Wednesday, October 05, 2005

83. ஜெயிலுக்குப் போகலாம்…வாரீகளா? - 1

  1*

‘ஜெயிலுக்குப் போன சித்தாளு’ அப்டின்னு தலைப்பு கொடுக்கலாமான்னு நினச்சேன். இரண்டு காரணத்தால் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். ஒண்ணு, சித்தாளுன்னா என்னன்னு முதல்ல சொல்லணும்; இரண்டு, ஜெயிலுக்குப் போனப்போ நான் சித்தாள் நிலையிலிருந்து பதவி உயர்வு பெற்றுவிட்டேன். கல்லூரி ஆசிரியர்களின் நிலைமை நான் வேலைக்குச் சேர்ந்த காலத்தில் மிகவும் பரிதாபமான நிலையில்தான் இருந்தது. (பின் ஏன் அந்த வேலைக்குப் போனாய் என்று கேட்கிறீர்களா? அப்போது அவ்வளவுதான் அறிவு; அதோடு வாத்தியார் வேலை குடும்பத்தொழில் போல தொடர்ந்து வந்தது; வேறு சிந்தனை ஏதுமின்றி, குதிரைக்குக் கண்ணில் கட்டுவார்களே ‘blinkers’, அது போல ஒரே நோக்கோடு சேர்ந்தேன் என்பதே உண்மை. அதன் லாப, நஷ்டங்களைப் பற்றிப் பிறகு பேசுவோம்…)

அதுவும் ஏற்கெனவே சொன்னது போல நான் பார்த்த ‘சித்தாளு’ வேலை ரொம்பவே பரிதாபம். ஆண்டாண்டு மறு பிழைப்பெடுக்க வேண்டும். கல்வியாண்டின் இறுதியில் மொத்தமாக இந்த சித்தாளு கேசுகளுக்கு கல்லூரி முதல்வரிடமிருந்து ‘ஓலை’ வரும் - அது அவர்களது பதிவு நீக்க நோட்டீசாக இருக்கும். பிறகு, கல்லூரி திறக்கும் நேரத்தில் ‘மந்திரிச்சி விட்ட கோழிகள்’ மாதிரி அவரவர் துறைத்தலைவர், முதல்வர் இவர்களைச் சுற்றிச் சுற்றி வருவோம். பொதுவாக, முந்திய ஆண்டில் வேலை பார்த்த அனைவருக்கும் வேலை கிடைக்கும் என்றாலும், அது முந்திய கல்வி ஆண்டில் துறைத் தலைவரிடம் எவ்வளவு நயந்து போனோம் என்பதும், அவரது வீட்டு விசேஷங்களில் எவ்வளவு ‘ஆர்வமாய்’ கலந்து கொண்டோம்; வாழை மரம் கட்டினோமா; அங்கு ‘கொஞ்சி விளையாடும்’ நண்டு சிண்டுகளிடமெல்லாம் நன்றாக இருந்தோமா என்பதையெல்லாம் பொருத்திருக்கும். ஒரு கொத்தடிமைத்தனம் எல்லா கல்லூரிகளிலும் இருந்தது என்பது நிஜம். (இந்த விதயத்தில் முதல் நான்கு ஆண்டுகளில் (1966-70 )நான் ஓர் அதிர்ஷ்டக்காரன். என் துறைத்தலைவர் என்னிடம் மிகுந்த வாஞ்சையோடு இருந்தவர். என் முன்னேற்றத்தில் ஆர்வமுள்ளவர்.)

எத்தனை ஆண்டுகள் வேலை பார்த்தாலும் இந்த ‘சித்தாளுகளுக்கு’ எப்போதுமே தலைக்கு மேல் ஒரு ‘Damocles sword’ தொங்கிக் கொண்டே இருக்கும். ஆண்டின் ஆரம்பத்தில் வேதனைகளும் வேடிக்கைகளும் கலந்தே இருக்கும். எங்கள் ‘பிழைப்பை’த் தெரிந்தே வைத்திருப்போம் என்பதால், அப்போதெல்லாம் திருமணம் செய்து கொள்ளும் கல்லூரி ஆசிரியர்கள்- இந்த சித்தாளு cadre-ல் இருப்பவர்கள் - எல்லோரும் வேக வேகமாக ஜனவரி - மார்ச் மாதங்களில் பெண் பார்க்கும் படலம் வைத்துக் கொண்டு, கோடை விடுமுறையிலேயே கல்யாணத்தை முடித்துக் கொள்வார்கள். ஏனென்றால் அந்தக் கால கட்டத்தில் கல்லூரி ஆசிரியர் என்று சொல்லிக்கொள்ள முடியுமே! ஆனால், அந்த மாதிரி ஆட்கள் எல்லோரும் ஜூன் மாதத்தில் ‘வயித்தில் நெருப்பைக் கட்டி கொண்டு’ continuation கிடைக்க எல்லா சாமியையும் கும்பிட்டுக் கொண்டிருப்பார்கள் - துறைத்தலைவர்கள் இந்த ‘சாமி’களில் அடக்கம். நாங்களே இப்படி அல்லாடிக்கொண்டிருப்போம். அந்த நேரத்தில் கல்லூரியில் இடம் தேடும் கூட்டம் எங்களிடம் ரெக்கமெண்டேஷனுக்கு வரும். அதில் என் நண்பன் ஒருவன் தனி டெக்னிக்கே வைத்திருந்தான். பையில் எப்போதும் ஒரு துண்டு பேப்பர் இருக்கும். இடம் தேடி வருபவர்களிடமெல்லாம் ரொம்ப ஒழுக்கமாக அவர்களது விவரங்களைக் கேட்டு குறித்துக் கொள்வான். ‘நான் துறைத் தலைவரிடம் சொல்றேன், பார்க்கலாம்’ என்று ‘காமராஜ் ஸ்டைலில்’ சொல்லி வைப்பான். ‘சார், சீட் கிடைச்சிருச்சு’ அப்டின்னு யாராவது வந்தால் உடனே அந்த லிஸ்டை எடுத்து அவர்கள் முன்னால் அதை அடித்து விட்டு, ‘சார் எப்போதும் இப்படித்தான்; நமக்கு எப்போதுமே நன்கு ‘oblige’ பண்ணுவார்’ அப்டின்னு சொல்லிக்குவான். ஆனால் எனக்குத் தெரிந்து அவன் யாரிடமும் என்றும் சொன்னதேயில்லை; எங்க சொல்றது - நம்ம பிழைப்பே அங்க அல்லாடிக்கிட்டு இருக்கும்!


