Sunday, October 16, 2005

94. தல புராணம்…4

* ஏனைய பதிவுகள்:

1...............

2.............. 

3............... 

4............. 

5............. 




*







சொகுசான அறை; சின்ன நண்பர்கள் குழாம்; புதிதாக ஏற்படுத்திக்கொண்டிருந்த புகைப்பழக்கம் - வாழ்க்கை நல்லாவே போச்சு. ஒரு கெட்ட பழக்கம் பழகியாச்சு. அந்தப் பழக்கமும் 1990 ஜனவரி 10 தேதி இரவு 12 மணி வரை தொடர்ந்தது. இன்னொரு பழக்கம் சொன்னேனே - அது நல்ல பழக்கமா, இல்ல கெட்ட பழக்கமா? நீங்களே முடிவு பண்ணிக்கீங்க,, சரியா?

எங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறை அந்த காம்பஸின் கடைசியில், மேற்கு மூலையில் இருந்தது. அதை ஒட்டி காம்பவுண்டு சுவர். எங்கள் ‘முன்னோர்கள்’ எங்களுக்கு வைத்து விட்டுப் போயிருந்த இன்னொரு வசதி என்னவென்றால், எங்கள் அறையை ஒட்டிய காம்பவுண்ட் சுவற்றில் ஏறிக் குதிப்பதற்குரியவாறு அங்கங்கே செங்கல்கள் பெயர்ந்திருக்கும். நாங்கள் அந்த காம்பஸுக்குள் வருவதற்கு இதுவே சுலப வழி எங்களுக்கு. ஒரு டீ குடிக்கணுமா, ஒரு ‘இழுப்பு’ இழுக்கணுமா, சும்மா ஒரு ஜம்ப்; அவ்வளவுதான். எங்களுக்குத்தான் அத்தனை சுலபம். எல்லாருக்கும் அப்படியெல்லாம் முடியாது. எங்கெங்கே செங்கல்லில் ஓட்டை, இன்னும் பல விஷயம் அதில…லேசுப்பட்ட டெக்னிக் இல்ல. இதுக்கெல்லாம் பிறகு ஏதோ போனா போகுதுன்னு, அப்பப்போ படிக்கக் கூட செய்வோம்!

பள்ளியிறுதி வரை வீட்டுக்குத் தெரியாமல் போனது ஒரே ஒரு சினிமா. எப்படியோ, தைரியமாய், காசெல்லாம் செட்டப் பண்ணி நண்பர்களின் வற்புறுத்தலிலும், சுயமாய் வளர்த்துக்கொண்ட தைரியத்திலும் (?) ஒரு பெரிய ரிஸ்க் எடுத்து பார்த்தது அந்த சினிமா. மற்றபடி சினிமா போனா வீட்டோடு; இல்ல ஊர்ல இருந்து விருந்தாட்கள் யாரும் வந்தால் ஒட்டிக்கிறது அவ்வளவுதான். இங்கிலீசு படம் எல்லாம் ஒண்ணிரண்டு - எல்லாம் சாமி படங்கள் -தப்பா எடுத்துக்காதீங்க, இப்ப சொல்ற ‘சாமி படங்கள்’ இல்ல. நிஜ சாமி.. Ten Commandments மூணுதடவை பாத்தேன். எப்டீங்கிறிங்களா? முதல்ல வீட்டோட; அதுக்குப் பிறகு இந்தப் படம் பார்க்கவே ஊரிலிருந்து வந்த உறவு மக்களோட - ஒரு guide மாதிரி வச்சுக்கங்களேன்!

அதில என்னென்னா, பாத்த அத்தனை இங்கிலீசு படங்கள்ல வர்ர மூஞ்சு எல்லாம் ஒரே மாதிரிதான் தெரிஞ்சுது. முதல் சீன்ல செத்துட்டான்னு நினச்சவன் அடுத்த சீன்ல மறுபடியும் உயிரோடு வருவான்! ஏதோ, ‘Ten Commandments’ மட்டும் ஒரு ஆளு-Charlton Heston- தாடியோடவும், மொட்டைத்தலையோடு Yul Brynner வந்ததும் நல்லதாப் போச்சு.


