Showing posts with label ”அதீதம்”. Show all posts
Showing posts with label ”அதீதம்”. Show all posts
Saturday, May 22, 2021
Saturday, May 02, 2015
834. புளியாய்க் கரைந்த கணக்குப் புலி - (தருமி பக்கம் 27)
*
*
நான் இப்போது கூட arithmetic-ல் புலிதான். விழுக்காடு போடுவது,
சின்னப் பெருக்கல் / வகுத்தல் /கூட்டல் போடுவது இன்னும்
பிடிக்கும். கடைகளில் சின்னக் கணக்குகளுக்கும் கால்குலேட்டர் பயன்படுத்துவது
பார்த்து எரிச்சல் கொள்ளும் அளவு கணக்கில் புலி தான். மனக்கணக்காகப் போட்டுப்
பார்ப்பதும் பிடிக்கும். அட ... எந்த அளவு நான் கணக்கில் புலி என்றால் அமெரிக்கா போயிருந்த போது, சைனாக்கார
நண்பர் ஒருவர் நம் கணக்குத் திறமையைப் பார்த்து, ‘இதனால் தான் உங்கள் ஊர் ஆளுகள் software-ல் அம்புட்டு திறமையாக இருக்கிறார்கள்’ என்று நற்சான்றிதழ் கொடுத்தார்.
அது எப்போதுன்னா ....
பத்துப் பதினாலு வருஷத்துக்கு முன்னால் நூறே நூறு நாள்
மட்டும் அமெரிக்கா போனோமா ... அப்போ ஒரு சைனாக்கார பேராசிரியர் ஒருவரோடு house mate-ஆக இருந்தேன். இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி புத்தி. எந்தக் கடைக்குப்
போனாலும் அங்கிருக்கும் சாமான்களின் விலையை நம்மூர் காசுக்கு கணக்குப் போட்டு
பார்ப்போம். அப்போ நம்மூர் ரூபாய் 52க்கு ஒரு டாலர் என்று இருந்தது என்று நினைக்கிறேன். ஐம்பதால் பெருக்குவது தான்
எளிதாயிற்றே... நான் உடனே இத்தனை டாலருக்கு நம்மூர் கணக்கில் எத்தனை ரூபாய் என்று
கணக்குப் போட்டு விடுவேன். அவர் டாலருக்கு எட்டால் பெருக்க வேண்டியதிருக்கும்.
அவர் அதற்காக தன் orgnaizer
எடுத்து calculator
தேடி கணக்குப் போட வேண்டியதிருக்கும். ஆனால் நான் அவரோடு
இருக்கும் போது என்னிடம் கேட்பார். எட்டாம் வாய்ப்பாடுதான் நமக்கு எளிதாயிற்றே ...
கேட்டதும் சொல்லிவிடுவேன். எட்டெட்டு என்றால் டக்குன்னு 64
அப்டின்னு சொல்லிடுவோம். ஆனால் 18
x 8 என்றால், 10 x 8 =80 + 8 x 8 = 64; இரண்டையும் சேர்த்தால்144 அப்டின்னு சொல்லிடுவோம்ல .. அது மாதிரி நான் அவருக்கு மனக்கணக்காக, அவர் calculator எடுப்பதற்குள் சொல்லி விடுவேன். எப்படின்னு கேட்டார். இந்த 18 x 8 கணக்கு
சொன்னேன்; அவருக்குத் தலை சுற்றியது. என்னால முடியலைங்க என்றார். அப்போது தான் நமது
கணக்கு வித்வத்தையை புகழ்ந்து சொல்லிட்டு,
அப்படியே நம்ம software
ஆளுகளின் புகழ் பாடினார்.
இப்படி arithmetic-ல் புலியாக இருந்த (இருக்கும்) எனக்கு mathamatics-தான் ஆகாமல் போச்சு.........
அந்தக் காலத்தில் உயர்பள்ளிகளில் 6
வருடங்கள். ஒவ்வொரு வகுப்பும் பார்ம் - Farm
- என்று அழைக்கப்படும்.
V Farm வந்த உடன் வகுப்புகள் இருவகையாகப் பிரிக்கப்படும். அதுவும் கணக்கை மட்டும்
வைத்தே பிரிக்கப்படும். கணக்குப் புலிகளுக்கு Composite Mathematics என்றும்,
சாதா கேசுகளுக்கு General Mathematics என்றும் இருக்கும். நாம் தான் IV
Farm வரை கணக்குப் புலியா ... அதனால் அப்படியே Composite Mathematicsக்கு அனுப்பி விட்டார்கள். அப்போதெல்லாம் இந்த குரூப்புக்கு கிராக்கி தான். 'A' Section boys நாங்க.
V Farm-ல் கணக்குக்கு யாகப்பன் என்று ஒரு இளம் ஆசிரியர் வந்தார். வயதான ஆசிரியர்கள்
பெரும்பாலும் வேட்டி,
கோட் என்று வருவார்கள். இவர் பேண்ட், கோட்
என்று வருவார். ஒல்லியாக,
உயரமாக இருப்பார். நான் முதலில் அவருக்கு வைத்த
‘பட்டப்பெயர்’ ஆப்ரஹாம் லிங்கன். தாடி மட்டும் வைத்தால் லிங்கன் மாதிரியே
இருப்பார். புதிதாக வந்திருந்தாலும் என் அப்பாவிற்கு நண்பராக ஆகியிருந்தார். ஆக
அவருக்கு நான் ரொம்பவும் ”வேண்டப்பட்டவனாக” ஆகி விட்டேன். ரொம்ப ஸ்பெஷலாக என்னைக்
கவனிக்க ஆரம்பித்து விட்டார்.
இப்போ கணக்கில் புதிதாக வந்த அல்ஜிப்ராவும், தேற்றங்களும்
ராட்சசர்களாக மாறிப் போனார்கள். தேற்றங்கள் குட்டி போட்டு அதற்கு 'ரைடர்'
அப்டின்னு பேர் சொன்னாங்க. இந்த மூணு பிசாசுகளும் என்னை
ரொம்பவே கொடுமைப் படித்திட்டாங்க. என்ன பிரச்சனை என்றால் எனக்கு மனப்பாட சக்தின்னு
ஒண்ணு சொல்லுவாங்களே அது 0-க்கு ரொம்ப பக்கத்தில் தான் இருக்கும். அட
... உண்மையைச் சொல்லிர்ரேனே .... மனப்பாடசக்தி என்பதும் என்னிடம் அன்றும் இன்றும்
கிஞ்சித்தும் இல்லை.
(a+b)2 இதை ஒப்பேத்திட்டேன். (a+b+c)2 இது கூட பரவாயில்லை .. தேத்திட்டேன். (a+b+c)3 இங்க உதைக்க ஆரம்பிச்சிது. அப்படியே
மனப்பாடம் பண்ணணுமாமே .. உழுந்துட்டேன். எழுந்திருக்கவே முடியலை.
இதை விட்டா தியரம் / தேற்றம். இதுல ஒரு வார்த்தை கூட
மாறக்கூடாதாம்; அப்படியே சொல்லணுமாம். நம்மளால முடியுமா அந்த வித்தையெல்லாம்? நிறைய பார்முலாக்கள். அதெல்லாம் கொடுத்து மனப்பாடம்
பண்ணணும்னாங்க. அதுக்கு நான் எங்க போறது. இந்த தியரங்களை வைத்து ‘ரைடர்’
போடணும்னாங்க. திணறிட்டேன்.
இதுல நம்ம யாகப்பன் வாத்தியார் நம்மட்ட ரொம்ப
பிரியமாயிட்டார். என்ன ஆச்சுன்னா.... அப்பா சாரோட நண்பராயிட்டாரா ... அதுனால
எனக்கு ஸ்பெஷல் கவனிப்பு கொடுக்க ஆரம்பிச்சிட்டார். முதல் பெஞ்சில் ஒரு ஓரத்தில
உக்காந்திருப்பேன். பக்கத்தில வந்து நிப்பார்; நல்ல எலும்பா இருபாரா ... அவர் கையை மடக்கி, குட்டு
வைக்கிறது மாதிரி தலைக்கு மேல வச்சிக்கிட்டு ஏதாவது ஒரு கேள்வி கேட்பார்.
மனப்பாடப் பகுதின்னா என்ன ஆயிருக்கும்.ஒண்ணும் தெரிஞ்சிருக்காது ... நச்சுன்னு
மண்டையில் ஒண்ணு விழும். கொஞ்ச நஞ்ச ஞாபகம் இருக்கிறதும் ஒண்ணுமில்லாமல் போகும்.
ஆக கணக்கில நம்ம ‘புலித் தன்மை’ வேகமாக மறைஞ்சி போக ஆரம்பித்தது. என்னடா .. போன
வருஷம் வரை நல்லா கணக்கு போட்ட பயல் இந்த வருஷம் இப்படி ஆயிட்டானே .. ஏன்னு எங்க
அப்பாவோ, யாகப்பன் சாரோ கொஞ்சம் யோசிச்சிருந்தா நிலமை மாறியிருக்கலாம். அதெல்லாம்
இல்லை... நமக்கும் கணக்குக்கும் இருந்த ஒற்றுமை ஒன்றும் இல்லாமல் போச்சு ... ஒரே sliding தான்.
அப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன். இது வாழ்க்கையின் திசையையே
முற்றிலும் மாற்றி வச்சிருச்சு. எப்படின்னு கேட்கிறீங்களா ... சொல்றேன் ...
சொல்றேன்.
*
Monday, April 20, 2015
830. தருமி பக்கம் (26) - நான் ஒரு கணக்குப் புலியல்லவா ...?
*
ஐந்தாம் வகுப்பில் லூக்காஸ் வாத்தியாரிடம் நல்ல பெயர் வாங்கினேன். ஆறாம் வகுப்பில் ஆங்கில ஆசிரியர் சந்தியாகு சாரிடம் நல்ல பெயர் வாங்கினேன். எட்டாவது வகுப்பில் ஆங்கில வாத்தியாரிடம் செமத்தியாக ‘அடி’ வாங்கினேன். (இந்தப் பழங்கதைகள் பற்றித் தெரிய வேண்டுமானால் இப்பதிவிற்குப் போக வேண்டும்.) ஆனால் கணக்கு வாத்தியார் ‘சவுக்கடி’ சவரிமுத்து சாரிடம் ரொம்ப நல்ல பெயர் வாங்கினேன்.
சாருக்கு ஏன் சவுக்கடின்னு பெயர் வந்திச்சுன்னா, அவர் வேட்டி கட்டி, மேலே கோட் போட்டுதான் வகுப்பிற்கு வருவார். அவர் கோட்டுப் பைக்குள் ஒரு சவுக்கு மாதிரி ... ஏதோ ரப்பரில் செய்ததாம் ... அதை வைத்திருப்பாராம். எடுத்து அடிச்சார்னா ... அம்புட்டு தான். இப்படித்தான் சீனியர் பசங்க சொல்லியிருக்காங்க. ஆனாலும் அவரை ஒரு தடவை கூட சவுக்கோடு பார்த்ததில்லை. அதற்கும் ஒரு காரணம் சொல்லி விட்டார்கள். இப்போ கொஞ்சம் வயசாயிருச்சில்ல ... அதான் இப்போ அந்தப் பழக்கத்தை விட்டுட்டார் என்றார்கள்.
என் கூட அந்த எட்டாம் வகுப்பில் சூரி அப்டின்னு ஒரு நண்பன் இருந்தான். முழுப்பெயர் சூரிய நாராயணன் அப்டின்னு நினைக்கிறேன். அவன் வீடு கூட இன்னும் நினைவில் இருக்கிறது. சிந்தாமணி டாக்கீஸ் இருக்கும்ல ... அதில இருந்து ரோட்ல வடக்குப் பக்கம் போனா நேவி பேனா - அந்தக் காலத்தில் ரொம்ப பேமஸ் பேனா அது; பேனா லீக்கே ஆகாது. இங்க் போட்டுட்டு கழுத்தை நிறைய சுத்திதான் மூடணும்.அதுனால லீக்கே ஆகாது - அந்தக் கம்பெனி இருக்கும். அதைத் தாண்டியதும் பிரியாணிக்கு இன்னைக்கு வரை ரொம்ப பேமஸ் ஆன ‘அம்சவல்லி பவன்’. அதை அடுத்ததும் முனிச்சாலை ரோடு வலது பக்கம் திரும்பும். அந்தத் திருப்பத்தில, முக்கில இருந்த முதல் வீடு. வீட்டு முன்னால அந்தக் காலத்து இரும்புக் கதவு - இழுத்து உட்டா மடங்கிக்குமே - அந்த இரும்புக் கதவு இருக்கும். (இப்போ சமீபத்தில் அந்த வீட்டைப் பார்த்தேன். அதே கம்பிக் கதவு இருந்தது. வீடு பழசா, பயன்படுத்தப் படாமல் இருந்தது. பக்கத்து கடையில் கேட்கலாம்னு போனேன். சின்ன வயதுப் பையன் இருந்தார். வந்து விட்டேன்.இன்னும் புலன் விசாரணயைத் தொடரணும்னு ஆசை.)
