*
முந்திய பதிவுகள்:
பதிவு: 1
பதிவு: 2
*
அத்தியாயம் 9
குரான் யூத, கிறித்துவக் கதைகளைக்
கடன் வாங்கிப் படைக்கப்பட்ட நூல்
மோஸஸ், ஆபிரஹாம், ஏசு – இவர்களெல்லாம் முன்னுக்குப் பின் முரணாக, நன்னெறிக்கு எதிராக, அடிப்படையற்று சொன்ன பல கூற்றுக்கள் போலவே குரானிலும் முகமதுவினால் தொடர்கிறதா என்றே பார்க்க வேண்டும். இங்கேயும் காபிரியேல் / ஜிப்ரேல் வருகிறார்; படிக்காத ஒருவருக்கு சுராக்களை அளிக்கிறார். இங்கேயும் நோவாவின் பிரளயம், விக்கிரக ஆராதனைகளுக்கு எதிரான தண்டனைகள் வருகின்றன. யூதர்களுக்காகச் சொல்லப்பட்டவைகளும், அவைகளை அவர்களே கண்டுகொள்ளாமல் செல்வதும் நடக்கிறது. இங்கேயும், ஹதிஸ் என்றழைக்கப்படும் நபியினால் சொல்லப்பட்டவைகளும் செய்தவைகளும் நிறைய நிச்சயமில்லாத விஷயங்களாகவும் நிகழ்வுகளாகவும் உள்ளன. (123)
குரானில் சொல்லப்படும் நிகழ்வுகள் எல்லாமே ஒரு சமூகத்தின் மிகச்சிறிய பகுதிக்கானதாகவும், அங்கே நடந்த சிறு தகராறுகளாகவும் உள்ளன. அதுவுமின்றி, மற்ற ஹீப்ரு லத்தீன், க்ரீக் மொழி நூல்களிலிருந்து எவ்வித வரலாற்று ஒற்றுமையையும் காட்ட முடியாத நிகழ்வுகளாகவே அவை உள்ளன. அவைகள் யாவுமே வாய்வழியாக, அதுவும் அரபியில் மட்டுமே வாய்வழியாக வந்தவைகள்.
விற்பன்னர்கள் பலரும் குரான் அது எழுதப்பட்ட அராபிய மொழியில் மட்டுமே முழுமையாகப் புரிந்துகொள்ளப்படும் என்கின்றனர். ஏனெனில் அம்மொழி கணக்கற்ற சொல்லடைகளும், பகுதிவாரியான பேச்சு மொழிகளும் நிறையப் பெற்றது. (அப்படிப்பட்ட மொழியை ஏன் அல்லா தேர்ந்தெடுத்தார்?) Introducing Muhammad என்ற நூலின் ஆசிரியர்கள் இருவரும் அராபிய மொழியில் மட்டுமே குரான் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்கிறார்கள். (..they insist that ”as the literal Word of God, the Koran is the Koran only in the original revealed text. A translation can never be the Koran, that inimitable symphony, ‘the very sound of which moves men and women to tears’.)
எம்மொழிபெயர்ப்பாயினும் அது ஓரளவு மட்டுமே குரானின் உண்மைப் பொருளைத் தரமுடியும். கடவுள் ஒரு அராபியராக இருந்தால் ( ஒரு பாதுகாப்பற்ற கற்பனைதான் இது!) அவர் ஏன் ஒரு படிப்பறிவில்லாதவரை, தான் சொன்னதை அப்படியே மாற்றாமல் கொடுக்க முடியாத ஒருவரை எதற்காகத் தேர்ந்தெடுக்க வேண்டும்? (அப்படியே மொழி தெரியாதவராக இருந்தாலும், வஹி இறங்கிய கால்நூற்றாண்டுகள் முடியும் வரையும் அவர் தொடர்ந்து எழுதப் படிக்கத்தெரியாதவராக அவர் இருந்தது இன்னொரு அதிசயம்!) இது சொல்வதற்கு மிக எளிதான ஒரு விஷயமுமில்லை. ஏனெனில் கிறித்துவர்களுக்கு கன்னிமரியாள் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு முகமது பற்றிப் பேசுவது இஸ்லாமியருக்கு முக்கியமானது. (124)
இன்றுவரையிலும் எம்மொழியில் குரான் மொழிபெயர்க்கப்பட்டாலும் குரானின் அராபிய மொழியாக்கமும் சேர்த்தே பதிப்பிடப்படுகிறது.(125)
இஸ்லாம் புதியதாகத் தோன்றிய ஒரு மதம்; ஆகவேதான் அது இன்னும் தன் உயர்ந்த தன்னம்பிக்கையளிக்கும் நிலையில் நின்று கொண்டிருக்கிறது.
