Showing posts with label தருமி பக்கம் (அதீதம்). Show all posts
Showing posts with label தருமி பக்கம் (அதீதம்). Show all posts

Sunday, March 18, 2018

976. நல்ல சில சினிமாக்கள் ……….

* * சினிமா பற்றிப் பேச ஆரம்பித்தோமா … அதைப் பற்றியும் சொல்ல நிறைய இருக்கிறது. தமிழனாச்சே … சினிமா இல்லாமல் ஏது அவனுக்குவாழ்வு.

 படிக்கிற காலத்தைத் தாண்டி வேலை பார்க்க ஆரம்பித்த காலத்தில் ஒண்ணு நண்பர்களோடு அரட்டை அடிக்கணும் .. இல்ல … ஏதாவது ஒரு சினிமாவிற்குப் போகணும். வேறு போக்கிடம் ஏதும் கிடையாது. நானும் நண்பன் ஆல்பர்ட்டும் இந்த இரண்டையும் இணைத்து விடுவோம். எப்படியும் வாரத்திற்கு ஒரு சினிமாவாவது பார்க்கணும் என்பது ஒரு எழுதப்படாத விதி. தமிழ்ப்படங்களை விட ஆங்கிலப்படங்கள் அதிகமாக பார்த்திருப்போம். அதற்கு ஒரு காரணம் தமிழ்ப்படம் ஓரளவு அதிக நாள் ஓடும். ஆங்கிலப் படங்கள் ஓரிரண்டு தவிர மற்றதெல்லாம் ஒரு வாரம் கூட ஓடுவதில்லை. அதனால் ஆங்கிலப்படம் பார்க்கும் வாய்ப்புகளும் அதிகம். ரீகல் தியேட்டர் தான் அதற்கெல்லாம் சொர்க்கம். அந்த தியேட்டரைப் பற்றியே நிறைய பேசலாம். (இங்கே பேசியிருக்கிறேன்.)

 ஆனாலும் அப்போதிருந்தே மதுரை ஒரு கிராமிய டவுன் தானே! தியேட்டரே பற்றாது. நன்கு நினைவில் இருக்கிறது. மதுரை சென்னைக்கு அடுத்த மாநகராட்சியாக மாறிய போது வெறும் 14 தியேட்டர்கள் மட்டுமே இருந்ததாக நினைவு.. படம் நிறைய போடுவதற்கு தியேட்டர்களே கிடையாது. எதற்காகடா இந்த ஊருக்கு மாநகராட்சி அந்தஸ்து என்று பேசிக்கொள்வோம்.


 ஒரு நாள் நன்றாக நினைவில் இருக்கிறது. அந்த வாரம் சினிமா ஏதும் பார்க்கவேயில்லை. ஆனால் ஏதாவது ஒரு சினிமா பார்த்தே ஆக வேண்டுமென்று ஒரு கை அரிப்பு. யோசித்துப் பார்த்தோம். நண்பர்கள் சிலர் மீனாட்சி தியேட்டரில் ஒரு மலையாளப்படம் ஓடுது … அந்தப் பக்கமே போயிறாதீங்க என் ஒரு பயங்கர அறிவிப்பு கொடுத்திருந்தார்கள். படத்தின் பெயர்: போஸ்ட் மேனை காணலில்லா … போஸ்ட் மேனைக் காணவில்லை என்று பொருளோ? எப்படித்தான் போரடிக்குன்னு பார்ப்போம்னு தைரியமா அந்தப் படத்திற்கும் போனோம். வெட்டுப்பட்டு வெளியே விழுந்தோம். ஆனாலும் ஒரு ‘கடமையை’ முழுவதாகச் செய்து விட்ட பெருமிதம்!

 ஆனால் சில சமயங்களில் அப்படிக் கண்ணை மூடிக்கொண்டு படம் பார்க்கப் போய் சில நல்ல படங்களைப் பார்த்த நினைவும் உண்டு. தாகம் என்றொரு படம். ஒரு வங்காள நடிகை நடித்திருந்தார். நம்மூர் முத்துராமன் குருடனாக நடித்திருப்பார். அப்போதெல்லாம் படத்தைப் பற்றி ஏதும் அதிகமாக ஊடகங்களில் செய்திகள் அதிகமில்லை. எப்படிப்பட்ட படம் என்று தெரியாது போய் பார்த்தேன். இன்னும் சில காட்சிகள் நினைவில் இருக்கின்றன. அடிக்கடி ஒரு மரத்தைச் சுற்றிப் போடப்பட்ட ஒரு வட்ட திண்டு இருக்கும். படத்தில் அடிக்கடி வந்தாலும் போரடிக்காமல் அந்த இடத்தோடு ஒரு தொடர்பை நாமளே எடுத்துக் கொள்வோம். படம் டைரடர் புட்டண்ணா.. உதவி இயக்குநர் பாரதிராஜா என்று பின்னால் பார்த்த நினைவு. ஆனால் இப்போது இணையத்தில் அந்த செய்திகளைத் தேடி உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இல்லை .. இல்லை…இணையத்தில் கூகுள் சாமி கொடுக்காத விஷயமா… கொஞ்சம் கண்டு பிடித்து விட்டேன். கதாநாயகி நந்திதா போஸ். இயக்குனர் பாபு நந்தன் கோடு. வேறு விவரங்கள் தெரியவில்லை. புட்டண்ணா …பா.ராஜா பற்றி சொன்னது தப்பு. படம் அப்படிப் பிடித்துப் போனது. எவ்வளவு என்றால் கட்டாயம் நாலைந்து நாட்களுக்காவதுஒரு சினிமா என்றிருந்த என்னால் அடுத்த சில நாட்களுக்கு எந்தப் படத்தையும் பார்க்கப் பிடிக்காத ஒரு மன நிலைக்குத் தள்ளப்பட்டேன். சில சமயம் பிடித்த ஒரு இனிப்பைச் சாப்பிட்டு விட்டு அதன் ருசி நாக்கை விட்டு நகராமல், நாமும் அடுத்து எதையும் அந்த சுவை மாறக்கூடாதென சாப்பிடாமல் இருப்போமே … அது மாதிரி அந்தப் படம் எனக்கு ஒரு பெரும் தாக்கத்தை அளித்தது. ஒரு மரத்தைச் சுற்றி ஒரு சிமிண்ட்டால் ஆன திண்டு என்று சொன்னேனே … அதே எபெக்ட் பின்னாளில் இன்னொரு படத்திலும் ஒரே இடம் திரும்பித் திரும்பி வரும். அந்த இடத்தையே நாமும் காதலிக்க ஆரம்பித்து விடுவோம். அது பாலு மகேந்திராவின் மம்முட்டி நடித்த ‘யாத்ரா’. அந்தப் படமும் அழியாத கோலங்கள், வீடு படமும் பாலு மகேந்திராவை ஒரு நல்ல திரைக்கதை அமைப்பாளராக எனக்குக் காட்டியது. பாக்யராஜை இந்த விஷயத்தில் எல்லோரும் தூக்கிப் பிடிப்பது எப்படி என்று எனக்குப் புரிவதில்லை.



 இதே போல் இன்னொரு படம். மலையாளத்தில் நிர்மால்யம் என்னும் படம். பரிசிற்காக எடுத்த படம். நாலைந்து பாத்திரங்கள் மட்டும் உள்ள ஒரு படம். அசையாமல் ஒரு கட்டிலில் படுத்துக் கிடக்கும் ஒரு கிழவர் மிக முக்கியமான பாத்திரம். சிறந்த நடிகருக்கான பரிசு இப்பட்த்தில் நடித்த அந்தோனி என்ற நடிகருக்கு. இவர் அந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான பரிசை வாங்கினார். ஆனால் விழாவிற்கு முன் விழா நடக்கும் இட்த்திற்குப் பக்கத்தில் ஒரு ப்ளாட்பார்மில் ஓரமாக உட்கார்ந்து பீடி குடித்துக் கொண்டிருந்தார் என்று சொல்வார்கள்.

 தனக்கு அரசு வேலை கிடைத்து விட்டது என்று கதாநாயகியைக் காதலிப்பவன் அவளிடம் சொல்லிவிட்டு ஊரை விட்டுப் போவான். ஒரு அகலமான, தண்ணீரே இல்லாத ஆற்றைத் தாண்டி நடக்க ஆரம்பிப்பான். காமிரா ஸ்டான்ட் போட்டு ஆற்றில் ஓரத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அவன் முழு ஆற்றைக் கடப்பது வரை அந்தக் காமிரா அதே கோணத்தில் அதே இடத்தில் அசையாமல் இருக்கும். கதாநாயகன் ஆற்றைக் கடக்கும் போது ஒரு சாவு ஊர்வலம் ஒன்று அவனைக் கடந்து செல்லும். காட்சிப் பொருளாக நம்முன் இவை எல்லாம் கடந்து போகும். கதாநாயகன் ஒரு முறை வீட்டிலிருந்து தன் செருப்பை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பி தெரு முனை போகும் வரை காமிரா ஒரே இடத்தில் அசையாமல் இருக்கும். படத்தைப் பற்றி முழுமையாகத் தெரியாது. பரிசுப்படம் என்பது மட்டும் தெரியும். நான் மட்டும் படத்திற்குத் தனியாகப் போயிருந்திருக்கலாம்.



