Thursday, August 30, 2018

998. BURNING FOREST & AMBEDKAR'S WORLD - இப்போது மொழிபெயர்க்கும் நூல்கள்









*


 I AM LUCKY.

 எனக்கு மேலே கூறிய தலைப்புகளில் உள்ள இரு நூல்களை மொழியாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் நூலை நந்தினி சுந்தர் என்ற சமூகவியல் பேராசிரியராக டில்லி பல்கலையில் பணி செய்து கொண்டு, சத்தீஸ்கரில் நேரடி ஆய்வுகளைச் செய்து கொண்டதோடு நில்லாமல் அற வழியில் பல வழக்குகளையும், அதனை ஒட்டிய தண்டனைகளையும் அனுபவித்து, அச்சூழலின் தீவிரத்தை “பற்றியெரியும் காடு” என்ற தலைப்பில் எழுதியுள்ளார். இன்றைய தினசரியில் கூட (30.8.18) இவர் ஒரு கொலை வழக்கில் காவல் துறையினரால் ‘முதல் தகவல் அறிக்கை’ மூலம் குற்றம் சாட்டப்பட்ட செய்தி வந்துள்ளது. (இதை எழுதி முடித்து கிழக்கு பதிப்பகத்திற்குக் கொடுத்துள்ளேன்.) இரு நாட்களாக தலைப்புச் செய்திகளாக வந்து கொண்டிருப்பவைகளின் பின்புலச் செய்திகள் இந்த நூலில் நிறைந்து கிடக்கின்றன.

 அடுத்து இப்போது மொழியாக்கம் செய்து வரும் நூல்: ’அம்பேத்கரின் உலகம்’. இந்நூலில் சொல்வது போல், சுதந்திரத்திற்கு முன் அம்பேத்கரின் சாதியினரான மஹர் இனத்தவர் ஆங்கிலேயப் படைகளில் பணி புரியும் வாய்ப்பளிக்கப்பட்டிருந்தனர். அப்போது நடந்த ஒரு போரில் அவர்கள் எதிர்த் தரப்பு பேஷ்வாக்களை வென்றதின் அடையாளமாக நடத்தப்படும் ‘கோரிகான் படையெடுப்பு’ என்ற நிகழ்வின் 200வது ஆண்டுவிழா பற்றிய செய்தி கடந்த இரு நாள் செய்திகளில் வந்துள்ளன. இவ்விழாவினையும் அதனோடு நடந்த ‘எல்கர் பரிஷத்’ விழாவினையும் பல சமூகவியலாளர்களைக் கைது செய்வதற்கான காரணிகளாக அரசு காண்பிக்கின்றது.

 இந்த இருநூல்களின் செய்திகளுக்கும் இன்று நடக்கும் அரசியல் அட்டூழியத்திற்கும் நிறைய தொடர்புகளிருப்பதைப் பார்க்கிறேன். அந்த இரு நூல்களையும் மொழியாக்கம் செய்யக் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.


பற்றியெரியும் காடு என்ற நூலில் ஆசிரியர் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் ஏழ்மையையும் அதனை ஒட்டி இருக்கும் அரசின் பொருந்தாத ‘பேராண்மை’யையும், அதனை ஒட்டி எழுந்துள்ள ‘மக்கள் காவல் படை’களும் ஏழை ஆதிவாசிகளுக்கு தரும் கொடுமைகளும் மிகத் தெளிவாகவும் விரிவாகவும் எழுதப்பட்டுள்ளன. இதில் சிறப்பாக மாவோயிஸ்டுகளின் நடைமுறைகளையும் எழுதியுள்ளார்.

பலமுறை ஆதிவாசிகள் அரசின் கடுமை, காவல்துறையின் கொடூரம், மாவோயிஸ்டுகள், ஜூதும் படையினர். மக்கள் பாதுகாப்புக் குழு, புரோக்கர்கள் என்று பல்வேறு முனைத் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க வேண்டியதுள்ளது. இந்த ஒரு கடும் சூழலில் Dr. பினாயக் சென், விக்னேஷ் சாமி போன்ற சில சமூகவியலாளர்களும், சோனி சோரி போன்ற ஒரு சில ஆதிவாசித் தலைவர்களும் முனைந்து நேரடியாகப் போராடி வருகிறார்கள். இன்னும் சக மனித உரிமைக்களுக்காகப் போராடும் பல மனிதர்கள் சமூகத்திற்காகக் குரல் கொடுக்கிறார்கள்.

இந்தக் குரல் அரசிற்கு வேப்பங்காயாக கசந்து வழிகிறது. அத்தகையோர் தொடுத்த பல வழக்குகள் இன்னும் இழுத்துக் கொண்டு முடியாமல் போகின்றன. அவைகளையும் மீறி சமூகச் செயல்பாட்டாளர்கள் தங்கள் சேவையைத் தொடர்கிறார்கள். அவர்களில் சங்கர் குஹா நியோகி போன்றோர் பெரும் வியாபாரிகளின் கூலிப்படையால் கொல்லப்படுகிறார்கள்.

