Sunday, April 29, 2018

981. BIBLE STUDY - பழைய ஏற்பாடு ...8 லேவியர்





*





3. லேவியர்

முன்னுரையில் வரும் வார்த்தைகளே என் விவாதத்திற்கு நல்ல சான்றாக விளங்குகிறது. எல்லா மதங்களும் ஏதோ ஓரிடத்தில் ஆரம்பித்தது. அதனால் அம்மதத்தின் புராண / இதிகாச நிகழ்ச்சிகள் அனைத்தும் அந்த நாட்டு எல்லைக்குள் நடப்பதாகவே இருக்கும் என்பது மதங்களுக்கு எதிரான  முக்கியமான விவாதங்களில் ஒன்றாகக் கருதுவேன். இந்த முன்னுரையில் சொல்லப்படுவது: ”பழங்கால இஸ்ரயேலர் தம் கடவுளின் தூய தன்மையையும், அவரை வழிபடுவதற்கான முறைகளும், … அவ்வினத்தார் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளும் …”  இந்நூலில் இடம்பெறுகின்றன என்று சொல்கிறது. அதாவது, இம்மதம் இஸ்ரயேலர்களின் மதம் என்ற உண்மை இங்கு உரத்துச் சொல்லப்படுகிறது. தனி ஒரு இனத்துக்கான கிறித்துவ மதம் ஐரோப்பா சென்ற பின் பெரும்பான்மையாக காலனியாதிக்கத்தின் மூலம் உலகெங்கும் பரப்பப்பட்டது என்ற வரலாற்று உண்மை நமக்கெல்லாம் தெரியும். மேலும், 11:45ல் “உங்கள் கடவுளாயிருக்குமாறு உங்களை எகிப்திலிருந்து வெளிக்கொணர்ந்த ஆண்டவர் நானே” என்று கூறப்படுவதும் மேல் சொன்ன விவாதத்திற்கு சார்பான ஒரு மேற்கோள். இந்தக் கடவுள் இஸ்ரயேலரின் கடவுளே; உலகின் எல்லா மக்களுக்கும் இம்மதம் என்பது பரவிய பின் இட்டுக்கட்டப்பட்ட கதையே!

இந்த நூலில் லேவியர் என்ற இனத்தவர் பற்றிப் பேசப்படுகிறது. கடவுள் இந்த இனத்தவருக்கு (நம்ம ஊர்ல ஐயர்மாருக்குக் கொடுக்கப்படும்) ‘உயர்ந்த இடம்’ மாதிரி இவர்களுக்கும் கொடுக்கப்படுவது போல் உணர்ந்தேன். விளக்கம் பார்க்க முனைந்தேன். சரியாக ஏனிந்த லேவியருக்குத் தனியான உயர்ந்த இடம்  என்பது எனக்குத் தெரியவில்லை. யாரும் சொல்லிக் கொடுத்தால் கற்றுக் கொள்வேன்.

இப்பகுதியில் இரண்டு முக்கியாமான விஷயங்கள் திரும்பத் திரும்ப சொல்லப்படுகின்றன. இந்த மதத்து கடவுள் – ஜெஹோவா? – பயங்கரமான ‘காசு பிடுங்கும்’ கடவுளாக எனக்குத் தெரிகிறார். ஏனெனில் இந்தப் பகுதியில் பேசும் இரு விஷயங்கள்; பலி & காணிக்கை. தலைப்புகளைப் பாருங்களேன் … எரி பலிகள்; தானியப் படையல்கள்; நல்லுறவுக் காணிக்கைகள்; பாவங்களுக்கான காணிக்கைகள்; பாவக் கழுவாய்க்கான காணிக்கைகள்; பதிலாகச் செலுத்த வேண்டிய காணிக்கைகள்; ….இப்படியே போகின்றன. 

என்ன காணிக்கை கொடுக்க வேண்டும்; எப்படி கொடுக்க வேண்டும்; எதெதில் தீட்டு உள்ளது; அதிலும் ”ஆண்டவருக்குச் செலுத்தும் உணவுப் படையல் எதுவும் புளிப்பேறியதாய்ச் செய்யப்படலாகாது”. Why this allergy for acidity to the Almighty??!! Allergy even to honey … “தேன் எதையுமே ஆண்டவருக்கு நெருப்புப் பலியாக்க வேண்டாம்.” ஆண்டவர் கொடுக்கும் பலிகளை அப்படியே சாப்பிடுவதாகக் கூறப்பட்டுள்ளது. “இது ஆண்டவருக்கு உகந்த நெருப்புப் பலி உணவாகும். (3:11)

பாவங்களுக்கான பரிகாரங்களும் சொல்லப்படுகிறது. A big list of food and their recipe. தீட்டு பற்றியும் பல விவரங்கள். எப்படி தீட்டு விழுகிறது; எப்படி பகலெல்லாம் நீரில் கிடந்தால் அப்பொருளின் தீட்டு விலகி தூய்மையாகிறது போன்றவைகளின் தொகுப்பு இங்குள்ளது. குழந்தை பெறும் தீட்டும், அதனை நீக்குவது பற்றியும் சொல்லப்படுகிறது. அட … தொழுநோயைப் பற்றிய விவரங்கள் சிரிப்பு மூட்டுவதாக உள்ளது. It is all bad medication and poor sanitization. 

