*
அதீதத்தில், தருமிப் பக்கம் - 23ம் கட்டுரையின் மீள் பதிவு
*
முதல் வகுப்பில் மாணிக்கம் சாரிடம் சேர்ந்த அந்த முதல் நாள் நினைவு மட்டும் நீங்காமல் மனதில் நின்று விட்டது. அதன் பின் நடந்தவைகள் அதிகம் நினைவில் இல்லை. மூன்றாம் வகுப்பில் கரும்பலகைக்குக் கருப்பு வண்ணம் ஏற்ற கண்டங்கத்திரி வேரை அரைத்து, சட்டையைக் கறையாக்கி வீட்டில் அடி வாங்கியது…. மதுரையில் நடந்த குத்துச் சண்டை வீரர்கள் எங்கள் வளாகத்திலிருந்த புனித மரியன்னைக் கோவிலுக்கு வந்த போது கோவில் ஜன்னல்கள் வழியே ஏறி எட்டிப்பார்த்தது … டென்னிஸ் பந்தை வைத்து ஆடிய கால்பந்து விளையாட்டுகள் …. என் முதல் நட்பு முறிந்து போனது … ஐந்தாம் வகுப்பில் ராஜாவுடன் ஏற்பட்ட தமிழ்ப் போட்டி .... (எம் தமிழ்ப் பெருமை தெரிய இதைக் கட்டாயம் வாசித்துப் பாருங்கள்.) …. இவைகள் மட்டும் தான் நினைவில் இருக்கின்றன.
புனித மரியன்னை ஆரம்பப்பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிக்க்கு வந்தாகி விட்டது. விட்ட குறை .. தொட்ட குறை என்பது போல் இங்கேயும் I Form ‘A’ Section-ல் சேர்ந்தாச்சு. எங்கள் பள்ளியில் எப்போதும் நல்லா படிக்கிற பசங்களை ‘A’ Section-ல் தான் சேர்ப்பார்கள். நான் அங்கு வாத்தியார் பையன் என்பதாலோ என்னவோ ஒன்றாம் வகுப்பிலிருந்து VI Form வரை ‘A’ Section தான். மற்ற படி என் படிப்பிற்காக இருந்திருக்காது என்று தான் நினைக்கிறேன். இந்த ‘Form’ என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. அந்தக் காலத்தில் S.S..L.C. இருந்த போது 1 – 5 வகுப்பு வரை Standard; 6லிருந்து 11 வரை Form என்று அழைக்கும் வழக்கம் இருந்தது.
III Form வரை நடந்தவைகளில் இரண்டு விஷயங்கள் மனதில் வாழ்நாள் முழுமைக்கும் ஆழமாக நிலைத்து நின்று விட்டன. ஒன்று – ஆங்கில இலக்கணம் பயின்றது. அது பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.
இரண்டாவது – எனக்கு ஏற்பட்ட வாசிப்புப் பழக்கம். பள்ளி நூலகத்தில் இருந்த ஆசிரியர் அப்பாவுக்கு நண்பர். ஆனாலும் அப்பாவுக்குத் தெரியாமல் எனக்கு நிறைய தொடர்ந்து பல கதைப் புத்தகங்களைத் தருவார். அவரின் பெயர் ராயர். எங்கள் பள்ளியில் புத்தகம் எடுக்க நாங்கள் விரும்பும் நாலைந்து புத்தகங்களின் தலைப்புகளைத் தரவேண்டும். அதில் உள்ள புத்தகங்களில் இரு புத்தகங்களை நூலகர் தருவார். ஆனால் எனக்கு இந்த வழக்கம் கிடையாது. பள்ளி முடிந்தவுடன் போகாமல் சிறிது நேரம் கழித்து போக வேண்டும். எனக்குப் பிடித்தப் புத்தகங்களை நான் எடுத்துக் கொள்ளலாம்.
அப்பா ஒரு ஆசிரியர் என்றாலும் ஏனோ பாடப்புத்தகங்கள் தவிர வேறு புத்தகங்களைப் படிக்க என்னை அனுமதிப்பதில்லை. அது இன்று வரை எனக்கு ஒரு பெரும் புதிர் தான். ராயர் சாரிட,மும் புத்தகங்கள் கொடுக்க வேண்டாமென்று சொல்லி விட்டார். ஆனால் என்னவோ நான் தொடர்ந்து கேட்டதும் அவர் வழக்கம் போல் கதைப்புத்தகங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார். நூலகத்தின் அலமாரிகளில் அங்கிருந்த சிறு ஏணியில் ஏறி பிடித்த புத்தகம் எடுத்து வருவது இன்னும் நன்கு நினைவில் இருக்கிறது.