இது ஒரு பக்கக் கதை என்றால் இன்னொரு பக்கம்- சித்தாளுகள் என்றில்லாமல் - பல கல்லூரிகளில், எல்லாருக்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இன்னொரு தலையாய பிரச்சனை - சம்பளம். அப்போதெல்லாம் அரசு, கல்லூரி நிர்வாகங்களுக்கு மொத்தமாக ‘grants’ அனுப்பிவிடும். அதில் ஆசிரியர்களின் சம்பளமும் உள்ளடக்கம். சம்பளம்னா எவ்வளவுன்னு நினைக்கிறீங்க? அப்போது என் முதல் மாதச் சம்பளம் ரூபாய்: 198. நான் 1966, அக்டோபர் இரண்டாவது வாரத்தில்தான் சேர்ந்தேன்; ஆகவே, முக்கால் மாதச் சம்பளம்தான். முதல் மாதச்சம்பளம் நூத்தி முப்பத்தைந்து சில்லறை ! (சம்பளத்தில் ரூபாய் 75-யை மாதாமாதம் வீட்டுக்கு அனுப்பணும்னு அப்பா சொல்ல, நான் முடியாது 25தான் அனுப்புவேன் என்க, ஒரு ‘கட்டப்பஞ்சாயத்து’ வைத்து மாதம் 50 ரூபாய் அனுப்பி விடவேணும்னு முடிவாச்சு ) லெக்சரர் என்னும் விரிவுரையாளருக்கு சம்பளம் 360 என்று நினைவு. பல கல்லூரிகளில் ஆசிரியர்கள் அவர்களது உண்மையான சம்பளத்திற்குக் கையெழுத்து போட்டு விட்டு, மிகக் குறைந்த சம்பளத்தையே கையில் வாங்குவார்கள். மீதி கல்லூரி நடத்துபவர்கள் ‘ஸ்வாஹா’தான். (இப்போது self-financing institutions-களில் நடக்கும் கூத்துதான்! ஒரு வித்தியாசம் - இப்போதாவது ‘உனக்கு இவ்வளவுதான் சம்பளம்’ என்று சொல்லியே கொள்ளை அடிக்கிறார்கள்; அப்போது அரசிடமிருந்து ஆசிரியர்களுக்கு நியாயமாய் வரவேண்டிய காசை முழுங்கினார்கள்!) ஒரு கல்லூரியில் - கல்லூரியின் பெயர் வேண்டாமே!- நடந்தது அப்போது மாநிலத்திலேயே பிரசித்தம். என்னவெனில், கல்லூரி நிர்வாகத்திற்குச் சொந்தமாக மளிகைக் கடையும், ஜவுளிக்கடையும் இருந்தன. ஆசிரியர்கள் சம்பளமாக அரசிடமிருந்து வரும் பணம் ‘சுற்று’க்குப் போய்விடும்; ஆண்டுக்கு அநேகமாக இருமுறைதான் சம்பளப் பட்டுவாடா செய்யப் படும். ஆசிரியர்கள் எல்லோரும் தங்கள் குடும்பத் தேவைகளுக்கு நிர்வாகத்தினரின் கடைகளில் கணக்கில் வாங்கிக்கொள்ளலாம். சம்பளம் கொடுக்கும்போது அவரவர் கடைகளுக்குக் கொடுக்கவேண்டியதை எடுத்துக் கொண்டு, ஏதாவது மீதி இருந்தால், பெரிய மனது பண்ணிக் கொடுப்பார்கள். உள்ளூர் சினிமாத் தியேட்டர்களிலும், சலூனிலும் கணக்கு வைத்திருப்பீர்களா என்று மற்ற கல்லூரி ஆசிரியர்கள் அவர்களைக் கிண்டலடிப்பதுண்டு.
1970-ல் நான் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்தேன். இங்கிருந்த பிரச்சனை வேறு எங்கேயும் இல்லாத பிரச்சனை ! அங்கங்கே அவனவன் மாதா மாதம் பார்த்த வேலைக்கு சம்பளம் கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டிருக்க இங்கே ஒவ்வொரு கோடை விடுமுறை விடும்போதும் மார்ச், ஏப்ரில், மே மாத சம்பளத்தை ஏப்ரில் மாதமே கொடுத்துவிட்டு ‘போய்ட்டு வாங்க,ராஜா’ன்னு விடுமுறைக்கு அனுப்புவாங்க. விடுமுறைக் காலத்தின் முதல் பாதியில் ராஜ வாழ்க்கை வாழ்ந்திடுவோம்; அதன் பிறகு ஒரு பயங்கர ‘dry spell’தான். கல்லூரி ஆரம்பிக்கும்போது எல்லோரும் ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பாத்துக்கிட்டு…எப்படா, ஜூலை ஆரம்பிக்கும்’ சம்பளம் வாங்குவோம்னு இருப்போம். அப்ப அநேகமா எல்லோரும் ஒரு ‘பிரசவ வைராக்கியம்’ எடுத்துக்குவோம்: இனி அடுத்த வருஷம் ஒழுங்கா பிளான் பண்ணி செலவு செய்யணுனும்னு!