கடைசி சீனில் கதாநாயகன் – ஒரு கோவில் பூசாரி – கோவிலில் கஷ்டப்பட்டு விழா எடுக்கிறான். கடைசி நாள் தான் தன் மனைவி சோரம் போவதைத் தெரிந்து கொள்கிறான். இத்தனை நாளும் கட்டிலில் படுத்திருக்கும் கிழவர் – கதாநாயகனின் தந்தை – அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரே சாட்சி.





விழாவின் இறுதி நாள். கையில் அருவாளைத் தூக்கு வைத்துக் கொண்டு சாமி ஆடுகிறான். இறுதி சீன். தன் தலையை வெட்டிக்கொண்டு கடவுளின் காலடியில் உயிரின்றி சாகிறான். படம் முடிகிறது. படத்தின் டைரகடர் . எம்.டி. வாசுதேவன் நாயர்.





 நான் என் நண்பன் ஒருவரையும் அவனது நண்பர்கள் சிலரையும் கிளப்பி விட்டுப் படம் பார்த்து வந்தோம்.மதுரை லட்சுமி தியேட்டர். படம் முடிந்து மெளனமாகத் திரும்பி வந்தோம். தியேட்டரிலிருந்து ஏறத்தாழ ஐம்பது மீட்டர் தாண்டி இருந்த கடையில் சிகரெட், டீக்காக நின்றோம். நான் மெல்ல படம் நன்றாக இருந்துதில்ல … என்று பேச ஆரம்பித்தேன். எல்லோரும் அடிக்க வந்தார்கள்.அடப்பாவி … வேறுபடம் கிடைக்காமல் இந்தப் படத்துக்கு எங்களை ஓட்டிட்டு வந்துட்டியா …? காமிரா மேன் காமிராவை வைத்து விட்டு அவர் பாட்டுக்கு டீ குடிக்கப் போய்றாரு … நல்ல படமான்னு தகராறு செய்தனர். ஒருத்தர் மட்டும் அந்தக் கடைசி சீன் மட்டும் நல்லா இருந்தது என்றார்.


நமக்கு அது பத்தாதா? இங்க பாருங்க… படம் பாத்துட்டு வழக்கமா எதையாவது ஜாலியா பேசிக்கிட்டே நடந்து வருவோம். நாம் மட்டுமல்ல .. தியேட்டர் விட்டு வரும்போது யாரவது ஏதாவது பேசிக்கொண்டு வந்தது மாதிரி பார்த்தீங்களா? எல்லோரும் பிரம்மை பிடிச்சி வெளியே வந்தாங்களா இல்லையா? அந்தக் கடைச் சீனுக்கான பில்டப்பு தான் இந்த முழுப்படம் என்றேன்.

அவர்களுக்கு நான் சொன்னதை முழுவதுமாக ஒப்புக் கொள்ளவும் முடியவில்ல. அட போப்பா இல்லைன்னு சொல்லவும் முடியவில்லை. 


அழகான படம்.






 *

Wednesday, August 17, 2016

905. சினிமாவுக்குப் போன சின்னப் பையன்





*

'திண்ணையில உட்காரச் சொன்னா கெடக்கி இரண்டு ஆடு கேட்பானாம்' அப்டின்னு ஒரு பழமொழி உண்டு அல்லவா? நம்ம கேசும் அதே தான். இதுவரைக்கு வாழ்க்கையில் கிடைக்காத ஒரு வசதியான அறை. ஏற்கெனவே சொன்னது போல் இது வரை பார்க்காத மேசை, நாற்காலி வசதி, தலைக்குமேல் சுற்றும் விசிறி … இப்படி எல்லா வசதியும் கிடைத்தது.இத்தனை வசதிக்கு நல்லா படிக்கிற ஒரு நல்ல பையனுக்குக் கிடச்சிருந்தா .. .. படிப்பில பின்னியிருந்திருப்பான்.

நான் இந்த அறைக்கு வந்த பின் என் சீனியர் ஒருவரும் வந்து சேர்ந்து கொண்டார். அவர் ரொம்ப நல்லவரு. அதிகம் பேசமாட்டார். அவர் வீட்டில் ஐந்து பிள்ளைகளாம். இவர் தான் மூத்தவர். இவர் மட்டும் படிப்பில் மட்டம். மற்ற பிள்ளைகள் எல்லோரும் மகா சுட்டிகளாம். வீட்டில் இதனால் இவருக்கு ‘திகுடு ..முகுடா’ நிறைய கிடைக்கும் போலும். ஆகவே இப்படியாவது படிப்போம் என்று சாமியாரிடம் கேட்டு சேர்ந்து கொண்டார்.

எங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறை அந்த காம்பஸின் கடைசியில், மேற்கு மூலையில் இருந்தது. அதை ஒட்டி காம்பவுண்டு சுவர். எங்கள் ‘முன்னோர்கள்’ எங்களுக்கு வைத்து விட்டுப் போயிருந்த இன்னொரு வசதி என்னவென்றால், எங்கள் அறையை ஒட்டிய காம்பவுண்ட் சுவற்றில் ஏறிக் குதிப்பதற்குரியவாறு அங்கங்கே செங்கல்கள் பெயர்ந்திருக்கும். நாங்கள் அந்த காம்பஸுக்குள் வருவதற்கு இதுவே சுலப வழி எங்களுக்கு. ஒரு டீ குடிக்கணுமா, ஒரு ‘இழுப்பு’ இழுக்கணுமா, சும்மா ஒரு ஜம்ப்; அவ்வளவுதான். எங்களுக்குத்தான் அத்தனை சுலபம். எல்லாருக்கும் அப்படியெல்லாம் முடியாது. எங்கெங்கே செங்கல்லில் ஓட்டை, இன்னும் பல விஷயம் அதில…லேசுப்பட்ட டெக்னிக் இல்ல.

இப்படியெல்லாம் ஏறிக் குதித்து, டீ & தம் அடித்து அதோடு சேர்த்து ஏதோ போனா போகுதுன்னு, அப்பப்போ கொஞ்சம் படிக்கவும் செய்வேன். இதுக்கும் மேலே இன்னொரு சோதனையும் சேர்ந்து கொண்டது. பள்ளிப்படிப்பு முடியும் வரை வீட்டுக்குத் தெரியாமல் கள்ளத் தனமாக சினிமா ஏதும் பார்த்த்தில்லை. கல்லூரி வந்த பிறகும் இதே மாதிரி ‘நல்ல பிள்ளை’யாகத்தானிருந்தேன். வீட்டிலும் ‘படிக்கப்’ போனாலும் இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வந்து விட வேண்டுமென்ற கண்டிப்பு உண்டு. சினிமாவிற்குப் போக வேண்டுமெனில் வீட்டிலிருந்து 6 மணிக்கு முன்பே புறப்படணும் … படம் முடிந்து வீட்டுக்கு எவ்வளவு வேகமாக சைக்கிளில் வந்தாலும் ஒன்பதரையைத் தாண்டி விடும்.

இந்தப் பிரச்சனையை நண்பன் ஒருவனிடம் சொல்லிக் கொண்டிருந்த போது அவனுக்கு ஒரு ‘ஞானோதயம்’! ஆங்கில சினிமாவின் நல்லதும் கெட்டதும் அப்டின்னு ஒரு பிரசங்கம் கொடுத்தான். அப்போதெல்லாம் ஆங்கிலப்படம் என்றால் ரீகல் தியேட்டர் மட்டும் தான். நியூஸ் போட்டு 7 அல்லது ஏழே கால் மணிக்குப் பிறகு தான் மெயின் படம் ஆரம்பிக்கும். எப்படியும் எட்டேமுக்காலுக்குள் படம் முடிந்து விடும். என் வீட்டுக்கும் தியேட்டருக்கும் அந்தக் காலத்தில் 10 நிமிஷத்தில் விரட்டிப் போய்ச் சேர்ந்து விடலாம். இப்படி ஒரு ஐடியா கொடுத்தான். எனக்கு ஒரு பெரிய சந்தேகம். ஒன்றிரண்டு ஆங்கிலப் படம் பார்த்த போது வர்ர ஆளுக மூஞ்சியெல்லாம் ஒரே மாதிரியாகவே தெரியும். ஆக, போன சீன்ல செத்துட்டான்னு நினச்சவன் அடுத்த சீன்ல தலையைக் காட்டுவான். இந்தக் குழப்பம் வேற இருந்தது. அதெல்லாம் பார்க்க சரியாகி விடும் என்றான் நண்பன்.

