சுல்தானுக்கு மட்டும் ... அல்ல
சுல்தான் அவர்களின் "பகுத்தறிவு தீர்ப்பளிக்கட்டும்" என்ற பதிவொன்றின்
பின்னூட்டப் பகுதியில் நான் கேட்ட சில கேள்விகளுக்காக மூன்று தனிப் பதிவுகள் மூலம் மிகவும் பொறுமையாகவும், விளக்கமாகவும், தன்மையாகவும் பதிலளித்துள்ளார். காலம் மிகவும் தாமதித்து அவரது பதில்களின் மேல் எழும் என் கேள்விகளை இப்பதிவில் இட்டுள்ளேன். அவர் ஏற்கென்வே பதிலாக எழுதிய மூன்று பதிவுகளின் தொடுப்பு இவை:
1
.தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் (பகுதி-1) 2.
தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் (பகுதி-2) 3.
தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் கடைசி பகுதி முதல் கேள்வி://வன்முறைக்கும் துவேசத்துக்கும் இங்கே இடமேயில்லை. இது உங்கள் (சுல்தான்) கருத்து.
எனது கேள்வி:
ஹ்ல்ரத் அலீ (ரலி): "உலகினில் ஏற்படுகின்ற குழப்பங்களுக்குத் தீர்வு காண அல்லாஹ்வின் வேதந்தான் சிறந்த வழி. ...(தன் அறிவைக்கொண்டு) பெருமையடிக்கிறவன் இதனை (அமல் படுத்தாமல்) விட்டு விட்டால், அல்லாஹ் அவனைத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவான்."
உங்களது வார்த்தைகளுக்கும், இந்த மேற்கோளுக்கும் உள்ள வித்தியாசம் ஏன்?//
சுல்தானின் பதில்: - //முஸ்லீம்கள் தங்களிடையே ஏற்படும் எல்லா பிணக்குகளுக்கும் பூசல்களுக்கும் தீர்வை, அடிப்படையான குர்ஆனைக் கொண்டே பெறச் சொல்கின்றனர். அவ்வாறு தீர்ப்பளிக்காவிட்டால் மக்கள் சிதறுண்டு விடுவார்கள். அதனால் அவ்வாறு தீர்ப்பளிக்காதவர்கள் இறப்பிற்கு பின்னுள்ள மறுமை வாழ்வில் இறைவனால் தண்டிக்கப்படுவார்கள் (நொறுக்கப்படுவார்கள்) என்று எச்சரிக்கிறார்கள்.//
ஏற்கெனவே சொன்னது போலவே இது இறைவன் - மனிதர்கள் நடுவில் உள்ள வன்முறைதானே? அவர்கள் அல்லாவை நம்புபவர்களோ, இல்லை, மற்றையோரோ யாராயிருப்பினும், அது இந்த பிறவிக்குரியதாயினும் இல்லை மறுமை வாழ்விலாயினும் இந்த வசனத்தில் உள்ள வன்முறையைப் பற்றிதான் நான் பேசினேன். அதுவும் நீங்கள் சொல்லிய "வன்முறைக்கும் துவேசத்துக்கும் இங்கே இடமேயில்லை" என்ற கூற்றுக்கு முழுமையாக எதிராக இருப்பது பற்றித்தான் என் கேள்வி..
இரண்டாம் கேள்வி: ////"அது அல்லாத (வேறு கிரந்தத்)தில் நேர்வழியைத் தேடுபவரை வழிதவறச் செய்து விடுவான்." இஸ்லாத்தில் எவ்வித நிர்பந்தமுமில்லை என்பதும் இதன் அடிப்படைகளில் ஒன்று.//
இதற்குரிய தங்கள் விளக்கம் எனக்குப் பொருத்தமானதாய் தோன்றவில்லை. "பல கிரந்தங்களில் நேர்வழியைத் தேடும் ஒருவனால் வழி தவறத்தான் முடியுமே ஒழிய..."..சரி...மனிதன் தேடும்போது நீங்கள் சொல்வது போலவே வழிதவறுவான என்று சொன்னால் பிரிந்துகொள்ள முடியும்; ஆனால் கடவுளே "...(வேறு கிரந்தத்)தில் நேர்வழியைத் தேடுபவரை வழிதவறச் செய்து விடுவான்" என்பது (god himself would MISLEAD some one who tries to find his own way to god) சரியாகவா இருக்கிறது.
