ஆதிரை பரூக் - சார் யாரென்று எனக்குத் தெரியாது; இவர் ஒரு பதிவரா; வலைப்பூ எதுவும் வைத்திருக்கிறாரா என்பதுவும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் முயன்றதில்லை. ஆனாலும் என்னவோ அவர் ஒரு பதிவராகத்தான் இருப்பார் என்ற நினைப்பு. என் மேல் என்ன பாசமோ, இல்லை என்னை இஸ்லாமிய மார்க்கத்துக்குள் சேர்த்துவிட வேண்டுமென்ற ஆவலோ என்னவோ, எனக்குப் பலதடவை தனி மயில்கள் அனுப்பி வந்தார். எல்லாமே இஸ்லாமியக் கோட்பாடுகள் பற்றியது. நானும் உடனுக்குடன் அவைகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு trash-க்கு அனுப்பி வந்தேன். கிறித்துவ மக்கள் கொடுக்கும் tractsகளை இதனாலேயே வாங்காமல் சென்றுவிடுவதுண்டு - அவர்கள் முன்னால் அதைக் கசக்கி எறியவேண்டாமே என்று.
மயில்கள் தொடர்ந்து வர ஆரம்பித்ததும் அலுப்புற்று, மிகவும் பணிவுடன் 'தயவு செய்து', 'பணிவுடன்', 'வேண்டிக்கொள்கிறேன்' என்ற சொற்களோடு அவருக்கு இனி இதுபோன்ற மயில்களை எனக்கு அனுப்ப வேண்டாமென்று மிகவும் பணிவோடு எழுதி சில மயில்கள் அனுப்பிப் பார்த்தேன். அவர் புரிந்து கொள்வது போல் தெரியவில்லை. அவரது மயில்கள் என்னைத் தொடர்ந்து விரட்டிக்கொண்டிருந்தன.
அடுத்த கட்ட முயற்சியாக சில பதில்களை அனுப்பிப் பார்த்தேன். உதாரணமாக, எப்படி //கைதேர்ந்தப் படைப்பாளன் ஏகஇறைவன் மிக நேர்த்தியாக ஒட்டகத்தை வடிவமைத்தான்// அதன் பால் எத்தகைய உயர்வானது, அதனை உண்டு //அந்தக் காலத்தில் அரேபியர்கள் மிகவும் திடகாத்திரமான உடலமைப்புடன் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் //.... என்று வந்த மயிலுக்குப் பதிலாக //இப்படி சிறப்பு மிக்க ஒட்டகத்தைப் படைத்த இறைவன் அதை அரேபிய நாட்டினருக்கு கொடுத்துவிட்டு நமக்கெல்லாம் வெறும் எருமையையும், பசுமாட்டையும் கொடுத்து ஏமாற்றிவிட்டானே... ச்சே!// என்றும், மதங்களைப் பற்றிய என் பதிவில் இஸ்லாத்திற்கு எதிராக எழுப்பியிருந்த கேள்விகளில் ஒவ்வொன்றாகவும் அனுப்பிப் பார்த்தேன்.
அவரது மயிலில் இன்னொன்று, நல்ல interesting-ஆக இருந்தது: //இன்று மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை கண்டிருக்கக் கூடிய நாடுகளுடைய நிலையும் ஏறத்தாழ இறைவனை மறுத்து வாழ்ந்த தோட்டக்காரருடைய வாழ்க்கைக்கு ஒப்பானதாக அமைந்திருப்பதை அறியலாம். நானும் பதிலுக்கு //ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள பல "இறைவனுக்கு இணைகற்ப்பிக்காத தூய வாழ்வு வாழும் நாடுகள்" படு தரித்திரத்தில் காலங்காலமாக இருந்து வருகின்றனவே அவைகளில் அல்லல் படும் மக்களின் பாவங்களை இறைவன் மன்னித்து செல்வத்தை அதிகரிக்கச் செய்யவில்லையே.... அது ஏனுங்க? என்று கேட்டிருந்தேன்!