என்னைப் போன்ற வழுக்கைத் தலையர்களுக்கும் நல்லது ஒன்று சொல்லப்பட்டுள்ளது. 11:40 – “தலைமுடி உதிர்ந்து ஒருவர் மொட்டையானால் அவர் தூய்மையானவர்”! அடே … அப்போ நான் தூய்மையானவன் தான். ஆனால் … பாவம் முடியிருப்பவர்கள். 19:27 தலைமுடியைத் திருத்திக் கொள்ள வேண்டாம். தாடியின் ஓரங்களைச் சிரைக்க வேண்டாம்”.  

இன்னொரு ஆச்சரியம். எல்லோருக்கும் தெரிந்த ஒரு குரான் வாக்கியம் உண்டு: ‘உன் வேலையாளின் வியர்வை காயும் முன் அவனுக்குக் கூலியைக் கொடுத்து விடு’.  இங்கே 19:13ல் “வேலையாளின் கூலி விடியும் வரை உன்னிடம் இருத்தல் ஆகாது” என்று சொல்லப்பட்டுள்ளது. எல்லாம் ஒரு copy & paste தான்.














*


980. அயோக்கிய சாமியார்கள் பின்னால் முட்டாள் மக்களின் கூட்டம்






பாபா, நித்தி, ஈஷா … என்ற மனித-சாமிகளைக் கும்பிடும் அப்பாவி மக்களுக்கு …………



நீங்கள் கட்டாயம் இன்று செய்தித்தாளில் வந்த இந்தக் கட்டுரையை வாசித்தே ஆக வேண்டும், (யார் என்ன  சொன்னாலும் நீங்கள் உங்கள் மரத்தை விட்டு இறங்க மாட்டீர்கள் என்பது தெரியும். இருந்தும் ஒரு முயற்சி ….)


இதையும் கூட வாசிக்கலாம்.


இதில் முதல் கட்டுரையை ஷோபா தே என்ற பெண் பத்திரிகையாளர் எழுதியுள்ளார். அதன் சில பகுதிகளைத் தமிழில் தருகிறேன். நம்பிக்கையாளர்கள் மண்டையில் ஏறுதா என்று பார்ப்போம்:


முதல் பத்தியில் அசாராம் என்ற சிறைத்தண்டனை பெற்றவனைப் பற்றி பேசுகிறார்: “இவன் முகமுடி போட்டுக்கொண்டு ஏமாற்றிய கயவன் … 1971. ஆஷ்ரம் ஆரம்பித்து இன்று கோடிக்கணக்கில் ( zillions) பணம் சம்பாதித்தவன்.  

நாம் ஏன் இவ்வளவு ஏமாளிகளாக இருக்கிறோம்? அடி முட்டாள்களாக இருக்கிறோம்? நமக்கெதற்கு இந்த “அவதாரங்கள்”? அவர்களில் பலரும் ரெளடிகள் .. பித்தலாட்டக்காரர்கள்… கொலைகாரர்கள் … காமக் களியாட்டக்காரர்கள்.  (Why are we so bloody gullible? Such monumental idiots? )

வெறும் மூன்றாம் வகுப்பு வரை படித்து அஸ்ராம் இன்று கோடி கோடியாய் சம்பாதித்தது எப்படி? நாமும் ஏன் தொடர்ந்து அவர்களிடம் ஏமாந்து கொண்டே இருக்கிறோம்?

“பாபா” என்பதன் பொருள் தந்தை; ஒரு மரியாதையான சொல். காந்திக்குப் பயன்படுத்திய சொல். இன்று ஒரு காமாந்தகாரனுக்கும் அதே சொல்!


மதங்களைப் பற்றிய எனது நூலில் இரு பெருங்குறைகளை இந்து மதத்தினர் மீது வைத்தேன். ஒன்று:  சாதிகளை ஆரம்பித்து வைத்து, காலங்காலமாகக் அவைகளைப் போற்றிப் பாதுகாத்து வரும் ஒரே சமயம் இந்து மதம். இரண்டாவதாக முப்பது கோடித் தெய்வங்களைக் கும்பிடுங்கள். போகட்டும், ஆனால் நம்மோடு பிறந்து நம் முன்னால் வளரும் வெறும் மனிதர்களைக் கடவுளாக, அவதாரங்களாக ஆக்கி அவர்களைத் தெய்வத்திற்கு மேல் கும்பிட்டு வரும் அறிவீனம் பற்றியும் எழுதியிருந்தேன்.


எனக்குத் தெரிந்தவரை நானறிந்து இந்து மதத்தின் இந்த மனிதக் கடவுள்களின் மேல் தோலை உரித்தால் வருவது முடை நாற்றம்.