இதுகூட பரவாயில்லை. இன்னொரு காரியத்தில் அமெரிக்கன் கல்லூரி அமெரிக்க ஸ்டைல் ஒன்றை அப்படியே பின்பற்றும். இன்று கூட பல கல்லூரிகளில் காலையில் இத்தனை மணிக்கு முன்பும், மாலை இத்தனை மணிக்குப் பின்னும் தினமும் கையெழுத்து போடவேண்டும் என்று பயங்கர சட்டம் வைத்திருப்பார்கள். ஆனால் எங்கள் கல்லூரியில் அந்தக் காலத்தில் கையெழுத்து என்பதே இல்லை. ‘உனக்கு வேலை இருக்கிறதா; பார்த்துட்டு போய்க்கிடே இரு’ என்பது மாதிரியான பெரும் போக்கு. இந்த ’supervisory cadre’ என்பதே நம் நாடு போன்ற காலனிய நாடாக, அடிமை நாடாக இருந்த நாடுகளில் மட்டுமே உள்ள வழக்கம் என்பதும், அது நமக்குத் தேவையில்லை என்ற எண்ணமும் இருந்தது. பின்னாளில் அரசு நேரடிச் சம்பளம் வந்த பிறகே, அரசு வலியுறுத்தி யமைக்காகவே கையெழுத்து போடும் முறை வந்தது. சொல்லப்போனால் அரசின் நேரடிச் சம்பளம் வந்ததால் நாங்கள் அப்போதிருந்த சில சலுகைகளை இழக்க வேண்டியதாயிற்று. இப்படிப் பட்ட கல்லூரியிலும் என்னைப் போன்ற அதிர்ஷ்டக்கட்டைகள் கொஞ்சம் உண்டு. தேவையில்லாமலும், சரியான காரணமில்லாமலும், மனிதர்களின் (துறைத் தலைவர்களின்) ego clash-ன் நடுவில் நான் மாட்டிக்கொண்டு ஒன்பது ஆண்டுகள் சித்தாள் வேலையில் நீடிக்கும்படி ஆயிற்று.

பார்த்த வேலைக்குச் சம்பளம், ஆண்டாண்டாய் பார்க்கும் வேலையில் நிரந்தரம், பதவி உயர்வுகளில் எந்த வித நெறிமுறைஇல்லாமை - இப்படி கல்லூரி ஆசிரியர்களுக்கு எல்லாவித நெருக்கடியும் இருந்தும் ஊர்வலம், வேலை நிறுத்தம் போன்ற போராட்ட வழிகளில் இறங்குவதற்கு ஆசிரியர்களின் மத்தியிலேயே மிகுந்த தயக்கம் இருந்தது. காலங் காலமாய் தலையில் ஏற்றிவைத்த ‘கீரீடத்தை’ அவ்வளவு சாதாரணமாக இறக்கி வைத்துவிட முடியுமா, என்ன? போராட்டம் என்ற பேச்சு வந்த போதே ஆசிரியர்கள், சமூகத்தில் பல தர மக்களிடமும் ஏச்சும் பேச்சும் பெற வேண்டியிருந்தது. ‘Letters to the Editor’-களில் கடிதங்கள் குவிந்து விடும் - எப்படி ஆசிரியர்கள் போராட்டம் என்றெல்லாம் பேசப்போயிற்று என்று; ஆனால், ‘ஏன்’ என்பது பற்றி யாரும் பேசுவதில்லை. ஆசிரியர்கள் போராடலாமா? அவர்கள் போராடிச் சிறை செல்லலாமா? அவர்கள் தெருவுக்கு வந்து, போராடி சிறை செல்லலாமா என்ற கேள்விகளெல்லாம் இன்று காலாவதியாகிப் போனவைகள். ‘குரு’வாக இருந்து ‘காணிக்கை’ வாங்கைய காலமல்ல இது; ஆசிரியர்களும் அரசாங்கத்தில் மாதச்சம்பளத்தில் வேலை பார்க்கும் அலுவலர்களே; அவர்கள் தங்கள் உரிமைகளையும், சலுகைகளையும் அரசாங்கங்கள் புரிந்துகொள்ளும் ஒரே மொழியான போராட்டங்கள் மூலமாகவே பெறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ‘Noble job’ என்று பட்டம் கட்டி, மூலையில் உட்கார வைத்த காலம் போய், ஆசிரியர்களும் தேவை ஏற்படின் போராடத் தயங்க மாட்டார்கள் என்ற சூழலை நம் மாநிலத்தில் மட்டுமல்ல அகில இந்தியாவுக்கும் தெரிய வைத்த பெருமை ‘மூட்டா’ என்ற Madurai University Teachers’ Association ( MUTA )ஆசிரியர் கூட்டணிக்குச் சேரும்.

