.
.
* the Catch-22 is a no-win situation, much like the "damned if you do, damned if you don't" scenario.
.
//
பொதுவாக குழந்தைகளின் மனதில் சிறுவயதில் விதைக்கப்படும் விஷயம் நெடு நாட்களுக்கு பதிந்தே இருக்கும். இதனை மனதில் கொண்டு வி.ஹெச்.பி/ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகளும், இசுலாமிய, கிருஸ்துவ அமைப்புகள் சிலவும் காய் நகர்த்தி வருகின்றன.// - எஸ்.பா.
மதங்களைப் பற்றிய என் பதிவுகளின் முதல் பதிவின் முதல் பாராவிலேயே இதைப் பற்றியெழுதியுள்ளேன். ஆனால் அது உங்கள் பதிவில் நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கு மாற்றான ஒரு கருத்தாக இருக்கும்.
இந்து மத தீவிரவாத அமைப்புகள் பலப்பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ள தென்னவோ உண்மைதான். நானே சின்ன வயதில் மதுரையில் சாரணர்கள் மாதிரி காக்கி உடை அணிந்து, கையில் ஒரு குச்சியுடன் physical exercises செய்வதைப் பார்த்திருக்கிறேன். அப்போது எனக்குத் தெரிந்த பகுதியில் ஒரே ஒரு சமூகத்தினர் மட்டுமே மதுரையில் இந்த அமைப்புகளில் இருந்தனர். it was a very very low key affair. ஆனால், அவைகளின் கொள்கைகளும், தீவிரத்தன்மையும் வெளியே தெரிய ஆரம்பித்ததும்
அதற்கு ஆதரவு பெருகியதும் மிகவும் சமீபத்திய விளைவுகளே.
இதை 'விளைவு' என்றே கருதுகிறேன்.கிறித்துவமும், இஸ்லாமும் அவைகளின் போதனைகளுமே இதற்குரிய காரணிகளாக நான் நினைக்கிறேன். அவர்களும் இதை நினைத்துச் செய்வதில்லை. அவர்களின் மதக் கோட்பாடுகளைக் குழந்தைப் பருவத்திலேயே சொல்லித் தருகிறார்கள். அவ்வளவே. ஆனால் அந்த மதங்கள் ஏக இறையியல் என்ற கோட்பாடு கொண்டதாகையால் இந்தப் பிரச்சனைகள்.
இந்து மதத்தினரில் இரு வகையுண்டு; ஒரு குழு தீவிரவாதக் குழு; இரண்டாவது அப்படி இல்லாத - மதங்களின் மேல் அளவுக்கதிகமான தீவிரமோ, ஈடுபாடோ இல்லாத பெரும்பான்மையோர். நீங்கள் பலர் இதில் இரண்டாவதில் வருகிறீர்கள்; இல்லையா? ஆனால், நான் சொன்ன இரு மதங்களில் இந்த இருவேறு கூட்டம் இருக்க முடியாது. அவர்கள் எல்லோருமே மதங்களைப் பொறுத்தவரை ஒரே மாதிரியான எண்ணம், செயல் கொண்டவர்கள்;
(இதில் எல்லோருமே என்பதை விட மிகப்பெரும்பான்மை என்பதே சரியாக இருக்குமென்பது என் தாழ்மையான கருத்து. - ஜோ.) சிறுவயது முதலே அப்படி ஆக்கப் படுகிறோம். என் சின்ன வயதில் இன்னும் இந்துக்களாக இருக்கும் தாய்வழி தாத்தா பாட்டி வீட்டில் நடக்கும் பூஜையில் வைத்துப் படைக்கப் பட்டவைகளை நான் தொடவும் மறுத்து விடுவது மட்டுமல்லாமல், 'இது பிசாசுக்கு வச்சது; சாப்பிடக் கூடாது; நான் சாப்பிட மாட்டேன்' என்று சொன்னதும் - அப்படி எனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டு இருந்தது - நினைவிலிருக்கிறது. இதில் முக்கிய அம்சம் - அந்த மதக்காரர்களைப் பொறுத்தவரை அது சரி;
அதுதான் சரி. அதுவே அந்த மதங்களைப் பின்பற்றுவதற்குறிய அடிப்படை முறை.