அரசு மட்டும் இளைத்ததா என்ன...? கைது செய்து சிறையில் அடைத்தால் பிரச்சனையை மூடி வைத்து விடலாமென அரசு எண்ணுகிறது. அந்த எண்ணத்தின் வெளிப்பாடே இந்த கைதுகள். பலரைக் கண்காணித்து, சிலரை சோதித்து, ஐவரைக் கைது செய்துள்ளனர். இதை எதிர்த்து நீதியரசர்கள் கைது செய்யப்பட்டவர்களை வீட்டுக் காவலில் வைக்கச் சொல்லி, செயல் பாட்டாளர்களைச் சிறிதே காப்பாற்றியுள்ளது.

பாசிசம் என்றால் என்னவென்றே தெரியாத மக்களுக்கும் அதன் முழுப்பொருளை விளக்கித் தந்துள்ளது நமது மத்திய அரசு. காங்கிரஸ் காலத்தில் அரசை எதிர்த்து எழும் குரல்களுக்குத் தனியாகப் பெயர் ஏதும் கொடுக்கவில்லை. ஒருவேளை இடதுசாரிக் குரல் என்றோ, மாநிலக் குரல்கள் என்றோ சொல்வதுண்டு. இன்று அப்படியில்லை. மோடியை எதிர்த்து ஏதும் சொல்லக்கூடாது என்றால் கூட பரவாயில்லை. பெட்ரோல் விலை இப்படி ஏறுகிறதே என்றாலும், ஐந்நூறு, ஆயிரம் நோட்டு பிரச்சனையிலிருந்து எதைத் தொட்டாலும் அந்தக் குரல் ‘ஆண்டி-நேஷனல் குரல்’ என்றாகி விடுகிறது.


மோடியைத் திட்டினால் அபச்சாரமாகி விடுகிறது. மீடியாக்கள் முடக்கப்பட்டு விட்டன என்று தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. போனால் போகட்டும். மீடியாக்களை நடத்துபவர்கள் வியாபாரிகள். விளம்பரங்களை வைத்தே அவர்களை முடக்கி விடலாம், நம் அரசிற்கு அது அத்தனை எளிது. செவ்வன செய்து முடித்து விட்டார்கள்.

இப்போது அறிவுஜீவிகளின் குரல் வளைகள் அரசின் அடுத்த குறி போலும்.

மோடி நம்மை எங்கு அழைத்துச் செல்கிறார்?
கேள்விகள், அவை தமிழ்நாட்டு விவாசாயிகள் கேட்டாலும் பிடிக்காது ... சமுக செயல்பாட்டாளர்கள் கேட்டாலும் பிடிக்காது. அதைவிட அவைகளுக்குப் பதில் சொல்வது தனக்கு இழுக்கு என்ற நினைப்பு அவருக்கு.
ஒரே மூச்சில்  ....  G.S.T.
ஒரே மூச்சில்  ...    NEET
ஒரே மூச்சில் ...     SAGAR MALA
ஒரே மூச்சில் ...     அம்பானியின் கையில் போர்விமானத் தயாரிப்பு


இன்னும் 2019ல் மீண்டும் வந்து விட்டால் எங்கே கொண்டு போய் சேர்ப்பார்?



*

இன்றையத் தகவல்:


டாலர்  =  65  சில்லறை (!)

பெட்ரோல் = 81 சில்லறை (!)






 *

Tuesday, August 14, 2018

997. வடக்கு வளர்கிறது ... தெற்கு தேய்கிறது ....







நேற்று ஒரு வங்கி சென்றிருந்தேன். மேலாளரின் அறையில் அமர்ந்து அவரிடம் ஒரு சின்ன ஐயம் கேட்டுக் கொண்டிருந்தேன். கல்லூரி மாணவி ஒருவர் அவரது தாயுடன் அந்த அறைக்குள் நுழைந்து தன் முதுகலை வகுப்பிற்காக கல்விக் கடன் வேண்டுமென்று கேட்டார். மேலாளர் இணைய தளம் ஒன்றின் பெயரைச் சொல்லி அதன் மூலமாகத்தான் கடன் உதவி பெற வேண்டும். அதில் நீங்கள் எந்த வங்கியைக் குறிப்பிடுகிறீர்களோ அந்த வங்கியின் மூலம் உங்களுக்குக் கடன் கிடைக்கலாம் என்று சொல்லி அனுப்பினார்.