காம்பஸுக்குப் போனால் இரவு ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டில் ஆஜராகி இருக்கவேண்டுமென ஸ்ட்ரிக்ட் ரூல். அதனால, இந்த சினிமாவுக்குப் போற எண்ணமே வந்ததில்லை. ஏதோ , ஒரு டீ குடிச்சமா, ஒரு தம் அடிச்சமான்னு இருந்தோம். அப்பதான் ரீகல் தியேட்டர் பற்றி மக்கள் விவரமா சொன்னாங்க. எப்படி no risk-ல இங்கிலீபீசு படம் பாக்க முடியும்னு தெரிஞ்சிச்சு.


ஊருக்கு ஊர் பிரிட்டீஷ்காரங்க டவுன் ஹால்னு ஒண்ணு கட்டிப் போட்டிருப்பாங்க போல. அது மாதிரி இது ஒரு ஹால்; எட்வர்டு ஹால்னு பேரு. மதுரை ரயில் நிலையம் விட்டு வெளியே வந்ததும் மெயின் ரோட்ல இருக்கு. இந்த தியேட்டருக்கு எதிர்த்தாற்போல கிழக்கே போற ரோடுதான் டவுன் ஹால் ரோடு; நேரே போனா மீனாட்சி அம்மன் கோவில்தான். இந்த தியேட்டரிலிருந்து பார்த்தாலே கோவிலின் மேற்குக் கோபுரம் தெரியும்.(படம் -கீழே)


இந்த தியேட்டர்ல ஒரு விசேஷம் என்னன்னா, பகல் முழுவதும் இது ஒரு வாசகசாலை. சாயங்காலம் ஆறு மணிக்கு அதை மூடி, பென்ச்,ஸ்க்ரீன் அப்படி இப்படி ஒரு பத்து நிமிஷத்தில தியேட்டரா புது ஜென்மம எடுத்திடும். ஆறரை, ஆறே முக்கால் மணிக்கு மேலதான் டிக்கெட்டே கொடுக்க ஆரம்பிப்பார்கள். ஏழு மணிக்கு அப்போதெல்லாம் சட்டமாக இருந்த அரசு நியூஸ் ரீல போட்டு (ஆமா, இப்போவெல்லாம் அந்த அரசு செய்தித் தொகுப்பு எல்லாம் உண்டா? உண்டென்றால் அதை யார், எங்கே பார்க்கிறார்கள்?), அதுக்குப் பிறகு ஸ்லைடு, ட்ரைலர் எல்லாம் போட்டு முடிச்சி படம் போட எப்படியும் குறைந்தது ஏழேகாலாவது ஆகிவிடும். எவ்வளவு லேட்டானாலும் படம் எட்டே முக்காலுக்குள் முடிந்துவிடும். ஆக, வீட்டிலிருந்து ஆறே முக்கால், ஏழு மணிக்குப் புறப்பட்டால் கூட படம் பார்த்து விட்டு நல்ல பிள்ளையாய் ஒன்பது மணிக்கு முன்பே திரும்பிடலாம். சில சின்னச் சின்ன, ஆனா முக்கியமான precautions எடுக்கணும்: நம்ம பசங்ககிட்ட முதல்லே சொல்லிடணும்; இல்லன்னா சரியா அன்னைக்கிப் பாத்து வீட்டுக்குத் தேடி வந்திருவானுங்க; இரண்டாவது, திரும்பி வரும்போது கிழிச்ச அரை டிக்கெட்டை எடுத்து பத்திரமா வெளியே கடாசிட்டு வரணும். ஒரு tell tale signs -ம் இருக்கக் கூடாதல்லவா?


