Monday, January 21, 2008

249. இடப் பங்கீட்டால் ப்ராமணர்களுக்கு நிகழும் கொடுமை.

இடப் பங்கீடு எப்படியெல்லாம் கொச்சைப் படுத்தப் படுகிறது; தங்கள் வசதிக்கேற்ப எப்படி அது உயர்த்திக் கொண்டோர்களாலும், அவர்களுக்குச் சாதகமாக செயல்படும் ஊடகங்களாலும் திரிக்கப் பட்டு, உண்மை நிலவரங்கள் மறைக்கப் பட்டு மறக்கப்பட வைக்கப் படுகின்றன என்பதைப் பற்றிய விரிவான ஒரு விளக்கம் (கட்டுரை ஆசிரியர்: ஸ்ரீநாத் P.சாய்நாத்) இந்து தினசரியில் (18.01.'08) நடுப்பக்கக் கட்டுரையில் தரப் பட்டுள்ளது. காண்க:
DISCRIMINATION FOR DUMMIES: V. 2008 by P. SAINATH



இக்கட்டுரை ஆசிரியர் THE WALL STREET JOURNAL-ல் இடப்பங்கீட்டால் எப்படி ஒரு உயர்சாதிக்காரர் பலியாக்கப்பட்டார் (sic) என்ற ஒரு "பரிதாபக் கதையை" - REVERSAL OF FORTUNES ISOLATES INDIA'S BRAHMINS," (Dec, 29,2007)என்ற கட்டுரையில் எழுதியிருப்பதை மேற்கோள் காட்டி இக்கட்டுரையை எழுதியுள்ளார்.

எப்படி நம் ஊடகங்கள் நிலைமையை ஒருபக்க சார்பாகவே பார்த்து, இடப்பங்கீடு ஆதிக்க சாதியினரைப் பாதிப்பதாக முன்னிறுத்தியே கருத்தாக்கம் செய்து வருகின்றன என்பதை அங்கத நடையில் அளித்துள்ளார்.
அந்த ஆங்கிலக் கட்டுரையில் எனக்குப் பிடித்த சில வரிகளை என்னால் முடிந்தவரை தமிழாக்கி இங்கே தந்துள்ளேன்.

* * * * *


... இன்று சாதி வேறுபாடுகள் நம் நாட்டைப் பழி வாங்கிக் கொண்டிருக்கின்றன - பலி கொடுக்கப்படுவது உயர்சாதி மக்களே(sic). இதுவரை மேல்சாதியினர் பிறவியிலேயே அமைந்த தங்களின் திறமைகளால் (read genes) கோலோச்சிக் கொண்டிருந்த உயர்ந்த இடங்களில் இன்று மற்றைய (கீழ்) சாதியினர் இடம்பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

... இதனால் இன்று சாதிகளற்ற சமுதாயம், சமத்துவமான சமுதாயம் வேண்டுமென்ற அறைகூவல் கேட்க ஆரம்பித்துள்ளது. அதுவும் இந்த அறைகூவல் நம் ஊடகங்களில் பெரிதும் கேட்க ஆரம்பித்துள்ளது. ... சமீபத்தில் AIIMS-ல் நடந்த போராட்டத்திற்கு நம் ஊடகங்கள் அளித்த இடம் நம் எல்லோருக்கும் தெரிந்ததுதானே.

... மேற்படி WSJ (Wall Street Journal)-ல் கூறப்பட்டுள்ள அந்த "பரிதாபத்துக்குரியவரின்" தந்தை அவரது தாத்தாவையெல்லாம் விட மிகவும் 'பரந்த மனம்' கொண்டவர் என்பதும், 'கீழ்' சாதிக்காரர்கள் அவர் முன்னால் செருப்பணிந்து செல்வதைக்கூட அவர் அனுமதிப்பவர் என்பதும் தெரியுமா? என்னே அவரது பெருந்தன்மை; பரந்த மனம்! 'அந்த' சாதிக்காரர்களும் Gucci / woodlands brand செருப்புகளாகத்தானே தினமும் அணிகிறார்கள்!