சத்திய சாயி பாபா  -- பல ஒழுக்கக்கேடுகள் .. கொலைகள்.. இறந்த பின் அறை முழுவதும் தங்க பிஸ்கோத்துகள். இன்று அவையெல்லாம் எங்கேயோ? எங்கிருந்து அவ்வளவு பணம்? உழைத்தாலும் கிடைக்காத பணம். (உதவி செய்தார் என்று சொல்லி கள்ளத்தனத்தை நேர்மையாக்காதீர்கள்.)


நித்தியானந்தா – பெரும் ஆச்சரியமூட்டும் விஷயம், இப்படி வெளிப்படையாக காணொளியில் அவர் நடிகையோடு போட்ட ஆட்டம் பார்த்த பிறகும் கூட  இன்னும் பெண்கள் அவர் பின்னால் கூடி கும்மாளமிடுவதைப் பார்க்கும் போது அத்தனை ஆச்சரியம். எத்தனை வழக்குகள் வந்தாலென்ன … நான் பரம பக்தன்  என்று எப்படி ஒரு கூட்டம் பின்னால் நிற்கிறது, அவர் “வளர்த்து” வரும் பெண்களின் அர்ச்சனை பார்த்துக் கூட மக்கள் அசரவில்லையே!


கல்கி – புத்தி நிதானமில்லாமல் பெரும் கூட்டமே அவரது ஆஸ்ரமத்தில் ஆடுவதைப் பார்த்தும் கூட்டம் குறையவில்லை. மர்மங்களுக்குப் பஞ்சமேயில்லை.
Image result for கல்கி


ஈஷா – புதிதாக வந்த அடுத்த கொலைகார சாமி. முதல் மனைவி பற்றி அத்தனை கதைகள். இளம் பருவத்து வாழ்க்கை பற்றியும் அத்தனை கதைகள். 
நிலத்தைச் சுருட்டியாகி விட்டது,Image result for ஈஷா 
யானைத் தடம் அழிந்து போனது. 
திடீரென்று நதிகளுக்கு வக்காலத்து வாங்கினார். 
அந்தச் சோலி முடிந்தது. அவர் ஆட்சி மட்டும் ஸ்திரமாக நின்று விட்டது. 

சும்மா சொல்லப்படாது. 
நல்லா டான்ஸ் கிளப்புறார் நம்ம மாடர்ன் சாமியார்.......Image result for ஈஷா






மேல்மருவத்தூர் – சாதா ஆசிரியர் அன்று … இன்று கோடீஸ்வரன். வருமானவரித் துறையில் இருந்து ரெய்ட் நடந்தது. வரும் சிகப்புக் கூட்டத்திற்கு அதெல்லாம் கண்ணில் தெரிவதில்லை. ஆணே பெண் கடவுளாக மாறிய அதிசயம்.

சங்கராச்சாரியார் --  Image result for சங்கராச்சாரியார்

கொலையே நடந்து முடிந்தது. கொலையைத் தற்கொலையாக மாற்றியது நீதி. ஆனாலும் பக்தியும் பாலோயர்களும் குறையவேயில்லை. சாதிப் பித்தா இல்லை மதமா? ஏதோ ஒன்று!



பட்டியல் நீளம் ..  

எத்தனை பட்டியல் கொடுத்தாலும் .. நம்பியோர் நம்பியோரே.  மாற்றம் ஏதுமில்லை. ஒரு சாமியார் செத்தால் நாலு புது சாமியார்கள் முளைக்கிறான்கள். வேறு வழி ஏது. 

வருபவன்களுக்கு எல்லாம் அரசியல் துணை அமோகம். ஏதோ காசை அவர்கள் வெள்ளையாக்க முடியுமாம். சொல்கிறார்கள். கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதிகளுக்கு இந்தப் பெரும் அயோக்கியவாதிகள் புகலிடமாகி விட்டனர். பிழைப்பவர்கள் அவர்கள் ... நம்பி பின்னால் போகும் பாவப்பட்ட மக்களின் கதையும் பெரும் தொடர்கதை தான்.



ஒரு சின்ன சந்தேகம் ... புட்டபர்த்தி சாயி பாபாவைக் கும்பிட்டவர்கள் அவர் செத்த பிறகு இப்போது என்ன செய்கிறார்கள்? அடுத்த ஆளுக்குத் தவ்வி விட்டார்களா? அல்லது அவர் படத்தை வைத்து சாமியாக்கி கும்பிடுகிறார்களா? 

(இப்போது சாயி பாபாவில் முதல் பாபாவின் மீது புதிதாக பக்தர்கள் முளைத்து அதிகமாகி விட்டார்கள். நிறைய கோவில்கள் எங்கெங்கும் முளைக்கின்றன. செவ்வாய்க் கிழமை பிரசாதம் நல்லா இருக்குன்னு சொன்னாங்க. ட்ரை பண்ணிப் பார்க்கணும்! வர்ரீங்களா?)