இந்தத் தியேட்டருக்கென்றே சில culture உண்டு; மிகவும் ஆச்சரியமானவைகள். டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்கும்போதெல்லாம் அந்த ஆச்சரியங்கள் அநேகமாக நடக்கும். மிகச் சாதாரண ஆட்களாக இருப்பார்கள். ஆனால், பேச ஆரம்பித்தால் ஹாலிவுட்டின் சரித்திரமே அதில் இருக்கும். எந்தப் படம் எந்தக் கம்பெனியால் எப்போது எடுக்கப் பட்டது; நடிக, நடிகைகள் பெயர்கள், டைரக்டர்கள் எல்லாமே அலசப்படும். பொய்க் கதைகளாக இருக்காது; நிஜமான தகவல்களாக இருக்கும் கிரிக்கெட் விசிறிகள் கெட்டார்கள் போங்க… என்ன, கிரிக்கெட் ரசிகப் பெருமக்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் மழைக்குக் கூட விளையாட்டு மைதானங்களில் ஒதுங்கி இருக்க மாட்டார்கள். ஆனால் வாய் கிழியக் கிழிய technicalities பேசுவார்கள். இங்கே அப்படி இல்லை.. ரெகுலரா படம் பார்க்கிற கூட்டமே உண்டு. ஒன்றிரண்டு மாதங்கள் நீங்களும் ஆங்கிலப் படங்கள் பார்க்கப் போனீர்கள் என்றால் பல முகங்களை அடிக்கடி தொடர்ந்து பார்க்கலாம். அவர்களில் பலரும் நான் சொன்னது மாதிரி நடமாடும் ‘என்சைக்கிளோபீடியா’வாக இருப்பார்கள்.


இதைவிடவும் ஆச்சரியமான விதயம் ஒன்றுண்டு. நம்ம மக்களுக்கு, படித்தவன் படிக்காதவன் என்ற வேற்றுமையே இல்லாமல் ஒரு நோய் உண்டு; மூத்திரப் பை ரொம்ப வீக்; அங்கிங்கு என்னாதபடி எங்கெங்கும், எப்போதும், தம் கண்களை மூடிக்கொண்டு நம் கண்களையும், மூக்குகளையும் மூட வைப்பதில் மன்னர்கள்தான். ஸ்மார்ட்டாக உடுத்துக்கொண்டு ‘ஓரங்கட்டும்’ எத்தனை படித்த இளைஞர்களிடம் நானே சண்டை போட்டு, திட்டியிருக்கிறேன். நன்றாக செலவு செய்து கட்டிய மூத்திரப்பிரையாக இருந்தாலும் நம் தியேட்டர்களில் அவைகளின் உள்ளே செல்ல நல்ல மன உறுதி இருக்க வேண்டும் - இப்போதும் கூட. ஆனால், ரீகல் தியேட்டரில் பெரிய ஒரு சதுரம்; மேலே கூரை கிடையாது; நான்கு பக்கமும் சுவர்கள்; சுவர்களை ஒட்டி இரண்டு இன்ச் உயரத்தில் ஒரு சிமெண்ட் மேடை; அவ்வளவுதான். ஆனாலும், ஏன் என்று யாருக்கும் தெரியாது - இந்த தியேட்டருக்கு வருபவர்கள் எல்லோருமே ஒரு ஒழுங்கைக் கடைப்பிடித்து, தன் வரிசைக்குக் காத்திருந்து சரியான இடத்தில் சரியாகப் "போவது" என்பது இதுவரை நான் எங்கும் கண்டதுமில்லை; கேட்டது கூட இல்லை.


அதே போலவே எல்லா தியேட்டர்களில் மட்டுமல்ல எங்கெங்கு படிகள் இருக்கின்றனவோ அந்த படிகளின் மூலைகளைப் பார்த்ததும் இந்த வெற்றிலை போடும் ஆட்களுக்கு என்ன ஆகுமோ தெரியவில்லை; என்ன instinct அல்லது reflex என்று தெரியாது - Pavlov-ன் நாய் மாதிரி - மூலைகளில் எச்சில் துப்பும் அந்த ‘இந்தியப் பண்பை’ ரீகலில் பார்க்கவே முடியாது.