... WSJ படிப்பிலும், வேலை வாய்ப்புகளிலும் மட்டுமே இந்த 'reverse discrimination' (தமிழில் என்னங்க இதற்கு?) பற்றிப் பேசுகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் வகுப்பறைகளில் கூட தனியாக கடைசியாக உட்காரவைக்கப் படுவது பற்றியோ, பள்ளிகளில் அவர்களுக்குத் தரப்படும் 'மரியாதை' பற்றியோ, மதிய உணவுத்திட்டத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் 'மரியாதை' பற்றியோ பேசுவதில்லை. இந்த வித 'மரியாதைகள்' WSJ வருந்தும் சாதியினருக்கு நடப்பதில்லை என்பதை அந்தக் கட்டுரை பேசவில்லை.

... படிக்கும் பள்ளிகளிலும், வேலைசெய்யும் இடங்களிலும் தலித்துகளுக்குக் கிடைக்கும் 'மரியாதை' இப்படியெல்லாம் இருந்தும் கூட, Times of India (டிச 12, 2006) -ல் சுபோத் வர்மா தன் கட்டுரையில் காண்பிப்பது போல் 1961 -2001 - காலக் கட்டத்தில் தலித்துகளின் சமூக முன்னேற்றம் மிகவும் பாராட்டுக்குரியது.

... WSJ கட்டுரை ப்ராமணக் குடும்பங்களில் ஏறத்தாழ 50% ஏழ்மையில், மாதம் ரூ.4000-க்கும் கீழாகத்தான் சம்பாதிக்கும் நிலையில் உள்ளதாகக் கூறுகிறது. ஆனாலும் அதே கட்டுரையின் பட்டியலில் தலித்துகளில் 90%-க்கும் மேலாக வறுமைக்கோட்டிற்கும் கீழே வாழ்வதைக் காட்டுவதைக் கட்டுரை கண்டுகொள்ளாமல் செல்கிறது!

... இக்கட்டுரையிலேயே, ப்ராமணர்கள் மற்ற இந்திய மக்களைவிடவும் படிப்பிலும், வருமானத்திலும் உயர்நிலையில் இருப்பதையும் குறிப்பிடுகிறது. ஆனால், National Commission for Enterprises in the Unorganized Sector தரும் விவரப்படி 836 மில்லியன் (83 கோடி?) மக்கள் மாதத்திற்கு வெறும் 600 ரூபாய் (தின வரும்படி Rs. 20) மட்டுமே பெறுகிறார்கள் என்பதோ, அதில் 88% தலித்துகளும், இன்னும் சில பிற்படுத்தப் பட்ட சாதியினரும், முஸ்லீம்களும் உள்ளனர் என்பதையோ அந்தக் கட்டுரையின் ஆசிரியர் வசதியாக மறந்து விடுகிறார்.

... ஆனாலும் தலித்துகளில் பெரும்பாலோர் விவசாய தொழிலாளிகளாகத்தான் வேலை பார்த்து வருகிறார்கள். விவசாயத் தொழிலோ வருடத்திற்கு ஆறு மாதங்கள் கூட நடப்பதில்லை. கிராமத்திலுள்ள ஒவ்வொரு தலித் குடும்பத்தி்லும் பாதி பேராவது மாதம் ரூ. 2000 சம்பாதித்தாலே அது ஒரு பெரும் புரட்சியாக இருக்கும்.

... பெரும்பான்மையான ஊடகங்கள் WSJ போலவே கருத்து கொண்டுள்ளன.

... சமீபத்தில் புனேயில் நடந்த ப்ராமணர்களின் பெரும் மாநாட்டிற்கு ஊடகங்களில் எந்த எதிர்வினையும் இல்லை.ஏறத்தாழ அதே சமயத்தில் நடந்த மகாராஷ்ட்ரத்தில் மராத்திய சாதியினர் நடத்திய மாநாடும் எந்தவித எதிர்க் கருத்தையும் உருவாக்கவில்லை. ஆனால் தலித்துகளின் கூட்டங்கள் மட்டும் சாதிய வெறி என்ற கோணத்தில் பார்க்கப் படுகின்றன. அதிலு்ம் தலித்துகள் என்பது ஒரு தனிச் சாதியல்ல; தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லோ்ரின் தொகுப்பே. டிசம்பர் 6-ம் தேதி அம்பேத்காரின் நினைவு நாளாக மும்பையில் நடக்கும் தலித்துகளின் கூட்டம் மட்டும் ஏனோ மிகுந்த அச்சத்தோடு பார்க்கப் படுகிறது; எழுதப் படுகிறது.