இருந்த பிரச்சனைகளால், ஆசிரியர் சங்கம் ஒன்று வேண்டும் என்ற உணர்வு மிக மிக மெல்ல உருவாகத் தொடங்கியது. அதற்குக் காரண கர்த்தாவாக இருந்தவர் பேரா. ராஜன் என்பவர். இவர் முதலில் ஒற்றை ஆளாக ஆரம்பித்தாலும் விரைவில் அந்த உணர்வு பரவியது; ஏனெனில் அவனவன் கஷ்டம் அப்படி! ஆனாலும் அவர் கல்லூரிகளுக்குச் சென்று அங்குள்ள ஆசிரியர்களை நேரடியாகப் பார்த்துப் பேசுவதற்காக மாலைகளில் கல்லூரி முடிந்த பின் கூட்டம் போட முயற்சிப்பதுண்டு. மாலையில் வீட்டுக்கு ஓடும் மூடில் இருக்கும் மக்கள் அவ்வளவு எளிதாக கூட்டத்திற்கு வருவதில்லை என்பதே அவரது அனுபவம். அவருக்குத் தெரிந்த நண்பர் மூலம் எங்கள் கல்லூரியில் அப்போது இருந்த பேரா. ஜெயராஜ் என்பவரைச் சந்திக்க வந்தார். அப்போது நானும் ஜெயராஜும் ‘பயங்கரமாக’ grand slam level-க்கு டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்தோம். வந்த பேரா. ராஜன் சங்கம் ஒன்று ஆரம்பிப்பது பற்றி எங்களிடம் பேசினார். நாங்கள் அவரையும் கூட்டிக்கொண்டு எங்கள் முதல்வரிடம் அழைத்துச் சென்றோம். ராஜனுக்கு அது அவ்வளவு சரியாகப் படவில்லை. ஏனெனில், மற்ற கல்லூரிகளில் ஆசிரியர்கள் கல்லூரி நிர்வாகிகளுக்கோ, முதல்வர்களுக்கோ தெரியாமல்தான் ராஜனின் கூட்டங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை. ஆனால் நாங்களோ நேரடியாக முதல்வரிடமே அழைத்துச் சென்றது அவருக்கு வினோதமாகப் பட்டிருக்க வேண்டும். அதைவிட முதல்வர் ஒரு கூட்டத்தை official-ஆக ஏற்பாடு செய்து அவரைச் சிறப்பு விருந்தினராக அழைத்து, பேசவும் வைத்தது அவரை மிக வியப்பில் ஆழ்த்தியது. இப்படிச் சிறுக சிறுக ஆரம்பித்த சங்கம் 72-ம் ஆண்டில் சட்ட பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. சங்கத்திற்கு முதல் பொருளாளராக ஜெயராஜ் இருந்தார். அவர் நடுவில் அமெரிக்கா சென்றதால் சில மாதங்களுக்கு அப்பொறுப்பு என்னிடம் வந்ததாகவும், இரண்டாவது பொருளாளராக நான் இருந்ததாகவும் பின்னாள் எங்கள் சங்கத்தலைவராக இருந்த என் பள்ளிக் கூட்டாளி பேரா. பார்த்தசாரதி சொல்லித் தெரிந்தது. எனக்கு அது மறந்தே போச்சு; அவ்வளவு வேலை பார்த்திருப்பேன் போலும்!

72-ல் ஆரம்பித்தாலும், மனுக்களும், விண்ணப்பங்களும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருந்தாலும் ஆசிரியர்களின் நிலைமையில் மாற்றம் ஏதுமில்லாமல் காலம் நகர்ந்தது. இந்த இழுபறியில் சங்கத்திற்கு ஒரு நல்ல காலம் பிறந்தது. முதலாவதாக, ஆசிரியர்களின் மனங்களில் மாற்றம் ஏற்பட்டது. ரோட்டுக்கு வரலாமா என்ற கேள்வி போய் ரோட்டுக்கு வந்தால் மட்டும் போதாது; சிறைக்குச் செல்லவும் தயாராக வேண்டும் என்ற மனமாற்றம் வந்தது. இரண்டாவதாக, சோதனைகளும், வேதனைகளும் சங்கத்தின் ஓற்றுமையை வலுப்படுத்தியது. இதே நேரத்தில் சில வடக்கு மாநிலங்களில் U.G.C. பரிந்துரை செய்த சம்பள உயர்வு ஆசிரியர்களுக்குக் கிடைத்தது. எல்லாமாகச் சேர்ந்து 77-ல் இறுதித் தேர்வுகளைப் புறக்கணித்தல், மறியல் போராட்டம் நடத்தி சிறைக்குச் செல்லுதல் என்ற முடிவெடுக்கப்பட்டது.