அதோடு நிற்காமல் ஒரு படம் இப்போ ஓடுது. கட்டாயம் பார்த்து விடு என்றான். நானும் முதன் முதல்ல ஒரு ஆங்கிலப் படம் வீட்டுக்குத் தெரியாமல் ரீகல் தியேட்டருக்குப் போனேன். இந்த தியேட்டரில் அந்தக் காலத்தில் படம் பார்ப்பதே ஒரு பெரிய experience. நிறைய ஆச்சரியங்கள் அங்கிருக்கும். அதைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ள இங்கே கொஞ்சம் போய்ப் பாருங்களேன்.  Rank Organization… Norman Wisdom நடித்த On The Beat  என்ற படம் தான் வீட்டுக்குத் தெரியாமல் நான் பார்த்த முதல் ஆங்கிலப்படம்.




பார்த்த்துமே ‘பச்சக்’குன்னு படம் பிடிச்சிப் போச்சு … என்னா காமெடி .. நாகேஷ் காதலிக்க நேரமில்லை படத்தில் தன் மேசையில் இன்னொரு பெரிய ஹாலிவுட் காமெடி நடிகரான Jerry Lewis பட்த்தை மட்டும் தான் வைத்திருப்பார். ஆனால் அவரின் நடிப்பில் Norman Wisdom சாயல் நிறையவே இருக்கும். A stitch in time என்று நினைக்கிறேன். Norman Wisdom நர்ஸாக நடித்திருப்பார். நாகேஷின் நீர்க்குமிழி படம் என்றும் நினைக்கிறேன். ஏறத்தாழ அதே கதை… ஒரு சிறு குழந்தையோடு – குட்டி பத்மினி? ரொம்ப ஒற்றுமையாக இருக்கும். 

அடேயப்பா … On The Beat ஆங்கிலப் படம் பார்த்ததே முதல் பெரிய வெற்றி. நல்ல ஆரம்பம். படம் பிடித்துப் போய் அப்பாவுடன் அடுத்த நாள் மதிய சாப்பாடு சாப்பிடும் போது ஒரு நல்ல சீன் நினைவுக்கு வந்து நான் சிரிக்க … அப்பா என்ன என்று கேட்டதும் எதையோ ஒரு பொய் சொல்லிச் சமாளித்ததும் நினைவுக்கு வருகிறது. முதல் வெற்றிக்குப் பிறகு அடிக்கடி ரீகல் போவது பழக்கமாகி விட்டது.

இப்போது தமிழ்ப்படம் ஓடுவது போல் அப்போது ஆங்கிலப்படங்கள் ஓடின. அதாவது இப்போதெல்லாம் தமிழ்ப்படங்கள் வெள்ளிக்கிழமை வெளிவரும். அடுத்த திங்கட்கிழமை அதே படம் ஓடுமா என்பது நிச்சயமில்லை. இது மாதிரி அந்தக் காலத்தில் வெள்ளி வரும் ஆங்கிலப் படம் ஒரு வாரப் படமாக இருக்கலாம். அல்லது இரு நாட்களுக்கோ மூன்று நாட்களுக்கோ ஓடும். ஒரு வாரத்திற்கு மேல் ஆங்கிலப்படம் ஓடுவது கிடையாது. ஆக வாரத்தில் எப்படியும் ஒரு படமாவது பார்த்திடலாம்.

 கல்லூரி வாழ்க்கையில் ஆங்கிலப்படம் பார்ப்பது மாமூல் விஷயமாகிப் போனது. காமெடி பட்த்தில் ஆரம்பமாகி, war படம் அது இதுன்னு வளர்ந்து போச்சு.

படிப்பு ஒரு ஓரமா ஒதுங்கி நடந்து வந்தது.




*

Sunday, September 27, 2015

868. புத்தம் புது அறை (தருமி பக்கம்)







*



 அடுத்த நாள் நல்ல பையனாக சாமியாரைப் பார்க்கப் போனேன். ஒரு சாவி கொடுத்தார். ஏதோ ஒரு வகுப்பறையாக இருக்குமென நினைத்தேன். தனியாகத்தான் படிக்கப் போகிறாயா என்று கேட்டார். ஆமாம் என்றேன். வேறு யாரும் கேட்டால் என்னைப் பார்க்கச் சொல் என்றார். சரி .. போ என்றார். எந்த அறை என்று தெரியவில்லையே என்று கேட்டேன். ஒரு அறையைச் சொன்னார். எனக்கு திக்கென்றது. இதற்கு முன் இன்னொரு சாமியார் அங்கு அலுவலகம் வைத்திருந்தார். அவர் காலி செய்த அறை அது. அந்த அறையா என்று எனக்கு ஒரு சந்தேகம். மறுபடி கேட்டு உறுதி செய்து கொண்டு அந்த அறைக்குப் போனேன்.

அந்த அறை எனக்குத் தெரியும். வெளியே இருந்து பார்த்திருக்கிறேன். அந்த அறையா என்ற ஆச்சரியத்துடன் அந்த அறைக்குப் போனேன். கோவிலின் நேர் பின்னால் Fathers' House. அதாவது சாமியார்கள் தங்கும் பங்களா. பின்னாளில் St. Xavier's College, St. Joseph's College, Loyola College போன்ற மூன்று கல்லூரிகளிலும் இருந்த Fathers' Houses ஒரே மாதிரியான கட்டிட அமைப்புடன் அச்சு அசலாக ஒரே மாதிரியாக இருந்ததைப் பார்த்தேன். அந்த மூன்றோடு மதுரை St. Mary's கோவிலும் அதே அமைப்பில் இருந்தது. எல்லாமே Jesuits என்று சொல்லும் சாமியார்களின் அமைப்பில் இருந்தன. அதனால் தான் அந்த ஒற்றுமை.

கோவிலுக்குப் பின்னால் Fathers' House. இதற்கு இடது பக்கத்தில் உயர்நிலைப் பள்ளி. வலது பக்கத்தில் ஆரம்பப் பள்ளி. Fathers' Houseக்குப் பின்னால் ஒரு பெரிய தோட்டம். நிறைய தென்னையும் பாக்கு மரங்களும் இருக்கும். சுற்றிலும் சுற்றுச் சுவர்கள். இப்போது இந்த சுவர்கள் நல்ல உயரத்தில் கட்டப்பட்டுள்ளன. அப்போது உயரம் கொஞ்சம் கம்மி தான். வலது பக்கத்தில் இருக்கும் ஆரம்பப் பள்ளியின் முக்கிய பகுதி கிழக்கு மேற்கில் நீண்டு இருக்கும். அதன் மேற்குக் கடைசியில் இருந்தது தான் எனக்கு வாய்த்த அறை. பள்ளி அப்போது பழைய கட்டிடமாக இருந்தது. ஆனால் இந்த அறை மட்டும் ஒரு புதுக்கட்டிடமாக இருந்தது.

வாசலே மிக அகலமாக இருக்கும். நான்கைந்து நீளப்படிகள் ஏறணும். அங்கே அறை நீளத்திற்கு collapsible gate இருக்கும். ஒரு பாதி கதவுதான் திறப்போம். முன்னறை மாதிரி நீள வாக்கில் முதல் அறை. அடுத்து இன்னொரு வாசல் திறக்க நம் அறை! வீட்டில் செங்கல் தரை. அம்மா வாரம் தோறும் சாணியால் மெழுகுவார்கள். ஆனால் இங்கே எல்லாம் சிமண்ட் மயம். உள்ளே நுழைந்தால் .... அடே .. அப்பா...!

கல்லூரியைத் தவிர இதுவரை என் தலைக்கு மேல் மின் விசிறி  எப்போதும் சுற்றியதில்லை. இங்கே தலைக்கு மேல் ஒரு மின் விசிறி. அதன் கீழே  மேசை; ஒரு நாற்காலி. மேசை நாற்காலி என்று உட்கார்ந்து கொண்டு படிப்பது எல்லாம் ஒரு கனவு தானே ஒழிய, நிச்சயமாக நிஜத்தில் அது மாதிரி ஏதும் வாழ்க்கையில் இது வரை நடந்தது இல்லை. அதுவும் முட்டை விளக்கில் இருந்து பழகிய எனக்கு ஒரு பெரிய ட்யூப் லைட் வெளிச்சம் ... அடடா... என்ன ஆச்சரியம். என்னமோ சொல்வார்களே .. என் வாழ்க்கையையே திருப்பிப் போட்ட ஒரு சம்பவம் என்பார்களே .. அது மாதிரி புது அறை இருந்தது.