... ஆனால் நடப்புகள்தான் எவ்வளவு வித்தியாசமாக உள்ளன? அடுத்த சாதியில் திருமணம் செய்தமைக்காக இங்கு எந்த மற்ற சாதியினரின் கண்களும் தோண்டப் படுவதில்லை. நிலத்தகராறுகள் என்ற பெயரில் மற்ற சாதியினரும் அவர்தம் உடைமைகளும் தீ வைத்துக் கொழுத்தப் படுவதில்லை. கோவிலுக்குள் நுழைந்தான் என்பதற்காக மற்ற சாதி மக்கள் கொலை செய்யப் படுவதில்லை.
எந்த ப்ராமணர் ஊர்க் கிணற்றில் நீரெடுத்ததால் உயிரோடு கொழுத்தப் பட்டுள்ளார்? 'உரிமைகள் மறுக்கப் படுவதாகச்' சொல்லப் படும் அந்த உயர்த்தப் பட்ட சாதிமக்களில் எத்தனை பேர் குடிக்கும் நீருக்காக தினமும் நான்கு கிலோ மீட்டர் செல்ல வேண்டியதிருக்கிறது? நம் கிராமங்களின் வெளியே, தனியாக தீண்டத் தகாதவர்களாய் வெறுத்து ஒதுக்கப் பட்டிருப்பவர்களில் எத்தனை ப்ராமணர்களும், மற்ற உயர்த்தப் பட்ட சாதிக்காரர்களும் உள்ளார்கள்?

தலித்துகள் மீது கட்டவிழ்க்கப்படும் குற்றங்கள் கூடிக்கொண்டே போகின்றன. கொலை, கொள்ளை, கற்பழிப்பு என அவர்கள் மீது நிகழ்த்தப் படும் குற்றங்கள் இன்னும் வளர்ந்து கொண்டே போவதாகத்தான் 2006, National Records Bureau-வின் தகவல்கள் சொல்கின்றன.

- இதுதான் உண்மையில் சாதிப் பாகுபாடு. ஆனால் ஊடகங்களுக்கு இவைகள் கண்களில் படுவதில்லை.

... ஒரு வெளிநாட்டுப் பயணி கற்பழிக்கப் பட்டால் அரசின் கரங்கள் உடனே குற்றவாளியைப் பிடிக்க வேகமாக நீள்கிறது; நல்லதுதான். ஆனால் அதே குற்றம் நித்தம் நித்தம் தலித் பெண்களைக் காயப்படுத்தும் போது அரசின் கரங்கள் மட்டுமல்ல, ஊடகங்களில்கூட அவை இடம் பெறுவதில்லை. நம்முடைய நீதி மன்றங்களோ ... ஒரு கற்பழிப்பு வழக்கில் கனம் நீதிபதி கொடுத்த தீர்ப்பு இது: 'உயர் சாதியைச் சேர்ந்த ஒருவன் கீழ்சாதிப் பெண்ணைக் கற்பழித்திருப்பான் என்பது நடந்திருக்கக் கூடியதல்ல!'
ராஜஸ்தானில் (Kumher என்ற இடத்தில்) நடந்த வெறியாட்டத்தில் 17 தலித்துகள் இறந்திருந்தாலும், அந்த வழக்கு 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பதிவுகூட செய்யப்படவில்லை. ஒரு வெளிநாட்டுப் பெண்ணுக்கு 14 நாட்களில் நீதி கிடைக்கிறது; ஒரு தலித் பெண்ணுக்கு 14 ஆண்டுகளில் நியாயம் கிடைத்தால் ஆச்சரியம் நம் நாட்டில்.

... மும்பையில் புத்தாண்டு அன்று இரு பெண்களை தொல்லைபடுத்திய வழக்கில் உடனடியாக 14 பேர் கைது செய்யப் பட்டார்கள். ஆனால் அதே மாநிலத்தில் லாத்தூரில் ஒரு முஸ்லீம் பெண் கற்பழிக்கப் பட்டதோ, நந்தாத் என்னுமிடத்தில் ஒரு இளைஞனின் கண்கள் தோண்டப் பட்டதோ எந்த முக்கியத்துவமும் பெறவில்லை.