நானும் சூரியும் நல்ல தோஸ்துகள். ஆனால் படிப்பில் நல்ல போட்டி. எனக்குத் தெரிந்து படிப்பில் நான் போட்டி போட்ட ஒரே ஒரு ஆள் சூரி மட்டும் தான்னு நினைக்கிறேன். நானும் அவனும் மாறி மாறி முதலிரண்டு இடங்களில் இருப்போம். ஆனால் எட்டு, ஒன்பதாம் வகுப்பிற்குப் பிறகு என் வாழ்வில் ஒரு பெரிய அஸ்தமனம் நடந்து, வாழ்கையின் திசையே முழுவதுமாகத்தான் மாறிப் போச்சே. அது ஒரு பெரிய சோகம். பெரிய வாய்க்காலில் திமிறலோடு வரும் தண்ணீரை ஒரு சிறிய வடிகாலில் திருப்பி விட்டு, அங்கு நீரோட்டம் வற்றிப் போய் ... அட .. அந்த சோகத்திற்குப் பிறகு வருகிறேன். ஆனாலும் இப்போது நினைத்தாலும் மனசு கஷ்டமாக இருக்கிறது. எப்படி இருந்த நான் அப்படி ஆகிப் போனேன்! :(
சவுக்கடி சாரிடம் ஒரு பழக்கம் இருந்தது. கணக்குப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்திலும் முதல் மூன்று கணக்குகள் ... அதன் பின், கடைசி மூன்று கணக்குகள் என்று மாணவர்களை வீட்டுப் பாடமாகப் போட வைப்பார். அதற்கு முன் அத்தியாயத்தில் இருக்கும் ‘மாடல்’ கணக்குகளைப் போட்டுச் சொல்லிக் கொடுப்பார்.
எங்கள் கணக்குப் புத்தகத்தில் முதல் மூன்று கணக்குகளும் மிகவும் எளிதான கணக்குகளாக இருக்கும்; கடைசி மூன்றும் செம டஃப். முதல் மூன்றையும் போட்டு விட்டால் ‘பிரின்சிபிள்’ புரிஞ்சிருச்சுன்னு அர்த்தம். கடைசி மூணு கணக்குகளில் ஏதாவது ஒரு “பொடி” இருக்கும். அப்படித்தான் எங்க வாத்தியார் சொல்வார். இப்போதான் அது என்னன்னு புரியுது. அந்தக் கணக்குகள் எல்லாம் நம்ம analytical brain-யைத் தட்டி எழுப்புற கணக்குகளாக இருக்கும். அந்தக் கணக்குகள் போட்டுட்டா ‘பிரின்சிபிள்’களை முழுசா பிடிச்சிட்டோம்னு அர்த்தம்.
சார் முதல்ல மாடல் கணக்குகளை வகுப்பில் நடத்துவார். அதன் பின் முதல் மூன்று, கடைசி மூன்று கணக்குகள் வீட்டுப் பாடமாகக் கொடுக்கப்படும். அடுத்த நாள் வந்ததும் வீட்டுக்கணக்குகளை நாங்கள் போட்டு வந்திருக்கிறோமான்னு செக் செய்வார். அவரிடம் யாரும் பொய் சொல்ல துணிந்ததாக எனக்கு நினைவில்லை. அடுத்து, அந்த கணக்குகளில் ஏதாவது ஒன்றை வீட்டுக் கணக்கு நோட்டிலிருந்து காப்பி செய்து போர்டில் யாரையாவது எழுதச் சொல்வார். யாரென்று தெரியாது. அதனால் எல்லோரும் ஒழுங்காக வீட்டுக் கணக்கைப் போட்டு வந்து விடுவார்கள். இல்லாவிட்டால் சவுக்கடி விழுமே என்று ஒரு பயம். அவரும் அடிக்கப் போவது போல் கோட்டுப் பையினுள் கையை விடுவார். ஆனால் சவுக்கு வெளியே வந்து பார்த்ததில்லை.
எங்க சார் என்னையும், சூரியையும் ஏதும் வீட்டுக் கணக்கு பற்றிக் கேட்க மாட்டார். அதற்குப் பதில் எந்த அத்தியாயம் என்பார். நானும் சூரியும் வகுப்பில் அவர் நடத்தியிருக்கும் அத்தியாயத்தைத் தாண்டி இரண்டு அல்லது மூன்று அத்தியாயங்களில் வீட்டுக் கணக்குகளைப் போட்டிருப்போம்.
எனக்கும் சூரிக்கும் என்ன போட்டியென்றால் இருவரில் யார் அதிக அத்தியாயம் தாண்டியிருக்கிறோம் என்பது தான். தேர்வுகளிலும் நானும் அவனும் ஆங்கிலத்திலும், கணக்கிலும் நல்ல மார்க்குகள் வாங்குவோம். அதில் யார் முதல் மார்க் என்பது எங்களுக்குள் ஒரு போட்டி.
ம்ம் ... ம்.. அப்படி ஒரு காலம்... நான் நன்றாகப் படித்த காலம். பின்னாளில் அது ஒரு கனாக்காலமாகவே மாறிவிட்டது. அதுவும் சரியாகச் சொல்ல வேண்டுமானால் கணக்குப் புலியாக இருந்த நான் கணக்கைக் கண்டு பயந்து ஓடி ... அதனால் என் வாழ்க்கைப் பயணமே திசை மாறி விட்டது.
ஆசிரியர்களின் பங்களிப்பால் வாழ்க்கைப் பயணங்கள் மாறுவதுண்டு என்று சொல்வார்கள். ஒரு நல்ல ஆசிரியரின் கவனிப்பால் என் வாழ்க்கையிலும் ஒரு பெரும் திருப்பம் நடந்தது. ஆனால் அந்தத் திருப்பம் எனக்கு ஒரு நல்ல திருப்பமாக அமையாமல் போனது. நல்ல ஆசிரியர் ... எனக்கு special attention கொடுத்தார். ஆனால் அது ஒரு very negative effect ஆகிப் போச்சு ...
என்ன ஆச்சுன்னா .......
*
வகை:
”அதீதம்”,
சொந்தக் கதை
Wednesday, August 06, 2014
783. தருமி பக்கம் (21) ..... FROM A CLEAN SLATE .......
அதீதம் இதழில் வந்த பதிவின் மறு பதிப்பு
*
to start with a clean slate - என்று ஆங்கிலத்தில் ஒர் idiom சொல்வார்கள்.
இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு tablet என்றால் என்னவென்று தெரிந்திருக்கும். ஆனால்
slate என்றால் என்னவென்று தெரியுமா என்பது சந்தேகமே. எங்கள் காலத்தில் எங்களின் முதல்
கல்வித் துணையே இது தான். இப்போவெல்லாம் பெரிய புத்தக மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு பிஞ்சுக்
குழந்தைகள் பள்ளிக்குப் போவது போல் நாங்கள்
போனதில்லை. ஒரு சின்னத் துணிப்பை. அதற்குள் ஒரு ஸ்லேட். இரண்டு மூன்று
புத்தகங்களும் நோட்டுகளும் மட்டுமே எங்களுக்கு இருந்தன. இதில் ஸ்லேட் மட்டுமே எங்கள்
கல்விக்கு முதல் பிள்ளையார் சுழி.
இது எதனால் செய்யப்பட்டது என்றெல்லாம் தெரியாது. ஆனால் ஏதோ ஒரு கல்லிருந்து
செதுக்கி எடுத்திருப்பார்கள் போலும். கருப்புக் கலரில் இருக்கும். சுற்றிலும் மரத்தால்
ஆன ப்ரேம் இருக்கும். அப்பா ஸ்லேட் வாங்கியதும் என் பெயரை தமிழில் ஒரு பக்கமும், ஆங்கிலத்தில்
இன்னொரு பக்கமும் ப்ரேமில் எழுதி விடுவார்கள். முதலில் இந்த ஸ்லேட்டில் எழுத
ஸ்லேட் குச்சி இருக்கும். இந்தக் குச்சியும் ஸ்லேட் செய்ற பொருளிலிருந்தே செய்வார்களோ
என்னவோ .. அதுவும் கருப்பாக இருக்கும். பொதுவாக இந்தக் குச்சிகள் வழு வழுன்னு எழுதாது.
நடுவில ‘கல்லுக் கோடு’ எழுதும் போது விழும். அதாவது சொற சொறன்னு எழுதிவிடும்.
சில ஆண்டுகள் கழித்து இந்த ஸ்லேட் போய் தகர ஸ்லேட் வழக்கிற்கு வந்தது.
பழைய ஸ்லேட் கீழே விழுந்தால் எளிதாக உடைந்து விடும். அநேகமாக எங்கள் ஸ்லேட்கள் இது
போல் கீழே விழுந்து கீறிப் போயிருக்கும். சுற்றியிருக்கும் ப்ரேமினால் பிழைத்திருக்கும்.
நாங்களென்ன use & throw காலத்திலா வாழ்ந்தோம்? அதனால் கீழே விழுந்தாலும்
உடையாத தகரத்தில் ஸ்லேட் வந்தது. ஆனால் இந்த ஸ்லேட் கணக்கில் இரண்டு நஷ்டக் கணக்கு
உண்டு. முதல் நட்டம் - எளிதாக இதன் மேல் அடித்துள்ள கருப்பு பெயிண்ட் போய், ஸ்லேட்
வழு வழுன்னு ஆகிவிடும். எழுதினால் எழுத்துகளே பதியாது. இரண்டாம் நட்டம் கொஞ்சம் சீரியஸானது.
ப்ரேம் கழண்டு போனாலும் ஸ்லேட்டைத் தூரத் தூக்கிப் போட முடியாது. தகர ஸ்லேட் இல்லையா..
உடையாமல் முழுசாக இருக்கும். இதனால் வெறும் மொட்டையான ஸ்லேட் கையில் இருக்கும். பல
பசங்கள் தீவிரவாதிகளாக மாறி மொட்டை ஸ்லேட்டை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த வாய்ப்புகள்
அதிகம். யாரையாவது இதை வைத்து மண்டையில் போட்டால் பெரிய வெட்டே விழும்.
இப்போ இதெல்லாம் போய் plastic slate வந்து விட்டது. இன்னொண்ணு... எழுதி
அழிச்சிக்கலாம்னு ஒரு ஸ்லேட் -magic slate அப்டின்னு வந்திருச்சு. ஆனால் இப்போ
ஸ்லேட் என்றாலே என்னென்ன தெரியாத மாதிரி ஆகிப் போச்சு. ஸ்லேட் ... குச்சிகள்
எல்லாம் தொல்பொருளாக மாறி விட்டன.
எங்கள் ஸ்லேட்டை refurbish செய்ய வேண்டியது முக்கிய கடமை. அதுவும்
தேர்வுக் காலத்திற்கு முன்பு ஸ்லேட்டைப் புதுசாக்க முழு முயற்சியெடுப்போம். அதிலும்
இரண்டு மூன்று grades இருந்தது. முதல் முறை ரொம்ப சிம்பிள். வீட்டின் அடுப்படியில்
இருக்கும் கட்டைக் கரியை எடுத்து வைத்துக் கொண்டு ஸ்லேட்டை நன்கு கழுவிக்கொண்டு
அதன் பின் எடுத்து வந்த கரியின் மெதுவான பாகம் வைத்து ஸ்லேட்டில் அழுத்தித் தேய்ப்போம்.
அதன் பின் காய வைத்து விடுவோம். காய்ந்த பின் கழுவினால் ஸ்லேட் ரெடி.
இன்னொரு advanced method ஒன்றும் இருந்தது. இதில் கரித்துண்டுகள் சிலவற்றை
ஊமத்தங்காய் என்று ஒரு செடி இருக்கும். அதன் காய்களோடுசேர்த்து அம்மியில் வைத்து அரைத்து,
அதனை எடுத்து எங்கள் ஸ்லேட்டில் தேய்ப்போம். ஆனாலும் இது முக்கியமாக பள்ளியில் உள்ள
கரும்பலகைக்கு மட்டுமே பொதுவாக இந்த advanced process நடந்தேறும். அம்மிக் கல்லுக்குப்
பதில் பள்ளிக்கூடத்தில் எங்காவது ஒரு மூலையில் உடைந்த அம்மிக் குழவி ஒன்று கட்டாயம்
கிடைக்கும். ஆசிரியர்கள் கரும்பலகைக்கு ஒரு நாள் ஓய்வு கொடித்து, இந்த வேலை மேற்கொள்ளப்படும்.
கரி கொண்டு வர சிலர் ... ஊமத்தங்காய் பறித்து வர சிலர் ... அரைத்துக் கொடுக்க சிலர்
.... கரும்பலகையில் தேய்க்க சிலர் ... கடைசியில் கரும்பலகையைக் கழுவ சிலர். அப்பாடா
...ஒரு பெரிய division of labour ! சட்டையெல்லாம் கரியாக்கி வீட்டில் கிடைத்த
அடிகளைப் பற்றிய விளக்கம் அடுத்த நாள் கட்டாயம் கிடைக்கும்!