இதற்குப் பதிலாகத்தான் "my Q is based on the VIOLENCE in the words. whether it is aimed at fidels or infidels it is a very violent statement - a divine violence towards human beings.
a god need and should not bother whether a man reaches him through path A or B ... man should reach him, that is all what it should be. " என்று பின்னூட்டத்தில் கேட்டிருந்தேன்.
மூன்றாம் கேள்வி:3. //"மனிதனுக்கு மேலாக சர்வ வல்லமை பொருந்திய ஒரு சக்தி உண்டென்று பகுத்தறிவு சொல்கிறது"
இந்தக் கூற்று எனக்குத் தவறாகத்தெரிகிறதே. பொதுவாக பகுத்தறிவு சொல்கின்றது என்று எதை ஒன்றையும் குறிப்பிடுவது தவறாக ஆகிவிடும் என்று நினைக்கிறேன். ஆளாளுக்கு மாறுபடக்கூடிய விஷயமாக பார்க்கிறேன்.//
மிக அழகாக பல உதாரணங்கள் கொடுத்துள்ளீர்கள். அண்ட சராசரத்தையும், நம் உடல் உறுப்புகளின் தொழில் நேர்த்தி பற்றியும் எழுதியுள்ளீர்கள். இத்தனை உதாரணங்கள் கூடத் தேவையில்லை. ஒரு சின்ன பூவை எடுத்து அதன் அழகை, மணத்தை, மென்மையை, அமைப்பின் நேர்த்தியைப் பார்த்தாலே போதும்; நீங்கள் சொன்ன பிரமிப்பு ஏற்பட்டுவிடும்.
இத்தகைய பிரமிப்புகளைப் பார்க்கும் கடவுள் நம்பிக்கையளர் உடனே, ஆஹா! என்னே கடவுளின் "திறமை" என்று சொல்வது இயல்பே! ஆனால் என்னைப் போன்ற கடவுள் மறுப்பாளனுக்கு நிறைய வேறு கேள்விகள் பதில்கள். பதில்கள் இல்லாவிட்டாலும் கேள்விகள் எங்களுக்கு நிறையவே உண்டு. நான் அடிக்கடி சொல்வது - இத்தகையக் பிரமிப்புகளால் எழும் கேள்விகளுக்கு அடுத்து நீங்களும் உங்களைப் போன்ற நம்பிக்கையாளர்களும் ஒரு முற்றுப் புள்ளியோ, அல்லது ஒரு ஆச்சரியக் குறியோ இடுவீர்கள்; என்னைப் போன்றோர் ஒரு கேள்விக் குறி இடுகிறோம்.
சான்றாக, "பத்து நிறங்களில் பல கோலி குண்டுகளை எடுத்து, ஒவ்வொரு நிறத்துக்கும் ஒரு எண்ணாக 1 முதல் 10 வரை இலக்கமிட்டு, ஒரு பையினுள் போட்டு, கண்ணை மூடிக்கொண்டு, ஒழுங்கான வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக 1 முதல் 10 வரை எடுப்பதற்கு உண்டான வாய்ப்பு, நிகழ்தகவு (Probability) படி, சுமார் இரண்டரை கோடி தடவைகளில் ஒன்று என்று சொல்கிறார்கள்" என்று கூறியுள்ளீர்கள்.
இது பரிணாமக் கொள்கைக்கு எதிராக, D.N.A.- வில் ஏற்படும் சிறு சிறு வேதியல் மாற்றங்களே நிறமிகளின் மாற்றங்களுக்குக்( mutations) காரணிகளாக இருந்து, பரிணாம வளர்ச்சி நடந்தது என்பதற்கு எதிராகச் சொல்லும் விவாதம் என்பது உங்களுக்குத் தெரிந்தேயிருக்கும். இல்லையா? நீங்கள் சொல்வதுபோல நடக்க முடியாது அல்லது இரண்டரை கோடி தடவைகளில் நடக்கக் கூடும் என்று சொல்லும் அந்த விஷயம், சில ஆயிரம் தடவைகளிலேயே எப்படி நடக்க முடியும்; நடந்திருக்க வேண்டும் என்று அறிவியல் பூர்வமாகவும், அறிவு பூர்வமாகவும் சிம்ஸன் என்பவர் மிக அழகாக Simpson alphabet analogy என்ற விளக்கத்தைக் கொடுத்துள்ளார். அதை இங்கு நான் விளக்கிக் கொண்டிருப்பதை விடவும் எந்த நல்ல பரிணாமப் புத்தகத்திலும் கொடுக்கப் பட்டிருக்கக்கூடிய இதை வாசித்துத் தெரிந்து கொள்வது நலமாயிருக்கும்.