... வாழ்க்கை முழுவதும் துன்பத்தில் மூழ்கி வாழும் ஒரு தலித் இறந்த பிறகும்கூட அவருக்கு நிம்மதியில்லை. அந்த உடலைப் புதைப்பதற்கும் அவரது உறவினர்களுக்கு 'சலுகைகளில் புறக்கணிக்கப் பட்ட', 'பாவப் பட்ட' மேல்சாதிக்காரர்களின் தயவு வேண்டியதுள்ளது. நம் குற்றப் பட்டியல்களில் இது போன்ற அக்கிரமங்கள் தொடர்ந்து சேர்ந்து கொண்டுதானுள்ளன. இது போன்ற குற்றங்கள் எத்தனை தலித்துகள் அல்லாத மற்ற உயர்த்திக் கொண்ட சாதிக்காரர்களுக்கும் நடக்கிறது. ஆனால் அவர்கள் தங்கள் உரிமைகள் பறிக்கப் பட்டதாக எழுப்பும் குரல் மட்டும் ஊடகங்களுக்குத் தெளிவாக கேட்கிறது.

... மேல்சாதிக்காரர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்று கூப்பாடு எழுப்புவர்கள் முழுமையான திரிபுவாதிகள்.


* * * *

WSJ-ல் வந்த அந்த ஆங்கிலக் கட்டுரையின் தலைப்பையே (REVERSAL OF FORTUNES ISOLATES INDIA'S BRAHMINS)கொஞ்சம் மாற்றி இப்பதிவின் தலைப்பாக வைத்துள்ளேன்.

அக்கட்டுரையை எழுதியவர் நம்மூர் ஆள்மாதிரி தெரியவில்லை. பெயர் வித்த்தியாசமாக இருக்கிறது. அக்கட்டுரைக்குக் கீழ் இம்மாதிரி கொடுத்துள்ளது:
Write to Eric Bellman at eric.bellman@awsj.com

எழுத விரும்புவோருக்கு உதவியாக இருக்குமேயென்று கொடுத்துள்ளேன்!


பி.கு.
கட்டுரையின் ஆசிரியருக்கு நான் ஒரு மடல் இட்டேன். அதன் நகல் என் ஆங்கிலப் பதிவில்.
அதற்கு 30 நிமிடத்துக்குள் பதிலும் வந்தது. என் தனிப் பார்வைக்கு என்ரு வந்திருப்பதால் அதனை இங்கு பதிப்பிக்கவில்லை. அக்கடிதத்திற்குப் பதிலாக என் ஆங்கிலக் கட்டுரையின் தொடுப்பினைத் தந்துள்ளேன்.

ஏதோ நம்மால முடிஞ்சது :)

Sunday, January 13, 2008

248. வாருங்களேன் .. தொடருவோமே இந்த ‘விளையாட்டை’ ..?

தொடர்புள்ள முந்திய பதிவுகள்:

245. உங்கள் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள்.
246. மீண்டும் ஒரு வேண்டுகோள்.



நம் குறைசொல்ல மத்திய அரசு ஆரம்பித்துள்ள இணையப் பக்கத்தில் (http://darpg.nic.in) என் முதல் குறையைச் சொல்லிய பிறகு மதுரை உயர் காவலதிகாரிக்கு அந்தக் குறை பற்றிய தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக ஒரு இ-மெயில் எனக்கு வந்தது. ஆனால் குறை தீர்வதற்காக எந்த முயற்சியும் எடுக்கப் பட்டதாக இதுவரை தெரியவில்லை. அதனால் அடுத்த குறை பற்றி எழுதிவிட்டு அதோடு இன்னொரு வழிமுறை சொல்லியிருந்தேன். எந்தத் துறைக்கு நாம் அனுப்பும் தரும் குறை பற்றிய விவரம் அனுப்பப் படுகிறதோ அதன் முகவரி குறைகொடுத்தவர்களுக்கு அனுப்பப்பட்டால் மேற்கொண்டும் அந்தத் துறை மூலம் முயற்சி எடுக்க முடியுமாதலால், அந்த விவரம் குறை கொடுத்தோருக்கு அளிக்கப் பட்டால் நலமாயிருக்கும் என்று எழுதியிருந்தேன். ( பார்க்க: May I suggest that when a grievance is lodged with you and when instructions go to the concerned, if the copy of that is sent to the complainant also, we may be able to pursue it further for speedy and proper implementation. It will also avoid the bureaucrats giving the instructions a simple shirk.)