ஸ்லேட் ரெடின்னா குச்சியும் ரெடியாக வேண்டுமே. அந்த கருப்புக் குச்சிக்கு
மட்டும் தான் இந்த மெதட் பயன் படுத்துவோம். குச்சி மேல் லேசாக நல்லெண்ணெய் தேய்த்து.
நல்ல கல் தரை மேல் குச்சியை வைத்து பாதத்தை வளைத்து அதன் மேல் வைத்து லேசாக மேலும்
கீழும் குச்சியைத் தரையில் தேய்ப்போம். இதில் ஒரு பிரச்சனை. எவ்வளவு மெல்ல தேய்த்தாலும்
குச்சி உடைந்து விடும். ஒரு முழு நீளக் குச்சி இந்த மெக்கானிசத்தால் துண்டு துண்டாக
உடைந்து விடும். ஆனாலும் ‘மாப்போல’ எழுதும்ல ..! அதாவது மாவு மாதிரி எழுதும்ல ..! அதைவிட
குச்சி உடைந்து விடக்கூடாதென்பதற்காக, குச்சியை அதிகமாக அழுத்தாமல் மெல்ல மெல்ல அதனைத்
தேய்க்க வேண்டும். அப்படித் தேய்க்கும் போது நமது கடமையில் கண்ணாக .. அல்லது காலாக
இருக்க வேண்டும். நினைவு வேறு எங்கு திரும்பினாலும் காலின் அழுத்தம் கூடி குச்சி உடைந்து
விடும் என்ற அபாயகரமான நிலை. உண்மையிலேயே இது ஒரு மோன தவம் மாதிரி. அம்புட்டு ஜாக்கிரதையாக
செய்யணும்!
ஸ்லேட் பரிமாண வளர்ச்சில் கட்டை ஸ்லேட்டிலிருந்து தகர ஸ்லேட் வந்தது.
இதே போல் எழுதும் குச்சிகளிலும் பரிணாம வளர்ச்சி இருந்தது. முதலில் கருப்புக் குச்சி
மட்டும் தான் கிடைக்கும். கொஞ்ச நாள் கழித்து மாவில் செய்த கலர் குச்சிகள் கிடைத்தன.
பழையதுக்குப் பெயர் ஸ்லேட் குச்சி. இப்போ இருவகை குச்சி வந்ததால் இந்தப் புதிய குச்சிக்கு
’மாக்குச்சி’ என்று நாமகரணமிட்டோம். பழைய ஸ்லேட் குச்சி மாதிரி இதுவும் அதே நீளத்தில்
கிடைக்கும். அதுவும் குச்சியின் சைடில் கலர் கலரா கோடுகள் இருக்கும். ஆனாலும் சோகம்
என்னன்னா ... குச்சியில் கலர்க் கோடுகள் இருக்கும். ஆனால் எழுதும் போது ஒரே வெள்ளைக்
கலரில் தான் எழுதும். only B & w; no colour at all! :(
இந்த ஸ்லேட் & குச்சிகளோடு வேறு சில accessories அதிர்ஷ்டம் இருந்தால்
அவ்வப்போது கிடைக்கும். அவைகள் கடல்நுரையும், கடல் குச்சிகளும்.
|
"கடல் நுரை”
கடல்
அலைகள் கரையில் வந்து மோதும் போது நுரையாக இருக்கும். இந்த நுரையெல்லாம் ஒண்ணா சேர்ந்து,
அதன் பின் வெயிலில் காய்ந்து இது உருவாவது என்று எங்கள் ‘ஆராய்ச்சி மூளை’ சொல்லியதால்
இதை கடல் நுரை என்று எல்லோரும் சொல்வோம். இது நாகணவாய் - ஆக்டோபஸ்ஸிற்கு க்ளோஸ் சொந்தக்காரர்
- என்ற கடல்வாழ் உயிரின் ஷெல். பரிணாமத்தில்
உடலின் உள்ளே சென்று விட்டதாம். இதன் உட்புறம் மெதுவாக இருக்கும். இந்தக் ‘கடல் நுரை’
வைத்து அழித்தால் ஸ்லேட் நன்றாக இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.
|
|
SEA URCHIN
அடுத்து இன்னொரு கடல்வாழ் உயிரியின்
மேல் தோலில் உள்ள சின்ன மெல்லிய குச்சிகள் - நாங்கள் இதைக் கடல் குச்சி என்று சொல்வோம்.
ஆனால் சுண்ணாம்பினால் ஆன இந்தக் குச்சிகள் பெரும்பாலும் கீச் ..கீச்.. என்று தான்
எழுதும். இருந்தாலும் கிடைத்தற்கரிய பொருள் என்பதால் எங்களுக்கு அதன் மேல் ஒரு கிக்
உண்டு
|
பெரியப்பாவின் மகன் - அண்ணன் ஒருவன் உண்டு. என்னைவிட இரு வயது மூத்தவன்.
எல்லா நல்ல விஷயமும் ஏனைய விஷயமும் காதில் முதலில் ஓதியவன் இவனே. நானும்
இவனும் சேர்ந்தே பள்ளிக்கூடம் செல்வதுண்டு. அவன் ஐந்தாவது படிக்கும் போது ஒரு நாள்
நடந்து போய்க்கொண்டிருந்தோம். (அப்புறம் என்ன ஆட்டோவிலோ... காரிலோவா போயிருக்க முடியும்?!)
அப்போது தனது ஸ்லேட்டை எடுத்து ஏதோ எழுதுவது போல் செய்தான். பின் மெல்ல கையால் எழுதியதை
அரையும் குறையுமாக அழித்தான். கீழே தன் பெயரை முழுவதுமாக எழுதினான். என்ன பண்ற? அப்டின்னு
கேட்டேன். ’வீட்டுப்பாடம் எழுதலை ... அதான் இப்போ எழுதினேன்’ என்றான். ஸ்லேட்டில் எழுத்து
இருந்தது மாதிரியும் இல்லாதது மாதிரியும் தெரிந்தது. என்னன்னு கேட்டேன். ‘நான் வீட்டுப்பாடம்
எழுதுறதெல்லாம் இப்படித் தான்’ என்றான். நான் முயற்சித்தேன். execution சரியாக
வரவில்லை. உட்டுட்டேன்!
*
*
Tuesday, July 29, 2014
781. தருமி பக்கம் (20) - அம்மா வீடு
*
அப்பாவின் ஊருக்குப் போகும் போது அங்கே நடக்கும் பல சிறு பிள்ளை விளையாட்டுகள், ‘தீவிரச் செயல்கள்’ ஏதுமில்லாமலும், மற்றைய என் வயது பிள்ளைகளோடு போடும் ஆட்டங்கள் எதுவுமில்லாமலும் அம்மா ஊரில் வீட்டுக்குள்ளேயே சித்தி, பாட்டியுடன் நேரம் போகும். எப்போதாவது தான் பிள்ளையார் கோவில் பக்கம் போவேன். மற்றபடி வீட்டில் மட்டும் தான் இருப்பேன். பஞ்சமில்லாமல் புளியங்கொட்டை இருக்கும். அதை வைத்து ஒத்தையா ரெட்டையா விளையாட்டு நடக்கும். இல்லாவிட்டால் பாண்டி விளையாட்டு. ஆனால் இரண்டாவது விளையாட்டு நமக்கு ஒத்து வராது. ஏனெனில் அங்கு விளையாடுபவர்களுக்கு எந்தக் குழியில் ஆரம்பித்தால்
நிறைய முத்து கிடைக்கும் என்பதெல்லாம் தெரியும். அதை மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ளும் வரை எனக்கு ஞாபக சக்தி சுத்தமா கிடையாது. எப்போதாவது சாயங்காலம் கண்ணா மூச்சி ஆட்டம் இருக்கும். இதைத் தவிர நினைவில் இருப்பதெல்லாம் சித்தியுடன் இருந்தது தான்.
நினைவில் இருப்பதெல்லாம் இரு நினைவுகள் மட்டுமே. ஒன்று கடவுள் சம்பந்தப்பட்டது; இரண்டாவது மனிதன் தொடர்புடையது. முதலில் ‘கடவுளைப்’ பற்றிப் பார்ப்போமா ...?
தாத்தா வீட்டிற்கு அருகில் ஒரு ஆழமான கமலைக் கிணறும் அதன் இரு பக்கமும் இரு தோட்டங்களும் உண்டு; கிணற்றின் கிழக்குப் பக்கம் உள்ள தோட்டம் பெரியது; நடுவில் ஒரு பெரிய மாமரம் உண்டு; சுற்றி என்னென்னவோ பயிர்கள் போடுவார்கள்.மேற்குப் பக்கம் உள்ள தோட்டத்தில் அதிகமாக பயிர்கள் பார்த்ததில்லை; ஆனால் அதன் வடக்கு ஓரத்தில் நிறைய செடிகளும் ஒரு பெரிய சமாதியும் இருக்கும். என் பூட்டனாரும், பூட்டியும் புதைக்கப்பட்ட இடங்களாம். சமாதியில் பெயர்கள் போன்ற எதுவும் இருக்காது; இந்தச் சமாதிக்குப் பக்கத்தில் வெகு காலம் ஒரு மனோரஞ்சிதச் செடி இருந்தது. இதைத் தவிர பச்சை வண்ணத்தில் வேறு ஏதேனும் பூ இருக்கிறதா ... தெரியவில்லை.
நான் ஊருக்குப் போகும் பல நேரங்களில் இந்தச் சமாதியில் பூஜை நடக்கும். திவசமாக இருக்கலாம். அப்போது அந்தச் சமாதியில் நைவேத்தியம் எல்லாம் செய்வார்கள். அது முடிந்ததும் அதை எல்லோருக்கும் கொடுப்பார்கள். முதலிலிருந்தே மறுத்து விட்டேனா ... இல்லை.. பின்னால் அப்பா சொல்லிக் கொடுத்து மாறினேனா என்று தெரியவில்லை. அதை வாங்க மறுத்து விட்டேன். அதோடு எனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டதை அங்கே
சொன்னேன்: "இது பேய்க்குப் படைக்கப்பட்டது; நான் சாப்பிட மாட்டேன்”. இப்போது நினைத்துப் பார்த்தாலும் வெட்கமாக இருக்கிறது. முன்னோர் முன்னால் வைத்ததை பேய்க்குப் படைக்கப்பட்டது என்று நான் சொன்னதும் என் இந்து உறவினர்களுக்கு எப்படியிருந்திருக்குமோ தெரியவில்லை; ஆனால் அது பெரிய தவறு என்று இப்போது புரிகிறது. அந்த வயதில் சொல்லிக் கொடுத்ததை அங்கே வாந்தி எடுத்திருக்கிறேன். இப்போதும் இளம் வயதில் ஆப்ரஹாமிய மதங்கள் மடத்தனமாக போதிக்கும் சில மத மாச்சரியங்களை நினைத்து வருத்தப் படுகிறேன்.
இரண்டாவது மனிதன் தொடர்பானது என்று சொல்லியிருந்தேன். அது அம்மா வீட்டிற்கு நான் வந்திருப்பது தெரிந்ததும் என்னை உடனே ஓடிவந்து பார்க்கும் ஏமன் என்பவரைப் பற்றியது. எமன் என்ற பெயரைத் தான் இப்படி ஏமன் .. ஏம(ன்) என்று சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். என்னைப் பார்க்க வரும் ஏமன் வீட்டு முற்றம் வரைதான் வருவார். நான் வெளியே வந்ததும் என்னைத் தூக்கி வைத்துக் கொள்வார். ஒரு வேட்டி மேலே ஒரு துண்டு. அந்த துண்டும் வீட்டிற்குள் வரும்போது தோளில் இருக்காது. கிராமத்தில் இருக்கும் மற்ற வீடுகளை விட அம்மா வீடு இந்த விஷயத்தில் கொஞ்சம் பரவாயில்லை போலிருக்கும் என்று நினைக்கிறேன். மற்ற வீடுகளில் இப்படி பிள்ளைகளைத் தூக்க விடமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.
ஏமன் சின்னப் பையனாக இருக்கும் போது அவரது அக்கா இறந்து விட்டார்களாம். அதற்காக அழுத ஏமனிடன் என் அம்மா ஒரு அக்கா போல் அன்பாக இருந்திருந்தார்களாம். அழக்கூடாது என்றெல்லாம் தேற்றினார்களாம். இதனால் என் அம்மா மேல் அவருக்கு அப்படி ஒரு மரியாதையும் பக்தியும். அம்மா இறந்த பின் அத்தனையும் என் மீது பெரும் அன்பாகப் பாய்ந்தது. நான் ஏறத்தாழ எட்டு பத்து வயதிருக்கும் போது அவர் மருத்துவத்திற்காக மதுரைக்கு வந்திருந்தார். அப்பா அவரை அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று வந்தார்கள். அவர்கள் அப்போது சொன்னதை வைத்துப் பார்க்கும் போது ஏமனுக்குச் சக்கரை வியாதியால் காலில் வந்த புண் ஆறாமல், சில விரல்களை எடுத்து விட வேண்டுமென சொல்லியுள்ளார்கள். மனமில்லாமல் ஊருக்குச் சென்று, சில நாட்கள் கழித்து வந்த போது முழங்கால் வரை காலை எடுக்க வேண்டும் என்று சொன்னதும் மீண்டும் ஊருக்குப் போய் விட்டார். அதுவே அவரை நான் கடைசியாகப் பார்த்தது. அதன்பின் அம்மா ஊருக்குப் போகும் போது அவர் வீட்டிற்கு ஓரிரு முறை சென்று வந்தேன். சில நாட்கள் ... சில பொழுதுகள் மட்டுமே ஏமனோடு இருந்திருக்கிறேன். ஆனால் இன்று வரை ஏமனின் உயர்ந்த ஆஜானுபாகுவான உடம்பும், அவரது சிரித்த முகமும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அவரது உடலிலிருந்து வரும் வாசனை எனக்குப் பிடிக்கும். அந்த வாசனையையும் நான் இன்னும் உணர முடிகிறது.
