*
கீ போர்ட் வாசிக்கிற பலர்
கை நிறைய கலர் கலர்
கயிறுகளா கட்டியிருக்காங்க.
இசையை அவங்க தர்ராங்களா?
அல்லது கயிறுகள் தான் தருகின்றனவா?
கடவுளே...!
என்று முகநூலில் அங்கலாய்த்திருந்தேன். அதற்கு வந்த சில பின்னூட்டங்களில். எனக்கும் தம்பி ஒருவருக்கும் (எங்கள் கல்லூரி மாணவர்; இப்போது கிறித்துவ பாதிரியார்.) கிறித்துவம் பற்றிய விவாதம் ஒன்று வந்தது. அந்தப் பின்னூட்டங்களை இங்கே பதிவிடுகிறேன்.
G Sam George எது தம்பி சரி? நான் எழுதிய அடுத்த பதிவா? ஓ! நன்றி, தம்பி
C Sam Jeffry G Sam George
ஆமாம் அண்ணே...
மிகச் சாி
G Sam George C Sam Jeffry //எனக்குள்ள ஆச்சரியம். பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் ஒரு சேர கடவுள் இஸ்ரயேலர்களைத் தாங்கள் தேர்ந்தெடுத்த இனமாக வைத்திருப்பதை ஆணித்தரமாக திரும்பத் திரும்ப சொன்ன பின்னும் எப்படி இன்று கிறித்துவத்தை அனைத்து மக்களுக்கான மதமாக மாற்ற முடிந்தது? எப்படி இன்னும் விசுவாசிகளுக்கு பிதாவும், மகனும் எல்லா மக்களுக்கான கடவுள் என்று நம்ப முடிகிறது?// ஆக இது சரியென்கிறீர்களா, தம்பி?
C Sam Jeffry G Sam George
அருமை அண்ணே.
நல்ல கேள்வி.
பெரும்பாலும் பலர் மனதிலும் தொக்கி நிற்கும் கேள்வியை நீங்கள் வெளிப்படையாய்க் கேட்டிருக்கிறீா்கள்.
உங்கள் கேள்வியிலேயே விடை இருக்கிறது.
அது பழைய ஏற்பாடு.
பழைய ஏற்பாட்டு மரபுகள் பலவற்றையும் புதிய ஏற்பாடு புணரமைத்துப் புரட்டிப் போடுகிறது.
உதாரணமாக...
பழைய ஏற்பாட்டில் கத்தியால் குத்திக் கொன்றால் தான் கொலை.
ஆனால்...
புரட்சிப் புதிய ஏற்பாட்டிலோ, சகோதரனைப் பகைத்தாலே கொலை.
பழைய ஏற்பாட்டில் ஒரு பெண்ணோடு புணர்ந்தாலே விபச்சாரம்.
ஆனால் புதுமைப் புதிய ஏற்பாட்டிலோ ஆசையோடு பாா்த்தாலே விபச்சாரம்.
பழைய ஏற்பாடு அசையும் அசையாச் சொத்துகள் அவசியம் எனவும் அவற்றை வாாி வழங்குவதே தேவனுடைய வேலை என்றும் முனைப்பாய்ச் சொல்கிறது.
ஆனால்....புதிய ஏற்பாடு சொத்து சேர்த்தால் துருப் பிடிக்கும். பூச்சியரிக்கும்.
சொத்து சேர்த்தால் நிலைவாழ்வில்லை என்று நிறுவுகிறது.
இன்னும் நீங்கள் பழைய ஏற்பாட்டைப் படிக்கும் போது...
பகைவனைப் பழி தீா்க்க அவனைக் கொன்றழிக்கத் தேவனிடமே இறைஞ்சும் வழக்கம் இருந்ததை அறியலாம்.
சங்கீதம் நெடுகிலும் சத்துருவைச் சாிக்குச் சாி கட்டச் சொல்லித் தாவீது தொடா்ந்து வேண்டுவதைப் பாா்க்கலாம்.
ஆனால்...
புதிய ஏற்பாட்டு நாயகர் இயேசு இவற்றை எல்லாம் மாற்றிப் புது வரலாறு எழுதுகிறாா்.
கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் எனக் கேள்விப்பட்டிருக்கிறீா்களே...
நான் உங்களுக்குச் சொல்கிறேன்...சத்துருவைச் சிநேகியுங்கள்
எனப் புதுவிலக்கணம் எழுதுகிறாா்.
ஆக...
பழைய ஏற்பாட்டினின்று புதிய ஏற்பாடு முற்றிலும் முரணாகிறது.
புதிய ஏற்பாட்டில் நேசர் உலகத்தினர் எல்லாருக்குமானவராகத் தன்னை அறிமுகிக்கிறாா்.
உலகம் எங்கும் போய் எல்லாருக்கும் நற்செய்தி அறிவிக்க ஊழியா்களுக்கு ஆணை இடுகிறாா்.
பாவிகளை இரட்சிக்க உலகிற்கு வந்தாரே ஒழிய...
இஸ்ரவேலருக்கு மட்டுமல்ல.
எல்லா இடங்களிலும் தாம் எல்லாருக்கும் பொதுவானவா் என்கிற நம்பிக்கையை முனைப்பாய் முன்வைக்கிறாா்.
அவாின் சீடர்களும் சென்னை வரை வந்து நற்பணி ஆற்றினா்.
இவற்றை அடிப்படையாய்க் கொண்டு பாா்க்கையில் நேசா் எல்லாருக்குமானவா் என்பது உறுதியாகிறது.
சாி தானா அண்ணே....
என் அறிவிற்குத் தகுந்தவாறு நான் முன்வைக்கும் விடயங்கள் அண்ணே.
C Sam Jeffry வாய்ப்பிற்கு நன்றி அண்ணே.