For them, it is NOT fundamentalism; instead they are the basic tenets of their respective religions.
//
மத நச்சு விதைகளை எல்லா மதத்தின் அடிப்படைவாதிங்ஏளும் பிள்ளைகளுக்கு விதைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.- ப்ரியன்.//
இதை நீங்கள் எப்படி 'நச்சு விதை' என்று கூறலாம்?
- ஒரே கடவுள் என்று சொல்லிக் கொடுப்பது தவறா?
- எங்கள் கடவுள்தான் உண்மையான கடவுள்; எங்கள் வேதம்தான் உண்மையான வேதம். அதைக் குழந்தைப் பருவத்திலேயே சொல்லிக் கொடுப்பது எப்படி தவறாகும்'?
- இது நல்வழி என்று காண்பிக்கும்போது மற்ற வழிகள் சரியான வழிகள் மட்டுமல்ல; தவறான வழியுமாகும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டாமா?
- பிள்ளைகளுக்கு வெறும் விஞ்ஞானக் கல்வி மட்டும் போதுமா?
- அவர்கள் தங்களைப் படைத்தவர் யார்? எதற்காக நம்மைப் படைத்தார்? அவரை மகிழ்விக்க நாம் எப்படியிருக்க வேண்டும்? என்னென்ன செய்யலாம்; எதையெல்லாம் செய்யக் கூடாது? என்றெல்லாம் சிறு வயது முதலே சொல்லிக் கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்தவேண்டியது பெற்றவர்களின் முதல் கடமையில்லையா?
- இதுதான் ப்ரியனின் கூற்றுக்கு இந்த மதத்தினரால் கொடுக்கப்படும் பதிலாக நிச்சயமாக இருக்கும்
“What is sauce for the goose may be sauce for the gander, but it is not necessarily sauce for the chicken, the duck,.............!
ப்ரியனுக்கு 'நச்சு விதை'யாகத் தோன்றுவது அவர்களுக்கு மிகவும் தேவையான ஒன்றாக, வாழ்வின், மதத்தின் அடிப்பைடை விஷயமாகத் தெரிகிறதே. கடவுளை - எங்கள் கடவுளை - அவர் சொன்ன காரியங்களை அச்சு பிசகாமல் பின்பற்ற நாங்கள் மதங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று கேட்பவர்களுக்கு என்ன பதில் கூற முடியும்? அதுவும் கிறித்துவ மதத்தின் 10 கட்டளைகளில் -அவைகள் மதத்தின் ஆதாரமான, நல்வழிப்படுத்துதலுக்கானது - முதல் கட்டளையே 'என்னைத் தவிர உனக்கு வேறு கடவுள் இல்லை' என்பது. இதைச் சொல்லித்தராமல் இருக்க முடியுமா? இதேபோல் இஸ்லாமில் என்னவென்று தெரியாது; ஆனால் 'இணைவைக்காதே' என்ற தத்துவத்தை அவர்கள் சொல்லித்தராமல் இருக்க முடியுமா? அந்த மதத்துக்காரர்களால் சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு
சமயக் கல்வி தராது இருக்க முடியாது. அவ்விதமான கல்வி தரும்போது, அடுத்த மதக் கருத்துக்கள் தவறு; நம் வழியே நல்வழி மட்டுமல்ல - ஒரே நல்வழி என்று சொல்லாமல் இருக்க முடியாது.நான் கூறுவதில் நம்பிக்கையில்லையெனில், நம்பிக்கையாளர்களைக் கேளுங்கள். நிச்சயமாக நான் சொல்வதோடு அவர்கள் ஒத்துப் போவார்கள்.
(அப்பாடா! ஒரு வழியாக நம்பிக்கையாளர்கள் இந்த ஒரு விஷயத்திலாவது என்னோடு ஒத்துப் போவார்கள் !)