முன்பெல்லாம் ஊருக்குப் போகும் போது அவரது வீட்டிற்கு ஓரிரு முறை போயிருக்கிறேன். ஆனால் என் வீட்டார்தான் என்னைக் கூட்டிக் கொண்டு போக வேண்டும். ஏமனின் வீட்டினருக்கு நான் ஏமனின் மீது வைத்திருந்த அன்பு புரிந்திருக்காது. அவர் வீட்டுக்கு என்னைக் கூட்டிக் கொண்டு போகும் என் உறவினருக்கும் அது புரிந்திருக்காது. ஆகவே அதை நான் நாளாவட்டத்தில் நிறுத்திக் கொண்டேன். ஆனாலும் மிகப் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஓரிரு ஆண்டுகளுக்கு முன் நான் சென்ற போது வளர்ந்து நெருங்கியிருந்த தெருவில் ஏமனின் பழைய வீட்டை நினைத்துக் கொண்டு தேடிப்பார்த்தேன் - கண்டு பிடிக்க முடியாது என்று தெரிந்தும்.
அவர் என்ன சாதியோ எனக்குத் தெரியாது இன்று வரை.. சிறு வயதிலிருந்தது என்னிடமிருந்தது அவர் மீதான பாசம் மட்டும். சிறிது அறிவும் வயதும் கூடும்போது அவர் ஏனைய சாதியினரால் ஒதுக்கப்பட்டவர் என்பது புரிந்தது. அவர் காலத்திற்குப் பின் என்னைப் பார்த்ததும் அவர் வீட்டினர் காண்பிக்கும் பதட்டமும், என் வீட்டார் என்னை அங்கே அழைத்துப் போக காண்பிக்கும் தயக்கமும் மெளனமாக எனக்குப் பல செய்திகளைச் சொல்லியது. முழுச் சித்திரமும் கிடைக்க பல்லாண்டுகள் ஆகிப் போய் விட்டது. கிராமங்களில் தலித் மக்களுக்குக் கொடுக்கப்படும் இடம் (கொடுக்கப்படாத இடம்?) எத்தனை மோசமானது என்று பின்னாளில் புரிந்தது. ஒரு வேளை நான் ஏமன் மீது வைத்திருந்த அன்பினால், என்னால் பின்னாளிலும் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான பரிவாக மாறியதோ என்னவோ தெரியவில்லை. Freud இடம் தான் கேட்கணும்!
அவர் என்ன சாதியோ எனக்குத் தெரியாது இன்று வரை.. சிறு வயதிலிருந்தது என்னிடமிருந்தது அவர் மீதான பாசம் மட்டும். சிறிது அறிவும் வயதும் கூடும்போது அவர் ஏனைய சாதியினரால் ஒதுக்கப்பட்டவர் என்பது புரிந்தது. அவர் காலத்திற்குப் பின் என்னைப் பார்த்ததும் அவர் வீட்டினர் காண்பிக்கும் பதட்டமும், என் வீட்டார் என்னை அங்கே அழைத்துப் போக காண்பிக்கும் தயக்கமும் மெளனமாக எனக்குப் பல செய்திகளைச் சொல்லியது. முழுச் சித்திரமும் கிடைக்க பல்லாண்டுகள் ஆகிப் போய் விட்டது. கிராமங்களில் தலித் மக்களுக்குக் கொடுக்கப்படும் இடம் (கொடுக்கப்படாத இடம்?) எத்தனை மோசமானது என்று பின்னாளில் புரிந்தது. ஒரு வேளை நான் ஏமன் மீது வைத்திருந்த அன்பினால், என்னால் பின்னாளிலும் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான பரிவாக மாறியதோ என்னவோ தெரியவில்லை. Freud இடம் தான் கேட்கணும்!
ஏமனோடு இருக்கும் போது எனக்கு இன்னொரு அமானுஷ்ய அனுபவமும் எனக்குக் கிடைத்தது. வாழ்க்கையில் இது வரை இரு நிகழ்வுகளை தெய்வாதீனமான, அல்லது அமானுஷ்யமான நிகழ்வுகளாகப் பார்க்கிறேன். அதில் இரண்டாவது நிகழ்வு நான் என் அம்மா ஊரிலிருந்து அப்பா ஊருக்கு வரும்போது நிகழ்ந்தது. ஏமன் தான் என்னை அம்மா ஊரிலிருந்து பஸ்ஸில் அப்பா ஊருக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். ஊருக்குத் தள்ளியிருக்கும் சாலையில் இறங்கி நடந்து எங்கள் ஊருக்க வர வேண்டும். கொஞ்சம் தொலைவு என்பதால் ஏமன் என்னை வழக்கம் போல் தோளின் மீது வைத்துக் கொண்டு வந்தார். வழியில் அப்பா ஊருக்குள் நுழையும் போதிருந்த கல்லறைத் தோட்டத்தில் என் அம்மாவின் கல்லறை இருந்தது.
பூட்டையா - பாட்டையா
கல்லறைகளுக்கு நடுவில் அம்மா கல்லறை
அந்த வயதில் என் அம்மாவின் கல்லறையைப் பார்க்கும் போது மனதுக்குள் என்னமோ செய்யும். ஒரு தயக்கம்; பயம் போலவும் இருக்கும். அதனால் லேசாக அந்தப் பக்கம் பார்த்து விட்டு வேறு பக்கம் பார்ப்பது வழக்கம். ஏமன் என்னைத் தூக்கிக் கொண்டு வரும்போது நான் கல்லறை பக்கம் பார்க்காது இருந்தேன். கல்லறையை நாங்கள் தாண்டிய பின் ஏமனின் தோளிலிருந்து திரும்பிப் பார்த்தேன். அம்மாவின் கல்லறையின் இரு
அம்மா கல்லறை - 13.10.’47 |
புறமும் ஏறத்தாழ அந்த தோட்டத்திலிருந்த பனை மரங்களின் உயரத்திற்கு வெள்ளை வெளேரென்று இரு சம்மனசுகள் முழந்தாளிட்டு இருப்பது போல் தோன்றியது. எல்லாம் ஓரிரு வினாடிகளுக்கு தான். வேறுபுறம் உடனே திரும்பி விட்டேன்.
*
Wednesday, May 07, 2014
749. தருமி பக்கம் (18) .... அந்தக் காலத்தில ...
*
“அதீதம்” இணைய இதழில் வந்த தருமி பக்கத்தின் மறு பதிப்பு ....
*
தின்பண்ட வரிசை ....
*
சிறு வயதில் ஊருக்குப் போனால் அங்கே கிடைக்கும் தின்பண்ட வரிசை மிகச் சிறியது தான். ஆனாலும் அவையெல்லாம் மிகவும் பிடித்த ஒன்று. நிச்சயமாக சந்தை அன்று கிடைக்கும் அவித்த பயறு வகைகள் வாரத்தில் ஒரு நாள் கிடைக்கும் தின்பண்டம். அதன்பின் எப்போதும் கிடைக்கும் தின்பண்டம் ஒரு கையளவு பெரிதாக இருக்கும் அரிசி முருக்கு. நல்ல வெள்ளையாக இருக்கும். அதிலிருந்து எள் அங்கங்கே எட்டிப் பார்க்கும்.
அனேகமாக இது காப்பி குடிக்கும் போது கிடைக்கும் அதற்கான சைட் டிஷ்! இரண்டும் கைக்கு வந்ததும் முருக்கை உடைத்து அதிலிருந்து முக்கால் வாசியைக் காப்பிக்குள் போட்டு விட வேண்டும். அதன்பின் கைவசம் மீதி இருக்கும் முருக்கை சாப்பிட வேண்டும். இந்த நேரத்திற்குள் முருக்கு காப்பிக்குள் முங்கி, முக்குளித்து உள்ளே போய் ‘அடங்கி’ விடும். காப்பியின் சூடும் போய் விடும். இப்போது காப்பியைக் குடிக்க வேண்டும். முதலில் அனேகமாகக் காப்பி மட்டும் வாய்க்குள் போகும். அதன்பின் மிதக்கும் ஒன்றிரண்டு முருக்குத் துண்டுகளும் உடன் போகும். கடைசியில் காப்பியைச் சுற்றிச் சுழற்றினால் நன்கு ஊறிப்போயிருக்கும் முருக்குத் துண்டுகள் காப்பிக்குத் தனிச் சுவை கொடுத்து உள்ளே போகும். காப்பி முடிந்த பின் மீதி ஊறிய முருக்குகள் தனிச் சுவையோடு உள்ளே போகும். ஊருக்குப் போவது நின்று போனபின் வேறு முருக்குகளைக் காப்பியில் ஊறப் போட்டால் அப்படி ஒன்றும் சுவையாக இல்லை. அந்த காப்பிக்கும் - வெள்ளைக் காப்பியோ, கருப்புக் காப்பியோ - எங்கள் ஊர் அரிசி முருக்குக்கும் மட்டும் தான் அந்த combo-effect போலும்!
மதுரை வாழ்க்கை ஆரம்பித்த வருடங்களில் இந்த முருக்குக் கதை மதுரை வரை சென்றது. விடுமுறைக்கு ஊருக்கு வந்து திரும்பிப் போகும் முன் எங்கள் ஊர் ஹோட்டலில் அரிசி முருக்கு செய்பவர் எங்கள் வீட்டுக்கே வந்து முருக்கு செய்து கொடுப்பார். அனேகமாக ஊருக்குப் புறப்படும் ஓரிரு நாட்களுக்கு முன் வந்து முருக்கு செய்து கொடுப்பார். மீதியிருக்கும் அந்த ஓரிரு நாட்களில் முருக்குக்கு எந்த ரேஷனும் இருக்காது. வேண்டிய மட்டும் எடுத்துச் சாப்பிடலாம். ஆனால் மதுரைக்குப் போனதும் ரேஷன் வந்து விடும். அம்மா கொடுக்கும்போது, கொடுப்பதை மட்டும் சாப்பிட வேண்டும்.
இருந்ததென்னவொ ஒன்றரை அறை மட்டும் இருந்த வீடுதான். ஆனாலும், வழக்கமாக இந்த முருக்கு வகையறாக்கள் கைக்குக் கிடைக்காத அளவிற்கு உயரே வைத்து விடுவார்கள். அதற்கென்றே இருந்த சதுர தகர டப்பாவில் வைத்து மேலே வைத்து விடுவார்கள். எனக்கு எட்டாது. ஆனால் எட்டாத பழம் தானே சுவை. அம்மா வெளியே எங்கேயும் செல்லும் போது கண்ணபிரானின் வெண்ணெய் திருட்டு வேலையை நான் முருக்குத் திருட்டாக செய்து விடுவேன். கண்ண பிரான் பானைகளை அடுக்கி உரியிலிருந்து வெண்ணெய் எடுப்பாராம். நான் எங்கள் கதவின் மேல் ஏறி என் திருவிளையாட்டின் மூலம் முருக்கை எடுப்பேன்.
எங்கள் கதவில் மூன்று இடங்களில் மரச் சட்டங்கள் இருக்கும். கதவு உறுதியாக இருக்க வேண்டுமே என்று அந்த மரக்கட்டைகள் கட்டையின் முன்புறம் இருக்கும். ஒன்று மேலே; இன்னொன்று கீழே; இன்னொன்று நடுவில். எட்டி மேலே உள்ள கட்டையைப் பிடித்து, கதவின் உச்சியை ஒரு கை பிடிக்கும். காலை நடுக்கட்டையில் வைத்து ஏறினால் மேலே உள்ள முருக்கு டப்பாவை எட்டி விடலாம். அம்மா வருவதற்குள் வேகமாக கதவில் ஏறி ஒன்று - பொதுவாக ஒன்றோடு நிற்பதில்லை - அல்லது இரண்டு முருக்குகளை எடுத்துக் கால்சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டு இறங்கி விடுவேன். இறங்கியதும் கால் சட்டையோடு முருக்கை கையால் இரண்டு போடு போட்டதும் முருக்கு நொறுங்கி விடும். இனி ... மெல்ல தின்று கொள்ளலாம்.