G Sam George //புதிய ஏற்பாட்டு நாயகர் இயேசு இவற்றை எல்லாம் மாற்றிப் புது வரலாறு எழுதுகிறார்.??
ஓ! First edition ... second edition மாதிரியா? நல்லா இருக்கே! பிதா - first editon author எழுதியதை - சுதன், அதாவது புதிய ஏற்பாட்டு நாயகர் second edition author - திருத்தி எழுதி விடுகிறார். ஒரே கடவுள் என்பீர்கள் . இரண்டு எதிரும் புதிருமான ஏற்பாடுகளைக் காண்பிப்பீர்கள். அப்பட்டமான முரண்பாடாக இது உங்களுக்குத் தெரியவில்லையா, தம்பி?
// கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் எனக் கேள்விப்பட்டிருக்கிறீா்களே...
நான் உங்களுக்குச் சொல்கிறேன்...சத்துருவைச் சிநேகியுங்கள்
எனப் புதுவிலக்கணம் எழுதுகிறாா்.//
இந்த அப்பட்டமான contraditction உங்களுக்குப் புரியவில்லையா? விசுவாசம் கண்ணை மறைத்து விடுகிறதா? எப்படி, தம்பி? ஒவ்வொரு கடவுளுக்கும் - பிதா & சுதன் - தனித்தனி philosophyயா தம்பி?
C Sam Jeffry G Sam George
அண்ணன்!
நிச்சயமாக...
இருவேறு தத்துவங்களே.
முன்னது மனிதர்களை நேசித்துக் கொடுத்த சுதந்தரங்களைத் தவறாய்ப் பயன்படுத்தியதால் வெகுண்ட பழைய மரபு.
பின்னது விளைந்த
பாவங்களைப் பலியாடாய் வந்து தீா்த்த புது மரபு.
இரண்டிலும் சித்தாந்தங்கள் காலத்திற்கு ஏற்றவாறு மாறுபடுகின்றன.
மாறுபட்டே தான் ஆக வேண்டும்.
காலத்திற்கேற்றவாறு இயேசு வந்து புரட்சிகளைப் படைக்கிறாா்.
புதுமைகள் செய்கிறாா்.
ஏற்கனவே இருந்த மரபுகள் மனிதம் வளர்க்கவும் மானுட சேவைகளைச் செய்வதற்கும் பலவழிகளிலும் தடைகளாக இருப்பதை உணர்ந்த இயேசு,
மரபுகளைத் தகர்க்கிறாா்.
ஞாயிறுகளில் சேவை செய்கிறாா்.
சேவை செய்யாத ஊழியர்களுக்கு நிலைவாழ்வு இல்லை என்கிறாா்.
விசுவாசம் கண்ணை மறைக்கவில்லை அண்ணே.
ஞானம் கண்ணைத் திறந்தது.
தந்தை மகன் தூயாவி...
தனித் தனி தத்துவமல்ல.
ஆனால்...
தனித் தனிச் சூழல்களில் நின்று பேசும் சித்தாந்தங்கள்.
ஆனால்...
இலக்கு ஒன்று தான்.
G Sam George //புதிய ஏற்பாட்டில் நேசர் உலகத்தினர் எல்லாருக்குமானவராகத் தன்னை அறிமுகிக்கிறார்.//
எனது நூல் - மதங்களும் சில விவாதங்களும் - என்ற நூலின் 36ம் பக்கத்தில் நான் எழுதியுள்ளவை உங்கள் கேள்விக்குப் பதிலாக இருக்கிறது, தம்பி.
யேசு இரண்டு வசனங்களைத் தவிர ஏனைய இடங்களில் எல்லாம் தான் இஸ்ரயேலர்களுக்காக மட்டும் வந்ததாகக் கூறுகிறார்.
யோவான் 17:6 - நான் இவ்வுலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் உமது பெயரை வெளிப்படுத்தினேன்.
மத். 10:5, 6 -- ... மாறாக வழிதவறிப்போன ஆடுகளான இஸ்ரயே மக்களிடமே செல்லுங்கள்.
இன்னும் சில மேற்கோள்கள்: \யோவான் 17;9; மத்: 15:25; மார்க் 7:25; வெளி: 7:4 ..(அவரது குலமான இஸ்ரயேல் மக்களைச்.... ) .இவைகளையும் பாருங்கள், தம்பி..
G Sam George ”நான்கு திசைகளிலும் போய் பரப்புங்கள்” என்றார் உங்கள் கடவுள். ஆனால் எல்லா திசைகளிலும் உள்ளவர்கள் என் மக்கள் என்று சொல்லவில்லையே.
C Sam Jeffry என் வீடு
#எல்லா_மக்களுக்கும்
ஜெபவீடு என்கிறாரே
C Sam Jeffry G Sam George
சொல்லவில்லை அண்ணே.
ஆனால் அவரது செயல்கள் மற்றும் நிலைப்பாடுகள் போன்றவை அதை உணர்த்துகின்றன.
G Sam George //சொல்லவில்லை அண்ணே.// அப்பாடி .. ஒன்றை ஒப்புக் கொண்டமைக்கு நன்றி, தம்பி.
G Sam George //ஆனால் அவரது செயல்கள் மற்றும் நிலைப்பாடுகள் போன்றவை அதை உணர்த்துகின்றன// என்ன தம்பி. அப்படி அவ்ரது செயலும் நிலைப்பாடுகளும் உணர்த்தவில்லையே என்பதற்கான மேற்கோ்ள்களைத்தானே என் மேற்கோள்களில் காண்பித்துள்ளேன். யோவா 11:33, 35,38 .. கானானியப் பெண்ணை விரட்டி அடித்த ஏசு, தன் உறவினர் லாசர் இறந்ததும் எவ்வாறு கண்ணீர் விட்டு அழுதார் என்று சொல்வதை வைத்து ... நான் கொடுத்த முடிவுரை: (1)ஜாதித் துவேஷம் உள்ளவர்; (2)தன் ஜாதி/ குலம் காக்க வந்த ஒரு tribal leader. ... ஆகவே அவர் இஸ்ரயேலரின் கடவுள். (அட.. தமிழுக்கு குமரன் என்பார்களே... அது மாதிரி.)