முதலில் வாசித்த புத்தகங்கள் தமிழ்வாணனின் சங்கர்லால் கதைகள் தான். நூலகத்தில் எடுக்கும் புத்தகங்கள் புத்தகப் பை வழியாக வீட்டுக்குப் போய்விடும். புத்தகம் வைக்கும் அலமாரிக்குப் பக்கத்தில் வீட்டில் எப்போதும் சில அரிசி மூட்டைகள் இருக்கும். அதில் ஏதாவது ஒரு இடைவெளியைத் தேர்ந்தெடுத்து வைத்திருப்பேன். பையிலிருந்த புத்தகம் சரியான நேரத்தில் சாக்குமூடைகளுக்குள் போய்விடும்.
பொதுவாக வீட்டில் வைத்து புத்தகம் படிக்க நல்ல தருணம் கிடைக்காது. ஆனால் மண்டைக்குள் முடித்து வைத்த கதையின் கடைசிப் பகுதி சிறகடிக்கும். அடுத்து என்ன என்பது பெரும் முடிச்சாக மனதுக்குள் நோகடிக்கும். அம்மா கடைக்குப் போகச் சொல்லும் நேரம் தான் சரியான வாய்ப்பாக இருக்கும். கடைக்குப் போகச் சொன்னதும் உடனே ஓடிப்போய் சட்டை எடுத்து மாட்டிக் கொள்வேன். அதே தருணத்தில் திருட்டுத் தனமாக சாக்குக்குள் இருக்கும் புத்தகம் சட்டைக்கும், கால்சட்டைக்கும் இடையில் போய் விடும். கால்சட்டைக்குள் திணித்து இடுப்பில் புத்தகத்திற்கு இருக்கை கிடைக்கும்.
வீட்டிலிருந்து சில வீடுகள் தாண்டியதும் ஒரு சந்து வழியாக அடுத்த சாலைக்குச் சென்றால் முதல் கடையாக அருணாசலம் அண்ணாச்சி கடை இருக்கும். அவர் கடையின் முன்னால் ஒரு சின்ன மரம் வளர்ந்து கொண்டிருந்தது. அண்ணாச்சி கடையில் எப்போதும் சில ஆட்களாவது இருப்பார்கள். நான் எங்கள் ரோட்டிலிருந்துஅந்த சந்து முனைக்கு வந்ததுமே புத்தகம் கைக்கு வந்து விடும். சந்தின் ஓரத்தில் நடந்து கொண்டே வாசித்துக் கொண்டு வருவேன்.அந்தச் சின்ன மரத்தடியில் கதை தொடரும். கூட்டம் குறைந்த பிறகு வாங்கலாம் என்று வாசித்துக் கொண்டிருப்பேன். ஆனால் அண்ணாச்சிக்கு அப்பாவிடம் மரியாதை. ஆகவே அவர் கொஞ்சம் நேரம் என்னை வாசிக்க விட்டு விட்டு அதன் பின் என்னப்பா வேணும் என்று கேட்பார். சொன்ன பட்டியலைப் போட்டுக் கொடுப்பார். அவருக்கும் அப்பாவின் கெடுபிடி தெரியும். ஆனாலும் கொஞ்சம் டைம் கொடுத்த பிறகே என் பக்கம் வருவார். இப்போதும் எப்போதெல்லாம் அண்ணாச்சி கடைப் பக்கம் வண்டியில் செல்லும் போது கட்டாயமாக அந்தக் கடை இருந்த இடத்தைப் பார்த்து விட்டுச் செல்வேன். இப்போது அந்தக் கடை அங்கே இல்லை. அந்த மரமும் இல்லை. நினைவுகள் மட்டும் இன்னும் அங்கே உயிரோடு நிழலாடுகின்றன.
இப்படி ஆரம்பித்த ‘திருட்டுப் பழக்கம்’ ரொம்ப காலம் தொடர்ந்தது. எந்த ஆசிரியர் பிடிக்கிறதோ அவரின் எல்லா புத்தகங்களையும் வாசிக்கும் பழக்கமும் தொடர்ந்தது. வாசிப்பு தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிகளிலும் தொடர்ந்தது. கல்லூரி ஆசிரியர்களில் இரு மொழியிலும் வாசிக்கும் ஆசிரியர்கள் மிகக் குறைவே. அவர்களில் ஒருவனாக பல காலம் இருந்து வந்தேன்.
என்ன ஆச்சோ... எப்படி ஆச்சோ ... வாசிப்பு இப்போது நிறைய குறைந்து போனது. ஆனாலும் ஒரு வசதி .... பதிவுகளில் மதம் பற்றி எழுத ஆரம்பித்ததால் நிறைய நூல்களை வாசிக்கும் கட்டாயம் வந்தது(!!!). மற்ற வாசிப்புகள் மிகக் குறைந்த அளவில் போகிறது ..............
*