மற்ற கல்லூரிகளில் ஏறத்தாழ எல்லா ஆசிரியர்களும் சங்கத்தில் உறுப்பினராக இருப்பார்கள். ஆனால், எங்கள் கல்லூரியில் மற்ற கல்லூரிகளில் உள்ள பிரச்சனைகள் கிடையாதே; அதனால், மக்கள் சங்க உறுப்பினராக ஆகாமல் இருப்பதற்கு ஏதாவது ஒரு காரணம் கண்டு பிடித்து வைத்திருப்பார்கள். எங்கள் கல்லூரி பெரியது; சங்க உறுப்பினர்கள் குறைவு என்பதே ஒரு விதியானது எப்போதைக்குமே! போராட்டம் என்று வரும்போது அதுவரை இல்லாத தத்துவங்களும், விவாதங்களும் வரும்.


முதல் முதல் செய்த போராட்டம் என்பதாலோ என்னவோ ஒரு தவறான நடைமுறையை சங்கம் எடுத்தது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கல்லூரிகளில் வேலை நிறுத்தம் செய்வது, தேர்வுகளைப் புறக்கணிப்பது என்பதே அந்த முடிவுகள். நடந்தது என்னவெனில், ஒரு கல்லூரியில் ஆசிரியர்கள் ஒட்டு மொத்தமாக மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்; ஆனால் கல்லூரி நிர்வாகமும், பலகலைக்கழகமும் மற்ற அரசு ஊழியர்களை வைத்து தேர்வுகளை ஜாம் ஜாம் என்று நடத்திவிடுவார்கள். ஏறத்தாழ 15 நாட்களுக்கு மேல் போராட்டம் நடக்கிறது; ஆசிரியர்கள் சிறையிலடைபடுகிறார்கள்; ஆனால் தேர்வுகள் நன்கு நடைபெறுகின்றன. எவ்வித தாக்கமும் இல்லாமல் கல்லூரிகள் நடைபெறுகின்றன.

வழக்கம்போல் எங்கள் கல்லூரியில் விவாதங்களும்…தத்துவங்களும்…
பெண்கள் கல்லூரிகளிலும், எங்கள் கல்லூரியிலும் மட்டுமே ஆசிரியர்கள் தங்கள் கடமை தவறா உணர்வை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தோம். ஆயினும் ஒரு கட்டத்தில் சிலராவது போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென எங்கள் கல்லூரிக் கிளை முடிவெடுத்தது. எல்லா கல்லூரிகளிலும் lock,stock and barrel என்பார்களே அதே போல் ஏறத்தாழ எல்லோருமாகச் சிறையேக எங்கள் கல்லூரியில் ஒரு 15 பேராவது போக வேண்டுமென ஒரு சனிக்கிழமை மாலை முடிவெடுத்தோம். 15 பேர் தயாரானோம்; லிஸ்ட் எல்லாம் கொடுத்தாச்சு.

திங்கட்கிழமை காலை; மாணவர்கள் தேர்வுக்குச் செல்லும் வேளையில் கோஷங்கள் ஆரம்பித்தோம். மாணவரிடையே சல சலப்பு. அதற்குள் திட்டப்படி கலெக்டர் அலுவலத்தின் முன்னால் மறியல் போராட்டம். போலீஸ் வந்தது; எங்களைக் கல்லூரிக்கு அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வேனில் ஏற்றி அழைத்துச் சென்றார்கள். நாங்கள் கைதான சேதி கல்லூரிக்குச் சென்றது. மாணவர்கள் தேர்வுத் தளங்களிலிருந்து வெளியே வந்தார்கள்; தேர்வின் வினாத்தாள்கள் கிழிக்கப்பட்டன; பல்கலைக் கழகமே எல்லா தேர்வுகளையும் நிறுத்தியது. போராட்டத்தின் பெரிய திருப்புமுனை நிகழ்ந்தது. போலீஸ் நிலையத்தில் இருந்த எங்களுக்கும் இந்த சேதி வந்தது. ஆனால் ஜெயிலுக்குள் இருந்தவர்களுக்கு முழு விவரமும் தெரியாது.

சிறைக்கு எங்களைக் கூட்டிச் செல்லும் நேரத்தில் எங்கள் பெயர்களையெல்லாம் எழுதி ஒரு லிஸ்ட் தயாரித்தார்கள். அப்போதுதான் தெரியும் நாங்கள் 10 பேர் மட்டுமே போராட்டத்தில் நேரடிப் பங்கு கொண்டிருக்கிறோம் என்று. மீதி அந்த 5 பேர் ஆட்களையே காணோம்! பெயர்களை எழுத ஆரம்பித்த போலீஸ்காரருக்கு அங்கு நன்கு தெரிந்த முகம்: பேரா. சாலமன் பாப்பையா. அவர் பெயரை முதலில் எழுத, அப்படியே தமிழ்த்துறை பேராசிரியர்களின் பெயர்கள் எழுத (5 பேர்), அதன் தொடர்ச்சியாக ஆங்கிலத் துறை பெயர்கள் எழுதி முடிக்க (4 பேர்), அடுத்ததாக விஞ்ஞானத்துறை ஒவ்வொன்றின் பெயராகச் சொல்ல ஆரம்பிக்க, அங்கே பார்த்தால் நான் ஒருவன் மட்டுமே அந்த ‘ஜாதி’யில் இருந்தேன். அதுவே எனக்கு ஒரு ‘மகுடமா’கிப் போச்சு.