இரு ஏற்பாடுகளிலும் உள்ள கடவுள் எல்லாம் ஒன்று தானே? ஒருவேளை அப்படி இல்லையோ? ஏனெனில் நீங்கள் வேறுபாடு காண்பிக்கிறீர்கள். ப.ஏ. கடவுள் ஒரு வழி; பு.ஏ. கடவுள் (நேசர், நாயகர்) வேறு வழி. இதில் நேர்வழியைக் காண்பியுங்களேன். நீங்கள் பு.ஏ. என்று சொன்னால் பிதா சொன்னதெல்லாம் தப்பா என்று நான் கேட்கலாமில்லையா, தம்பி.
G Sam George இன்னும் ஒரே ஒரு கேள்வி தம்பி.
ஏசு - தான் பிதாவிடமிருந்து வந்தேன் ... பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்திருப்பேன் ... நானே வழி ... என் மூலமாகவே நீங்கள் பிதாவிடம் போக முடியும் ... இப்படியெல்லாம் பேசி, தன்னை பிதாவிடமிருந்து வந்தவராகச் சொல்கிறார். அதாவது முகமது அல்லாவிற்கு ஒரு நபியாக இருந்தது போல் தானும் ஒரு மெசஞ்சர் என்று தானே சொல்கிறார்.
எங்காவது ஓரிடத்திலாவது தன்னை அவர் கடவுள் என்று சொல்லியுள்ளாரா?
(கி.பி.365ம் ஆண்டு நடந்த First Council of Nicaea - Ecumenical Council - வரலாற்று நிகழ்வையும் வைத்து உங்கள் பதிலைத் தாருங்கள், தம்பி.
C Sam Jeffry “நான் தேவனாக இருக்கிறேன்” என்று இயேசு நேரடியாக கூறியதாக வேதாகமத்தில், எந்த இடத்திலும் பதிவு செய்யப்படவில்லை. அதற்காக அவர் தான் தேவன் என்று எந்த இடத்திலும் எடுத்துரைக்கவில்லை என்று அர்த்தமல்ல. உதாரணமாக இயேசு கிறிஸ்து என்ன சொல்கிறார் என்று பாருங்கள், “நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம்” (யோவான் 10:30). சாதாரணமாக இதை பார்ப்பதற்கு, இயேசு தன்னைக் குறித்து தேவன் என்று சொன்னதாக இவ்வசனத்தில் தெரியாமல் போகலாம். ஆனால் இயேசு இப்படி சொன்னதும் அதற்கு யூதர்கள் எடுத்துக்கொண்ட விதம் மற்றும் யூதர்களின் பிரதிபலிப்பை கவனியுங்கள்: 'யூதர்கள் அவருக்கு பிரதியுத்தரமாக, நற்கிரியையினித்தமாக நாங்கள் உன் மேல் கல்லெறிகிறதில்லை - நீ மனிதனாயிருக்க உன்னை தேவன் என்று சொல்லி இவ்விதமாக தேவ தூஷணம் சொல்லுகிறபடியினால், உன் மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்" (யோவான் 10:33). இந்த வாக்கியத்தை இயேசு கிறிஸ்து கூறியது மூலம், தன்னை தேவனென்று குறிப்பிட்டதாக யூதர்கள் புரிந்து கொண்டார்கள். அவர்கள் இப்படி பிரதிபலித்ததால், இயேசு அதை மறுக்கவோ, மாறுத்தரம் சொல்லவோ இல்லை. இதிலிருந்து “நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம்” என்று இயேசு கூறியது அவர் தேவனாக இருக்கிறார் என்பதை தெளிவுபடுத்துவதற்குத்தான் என்பது தெளிவாகிறது. மற்றொரு உதாரணம் யோவான் 8:58, “ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னமே நானிருக்கிறேன் என்று மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன் என்றார்". இங்கேயும் யூதர்கள் அவர் மேல் கல்லெறிந்து கொலை செய்யும்படி கல்லுகளை எடுத்துக் கொண்டார்கள், காரணம் மோசேயின் பிரமாணத்தின்படி இது தேவதூஷணம் ஆகும் (லேவியராகமம் 24:15).

C Sam Jeffry #தொடா்ச்சி...
“அந்த வார்த்தை தேவனாயிருந்தது” என்றும் “அந்த வார்த்தை மாம்சமாகி” என்றும் (யோவான் 1:1, 14) குறிப்பிட்டு அப்போஸ்தலனாகிய இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தை யோவான் மீண்டும் வலியுறுத்தி கூறுகிறார். இந்த வசனங்கள் இயேசு கிறிஸ்துவே, மாம்சத்தில் வந்ததேவன் என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது. “ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்” என்று அப்போஸ்தலர் 20:28 கூறுகிறது. அப்போஸ்தலர் 20:28, தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபை, என்று சூளுரைக்கிறது. ஆகவே, இயேசு தேவனாக இருக்கிறார்.
இயேசுகிறிஸ்துவின் சீஷனாகிய தோமா “என் ஆண்டவரே, என் தேவனே” என்று அழைக்கிறார் (யோவான் 20:28). இயேசுகிறிஸ்து அதைத் திருத்தவில்லை மாறாக அதை ஏற்றுக்கொண்டவராகவே இருக்கிறார். அப்போஸ்தலனாகிய பவுல் இயேசுகிறிஸ்துவைக் குறித்து “மகாதேவனும், நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்து” என்று தீத்து 2:13ல் குறிப்பிடுகிறார். அப்போஸ்தலனாகிய பேதுரு “நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்து” என்று 2 பேதுரு 1:1ல் குறிப்பிடுகிறார். பிதாவாகிய தேவனும் இயேசுவின் தெய்வீகத்திற்கு சாட்சியாக இருக்கிறார். “குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது” (எபிரெயர் 1:8). பிதாவாகிய தேவன் இயேசுவை இங்கே “தேவனே” என்று குறிப்பிடுவதிலிருந்து மெய்யாகவே இயேசு தேவனாக இருக்கிறார் என்பது தெளிவாகிறது.