நல்லா படிக்கிற ஒரு நல்ல பிள்ளைக்கு இந்த மாதிரி ஒரு அறை கிடைத்திருந்தால் என்னமா பண்ணியிருப்பான்! என்னென்னமோ பண்ணியிருப்பான்!  ஆனால் ... நான் என்ன அந்த மாதிரி நல்ல பையனா?

அறை அமைந்ததை விட சுற்றுச் சுவர் எனக்கு மிகவும் தோதானஒன்றாக மாறிப்போய் அதுவே வாழ்க்கையை மேலும் சிறிது புதிய கோணத்தில் மாற்றியது. சுவர் எப்படி வாழ்க்கையை மாற்றும் என்கிறீர்களா?

மாற்றும் ... நிச்சயமாக என் வாழ்வில் மாற்றியது. எப்படி என்று பிறகு சொல்கிறேனே ....











*

Thursday, August 27, 2015

857. தெரு விளக்கில் படிக்கிறவங்க எல்லாம் பெரிய ஆளுகளா என்ன ,,,,? (தருமி பக்கம் 32)








*





 நமது 'ராஜ மாளிகை'யிலிருந்து சிறிது தொலைவில் புனித மரியன்னை கோவிலும், அதே காம்பவுண்டுக்குள் புனித மரியன்னை ஆரம்பப்பள்ளியும், உயர்நிலைப்பள்ளியும் இருந்தன. எனது வாழ்வில் இந்த காம்பவுண்டு மிக முக்கிய இடம் பிடித்து விட்டது. ஆரம்பப்பள்ளி நாட்களில் தினமும் காலையில் 6 மணிக்கெல்லாம் இரண்டாம் பூசைக்கு அனுப்பி விடுவார்கள். பூசை முடித்து விட்டு. கோவிலுக்குப் பின்னாலிருக்கும் fathers’  bungalow வில் இருந்த பெரிய மாட்டுப் பண்ணையில் வீட்டுக்குப் பால் வாங்கிக் கொண்டு போக வேண்டும். அதென்னமோ…. சின்ன வயதிலேயே நாலரை, ஐந்து மணி என்று வீட்டில் எழுப்பி விட்டு விடுவார்கள். இது போன்ற பழக்கம் அப்படியே என்னை வாழ் நாளெல்லாம் தொற்றிக் கொண்ட்து என்று பலரும் சொல்வதுண்டு. ஆனால் என் வழி … தனி வழி …! இன்று வரை காலையில் எழுவது என்பது ஒரு பெரிய கஷ்டமானதாகவே இருக்கிறது. இப்போதும் காலையில் நடைப் பயிற்சி என்றால் நன்றாக தூங்கி விடுகிறேன். அதற்குப் பதிலாக shuttle cock என்றால் ஒரு வழியாக அலாரம் வைத்து எப்படியோ எழுந்து விடுகிறேன். அதற்காகவே நடைக்குப் பதிலாக விளையாட்டு என்று இப்போதும் வைத்துக் கொண்டு விட்டேன்.

காலையில் எழுந்து கோவிலுக்குப் போகும் பழக்கம் தொடர்ந்து வந்தது. பத்தாம் வகுப்பு வரை வந்த போது வீட்டிலும் ‘ஜனப் பெருக்கம்’ அதிகமாக ஆகி விட்டது. அதனால் இரவு மொட்டை மெத்தையில் படிக்கும் பழக்கம் ஆரம்பித்தது. பக்கத்து வீட்டில் நடந்த ஒரு தற்கொலை, அதனால் எழுந்த பேய் பயம் எல்லாம் இதற்குள் பழகிப் போய் விட்டது. அதோடு அன்றிலிருந்து இன்று வரை தொடரும் இன்னொரு பழக்கம் – படிக்க வேண்டிய புத்தகத்தை எடுத்தால் அப்படி ஒரு தூக்கம் கண்களைக் கட்டிக் கொண்டு வரும். அட … அந்தத் தூக்கத்திற்கு இணை ஏதுமில்லை. இன்னும் நினைவில் இருக்கிறது. உட்கார்ந்து படித்தால் தூக்கம் வந்து விடுகிறதே என்று நடந்து கொண்டு, அதோடு மட்டுமின்றி மெல்லியதாக முணங்கிக் கொண்டே படிக்க ஆரம்பித்த சமயத்தில் கூட, நடந்து கொண்டே படிக்கும் போது கையிலிருந்த புத்தகம் தூக்கத்தில் கைநழுவிக் கீழே விழுந்தது. என்னமோ அப்படி ஒரு தூக்கம். அதுவும் வயதான பிறகு தூக்கம் குறைந்து விடும் என்று வழக்கமாக மக்கள் சொல்வார்கள். ஆனாலும் எனக்கு இன்று வரையிலும் தூக்கம் என்னைத் துரத்தி துரத்தி வந்து தூங்க வைத்து விடும். பலரும் அதை ஒரு பெரிய blessing என்கிறார்கள். இருக்கட்டும் …. (இப்போது கூட - காலை 10.45 - காலையிலேயே எழுந்து விளையாடி விட்டு ... இப்போதும்  லேசாக தூக்கம் வருவது போல் தான் இருக்கிறது!)



மொட்டை மெத்தையில் படிக்க ஆரம்பித்த பிறகு யாரோ ஒரு பெரிய மனிதர் தெரு விளக்கில் படித்து பெரிய நீதிபதி ஆனார் என்று எங்கள் பள்ளிப் பாடத்தில் வரும். நானும் பக்கத்து வீட்டில் இருந்த நண்பர்களுக்கும் அந்த தகவல் தெரிய நாங்களும் தெருவிளக்கில் படித்து பெரிய ஆளாக வரணும் என்ற நினைப்பில் வீதியில் படிக்க ஆரம்பித்தோம்! என்னைப் பொறுத்தவரை மெத்தையில் தனியாகப் படித்தால் படிப்பு படிக்க வருவதே இல்லை .. தூக்கம் மட்டும் நன்றாக வந்தது. தெருவிளக்கில் படிக்க ஆரம்பித்ததும் தூக்கம் போய் விட்டது. ஆனால் நண்பர்கள் குழாம் பெரியதாகி விட்டது. அரட்டை அடிக்கவும், டீ அல்லது எங்களது பேவரைட்டான சுடச் சுட பருத்திப் பால் குடிக்கவும் தான் நேரம் இருந்தது. அதோடு அந்த வயதில் பேசுவதற்கு ‘விஷயங்களா’ இல்லாமல் இருந்திருக்கும்?

உட்கார்ந்து படிக்க தெரு விளக்குகளுக்கும் போட்டி இருக்கும். எங்கள் வீட்டிலிருந்து நாலைந்து வீடுகள் தாண்டி நான்கு ரோடுகள் சந்திக்கும் இடம். அதனால் அந்த இடத்தில் மட்டும் மெர்குரி லைட் இருக்கும். அதிக பிரகாசமாக இருக்கும். இந்த லைட்டுக்கு அடியில், சந்தின் முதல் வீட்டில் தபால் நிலையம் இருந்தது. ஐந்தாறு படிகள் இருக்கும் படிக்கட்டு. படியின் முடிவில் உட்கார அகலமாக திண்ணை மாதிரி இருக்கும். இதற்கு மேல் ஒரு தகரக் கூரை இருக்கும். குளிர் காலத்தில் படிக்க நன்றாக இருக்கும். இந்த இடத்திற்குப் போட்டி நடக்கும். பாவம் … யாரோ பெரிய மனிதர் ஒருவர் இதே மாதிரி விளக்கு வெளிச்சத்தில் படித்துப் பெரியவரானாராம். நாங்கள் எல்லாம் அப்படிப்பட்ட ’பெரிய மனிதர் category’ல்’ வரவில்லை. என்னோடு அப்படி தெருவில் இருந்த படித்தவர்களில் பலரும் பள்ளிப் படிப்போடு முடித்துக் கொண்டார்கள். தப்பித்துக் கொண்டது நானும்,ஜாபர் என்ற நண்பரும். அவரும் பாவம் … என்னைப் போலவே அவரும் (வக்ஃபோர்ட் கல்லூரியில்) ஒரு பேராசிரியரானார். காலம் கடந்த காலத்தில் நாங்கள் இருவரும் சந்திக்கும் போது பழைய நினைவுகளை rewind செய்வதுண்டு. வீட்டில் உட்கார்ந்து ஒழுங்காகப் படித்திருந்து, வாழ்க்கையில் இன்னும் நன்றாகத் தேர்ந்திருக்கலாம் என்றும் பேசிக் கொண்டதுண்டு. தெரு விளக்குகளுக்குக் கீழே உட்கார்ந்து ஒழுங்காகப் படித்திருக்க வேண்டும் … அரட்டை அடித்தால் இப்படி என்னை மாதிரி தான் ஆக வேண்டும்!