தியேட்டரின் கீழ் பகுதியில் மூன்று வகுப்புகள், மேலே இரண்டு பகுதிகள். கீழே உள்ள மூன்று வகுப்புகளின் கட்டணம் எல்லாமே ஒரு ரூபாய்க்கும் குறைவே. 30, 60, 90 பைசா என்ற கணக்கில் டிக்கெட்டுகள் என்று நினைக்கிறேன். நம்ம ஸ்டாண்டர்டுக்கு எப்பவுமே இரண்டாம் வகுப்புதான். ஆனால் அதில் ஒரு தடவை ஒரு பிரச்சனை. இப்போ சன் டீ.வி.யில் வர்ர மாதிரி அப்போ நம்ம தியேட்டரில் ஸ்பெஷல் வாரங்கள் என்று வரும். ஒரு வாரத்தில் ஞாயிற்றுக் கிழமை தவிர மீதி 6 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு படமாக போடுவார்கள்; ஒரே நடிகர் - ஜெர்ரி லூயிஸ், கிளார்க் கேபிள், நார்மன் விஸ்டம்,…- நடித்த படங்கள், ஒரே கம்பெனியின் படங்கள் - எம்.ஜி.எம்., கொலம்பியா, - என்று இருக்கும். முதல்லேயே ஒழுங்கா ப்ளான் செய்து எந்தெந்த படங்களைப் பார்ப்பது, அதற்குரிய பொருளாதாரப் பிரச்சனைகளை எப்படி எதிர் கொள்வது என்பது போன்ற திட்டங்களைத் தீட்டி - இறுதிப் பரிட்சைக்கு டைம் டேபிள் போடுவது போல் - ரெடியாக வேண்டும்.

அப்படி போட்டதில் ஒரு தடவை எக்ஸ்ட்ராவாக ஒரு படம் சேர்ந்து விட்டது. பொருளாதாரப் பிரச்சனை மிகுந்த சிக்கலை ஏற்படுத்தியது. இருந்தாலும் போய்விடுவது என்று முடிவெடுத்து தியேட்டர் போனேன். 30 பைசா வரிசை
தியேட்டருக்கு வரும் எல்லோரும் பார்க்க முடியும்; மற்ற இரு வகுப்புகளுக்கும் டிக்கெட் கவுண்ட்டர் உள்ளே இருக்கும். அந்த வரிசையில் நிற்கத் தயக்கம். நின்ற ஒருவரிடம் ஏதோ காரணம் சொல்லி டிக்கெட் எடுத்தாகிவிட்டது. உள்ளே விரைந்து போய் கடைசி வரிசையில் இடம் பிடித்து கையோடு கொண்டு போயிருந்த நோட்டை (ஆமா! பிள்ளை படிக்கப் போகிறது என்று அப்பதான் வீட்ல நினைப்பாங்க!) அந்த சீட்டில் வைத்து ரிசர்வ் செய்துவிட்டு வெளியே வந்து, லைட் எல்லாம் அணைத்த பிறகு உள்ளே போனேன். வேறு யாரும் நான் 30 பைசா டிக்கெட்டில் வந்திருப்பது தெரியக்கூடாது என்ற எண்ணம். ஏன்னா, அது ‘தரை டிக்கெட் லெவல்தான்’. அதற்குள் பக்கத்து சீட்டுக்காரர் என் நோட்டைத் திறந்து பார்த்து விட்டார் போலும். நான் போய் உட்கார்ந்ததும், ‘தம்பி, பெரிய கிளாஸ்ல படிக்கிறீங்க; எதுக்கு இங்க வர்ரீங்க’ன்னு கேட்டார். அப்போ நான் முதுகலை முதலாண்டு. இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை இனியும் நோகடிக்கக் கூடாதென்று முடிவு செய்து அதன் பிறகு அந்த வகுப்பிற்குப் போவதில்லை.


இன்னொரு unique matter என்னன்னா, இடைவேளையில் தியேட்டருக்கு வெளியே செல்ல அனுமதி உண்டு; ஒரு சிகரெட் அட்டையின் பின்பக்கம் ஒரு சீல். அதுதான் அவுட்பாஸ். எதிர்த்தாற்போல் இருந்த, இன்னும் இருக்கும் Zam-Zam டீக்கடையில் (the hottest tea i have ever had in my life) குடிச்சிட்டு வரலாம். சில பேர் முதல் பாதி சினிமாவை ஒரு நாளும், பின் பாதியை அடுத்த நாளும் - ஒரே படத்த இரண்டு instalments-ல் - பார்த்ததுண்டு. ஆனால் இது சில காலமே நடைமுறைப் படுத்தப் பட்டது.