வெளிப்படுத்தின விசேஷத்தில் தேவதூதன் அப்போஸ்தலனாகிய யோவானை நோக்கி, தேவன் ஒருவரையே ஆராதனை செய்வாயாக என்று கூறுவதைப் பார்க்கிறோம் (வெளி. 19:10). வேதாகமத்தின் பல பகுதிகளில் இயேசுகிறிஸ்து ஆராதிக்கப்படுவதையும் ஆராதனையை அவர் ஏற்றுக்கொள்வதையும் பார்க்கிறோம் (மத்தேயு 2:11; 14:33; 28:9, 17; லூக்கா 24:52; யோவான் 9:38). அவரை ஆராதித்ததற்காக ஒருவரையும் அவர் கடிந்துகொள்ளவில்லை. இயேசு தேவன் இல்லையென்றால், வெளிப்படுத்தின விசேஷத்தில் தேவதூதன் யோவானிடம் கூறியதுபோல, இயேசுவும் என்னை ஆராதிக்க வேண்டாம் தேவனை ஆராதியுங்கள் என்று கூறியிருக்கலாம். இவைகள் மட்டுமன்றி, இயேசுவின் தெய்வீகத்தைக் குறித்து இன்னும் பல வேத வசனங்கள் குறிப்பிடுகின்றன.
இயேசு தேவனாக இருக்கவேண்டும் என்பதற்கு மிக முக்கியமான காரணமென்னவெனில், அவர் தேவனாக இல்லாவிட்டால், அவரது மரணம் உலகத்தின் பாவத்தை போக்குவதற்கு விலைக்கிரயமாக செலுத்தப்பட்டிருக்க முடியாது (1 யோவான் 2:2). தேவனாலேயல்லாமல் ஒரு சிருஷ்டியினால் நித்தியமான தண்டனைக்குரிய விலையை செலுத்த முடியாது. அப்படி செலுத்தப்பட்டது என்றால் அது தேவன் ஒருவரால் மட்டுமே சாத்தியம் (2 கொரிந்தியர் 5:21). அப்படியென்றால் இயேசு கிறிஸ்து தேவனாக இருக்க வேண்டும். மரித்த இயேசு மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து, பாவம் மற்றும் மரணத்தின் மேல் வெற்றி சிறந்து நிருபித்தார்.
G Sam George //”நான் தேவனாக இருக்கிறேன்” என்று இயேசு நேரடியாகக் கூறியதாக வேதாகமத்தில் எந்த இடத்திலும் பதிவு செய்யப்படவில்லை.//
என் கேள்விக்குப் பதில் சொல்லி விட்டீர்கள், தம்பி. மிக்க நன்றி

G Sam George //இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தை யோவான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறார்.// ஏசுவின் தெய்வீகத்தைப் பற்றிச் சொல்லியுள்ளது; ஆனால் தேவன் என்று சொல்லவில்லை.
1:1 சொல்வது நம் விவாதங்களுக்குப் பதிலில்லை. அது ‘கடவுளோடு’ இருந்தது .எந்தக் கடவுள் என்று ஏதும் சொல்லவில்லை.
யோவான் 1:14 ... நீங்கள் சொன்னது சரி. அந்த வாசகம் நீங்கள் சொன்னது போலன்றி, எப்படி முடிகிறது என்றும் பாருங்கள், தம்பி. “அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.. தெய்வம் என்று சொல்லியிருந்தால் சரி. அப்படியில்லையே..
அப் 20:28 சுயரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட தமது சபை ... context என்ன தம்பி? அன்றைய நிலை.. அந்தச் சபை அவர் சம்பாதித்தது. கடவுளாக அவர் பெற்றது என்றா சொல்லியுள்ளது?
யோவான் 20:28.. என்ன தம்பி... இந்த மேற்கோள். நான் கேட்பது கடவுளோ (பிதா), ஏசுவோ இவர்தான் கடவுள் என்று சொல்லியிருந்தால் சரி என்கிறேன். ஆனால் நீங்கள் தோமாவைப் பற்றிப் பேசுகிறீர்கள். அவர் உங்களைப் போல் ஒரு மத பரப்புரையாளர். பேதுரு, பவுல் சொன்னதும் அது போன்றதே.
வெளி 19:10 .. அதையே தான் நானும் சொல்கிறேன்: தேவன் ஒருவரையே ஆராதனை செய்வாயாக... தேவனின் மகனை அல்ல.
//இயேசு கிறிஸ்து என்ன சொல்கிறார் என்று பாருங்கள்: யோவான் 10:30 - நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம். நல்லது ...இது எப்படியிருக்கிறது என்றால் நானும் Sam Jeffryம் ஒரே ஊரில் வசிக்கிறோம் என்பது போல் உள்ளது. இதன் மூலம் பிதாவும் ஏசுவும் ஒன்று என்று எப்படி கூறுகிறீர்கள்?