 *

Wednesday, April 11, 2018

978. ஆத்தா .... நான் பாஸாயிட்டேன்





*


 அட .. ஒரு படிச்ச புள்ள .. தான் படிச்சது கொண்டதைப் பத்திப் பேசாம வெறுமனே சினிமாவுக்குப் போனது… ஊரைச் சுத்துனதுன்னு எழுதிக்கிட்டு இருந்தா எப்படி? படிச்சிக் கிழிச்ச அனுபவத்தையும் கொஞ்சம் சொல்லணுமே …

 என் ஆசிரியர்கள் பலர் மேல் எனக்கு மிகுந்த மரியாதையும், மதிப்பும் உண்டு. ஆனாலும் ஒரு பெருங்குறை அத்தனை பேரின் மீதும் உண்டு. அதில் என் அப்பாவும் சேர்த்தி தான். இன்று பிள்ளை முளைச்சி மூணு இலை உடுறதுக்கு முன்னாலேயே என் பிள்ளையை அதுவாக ஆக்கப் போறேன் .. இதுவாக ஆக்கப் போறேன்னு பெத்தவங்க சொல்ல ஆரம்பிச்சிர்ராங்க. ஆனா எங்க காலத்தில பெற்றோரும் சரி ஆசிரியர்களும் சரி, சின்னப் பசங்களுக்கு எந்த வித முனைப்பும் கொடுக்கத் தவறிட்டாங்க. என்னைப் பொறுத்தவரை ஒரு வாத்தியார் பிள்ளையா பிறந்தேன். அதனால் தொடர்ந்து படிக்கணும்னு நினைச்சேனே தவிர படிச்சி என்னவாக ஆகணும்னு நினச்சும் பார்த்ததில்லை. பெத்தவங்களும் அந்த முனைப்பைத் தரவில்லை. அதை விட ஒரு ஆசிரியர் கூட பள்ளியிலோ கல்லூரியிலோ அதைப் பற்றித் தவறுதலாகக் கூட ஒரு முறை கூட பேசியதில்லை. (இதனாலேயே நான் ஆசிரியனாக ஆன பிறகு மாணவர்களுக்கான சிலபஸை விட ”நாளை” என்பதைப் பற்றி அவர்களிடம் அடிக்கடி பேசினேன். பயனுமிருந்தது என்றே நிச்சயமாக நினைக்கின்றேன்.)

பெற்றவர்கள், ஆசிரியர்கள் தான் சொல்லித் தரவில்லை என்றாலும் நானே கூட வெகு சில மாணவர்கள் போல் கொஞ்சம் புத்திசாலித் தனமாக எதிர் காலம் பற்றி யோசிக்கத் தெரிந்திருக்கலாம். அதுவுமில்லை. நான் ஒரு சரியான கூமுட்டை. எதிர்காலத்தில் அப்படி செய்யணும், இப்படி இருக்கணும் என்ற கனவு கூட இல்லாமல் வெறும் மொட்டைப் பயலாக இருந்திருக்கிறேன். ஊக்குவிக்கவும் எந்த வார்த்தையும் அப்பாவிடமிருந்தோ, ஆசிரியர்களிடமிருந்தோ வந்ததேதில்லை.

இதனால் தானோ தேர்வில் வெற்றி பெறுவேன் என்ற எண்ணத்தைத் தவிர எத்தனை மதிப்பெண் வாங்க வேண்டும் என்று நினைக்கவேயில்லை. அதிக மதிப்பெண் தான் மரியாதை என்ற நினைப்புகூட இல்லாமல் இருந்திருக்கிறேன். எப்படியோ எல்லாம் சேர்ந்து வெளியில் சொல்ல முடியாத மொத்த மதிப்பெண் வாங்கினேன், அதிலும் நான் எப்படி ஒரு கணக்குப் புலியாக இருந்து கணக்குப் புளியாக மாறினேன் என்பதைச் சொன்னேனே … அது மாதிரி கணக்கு மார்க்கும் காலை வாறி விட்டிருந்தது. பாஸ் செய்தேன். அந்த அளவு தான் என் S.S.L.C. பற்றிச் சொல்ல முடியும்.

 அதுவும் தேர்வு முடிவு வந்த நாள் இன்னும் நன்கு நினைவில் இருக்கிறது. அப்போது நான் பொன்னியின் செல்வன் கதை வாசித்துக் கொண்டிருந்தேன். மொட்டை மெத்தையில் உட்கார்ந்து கதை வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது நானும் வந்தியத்தேவனோடு சேர்ந்து குந்தவியைக் காதலிக்க ஆரம்பித்திருந்தேன். மூன்றாம் பாகம். சிறையிலிருக்கும் வந்தியத் தேவனை குந்தவி வந்து சந்திக்கும் சீன். வாவ்! நானே அப்போது சிறையில் அடைபட்டுக்கிடந்ததாக ஒரு நினைப்பு. குந்தவி என்னைப் பார்க்க வருகிறா(ர்க)ள்! அந்த நினைப்பில் சிறிதே கண்ணயர்ந்து விட்டேன். 