முகமதுவின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளும், சொன்னவைகளும் அவரது காலத்திற்குப் பின் பல்லாண்டுகள் கழித்து தொகுக்கப்பட்டவை. அவைகள் சுய விருப்புகளாலும், வதந்திகளாலும், படிப்பறிவற்றதாலும் பல மாற்றங்களுக்கு உட்பட்ட ஒரு தொகுப்பாகும். (127)
பிக்தால் (Pickthall) என்பவரின் கூற்றுப்படி முகமது தன்னை 'கடவுளின் அடிமை' என்று சொல்லிக்கொள்ள ஆரம்பித்த வரலாறு; மெக்காவிலுள்ள காபா ஆபிரஹாமால் கட்டப்பட்டது; பின் வஹாபிகளால் அழிக்கப்பட்டது; அதிலுள்ள விக்ரகங்களும் அழிக்கப்பட்டது; முகமதுவும் அதனாலேயே அமைதியை நாடி ஹீரா மலைக்குச் செல்கிறார். அங்கே அவர் தூக்கத்திலோ மயக்கத்திலோ இருக்கும்போது ஒரு குரல் அவரை வாசிக்கச் சொல்கிறது. முகமது இருமுறை தனக்கு வாசிக்கத் தெரியாது என்று கூறியும் மும்முறை அந்தக் குரலால் வாசிக்க அழைக்கப்படுகிறார். தன்னையும் அல்லாவிடமிருந்து வந்ததாக அந்தக் குரல் சொல்கிறது. இதன்பின் முகமது தன் மனைவி கத்தீஜாவிடம் சொல்ல, அவர் முகமதுவை கதீஜாவின் உறவினர் நெளபால் (Waraqa ibn Naufal) என்பவரிடம் அழைத்துச் செல்ல, யூத, கிறித்துவ நூல்களைப் பற்றி அறிந்த அவர் மோஸேவிடம் பேசியவரே உன்னிடமும் பேசியவர் என்று சொன்ன பிறகே, முகமது தன்னை அல்லாவின் அடிமை என்று கருதத் தொடங்குகிறார். (128)
முகமது 632-ம் ஆண்டு இறக்கிறார். அதன் பின் 120 ஆண்டுகளுக்குப் பிறகு இப்னு இஷாக் (Ibn Ishaq) என்பவரால் முகமதுவின் வாழ்க்கை வரலாறு தொகுக்கப்படுகிறது. ஆனால் அது காணாமல் போக, இப்னு ஹிஷாம் (Ibn Hisham) என்பவரால் மீண்டும் மற்றுமொரு வரலாறு எழுதப்படுகிறது. (129)
முகமதுவின் செயலர்கள், நண்பர்கள், உடனிருந்தோர் இவர்களிடமிருந்தெல்லாம் எப்படி முகமது சொன்னவைகள், நடந்த நிகழ்வுகள் எல்லாம் எப்படிப் பெறப்பட்டன என்பதற்கான எந்த ஒரு பொதுமுறையும் இருந்ததாகத் தெரியவில்லை.