//அப்படியென்றால் இயேசு கிறிஸ்து தேவனாக இருக்க வேண்டும்.// இது உங்களது லாஜிக். நான் கேட்டது ஏன் ஏசு தன்னைக் கடவுளாகச் சொல்லவில்லை. மூக்கைத் தொடுங்கள் என்கிறேன்; நீங்கள் தலையைச் சுற்றி ஏதேதோ செய்கிறீர்கள். என் கேள்வி எளிமையானது: ஏசு கடவுள் என்பதற்கான அவரது மேற்கோள் ஏதாவது கொடுங்கள் என்றேன். உங்கள் பதில்:
//அவர் தேவனாக இல்லாவிட்டால் ...” என்று கூறியுள்ளீர்கள். இது விசுவாசமின்றி வேறல்ல
G Sam George பவுல் கிறித்துவை mystify செய்ததற்குப் பிறகே அவரைக் கடவுளாக்கினீர்கள் - தேர்தல் எல்லாம் வைத்து. அதனால் தான் வரலாற்றுப் பின்னணியை வைத்துப் பதில் சொல்லுங்கள் என்றேன். ஓட்டு எண்ணிக்கை உங்கள் பக்கம் அன்று நிறைய விழுந்தது. அவர் கடவுள் இல்லை .. மனிதர் தான் என்றும் சொன்ன ஒரு பக்கமும் அப்போது இருந்தது. வரலாற்றை அத்தனை எளிதாக மறக்கவோ, மறைக்கவோ கூடாதல்லவா, தம்பி.

C Sam Jeffry காலம் காலமாக கிறிஸ்தவர்களின் முகம் நோக்கி நீட்டப்படும் ஒரு கேள்வி இது தான். இயேசு கடவுளா ? வெறும் செய்தியாளனா ?
‘வெறும் செய்தியாளன் என்றால், ஏன் கிறிஸ்தவம் அவருக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறது. ஒரு காந்தியோ, ஒரு விவேகானந்தரோ கூட செய்தி சொல்லிக்கடந்து போனவர்கள் தானே ? அவர்கள் கடவுள் நிலைக்கு உயர்த்தப் படவில்லையே ? இந்தக் கேள்விக்கு கிறிஸ்தவம் பல்வேறு சூழல்களில் பதிலளித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இன்னும் அந்தக் கேள்விகள் நீர்த்துப் போய்விடவில்லை.
இந்தக் கேள்விகள் இன்று நேற்று முளைத்தவையல்ல. இயேசு இந்த பூமியில் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த போதே எழுந்த கேள்விகள் தான். அவருடைய சமகால மக்கள் அவரை மூன்று விதமாகப் பார்த்தார்கள். பொய்யன், பைத்தியக் காரன், கடவுள் !
முதலில் இயேசு தான் கடவுள் என்பதைச் சொல்லியிருக்கிறாரா என்று விவிலியத்தை ஆதாரமாகக் கொண்டு பார்த்தால், பல இடங்களில் அவர் தன்னுடைய நிலைப்பாட்டை மிகத் தெளிவாகச் சொல்லியிருப்பதைக் காணமுடியும்.
யோவான் நற்செய்தியாளர் (10:27-30 ) இதை மிகவும் தெள்ளத் தெளிவாக இயேசுவின் வார்த்தைகள் மூலமாக விளக்குகிறார். ” ஆடுகள் என் குரலுக்குச் செவி சாய்க்கின்றன, நான் அவற்றுக்கு நிறை வாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா.
// இந்தக் கேள்விக்கு கிறிஸ்துவம் பல்வேறு சூழல்களில் பதிலளித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இன்னும் கேள்விகள் நீர்த்துப் போய் விடவில்லை.//
அட ... அச்சுக்குண்டா
அப்படியே இஸ்லாமியர்கள் கேள்விகளை எதிர் கொள்வது போல் அப்படியே சொல்கிறீர்களே! அவர்கள்
1400 ஆண்டுகளாக என்று கொஞ்சம் சேர்த்து சொல்வதுண்டு!
//வெறும் செய்தியாளன்
என்றால் ஏன் கிறிஸ்துவம் அவருக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறது?//
அது தானே தம்பி
என் கேள்வியும்.
//அவர்கள் கடவுள்
நிலைக்கு உயர்த்தப்படவில்லையே?//
பல மதங்களிலும் இந்த நிலை
நீடித்திருக்கிறது. புத்தர் ஒரே ஒரு நல்ல சான்று

C Sam Jeffry #தொடர்ச்சி...
‘அவற்றை என்கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ள மாட்டார். அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும் விடப் பெரியவர். நானும் என் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்” இயேசுவின் இந்த வெளிப்படுத்துதல் யூதர்களை ஆவேசத்திற்கு உட்படுத்தியது ! ” மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொண்டாய்” என்று அவர்மேல் கல்லெறியப் பார்க்கிறார்கள்.
இயேசுவை “பொய்யன்” என்று யூதர்கள் சொல்லும் வார்த்தையிலேயே இயேசு தன்னை இறைமகனாகக் காட்டிக் கொண்டார் என்பது விளங்குகிறது அல்லவா ? மேலும், எந்த ஒரு ஆராய்ச்சியாளரும் இயேசு தன்னைக் கடவுளாகக் காட்டிக் கொள்ளவில்லை என்று எந்த ஒரு ஆதாரத்தையும் கண்டெடுக்கவில்லை.
‘யூத வரலாற்றிலேயே இயேசு தன்னைக் கடவுளாகக் காட்டிக் கொண்டார் என்னும் செய்தி பிலாத்துவின் வாழ்க்கைக் குறிப்பேடுகளில் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இது ஒன்றே இயேசு தன்னை கடவுளாகக் காட்டிக் கொண்டார் என்பதற்குப் போதுமானது. இருந்தாலும் விவிலியம் முழுக்க அதற்கான ஆதாரங்கள் நிறையவே !
இயேசு தன்னைக் கடவுளாகக் காட்டிக் கொள்ளவில்லை என்றும், யோவான் நற்செய்தி இயேசுவைக் கடவுளாகக் காட்டுவதற்காக சேர்க்கப் பட்டுள்ள பிற்சேர்க்கை என்றும் சொல்பவர்கள் விவிலியத்தை ஆழமாய் வாசித்ததில்லை என்பதே பொருள்.