இதில என் தப்பு ஒண்ணுமே இல்லீங்க; இப்படி திருட்டுத்தனமா பாத்த முதல் படம் நல்லா நினைவில் இருக்கிறது.  Rank Organization’s ON THE BEAT என்ற Norman Wisdom நடித்த நகைச்சுவைப் படம். நான் போடும் ஒரு கணக்கு: Norman Wisdom + Jerry Lewis = நம்ம நாகேஷ். காதலிக்க நேரமில்லை படத்தில் கூட ‘செல்லப்பா’ தனது ‘ஓஹோ’ என்ற படக்கம்பெனியின் மேசை மேல் Jerry Lewis போட்டோ வைத்திருப்பார். Norman Wisdom ஹாலிவுட் ஆள் இல்லையென்பதால் அதிகமாக நமக்குத் தெரியாத நடிகர். ஆயினும் நாகேஷின் பல படங்களில் இவரது பாதிப்பு இருக்கும். A stitch in time என்ற படத்தின் கதை நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தின் காமிக் ட்ராக்காக வரும்.


சரி, நம்ம கதைக்கு வருவோம். படம் பாத்துட்டு, வீட்டுக்குப் போய் அப்பாகூட உக்காந்து இரவுச் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது படத்தில் உள்ள ஒரு நல்ல காட்சி நினைவுக்கு வர, என்னையறியாமல் சிரித்து விட்டேன். அப்பா என்னவென்று கேட்க ஏதோ காலேஜ்..அது.. இது.. என்று அங்கே ஒரு ரீல் விட்டேன். அவ்வளவு பிடித்த படமே முதல் படமாக அமையாமல் இருந்திருந்தால் நான் அதற்குப் பிறகு இங்கிலீசு படம் பாக்கப் போயிருப்பேனா?


ரொம்ப வருடத்துக்கு இந்தப் பழக்கம் இருந்தது. வேலை பார்க்கும்போது நம்ம ஜாவாவில் போய் மெத்தைக்கு டிக்கெட் எடுத்து படம் பாக்கும்போதெல்லாம் 30 பைசாவில் சினிமா பார்த்த ‘ அந்த நாள் ஞாபகம்…’ வந்திரும். இப்போவெல்லாம் DVD வீட்டுக்கே வந்திடுதே! தியேட்டருக்கு அதிகமா போறதில்லையானாலும் இன்னும் அந்தப் பழக்கம் விடலை…ஏங்க! நீங்களே சொல்லுங்க; இது நல்ல பழக்கமா…இல்ல கெட்ட பழக்கமா…?



*******






Oct 16 2005 03:39 pm சொந்தக்கதை.. edit this
Rate this post at http://www.thamizmanam.com/ Current rating is:
(இதுவரை 1 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??

7 Responses
சின்னவன் Says: after publication. e -->October 16th, 2005 at 8:14 pm e
எவ்வள்வு பெரிய கிருதா !

Sa.Thirumalai Says: after publication. e -->October 16th, 2005 at 8:58 pm e
Dear Sir
For many Madurai-tians this is an irresistible habit. Parameswari is another theatre where good English movies were shown. I think both were run by same management. I used to see many friends only at these theatres not anywhere else in Madurai. Now except Mappillai Vinagayar no other theatre is showing regular English cinema, no theatre is showing real classical holywoods. Hmm, those are the days. You rekindled my nostalgia one more time. Interesting experiences. Pl. continue. Edward Hall has a better and clear look in now.
ThanksSa.Thirumalai