மறுபடியும் காக்கை உட்கார பனம் பழம் விழுந்ததோ என்னவோ ..

அடுத்து நமது தொடர்வண்டிகளில் இப்போதிருக்கும் நிலை மாற்றி மனிதக் கழிவுகளை பாதுகாப்பாக சேகரித்து வெளியேற்ற வேண்டி ஒரு கடிதம் அனுப்பினேன். அக்கடிதம் உடனே Railway Board-ன் Executive Director (PG)க்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் விவரமும் எனக்கு கடிதமாக அஞ்சலில் வந்துள்ளது.(கடிதத்தின் நகலைக் கீழே தந்துள்ளேன்.) அனுப்பப்படும் அந்த துறை தாங்கள் எடுத்துள்ள செயல் திட்டம் பற்றி மனுதாரருக்கும் தெரிவிக்க வேண்டுமெனவும் அக்கடிதம் குறிப்பிடுகிறது.(3. Action taken in the matter may kindly be communicated to the petitioner under Intimation to the Department of Administrative Reforms and Public Grievances.)
ஒரு முன்னேற்றம்தான், இல்லலயா! இம்முறை எதிர்தொடர்வினை (reaction) மிக விரைந்து நடந்திருப்பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.

ஆனாலும் Railway Board –இடமிருந்து கடிதம் ஏதும் வந்துவிடுமென நம்பவில்லைதான். அதனால், இனி ஓரிரு மாதங்கள் கழித்து Railway Board-ன் Executive Director (PG)-க்கு ஏதாவது இந்த விஷயத்தில் நடந்துள்ளதா என்று கேட்டு ஒரு கடிதம் எழுதலாம்; அதற்கும் நிச்சயமாகப் பதில் ஏதும் வராது என்றே நம்புகிறேன். அதன் பின் தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக முயற்சிக்கலாம்; அதன் பின் PIL - பொதுநல வழக்கு – இப்படியெல்லாம் செய்யணும்னு தோணுது. பதிவுலகில் எவ்வளவு தொடர் விளையாட்டு விளையாடுறோம்; இது செய்ய மாட்டோமா?!

ஆனாலும் தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக எப்படி முயற்சிக்கணும்; பொதுநல வழக்கு போடுவது எப்படி என்பதெல்லாம் எனக்குத் தெரியாது என்பதோடு இதைத் தொடர்ந்து “ஆட” தனியாக இருப்பதைவிடவும் உங்கள் சிலரின் துணையும் தூண்டுகோலும் இருந்தால் நல்லது என்பதால் “வாருங்களேன் .. தொடருவோமே இந்த ‘விளையாட்டில்’ ..?” என்று உங்களை அழைக்கிறேன். விருப்பமுள்ளோரை ஒன்றுபட அழைக்கிறேன்.

சர்வேசன் ஒரு தனிப்பதிவை இதற்காகவே ஆரம்பிக்கலாமென்ற எண்ணத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதை அமைக்க உங்கள் ஆதரவும் உதவியும் அளித்தால் முறையாக, முறையான திட்டத்தோடு ‘ஊர்கூடி தேரிழுக்க’ முடியுமென நம்புகிறேன்.




நான் பெற்ற கடிதத்தின் நகல்:

No. DARPG/E/2007/08851(01)(MORLY)
Government of India
Department of Administrative Reforms and Public Grievances
5th Floor, Sardar Patel Bhavan
Parliament Street
New Delhi – 110 001

Dated 1/1/2008

OFFICE MEMORANDUM

The undersigned is directed to enclose herewith a grievance petition dated
31/12/2007 received from Shri Dharumi regarding
Central Gove: Miscellaneous (PG). The petition is self-explanatory.

2. The Department of Administrative Reforms and Public Grievances is following up
the case. It is requested that the matter may kindly be examined and the grievance
redressed promptly.

3. Action taken in the matter may kindly be communicated to the petitioner under
Intimation to the Department of Administrative Reforms and Public Grievances.