ஈசாவைப் போலல்லாமல் முகமது ஒரு குடும்பத்தைத் தனக்குப் பின் விட்டுப் போயிருந்தாலும், தனக்குப் பிறகு யார் தன் பொறுப்பை ஏற்று நடத்துவது என்று சொல்லிச் செல்லவில்லை. அதனால் அவர் இறந்ததுமே தலைமைக்குப் போட்டியும் சண்டைகளும் ஆரம்பித்து விட்டன. ஒரு மதமாக இஸ்லாம் உருவாவதற்குள் சன்னி, ஷியா என்று இரு குழுக்கள் பிறந்துவிட்டன.(130)
முகமதுவிற்குப் பின் கலிபா ஆன அபு பக்கர் முகமதுவின் வார்த்தைகளை ஒருங்கிணைக்க முயல்கிறார். மனனம் செய்த பலர் போர்களில் இறந்துபட ஒரு சிலரே மனனம் செய்தவர்கள் இருந்தார்கள். ஆகவே, எல்லாவித விஷயங்களையும் - தாட்களில், கற்களில், ஓலைகளில், தோளெலும்புகளில், மற்ற எலும்புகளில், தோல்களில் - எழுதப்பட்ட வைகளை (ஜிப்ரெல் மூலமாகத் தன் வார்த்தைகளைத் தந்த கடவுள் அப்படியே அவைகளை ஒழுங்காக 'ரிக்கார்ட்' செய்யவும் ஏதாவது ஒரு நல்ல வழி காண்பித்திருக்கலாம்.) முகமதின் செயலராக இருந்த ஸைட் இப்னு தாபிட் (Zaid Ibn Thabit)மூலமாகத் தொகுக்கப்படுகிறது.
மேலே சொன்னது உண்மையாயின் முகமதுவின் வாழ்க்கை முடிந்த உடனேயே அவரது வரலாறு எழுதப்பட்டு விட்டது என்ற கூற்று சரியாக இருக்கும். ஆனால் மேலே சொன்னது உண்மையா என்ற கேள்வி பெரிதும் உள்ளது. ஏனெனில் இவைகளைத் தொகுத்தது முதல் கலிபா இல்லை; நாலாவது கலிபாவான அலி; அவரே ஷியா குழுமத்தை ஆரம்பித்தவர் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் சன்னி குழுமத்தினர் இவைகள் தொகுக்கப்பட்டது 644 முதல் 656 வரை ஆண்ட உத்மன் என்ற கலிபாவினால் என்கிறார்கள். உத்மன் இறுதி வடிவத்திற்குக் காரணாமாயிருந்தார் என்கிறார்கள். இறுதி வடிவத்திற்குக் கொண்டு வந்ததும், ஏற்கெனவே இருந்தவைகளை - earlier and rival editions- எல்லாவற்றையும் உத்மன் எரித்து அழித்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும் வேறு நகல்கள் இருக்கக்கூடாதென்ற உத்மனின் திட்டம் சரியாகச் செயல்பட முடியாது. ஏனெனில் அராபிய மொழியின் எழுத்துக்கள் 9-வது நூற்றாண்டில்தான் இறுதி நிலைக்கு வந்தன. அதற்கு முன்பு புள்ளிகள், அரைப்புள்ளிகள், குறில்களுக்கான குறியீடுகள் ஏதும் இல்லாதிருந்தன. இதனால் வசனங்களில் மாறுபட்ட கருத்துகள் அன்றும், இன்றும் இருந்து வருகின்றன. (131)
வசனங்களை விடவும் ஹதிஸ்கள் - வாய்மொழிச் சொல்லாக வந்தவைகள் - மேலும் குழப்பமூட்டுபவைகளாகவும், பொறுக்க முடியாதவைகளாகவும் உண்டு. ஒவ்வொரு ஹதிஸும் உண்மையானதென்று ஒரு isnad or chain என்ற ஒரு சாட்சி மூலம் வரவேண்டும். ஆனால் சில சமயங்களில் A- B யிடம் சொன்னதாகவும், அது C -யிடம் சொல்லப்பட்டு, பின் அது D- மூலமாக ..... இப்படியாக அந்த சாட்சிகள் சொல்லப்படுவதுண்டு.