பிறகு சிறைக்குச் சென்று, ‘உள்ளே’ போகும் முன் உடல் அடையாளாங்கள் எழுதி - இன்னபிற சடங்குகள் முடித்து உள்ளே போகும்போது மணி 6-க்கு மேல் ஆகியிருந்தது. நாங்கள் எல்லோரும் படுக்கை, பெட்டி என்று சகல வசதிகளோடு சென்றோம். உள்ளே போன பிறகுதான் தெரிந்தது முதலில் கைதானவர்களுக்கு உடன் எடுத்துச் செல்ல எதுவுமே அனுமதிக்கப் படவில்லை என்று. அரைஞாண்கூட கழட்டும்படி -சிறை வழக்கப்படி - சொல்லப்பட்டதாம். நாங்கள் உள்ளே வந்த ‘அழகை’ப் பார்த்து ‘அவனவன் கட்டின வேட்டி சட்டையோடு வந்தான்; இதுகளைப் பாரேன்; ஏதோ பிக்னிக் வந்த ஆளுக மாதிரி’ என்றெல்லாம் எங்கள் காது கேட்க comments வந்தன. நாங்களோ அன்றைய மாலை செய்தித் தாளோடு போயிருந்தோம். எங்கள் கல்லூரி மாணவர்களின் போராட்டக் கோலத்தைப் புகைப்படமாகவும், தேர்வுகள் காலவரையின்றை ஒத்தி வைக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் உத்தரவைப் பற்றிய செய்திகளும் வந்திருந்தன. ‘பத்து பேர் செய்தாலும் இது மாதிரில்ல பண்ணணும்னு’ நாங்க ‘பந்தா’ பண்ணிக்கிட்டோம். செய்தி தெரிந்த பின் கேலி செய்தவர்கள் கூட நல்லபடி மரியாதையாக இருந்தார்கள். உள்ளே உடனே ஒரு கூட்டம்; எங்களுக்குப் பாராட்டு.

உள்ளே மக்கள் எப்படி இருப்பார்களோ என்று எண்ணிக்கொண்டு சென்றோமோ அந்த அளவு உள்ளே மோசம் இல்லை. என்ன, எல்லோரும் பந்தல் போடப்பட்டு அதில் சுத்தமான, ஆனால் வெறுந்தரையில் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்திருந்தார்கள். மாலை வெளியிலேயே ஒரு ‘பிடி’ பிடிச்சிட்டு தயாரா போனதால் இரவு சாப்பாடு அங்கே சாப்பிடவில்லை. இரவு ரேடியோ செய்தியிலேயே நாளை ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், பேச்சு வார்த்தைக்கு அரசு அழைத்திருப்பதாகவும் சொல்லப்பட்டது. ‘விடுதலை கொண்டுவந்த போராளிகள்’ என்றானோம்., அடுத்த நாள் காலையிலேயே நாங்கள் எல்லோரும் விடுதலை செய்யப்படப் போகிறோம் என்ற சேதி தெரிந்தது. அடுத்த நாள் - விடுதலை நாள்! அதிலும் பாருங்கள் எங்கள் அதிர்ஷ்டத்தை - alphabetical order-ல் வெளியே அனுப்பப்படப் போகிறோம் என்பதுதான் அது. ஆக, ஒரு பெரிய irony என்னவென்றால் கடைசியில் உள்ளே வந்தது நாங்கள்; முதல் ஆட்களாக வெளியே வந்தது நாங்கள். வெறும் 12 மணி நேர தங்கலோடு முதல் ஜெயில் அனுபவம் முடிந்தது - ‘ஜெயில் களி’ அனுபவம்கூட இல்லாமல்!

அடுத்தமுறைதான் உண்மையிலேயே ஜெயில் வாழ்க்கை வாழ்ந்தோம் - வாரக்கணக்கில்.