இவைகளையெல்லாம் நான் அவரிடம் பதில் எதிர்பார்த்து அனுப்பவில்லை; இவனுக்கெல்லாம் நல்லது சொன்னால் பயனேதுமில்லை; உட்டுருவோம் அப்டின்னு சொல்லி ஆளை உட்டுருவார்னு நினச்சித்தான் அனுப்பினேன். ஆனால் மீண்டும் மயில்கள் தொடர்ந்து வந்துகொண்டேதான் இருந்தன.
இதில் பயங்கர சோகம் எனக்குக் கடைசியாக வந்த கீழ்க்காணும் கட்டுரைதான். சோகம் ஒரு பக்கம்; அதே போல் இதை என் காதில் வந்து ஊதுவதால் மிகவும் கோபமும் எரிச்சலும் வந்தது. இனியும் இப்படியே விட்டுக்கொண்டிருக்க மனதில்லை. ஆகவே தனி மடல்களாக வந்ததைப் பொதுவில் வைக்கிறேன். அவரது கட்டுரை பச்சை வண்ணத்திலும், என் comments-களை சிகப்பிலும் தந்துள்ளேன்; கடைசியாக என் மனதில் தோன்றியவைகளையும் சொல்லியுள்ளேன்:
================================================================
ஏகஇறைவனின் திருப்பெயரால்...
எங்கே செல்லும் இந்தப் பாதை ???
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததால் பெருமைப் படும் முஸ்லீம்களே !
ஒரு சினிமா தயாரிக்கப்படுவதற்கு முன் அதில் பங்கேற்கும் கலைஞர்களில் முழுமையாக கதையைக் கேட்கக் கூடியவர்கள் இசயமைப்பாளர்கள் தான் கதையைக் கேட்டு விட்டு சில நேரங்களில் பாடலாசிரியர் எழுதிக்கொடுத்தப் பாடல்களின் வரிகளைக் கூட மாற்றியமைக்கும் அதிகாரம் படைத்தவர்கள் இசையமைப்பாளர்கள்.
பம்பாய் என்னும் திரைப்படக் கதையை கேட்காமல் இசையமைத்துக் கொடுத்து எனது சமுதாயத்திற்கு தீங்கிழைத்து விட்டேன் என்று பின் வாங்க முடியாது பம்பாய் கதையை முழுமையாகக் கேட்டு அதற்கொப்ப இயைசமைத்துக் கொடுத்தவர் தான் ரஹ்மான் எனும் ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர். பம்பாய் படத்தில் இஸ்லாமோ இஸ்லாமியரோ குறைத்துச் சொல்லப்பட்டதாகத் தெரியவில்லையே. எந்த விதத் தீவிரவாதத்திற்கும் எதிர்ப்பான படம்தானே அது.
முஸ்லீம் சமுதாயத்தின் மீது அபாண்டமாக பழிசுமத்தி, பொய்யையும், மதவெறியையும் தூண்டி விட்ட பம்பாய் திரைப்படத்தைப் பார்த்த ஒவ்வொரு முஸ்லீமும் அதை எதிர்த்து நிருத்த முடியாமல் உள்ளத்தால் செத்து மடிந்தான்.
இது உங்கள் பார்வையின் தவறென்றே நினைக்கிறேன்.
அவர் விருது வாங்கியதால் முஸ்லீம் சமுதாயத்திற்கு என்னப் பிரயோஜனம் ? !!!
இன்னும் யாராவது பம்பாய் போன்ற அல்லது அதையும் விஞ்சும் அளவுக்கு படம் தயாரித்தால் அதற்கும் இவர் இசையமைத்துக் கொடுப்பார் !
இன உணர்வு கொள்வதை இஸ்லாம் வெறுப்பதால் அவரை முஸ்லீம் என்றுப் பாராமல் ஒரு இந்தியனுக்கு கிடைத்தது என்று (சினிமப் பிரியர்கள் முஸ்லீம்களிலும் இருப்பதால்) பெருமைப பட்டுக் கொண்டால் நாம் இதை எழுதப் போவதில்லை. பின் ஏன் இங்கே இப்படி எழுதியுள்ளீர்கள் என்று சொல்லவேயில்லையே.
இவரைப் போன்றவர்களை ஆதரிப்பவர்கள் பிற்காலத்தில் வருவார்கள் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் முன்கூட்டியே முன்னறிவிப்புச் செய்து விட்டார்கள்.