( Badri Prasad )
Deputy Director (PG)
Tel. : 23361856
e-mail.: ddpag2-arpg@nic.in

No. DARPG/E/2007/08851 (01) (MORLY)
Ministry of Railways, (Railway Board)
Shri Sunil Kumar
Executive Director (PG)
Room No. 471, Rail Bhavan,
Railway Board
New Delhi


Copy for information to:-
No. DARPG/E/2007/08851 (01) (MORLY)
Shri DHARUMI
31 CHEMPARUTHI NAGAR
VILANGUDI
MADURAI – TAMIL NADU, Andaman And Nicobar
MADURAI – TAMIL NADU

Please view our web site: - http://darpg.nic.in

(Sd) BADRI PRASAD

Friday, January 11, 2008

247. பொங்கல் கொண்டாடலாம் வாங்க ... ARGUMENT CONTINUES...

சென்ற ஆண்டில் நான் எழுதிய பதிவுகளில் 'சிறந்த(!?)' ஒன்றைத் தேர்ந்தெடுத்து தரச்சொல்லி தொடர் பதிவுக்கு அழைத்த சர்வேசனுக்கு நன்றி.

எல்லாமே நல்ல பதிவுகளாகப் போட்டாலே இப்படித்தான் எதை எடுப்பது எதை விடுப்பது என்று தகராறு வந்துவிடுகிறது. (இப்படியும் சொல்லலாம்; இல்லைன்னா ...) எல்லாமே குப்பை; இதில நல்ல குப்பை ஒண்ணு வேணும்னா என்ன செய்றது?

எனக்கு நல்ல பதிவா படுறது எல்லாத்துக்கும் அப்படியே தோன்றணும்னு இல்லை. vice versa !
ஆனாலும் நிறைய பேருக்குப் போய்ச்சேர்ந்த பதிவு ஒன்றை தேர்ந்தெடுத்திடலாம்னு ஒரு எண்ணம். அதனால், நிறைய பேருடைய பின்னூட்டம் வந்த பதிவை இந்த ஆட்டைக்குச் சேர்த்திடலாம்னு நினைக்கிறேன்.

அப்படி பார்த்தால் போன வருஷத்தை (2007)விடவும் 2006ம் வருடத்தின் கடைசிப் பதிவுதான் இதுவரை என் பதிவுகளில் 110 பின்னூட்டம் பெற்று இரண்டாம் இடத்தை - பின்னூட்ட எண்ணிக்கையில் மட்டுமே -
Let us hit the nail .. பெற்றது; பிடித்த பதிவும் கூட. ஆனாலும் 2007 வருடத்துப் பதிவுதான் வேண்டுமென்பதால் அந்த வருடப் பதிவுகளில் 84 பின்னூட்டங்கள் பெற்ற "197. பொங்கல் - ஜோவும் இன்ன பிறரும் ...." என்ற பதிவே இடம் பெறுகிறது. வேடிக்கை என்னன்னா, முதலில் சொன்ன பதிவு 2006-ன் கடைசி வாரப் பதிவு; பின்னால் சொன்னது 2007-ன் முதல் பதிவு.

இதில் என்ன சிறப்பென்றால் பொங்கல் எல்லா தமிழர்களாலும் கொண்டாடப் படவேண்டும் என்று 2006-ல் ஒரு வேண்டுகோளுடன் சில பதிவுகள் வந்தன. அதைத் தொடர்ந்து 2007-ல் ஜோ அதே கருத்துடன் ஒரு பதிவு போட அதற்கு வந்த எதிர்ப்புகளை வைத்து நான் சென்ற ஆண்டின் துவக்கத்தில் (19.01.2007) இட்ட பதிவு சரியாக அதிகப் பின்னூட்டங்கள் பெற்ற காரணத்தால் மட்டுமே இந்த வருடமும் அதே பொங்கல் சமயத்தில் மீள் பதிவு போல் மீண்டும் இப்போது சர்வேசன் புண்ணியத்தில் பதிவர்களுக்குப் பொங்கல் வாழ்த்துக்களுடன் படைக்கப் படுகிறது!

ஸ்டார்ட் ம்யுஜிக் ..!

இது ஒரு தொடர்கதை ..

இப்பதிவைத் தொடர்ந்து இன்னும் ஐந்து பேரை எழுத அழைக்கணுமாமே... ம்ம்..ம்.. யார் யாரைப் பிடிக்கலாம் இதற்கு: - ரொம்ப ஆக்டிவா இருந்து, இப்போ கொஞ்சம் தலைமறைவு வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்கிற இவர்களை அழைக்கிறேன்:

1. இளவஞ்சி
2. பால பாரதி
3. பொன்ஸ்
4. வரவனையான்
5. முத்து - தமிழினி