Thursday, July 14, 2005

30. இரண்டு மனைவியர் வேண்டுமா...?

இரண்டு மனைவி வேண்டுமா என்ற தலைப்பைப் பார்த்து பயந்து விடாதீர்கள். அப்படி எல்லாம் போட்டால்தானே நீங்கள் இதைப் பார்ப்பீர்கள்.(அப்படியும் படிப்பது நிச்சயம் இல்லையே) ஆனாலும் தலைப்புக்கும் பதிவுக்கும் தொடர்பு உண்டு.

எல்லாம் நல்ல எண்ணதோடுதான் நமது அரசு குடும்ப அட்டை தர முனைப்போடு செயல்பட்டது. முதன் முறை வழக்கம்போல் பெயர் கன்னாபின்னாவென்று வந்தது; மாற்றித்தர அலைந்தேன்; ஒரு மாதம் கழித்து மாற்றித்தர நான் கொடுத்த அட்டையை அவர்கள் தொலைத்துவிட்டது தெரிந்தது. இப்போது ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு மறுபடியும் கேட்ட விவரங்களுக்கு நல்ல கையெழுத்தில் திருத்தமாக ஒரு விண்ணப்பம் எழுதிக் கொடுத்தேன். மூன்று மாதங்களுக்கு முன்பு அட்டை வந்தது. இப்போ நிலைமை முன்பைவிட ரொம்ப மோசமா ஆயிடுச்சு. எதுவுமே சரியாக இல்லை. முகவரியில் வீட்டு எண் கிடையாது. எங்கள் பகுதிக்கு நாங்கள் வைத்த புதிய பெயர் இடம்பெறவேயில்லை. முகவரிச்சான்றிதழாகப் பயன்படுத்தவே குடும்ப அட்டைக்கு இத்தனை முயற்சி. அதுவே இல்லை என்றதுமே 'சே' என்றாகிவிட்டது. சரி அதுதான் போச்சு மற்றதாவது சரியா என்று பார்த்தால் என் பெயர் எனக்கே அடையாளம் தெரியாதவாறு மாறியிருந்தது. அநேகமாக, ஏதோ பால்கன் மொழி தெரிந்த யாரோ டைப் செய்து இருக்கவேண்டும்.

ஆனால், அடுத்த விஷயம்தான் நம் தலைப்புக்குரியது. நிஜமாகவே நான் பாவம் போல் ஒரே ஒரு மனைவியோடுதான் 32 வருஷமாகக் குடித்தனம் பண்ணிக்கொண்டிருக்கிறேன். (எப்படி என்பதெல்லாம் பெரிய குடும்ப ரகசியம்!) ஆனால் இப்போது என் குடும்ப அட்டையைப் பார்த்தால் - ஒன்றுக்கு ஒன்று இனாம், ஆடிக்கழிவு என்றெல்லாம் கொடுப்பதுபோல - அரசாங்கமே எனக்கு இரண்டு மனைவிகள் கொடுத்திருந்தது. என்ன, இரண்டு பேருக்கும் ஒரே வயது; (ஒருவருக்காவது கொஞ்சம் சின்ன வயசா போட்டிருந்திருக்கலாம். காலம் போன காலத்தில் ஒரு ஆசைதான்!) இரண்டு பேருமே என்னோடுதான் இருக்கிறார்களாம்.

விஷயம் என்னென்னா, நீளமான என் மனைவியின் பெயரை இரண்டாக உடைத்து தனித்தனியாக இரண்டு ஆளாக மாற்றிவிட்டிருந்தார்கள். அரைஞாண் கயிற்றில் கஞ்சா வைத்திருந்ததாக நமது போலீஸ் கேஸ் எல்லாம் போடுமே அதே மாதிரி என் குடும்ப அட்டையைச் சான்றாக வைத்து என் மீது இரண்டுதாரத் தடைச்சட்டத்தை மீறியதாக ஏதாவது கேஸ் ஏதும் வந்துவிடுமோ என்று பயமாகத்தான் இருக்கிறது. அந்த பயத்தில் மறுபடியும் கொஞ்சம் அலைந்தேன். நான் நானேதான் என்று சான்றிதழ் ஒன்று V.A.O.விடம் வாங்கித்தரவேண்டுமாம். அட, போங்கப்பா நீங்களும் உங்கள் அட்டையும் என்று விட்டுவிட்டேன்.

ஆனாலும் அந்த bigamy case கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. குடும்ப அட்டைதான் இப்படி என்றால் என் தேர்தல் அடையாள அட்டை இதைவிடக் கொடுமை.

அது சரி, நம் PAN card, credit card, driving licence இவையில் எல்லாம் தவறில்லாமல் விவரங்கள் தரப்படும்போது நமது குடும்ப அட்டைகள் ஏன் இந்த அளவு தரம் குறைந்து தயாரிக்கப்படுகின்றன? கொஞ்சம் விசாரித்தேன். அட்டைகள் டைப் செய்ய தற்காலிக வேலையாட்களை நியமிக்க அரசு தலைக்கு ரூ. 3500 கொடுப்பதாகவும், ஆனால் 1500ரூ-க்கு ஆட்களைப் போட்டு ஏனோதானோ என்று வேலை நடப்பதாகவும் கண்டுகொள்ள யாருமில்லையென்றும் கேள்வி.

ஏங்க அப்படித்தானோ.........?

4 comments:

வீ. எம் said...

... ஹ்ம்ம் குடும்ப அட்டையிலாவது.. அனுபவிங்க தருமி அனுபவிங்க.. :)

உன்மை இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தான்.. நல்ல பதிவு !
வீ எம்

துளசி கோபால் said...

//(ஒருவருக்காவது கொஞ்சம் சின்ன வயசா போட்டிருந்திருக்கலாம்.
காலம் போன காலத்தில் ஒரு ஆசைதான்!) //

ஆஹா புரிஞ்சு போச்சு. இதுதானே 'லொள்ளு'ன்றது:-)))))

அப்ப உண்மைக்குமே துணைவி, மனைவின்னு இருக்கறவங்களுக்கு நாலுநாலா?

நாமக்கல் சிபி said...

சரிதான். சண்டேன்னா ரெண்டு என்பது போல் ரேஷன் கார்டுன்னா ரெண்டு.



அது சரி இந்நேரம் வீட்டுல இதைப் பார்த்திருந்தா நீங்க தெய்வம் தந்த வீட்டுலதான தங்க வேண்டியிருக்கும்.

தருமி said...

பார்த்தும் ....... பிழைத்தேன்.

இத்தனை காலம் கழித்து இப்போது எப்படி இங்கே தடுமாறி வந்தீர்கள்?

Post a Comment