என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள்.…. ஆதார நூல்: புகாரி 5590
பட்டுத்துணி, தங்க நகை ஆண்கள் போட்டுக்கக்கூடாது; நின்னுக்கிட்டு ஒண்ணுக்கு இருக்கப்படாது; தாடி வச்சிக்க; குளிக்கும்போதுகூட ஆம்பிள இப்படியிப்படிதான் குளிக்கணும்; பொம்பிள இப்படியிப்படி குளிக்கணும்; துண்டு கட்டாம நாம குளிச்சா சாமிக்கு எப்படியிருக்கும்; இப்படியே நிறைய ... - இதெல்லாமா கடவுள் மனுசப் பயலுக்குக் கட்டளையா கொடுப்பாருன்னு எனக்குத் தோணுது. சரி, உங்க மதம் சொல்றதை நீங்க கண்ணை மூடிக்கிட்டு கேட்டுக்க வேண்டியதுதான்; அதை ஏன் எனக்கும் அனுப்பி கஷ்டப்படுத்துறீங்க. அதனாலதான நான் இப்படி கேக்க வேண்டியதுள்ளது. அதென்ன பட்டுக்கும், தங்கத்துக்கும் ஆண்களின் 'Y' chromosome-க்கும் அப்படி ஒரு ஜென்மப் பகை? யார் கண்டது .. அப்படி ஏதுமுள்ளது என்றொரு கட்டுரையைக் கூட சீக்கிரம் அனுப்பி வைப்பீங்க ..
அவருடைய ஃபீல்டில் அவர் திறமையாக செயல்பட்டார் இளம் வயதில் இரவு பகலாக உழைத்து விருதுபெற்றார். அது அவருக்குப்பெருமை அவருடைய ஃபீல்டைச் சேர்ந்தவர்களுக்குப் பெருமை.
நமக்குப் பெருமையா ? அதாவது, இஸ்லாமியருக்கு இதில் என்ன பெருமை என்கிறீர்கள்; அப்படித்தானே?
நாம் அந்த ஃபீல்டை வெறுக்கக் கூடியவர்கள் இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் சிந்தனையை சிதறடிக்கக் கூடிய இசையை வெறுத்திருக்கின்றார்கள். பின்ன ஏங்க, உங்க பாங்கொலியை மட்டும் இழுத்து நீட்டி 'இசை'யோடு தானே படிக்கிறீங்க? அந்த இசையைக் கேட்கும்போதும் உங்கள் சிந்தனை சிதறடிக்கப் படுகிறதோ?
உமையா கோத்திரமே! இசையை அஞ்சிக் கொள்ளுங்கள். அது வெட்கத்தை அழித்து உடல் உணர்வை தூண்டுகின்றது. மனிதாப மானத்தை மாய்த்துவிடுகின்றது. மதுவைப் போன்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது. பெண்களை அதில் அறவே பங்கேற்கச் செய்யாதீர்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அறிவிப்பாளர்: யஸீது பின் வலீது(ரலி), ஆதாரம் : பைஹகீ)
அது வெட்கத்தை அழித்து உடல் உணர்வை தூண்டுகின்றதா ? இல்லையா ? நிச்சயமா இல்லையே! எனக்குத் தெரிஞ்ச வரை தூளியில் தூங்குற குழந்தையில் இருந்து பாடையில போற வயசில இருக்கவங்க வரைக்கும் இசையை நல்லவிதமாகவே அனுபவிக்கிறதைத்தான் பார்த்திருக்கிறேன். மனசுக்கு எம்புட்டு சந்தோஷம் கொடுக்கிற விஷயம். ஒருவேளை இது உங்கள் பிரச்சனை மட்டுமேயோ என்னவோ?