இதில் ஒரு சின்ன பிரச்சனை. அனேகமாக உங்களுக்கெல்லாம தெரியாத ஒரு பிரச்சனை. அந்தக் காலத்தில் துணிகளை வெளுக்க வீட்டுக்கே வண்ணார் வருவார்கள். அவர்களிடம் தான் துணி வெளுக்கப் போடுவோம். அவர்கள் துவைக்க ஆற்றிற்கு எடுத்துச் செல்வார்கள். அங்கே வெளுப்பதற்கு முன் துணிகள் sterilise செய்யப்படும். ஆச்சரியமாக இருக்கிறதா? ஆற்றுப் படுகையில் உள்ள உவர் மண் என்று சொல்வார்கள். அதில் துணிகளைப் போட்டு புரட்டி எடுத்து, அதற்குப் பிறகு அழுக்குத் துணிகளைப் பெரிய மூட்டையாகக் கட்டி, சுண்ணாம்புக் காளவாசலில் இருக்குமே அது போல் வைத்து துணிகளை வேக வைத்து விடுவார்கள். எங்கள் அழுக்கு அத்தனை அதிகம் போலும். உவர் மண் போட்டு, வேக வைத்து, அதன் பின் அடித்துத் துவைத்து வெளுப்பார்கள். இதனால் எங்கள் கால்சட்டையின் பாக்கெட்டுக்குள் எப்படியும் சிறிது மணல் இருக்கும். இந்த மணலோடு தான் திருடிய முருக்கைச் சாப்பிடணும்! இப்படி ஒரு பிரச்சனை இருந்தது! ஊதி ஊதி கடைசி துண்டுகளைச் சாப்பிடணும்.
ஊரில் எப்போதும் அந்தக் காலத்தில் கிடைத்த தின்பண்டம் காய வைத்த பனங்கிழங்கு. எந்தக் காலத்தில் பிடுங்குவார்களோ தெரியாது. அனேகமாக அளவுக்கு மீறி கிடைக்கும் போலும். நான் ஊருக்குப் போகும் போதெல்லாம் மெத்தையில் மொத்தமாக புளி, வத்தல் இவைகளைப் போட்டு வைக்கும் ஒரு அறையில் மூட்டை கட்டி காய வைத்த பனங்கிழங்குகள் இருக்கும். இதுவும் எங்கள் பொருளாதார நிலைக்கு நல்ல indicator ஆக இருந்தது. சின்ன வயதில் இரண்டு மூன்று பெரிய மூட்டைகளில் கிழங்கு இருக்கும்.
அத்ன் பின் மூட்டைகளின் எண்ணிக்கையில் குறைவு நடந்தது. பின்னால் நார்ப் பெட்டிகளுக்குள் சென்றது. அப்படியே குறைந்தது. சின்ன வ்யதில் கிழங்குகளுக்குப் பஞ்சமே இல்லை. பல்லுக்கும் நல்ல வலு இருந்தது. மெத்தைக்குப் போய் கிண்ணிப் பெட்டியில் அள்ளி எடுத்துக் கொண்டு வந்தால் ‘அரவை’ நன்றாக போகும்.
![]() |
’கிண்ணிப் பொட்டி’ |
சின்ன வயதில் பனம்பழம் சாப்பிட்ட நினைவு இருக்கிறது. ஏனென்று தெரியவில்லை .. பின்னாளில் பனம் பழம் ஏதும் சாப்பிடவேயில்லை. விழுந்து கிடக்கும் பனம் பழத்தைச் சுட்டுத் தருவார்கள். நல்ல மணம் இருக்கும். நாராக இருக்கும். சப்பிச் சப்பி சாப்பிட வேண்டும். நன்றாகவே இருந்தது. ரொம்ப
சின்ன வயதில் சாப்பிட்டது; அதன் பின்னால் வாய்ப்பே கிடைக்கவில்லை;
அனேகமாக கிராமத்துப் பசங்க யாரும் குருவியை, அணிலைச் சுட்டு தின்னாமல் இருந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். எனக்கும் அந்த அனுபவம் உண்டு. குறைந்த அனுபவம் தான். இதோடு மழைக்காலத்தில் வரும் ஈசல் பூச்சிகளைப் பிடித்து, வறுத்து தின்ற அனுபவமும் உண்டு.
அது ஒரு காலம் ....
*
Thursday, January 02, 2014
703. தருமி பக்கம் (12) - அந்தக் காலத்தில . . . .
*
அதீதம் இணைய இதழில் வந்தப் பதிவின் மறுபதிப்பு
*
இரண்டரை வயதிலிருந்து ஐந்தாவது வயதில் அப்பா & புது அம்மாவோடு மதுரை வந்து பள்ளியில் சேர்வது வரை வாழ்க்கை காசியாபுரத்தில் தான் கழிந்தது. வீட்டில் அனைவரும் ஏதாவது வேலை செய்பவர்களே. அப்பம்மா, சித்தி - இருவரும் காட்டு வேலைக்கு அனேகமாக போய் விடுவார்கள். வீட்டில் இருந்த மூத்த அத்தைமார்கள் இருவரும் ஆசிரியை வேலைக்குப் படித்து விட்டு, பாட்டையா வைத்து நடத்திய பள்ளியில் வேலை செய்து வந்தார்கள். நான் வீட்டில் இருந்த போது அத்தைமார்களில் மூத்தவர் nun ஆவதற்காக, போய் விட்டார். அடுத்த அத்தை நம் பள்ளிக்கூடத்தில் டீச்சராக இருந்தார்கள். அவர்கள் பொறுப்பில் நான். அவர்களோடு நானும் பள்ளிக்குப் போய் விடுவேன்.
அத்தையோடு வேலை பார்த்த இன்னொரு டீச்சரும், அத்தையும் நல்ல நண்பர்கள். அவர்களும் எங்களோடு மதியம் சாப்பிட எங்கள் வீட்டுக்கு வந்து விடுவார்கள். அந்த டீச்சர் எங்கள் ஊருக்குப் பக்கத்தில் இன்னொரு ஊரிலிருந்து வருவார்கள் என்று நினைக்கிறேன். அவர்களைப் பற்றிச் சொல்லும் போது ‘குருவன்கோட்டை’ என்ற ஊர் பெயரைச் சொல்லுவார்கள். அந்த டீச்சரையே குருவங்கோட்டை டீச்சர் என்று தான் சொல்வார்கள். அவர்களை எனக்கு நிறைய பிடிக்கும்.இந்த இரண்டு பேர் கைகளைப் பிடித்துக் கொண்டு நான் பள்ளிக்குப் போகும் காட்சி இன்னும் சிறிது நிழலாடுகிறது.
குருவங்கோட்டை டீச்சர் பற்றி ஒண்ணே ஒண்ணு நினைவுக்கு வருகிறது. அப்பாவுக்கு அடுத்த கல்யாணத்திற்குப் பெண் பார்த்துக் கொண்டிருந்த போது இந்த டீச்சர் பெயரும் அடிபட்டது. எனக்கும் இவர்கள் அம்மாவாக வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.
வீட்டில் செல்லப் பிள்ளை. பள்ளியிலும் சின்னப் பையனாக இருந்ததால் எல்லோருக்கும் செல்லம். ஊரில் எங்கு போனாலும், ‘பாவம் ... தாயில்லாப் பிள்ளை’ என்று பாவம் போல் பார்க்கும் உறவினர்கள். இதைச் சொல்லும் போது மட்டும் வயசான பிறகு கூட கஷ்டமாக இருக்கும். ஆனால் எனக்கு எந்த இழப்பும் அப்போது இருந்ததோ என்னவோ ... அப்படியேதும் நினைவில்லை. அதை நினைக்கும் படி ஒரு நிகழ்வு அவ்வப்போது ஒன்று நடக்கும். அப்பா மதுரையிலிருந்து ஊருக்கு வருவார்கள். அப்பா வந்ததும் எல்லோருக்கும் அம்மா நினைவு வந்து விடும் போலும். உடனே என்னை மாற்றி மாற்றி தூக்கி வைத்துக் கொண்டு எல்லோரும் அழுவார்கள். நானும் அழுதிருக்கிறேன். அவ்வளவு தான்.
அப்பா மதுரையிலிருந்து வரும் போது ஏதாவது வாங்கி வருவார்கள். அதில் இரண்டு மட்டும் நன்கு நினைவில் இருக்கிறது. இந்தக் காலத்தில் திராட்சைப் பழம் பல வகைகளில் இருப்பது போல் அப்போது இல்லை. கொட்டைஇல்லாத பழமெல்லாம் இப்போது கிடைக்குதே ... அதெல்லாம் அப்போதெல்லாம் சுத்தமா கிடையாது. நல்லா புளிக்கும் பச்சைத் திராட்சை தான் எங்கும் கிடைக்கும். அதோடு கொஞ்சம் லேசாகப் புளிக்கும் கருப்புத் திராட்சை அப்பா வாங்கி வருவார்கள். அப்போது அதெல்லாம் (எளிதில்)கிடைக்காத தின்பண்டம்! அதெல்லாம் மதுரையிலிருந்து தான் வரணும்!
ஒரு தடவை எனக்கு அப்பா ஒரு மூன்று சக்கர சைக்கிள் வாங்கி வந்தார்கள். இப்போவெல்லாம் மற்ற பொருட்கள் மாதிரி இது போன்ற சைக்கிள்களும் disposable தானே! ஆனால் அப்பா எனக்காக வாங்கி வந்த சைக்கிள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டில் இருந்தது. மூன்று தலைமுறைகளை அது பார்த்து விட்டது. என் பிள்ளைகள் அதனை ஓட்ட முடியாது போயிற்று; ஆனால் தம்பி, தங்கைகள், அவர்கள் பிள்ளைகள் என்று அத்தனை வருஷம் இருந்தது. ஏனெனில், இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. எல்லாமே solid iron. வெறும் முரட்டு இரும்புக் கம்பி தான் handle bar. கைப்பிடிக்கு ஒரு ரப்பர் கைப்பிடி இருக்கும். உட்காரும் இடமும் சரியான கனத்தில் ஒரு இரும்புத் தகடு வளைத்து வைத்திருக்கும். சக்கரங்களும் செம சாலிட். டயர் இருக்கும் இடத்தில் கட்டி ரப்பரில் சக்கரத்தின் வளைவுக்குள் ஆழமாகச் செருகி இருக்கும். சைக்கிள் நல்ல பச்சைக் கலர். சக்கரங்களின் பக்கச் சுவர்கள் மட்டும் சிகப்பு. (எங்கள் வீட்டில் ‘ஆகி வந்த’ இன்னொரு பொருளும் இதே போல் மூன்று தலைமுறை தாண்டி வந்தது. எனக்குப் பயன்படுத்திய தொட்டில் கம்பு அது. பட்டையாக, கறுப்பு நிறத்தில் ஒன்று இருந்தது - மூன்று தலைமுறைக்கு!)

இந்த துரைசாமியை வயதான காலத்தில் ஊருக்குப் போகும் போது தேடிப்போய் பார்ப்பேன். நன்றாக கள் குடித்துப் பழகிக் கிடந்தான். நான் போகும் போது, எல்லோர் காதுக்கும் எட்டுவது மாதிரி என்னை ‘டேய்’னு சத்தமா கூப்பிட அவனுக்கு ரொம்ப பிடிக்கும். ‘என் தம்பின்னு’ எல்லோருக்கும் சத்தமாக அறிமுகம் செய்வான். நான் ‘இளைஞனாக’ இருந்த போதே, அவன் கல்யாணம் ஆகி, பிள்ளைக் குட்டிகளோடு ‘கிழவனாகப்’ போயிருந்தான்.
accidentகுப் பிறகு நானே ஓட்டிப் பழகிட்டேன். அத்தைமார்கள் கைப்பிடித்து பள்ளி போன நான், சைக்கிளில் அவர்களோடு பள்ளிக்குப் போனேன். வீட்டுக்குப் பின்னால் தானே பள்ளி. அங்கே பள்ளி மைதானத்தில் ஒரு ’வாதமடக்கி மரம்’ ஒன்று பெரியதாக நிற்கும். இந்த மரத்தை நான் நிறைய எங்கள் ஊரில் பார்த்திருக்கிறேன். ஆனால் மதுரையிலோ வேறு இடங்களிலோ அந்த மரத்தைப் பார்த்ததில்லை. அதன் காய்களை கிளி நன்கு சாப்பிடும். நாமளும் சாப்பிடலாம்; ஆனால் சாப்பிட்டால் காது சரியாகக் கேட்காமல் போய் விடும் என்பார்கள். (யாரும் இப்போ என்னை கூப்பிட்டீங்களா? .. காதில் ஒண்ணும் விழலை; அதான் கேட்டேன்!)
அந்த மரத்தின் அடிப்பகுதி சிறிது வளைந்து மேலே போகும். அந்த வளைவு தான் நம் வண்டிக்கு parking lot!
பாட்டையா வீட்டில் அப்போது இன்னொரு பழைய பொருள் இருந்தது. பழைய கிராம போன் பெட்டி. சினிமாவில பார்க்கிறது மாதிரி பெரிய குழாய்
அது.. இதெல்லாம் இதில் கிடையாது. சரியாக ஒரு சதுரப்பெட்டி .. மூடியோடு இருக்கும். HMV கிராம போன். பெட்டியின் மூடியின் உள்பக்கம் பாட்டு கேட்கும் நாய் உட்கார்ந்திருக்கும். அந்த நாயின் பெயர் என்ன என்று தேடிப்பார்த்தேன். - Nipper!


