில் ஒரு நாள்.


அங்க போனா…




***


Nov 08 2005 01:36 am சொந்தக்கதை.. edit this
Rate this post at http://www.thamizmanam.com/ Current rating is:
(இதுவரை 2 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
11 Responses
துளசி கோபால் Says: after publication. e -->November 8th, 2005 at 2:30 am e
ம்… அப்புறம்?….
ராம்கி Says: after publication. e -->November 8th, 2005 at 7:10 am e
நீங்க ஜாலியா எங்களுக்கு கதை சொல்லிட்டு இருக்கீங்க.. அந்த நாட்கள்ல வீட்டுல என்ன பாடு பட்டிருப்பாங்க?
D.Krishnamurthy Says: after publication. e -->November 8th, 2005 at 7:34 am e
Well said ramki.Disease to us is mental agony to our dear ones only, not to us. Still, dharumi sir, your write up stirs many memories.
Awwai Says: after publication. e -->November 8th, 2005 at 10:07 am e
ஒருத்தர் ‘you’ve become very fair’அப்டின்னார். Dont envy. Got it by paying a heavy price for that’ என்றேன்.
I thought you were always fair! (well, if they were refering to complexion, not integrity, who cares? it doesn’t matter at all!
வெளிகண்ட நாதர் Says: after publication. e -->November 8th, 2005 at 12:33 pm e
இந்த மரணம் வந்து வந்து தொட்டு போனா மாதிரி உண்டாகிற அனுபவங்கள், பய அவலங்கள் இருக்கே பெருத்த அடிபட்டு ஆஸ்பத்திரி போயிட்டு வரப்பதான் தெரியும். விபத்து ஏற்பட்டு படுத்து கிடந்த நாட்கள்ல இதை அனுபவிச்சிருக்கிறேன்.
dharumi Says: after publication. e -->November 8th, 2005 at 1:31 pm e
துளசி,நல்லாயிருக்கா கதை?!
அவ்வை,கேட்டது உங்க பர்னபாஸ். probably it matters to him.
dharumi Says: after publication. e -->November 8th, 2005 at 1:32 pm e
துளசி,நல்லாயிருக்கா கதை?!
அவ்வை,கேட்டது உங்க பர்னபாஸ். probably it matters to him. anyway thanks for your compliment. நமக்குள்ள எதுக்கு, இது?
dharumi Says: after publication. e -->November 8th, 2005 at 1:35 pm e
ராம்கி, D.K.,அதிலயும் பிள்ளைகளுக்கு ஏற்பட்ட அந்த நிகழ்ச்சி இப்போது நினைத்தாலும் அவர்களுக்குமே நெஞ்செல்லாம் பதறும்.
வெளிகண்ட நாதர்,அதைத்தான் சொல்லுவாங்க: தனக்கு வரும் வரை எல்லாமே வேடிக்கைதான் என்று…
சன்னாசி Says: after publication. e -->November 9th, 2005 at 1:21 am e
//அதுவரை இருந்த ‘சிலாவத்தான’ (care free) வாழ்க்கையைக் //இந்த வார்த்தையைக் கேட்டுப் பல நாள் (வருடங்கள்?) ஆயிற்று. இது இன்னும் திரிந்து (அசல் எதுவோ?) “செலாத்தா”, “செலாவட்டா” என்றும் வரும்.
நண்பன் Says: after publication. e -->December 8th, 2005 at 1:31 am e
அருமையான கட்டுரை.
நீங்கள் கொடுத்த சுட்டியின் மூலம் இந்த ஒரு பதிவு மட்டுமே படித்தேன்.
மீண்டும் வந்து முழுக்கப் படிக்கிறேன்.
அப்புறம்.
அந்த புகைப்படப் பழக்கம் -
அதைக் கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன் - புகை பிடிப்பதை விட்டுட்டு, புகைப்படத்தைப் பிடிக்கலாம் என்று தான்..
தருமி Says: after publication. e -->December 8th, 2005 at 12:41 pm e
அந்த புகைப்படப் பழக்கம் -அதைக் கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன” “ //நல்ல ஆள் பாத்தீங்க, போங்க. நான் சொல்லிக் கொடுத்தா என்ன மாதிரி மோசமான படங்கள் எடுக்க முடியும்னுதான் தெரிஞ்சுக்கலாம்.
நல்ல படம் எடுக்கணும்னா இங்க போங்க…சரியா…?http://anandvinay1.blogspot.com/

2 comments:

Unknown said...

டாக்டர்கள் 'தினமும் நடக்கணும்' என்று சொல்லும்போது. நடக்கணும் என்றுதான் நினைக்கிறது. ஆனால் முடியவில்லையே.
உங்களைப் போன்றவர்களின் அனுபவங்களை (பழைய பதிவென்றாலும்) கேட்கும்போதும், டாக்டர்கள் சொல்வதை ஒழுங்காக கடைபிடிக்கணும் என்று தோன்றுகிறது. ஆனால் நடக்க மாட்டேங்குதே.
என் மூத்த அதிகாரியாக இருந்தவர் ரிடையர்டு கர்னல். நடை, உடை பாவணை, பழக்க வழக்கங்களில் கண்டிப்பானவர். அட அவருக்கும் ஹார்ட் அட்டாக். நான் தான் மருத்துவமனையில் சேர்த்தேன். 'எல்லாம் இறைவன் கையில்' என்று விடுவதா? 'ஒட்டகத்தை கட்டிப்போடு, பின்னர் இறைவனின் பொறுப்பிலாக்கு' என்பது போல்....
நிறைய கடமைகள் இருக்கிறது. இன்னும் சிறிது காலம் வேலை செய்தால்தான் முடியும். நாளையிலிருந்து நடக்க ஆரம்பித்து விட வேண்டும்.

தருமி said...

சுல்தான்,
இப்ப பாருங்க .. 203-வது பதிவைப் பதிந்து விட்டு தமிழ் மணத்தில் சேர்க்க நினைத்தால் பழைய பழைய பதிவுகள் எல்லாம் தலை காட்டுகின்றன. புதிய பதிவு பாவம் போல தனியா நிக்குது!

என்ன காரணம்; எப்படி இதைத் தவிர்ப்பது என்று முயலலாம்;இல்லை, கடவுள் விட்ட வழின்னு பேசாம அக்கடான்னு உட்காரலாம்.

சரி.. சரி..இப்போ என்ன சொல்றீங்க; //நாளையிலிருந்து நடக்க ஆரம்பித்து விட வேண்டும். //

நாளையிலிருந்துதானே ...!

Post a Comment