திடீரென்று நாலைந்து தெரு நண்பர்கள் வந்து என்னை எழுப்பினார்கள். அப்பொதெல்லாம் S.S.L.C. தேர்வு முடிவுகள் தனியாக தினசரிகளின் விசேஷப் பதிப்புகளில் வரும். நண்பர்கள் ஒரு பத்திரிகை வாங்கி வந்திருந்தார்கள். எப்போதும் செய்திகளை முந்தித் தரும் தினத்தந்தி இதழ் அது. ஏற்கெனவே அவர்கள் என் எண்ணைப் பார்த்திருக்கிறார்கள். பேப்பரில் என் எண் இல்லை. என்னை எழுப்பியவர்கள் மெல்ல என்னிடம் அதைச் சொன்னார்கள். நான் கண்டுக்கவேயில்லை. பேப்பரை எடுத்துப் பார்த்தேன். என் எண் இல்லை, சிறிதே யோசித்தேன். மறுபடி பேப்பரை எடுத்துப் பார்த்தேன். என் எண் மட்டுமல்ல .. என்னோடு சேர்ந்து ஏறத்தாழ நூறு எண்களைக் காணோம்.

நான் சிரித்துக் கொண்டே ஷெர்லாக் ஹோம்ஸாக (அவரை அப்போது எனக்குத் தெரியாது) நினைக்காமல், என்னை ஒரு சங்கர்லாலாக நினைத்து நண்பர்களிடம் ”பேப்பர்தாண்டா தப்பு”ன்னு சொன்னேன். பசங்க நம்பவில்லை. நான் படித்ததோ VI Form “A” Section. அதாவது ஆனானப்பட்ட புனித மரியன்னைப் பள்ளியில் ஆறாவது பாரத்தில், அதுவும் A” Section மாணவன். அதாவது ஒரு உயர்ந்த பள்ளி; அதிலும் A” Section - டாப் மாணவர்கள் மட்டுமே இருக்கும் Section! அதில் எப்படி நூறு எண்கள் இல்லாமல் ஒரேயடியாக பெயிலாக முடியும் என்றேன் துணிச்சலாக.

ஆனால் நண்பர்களுக்கு இந்த லாஜிக் பிடிபடலை. “வாடா .. அடுத்த பேப்பர் பார்ப்போம்” என்று கூட்டிக் கொண்டு போனார்கள். இதுவரை அப்பாவுக்கும் இதெல்லாம் தெரியாது. சைக்கிள் படையோடு பேப்பர் வாங்கப் போனோம். அடுத்த தினசரி .. ஒரு வேளை அது மாலை முரசாக இருக்கலாம். இனிதான் அது வரும் என்று கடையில் சொன்னார்கள், முதலில் ரயில்வே நிலையத்தில் தான் வெளியே வரும் என்றும் சொன்னார்கள். எல்லோரும் ரயில் நிலைத்திற்குச் சென்றோம்.

சிறிது நேரம் கழித்து என் பள்ளியில் வேறொரு Section ல் படித்து கிறித்துவ மாணவர்களுக்கான தனி வகுப்பில் என்னோடு படித்த யாக்கோபு என்ற மாணவன் அந்த ஸ்பெஷல் பதிப்பைக் கையில் வைத்து விற்றுக் கொண்டிருந்தான். அவனிடம் பேப்பர் வாங்கி … அதுவும் நண்பர்கள் தான் முதலில் என் தேர்வு முடிவைப் பார்த்தார்கள். நான் சொன்னது தான் நடந்திருந்தது. நான் பாஸாயிட்டேன். (தனிமையில் போய் யாக்கோபுவிடம் பேசினேன். அவன் பாவம் தேறவில்லை.)

 இப்படியாக மிக மோசமாக என் பள்ளிப் படிப்பு முடிவடைந்தது. அடுத்து கல்லூரிக்குப் போவோமா?



 *

Tuesday, April 03, 2018

979. கடவுள் என்னும் மாயை ... நூல் விமர்சனம்


பேரா. விஜயகுமார் எனது  கடவுள் என்னும் மாயை என்ற நூலுக்கான ஒரு முழு விமர்சனம் எழுதியுள்ளார். இம்மாத  செம்மலர் இதழில் வெளி வந்துள்ளது. 
பேராசிரியருக்கும், செம்மலருக்கும் நன்றி 



*******

நூல் விமர்சனம்:
கடவுள் என்னும் மாயை

ஆசிரியர் : தருமி










வெளியீடு : எதிர் வெளியீடு, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி—642002.