*
Saturday, October 05, 2013
687. தருமி பக்கம் (7) - எப்டின்னே புரியலையே !
*
அதீதம் இணைய இதழின் தருமி பக்கம் (7)-ல் வெளியான கட்டுரையின் மறு பதிப்பு.
*
அறிவியலில் பல கேள்விகள். சின்ன வயதிலிருந்தே பல கேள்விகள். அன்றும் பதில் தெரியவில்லை; இன்றும் தெரியவில்லை. கிராம போன். சின்னூண்டு ஒரு பொட்டி. அதுக்கு மேல் ரிக்கார்ட் வச்சா சத்தம் வந்துது. எப்டின்னு அன்னைக்கும் புரியலை. ரேடியோ .. என்னமோ அலை வரிசை என்கிறார்கள். முள்ளைத் திருப்பினால் வேறு வேறு இடத்திலிருந்து பாட்டு வருது. எப்படி? யாருக்குத் தெரியும்!
ஆனாலும், இதைப் பற்றிக் கொஞ்சம் அறிவியலா யோசிக்கவாவது முடியுது. லேசா அரசல் புரசலா புரியுது. அரைகுறை அறிவியல் வச்சி ஏதோ சில காரணம் கண்டுபிடிக்க முடியுது. ஆனால் இன்னொரு விஷயம். பல நூற்றாண்டு விஷயம். அது எப்படி நடந்ததுன்னு நானும் யோசிச்சிப் பார்க்கிறேன். இதுவரை ஏதும் விடை தெரியவில்லை.
நம்ம ஊர் ஆயுர்வேத / மூலிகை மருத்துவம் பற்றிய கேள்விகள் அவை. இந்த வியாதிக்கு இது மருந்துன்னு சொல்றாங்க. ஒரு சின்ன எடுத்துக்காட்டாக மஞ்சள் காமாலைக்கு கீவாநல்லி இலை மருந்துன்னு சொன்னாங்க. இப்ப ஆங்கிலேய மருத்துவக்காரர்களுமே இதை ஒப்புக் கொண்டு விட்டார்கள்.
மருத்துவம் எல்லாமே வேதியல் தொடர்புடையது தான். வியாதி வருவதற்கு ஏதோ ஒரு வேதியல் பொருள் நம் உடம்பில் இல்லாமல போகிறது அல்லது அதிகமாக ஆகி விடுகிறது. நமக்குக் கொடுக்கப்படும் மருந்தில் உள்ள வேதியப்பொருள் இந்தக் குறைபாட்டை சரி செய்வதற்காகத்தான் கொடுக்கப்படுகிறது. எனக்குத் தெரிந்த மருத்துவம் இது தான். இப்போதைய நிலையில் உடம்பின் வேதியல் முறைகள் பலவும் கற்றுணரப்பட்டு விட்டன. சர்க்கரை வியாதியா? இன்சுலின் இல்லை. அதனால் சர்க்கரை ரத்தத்தில் முறையாகக் கட்டுப் படுத்தப் படுவதில்லை. அதற்குரிய மருந்தாக இன்சுலினில் உள்ள வேதியப் பொருள் பயன்படுகிறது.
இன்றைக்கு வேதியல் பற்றிய ஆய்வுகள் மூலம் இதை அறிய முடிகிறது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சர்க்கரை வியாதிக்கு இது மருந்து என்று ஏதோ ஒரு செடியை அல்லது மஞ்சள் காமாலைக்கு இந்த செடி மருந்து என்று எப்படிக் கண்டுபிடித்திருக்க முடியும்? கீவாநல்லியில் உள்ள வேதியல் பொருள் என்ன என்று நம் பழைய மூலிகை வைத்தியர்கள் எப்படிக் கண்டுபிடித்திருக்க முடியும்? இது போன்ற பெரிய பட்டியலே இருக்கிறது.
trial and error method மட்டுமே இதற்குக் காரணமாக இருக்க முடியுமா? ஒரு நோய்க்கு இது தான் சரியான மருந்து என்பதை இந்த முறை மூலம் நிச்சயமாகக் கண்டுபிடிக்க முடியாது என்றே நினைக்கிறேன். அத்தனை அத்தனை மனிதர்கள், அத்தனை அத்தனை வியாதிகள், பல முறைகள், பல மருந்துகள் அல்லது மூலிகைகள் என்றா ஆராய்ச்சி செய்திருக்க முடியும்? இன்றைய ஆராய்ச்சிகள் போல் sample, control and experimental systems ... இப்படியெல்லாம் ஆராய்ச்சி செய்திருக்க முடியாது. ஆனால் பல நோய்களுக்குப் பல சரியான மூலிகை மருந்துகள் என்று அவர்கள் அன்று எப்படிக் கண்டு பிடித்திருக்க முடியும். இந்த மூலிகை இந்த நோய்க்கான மருந்து என்றோ, இந்த வியாதிக்கு இந்த மூலிகை மருந்து என்றோ எப்படி, எந்த முறையில் அவர்களால் கண்டுபிடித்திருக்க முடியும்.
என்றோ எப்படியோ கண்டு பிடித்த மூலிகை மருந்துகளைப் பற்றிய ஆழ்ந்த அறிவு இன்றும் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. கிடைத்த சில தகவல்கள் மூலம் இக்கண்டுபிடிப்புகள் பற்றிய என் ஆச்சரியமும், அதிசயமும் அதிகமாகிக் கொண்டே போகின்றன. ஆனால் விடைகள் தான் இன்னும் கிடைக்கவில்லை. முதலில் உருண்டோடும் ஒரு கல்லில் இருந்தோ இல்லை வேறு ஏதோ பொருளிலிருந்தோ ஒரு சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கலாம். அதிலிருந்து ஒரு வண்டி, தேர் என்றெல்லாம் எப்படி பரிணாமம் நடந்திருக்க வேண்டுமென்று யோசிக்க முடிகிறது.
அட ... நமது சைக்கிள்களின் பரிணாமம் தான் நமக்குத் தெரியுமே .. அது எப்படி நடந்திருக்க முடியும் என்பது புரிகிறது.
ஆனால் வியாதிகளும், சரியான மருந்துகளும் என்ன mechanism? என்ன method? ....ம்ம்..ம்.. எனக்குப் புரியவில்லை. உங்களுக்கு ...?
*
Friday, September 20, 2013
681. தருமி பக்கம்: IMPORTED FROM NORTH INDIA
*
அதீதம் இணைய இதழின் தருமி பக்கத்தில் வந்த கட்டுரையின் மறு பதிவு:
*
மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டோம். தனித்தனி மாகாணங்கள். ஒரு மாகாணத்திலிருந்து அடுத்த மாகாணம் போனால் வாழ்க்கை நிறைய வேற்றுமைகளோடு இருக்கின்றன. மொழி, பழக்க வழக்கங்கள் எல்லாம் புதிது. உள்நாட்டுக்குள்ளே இருக்கும்போதே அயல் நாட்டில் இருப்பது போன்ற உணர்வு. அடுத்த மாகாணம் - ஆந்திரா. இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை போய் முழுவதுமாக அந்நியப்பட்டு நின்றேன். அங்கே பேசும் தெலுங்கும், இந்தியும் புரியவில்லை. பேசிய ‘சில்லறை ஆங்கிலம்’ அங்கு சுத்தமாகப் புறக்கணிக்கப்பட்டது. ‘ராஷ்ட்ர பாஷா’ இருந்தால் தான் பேசுவோம் என்ற முரட்டுத்தனத்தோடு மக்கள் இருந்ததைப் பார்த்தேன். அடுத்த மாநிலத்திலேயே இப்படி!
நல்ல வேளை .. கேரளா செல்லும் போது இந்த உணர்வு அதிகம் இல்லை. பெண்களூரிலும் கொஞ்சம் பிழைத்துக் கொண்டேன். இந்த வேறுபாடுகளின் நடுவே சில பழக்க வழக்கங்கள் இங்கும் அங்கும் சென்று விடுகின்றன. நம் ஊர் இட்லி, தோசை, சாம்பார் கொஞ்சம் அங்கு பெயரளவில் அடி படுகிறது. ஆனாலும் மக்கள் மொத்தமாக இட்லி தோசைப் பக்கம் விழுந்து விடவில்லை என்றே நினைக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் சாப்பிட ரெடி என்பது மாதிரி சிறிது பரவியிருக்கிறது. ஆனால் வடக்கிலிருந்து பெரும் பழக்கங்கள் நம்மை சுத்தமாக அடிமைப் படுத்தி விட்டன என்று நினைக்கிறேன்.
முதல் மாற்றம் - உடை மாற்றம். சேலையும், தாவணியும் போய் சூடிதார் வந்து விட்டது. என்னைப் பொறுத்தவரை இது ஒரு நல்ல மாற்றம். எல்லா வயதினருக்கும் எல்லா ‘சைஸ்’ ஆட்களுக்கும் பொருத்தமாக இருக்கிறது. விலையும் நம் சேலைகளை விட குறைவே. இந்த சூடிதார் வரும்போது பலர் வெறுப்புக் கொடி தூக்கியது இன்றும் நினைவில் இருக்கிறது. ந்ண்பர் ஒருவர் கல்லூரியில் பேராசிரியர். முதுகலை வகுப்பில் ஒரு மாணவி சூடிதாரில் வந்ததும் நண்பர் போர்க்கொடி தூக்கி விட்டார். சூடிதாரில் வகுப்புக்கு யாரும் வந்தால் நான் வகுப்பெடுக்க மாட்டேன் என்று ஒரு ’போராட்டம்’ ஆரம்பித்தார். வெற்றியும் பெற்றார்.
அவரோடு ஒரு பட்டறைக்குச் சென்ற போது நான் டி-ஷர்ட் போட்டு சென்றிருந்தேன். அதை அவர் கண்டிக்க, அன்று இரவில் நண்பர்களோடு விவாதங்கள் தொடர்ந்தன. சூடிதார் நிகழ்ச்சியை அவர் சொல்லி தன் வெற்றி பற்றியும் எங்களிடம் சொன்னார். அவருக்கு சூடிதார் அவலட்சணமாகத் தோன்றியது. எனக்கோ அது angelic dress! கடைசியில் நான் அவரின் மகளின் வயதைக் கேட்டேன். என் சின்ன மகள் வயது ... நாலைந்தாவது வகுப்பு. அப்போது அவரிடன் சொன்னேன் .. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து அவர் மகளே சூடிதார் தான் கேட்பாள்; நீங்களும் வாங்கிக் கொடுப்பீர்கள் என்றேன். அப்படியே நடந்தது. ஆனால் இன்றும் கூட சேலை தான் எல்லா இடங்களிலும் ’செல்லுபடி’யாகின்றது. முக்கியமாக கல்லூரிப் பேராசிரியைகள் பாவம் இன்னும் சேலையில் தான் செல்ல வேண்டியதுள்ளது போலும் - even in co-ed colleges. பாவம் .. அவர்களும் சூடிதாருக்கு வந்தால் எல்லோருக்கும் நல்லது. ஆனால் பலருக்கு இதில் இன்னும் விருப்பமில்லை என்பதும் தெரிகிறது. எப்படியோ வடக்கின் உடை இப்போது நம் உடையாக மாறிப் போய் விட்டது.
ஆனால், இப்போது அமெரிக்கா நோக்கி மக்கள் பயணப்பட்டு விட்டார்கள். ஜீன்ஸ், ஷார்ட் டாப்ஸ் போடுவது நன்றாகவே இருக்கிறது; மக்களுக்கு வசதியும் அதிகம். financially quite good!! ஆனால் அடுத்த படி எது என்று நினைத்தால் கொஞ்சம் பயம் தான். சிங்கப்பூரில் பார்த்த அனுபவத்தில் இதைச் சொல்கிறேன்!
ஆக, சூடிதார் நமது உடையாகவும் மாறி விட்டது. நல்லது. ஆனால் அடுத்த ஒரு கெட்ட பழக்கமும் குடியேறிவிட்டது.
பான் / பாக்கு/ ஜர்தா ... என்று பல பெயர்களில் வந்தது இந்தக் கெட்ட பழக்கம். இதனோடு சேர்ந்த இன்னொரு கெட்ட பழக்கமும் சேர்ந்தே வந்து விட்டது. ஒரு சுவர், சுவரின் மூலை கிடைத்து விடக் கூடாது. அங்கெல்லாம் சிகப்பு வண்ணத்தில் துப்பி .... கடவுளே! ... காணவே கண்கூசும் அளவிற்கு அலங்கோலம். சுவர்கள் மட்டுமா கெட்டு நிற்கின்றன. நுரையீரலுமல்லவா ..! சமீபத்தில் வந்த ஒரு செய்தி: தமிழ்நாட்டில் பாக்கிற்கு அடிமையாகிப் பலருக்கு கான்சர் வந்துள்ளதாக அச்செய்தி சொன்னது.