பிரமிப்புகளோடு நில்லாது அதை மேலும் மேலும் கேள்விக்குறியதாக்குவதே அறிவியலின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணம்.
நாலாவது கேள்வி:4) "//"அவன் படைத்த மனிதர்களாகிய நமக்குள்ளேயே பிறப்பாலோ, செல்வத்தாலோ அல்லது தொழிலாலோ உயர்வும் தாழ்வும் கற்பிக்காதவனாக இறைவன் வேண்டும்."
இக்கூற்றும் சரியாக எனக்குத் தோன்றவில்லை. பார்க்குமிடமெல்லாம் வேற்றுமைகள் நிறைந்த உலகமாகத்தானே இருக்கிறது. படைப்பினில் எல்லோரும் ஒரே மாதிரியாகவா இருக்கிறோம்? இல்லையே!//"
கடவுள் நம்மையெல்லாம் பேதமின்றி எந்த வித்தியாசமில்லாமல்தான் பார்ப்பார் என்று நீங்கள் கூறுவதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் நான் கேட்டது படைத்தவன் பல வேற்றுமைகளோடுதானே நம்மைப் படைத்திருக்கிறான் என்பதே.
ஐந்தாம் கேள்வி: 5)//"பூமியும் வானமும் அவனது ஒரே வார்த்தைக்குள் ஆகும்"
பின் எதற்கு 6 நாட்கள் படைப்பிற்கு - அதுவும் ஒவ்வொன்றாய்? பின் கடவுள் ரெஸ்ட் எடுத்ததாகவும் உள்ளதே!//
இதற்கு உங்கள் பதில்: ஏன் அவ்வாறு செய்தான் என்பது அவனுக்கே வெளிச்சம்...
இதைத்தான் என் பதிவில் 'எல்லாம் அவன் திருவிளையாடல்.." என்பதுபோன்ற ஒரு பதிலைத்தவிர வேறு ஏதாவது இருந்தால் கூறுங்கள் என்று கூறியுள்ளேன். பலப்பல அறிவியல் உண்மைகளை எல்லாம் கடவுள் அன்றே குரானிலோ, பைபிளிலோ, வேதங்களிலோ தந்துள்ளான் என்று அடிக்கடி கூறும் நம்பிக்கையாளர்கள் இது போன்ற கேள்விகளுக்குச் சொல்லும் இப்பதில் எனக்கு ஒப்பவில்லை. இன்றைக்குக் கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளை எங்கள் வேதத்தில் / பைபிளில் / குரானில் ஏற்கெனவே அன்றே சொல்லப்பட்டு விட்டன என்று ஒரு பக்கம் சொல்லுகிறீர்கள். அப்படியெல்லாம் சொல்லப்பட்டிருந்தால் இன்னும் முழுமையாகவே "எல்லாமே" சொல்லப் பட்டிருக்கலாமே என்றுதான் எனக்குக் கேள்வி எழுகிறது. இன்றைக்கு இன்னும் விஞ்ஞானிகள் திணறிக்கொண்டிருக்கும் alternative energy, semiconductor, cloning, stem cell therapy, gene therapy - என்பது போன்ற விஷயங்களை பேசாமல் முழுவதுமாகக் கொடுத்திருக்க வேண்டியதுதானே என்று தான் தோன்றுகிறது. லேசு பாசாக ஏதாவது ஒரு விஷயம் இன்றைய விஞ்ஞானத்துக்குத் தொடர்புள்ளதாக வேதப் புத்தகங்களில் இருந்துவிட்டால் அறைகூவும் எல்லா மத நம்பிக்கையாளர்களுமே, இதுபோல் uneasy questions என்று வந்துவிட்டால் இறைவனின் 'திருவிளையாடல்' இது என்று கூறுவது என்னைப் பொறுத்தவரை ஒரு escapism தான்.
மேற்கண்ட கருத்து தொடர்பான என் விவாதங்களை
எனது 59-ம் பதிவில் கிறித்துவத்திற்கு எதிராக நான் எழுப்பியுள்ள கேள்விகளில் ஐந்தாவது கேள்வியாக இதை வைத்து உட்கேள்விகளாகவும் சிலவற்றை வைத்துள்ளேன். அதில் கூறியிருப்பது: "இவை எல்லாமே கடவுளின் "திருவிளையாடல்" என்று மட்டும் கூறிவிடக்கூடாது." அந்தக் கேள்விகளை அங்கே வந்து கொஞ்சம் வாசித்துக் கொள்ளுங்களேன்.