 அப்பெண் சென்றதும் நான் மேலாளரிடம் வங்கிக் கடன்கள் எல்லாமே மத்திய அரசின் பொறுப்பில் உள்ளதா என்று கேட்டேன். ஆம் என்றார். ஒவ்வொரு மாநிலத்திற்குமான எண்ணிக்கைகள் என்று ஏதாவது குறிப்பிட்டுள்ளார்களா என்று கேட்டேன். அப்படியேதுமில்லை என்றார். அப்படியானால் மொத்த வங்கிக் கடன் கொடுப்பதில் குஜராத்திற்கு 100 கொடுத்து நம் மாநிலத்திற்கு 10 மட்டும் கொடுக்கலாமே என்று கேட்டேன்.

என்னடா இந்த ட்ரவுசர்காரன் இப்படிக் கேட்கிறானே என்று யோசித்திருப்பார் போலும். இளையவர். நான் இருக்கும் இடத்திலிருந்து இதற்குப் பதில் சொல்ல முடியாது. வெளியே வேண்டுமானல் இதைப் பற்றிப் பேசலாம் என்றார் சிரித்துக் கொண்டே.  நீங்கள் என்னவாக வேலை பார்த்தீர்கள் என்றார். சொன்னேன்.

 அதோடு நீட் தேர்வைப் பற்றி கோடிட்டுக் காண்பித்தேன். அங்கு பொதுத் தேர்வுகள் நடக்கும் “அழகு” பற்றிச் செய்தித்தாள்களில் வந்த செய்திகளைச் சொன்னேன். அடுத்து, வினாத்தாளில் தவறான மொழிபெயர்ப்புகள் இருந்தால் அதைப் பற்றி எங்களுக்குத் தெரியாது என்கிறது தேர்வு மையம். எல்லாம் நாடு எங்கே போகிறது என்றே தெரியவில்லையே, ஐயா என்று சோகமாகச் சொல்லிவிட்டு வந்தேன்.



****** 


 நமக்குத் தெரிந்தும், தெரியாமலும் பல மாற்றங்கள் நடந்து வருகின்றன. நீட் தேர்வு பற்றி அநியாயமாக பொய் சொன்ன பாதுகாப்பு அமைச்சர், தேர்வு நடந்தபோது நம்மூரில் நடந்த அநியாயங்கள், தேர்வுத்தாளில் இருந்த தவறுகள், அதற்குத் தன் கைகளை கழுவிக்கொண்ட மத்திய தேர்வு மையம் ... தொடர்ந்து பல தொல்லைகள். கேட்பாரில்லை ...

முன்பெல்லாம் ரயில் பெட்டிகளில் இல்லாதபடி இப்போது பல அறிவிப்புகள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும் உள்ளன. கேட்பாரில்லை ...

பல இடங்களிலும் இந்தித் திணிப்பு வன்மையாக நடைபெறுகின்றன. யாரும் கேட்பாரில்லை ...

அட.. இதையெல்லாம் விடுங்க. கைத்தொலைபேசி எடுத்தால் பல முறை இந்தியில் ஏதேதோ பேசுகிறார்கள். நடப்பது அவர்களது வியாபாரத்திற்காக. இருந்தும், நமக்குப் புரியாது என்று தெரிந்த போதும், நமக்கு அது எரிச்சலை அளிக்கும் என்று தெரிந்த பிறகும் இந்தியை இறுகப் பிடித்து நம்மை நோகடிக்கிறார்கள்.

  சத்தமின்றி .. யுத்தமின்றி ... 

 வடக்கு வளர்கிறது ... தெற்கு தேய்கிறது .... யாரும் கேட்பாரில்லை ...





 *


Monday, August 13, 2018

996. அடிவயிற்றில் புளி கரைக்கும் மோடி

பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி மோடியிடம் எழுப்பிய நல்ல சில கேள்விகளையும் அதனோடு இணைந்த சில கருத்துக்களை தமிழ் இந்து திசையில் சஞ்சீவிகுமார் எழுதிய இந்தக் கட்டுரை  ஜூலை 29, 2018 வெளி வந்ததுமே அதைப் பற்றி எழுத நினைத்தேன். சோம்பேறித்தனத்தால் நின்று போனது. ஆனாலும் தொட்டதை விட்டு விடக்கூடாது என்று நினத்து, இப்போதாவது எழுதி விடுவோமென நினைத்து எழுதுகிறேன்.