இரவு ஒன்பது மணிக்கு மேல் தான் தெருவுக்கு வரமுடியும். ஆனாலும் நான் தான் படிக்க வேண்டும் என்று கொள்ளை ஆர்வம் கொண்டவனாச்சே … அதுக்கு முன்பும் படிக்க வேண்டுமே…! பள்ளியில் எங்களைப் போன்ற வசதி குறைந்த கிறித்துவ மாணவர்கள் படிப்பதற்காக அறை ஒன்றைக் கொடுத்தார்கள். இப்போது அந்தப் பழைய கட்டிடம் இல்லை. அப்போது அது மூன்று வகுப்புகள் கொண்ட பழைய கட்டிடம். மேலே ஓட்டுக் கூரை. பின்பக்கம் சுவர் கிடையாது. மூங்கில் தட்டிகள் வைத்திருக்கும். ஒரே ஒரு முட்டை பல்ப் இருக்கும். ஆறு மணியிலிருந்து எட்டு மணி வரை இந்த வசதி உண்டு. மேற்பார்வைக்கு ஆள் யாரும் கிடையாது. அது பத்தாதா? அரட்டை … சண்டை … என்று ஒரு பக்கம் போராட்டம் நடக்கும். அதோடு இன்னொரு பெரும் போராட்டம் ஒன்றும் நடக்கும் – எங்களுக்கும் கொசுவிற்கும் நடுவில் நடக்கும் போராட்டம். பள்ளியில் நிறைய மரம் .. கொசுக்களுக்குப் பஞ்சமேயில்லை. மேய்ந்து விடும். இதனால் ஆறு மணிக்கு வந்ததும் ஒரு படை போய் காய்ந்த இலை தளைகளை அள்ளிக் கொண்டு வருவோம். மூங்கில் தட்டி பக்கத்தில் போட்டு, அதைப் பற்ற வைத்து கொசுவை விரட்டும் படலம் ஆரம்பித்து விடும். புறப்படுவதற்கு முன் கொஞ்ச நேரம் எரித்தவைகளை அப்புறப்படுத்தும் அடுத்த படலம். இதில் என்ன படித்தோமோ ……

 எப்படியோ பள்ளிப் படிப்பை முடித்தாகி விட்டது ………

 இளங்கலைக்கு வந்ததும் மீண்டும் கோவில் காம்பவுண்டு வாழ்க்கையின் இன்னொரு பகுதியாக மாறியது. வழக்கம் போல் காலையில் பூசைக்காக வீட்டில் எழுப்பி விட்டு விடுவார்கள். எழுந்திருந்து கோவிலுக்கு வந்து விட்டு ஒரு மணி நேரம் உயர் பள்ளியின் உள்ளே விசாலமாக உள்ள வெராண்டா எதிலாவது உட்கார்ந்து படிப்பதுண்டு.  கென்னடியும், நேருவும் இறந்த செய்திகள் இது போல்  ஏதோ ஒரு காலைப் பொழுதில் ‘படித்துக்’ கொண்டிருந்த போது தான் கிடைத்தது என்பது நன்கு நினைவில் இருக்கிறது. 
அதுவும் கென்னடி சுடப்பட்டு இறந்தார் என்பது ஒரு பெரிய அதிர்ச்சியான செய்தியாக வந்தது. மாலையிலும் மீண்டும் பள்ளிக்கு வந்து விடுவேன். கோவிலைச் சுற்றி ஏதாவது ஒரு விளக்கடி என்றானது.

ஒரு நாள் அது போல் புத்தகத்தைப் ‘புரட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு குரு / பாதிரியார் – அவர் எங்களது parish priest – என்னைப் பார்த்தார். பாவம் … கஷ்டப்பட்டு படிக்கிற நல்ல பிள்ளை என்று என்னைத் தப்பாக நினைத்துக் கொண்டு என்னிடம் பேசினார். அவர் ரொம்ப ஸ்ட்ரிக்டான ஆள் என்பதும் எனக்குத் தெரியும். ஏன் வீட்டிலிருந்து படிக்கவில்லை என்றார். வீட்டில் வசதியில்லையென்று சொன்னேன். சரி .. நாளை மாலை என்னை வந்து பார் என்றார். சரி … நாம் பள்ளியில் படிக்கும் போது ஒரு அறை எல்லோருக்குமாகக் கொடுத்தார்களே அது மாதிரி இருக்கும் என்று நினைத்துக் கொண்டு அடுத்த நாள் சென்றேன்.

 What a shock ….! 






 *

Thursday, July 09, 2015

848. பதினாறு ஆண்டுகள் வாழ்ந்த ராஜ மாளிகை (தருமி பக்கம் 31)







*



ஒரேயடியாக படிப்பைப் பற்றி மட்டும் பேசிக்கொண்டே போகிறோமோ… வாழ்க்கையின் மற்ற சில பக்கங்களையும் கட்டாயம் புரட்டியாக வேண்டுமே …

பள்ளிப் படிப்பு முழுவதும் மதுரையில் அப்போதிருந்த இரு பெரும் பள்ளிகளில் ஒன்றான புனித மரியன்னை பள்ளியில் தான் முடிந்தது. அப்பாவும் இதே உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர். பள்ளி வளாகத்திலேயே புனித மரியன்னை கோவில் இரு பெரும் உயரக் கோபுரங்களோடு நின்றது. அல்லது … இப்படியும் சொல்லலாம் புனித மரியன்னை கோவில் இருந்த வளாகத்தில் எங்கள் பள்ளி இருந்தது. நாங்கள் பதினாறு ஆண்டுகளாக இருந்த வாடகை வீடும் இதற்கு அருகிலேயே இருந்தது., பக்தி வாழ்க்கை, பள்ளி வாழ்க்கை பற்றியெல்லாம் சொல்வதற்கு முன் அந்த வீட்டில் வாழ்ந்த வாழ்க்கையும் மிக முக்கியமல்லவா? அதைப் பற்றிக் கொஞ்சூண்டு சொல்லவா?

அப்பாவின் இரண்டாம் திருமணம் முடிந்ததும் அதுவரை கிராமத்திலிருந்த நானும், புது அம்மாவும் மதுரைக்கு வந்து சேர்ந்தோம். எனக்குப் புதிதாக பள்ளி வாழ்க்கை ஆரம்பித்தது. அம்மாவுக்குத் திருமண வாழ்க்கை ஆரம்பித்தது. வாடகை வீட்டில் வந்து இறங்கினோம். எனக்கு அப்போது எப்படி இருந்தது என்று நினைவில்லை. ஆனால் கிராமத்தில் பெரிய வீட்டில் வசித்திருந்த அம்மாவிற்கு இந்த புதிய வீடு எப்படி இருந்ததோ தெரியவில்லை.




நாங்கள் வந்திறங்கிய வீடுஅத்தனை சிறியது. அது மட்டுமல்லாமல் ஒண்டுக் குடித்தனம். மூன்று குடிகளில் நாங்களும் ஒன்று. சிறிது நீண்டு செல்லும் வீட்டின் கடைசியில் எங்கள் பகுதி. வீட்டின் நடுவில் இருந்த நாழிக்கிணறு அல்லது உரைக் கிணறு வீட்டை இரண்டாகப் பிரிக்கும். நாழிக்கிணறு என்றால் என்னவென உங்களில் பலருக்கும் தெரிந்திருக்காதே! இந்தக் காலத்தில் வீட்டுக்கு வீடு போர் போட்டு ஒரு குழாய் வைத்துக் கொள்வோமே … அப்போது அது மாதிரி வீட்டுக்கு வீடு ஒரு கிணறு இருக்கும். மூன்று நாலடி விட்டத்தில் சிமெண்ட் உரைகளை ஒன்றின் மீது ஒன்றாக கிணறைத் தோண்டி இறக்கியிருப்பார்கள். பத்துப் பதினைந்து உரை ஆழத்தில் தண்ணீர் இருக்கும். இப்போது மாதிரி நானூறு அறுநூறு அடி ஆழத்திற்கு போர் போட்டு தண்ணீர் இல்லை என்ற நிலை அப்போதில்லை. ‘நாழி’ என்றால் அளக்கும் படி என்று அர்த்தமாக்கும். இந்தக்கிணறுகள் குறுகலாக, ’படி’ மாதிரி இருப்பதால் அந்தப் பெயர்.