அடுத்தப் பிரச்சனை பெரும் தலைவலி கொடுத்து விட்டது. இதற்குப் பதில் தேட இந்து மதம் என்றால் என்ன என்ற பெரும் கேள்வியையே அலச வேண்டியதாகிறது. சமீபத்தில் முர்ளி மனோகர் சொன்னது போல் இந்தியக் கிறித்துவர்கள் 'கிறிஸ்தி இந்துக்கள்' என்றும், இஸ்லாமியர்கள் 'அகமதிய இந்துக்கள்' என்றும் பெயரிடப்படும் நிலைமைக்கு வந்தாயிற்று. எது இந்து மதம்? யார் யாரெல்லாம் இந்துக்கள் என்ற அடிப்படைக் கேள்விக்குச் செல்லும்படி ஆகின்றது. ஏற்கெனவே என் ‘மதங்கள்’ என்ற தலைப்பின் கீழ் பல இடங்களில் சொல்லியுள்ளேன். ( ////முஸ்லிமா இல்லாதவன், கிறித்தவனா இல்லாதவன் எல்லோரும் இந்துன்னு வைப்பதால் வரும் குழப்பம் இது...மற்றவர்களையும் 'ஒரு வசதி'க்காக 'இந்து'வாக வைத்திருப்பதை வைத்து இதில் தவறான அனுமானத்துக்கு அடிகோலுவது முறையில்லை. //இதை நான் முழுமையாக ஒத்துக் கொள்கிறேன். தங்கமணியின் பதிவில் இக்கருத்தையும் வைத்துள்ளேன். இந்தக் கருத்துக்காகத்தான் நான் காஞ்சையாவை மேற்கோளிட்டிருந்தேன்.//) மீண்டும் அதே கருத்தை இங்கும் சொல்ல வேண்டியதுள்ளது. இதற்கு எதிர்க் கருத்தாக //Ekam Sat, viprah bahutha vadanthi என்ற உபனிட உண்மையை ஏற்ற அனைத்து மதமும் இந்து மதமே. அதை உணர மறுக்கும்...// என்ற விவாதமும் உண்டு.
ஆனால் ஆங்கிலேயர் நடத்திய மக்கள் கணக்கெடுப்பில் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த மத மக்களைத் தவிர ஏனையோர் அனைவருக்கும் ஒரே பெயராக ‘இந்து’ என்ற பெயர் வந்ததோ, ’இந்து’ என்ற சொல்லே இடத்தைக் குறிக்க வந்த சொல் என்றெல்லாம் விளக்கங்கள் கொடுத்தாலும் விவாதங்கள் என்னவோ தொடர்கின்றன. இன்னும் எங்கள் கிராமத்து பக்கங்களில் வாழ்வோருக்கு ’பெரிய தெய்வங்கள்’ பெரும் பொருட்டல்ல; குல தெய்வங்களும், முன்னோருமே (சிறு) தெய்வங்களாக உள்ளார்கள் என்பதே இன்னுமொரு சான்று.
கதை இப்படியிருக்க ஆரிய / பிராமண / வைதீக / புராண இந்து தெய்வங்கள் இன்று வேரூன்றி விட்டன. புத்த மதம், ஜைன மதங்களை உண்டு செரித்த பின் இப்போது மீதியிருப்பது இந்து மதம் மட்டுமே. இந்த மதங்களின் தாக்கத்தின் தொடராக பிள்ளையார் வந்து சேர்ந்து விட்டார்.

பல ‘குரு பூஜைகள்’ .. சில கலவரங்கள், குத்து, வெட்டு. இதோடு இப்போது பிள்ளையார் சதுர்த்தி ஆட்டங்கள். சாமியும் சாதியும் நம் தலையெழுத்துகள். யார் தான் அவைகளை அழித்து, திருத்தி எழுதிவிட முடியும் ??
இதோடு இன்னொரு கேள்வி: வடக்குக் கலாச்சாரம் இங்கே தென்னக மக்களிடம் ஊடுற முடிகிறது. வந்தோரை வாழவைக்கும் தென்னகம்! ஆனால் நமது கலாச்சாரங்கள் அங்கே எதுவும் அப்படி ஊடுற முடியவில்லையே. ஏன்?
*
Wednesday, September 04, 2013
679. என் வாழ்க்கையில் நான் கடந்து வந்த ‘பெரும் அதிசயங்கள்’ .!
*
அதீதம் இணைய இதழில் தருமி பக்கத்தில் வந்த என் கட்டுரையின் மறு பதிப்பு .....
*
முதலிலேயே ஒன்று சொல்லி விடுகிறேன். என் வாழ்க்கையில் எனக்கு அதிசயங்களாகத் தெரிந்தவைகளைச் சொல்லப் போகிறேன். அதையெல்லாம் படிச்சிட்டு ... ப்பூ .. இம்புட்டு தானான்னு படித்து விட்டு சிரிக்கிற ஆளுக நிறைய இருக்கலாம். அவர்களுக்கு ஒரு வார்த்தை. இப்போதே இதை வாசிப்பதை நிறுத்தி விடுங்கள். இதையும் மீறி வாசித்து விட்டு, 'இதப் போய் ஏன்’யா அதிசயம் அப்டின்னு சொன்ன ...?’ அப்டின்னு கேள்வி கேட்டுட்டு நிற்கக்கூடாது. எனக்கு அன்றைய தேதியில் அவை அதிசயம். இப்போ எனக்கே அது ஒண்ணுமில்லாமல் இருக்கலாம். ஆனால் அன்று .. அது அதிசயம் தான்.
ஒரு உதாரணம் சொல்றேனே ... இப்போவெல்லாம் நம்ம பெயரை ஒரு பிரிண்டரில் கொடுத்து அடிச்சிக்கலாம். your name in printed form. இது இப்போ அம்புட்டு ஈசி. ஆனால் ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன் அதெல்லாம் முடியாது. கல்யாண அழைப்பிதழில் மட்டும் தான் முதல் முதலாக உங்கள் பெயரை print-ல் பார்க்கலாம் என்பது மாதிரியான நிலை. அப்போ electronic typewriter வந்தது. நம்ம ஊர்ல நான் பார்த்த்தில்லை. Foreign - அதாவது அமெரிக்காவிலிருந்து ஒரு கடிதம் உங்கள் பெயர் போட்டு வந்தால் அதில் முகவரியில் உங்கள் பெயரை printed form-ல் பார்க்கலாம். அப்படி வருகின்ற கடிதங்களை என்ன செய்கிறோமோ, ஆனால் அது வந்த உறையைப் பத்திரமாக கொஞ்ச நாளாவது வைத்திருப்போம். நம் பெயரை print-ல் பார்க்கிறது அப்படி ஒரு அதிசயம். சொல்லுங்க .. எனக்கு இது அந்தக் கால அதிசயம். உங்களுக்கு ...?
அட .. நம்மல்லாம் தம்மடிக்கிற கோஷ்டியாச்சே. ஆசைக்கு cigar lighter வாங்கணும்னு ஆசை வரும். ஒண்ணு வாங்குவோம். அதுக்கு பெட்ரோல் போட என்ன செய்வது? இப்போது மாதிரி ஆளாளுக்கு ஒன்று இரண்டுன்னு பைக் வச்சிருந்தோமா .. கிடையாது. யாராவது ஒரு நண்பனோட நண்பனோட நண்பனின் மாமா ஒருத்தர்ட்ட ஒரு பைக் இருக்கும்.. மறுபடி இதே ரூட்ல ... நண்பன், நண்பன், நண்பனின் மாமா என்ற ரூட்ல போய் பெட்ரோல் போட்டிருவோம். ஆனால் அதை வைத்து சிகரெட் பத்த வைக்க நாங்க படும் பாடு. முதலில் cigar lighter-யைத் தலைகீழா பிடிச்சிக்கிட்டு கை சுழுக்கிக் கிட்டா உதறுவோமே அது மாதிரி நல்லா கையை உதறணும். இருக்கிற சுழுக்கு எல்லாம் போய்டும். அத உடுங்க .. இப்போ லைட்டரைப் பத்த வைக்கணும். நிச்சயமாக முதல் ஐந்து தடவையில் பொறி வரும்; நெருப்பு வராது. ஒரு கணக்கு போட்டா 5-10 தடவை முயற்சி செய்தால் ஒரு தடவை ஒரு சிகரெட் பத்த வச்சிரலாம்.
இந்த மாதிரி இருக்கிறப்போ நண்பன் தேவராஜ் - அனேகமாக 1970-வது வருடமாக இருக்கும் - ஒரு நாள் நான் சிகரெட் எடுத்து பத்த வைக்கிறப்போ அவன் தன் புதிய லைட்டரை எடுத்தான் .. க்ளிக்கினான் .. நெருப்பு வந்தது. Vini, Vici, Vidi மாதிரி எல்லாம் சுருக்கமா முடிஞ்சிது. நண்பனும் பெரிய ஜூலியஸ் சீசர் மாதிரி சிலுப்பிக்கிட்டான். என்னடா இதுன்னு கேட்டோம். electronic lighter என்றான். மாமா அமெரிக்காவிலிருந்து அனுப்பினார் அப்டின்றது மாதிரி ஒரு கதை சொன்னான். நாங்கள் மூன்று நாலு பேர் அதைப் பரிட்சித்துப் பார்க்க கேட்டோம். தனியொருவர் கோரிக்கைளைப் புறந்தள்ளி விட்டான். பின் கடைசியாக கூட்டணி முயற்சியில் மூன்றே மூன்று முறை க்ளிக் செய்ய அனுமதித்தான். என்ன ஆச்சரியம். மூன்று க்ளிக் ... மூன்று முறையும் ஜிவ்வென்று நெருப்பு வந்தது. நம்ப முடியவில்லை .. நடந்தது ... அதான் அதிசயம்.
அமெரிக்காவிலிருந்து வர்ர ஆளுகளிடமிருந்து பால் பேனா வாங்குறதும், அவங்க அதுக்காகவே அவைகளை வாங்கிட்டு வர்ரதும் ஒரு வழக்கம். அதில் Bic அப்டின்னு ஒரு பேனா ரொம்ப எனக்குப் பிடிக்கும். (இப்படி கிடைக்கிற பேனாவா சேர்த்து வச்சி ஒரு நாள் எடுத்துப் பார்த்தா டப்பா முழுவதும் பேனாக்கள் மசியாக ’வாந்தி’ எடுத்து வைத்திருந்தன. அத்தனை பேனாவையும் தூக்கிப் போட்டுட்டேன்.


இந்த சீசன்ல சூரின்னு நண்பன் ஒருவன் அமெரிக்கா போய்ட்டு வந்தான். ஒரு பால்பேனா எடுத்தான். பேனாவைத் திறந்து அதன் முனை சிமிண்டு தரையில் விழுவது போல் போட்டான். எடுத்தான். எழுதினான். அழகாக எழுதியது. (அப்போ அமெரிக்காவில் இது தான் அந்தப் பேனாவிற்குரிய விளம்பரம் என்றான்.) ஆகா .. ரொம்ப நல்லா இருக்கே என்று பார்த்தேன். பேனாவைத் திறக்க முயற்சித்தேன். நண்பன் அது use-and-throw பேனா என்றான். அப்போதெல்லாம் நம்ம ஊர்ல அப்படி பேனாவெல்லாம் இல்லை; ரெண்டு ரூபாய்க்குப் பேனா, முப்பது பைசாவிற்கு ரீ பில் இருந்த காலம் அது. Reynolds பேனா அது. அந்தப் பேனாவைப் பார்த்து அப்படி ஒரு ஆச்சரியம்; அப்போ அது ஒரு அதிசயம்.
1977க்கு முன்பு. ரூபனுக்கு எப்பவுமே அமெரிக்க நண்பர்கள் குழு அதிகம். எங்கள் கல்லூரியில் அப்போது அவன்தான் நூலகத் தலைவர். ஒரு நாள் நூலகம் போய்ட்டு அவன் அறைக்குப் போனேன். செம சைஸில் ஒரு கொகோ கோலா பாட்டில் இருந்தது. 2 லிட்டர். அம்புட்டு சைஸில் ஒரு கொகோ கோலா பாட்டிலை அதுவரைப் பார்த்ததில்லை. இங்கே சின்ன பாட்டிலில் ’கலர்’ இருக்கும். வாங்கிட்டு வாயில ஊத்தி முடிச்சிட்டு போகணும். இது என்ன இம்மாம் சைஸில் ஒரு பாட்டில்! ‘எதுக்குப்பா இம்மாம் பெருசு?’ அப்டின்னேன். ’பார்ட்டி அது இதுக்கு இப்படி இருக்கும்’ என்றான். ஆனாலும் அந்தப் பாட்டிலைப் பார்த்ததும் நமக்கும் மேலை நாட்டுக்கும் ரொம்ப ‘தூரம்’ இருக்குன்னு நினைத்தேன். அந்த சைஸில் பாட்டில் பார்த்த்து அதிசயமாக இருந்தது. இது போல் இன்னும் சில இருக்கு. பிறகு பார்ப்போம் ........