‘மத்தேயு 26: 63-65, மார்க் 14 :60 – 62, லூக்கா 22:67-70 இந்த மூன்று நற்செய்தியாளர்களுமே ஒரு மிக முக்கியமான சான்றை முரணில்லாமல் சொல்கிறார்கள். இயேசு பிடிக்கப் பட்டு தலைமைக் குருவின் முன்னால் நிறுத்தப் படும்போது தலைமைக் குரு வினவுகிறார் ” போற்றுதற்குரிய கடவுளின் மகனாகிய மெசியா நீர் தானா ?” அதற்கு இயேசு ” நானே அவர் !” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் !.
‘யோவான், இயேசுவோடான பிலாத்துவின் உரையாடல் மூலமாக இயேசு தன்னை விண்ணக அரசராகக் காட்டிக் கொண்டதைக் குறிப்பிடுகிறார். மத்தேயு, மார்க் , லூக்கா மூன்று நற்செய்திகளும் இயேசு வாழ்ந்த நூற்றாண்டில் எழுதி முடிக்கப்பட்டவை என்பதை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
//எனக்கு அளித்த
என் தந்தை அனைவரையும் விடப் பெரியவர்.. நானும் எந்த தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்.//
ஆக, இருவரும் வேறு
வேறு என்று எளிதாக, துல்லியமாகத் தெரியவில்லையா? ஏற்கெனவே சொன்னேனே .. நானும் Sam
Jeffryம் ஒன்றாக ஒரே ஊரில் இருக்கிறோம் என்று. அது போல் தான்
யூத வரலாற்றில் சொன்னது அப்போதிருந்த அரசியல் நிலைக்குச் சாதகாமான ஒரு கருத்து. ரோமானியர்களின் கருத்தும் அதை ஒத்து இருக்கலாம். அதுவும் அப்போதைய அரசியல் நிலைக்கான கருத்து. அதுவே போதும் என்ற உங்களது விவாதம் எனக்குப் பதிலளிப்பதாக இல்லை.
யூதர்களின் கோபம் எப்படி இதை நிரூபிக்கிறது. பாவம்.. தவறான கோபம்!
//”போற்றுதலுக்குரிய
கடவுளின் மகனாகிய (இதைத் தடித்த எழுத்தில் இட்டுக் கொள்ளவும்.) மெசியா நீர் தானா?//
தம்பி, இங்கேயே
எனக்கு ஒரு நல்ல சான்றைத் தந்து விட்டீர்களே. இதைத்தானே நானும் சொல்கிறேன் - அவர் கடவுள்
அல்ல. Samன் மகன் Sam இல்லையே. இல்லையா? அதோடு கிறித்துவ வரலாற்றில் முக்கியமான
Origen, Arius, Marcionism என்பவர்களின் கருத்துகளையும் இந்த நேரத்தில் ஒப்பிட்டுக்
கொள்ளுங்கள்.

C Sam Jeffry #தொடர்ச்சி...
ஆளுநர்களுக்கு முன்பாகவும், அரசனுக்கு முன்பாகவும் சித்திரவதை செய்யப்பட்டும், இரத்தம் சிந்தியும் சாவுக்கு சமீபமாக இருக்கும் ஒரு மனிதன், இறுதிவரை ஒரே விஷயத்தைச் சொல்கிறான் என்றால் ஒன்று, அவன் பைத்தியக் காரனாக இருக்க வேண்டும், அல்லது அந்தச் செய்தி எதனாலும் அழிக்க முடியாத உண்மையாக இருக்கவேண்டும்.
‘இயேசுவின் தெளிவான போதனைகளும், வழிகாட்டல்களும், திட்டங்களும் அவரை பைத்தியக்காரன் என்பவரைத் தான் பரிதாபத்தோடு பார்க்க வைக்கும். யோவான் 10:21 ல், மக்களே சொல்கிறார்கள் “பேய்பிடித்தவன் பேச்சு இப்படியா இருக்கும் ? பேய் பிடித்தவனால் அற்புதங்கள் செய்ய இயலுமா ?”. அப்படிப் பார்க்கும் போது இயேசு உண்மையைத் தான் சொன்னார் என்பது உறுதிப் படுகிறது இல்லையா ?
யோவான் நற்செய்தியில் இயேசு தன்னை நல்லாயனாகக் காட்டிக் கொள்கிறார். தன் வழியே வருவோருக்கு மீட்பு என்கிறார். வாழ்வின் வாசல் நானே என்கிறார். நானும் தந்தையும் ஒன்றே என்கிறார்.
‘அவர் தன்னுடைய புத்தகத்தில் 4:25-26 இல் சமாரியப் பெண் ஒருத்தியிடம் தன்னைக் கடவுளாக வெளிப்படுத்துகிறதைக் குறிப்பிடுகிறார். புற இனத்தாரோடு எந்தவித சகவாசமும் வைக்காத ஒரு சமாரியப் பெண்ணைக் குறித்த செய்திகளை சம்பந்தமே இல்லாத ஒரு யூதர் எடுத்துக் கூறிய அற்புதத்தின் மூலம் இயேசு தன்னை வெளிப்படுத்துகிறார்.
ஓய்வு நாளில் வேலை செய்யக் கூடாது என்னும் நிலையை மாற்றியவர் இயேசு. ஓய்வு நாளில் நல்லது செய்யலாம் தப்பில்லை ! “என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார், எனவே நானும் செயலாற்றுகிறேன் !” என்று அற்புதங்கள் செய்கிறார்.
.கடவுளுக்குரிய நாளில் கடவுளுக்குரிய காரியங்களை கடவுளே ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சி தான் அது. ஓய்வு நாளை கடைபிடிக்காதவனை கொடூரமாய் தண்டிக்கும் அந்தக் காலத்தில் இயேசுவின் இந்த செயல்பாடுகள் இறை அருள் இல்லாத ஒருவரால் நிச்சயமாகச் செய்ய இயலாது.