இன்னொண்ணும் சொல்லணும். எல்லாவித இசையுமே முதலில் கடவுளை வணங்கத்தான் பயன்பட்டது. இசை என்றாலே மனதை சமனப்படுத்தும் அரிய கருவி என்றுதான் எல்லோரும் சொல்வதுண்டு. நான் அனுபவித்ததும் உண்டு. நம் தமிழ்/ இந்தியக் கலாச்சாரத்தில் இசைக்கு மிகவும் உயரிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். இல்லை, பூனைக்கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருட்டு என்பதுபோல் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்களோ என்னவோ?! எப்படியோ, மனுசப் பிறவி மட்டுமில்லாமல் எல்லா ஜீவராசிகளுமே ரசிப்பது இசை என்றிருக்க உங்கள் மேற்கோள்கள் தனிப் பாதை விரிப்பது வேடிக்கையும் வேதனையுமான விஷயம்தான். இதுலேயும் ஏனுங்க பெண்களைத் தனியே அடக்கி வைக்கிறீங்க- ஒரு special class போட்டு? பெண்ணாய் பிறத்தல் பாவம்தானுங்க. :(
சினிமா என்றத் தீமையில் முன்னிலை வகிப்பது இசை தான். மூன்று மணி நேரம் ஓடக்கூடிய சினிமாவை முயற்சித்தால் சில நிமிடங்களில் மறந்து விடமுடியும்.
ஆனால் சினிமாவில் மூன்று நிமிடம் ஓடக் கூடியப் பாடலை பலவருடங்களானாலும் மறக்க முடிவதில்லை.
பாடலில் வரக்கூடிய ஆபாச வரிகளைக் கூட வெட்க உணர்வில்லாமல் ரோடுகளில் பாடிக் கொண்டுத் திரிவார்கள்,
வீடுகளில் உறவினர்கள் முன்னிலையில் உட்கார்ந்துக் கொண்டு வெட்க உணர்வில்லாமல் ஆபாச விரிகள் அடங்கியப் பாடல்களைப் பாடுவார்கள்.
அதையும் கடந்து கழிப்பறைகளில் மெய்மறந்துப் பாடுவார்கள். அதனால் தான் ( மதுவைப் போன்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது. என்றுப் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் )
வீடு, ரோடு, கக்கூஸ் என்று கண்ட இடங்களிலும், கண்ட நேரங்களிலும் இமேஜைப் பற்றி அறவே சிந்திக்காமல் வாய்விட்டுப் பாடுவதற்கு மூளையை ஆக்ரமித்து சிந்தனைத் திறனை செயலிழக்கச் செய்வதில் திரைப்பட இசைக்குப் பெரும் பங்கு உண்டு.
ஒன்று புரிகிறது. Beauty is in the eyes of the beholders என்பார்கள். அது அழகுக்கு மட்டுமல்ல; இசைக்கும் இன்னும் எல்லாவற்றிற்கும் பொருத்தமான விஷயம். சினிமா பாட்டென்றாலே உங்களுக்கு வாந்தி வந்தால் எந்தவகைப் பாடல்களுக்கு மட்டும் நீங்கள் முக்கியத்துவம் கொடுத்துவருகிறீர்கள் என்று தெளிவாகப் புலனாகிறது. 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா ...' என்ற பாடலிலிருந்து ஓராயிரம் தத்துவப் பாடல்களையும் இன்னும் பல நல்ல கருத்துக்கள் சொல்லும் 'ஒவ்வொரு பூக்களுமே' போன்ற பாடல்கள் உங்கள் காதுக்குள் இறங்காமல், 'கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போகலாமா', சின்னவீடு பாட்டுக்களுக்கு மட்டுமே உங்கள் காதுகள் திறந்திருந்தால் அது யார் தவறு? இந்த உலகம் - உங்கள் கடவுளே படைத்திருந்தாலும் - வாழ்க்கையில் நல்லது கெட்டது எல்லாமே கலந்தேயிருக்கும்.(அதுக்கும் காரணம் உங்கள் கடவுளாகத்தானே இருக்க வேண்டும். அப்படிப் படைத்துவிட்டு பிறகு அங்க போகாதே; இதைச் செய்யாதே என்றால் ... இப்படியும் கேட்டுக்கொண்டே போகலாம்.)அதில் நல்லதை எடுத்துப் பழகுங்கள். நல்லவைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டு, தீயவைகளை மட்டும் கேட்டுவிட்டு, தீயவை வழி சென்றுவிட்டு எங்கேயும் தீமை என்று சொல்வது யாருடைய தவறு? நல்லது எதுவும் என் கண்ணில் படாது என்று யாரேனும் சொன்னால், அவர்களின் மனநிலையே அதற்குப் பொறுப்பு.