வெளிப்பக்கம் நான்கு பக்கம் கற் சுவர்கள் வைத்துக் கட்டியிருப்பார்கள். தலைக்கு மேல் இரும்பு உருளை இருக்கும். சாதாரணமாக கயிறும் வாளியும் இருக்கும். நீர் இரைத்துக் கொள்ள வேண்டும். பின்னாளில் கயிறுக்குப் பதில் டயரை வெட்டி கயிறு மாதிரி நீளமாக விற்பார்கள். இது அதிகமாக உழைக்கும் என்று இதனை வாங்கிப் பயன்படுத்தினார்கள். இதில் இரைப்பது கஷ்டம் என்பதால் கயிறுக்கே மவுசு அதிகம் ஆச்சு.

நான் சின்னப் பையனாக இருந்த போதே எனக்கு ஒரு முக்கிய வீட்டு வேலை வந்து விட்டது. ஏறத்தாழ குடும்பம் முழுமைக்கும் கிணற்றுக்குப் பக்கத்திலிருக்கும் இரண்டு ட்ரம்களில் தண்ணீர் பிடித்து வைக்க வேண்டும். சின்ன வயதில் சுற்றியிருக்கும் காவல் சுவரை விட கொஞ்சூண்டு என் உயரம் கூட இருக்கும். இதில் ஒரு வாளித்தண்ணீர் இரைக்க வேண்டுமென்றால் கஷ்டம் தான். ஓரு இயற்பியல் விதியை follow செய்து கடமையாற்றுவேன்! இடது முழங்காலை அந்தச் சுவற்றின் ஒரு பாய்ண்டில் வைத்து அழுத்திக் கொண்டு, வலது காலை பின்னால் வளைத்து வைத்துக் கொண்டு முக்கி, முக்கி கயிற்றை இழுத்து வாளியை மேலே கொண்டு வர வேண்டும். நான் கால் அழுத்தி வைக்கும் இடம் அந்தச் சுவற்றில் தடமாகப் பதிந்திருக்கும்.

அப்போது நான் தினமும் தவறாமல் கோவிலுக்குப் போய் விடுவேன். அங்கே முழங்கால் போட்டு ஜெபம் செய்வதால் இரு முழங்கால்களிலும் கருப்பாக முட்டி காய்ந்து போயிருக்கும். ஆக எனக்கு இப்போது இரு கால்களிலும் அந்தத் தடங்கள் இருக்கும். இப்போது பல இஸ்லாமியரின் நெற்றியில் தொடர்ந்த தொழுகையால் ஒரு கருப்பு காய்ப்பு இருக்குமே அதே போல் எனக்கு இரு கால்களிலும் இருக்கும். இடது காலில் கொஞ்சம் அதிகமாக, அகலமாக, கருப்பாக இருக்கும்!

வீட்டுக்கு நடுவில் இந்தக் கிணறு இருப்பதால் அந்தப் பகுதியே எப்போதும் ஈரத்தோடு இருக்கும். அதனால் வழியெல்லாம் பாசி படர்ந்திருக்கும். வீட்டிலிருக்கும் அனுபவசாலிகளுக்கு எங்கெங்கே கால் வைத்தால் வழுக்காது என்பது தெரியும். புதிதாக வருபவர்களுக்கு அது பெரும் ரிஸ்க் தான். அந்தப் பாதையில் வழுக்கி விழிந்தோர் நிறைய. சின்னப் பயலா … யார் விழுந்தாலும் விழுந்து விழுந்து நான் சிரிப்பேன். கொஞ்சம் வயதான பின் தான் புதிதாக வருபவர்களைப் பத்திரமாக வீட்டுக்குள் அழைத்துச் செல்லும் பழக்கம் வந்தது. ஏறத்தாழ கல்லூரி செல்லும் வயதில் நண்பர்களை இதனாலேயே வீட்டுக்கு அழைப்பதற்கு சங்கடமாக இருக்கும். முடிந்தவரை தவிர்த்து விடுவேன்.

இப்போதிருக்கும் மனநிலையில் அந்த வீட்டை நினைத்துப் பார்க்கும் போது ஆச்சரியாகவும், வினோதமாகவும் இருக்கும். அத்தனை சின்ன வீடு. இன்றைய நிலையோடு கணக்கிட்டுப் பார்த்தால் அது ஒரு எலி வளை. பதினாறு ஆண்டுகள்; மூன்று பேராக ஆரம்பித்து, ஏழெட்டு பேராகப் பெருகிப் போன பின் அந்த வீட்டை விட்டு விட்டு ஒரு பெரிய சொந்த வீட்டுக்குக் குடியேறினோம். வீடு மாறும் போது முதுகலை இரண்டாமாண்டின் ஆரம்பம். குடிசையிலிருந்து ஒரு கோபுரத்துக்குப் போனது போலிருந்தது. வாழ்க்கையின் தத்துவமே அது தானோ?

திரும்பிப் பார்க்கும் போது பல விஷயங்கள் ஆச்சரியப் படுத்துகின்றன. வீட்டுக்கார அண்ணன் தம்பிகள் வீட்டின் முன் பகுதியில் குடியிருப்பு. பின் பகுதியில் நாங்கள். எங்கள் பகுதியில் அனேகமாக ஒரு அறை; 15 x 12 ஆக இருக்கலாம். அது மட்டுமே நான்கு பக்கமும் சுவரும், மேல் தட்டும் இருந்த அறை. இந்த அறைக்கு மேல் தான் நம் சாம்ராஜ்யம். மொட்டை மெத்தை. அங்கே இரண்டு மூன்று தென்னந்தட்டி போட்டு சின்ன கூரை. (ஜெயகாந்தனின் சாம்ராஜ்யம் எனக்கு டக்குன்னு நினைவுக்கு வருகிறது!) உயர்நிலைப் பள்ளிக்கு வந்ததும் மழைக்காலம் தவிர மற்ற மாதங்களில் நான் படிக்கும், தூங்கும் இடமாக இது இருந்தது.

கீழே ஒரே ஒரு அறை சொன்னேனே … அதை ஒட்டி ஒரு நாட்டு ஓடு போட்ட கூரை கொண்ட சின்ன தட்டடி / வெராண்டா …. அல்லது அது மாதிரி ஒண்ணு. மழை பெஞ்சா ஒழுகும். அங்கங்கே சில பாத்திரங்கள் வைத்தால் போதும். மழைக்காலத்தில் ஜலதரங்கம் வாசிக்கும் போது அங்கேயே படுக்கையைப் போட்டு, ராஜாக்கள் மாதிரி பின்னணி இசையோடு தூங்கலாம்.

கிணற்றை ஒட்டிப் பின்புறம் மூங்கில் பாய்கள் வைத்து ஒரு சமையலறை. விதவிதமான அடுப்புகள் இருக்கும். விறகு வைத்து எரிக்கும் நார்மலான அடுப்பு; கரி அடுப்பு; உமி அடுப்பு; மண்ணெண்ணெய் அடுப்பு … இப்படி வகைவகையாக அடுப்புகள் இருக்கும். கால தேச வர்த்தமான வித்தியாசங்களுக்கு ஏற்றது மாதிரி அடுப்புகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்துவோம்.

 What a space management? கிச்சனுக்குள் ஒரே ஒரு அலமாரி உண்டு. அலமாரிகள் என்றால் அந்த வீட்டில் எல்லாமே ஓப்பனாக, மரத்தட்டு வைத்த சாதி அலமாரிகள் தான்.  சமையல் சாமான்கள் – அரிசி தவிர – எல்லாம் அங்கே அடக்கம். கடைசி ஓரத்தில் இரண்டு மூங்கில்களை வைத்து படுக்கை வசத்தில் உயரமாக ஓரமைப்பு. அதன் மேல் விறகும், எருவாட்டியும் இடம் பெறும். கீழே உள்ள இடத்தில் பலவகை movable அடுப்புகள் இருக்கும். இன்னொரு ஓரத்தில் தண்ணீர்ப் பானைகள்.

வெராண்டாவில் ஒரு பக்கம் ஒரு சின்ன அலமாரி.அதன் எதிர்ப்பக்கம் மாடிப்படியின் வளைந்த கீழ்ப்பகுதி. அந்தப் பகுதியில் தரையில் பதித்த ஒரு ஆட்டுக்கல். மீதி உள்ள இடத்தில் ஒரு நார்க்கட்டில். அது அப்பாவின் அரியணை. மழைக்காலத்தில் அந்தக் கட்டிலின் கீழே என் படுக்கை. Very cozy! மழை பெஞ்சாலும் தண்ணீர் என் மேல் ஒழுகாதுல்லா ….! குளிருக்கும் அடக்கமா இருக்கும்.