ஆறாம் கேள்வி:6)(அ)//"தாடி வைக்க வேண்டுமென்று இறை கட்டளை உள்ளதால்..."
இதை
யும் கூடவா கட்டளையாகக் கடவுள் கொடுப்பார்// ஒரு உம்மைத்தொகையைச் சேர்த்துள்ளேன் அழுத்தத்திற்காக ..
இதற்கு நீங்கள் கொடுக்கும் காரணம் எனக்குக் கொஞ்சமும் பொருத்தமாகத் தெரியவில்லை. அப்படி ஆணுக்கும் பெண்ணுக்கும் வேற்றுமை காண்பிக்கக் கடவுள் நினைத்திருந்தால் அதை அவரே செய்திருக்க வேண்டியதுதானே - நீங்கள் சொல்லும் விலங்கினங்களில் இருப்பது போலவே !
அதோடு சிறுநீர் கழிப்பதைப் பற்றிக்கூட நபிகள் மூலமாகக் கடவுள் நிபந்தனைகள் விதித்துள்ளார் என்பதை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். உட்கார்ந்துதான் சிறு நீர் கழிக்க வேண்டும் என்பதுவும், ஒரே ஒரு முறை நபிகள் நின்று கொண்டே சிறுநீர் கழித்து ஒரு exceptional clause ஏற்படுத்தியதையும் கேள்விப்பட்டதுண்டு. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: அன்றைய அராபியர் அணிந்திருந்த லூசான ஆடை, அங்கே திறந்த வெளியில் அடிக்கக் கூடிய வலுவான காற்று - இவையெல்லாமே உட்கார்ந்து சிறுநீர் கழிப்பதை புத்திசாலித்தனமான ஒரு விஷயமாக ஆக்கியிருக்கும். ஆனால் இன்று இருக்கும் public water closet-களில் நின்றுகொண்டே சிறுநீர் கழிக்க அமைக்கப் பட்டிருக்கும் கழிப்பறைகளில், நாம் அணியும் இறுக்கமான உள்ளாடையும், அதற்கு மேலணியும் ஜீன்ஸும் நம்மை உட்கார அனுமதிக்குமா என்று யோசியுங்கள். இப்படி அந்தக் காலத்துக்குப் பொருந்திய அப்போதைய நடைமுறைகளைக் காலாகாலத்துக்கும் பொருத்தமானதாகவும் எங்கள் புத்தகங்களில் சொல்லப்பட்டு விட்டதால் அதைக் கடைப்பிடித்தே ஆகவேண்டும் என்பதும் முறையா என்ற கேள்வி எனக்கு. அதோடு ஏதோ ஒரு காலகட்டத்துக்கும், ஒரு நாட்டின் அப்போதைய பழக்க வழக்கங்களுக்கும் சரியாக இருந்த விஷயங்களை பொதுவாக எல்லா காலத்துக்கும் எல்லோருக்கும் ஆக்குவதாலுமே
no religion is universal என்ற விவாதத்தை
என் பதிவு 68; பத்தி: 9-ல் வைத்துள்ளேன். இதை ஒட்டியே //...
அன்று நபி சொன்னது எல்லாருக்கும் எல்லா காலத்துக்கும் பொதுவான விஷயங்களாக இல்லை, இருக்கவும் முடியாது என்பது தெளிவாகிறதல்லவா? // - என்று
என் பதிவு 67:பத்திகள் 16 & 17 -ல் சொன்னேன். அதையும் கொஞ்சம் பார்த்து விடுங்கள். அதோடு இக்காரணம் பற்றியே அன்றைக்குப் பொருந்தி வந்திருக்கக் கூடிய பர்தா, தாடி, சிறுநீர் கழிக்கும் முறை, பலதாரச் சட்டம், ஹஜ் யாத்திரை, அடிமை முறை, அடிமைகளை நடத்தவேண்டிய முறை என்று நீண்ட பட்டியல் தரக்கூடும். இவைகள் இன்றும் என்றும் எப்போதைக்கும், எல்லோருக்கும் பொருந்திய ஒன்று என்பதில் எனக்கு ஒப்பில்லை.