சான்றாக, புகாரி முகமதுவின் மரணத்திற்குப் பிறகு 238 ஆண்டுகள் கழித்து காலமானார். இவரது சாட்சிகள் மிகவும் கெளரவிக்கப்படுபவை. அவைகளில் எந்த வித குற்றம் குறை காண்பதரிது என்றும் சொல்லப்படும். ஆனால் அவர் மொத்தம் 3,00,000 ஹதிஸுகள் சொன்னதாகவும், பின் அதில் 2,00,000 ஹதிஸுகளை மதிப்பற்றவைகள் என்றோ உறுதி செய்யப்பட முடியாதவை என்றோ அவர் கழித்து விட்டார். மறுபடியும் தான் சொன்னவைகளில் சலித்தெடுத்து வெறும் 10,000 ஹதிஸுகளை மட்டுமே கொடுத்துள்ளார்.
எவ்வித சான்றுமின்றி மூன்று லட்சத்திலிருந்து (குத்து மதிப்பாக!) வெறும் 10,000 ஹாதிசுகளைத் தன் நினைவிலிருந்து புகாரி கொடுத்தார் - அதுவும் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு ---- அப்படி அவர் தந்த ஹதிஸுகள் புனிதமான, எவ்வித மாறுதலுமற்றவைகள் என்று நீங்கள் நம்ப வேண்டுமானால் ... நம்பிக்கொள்ளுங்கள்.(132)
சலித்துப் பார்த்தால் சில ஹதிசுகள் எங்கிருந்து கிடைத்தன என்பதுவும் தெரியும். ஹங்கேரி நாட்டு Ignaz Godlziher என்ற அறிஞர், Reza Aslan என்பவர் செய்த ஆராய்ச்சியின்படி, நிறைய ஹதிஸுகள் யூதர்களின் டோரா, கிறித்துவர்களின் விவிலியம், யூத குருமார்களின் வார்த்தைகள், பழைய பெர்சியன் கருத்துக்கள், க்ரேக்க தத்துவங்கள், இந்தியப் பழமொழிகள் … இதையெல்லாம் விட கிறித்துவர்களின் Lord’s Prayer வார்த்தைக்கு வார்த்தை அப்படியே எடுத்தாளப்பெற்றுள்ளன. விவிலியக் கதைகள் சிலவும், ‘’உன் வலதுகை செய்வது இடது கைக்குத் தெரியக்கூடாது’ என்ற வார்த்தைகளும் அப்படியே ஹதிஸுகளில் இடம் பெற்றுள்ளன.
அஸ்லான் தனது ஆராய்ச்சியில் ஒன்பதாம் நூற்றாண்டில் இஸ்லாமிய சட்ட திட்டங்களை ijitihad மூலம் வடிவமைக்கும்போது, அவர்கள் பல ஹதிஸுகளை இரு கூறாகப் பிரித்துள்ளார்கள்: பொருளிய லாபத்துக்காகச் சொன்ன பொய்கள்; கருத்துச் சிறப்புக்காகச் சொன்ன பொய்கள்.
இப்படி பல வழிகளிலிருந்து தங்கள் வேத நூல்களைப் படைத்திருந்தாலும் அவர்கள் தங்கள் வேதப்புத்தகமே முழுமையான, கடைசியான வேதநூல் என்று வலியுறுத்தி வருகிறார்கள். (133)
தன்னைத் தவிர வேறு கடவுள்களை வணங்குபவர்களை மன்னிக்க மாட்டேன் என்ற அல்லாவின் கட்டளை கிறித்துவ பத்துக்கட்டளைகளிலிருந்து வாங்கிய கடனே.
முகமதுவின் மனைவியர்களில் சிலர் முகமதுவின் சில சின்ன சின்னத் தேவைகளுக்குக் கூட அவருக்கு வசனம் இறக்கப்படும் என்றும், இதை வைத்து முகமதுவை அவர்கள் கேலி செய்ததும் உண்டு.