Oct 05 2005 03:14 pm சொந்தக்கதை.. and நட்சத்திரப் பதிவுகள edit this
Rate this post at http://www.thamizmanam.com/ Current rating is:
(இதுவரை 4 பரிந்துரைகள்)Click on the stars for voting pad.
16 Responses
வசந்தன் Says: after publication. e -->October 5th, 2005 at 6:47 pm e
>>>அவர் நடுவில் அமெரிக்கா சென்றதால் சில மாதங்களுக்கு அப்பொறுப்பு என்னிடம் வந்ததாகவும், இரண்டாவது பொருளாளராக நான் இருந்ததாகவும் பின்னாள் எங்கள் சங்கத்தலைவராக இருந்த என் பள்ளிக் கூட்டாளி பேரா. பார்த்தசாரதி சொல்லித் தெரிந்தது. எனக்கு அது மறந்தே போச்சு; அவ்வளவு வேலை பார்த்திருப்பேன் போலும்! >>>
;-)
சிறை சென்ற செம்மல் வாழ்க!!!!
தாணு Says: after publication. e -->October 5th, 2005 at 10:12 pm e
சிறை சென்ற செம்மலுக்கு களிகூட கொடுக்காமல் அனுப்பினதுக்கே இன்னொரு போராட்டம் நடத்திடலாம்!
dharumi Says: after publication. e -->October 5th, 2005 at 10:43 pm e
வசந்தன், தாணு,நன்றி.அதுசரி தாணு அது என்ன வலைப்பதிவுகளில் ‘களி’ன்னாலே மக்களுக்கு ஒரு ‘இது’வாகிவிடுகிறது.
சதீஷ் Says: after publication. e -->October 5th, 2005 at 10:48 pm e
படிக்க சுவாரசியமாய் இருந்தது.
ஆனால் எடுத்துக்கொண்ட தலைப்பில் இருந்து ரொம்பவே வெளியில் சென்று விட்டுப் பிறகு கப்பல் கரை சேர்கிறது. கொஞ்சம் சுருக்கியிருந்தால் இன்னும் சிறப்பாய் இருந்து இருக்கும்
இராமநாதன் Says: after publication. e -->October 5th, 2005 at 10:55 pm e
//அடுத்தமுறைதான் உண்மையிலேயே ஜெயில் வாழ்க்கை வாழ்ந்தோம் - வாரக்கணக்கில்//
செக்கெல்லாம் இழுத்தீங்களா? எப்படியும் சிறைக்குப் போய்வந்தாச்சு. அரசியல்ல குதிக்க இது ஒண்ணு போறாதா?
இன்னொன்னு. ப்ளாக்கரிலிருந்து weblogs.us மாறியதற்கு ஏதாவது விசேஷ காரணம் உண்டா?
கூத்தாடி Says: after publication. e -->October 5th, 2005 at 11:33 pm e
சித்தாளு அனுபவமும் நல்லா இருந்தது .சிறை சென்ற செம்மல்தருமி வாரக் கணக்கா இருந்தேன் சொன்னத எப்ப எழுதப் போறீங்க.அப்ப கண்டிப்பா களி சாப்பிட்டு இருப்பீங்கல்ல ..
dharumi Says: after publication. e -->October 5th, 2005 at 11:56 pm e
சதீஷ், நன்றி. உங்கள் பதிவில் ஒரு oxymoron தெரிகிறது போல் இருக்கிறதே. கரை சேர்ந்த வரை எனக்கு சந்தோஷமே. ஆனாலும் உங்கள் கருத்துக்கு மீண்டும் நன்றி.
ராமனாதன்,“செக்கெல்லாம் இழுத்தீங்களா?” - அப்போல்லாம் cheque வச்சு, இழுக்கிற அளவுக்கு வசதி இல்லீங்களே!“weblogs.us மாறியதற்கு..” பார்த்தாலே தெரியலையா; நல்லா இருக்கில்ல? category வேற..
கூத்தாடி,“எப்ப எழுதப் போறீங்க…” இந்த வாரத்திலேயே போட்டுடுவோம்; அதுக்குப் பிறகு நீங்கல்லாம் நம்ம வீட்டுக்கெல்லாம் வரவா போறீங்க…?!
(பெரிய)ஷ்ரேயா ;O) Says: after publication. e -->October 6th, 2005 at 7:41 am e
களி சாப்பிடலையா நீங்க??(பாருங்க, நீங்க களி சாப்பிடல்ல என்றதும் எத்தினை பேருக்குக் கவலை என்று) :jok:
நானும் கொஞ்சமென்றா ஜெயிலுக்குள்ளதான்… அந்தக்கதை எழுதவெல்லாம் லாயக்கில்லே. உங்களை மாதிரி noble deed இல்லை. (ஆனாலும் எதிர்த்துக் கேள்வி கேட்டதால் வர இருந்த வினை!)
சரி சரி.. அடுத்த ஜெயில் எபிசொடெ எப்ப??
துளசி கோபால் Says: after publication. e -->October 6th, 2005 at 8:47 am e
தருமி,
‘சிறைக்குச் சென்ற சித்தாளு’ ஏதோஜெயகாந்தன் கதையோட தலைப்புமாதிரி இருக்கு?
‘களி’ன்னதும் எல்லோருக்கும் ‘களி’ வந்திருச்சு. எல்லாம் ‘கலி’காலம்.
என்னோட களி இன்னும் பாக்கி இருக்கு. யாருக்காவது வேணுமா?:-)
அப்பெல்லாம் ஆசிரியர்கள்ன்னா மாணவர்களுக்கு முன்மாதிரியா இருக்கணும்.போராட்டம் எல்லாம் கூடாதுன்னு ஜனங்களுக்கு ஒரு ‘எண்ணம்’ இருந்துச்சுல்லே?