15 x 12 அறை ஒண்ணு சொன்னேனே … அதில் உயரத்தில் ஒரு ஜன்னல். அது வழியாகப் பார்த்தால் அடுத்த வீட்டு மெத்தை வீடு தெரியும். அவுங்க பார்த்தால் நம்ம வீடு அனைத்தும் தெரியும். அப்படி ஒரு வசதி. அங்கே ஒரு பெண்ணும் இருந்தது என்பது டபுள் விசேஷம்! ரெண்டு பக்கமும் கட்டை போட்ட சேந்தி (loft) இருக்கும். கிழக்குப் பக்கத்தில் இருக்கிறது பெருசா இருக்கும். பெட்டிகள் எல்லாம் அதன் மேல். இதுக்குக் கீழே எப்போதும் பத்துப் பன்னிரண்டு நெல் மூட்டைகள் இருக்கும். மூட்டைகளுக்கும் சேந்திக்கும் நடுவில் உள்ள இடத்தில் படுக்கிற படுக்கை … தலையணை…

இதை ஒட்டி ஒரு அலமாரி. அதில் மேல் தட்டு எனக்கே எனக்கு மட்டும். புத்தகம் வைத்திருக்கிற இடம். இதுக்குள்ள தான் தெரியாமல் கதைப் புத்தகங்களை செட்டப் செஞ்சி ஒளிச்சி வச்சி அப்பா அம்மாவுக்குத் தெரியாம படிக்கணும். என் தட்டின் ஒரு ஓரத்தில் சீப்புகள் வைக்கிற இடம், இதை ஒட்டி ஒரு பெல்ஜியம் கண்ணாடி. இதுக்கு அப்பா ஒரு கதை சொல்வாங்க. அவருக்குத் தெரிஞ்ச சலூனில் பெரிய கண்ணாடி ஒண்ணு இருந்துச்சாம். சுதந்திரத்துக்கு முன்னால் இது நடந்தது. சலூன்காரர் காந்திக்காரர். அது தெரிஞ்ச போலீஸ்காரங்க இவரு கடையில நுழைஞ்சி எல்லாத்தையும் உடச்சிட்டுப் போய்ட்டாங்களாம். உடஞ்சதில சில துண்டுகளை எடுத்து வாடிக்கையாளருக்கு அன்பளிப்பா கொடுத்திருக்கார். ஆனால் நல்ல கண்ணாடி… no aberrations at all! எல்லாம் கிளியரா காமிக்கும். அதுக்காக அப்பா ஸ்பெஷலா போட்ட கட்டை பிரேமும் நல்லா இருக்கும் – கலரே மங்காமல் அப்படியே இருந்திச்சி.

நெல்மூட்டைகளைத் தாண்டி ஒரு மேசை .. ஒரு நாற்காலி. தெருவில் விற்றுக் கொண்டு போனதை வாங்கியதாக அப்பா சொல்வார்கள். செம ஸ்ட்ராங்க். நல்ல வெய்ட்டாக இருக்கும். புது வீட்டுக்கு அதை எடுத்துக் கொண்டு போக வேண்டாம்; புதுசு வாங்குவோம்னு அப்பாட்ட சொன்னேன். ‘போடா இவனே… பழச மறக்கக் கூடாது’டா’ன்னு சொல்லி புது வீட்டுக்கும் கொண்டு வந்துட்டார். நான் அந்த வீட்ல இருக்கிற வரைக்கும் ஒரே இடத்தில இருந்து ’தன்னிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருந்தது’!

மேஜையை அடுத்து ஒரு சின்ன மாடக்குழி. அதில் ரொம்ப வருஷத்துக்கு ரெண்டே ரெண்டு விஷயம் இருக்கும். ஒண்ணு பெத்த அம்மாவின் முதல் நினைவு நாளன்று அடித்த ஒரு சிறு அட்டை. அம்மாவின் படம் சிறிதாக இருக்கும். ப்ரேம் போட்டிருக்கும். அது ஒன்று; இன்னொன்று ஒரு மிக அழகான கண்ணாடித் தட்டு. வெளிநாட்டு சரக்காம்! நிறைய பூ வேலகள் செய்த சின்னக் கண்ணாடித் தட்டு. அதில் தான் வீட்டுச் செலவுக்கான சில்லறைக் காசுகள் கிடக்கும். அப்பா வாட்ச் வைக்கிறதும் இங்கே தான்.

நம்ம பெரிய அறைக்கு ஒரு பெரிய கதவு. உட்பக்கமாகத் திறக்கணும். கதவின் நடுவில் ஒரு மரப்பட்டி இருக்கும். அது எனக்கு நல்ல வசதி. இந்தக் கதவை ஒட்டி மேலே ஒரு சேந்திக் கட்டை இருக்கும். அம்மா நிறைய பலகாரம் செய்வாங்க. முருக்கு முக்கிய பண்டம். அதுக்கு மேல லட்டு, அதிரசம் .. இப்படியானவைகளைச் செய்து பத்திரமாக இருக்கணுமேன்னு ஒரு டப்பாவில போட்டு அந்த சேந்தியில வச்சிருப்பாங்க. முருக்கு இருக்கிறப்போ அம்மா லேசா வீட்டுக்கு வெளிய போனாக்கூட நான் கதவில் அந்தப் பட்டியில கால் வச்சி ஏறி இருக்கிறதில்ல கொஞ்சம் எடுத்து கால்சட்டைப் பைக்குள் போட்டு ஒரு தட்டு தட்டினால் எல்லாம் உடைந்து இருக்கும். அப்பப்போ எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.

இப்படி சாப்பிடுவதில் ஒரு பிரச்சனை உண்டு. அனேகமாக உங்களில் மிகப் பலருக்கும் அது தெரியாது.அது என்னன்னா …. இப்போவெல்லாம் துணி துவைக்கிறது வீட்ல மட்டும் தான். Hand wash … machine wash…. ஆனா அப்போவெல்லாம் வீட்டுக்கு வீடு வண்ணார்கள் வருவார்கள். துணியெடுத்துட்டு, வெளுத்து, பெட்டி போட்டுக் கொண்டு வருவார்கள். துவைப்பது காய வைப்பது எல்லாம் ஏதாவது ஒரு ஆத்தோரம். வெளுக்கிறதுக்கு முன்னால் வெள்ளாய் வைப்பார்கள். அப்டின்னா …. துணிகளை பெரிய மூட்டையா கட்டி ஒரு அடுப்பு மேல வச்சி கீழே நெருப்பு வச்சி சூடாக்குவாங்க. அட … அதுக்கு முன்னால துணிகளை உவர் மண்ணில் தோய்த்து எடுப்பார்கள். உவர் மண்ணுன்னா … உப்பு மண்ணு. இப்படி துவைத்தால் தான் துணிமணி நல்லா இருக்கும். அழுக்கு போகும். இதில் எனக்கு என்ன பிரச்சனைன்னா … உவர் மண்ணு போட்டு துவைப்பாங்களா… கால்சட்டைப் பையில் எப்போதும் பொடி மணல் இருக்கும். அது நம்ம ஆட்டை போட்ட கடைசி முருக்கில் ஒட்டிக் கொள்ளும். ஆகவே நம்ம முருகப் பெருமான் ஒளவைப் பாட்டிக்கு சொன்னது மாதிரி முருக்கை ஊதி ஊதி சாப்பிடணும். இப்பவும் கால்சட்டைக்குள் கையை விட்டு ஏதும் எடுக்கும் போது அப்பப்போ அந்த மண் நினைவு வருவதுண்டு.

கதவு சொன்னேனே … அதை முழுவதுமாகத் திறக்க முடியாது. ஏன்னா கதவுக்குப் பின்னால் அம்மா தைக்கிற தையல் மெஷினும், அரிசி ட்ரம் ஒண்ணும் இருக்கும். அரிசி ட்ரம் தான் அம்மா தைக்கும் போது நாற்காலியாக மாறி விடும்.

இந்த இங்கல் இடுக்கலில் அப்பா சைக்கிள், நான் கல்லூரி போன பின் என் சைக்கிள்; ஆக இரண்டு சைக்கிள்களுக்கும் எப்படியோ இடம் பிடித்து விடுவோம். முன்னால் உள்ள போர்ஷனிலேயே வைத்து விடுவோம். எல்லாத்தையும் சொன்னேன். ‘கக்கூஸ்’ பத்தி மட்டும் சொல்லவேயில்லை. அவ்வளவு பேருக்கும் ஒண்ணே ஒண்ணு. எப்படி .. என்னன்னு இப்போ யோசிச்சா …. பயமா இருக்கு. அதப் பத்தி மட்டும் சொல்ல வேணாம். Choice-ல விட்டுருவோம்!!! Let it be a completely forgotten page ……







*



Thursday, June 25, 2015

844. கடைசிப் பெஞ்சுதான்.. ஆனாலும்.. - (தருமி பக்கம் - 30)








*




1961

ஓராண்டிற்குப் பிறகு  ... மீண்டும் மதுரை.