விலை : ரூ.350/-




 






          கடவுள் மறுப்பு நூல்கள் தமிழில் அதிகம் வெளிவருவதில்லை. தந்தை பெரியார் தமிழகத்தில் 90 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து கடவுள் மறுப்புக் கருத்துக்களை பிரச்சாரம் செய்திருந்தாலும், தமிழர்கள் அப்படியொன்றும் மதத்தின் பிடியிலிருந்து வெளிவந்திடவில்லை என்பதே காரணம். கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுவது போல்மதம் மயக்கும் அபின் மட்டுமல்ல, அதுவே குரலற்ற அபலைகளின் குரலாக, இதயமற்ற உலகின் இதயமாகி உள்ளது”. பல நூறாண்டு காலங்களாக நீடித்திருக்கும் மதத்தின் பிடி அவ்வளவு எளிதில் விலகிடுமா, என்ன? இருப்பினும் ஐரோப்பிய நாடுகளில் மதத்தின் பிடி தளர்ந்திருப்பதைக் காண்கிறோம்.  உலகெங்கிலும் உள்ள மக்கள் பகுத்தறிவு தரும் வெளிச்சத்தில் இறை நம்பிக்கையிலிருந்து விடுபட்டு அறிவொளி நோக்கி பயணிப்பார்கள் என்ற நம்பிக்கையை வளர்க்கிறதுகடவுள் என்னும் மாயைஎனும் இந்நூல்.


          தருமி எனும் புனைப் பெயரில் தன்னுடைய நூல்களை எழுதிவரும் பேரா.சாம் ஜார்ஜ் மதுரை தி அமெரிக்கன் கல்லூரியில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக விலங்கியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். ’மதங்களும் சில விவாதங்களும்எனும் இவரின் முந்தைய நூலின் தொடர்ச்சியாக இந்நூல் அமைந்துள்ளது. கடவுள் மறுப்பு பற்றிய பன்னிரெண்டு அரிய புத்தகங்களின் விரிவான விளக்கங்களை இந்நூலில் ஆசிரியர் தருமி வழங்கியுள்ளார். புத்தகத்தைப் படித்து முடித்ததும் பன்னிரெண்டு புத்தகங்களை வாசித்த பலன்களைப் பெறுகிறோம்


கடவுள் மறுப்பு குறித்து ஆழ்ந்த விவாதங்களை முன்வைக்கும் பத்து நூல்களுடன் இரண்டு நாவல்களும் சேர்ந்திருப்பது சுவாரசியமானது. கிறித்துவ சமுதாயத்தினிடையே மிகப் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்திய டான் பிரவுனின்டாவின்சி கோட் நாவல் மற்றும் அதே அளவுக்குப் பரபரப்பை ஏற்படுத்திய பிலிப் புல்மேன் எழுதியஜீசஸ் என்ற நல்லவரும், கிறிஸ்து என்ற போக்கிரியும்நாவல் ஆகியன பற்றிய விமர்சனங்களும் படிக்கக் கிடைக்கின்றன. பெட்ரண்ட் ரஸ்ஸலின்நான் ஏன் ஒரு கிறித்துவனல்ல”, இப்னு வராக் எழுதியுள்ளநான் ஏன் ஒரு இஸ்லாமியனல்ல”, காஞ்சா அய்லய்யா எழுதியநான் ஏன் இந்து அல்ல ஆகிய நூல்கள் பற்றிய விளக்கக் கட்டுரைகள் மூன்று மதத்தினரையும் நாத்திகம் நோக்கி நகர்ந்திட உந்துதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.


 கோவில்கள் மூலமாக இயங்கும் கிறித்துவ மதம் இப்போதும், எப்போதும் உலகின் பண்பாட்டு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவே இருந்து வந்துள்ளது என்று நான் துணிந்து சொல்வேன் என்கிறார் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல். கிறித்துவின் நல்லொழுக்கக் கோட்பாடுகளில் ஒன்று நரகத்தைப் பற்றிய பயமுறுத்தலாகும். மனிதத்தன்மையுள்ள எவரும் அப்படியொரு காலவரையற்ற தண்டனையை நம்பமுடியாது. இத்தகைய கொடூரமான நீண்ட தண்டனை என்பது கிறித்துவின் உயர் பண்புகளுக்கு எதிரானதாக இல்லையா என்று கேட்கிறார்


நான் ஏன் ஒரு இஸ்லாமியனல்லஎனும் நூலில் இப்னு வராக்உலகின் அனைத்து அரசுகளும் ஷாரியா சட்டத்தையும், பத்வா முறைகளையும், மத குருக்களின் ஆக்கிரமைப்பையும், மதம் தொடர்பான அரசு முறைகளையும் முற்றிலுமாக புறந்தள்ளவேண்டும், ஏனேனில் அவை எல்லாமே உலக மனித உரிமைகளுக்கு முற்றிலும் எதிரானவைஎன்கிறார். இன்று மேற்காசியாவில் இஸ்லாமிற்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் நடக்கும் போரினை சுதந்திரத்தை விரும்புவோருக்கும் அதனை எதிர்ப்போருக்கும் இடையிலான போர் என்று இப்னு வராக் கூறுவதை ஏற்கமுடியாது. இராக், சிரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் மீது தொடுக்கப்பட்டுள்ள போர்களுக்கெல்லாம் காரணம் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றிடவா? நிச்சயம் இல்லை என்பது உலகறிந்த உண்மை. இவைகளுக்குப் பின்னால் நிறைய புவியியல் அரசியல்களும், மேற்காசியாவின் எண்ணெய் வளமும் இருக்கின்றன என்பதையும் அனைவரும் அறிவர்