ஏழாம் கேள்வி (அ): 7அ). "புஷ்ஷின் கருத்திற்கும், .. இஸ்லாமியக் கருத்திற்கும் .. இரண்டுமே கருத்துக்கள் என்ற வரையில் ஒன்றுதானே? ஆனால் ஒன்றை தவறென்று கூறி, இன்னொன்றை எப்படி புனித வார்த்தையாகக் கொள்ளுவது?//
சுல்தான், நல்ல விவாதம் கொடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். ஆனாலும் நீங்கள் கவனிக்கத் தவறிய ஒன்று: நீங்கள் கொடுத்த நான்கு விவாதங்களில் ஆசிரியர், திருடன் இரண்டை மட்டும் கொள்வோமே. ஆசிரியர் சொல்வதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது - எல்லோருமே - முழு மனித வர்க்கமே - நீங்கள் சொல்லியுள்ளபடியே ஆசிரியரது வார்த்தையை ஒத்துக் கொள்வோம்; அதே போல திருடனனின் கருத்தை எல்லோரும் ஒதுக்கி விடுவோம் தவறென்று. no second opinions on these two. no cotroversies in them. ஆனால் இஸ்லாமியக் கருத்து அந்த மதத்தைச் சார்ந்தவர்களுக்குச் சரியாகப் படுவது போல் எல்லோருக்குமா இருக்கும்? இல்லையே! "இஸ்லாத்தை நிராகரித்தவர்களுக்கு தண்டனையாக நரகமும் வழங்கப்படும் என்று எவ்வித ஒளிவு, மறைவு இல்லாமல், வெளிப்படையாக இஸ்லாம் கூறுகிறது." - இது எப்படி மற்றைய மதத்தவருக்கு சரியான கருத்தாக இருக்கும்? இது உங்கள் நம்பிக்கை; ஒரு கிறித்துவனுக்கு " நானே வழியும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னைத் தவிர உனக்கு வேறு கடவுள் இல்லை" என்பது சரியாக இருக்காதா? என் வழிக்கு வா என்பதுகூட பரவாயில்லை; வராவிட்டால் ... (நொறுக்க) தண்டிக்கப் படுவாய் என்பது..? இந்த இரு வேறுபாடுகளால்தான் புஷ்ஷின் கூற்றையும், குரானின் வார்த்தைகளையும் ஒத்து நோக்குகிறேன்; இரண்டுமே தவறென்கிறேன்.
ஏழாம் கேள்வி (ஆ): //மனிதனை விடவும் பலகோடி மடங்கு ரோஷமானவன். "அல்லாஹ்//
- Man created gods in his own image என்றும், If triangles have gods, they will be triangles என்றும் வாசித்த இரு மேற்கோள்கள்தான் நினைவுக்கு வருகின்றன. மனிதனுக்குக் கடவுளை இன்னொரு (பெரீய்ய்ய) மனிதனாகவேதான் பார்க்க முடியும் என்பதே இந்த மேற்கோள்களின் பொருள். நீங்கள் சொல்லும் 'ரோஷக்காரன்" என்பது அதைத்தான் நினைவு படுத்துகிறது!
// "அல்லாஹ் எதை வேண்டுமானாலும் தான் நாடினால் மன்னிப்பான் ஆனால் படைத்தவனாகிய தன்னை விடுத்து, வேறெதையும் இறைவனாக எடுத்துக் கொள்வதை மட்டும் மன்னிப்பதேயில்லை" என்று இஸ்லாம் கூறுகிறது.// அப்படிக் கூறும் "ஒருவன்" இறைவனாக இருக்க மாட்டான்; இருக்க முடியாது. அப்படித்தான் இருப்பானென்றால் அவன் கடவுளாக இருக்க முடியாது என்பது என் கருத்து. (இப்படி சொல்வது ஒவ்வொரு நம்பிக்கையாளனுக்கும் வருத்தத்தைத் தரும் என்பது தெரிந்தும் என் கருத்தைக் கூற வேண்டியதுள்ளது...) அதோடு இந்தக் கூற்றில் உள்ள வன்மத்துக்கு, வன்முறைக்கு 'ரோஷம்' என்ற excuse ஒரு நொண்டிச் சாக்கு என்பதாகவே தோன்றுகிறது.
மிகவும் பொறுமையாக, விளக்கமாக அதைவிடவும் எதிர்க் கேள்விகளால் கோபம் கொள்ளாமல் தன்மையாகப் பதில் சொன்ன சுல்தான் அவர்களுக்கு மீண்டும் என் நன்றியும் பாராட்டுக்களும். எதிர்க் கருத்துக்கள் வைப்பதாலேயே கேள்வி கேட்பவரை விரோதியாகப் பார்க்காததற்கு நன்றி.
உங்களுக்கு விருப்பமானால் இன்னும் தொடர்வோம்.