*
Monday, August 19, 2013
677. என் முதல் காதலி
*
இணைய இதழ் அதீதம் தருமி பக்கத்தில் எழுதிய கட்டுரையின் மறுபதிப்பு
*
தருமி பக்கம் - என் முதல் காதலி (4)
இரண்டாம் முறையாக பொன்னியின் செல்வன் வாசித்துக்
கொண்டிருந்தேன்.
வந்தியத்தேவன் சிறையில் இருக்கிறார்.
அவரைச் சந்திக்க குந்தவி தேவி உயர்த்தி போடப்பட்ட கொண்டையுடன், ஒல்லியாக ..
ஆனால் உயரமாக ராஜ கம்பீரத்துடன் வருகிறார். இருவரும் பேசிக்
கொள்கிறார்கள். ஒளிந்திருந்த காதல் வெளியில் தெரிய ஆரம்பிக்கிறது.
பொன்னியின் செல்வனின் மூன்றாவது பாகத்தின் நடுப்பகுதியில் இது நடக்கிறது
என்று நினைக்கிறேன். அப்போது எப்படியோ முயன்று பார்த்து விட்டேன்.
முடியவில்லை. நானும் குந்தவியைக் காதலிக்க ஆரம்பித்து விட்டேன் – கொஞ்சம்
பயத்தோடு! முதல் காதல் என்பதால் வந்த பயம் பாதி; அதோடு வந்தியத்தேவனும்
காதலிக்க ஆரம்பித்து விட்டாரே என்று நினைத்தேன். ஆயினும் அப்போது நானே
வந்தியத்தேவன் ஆகி விட்டேனே! பிறகென்ன … காதல் வயப்பட்டால் கற்பனை வரும்.
கற்பனை கனவுகளாக விரிய, அப்படியே மொட்டை மாடியில் கீற்றுக் கொட்டகைக்கு
கீழ் படுத்துத் தூங்கி விட்டேன்.
மதியம் இரண்டு மூன்று மணி இருக்கும்.
தூங்கிக் கொண்டிருந்த என்னை எங்கள் தெரு பசங்கள் தட்டி எழுப்பினார்கள்.
அன்று எங்களது S.S.L.C. தேர்வு முடிவுகள் வெளி வந்திருந்தன. செய்திகளை
முந்தித் தரும் தினசரியுடன் பசங்கள் ரொம்ப சோகமாக என்னை எழுப்பினார்கள்.
என் எண்ணைத் தேடி அது இல்லாத அதிர்ச்சி அவர்களுக்கு. அங்கு வந்தவர்களில்
சில சந்தேகக் கேசுகளும் இருந்தார்கள். ஆனால அவர்களே பாஸாகி விட என் எண்
இல்லாததால் அதிர்ச்சியோடு என்னை எழுப்பினார்கள். செய்தி சொன்னார்கள்.
பேப்பரை வாங்கிப் பார்த்தேன். என் எண் இல்லை. கொஞ்சம் யோசித்து மறுபடி
பார்த்தேன். என் எண்ணோடு மொத்தம் நூறு எண்களை மொத்தமாக ஸ்வாகா
பண்ணியிருந்தார்கள். அட .. இப்படியா என்று தெளிந்து, இருந்தும் அடுத்த
தினசரி வாங்க நண்பர்களோடு புறப்பட்டேன்.
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம்,
பார்த்திபன் கனவு மூன்றையும் முன்பே வாசித்து விட்டேன். பொ.செ. மட்டும் இது
இரண்டாவது தடவை வாசித்தேன். மூன்றாம் முறை 60-களின் கடைசியில் கல்கியில்
மீண்டும் வந்த போது வாசித்தேன். இரண்டாம் தடவை வாசிக்கும் காலத்தில்
தமிழ்நாட்டு ராஜ பரம்பரைகளோடு ஊறிப் போய் விட்டேன். எவ்வளவு தூரம் என்றால்
சிவகாமியின் சபதத்தில் மாமல்லர் குதிரையில் போய்க்கொண்டிருக்கும் போது
அவரது ஒற்றர் தலைவன் பெண் வேடத்தில் எதிரில் வருவான். பெண்ணைப் பார்த்ததால்
மறுபடியும் அவளைப் பார்க்காமல் மன்னன் குதிரையில் போய் விடுவார். ஆஹா ..
மன்னன் என்றால் இவனல்லவோ மன்னன் .. அப்டின்னு பெருமூச்சு விட்டுக்
கொண்டதோடு நானும் அந்தக் காலத்து ராஜா மாதிரி இனி ‘சைட்’ அடிக்கக் கூடாது
என்ற மனோதிடத்தில் சில காலம் இருந்தேன். நண்பர்களுக்கும் அதை உபதேசித்து …
அடி வாங்கினேன்.
பள்ளிக்கூடத்திற்குப் பக்கத்தில் இரண்டு
ஆள் உயரத்திற்கு ரோட்டில் பள்ளம் தோண்டி மண்ணை வெளியே அள்ளிப்
போட்டிருந்தார்கள். அடி மண் மேலாகக் கிடந்தது. இந்த மண்ணில் தானே அந்தக்
காலத்து மக்கள் நடந்திருப்பார்கள் என்று நினைத்து, ஒருவரும் பார்க்காத
நேரத்தில் சிறிது மண்ணை வாய்க்குள் போடுமளவிற்கு ‘ஞானம்’ வளர்ந்திருந்தது.
வ. தேவன் மாதிரி குதிரையில் போக முடியாது போயிற்றே என்று எவ்வளவு வருத்தம்
எனக்கு! அப்போதெல்லாம் எப்போதும் குதிரையில் தான் சவாரி. குதிரையில் போவது
போல் சைக்கிளில் பெடல் சுத்தாமல் போயிருக்கிறேன். குதிரையிலிருந்து
சைக்கிளும், பைக்கும் வர ரொம்ப நாளாச்சு….
இப்போ அந்த நூலைப்பற்றி எழுத ஆசை. ஆனால்
அதற்காக மறுபடியும் புத்தகத்தை வாசித்துப் பார்த்து எழுதப் போவதில்லை.
நினைவில் உள்ளதை மட்டும் வைத்து எழுத வேண்டும். பிழைகள் இருந்தால் ஒதுக்கி
வையுங்கள்; வையாதீர்கள்.
மீண்டும் மலிவுப் பதிப்பு வரும்போது ஒன்று
வாங்கலாமோவென நினைத்தேன். ஆனால் ஆர்வமில்லை. முதலில் வாசித்த போது I was a
green horn! அப்போது வாசித்த போது கல்கி என்னிடம் பேசினார்; நான் பேசாமல்
கேட்டுக் கொண்டேன். இப்போ வாசித்தால் நிச்சயமாக அப்படி இருக்காது. அப்போது
எல்லாமே ஒரே rosy picture என்பதாகத் தெரிந்தது. இப்போது நிச்சயமாக அப்படி
இருக்காது. வாசித்த காலம் – அறியாப் பருவம். சாதி சமய வேறுபாடுகள் எதுவும்
புரியாத, தெரியாத காலம். ’அந்தக் rosy காலம்’ மட்டுமே தெரிந்தது. ஆனால்
இப்போது வாசித்தால் முதல் கேள்வியே பொ.செ.யில் இரண்டே சாதியினர் மட்டும்
வருகிறார்களோ? – அய்யரும், தேவரும்? என்ற கேள்விதான் எழும்.
இப்போது கதை வாசித்தால் அநிருத்த
பிரம்மராயரும், ஆழ்வார்க்கடியானும் கதாபாத்திரங்களாக மட்டும் தெரிய
மாட்டார்கள். அன்று வாசித்த போது தமிழ்வாணனின் ‘கத்திரிக்காய்’ மாதிரி
இவரையும் பிடித்துப் போயிற்று. ஆனால் இன்றும் கல்கியில் வரும் இரு
சாதிக்காரர்களைப் பற்றியும், இன்னும் சில வரலாறுகளும் தெரிந்த பிறகு எப்படி
அவர்களைப் பிடிக்கப் போகிறது. ராஜராஜ சோழனைப் பார்த்து போதுமளவிற்கு
பிரமிப்பு கொண்டாயிற்று. ஆனால் அவர் ஆட்சியில் அவர் அரியணையில் இருந்து
ஆட்சி செய்ததை விட பிராமண சாதியினரின் ஆட்சியாக அது இருந்ததாகத் தெரிவதை
எப்படிப் புகழ்வது. குடவோலையின் பெருமைகளைச் சின்ன வயதில் நிறைய படித்தாகி
விட்டது. ஆனால் election commission மாதிரி சில சட்டங்கள் .. அந்தச்
சட்டங்களைப் பார்த்தால் அது ஒரு சாதியினர் மட்டுமே வர வேண்டியதற்காக வைத்த
சட்டங்கள் போல் தெரிகிறது. படிப்பறிவு வேண்டும். – மற்ற சாதியினரின்
கல்வியறிவு எப்படி, எவ்வளவு இருந்திருக்கும் என்பது ஒரு கேள்வி. நிலம்
உடையவர்களாக இருத்தல் வேண்டும். – அதாவது இப்போது மன்மோகன் ரிலையன்ஸிற்காக
‘உழைக்கிறாரே’ அது போல் அன்று பணக்காரர்கள் பக்கம் அரசு என்ற நிலை. இதில்
பிராமணருக்கு ‘மங்கலங்கள்’ என்ற பெயரில் அவர்களை நிலவுடைமையாளர்களாக
ஏற்கெனவே மன்னன் மாற்றியிருக்கிறான். அவர்களே குறுநில மன்னர்களாக
இருந்திருக்கிறார்கள். ராஜ ராஜ சோழன் – மங்கலம் கொடுத்த ‘பெருமை’ இப்போது
நம்முன் கேள்விகளாக அல்லவா நிற்கும். கல்லூரிகளில் ‘கப்’ இல்லாதவன் மட்டும்
தேர்தலில் நிற்கலாம் என்பார்கள். முன் பெஞ்சுக்காரன் அடங்கிப் போவான்
என்பதுதானே காரணம். அது மாதிரி இந்த சாதிக்காரன் சட்டாம்பிள்ளையாக வேண்டும்
என்பது அரசனின் கொள்கை. திறமையாகக் குடஓலை மூலம் அதை நிறைவேற்றி
விட்டார்கள் போலும். A GOOD TRICK !! கதையிலும், நிஜ வரலாற்றிலும் ஊடோடி
நிற்கும் இந்தச் சாதிய சிந்தனைகளை எப்படிப் புறந்தள்ளுவது? அன்றிலிருந்த
அந்தச் சாதிய மேலாளுமை இன்னும் அப்படியேதான் இங்கே இருக்கிறது. இன்றும்
Pantene shampoo தான் பயன்படுத்தணும்னு ’அவா அவாளோட பாஷைய்ல சொல்றதைத் தான்
நாமளும் அசடாட்டம் கேட்டுண்டு இருக்கோம்’ … இல்லீங்களா?
பழுவேட்டரையரை அன்று பார்த்தால் அவரது
மீசையில் அவரின் வீரம் தெரிந்தது. பார்க்கவே பயமாகவும் இருந்தது. வீரப்
பிரதாபங்கள் பிடித்தன. ஆனால் இன்று அவர் மீசையைப் பார்த்தால் அதே மாதிரி
கடா மீசை வைத்துக் கொண்டு ‘நீயா நானா?’ நிகழ்ச்சியில், வேறு சாதிப் பையனை
என் பெண் திருமணம் செய்தால் அவளை வெட்டிப் போடுவேன்’ என்று ஒருவன்
‘கர்ஜித்தது’ தான் நினைவுக்கு வருகிறது. எங்கிருந்து பெருமை வரப் போகிறது?
அட .. ந்ம்ம வந்தியத்தேவனை அன்று அவ்வளவு பிடித்தது. ஆனால் இப்போது அவரைப்
பார்த்தால் ஒரு வேளை எங்கள் ஊர் மதுரையில் இருசக்கர வண்டிகளின் பின்னால்
தங்கள் சாதியைக் காண்பிக்க ’ஒரு கேடயம், இரு வாட்கள்’ இருக்கும் ‘லோகோ’வை
அடுத்தவர்களைப் பயமுறுத்துவதற்காகவே வைத்திருக்கும் இளைஞர்கள் அல்லவா
நினைவுக்கு வருவார்கள்.
காலம் மாறி விட்டது. பால் போல்
அனைத்தையும் குடித்த காலம் போயே போயிற்று. இப்போது கள்ளமும், கபடும்
தெரிந்தும் போயிற்று; மனதுக்குள் வந்துமாயிற்று.
ஆனால் என்ன சொல்லுங்கள் .. என் முதல்
காதல் செத்துப் போகவில்லை. இன்னும் அது என்னவோ .. என்ன வரலாறு படித்தாலும்,
எதையெல்லாம் யோசித்தாலும் அந்த முதல் காதல் இன்னும் மறையவில்லை.
என் முதல்
காதலி .. இன்றும் எப்போதும் குந்தவி தேவிதான்
Subscribe to:
Posts (Atom)