//
புத்தக மூட்டையையும், பாடச்சுமைகளையும் தூக்கி சோர்ந்து போய் இருக்கும் குழந்தைகளை மதமென்னும் மாயவலைக்குள் தள்ளுவதை பெற்றோரும் மற்றோரும் விட்டொழிக்க வேண்டும். - எஸ்.பா.//
எப்படி? ஒருவேளை, 'சமயக் கல்வியைச் சிறு வயதிலேயே கொடுக்காமல் விட்டு விட்டு, நாலையும் புரிந்து கொள்ளும் வயதில் அவர்களாகவே தங்கள் தங்கள் விருப்பம் போலும், கருத்து படியும் ஏதாவது ஒரு மதத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதியுங்களேன்' என்று யாரேனும் சொன்னாலும், அதிலும் ஒரு குறையுண்டு. ரெண்டும் கெட்டான் வயதென்று சொல்லும் அந்த பதின்ம வயதில்தான் மனிதனுக்கு மதத்தின் முக்கியம் அதிகம். மதங்கள் நல்லது சொல்லி மனிதனை நல்வழிப்படுத்துகிறதோ இல்லையோ, நிச்சயமாக நான் என் மதப் பதிவுகளில் கூறியபடி நல்லாவே
பயங்காட்டும் பூச்சாண்டிகளாகப் பயன் படுகின்றன. fear of god is the beginning of wisdom என்ற ஒரு பைபிள் வாக்கியம் இங்கு நினைவுக்கு வருகிறது. இந்துக்களின் அடுத்த பிறவி கீழ் பிறவியாகி விடும் என்ற தத்துவமோ, கிறித்துவர்களின் நித்திய நரகம் என்றோ, இஸ்லாமியர்களின் gehenna என்றோ ஒன்றை வைத்துப் பயமுறுத்தி, மக்களை நல்வழிப்படுத்த முயலும் முயற்சி இந்த இளம் வயதிலேயே கொடுக்கப்பட்டால்தான் கொஞ்ச நஞ்சமாவது வயது காலத்தில் / வயதான காலத்தில் மனுஷப் பிறவிகள் மதங்கள் சொல்லும் இந்தத் தண்டனைகளை மனதில் வைத்து 'கடவுளுக்குப் பயந்து' இருப்பார்கள்.
அடுத்து -
//
மக்கள் மனதில் மத சகிப்புத்தன்மை என்பது வளர்க்கப்படவேண்டிய ஒன்று.-ப்ரியன் // - என்று சொல்வதைப் பற்றி.
'மத சகிப்புத்தன்மை' என்பதே ஒரு வகையில் தவறான ஒரு வார்த்தைப் பிரயோகம் என்று நினைக்கிறேன். தலைவலி வந்தால் சகித்துக் கொள்ள வேண்டும். அதாவது, வேறு வழியில்லாமல் ஒன்றை நாம் accept செய்து கொள்ள வேண்டும். நமக்கு அதைப் பிடிக்காது; இருந்தும் சகித்துக் கொள்ள வேண்டும் என்றால் அது ஒரு நேரம் இல்லையென்றால் இன்னொரு நேரம் கோபமாகவோ வேறு எந்த வழியிலோ வெளிப்படும் நிலை வரும். நமக்குள் இருக்க வேண்டியது religious tolerance இல்லை; தேவை relgious acceptance. அப்படி ஒன்று நமக்குள் (நமக்குள் என்பது இந்த முழு மனித குலத்திற்கும் என்று கொள்க) ஏற்பட்டால்தான் எல்லா மதத்தினருக்கும் நடுவில் சமத்துவமும், மனித நேயமும் நன்கு மலரும்.