dharumi Says: after publication. e -->October 6th, 2005 at 10:39 am e
“எடுத்துக்கொண்ட தலைப்பில் இருந்து ரொம்பவே வெளியில் சென்று விட்டுப் பிறகு கப்பல் கரை சேர்கிறது”- சுரேஷ், ‘அதுதான் நம்ம ஸ்பெஷாலிட்டியே’. வேணும்னா அது பற்றி இன்னும் தெரிஞ்சுக்க/அனுபவிக்க இங்கே போய்ட்டு வாங்களேன்.
dharumi Says: after publication. e -->October 6th, 2005 at 10:50 am e
பெ.ஷ்ரேயா,“அடுத்த ஜெயில் எபிசொடெ எப்ப?? ” - வந்துகிட்டே இருக்கில்ல.. அப்போ நான் ஜெயிலுக்கு போறதுதான் மற்றதை விடவும் உங்களுக்குப் பிடிச்சிருக்கின்னு சொல்லுங்க..!
துளசி,அவரு சித்தாளு சினிமாவுக்குப் போச்சு; இந்த சித்தாளு ஜெயிலுக்கு!
dress code பதிவில் இப்போ உள்ள மாணவர்களுக்குச் சுத்தமாகப் போராட்ட உணர்வுகளே இல்லையென்று குறைப்பட்டு எழுதியுள்ளேன். மாணவர்களுக்குப் போராட்ட உணர்வு இருக்கவேண்டும் என்று நினைக்கும் ஒரு ஆசிரியனுக்கு முதலில் அந்த உணர்வு வேண்டுமல்லவா? என்னைப் பொறுத்தவரை taking things lying down- சரிப்படாத ஒண்ணு.
வசந்தன் Says: after publication. e -->October 6th, 2005 at 11:05 am e
உது ஆர் புதுசா (பெரிய) ஷ்ரேயா?எங்கட சிட்னி ஷ்ரேயா தான் இப்படி ஆயிட்டாங்களோ? இல்லாட்டி புதுசா ஆராவது வந்திருக்கினமோ?
dharumi Says: after publication. e -->October 6th, 2005 at 11:15 am e
vasanthan,“உது ஆர் புதுசா (பெரிய) ஷ்ரேயா?” - பெரிய ஷ்ரேயா இதுக்கு பதில் சொல்லாட்டா நான் வர்ரேன்..
ஷ்ரேயா Says: after publication. e -->October 6th, 2005 at 11:21 am e
அது நானேதான் வசந்தன். தருமிக்கு ஒரு குட்டி ஷ்ரேயாவைத் தெரியும்! சும்மா பகிடிக்கு பெரிய ஷ்ரேயா என்டு போட்டன்!(சயந்தனுக்குக் மாற்றுக்கருத்து இருக்குமெண்டு நினைக்கிறீங்களோ??)
தருமி - //அப்போ நான் ஜெயிலுக்கு போறதுதான் மற்றதை விடவும் உங்களுக்குப் பிடிச்சிருக்கின்னு சொல்லுங்க..//
சீச்சீ.. அப்பிடியெல்லாம் இல்ல! மத்ததெல்லாமும் பிடிச்சிருக்கு. துளசி சொன்ன மாதிரி களி ஞாபகத்திலே களியாட்டம் போட நினைச்சேன்.
துளசி.. களி குடுக்க வேறாளப்பாருங்க! (எனக்கும் வேணாம்) தருமி பாவம்!
தாணு Says: after publication. e -->October 7th, 2005 at 12:41 pm e
எல்லாருக்கும் `களி’ பிடிப்பது, அவரவர் தலையில் இருப்பதை download பண்ணத்தான், என்னையும் சேர்த்து.
dharumi Says: after publication. e -->October 7th, 2005 at 10:54 pm e
ஷ்ரேயா,கொஞ்சம் விளக்கம் வேணும்: “!(சயந்தனுக்குக் மாற்றுக்கருத்து இருக்குமெண்டு நினைக்கிறீங்களோ??)”
“துளசி.. களி குடுக்க வேறாளப்பாருங்க! (எனக்கும் வேணாம்) தருமி பாவம்!” - ஷ்ரேயான்னா ஷ்ரேயாதான். பாருங்க, இந்தக் களியெல்லாம் எனக்குப் பிடிக்காத விதயம்னு அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கு.
தாணு, எனக்கெல்லாம் உள்ளே களி எல்லாம் இல்லை; களி மட்டும் அல்ல; ஒரேகாலியிடம்தான் dnesday, Oct 5th, 2005 at 3:14 pm

2 comments:

கோமதி அரசு said...

அப்ப அநேகமா எல்லோரும் ஒரு ‘பிரசவ வைராக்கியம்’ எடுத்துக்குவோம்: இனி அடுத்த வருஷம் ஒழுங்கா பிளான் பண்ணி செலவு செய்யணுனும்னு!//

பிரசவ வைராக்கியம் என்று சொல்லும் போதே அடுத்தவருஷமும் கைகூடவில்லை என தெரிகிறது.


ஜெயில் அனுபவம் முடிந்தது - ‘ஜெயில் களி’ அனுபவம்கூட இல்லாமல்!//

என் கணவர் 6 நாட்கள் இருந்தார்கள் ஜெயிலில். அவர்களும் களி கொடுக்கவில்லை என்றார்கள்.

periyavijayakumar said...

சிறை செல்லாத வாழ்க்கை நிறைவு செய்யாத வாழ்க்கை என்று காந்தியடிகள் சொல்வார். அந்த வகையில் நம்முடைய வாழ்க்கை நிறைவடைந்தது எனலாம் நண்பரே.

Post a Comment