இக்கட்டுரை வாசித்ததும் 2019ல் வரும் தேர்தல் மட்டும் தான் பூதாகரமாக நினைவுக்கு வந்தது. அந்த தேர்தலிலும் மோடி வந்து விடக் கூடாதே என்ற பயம் அடி வயிற்றைப் பிசைந்தது. நமக்குத் தோன்றுவதை இன்னும் நாலு பேருக்குக் கட்டாயம் சொல்லிவிட வேண்டுமென்று நினைத்து எழுதுகிறேன்.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ராணுவ ஒப்பந்தம் ஒன்று தனியார் நிறுவனமான ரிலையன்ஸுக்குத் தரப்பட்டிருக்கிறது.  ஆனால் இன்று வந்த செய்தி ஒன்று பிரான்ஸிற்கு மோடி செல்லும் நேரத்தில் அம்பானி தற்செயலாக பிரான்ஸில் இருந்தார் என்று சொல்கிறது. நல்லதொரு தற்செயல்!

 இந்தியாவில் பொதுத் துறை நிறுவனங்களின் அஸ்தமனக் காலம் இது. தாராளமயமாக்கல் தொடங்கியபோதே அதற்கான அறிகுறிகள் தொடங்கிவிட்டாலும் இப்போது அது அழிவின் உச்சகட்டத்தில் இருக்கிறது. அரசு நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதில், பெரும்பணக்காரர்களுக்கு வங்கிப் பணத்தை வாரி இறைப்பதும் அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடுவதற்குத் துணை நிற்பதும் நம் மோடி அரசிற்கு வாடிக்கை தானே!.

ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கடந்த 2007-ல் காங்கிரஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ‘தொழில்நுட்ப பரிமாற்ற’ ஒப்பந்தத்தின்படி ரஃபேல் போர் விமானத்தின் மொத்த தொழில்நுட்பமும் இந்தியாவின் வசப்படும். அதன் பிறகு இந்தியா நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் பிரான்ஸ் நிறுவனத்தின் தயவு இல்லாமல் ரஃபேல் போர் விமானங்களை இஷ்டம்போல தயாரித்துக்கொள்ளலாம். (ஆனால் 52,000 கோடிக்குப் பேசப்பட்ட ஒப்பந்தம் மாறி அது 90,000 கோடி வரை உயர்ந்துள்ளது, அதற்குக் காரணத்தை காங்கிரஸ் கட்சியிடம் தான் கேட்க வேண்டும்.)

 ஹெச்.ஏ.எல்-க்கு இழைக்கப்பட்ட துரோகம்! 

இப்போது முற்றிலும் புதிய ஒப்பந்தம். முதல் வேலையாக ஒப்பந்தத்திலிருந்து எந்தக் காரணமும் சொல்லாமல் ஹெச்.ஏ.எல். கழட்டிவிடப்பட்டிருந்தது. 126 விமானங்கள் ரூ.90,000 கோடிக்கு பதிலாக 36 விமானங்கள் ரூ.60,000 கோடிக்கு வாங்குவதாக மாற்றப்பட்டிருந்தது. ஒரு விமானத்துக்கான விலை ரூ.714 கோடியிலிருந்து ரூ.1,611 கோடியாக உயர்ந்திருந்தது. மிகப் பெரிய அதிர்ச்சியாக ‘தொழில்நுட்ப பரிமாற்றம்’ ரத்துசெய்யப்பட்டிருந்தது. இதனால், நம் வசமாகவிருந்த மிகப் பெரிய விமான தொழில் நுட்பத்தை நாடு இழந்தது. இதை எல்லாவற்றையும்தான் நாடாளுமன்றத்தில் கேட்டார் ராகுல். ஆனால், எல்லாவற்றுக்கும் ஒரே பதிலாக மோடி, “நான் ஏழைத் தாயின் மகன்” என்கிறார். பதில் இது அல்லவே மோடி!

சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா நாடு? 

நடக்கும் மொத்த விஷயங்களையும் முடிச்சிட்டுப் பார்த்தால், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா தனது பாதையிலிருந்து படிப்படியாக விலகி, அறிவிக்கப்படாத சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்கிறதோ எனச் சந்தேகங்கள் எழுகின்றன. 

மோடியின் போக்கு நிச்சயம் மிகப்பெரும் பயமுறுத்தலாகவே உள்ளது. சாகர் மாலா என்று வேதாந்தாவிற்கு ஒரு திட்டம். பாதுகாப்பு முழுவதும் அம்பானி பொறுப்பு என்பது போல் அடுத்த திட்டம். நடப்பது மோடி ஆட்சியா, நாலைந்து பணக்காரர்களின் ஆட்சியா என்று பயமுறுத்துகிறது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரும் சமயத்திலும் இப்படி ஒரு அடிதடி ஆட்சியை, சர்வாதிகரத்திற்கு நம்மை இழுத்துச் செல்லும் மோடியை நினைத்தால் பயமாக இருக்கிறது.

இன்னும் ஒரு ஐந்தாண்டு அவரை நாமும் நாடும் தாங்குவோமா என்ற அச்சத்தின் விளைவே இந்தக் கட்டுரை. 





 *



 

995. SO EASY TO BECOME A வல்லரசு

*