நான் ஏன் இந்துவல்லஎனும் கட்டுரையில் காஞ்சா அய்லய்யா, “மதங்களின் வரலாற்றிலேயே மிகக் கொடூரமான நிறுவனமாக இந்து மதம் இருந்து வந்துள்ளது. இந்தியாவில் உள்ள தலித் பகுஜன்களின் வேதனை மிக்க வாழ்வே இந்தக் கொடூரத் தன்மைக்குச் சான்றாக அமைகிறது.” என்கிறார். எல்லா இந்துக் கடவுள்களும் தலித் பகுஜன்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய கடவுள்களாக இருக்கிறார்கள் என்கிறார் அய்லய்யா. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் இலக்கியங்கள் எதுவும் இந்துக் கடவுள்களை விமர்சனம் செய்ததே இல்லை என்று அய்லய்யா சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாற்றுக் கலாச்சாரம் குறித்து கம்யூனிஸ்டுகள் பேசியபோதும் கூட அந்த மாற்றுக் கலாச்சாரம் இந்து வாழ்க்கை முறையிலிருந்து விலகியதில்லை என்று கம்யூனிஸ்டுகள் மீது அவர் சுமர்த்தும் குற்றச்சாட்டும் உண்மைக்குப் புறம்பானது.


          ”இந்து மதம் எங்கே போகிறது?’ கட்டுரையை காஞ்சி சங்கராச்சாரியர் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நம்பிக்கைக்குரிய அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியர் என்ற வைணவப் பெரியார் எழுதியுள்ளார். தமிழ் மறை, ஐந்தாவது வேதம், திராவிட வேதம் என்றெல்லாம் போற்றிப் புகழப்படும் தமிழ் ஆழ்வார்களின் நாலாயிரம் இறைப்பாடல்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம்என சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுவது ஏன் என்று கேட்கிறார். நாலாயிர அருளிச் செயல் என்று தெள்ளு தமிழில் அழைக்கலாமே என்கிறார். அதே போல் நாள்தோறும் நாம் கேட்கும் சமஸ்கிருத சுப்ரபாரத வடிவத்தை அது இயற்றப்பட்டதற்கு அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அற்புதமாக எழுதியிருக்கிறார் தொண்டரடிப் பொடியாழ்வார். “திருப்பள்ளியெழுச்சிஎன்று பெயரில்  பத்து முத்தான பாடல்கள் நாலாயிர அருளிச் செயல் புத்தகத்தில் உள்ளதைக் குறிப்பிடுகிறார். மத்தியில் பாஜக ஆட்சியில் சமஸ்கிருத திணிப்பு நடக்கும் இன்றைய சூழலில் தாத்தாச்சாரியாரின் இந்த நிலைபாடு மகிழ்ச்சி அளிக்கிறது. கடவுள் மறுப்பாளர் அல்லாத தாத்தாச்சாரியார் கட்டுரையை இத்தொகுப்பில் இணைத்தது ஏனோ?  


          ரிச்சர்டு டாக்கின்ஸ் 2006இல் எழுதியகடவுள் என்னும் மாயைநூல் பற்றிய கட்டுரை காத்திரமானதாகும். பரிணாமக் கொள்கையில் அவருக்கிருந்த ஈடுபாடு அவரை ஒரு முழு இறை மறுப்பாளாராக மாற்றியது. அறிவியலில் ஆழ்ந்த அறிவுடையவர்கள் எங்ஙனம் கடவுள் நம்பிக்கையோடு இருக்க முடியும் என்கிறார். அறிவியலில் வரும் பல அனுமானங்கள் போலவே, கடவுள் இருக்கிறார் என்பதையும் ஒரு அனுமானமாக வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம் என்பது அவர் கருத்து. தகப்பன் இல்லாமல் கன்னி மேரிக்கு ஒரு குழந்தை பிறந்தது; (இந்து மதக் கடவுள்கள் ஐயப்பன், பிள்ளையார், முருகன், கர்ணன் பிறந்த கதைகள் மாதிரி) செத்துப் போன லாசரை உயிர்ப்பிப்பது; செத்து மூன்று நாட்கள் கழித்து உயிரோடு வந்தது போன்ற கிறித்தவர்களின் நம்பிக்கை எவ்வளவு மூடத்தனமானது என்கிறார் டாக்கின்ஸ். அரசியல் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றிருக்கிறது. ஆனால் மதங்கள் பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்றுள்ளது என்கிறார். மனித நேயம் எப்போதும் கடவுள் மறுப்பாளர்களோடு சேர்ந்து செல்கிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.