ஜாதி, மத பேதமின்றி அனைவரையும் சீரழிக்கக் கூடிய சினிமாவில் இசை பெரும் பங்கு வகிப்பதால் நம்மால் அதை எதிர்க்க முடியவில்லை என்றாலும் மௌணமாக இருந்து விடலாம் அதை விட்டு தீமைக்குப் துணைப் போகலாமா ? (ஆதரிக்கலாமா) .
ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும்; முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்) அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இதுவே உறுதியற்ற இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும் அது என்ன - உறுதியற்ற இறைநம்பிக்கையின் இறுதிநிலை? அப்படியென்றால் என்ன புரியவில்லையே.) என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்'. அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி). முஸ்லீம்
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104
அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்
அதிரை அவர்களே,
நான் இந்தப் பதிவுலகத்திற்குள் நுழைந்தபோது வெறும் ஒரு கடவுள் மறுப்பாளனாகத்தான் இருந்தேன். இங்கு நடைபெற்ற விவாதங்களே என்னை ஒரு மத வெறுப்பாளனாக மாற்றியது. மத நல்லிணக்கம் என்பது எப்படி கிட்டாத ஒரு கானல் நீர் என்பது புரிந்தது. என் மதம் என்று ஒவ்வொரு மத நம்பிக்கையாளர்களும் தங்கள் மதத்தை, அதைவிடவும் ஏதோ பாவம்போல் இருக்கும் அவரவர் சாமிகளை, கடவுள்களைக் காப்பாற்றுவதற்கே தாங்கள் எல்லோரும் பிறவியெடுத்து வந்ததாக நினைக்கும் மத நம்பிக்கையாளர்களும் நிறைந்த இந்த உலகத்தின் 'தரிசனம்' இங்குதான் கிடைத்தது.
ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் கடவுள்களைக் காக்க பிறந்த பிறவிகளாகத் தங்களை நினைத்துக் கொண்டு, தங்கள் மதக் கருத்துக்களே உன்னதமானவை என்ற நினைப்பில் இருக்கும்போது எந்த வித மாற்றுச் சிந்தனையும் அவர்களிடையே எப்படி ஏற்படப் போகிறது? ஒவ்வொரு மதத்தைப் பற்றியும் அடுத்த மதத்தினர் அல்லது என்னைப் போன்ற மத மறுப்பாளன் ஆயிரத்தெட்டு குறைகளையோ, கேள்விகளையோ எழுப்ப முடியும். ஆனால் வெறும் நம்பிக்கையை மட்டும் வைத்திருப்பவர்களுக்கு அந்தக் கேள்விகளுக்குப் பதில் கூற முடியாது என்பதும் தெரியும்; ஆனால் அதை நம்பிக்கையாளர்கள் ஒத்துக் கொள்வதுமில்லை. எங்கள் மதத்தில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் உண்டு என்ற கூற்று மட்டுமே உண்டு. ஒரு வேத புத்தகம் எப்படி வந்தது; யார்மூலம் வந்தது; எப்படி மாறாமல் இருந்தது என்று சொல்லப்படுவதெல்லாம் முக்கியமல்ல; அதன் content தான் முக்கியம் என்னைப் பொறுத்தவரை. இந்தப் பொருளடக்கங்கள் எல்லா மதத்திலேயும் குறைபாடு கொண்டதாகவே நான் உறுதியாகக் கருதுகிறேன்; ஓரளவு அதை நிரூபித்துமிருக்கிறேன்.
மதங்களும் மாறப் போவதில்லை; மதம் கொண்ட மனிதர்களும் மாறப்போவதில்லை என்பது மட்டும் என்னவோ நிச்சயம். அவரவர்க்கு அவரவர் கொள்கை என்று வறட்டு வேதாந்தம் பேசிக்கொண்டு பேதங்களை வளர்த்துக் கொள்வோம். வேறென்ன செய்ய ... சொல்லுங்கள்.
கடைசியாக மறுபடியும் அதே வேண்டுகோளோடு முடிக்கிறேன்: உங்கள் மெயில்களை இன்னும் எனக்கு அனுப்பி என்னைத் துன்புறுத்தாதீர்கள்; இரக்கம் காட்டுங்கள் தயை செய்து.
நன்றி.
*