.மேலும் அவர் விண்ணகத் தந்தையை ” நம் தந்தை” என்று அழைக்காமல் ” என் தந்தை” என்று அழைப்பதன் மூலமாகவும் தனக்கும் தந்தைக்கும் இடையே உள்ள “ஒன்றித்த” நிலையை வெளிப்படுத்துகிறார்.
“நான் தந்தையிடமிருந்து வந்தேன், தந்தையிடமே செல்கிறேன்” என்னும் இயேசுவின் வார்த்தைகள் (யோவான் ) இயேசு பிறக்கும் முன்பே இருந்தவர் என்பதும் மண்ணில் அவர் வந்தது தன் தந்தையின் பணியை மண்ணிற்கு உணர்த்தவுமே என்பதை வெளிப்படுத்துகின்றன.
//”போற்றுதலுக்குரிய
கடவுளின் மகனாகிய (இதைத் தடித்த எழுத்தில் இட்டுக் கொள்ளவும்.) மெசியா நீர் தானா?//
தம்பி, இங்கேயே
எனக்கு ஒரு நல்ல சான்றைத் தந்து விட்டீர்களே. இதைத்தானே நானும் சொல்கிறேன் - அவர் கடவுள்
அல்ல. Samன் மகன் Sam இல்லையே. இல்லையா? அதோடு கிறித்துவ வரலாற்றில் முக்கியமான
Origen, Arius, Marcionism என்பவர்களின் கருத்துகளையும் இந்த நேரத்தில் ஒப்பிட்டுக்
கொள்ளுங்கள்.
//இயேசு நல்ல ஆயன்.//
ஆஹா .. ஒத்துக் கொள்ளவேண்டிய விஷயம்.
தன்வழியே வருவோருக்கு
மீட்பு என்கிறார்.. விசுவாசிகள் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயம். சரி
நானும் தந்தையும்
ஒன்றே என்கிறார். இதைத்தான் சொன்னேன்: . Samன் மகன் Sam இல்லையே. இல்லையா? இருவரும்
வேறு வேறு ஆனால் ஒத்தக் கருத்துடையோர்/ ஒத்த காப்பாளர்கள்/ அல்லது ஒத்த இரு கடவுள்கள்!
.. இப்படித்தான் அதற்கான பொருள், தம்பி.
//புற இனத்தாரோடு
எந்த வித சகவாசமும் வைக்காத ...// இதை ஏற்கெனவே சொல்லி விட்டேனே. ஒரு சாதி / இனத்திற்காக
வந்த மனிதர் அவர் என்று.
C Sam Jeffry #தொடா்ச்சி...
பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் தனக்கு தந்தையால் வழங்கப்பட்டிருக்கிறது என்னும் இயேசுவின் மொழிகள் அவரை கடவுளாகக் காட்டுபவையே !
யாத்திராகமத்தில் (3) கடவுள் மோசேடம் தன் பெயர் “இருக்கிறவர் நானே” ( யேகோவா ) என்கிறார். யோவான் 8:58, ஆபிராகாமுக்கு முன்பே இருக்கிறவர் நானே… என்கிறார்.
வழியும் உண்மையும் வாழ்வும் நானே, என்வழியாய் அன்றி எவனும் தந்தையிடம் வருவதில்லை ( யோவான் 14:6)
//பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் ...// நீங்கள் யார் கட்டுகளை அவிழ்க்கிறீர்களோ அவர்கள் கட்டுகள் அவிழ்க்கப்படும். என்று தன் சீடர்களைப் பார்த்து சொன்னாரே ... அப்போது அவர்களும் கடவுள்களாக மாறி விட்டார்களா என்ன?
- யோவான் 14:6 ... இதைத்தான் நானும் சொல்லி விட்டேனே. He is the way; he is the truth, his way is the only right way. IT STOPS THERE. He is the way BUT NOT THE FINAL DESTINATION. இதுதான் அந்த வார்த்தைகளுக்கு நான் தரும் பொருள். நியாயமாக யோசித்துப் பாருங்கள். ஏசுவை நம்பினால் தான் பிதா என்ற கடவுளிடம் போகலாம்.
இதில் இன்னொரு விசேஷம் என்ன தெரியுமா? கிறித்துவத்தையும் இஸ்லாமையும் பங்காளி மதங்கள் என்று சொல்லலாம், ஒரே வேர். அங்கும் முதலில் நபியை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அதன் பின்பே அல்லா .. ஒரு தொடர்ச்சியைப் பார்த்தீர்களா இரு மதத்திற்கும்!!!!
C Sam Jeffry #தொடர்ச்சி...
அண்ணே...
இப்போது இன்னோர் கேள்வி உங்கள் முன் எழலாம். இயேசுவின் கூற்றுகள் உண்மையா ?
அதற்கு எளிமையான ஒரு பதில் சொல்லப் படவேண்டுமானால் இயேசுவின் காலத்தில் இயேசு செய்த அருங்குறிகள், அற்புதங்கள் மட்டுமே போதுமானவை. இறந்த மூன்றாவது நாள் உயிர்த்து எழுந்த நிகழ்ச்சியே பல்வேறு நிகழ்வுகள், நற்செய்திகள் மூலமாக விளக்கப்படுள்ளன. இயேசு உயிர்த்தபின் அவரை குறைந்தபட்சம் 500 பேர் பார்த்திருக்கிறார்கள். இதைவிட மேலான ஆதாரம் எதற்கு?
‘ இயேசுவை நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்.
நம்பினால் வாழ்வில் வரும் நல்லதொரு திருப்பம்.’
நன்றி அண்ணே
// இதைவிட மேலான ஆதாரம் எதற்கு?’’ i will take it as a joke!
.