ஆனால்,
இது நடக்கிற காரியமல்ல. ஏனெனில் (மீண்டும் மீண்டும் இப்படி கூறுவதற்கு மன்னிக்கணும்..) நான் ஏற்கெனவே என் மதப் பதிவுகளில் கூறியபடி ஆபிரஹாமிய மதங்களின் அடிப்படையே தங்கள் தங்கள் மதக் கோட்பாடே சரியென்பதும், மற்றைய மதங்கள் தவறானவை,திரிக்கப்பட்டவை என்பதுமாகும். அப்படியிருக்கும் போது ஒரு ஆபிரஹாமிய மதத்தவர் அடுத்த ஒரு மதத்தினரைச் சகித்துக் கொண்டாலும் கொள்வாரேயன்றி, அவரது மதக் கோட்பாடுகளை ஒருக்காலும் accept செய்ய முடியாது; அவர்கள் மதமும் அதற்கு அனுமதிக்காது. கிறித்துவர்கள் இந்து மத நண்பர்களுக்குத் தங்கள் கடவுளர் போட்ட காலண்டர், டாலர் போன்றவற்றைக் கொடுப்பதும், அதை எந்த வித மறுப்பின்றி இந்து நண்பர்கள் வாங்கி,கொடுத்தவரின் அன்புக்காகவேனும் அதைப் பயன்படுத்தும் பண்பை என்றாவது ஒரு கிறித்துவரிடமோ, இஸ்லாமியரிடமோ காண முடியுமா? It is so simple; they can never ACCEPT other religions, கொடுத்தவர்களின் அன்பை மரியாதை செய்வதற்காகக் கூட. மெக்கா, ஒரு சிலுவை, ஒரு கோயில் கோபுரம் போட்ட படங்களை எந்தக் கடைகளில் காண முடியும் சொல்லுங்கள். இதில் இஸ்லாமியரையும், கிறித்துவரையும் குற்றம் கூறுவதும் அர்த்தமில்லை;ஏனெனில் அவர்கள் மதம் தரும் கட்டளை அது. அந்த மதத்தில் இருந்தால் அவர்கள் அதைப் பின்பற்றித்தானே ஆகவேண்டும்?
அப்படியானால், என்னதான் செய்வது? a zillion dollar question...!! இதற்குப் பதில் தெரிந்திருந்தால் மனித குலம் என்றோ எப்படியெல்லாமோ இருந்திருக்குமே!
* (ஆபிரஹாமிய )மதங்கள் தங்கள் கோட்பாடுகளை தங்களைக் கடைப்பிடிப்போரிடம் வலிமையோடு ஆழமாகப் பதிக்கின்றன. அக்கோட்பாடுகளை நம்பிக்கையாளர்கள் மீறுவதென்பது நம்பிக்கையாளர்களால் முடியாத ஒன்று.
* அடுத்த மதமும் கடவுளை அடைய (?) ஒரு வழியாக இருக்கக் கூடும் என்பதை இந்த மதங்கள் ஒப்புக் கொள்ளாது.
* சிறு வயதிலேயே சமயக் கல்வி போதிக்கப்பட்டாக வேண்டும் என்பதில் உள்ள உண்மையை மறுக்க முடியாது. அந்தக் கால கட்டத்திலேயே அவர்களுக்கு மற்ற மதங்களை மதிக்கவும், accept செய்யவும் கற்றுக் கொடுக்கலாம்; ஆனால், அது ஆபிரஹாமிய மதங்களின் அடிப்படைக் கோட்பாடுகளுக்குப் புறம்பானது.
தங்கள் மதமே சரியானது என்ற superiority complex- யோடுதான் மதக் கல்வியின் ஆரம்பமே இருக்கும்.
* இப்படி ஆபிரஹாமிய மதங்கள் தங்களின் 'சிறப்பை, உன்னதத்தை' சத்தம் போட்டுச் சொல்லிக்கொண்டே இருந்தால், மற்ற மதத்தினரை (இந்து மதத்தவருக்கு) ஏதாவது ஒரு கட்டத்தில் எரிச்சில் மூட்டத்தான் செய்யும். அதன் ஆரம்பம் தெரிய ஆரம்பித்து விட்டது. R.S.S.. சங் பரிவார் இவைகளின் குரல் உயர்வது இதன் வெளிப்பாடே. Churchill இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து பெற்ற முதல் வெற்றிக்குப் பிறகு சொன்ன வார்த்தைகள்தான் இங்கு பொருத்தம். - "This is the not the end; not even the beginning of the end; it is just the end of the beginning". அவர் நல்ல விஷயத்துக்குச் சொன்னது இங்கே கெட்ட விஷயத்துக்குச் சொல்லும்படியாகி விட்டது!
விடியும் நாட்களை நினைத்துப் பயமாக இருக்கிறது. நாளை...பொதுவாக மனித குலம், நம்மட்டில் இந்தியாவில், நம் குறுகிய சமூகத்தில் இந்த மதங்களை வைத்து நமக்குள் இருக்கும், எழப்போகும் பிரச்சனைகளை நினைத்தால்...
இளைஞர்களே...நீங்களே கேள்விகள்; நீங்களே பதில்கள்.
உங்கள் பதில் என்ன..?
*
*