பொதுவிடத்தில் முகமதுவிற்கு வசனம் இறக்கப்படும் போதெல்லாம் அவர் வலியால் துடிப்பவராகவும், காதினுள் பலத்த மணியொலியும் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. மிகுந்த குளிர் காலத்தில் கூட அவருக்கு வியர்வைப் பெருக்கு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. (134)
சில இதயமற்ற கிறித்துவர்கள் இவையெல்லாம் அவரது வலிப்பு நோயால் வந்தது என்று சொல்வதுண்டு. (ஆனால் அவர்கள் பவுலுக்கு டமாஸ்கஸ் செல்லும் வழியில் நடந்த நிகழ்வை அவ்வாறு சொல்வதில்லை.) டேவிட் ஹ்யும் (David Hume) -ன் கேள்வியை இங்கே கேட்டாலே போதும்: ஏற்கெனவே எழுதப்பட்டு இருந்த ஒன்றை கடவுள் ஒரு மனித ட்ரான்ஸ்மீட்டர் மூலம் நமக்குக் கொடுத்தாரா? இல்லை ... முகமதுவே தானாகவே இருந்த சிலவற்றைச் சொல்லி அதெல்லாமே கடவுள் எனக்குச் சொன்னது என்று சொன்னாரா? ஆனாலும் வசனம் இறங்கும்போது முகமது பெற்ற வலி, தலைக்குள் ஒசை, வியர்வைப் பெருக்கு - இவை எல்லாமே கடவுளிடமிருந்து முகமது பெற்றதெனின் அந்த நிகழ்வு அமைதியான, அழகான, தெளிவான ஒரு நிகழ்வாக இருந்திருக்கவில்லை.
கிறித்துவத்தைப் போலன்றி இங்கே முகமதுவிற்கு ஒரு சந்ததியினர் இருந்துள்ளனர். இருந்தும் இஸ்லாம் பிறந்ததிலிருந்தே அவர்களுக்குள்ளே பல பிளவுகளும், குருதி சிந்தியதுவும் தொடர்ந்து வந்துள்ளன. (135)
இஸ்லாமிய நம்பிக்கையில்லாதவர்களுக்கு மெக்காவிற்குள் அனுமதி கிடையாது என்பதுவே இஸ்லாம் ஒரு உலகளாவிய (Universal) மதம் என்பதை மறுப்பதாக அல்லவா உள்ளது.
மற்றைய ஓரிறை மதங்களைப்’ போலல்லாமல் இஸ்லாம் இதுவரை எவ்வித மாற்றத்திற்கும் உட்பட்டதில்லை என்று சொல்லப்படுவதுண்டு. இது மிகச் சரியோ, மிகத்தவறோ. இஸ்லாமிலும் பல வேறுபட்ட படிமங்கள் உண்டு. ஏனெனில், சுபிக்கள் இஸ்லாமிய தத்துவங்களுக்கு அதிக மரியாதை கொடுக்கிறார்கள். அவர்களது படிமங்களில் மற்ற நம்பிக்கைகளுக்கும் இடமுண்டு.
இஸ்லாமியத்திற்கென்று ஒரே தலைமை இல்லாததால், பல்வேறு பத்வாக்கள் வருவதுண்டு. இதுவரை நம்பி வந்தவைகளை இனி நம்பத் தேவையில்லை என்று யாரும் இம்மதத்தில் கூற முடியாது. இது ஒரு வகையில் நல்லதற்கேயாயினும், எங்கள் இஸ்லாம் மாற்றுவதற்கு இடமில்லாத, கடைசி வேதமே என்ற இஸ்லாமியரின் அடிப்படை நம்பிக்கை மாற்ற முடியாத, ஆனால் அதே சமயத்தில் ஒரு தவறுதலான நம்பிக்கையாகவே இருக்க முடியும்.
இஸ்லாமியத்திலுள்ள முன்னுக்குப் பின்னான முரண்கள், பல பிரதிகளுள் உள்ள வேற்றுமைகள் இவைகளை பொறுமையுடன் பட்டியலிடவும் கூட மிகப்பெரும் எதிர்ப்புகள் வரும்.
அவர்களது முழு நம்பிக்கையானது ஒரு பரந்த உள்நோக்கைக் கூட முடியாத ஒன்றாக்கி விடுகிறது. (137)
*
நீல சாய்வெழுத்துகளில் இருப்பது என் கருத்துகள்
*