விவிலியத்தில் ஜான், மார்க், லூக், மாத்யூ ஆகியோர் எழுதிய நான்கு நற்செய்திகள் உள்ளன. 1970இல் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டயூதாசின் நற்செய்திநூல் கிறித்தவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். எகிப்திய காப்டிக் மொழியில் எழுதப்பட்டுள்ள யூதாசின் நற்செய்தி பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களைக் கொண்டதாக இருக்கிறது. யூதாஸ் விவிலியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது போல் வில்லன் அல்ல. ஏசுவிற்கு மிகவும் பிடித்தமான சீடன் என்பதைக் காட்டுகிறது. ஏசுவின் வேண்டுகோளுக்கு இணங்கியே அவரைக் காட்டிக் கொடுத்தார் என்று குறிப்பிடுகிறது. டான் பிரவுனின் டாவின்சி கோடு நாவல் ஏசுவுக்கும், மேரி மகதலினுக்கும் திருமணம் நடந்து அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு என்று சொல்லி சர்ச்சையைக் கிளப்பியது போல் யூதாவின் நற்செய்தியும் ஏசுவின் வாழ்வு குறித்து இதுவரை நாம் அறிந்திராத செய்திகளைத் தருகிறது.


 “அன்னை தெரஸா, ஒளியே என்னிடம் வருவாய்- கொல்கத்தா புனிதையின் தனிப்பட்ட கடிதங்கள்” என்ற நூலில் ப்ரையான் கோலோடைசுக் அதிர்ச்சியளிக்கும் செய்திகளை வெளியிடுகிறார். ஏசு சிலுவையில் அறையப்பட்டு வேதனைப்படும் போது பிதாவினால் தான் கைவிடப்பட்டதாக நினைத்து வேதனையோடும், தவிப்போடும், “என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்? என்று கத்தும்போது இருந்த அதே உணர்வை அன்னை தெரஸாவும் தன் வாழ்நாளில் உணர்ந்திருக்கிறார் என்கிறார். அன்னை தெரஸா தன்னுடைய ஆன்மீக வழிகாட்டிகளுக்கு எழுதியுள்ள கடிதங்களில் கிறிஸ்துவிலும், மதத்திலும்,  தனக்கு ஏற்பட்ட ஐயங்களை பகிர்ந்துள்ளார். இக்கடிதங்கள் மூலம் அன்னை தெரஸாவின் ஆன்மீக வாழ்வில் அவர் மனதுக்குள் நடந்த நீண்ட போராட்டத்தைப் பற்றி அறிகிறோம். ஆனால் தன் மனதுக்குள் இருந்த தனிமையும், ஆன்மாவை அழுத்திய கருமையும் அவரது இதயத்தில் இருந்த சமூக ஆர்வத்தைத் தொடாமால் பார்த்துக் கொண்டிருக்கிறார். வெளியே கொளுந்துவிட்டு எரிந்த ஏழைகளின் மீதான அன்பு; உள்ளே தனக்குள்  நடத்திக் கொண்ட ஆன்மீக தவிப்பு; -— இந்த இரண்டுக்கும் நடுவில் நடந்த வாழ்க்கை அவரை அபூர்வ ஆன்மீகவாதியாகக் காண்பிக்கிறது.


அன்னை தெரஸா மேல் பலரும் வைத்திருக்கும் அன்பிற்கான காரணம் அவர் ஒரு பெரிய கிறித்துவர் என்பதால் அல்ல. ஆதரவற்றவர்களின் அமைதியான இறுதிக் காலத்திற்கு வழி கோலியவர் என்பதே காரணம். எனவே ப்ரையன் கோலோடைசுக்கின் இப்பதிவு அன்னை தெரஸாவின் மீது நாம் வைத்திருக்கும் அன்பையும், மரியாதையையும் இன்னும் அதிகரிக்கவே செய்கிறது. இந்தக் காரணத்திற்காகவே கிறித்துவ திருச்சபையும் அன்னை தெரஸாவின் கடிதங்களை அவர் கேட்டுக்கொண்டது போல் எரித்து விடாமல் அவைகளை அச்சிட்டு வெளியிட்டிருக்க வேண்டும்.


தமிழக வாசகர்களுக்கென எழுதப்பட்டுள்ள நூலில் பகுத்தறிவு பகலவன் என்றழைக்கப்படும் தந்தை பெரியாரின் இறை மறுப்புக் கட்டுரை ஒன்றையும் இணைத்திருக்கலாம். காஞ்சா அய்லய்யா இந்து மதத்தை வெறுக்கும் அளவிற்கு இந்திய கம்யூனிஸ்டுகளையும் வெறுப்பது விந்தையே! தேர்ந்தெடுத்த பனிரெண்டு கட்டுரைகளை விளக்கிச் செல்வதைத் தாண்டி ஆசிரியர் தருமி தன்னுடைய கருத்துக்களை அதிகம் வெளியிடவில்லை என்பது ஒரு குறையே.   



                  
                           ------பேரா.பெ.விஜயகுமார்.
                 



  ---------------------------------------------------------                .