கோ.இராகவன் Says: after publication. e -->October 17th, 2005 at 6:45 pm e
தருமி, உண்மையிலேயே அற்புதமான பதிவு. தருமீன்னு பேரு வெச்சிருக்கீங்களேன்னு பாத்தேன். மதுரக்காரருன்னு இப்பத்தான தெரியுது.
சின்னப் பிள்ளைல மதுரைல ஒரு வருசம் இருந்தோம். அப்ப இந்த ரீகல் தேட்டரப் பாத்திருக்கேன். வெளிய இருந்துதான். பின்னே விட்டா வீட்டுக்குப் போகத் தெரியாத வயசுல எப்படி தேட்டருக்குத் தனியாப் போக.
பின்னாட்களில் மதுரை வழியாப் போகைல பார்த்ததுண்டு. எனக்குத் தெரிஞ்சு ஜெயராஜ், விஜயலட்சுமி, சினி-மினி-சுகப் பிரியாக்கள், செண்ட்ரல், இதுகதான் நினைவிருக்கு. அப்புறம் இன்னோன்னும் இருக்கு….பேரு நெனவுக்கு வர மாட்டேங்கி……ஸ்டேசனுக்குப் போற வழியில….ரெண்டு தேட்டரு சேந்தாப்புல இருக்கும்.
நீங்க சொல்ற ரீகல் தேட்டர் பக்கத்துல பிரேம விலாஸ் அல்வா கடைல சாந்தரமாப் போனா அல்வாவை எலைல போட்டுத் தருவாங்க. அடடா!

யாத்திரீகன் Says: after publication. e -->October 20th, 2005 at 2:19 am e
அஹா.. பலரும் இப்படி மதுரை நியாபகங்களை கிளரிவிட்டுகிட்டு இருக்கீங்களே…. 2 வருஷம் கல்கத்தால இருந்துட்டு… இங்க வர்ரதுக்கு முன்னாடி மதுரை-ல ஒரு நாள் இருந்தப்ப, நீங்க சொன்ன கடைகலிலேல்லாம் சாப்பிடரதுக்குன்னே சுத்துனேன்
ஆனா எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து தங்கரீகல்-ல படம் பார்த்தேன்னு சொன்ன வீட்ல பின்னிருவாங்க… மத்தவுங்க ஒரு மாதிரி பார்பாங்க.. அப்படி ஆகிப்போச்சு இப்போ….
மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரும் கொஞ்ச காலம் அப்படி இருந்தது, இப்போ, தமிழ்ல மொழிபெயர்த்த ஆங்கிலப்படங்களும் போடுறாங்க.. நீங்க சொன்ன கழிப்பறை நியதி, எனக்கு தெரிஞ்சு, இந்த தியேட்டர்லதான் உருப்படியா இருக்கு

தருமி, படங்களுக்கு நன்றி.. இப்படி வாரம் ஒரு மதுரை படம்னு கூட நீங்க பதிவு போடலாம்…
கொஞ்சம் அப்படியே மதுரையில் கிடைக்கும் சாப்பாட்டுனு ஒரு தொடர் எழுதுங்க ரொம்ப ஆசையா இருக்கு ஹிஹிஹி.. !!!!

-செந்தில்/Senthil
ivarugala Says: after publication. e -->October 22nd, 2005 at 1:07 am e
அந்த நாள் ஞாபகம் நெஞ்சில்லே வந்ததே நண்பரே!
ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.
ivarugala.

கல்வெட்டு Says: after publication. e -->October 22nd, 2005 at 1:22 am e
//முதல் சீன்ல செத்துட்டான்னு நினச்சவன் அடுத்த சீன்ல மறுபடியும் உயிரோடு வருவான்!//
:-)))

வசந்தன் Says: after publication. e -->October 22nd, 2005 at 6:09 am e
//அப்போ நான் முதுகலை முதலாண்டு. இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை இனியும் நோகடிக்கக் கூடாதென்று முடிவு செய்து அதன் பிறகு அந்த வகுப்பிற்குப் போவதில்லை.//
படிக்கப்போறதை நிறுத்திட்டீங்களா?அல்லது அந்த ‘தரை டிக்கெட்’ வகுப்புக்குப் போறதை நிறுத்திட்டீங்களா?;-)




No comments:

Post a Comment