Sunday, October 29, 2023
Wednesday, October 25, 2023
1257. கொமாரு .. ஒரு சொந்தக் கதை
மொழியாக்கம் செய்து வரும் நூலில் –
பாலஸ்தீன் – இஸ்ரேல் போராட்டம் – ஒரு சிறு பத்தி ஒன்று வந்தது. அது என் பழைய
நினைவொன்றைக் கிளறிவிட்டது. அந்தப் பத்தி :
1990 ஆகஸ்ட் இரண்டாம் தேதியில் ஒரு லட்சம்
ஈராக் வீரர்கள் இரவோடு இரவாக குவைத்தின் எல்லைகளைத் தாண்டி அந்நாட்டிற்குள்
வலிந்து நுழைந்தனர். குவைத் நகரம் ஈராக்கினரால் சூழப்பட்டு முற்றுகையிடப்பட்டது..
இந்தப் போரின் நடுவே 39 ஸ்கர்ட் ஏவுகணைகளை(Scud missiles – ground to ground missiles) இஸ்ரேல் நகரான டெல் அவிவ் மீது ஏவியது. இதனால்
பெரும் பொருட்சேதம் நடந்தாலும்,
உயிர்ச் சேதங்கள் அதிகமில்லை. இரண்டே இரண்டு பேர் மட்டும் மரணம் அடைந்தனர்.
அந்த சமயத்தில் எங்கள் கிறித்துவக்
கோயிலில் திருவிழாக் காலங்களில் கோவிலுக்கு வெளியே பெரிய விளையாட்டு மைதானத்தில்
பூசை நடக்கும். அது ஒரு மாலைப் பொழுது. பூசையின் நடுவே சாமியாரின் பிரசங்கம்.
நானும் வேறொரு கல்லூரிப் பேராசிரியரும் கூட்டத்தின் பின்னால் நின்று கொண்டு அதைக்
கேட்டுக் கொண்டிருந்தோம். சாமியார் மிகவும் உருக்கமாக யேசு எப்படி இஸ்ரேலரைக்
கவனமாகப் பார்த்துக் காப்பாற்றி விட்டார் என்று அதிசயித்துப் பேசினார். அவர் தன் மக்களை
அத்தனைக் கிருபையோடு காப்பாற்றி விட்டார் என்று மனமுருகப் பேசினார்.
பக்கத்திலிருந்த பேராசிரியருக்கும் அப்படி ஓர் ஆச்சரியம். என்னைப் பார்த்து மகிழ்ச்சியோடு யேசுவின் கிருபையை என்னோடு பகிர்ந்து கொண்டார்.
“எப்படி
பாத்தீங்களா? எந்த அளவு இஸ்ரேல் மீதான கருணை அவருக்கு. காப்பாத்திட்டார்ல...”
ஒரு
நிமிடம் யோசித்தேன். ஏதோ ஒரு பொறி தட்டியது.
“ஆமாங்க.
ஆனால் 50 வருஷத்துக்கு முந்தி தான் நல்லா தூங்கிட்டார் போல. லட்சக் கணக்கில ஹிட்லர்
இஸ்ரேலர்களைக் கொல்லும் போது அசந்து தூங்கிட்டாரே!”
பேராசிரியர்
முறைத்தார்.
(அப்போது
நானும் ஓரளவு ஒரு நம்பிக்கையாளன் தான் ...இப்போது மாதிரி இல்லை.)
Sunday, October 22, 2023
Saturday, October 21, 2023
Friday, October 20, 2023
1254. சூத்திரன்
0 comments
Wednesday, October 18, 2023
1253. PALESTINE - ISRAEL CONFLICT
Sunday, October 08, 2023
1252. மூன்று மொழியாக்க நூல்கள் பற்றிய என் தனிப்பட்ட உணர்வுகள்
ரொமிளா தாப்பர் இந்தியாவின் பண்டைய
கால வரலாற்றைப் பற்றி எழுதிய நூலை மொழியாக்கம் செய்தேன். அதில் எவ்வாறு
வெளியிலிருந்து வந்தவர்கள் ஆதிக்கசாதியினராக மாறினார்கள் என்ற வரலாற்றுப்
பகுதியைப் படிக்கும் போது ஏற்பட்டு மனதின் உறுத்தல் ஒரு கேள்வியை எழுப்பியது.
அடுத்து மொழியாக்கம் செய்த நூல் சூத்திரன்.
இதை வாசிக்கும் போதே என் மீதே எனக்குக் கோபம் வருமளவிற்கு அதிலுள்ள செய்திகள் இருந்தன.
ஏன் சூத்திரர்களுக்கு சூடு, சுரணையில்லாமல் இருக்கிறோமே
என்றொரு நச்சரிப்பு மனதினுள் எழுந்தது.
அடுத்து செய்த மொழியாக்க நூல் பாலஸ்தீன்
- இஸ்ரேல் போராட்டம். ஏற்கெனவே ஓரளவு தெரிந்த வரலாற்றை முழுவதுமாகத் தெரியும் போது
உலகத்தில் மிகவும் கேவலமாகவும், கொடுமையாகவும்
காலனியாட்சி செய்த, அதிலும் முக்கியமாக, இங்கிலாந்து நாடு வரலாற்றில் செய்த கொடுமைகளின் சாட்சியாகவே உள்ளது இன்றைய
போர்.
இந்த மூன்று நூல்களையும் வாசிக்கும்
போது,
மொழிபெயர்ப்பாளன் என்பதையும் தாண்டி அதில் சொல்லப்பட்டவைகளோடு மனதளவில்
ஐக்கியமாவதும். அதற்காகக் கழிவிரக்கம் கொள்வதும் , வேதனைப் படுவதும்
நடந்தது.
ஒரு சின்ன கேள்வி: மொழிபெயர்ப்பாளன் எழுதும் நூலோடு இப்படி ஒன்றிப்
போவது சரியா?
ஆனால் நிச்சயமாக மொழிபெயர்ப்பில்,
சொல்லப்பட்டவைகள் என்னோடு நெருங்கிய ஒன்றாக இருந்தாலும், என் கருத்துகளுக்கோ என் வருந்தங்களுக்கோ அங்கே இடம் கொடுக்கவில்லை.