//இயேசுவின் கூற்றுகள்
உண்மையா?//
சான்றுகள் ஏதுமில்லாத
கூற்று இது. உங்கள் வேத நூல்களில் சொல்லப்பட்டதால் நீங்கள் நம்புவீர்கள் அப்படியே. ஒவ்வொரு மத நம்பிக்கையாளர்களும் அவர்களது வேதநூல்களை
உண்மை என்று “நம்புவார்கள்”. அது எல்லா மதத்தினருக்கும் பொதுவான ஓர் அலைவரிசை!
//இயேசு காலத்தில்
இயேசு செய்த அருங்குறிகள் ..//
இதுவும் எல்லா
மதங்களிலும் உள்ள ஒரு பொதுவான அம்சம். நம்பிக்கை மட்டுமே இவைகளுக்குக் கை கொடுக்கும். கோவித்துக் கொள்ளாமல் கேளுங்கள்:
·
ஏசுவின்
பிறப்பிற்கும் கர்ணனின் பிறப்பிற்கும் என்ன வித்தியாசம்?
·
ஆப்ரஹாம்
தன் குழந்தையைப் பலி கேட்ட இரக்கமான கடவுள் போல், சிவன் குழந்தைக் கரி கேட்ட கதையும்
ஒன்று தானா?
·
கண்பார்வை
கொடுத்தார் ஏசு; வயிற்று வலிக்கு திருநீறு கொடுத்து குணமாக்கினார் இங்கு. பேசாத குழந்தை ஞானப்பால் குடித்து கவிஞனாகியதும்
இங்கு.
·
மீன்
வயிற்றுக்குள் மூன்று நாட்கள் அங்கே;; நரியைப் பரியாக்கியது இங்கே.
·
கடலைப்
பிளந்தார் அங்கே; பாற்கடல் பிளந்தது இங்கே.
·
பட்டியல்
இரு புறமும் நீண்டிருக்கும்.
·
இயேசு
உயிர்த்ததை 500 பார்த்திருக்கிறார்கள். சொல்வது எங்கே? உங்கள் வேத நூல் தானே? சான்று?
எதிர்மறையான சான்றுகளும் உண்டு. (Ref; எனது இரண்டாம் புத்தகம்: ”கடவுள் என்னும் மாயை” பக்கம் 80)
அதோடு தயவு செய்து ஏசு ஜெத்சமேனியில் (முடியுமானால் இந்தப் பாத்திரம் என்னை விட்டு அகலக் கடவது என்று..)ஜெபம் செய்த பிறகு என்ன நடந்தது என்று இஸ்லாமிய நம்பிக்கைகளைப் பற்றிப் படித்துப் பாருங்கள், ஏசு சிலுவைத் தண்டனையிலிருந்து அல்லாவினால் காப்பாற்றப் பட்டார் என்பது அவர்கள் நம்பிக்கை. பிர்கு எப்படி நடந்திருக்கும் resurrection??!!
அந்தந்த வேத நூல்களைச்
சான்றாகக் காட்டுவது எளிது. அது அந்தந்த நம்பிக்கையாளர்களுக்கு
மட்டும் உகந்தது; உவந்தது.
எல்லா மதங்களிலும்
நீங்கள் சொல்லும் அருங்குறிகள் உண்டு. அவையெல்லாம் அவர்களின் நம்பிக்கையைப் பற்றிய
விசயம். ஏ.ஆர். ரகுமானுக்கு கிறித்துவ பாதிரியார் செய்த செபம் கேட்கவில்லையாம். ஒரு
இஸ்லாமியரின் தொழுகையில் சுகமாயிற்றாம். அதனால்
அவர் இஸ்லாமியர் ஆனார். கேள்விப்பட்டிருக்கிறீர்களா இதை?
எல்லாவற்றிற்கும் மேலாக, நான் மதங்களைப் பற்றி எழுத ஆரம்பித்த போது இந்துக்களிடமிருந்து சில எதிர்ப்புகள் .. கேள்விகள். இஸ்லாமைப் பற்றி எழுத ஆரம்பித்த போது கடுமையான எதிர்ப்புகள், அதைவிட தீவிரமான கேள்விகள் என்று தொடர்ந்து வந்தன. அதற்காகவே நிறைய வாசித்து, யோசித்து, பதில் எழுத வேண்டிய கட்டாயம் வந்தது.
ஆனால் கிறித்துவ மக்களிடமிருந்து அப்படி ஏதும் கேள்விகள் இல்லை. “பெரிய” கிறித்துவர்கள் இதை வாசிப்பதையே தவிர்த்து வந்தனர். அவர்கள் எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்வதில்லை. அத்தனைப் பெரிய விசுவாசம்! ஏனிந்த அச்சம் என்பது எனக்குப் புரிந்ததில்லை. பன்றிகளின் முன்னால் முத்துகளை இறைக்காதீர்கள் என்று சொல்லிவிட்டு அகலுவதுதான் அவர்களின் பழக்கமாக இருந்தது. ஆனால் அது என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் கடைப்பிடிப்பது வெறும் - escape mode தான்!
ஆனால் நீங்கள் பொறுமையாக நடத்திய நீண்ட விவாதத்திற்கு மிக்க நன்றியும் அன்பும் பாராட்டும். என்னோடு கிறித்துவம் பற்றி இத்தனை நீண்ட உரையாடலை நடத்தியமைக்கு மிக்க நன்றி, தம்பி.
நான் சொல்வதால் நீங்கள் மாறப்போவதில்லை; நீங்கள் சொல்வதால் நான் மாறப்போவதில்லை. ஏனெனில் இது ஒரு inner happening. நமக்குள் ஏற்படவேண்டும். எனக்கு என் வழியில் அது ஏற்பட்டது. நிறைய சிந்தித்து , யோசித்து, வாசித்து மெல்ல மெல்ல என் ஐம்பதுகளில் மதத்திலிருந்து வெளியே வந்தேன்.
*