இனி எங்கே, எந்த கல்லூரியில் இடம் கிடைக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்பா இடம் பிடித்து விட்டார்கள். தியாகராஜர் கல்லூரியில் விலங்கியல் துறையில் அப்பாவின் ஆணையின் படி சேர்ந்தாயிற்று. வேறு துறைகளில் இடம் இல்லை.  வேறு துறைகளில் இடம் நல்லவேளை இல்லாமல் போயிற்று. கிடைத்திருந்தால் அதோ கதியாக ஆயிருந்திருக்கலாம். அதிலும் ஒரு வேளை கணக்குப் பாடத்தில் மட்டும் இடம் என்று என்னை அதில் சேர்த்திருந்தால் .... .அம்பேல்! நட்டத்திலும் ஒரு லாபம்.  என்னை மாதிரி மக்கு பசங்களுக்கு ஏத்த துறையில் இடம் கிடைத்தது என்று மனதுக்குள் சொல்லிக் கொள்வதுண்டு. சத்தமாகச் சொல்வதில்லை - மற்ற விலங்கியல் புத்திசாலிகள் கோபம் கொள்ளக் கூடாதே .. அதற்காக இதை நான் வெளியில் சொல்வதேயில்லை. இப்பவும் நீங்களும் இதை வெளியே சொல்லி விடாதீர்கள்.

பல்கலையில் மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்காகக் கொடுத்த கடைசி நாட்களில் தான் நான் கல்லூரியில் சேர்ந்தேன். ஆகவே என் வகுப்பிலேயே பழைய மாணவர்களுக்கு நடுவே புத்தம் புது முகமாகப் போய்ச் சேர்ந்தேன். ஏனெனில் கல்லூரி ஆரம்பித்து ஏறத்தாழ இரண்டு மாதம் கழிந்த பின் தான் சேர்ந்திருந்தேன். தமிழ், ஆங்கிலம் வகுப்புகளுக்கு combined classes.  Physics, Chemistry and Zoology - மூன்று வகுப்புகளும் ஒன்று சேர இருப்போம். இந்த இரு பாடங்களிலும் பெரிய தகராறு இல்லை. ஆனால் விலங்கியலில்  பாடங்கள் புரிந்தன. ஆனால்,  செய்முறை வகுப்புகள் என்னைப் பார்த்து முறைத்தன.

இந்த நிலையில் முதல் பருவம் முடிந்து அப்பருவத் தேர்வுகளும் வந்தன. படித்தேன் .. எழுதினேன். இதுவரை எனக்கு அதிக நண்பர்களும் வாய்க்கவில்லை. இன்னும் ஒரு வகையில் புது முகமாகத்தான் இருந்தேன். ஆனால் பாருங்கள் ... தேர்வு மதிப்பெண்கள் வந்ததும் பெயர் கன்னா பின்னா என்று ’பறக்க’ ஆரம்பித்து விட்டது.

மொழிகளுக்கான எங்கள் combined classesகளிலேயே நாங்கள் உட்கார்ந்திருக்கும் பாணியிலேயே எங்களின் ‘படிப்பின் தரம்’ புரிவது மாதிரி இருக்கும். மூன்று வரிசைகளில் பெஞ்சுகள். ஒவ்வொரு வரிசையிலும் 10 பெஞ்சுகளாவது இருக்கும். வகுப்பில் நுழைந்ததும் இருக்கும் முதல் வரிசையில்  Physics பசங்க முதல் வரிசையிலிருந்து நான்கைந்து வரிசைகளில் அமர்ந்திருப்பார்கள். அடுத்து நடுவில் உள்ள வரிசைகளில் முதல் மூன்று பெஞ்சுகளில் யாரும் அமர்ந்திருக்க மாட்டார்கள். அதன் பின்   Chemistry பசங்க உட்கார்ந்திருப்பாங்க. கடைசி வரிசை. அதில் நாங்கள் உட்கார்ந்திருப்போம் -- கடைசி நாலைந்து  பெஞ்சுகளில் மட்டும் உட்கார்ந்திருப்போம். முந்திய வரிசைகளில் ஏனோ நாங்கள் அமர்வதில்லை. அம்புட்டு தன்னடக்கம்!

வழக்கமாக கல்லூரிகளில் ஆங்கில, தமிழ் வகுப்புகளில்  சில ஆசிரியர்களிடம் மட்டும்  கொஞ்சம் வாலாட்டுவது உண்டு. ஆனால் எங்களுக்கு வந்த ஆசிரியர்களிடம் அதெல்லாம் முடியாது. தமிழுக்கு வந்த ஆசிரியர்களில் ஒருவரைத் தவிர ஒவ்வொருவரும் இசையறிவு மிக்கவர்கள். இசையோடு தமிழ்ப்பாடல்கள் கற்பிப்பார்கள். ஆங்கிலத்தில் ஒரு ஆசிரியர் தவிர மற்றவர்கள் வகுப்பில் அப்படி ஒரு ஈர்ப்பு இருக்கும்.

அப்போது தான் படித்து முடித்து ஆசிரியராக வந்த ஒரு ஆசிரியர் non-detailed வகுப்பில் Thomas Hardy எழுதிய Woodlanders  என்ற புதினத்தின் கதாநாயகன் Winterbone-ன்(?) காதல் தோல்விக் கதையைச் சொல்லிக் கொண்டிருந்த போது வருத்தத்தில் எங்களில் சிலர் கண்களில் கண்ணீர் வந்தது - நிஜமாகவே! இன்னொரு பேராசிரியர்  -  ஆங்கிலத்தில் பேராசிரியர் சக்தி வேல் எனக்குப் பல வகையில் ஒரு மாடலாகவே இருந்தார். அவரை என் மாணவப் பருவம் முடிந்து கால் நூற்றாண்டுகள் கழித்துப் பார்த்த போது அவர் என் பெயரை நினைவில் வைத்து அழைத்த போது மீண்டும் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

எங்கெங்கேயோ போய் விட்டோமோ... முதல் பருவ தேர்தலின் மதிப்பெண்கள் வருவதைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தேனோ...  தமிழில் என்ன மதிப்பெண்கள் வாங்கினேன் என்று நினைவில் இல்லை. ஆங்கிலத்தில் என்ன மதிப்பெண்கள் என்றும் தெரியவில்லை. ஆனால் மூன்று வகுப்புகளிலும் நான் இரண்டாவது மதிப்பெண் வாங்கியிருந்தேன். முதல் மதிப்பெண் ஒரு  Physics பையனுக்கு. என் வகுப்பு பசங்களுக்குப் பல ஆச்சரியம். முதல் மதிப்பெண் ஒரு  Physics பையனுக்கு. அட... அது நார்மல். நல்லா படிக்கிற பசங்க அங்க இருப்பாங்க. போகுது. ஆனா இன்னும் பல  Physics, Chemistry பசங்க இருக்கும் போது  நம்ம பய எப்படி இரண்டாவது மார்க் வாங்கிட்டான்னு ஆச்சரியம். அட ... ஆச்சரியம் அதோடு மட்டுமில்லை ... இம்புட்டு லேட்டா வந்துட்டு செகண்ட் மார்க் வாங்கிட்டானேன்னு நம்ம க்ளாஸ் பசங்க நினச்சதில கொஞ்சம் உயரமா போய்ட்டேன்.

அதுவும் இரண்டாம் வருஷத்தில இரண்டாம் பருவத்து மதிப்பெண்கள் எங்கள் எல்லோருக்கும் மிக முக்கியம்.  அந்தக் காலத்தில ‘பெரிய’ பரிட்சைக்குப் போவதற்கு முன்னால் உள்ள இரண்டாம் பருவத் தேர்வுகள் எங்களுக்கு ஒரு விஷப் பரிட்சை. அந்த தேர்வுகளுக்குப் பெயர் selection exams!  நல்லாவே வடி கட்டி விடுவார்கள். முதலாண்டில் பல்கலைத் தேர்வுகளே கிடையாது. இரண்டாவது வருஷத்தில் இருந்து தான் பல்கலைத் தேர்வுகள். அதில் எழுதுவதற்கு தான் இந்த selection exams. இரண்டாமாண்டு இரண்டாம் பருவம். எங்கள் செட்டுக்கு முந்திய வகுப்பில் தேர்வு முடிவுகள் அவ்வளவு நன்கில்லை என்று பேராசிரியர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்த தடவை selection exams ரொம்ப சீரியஸாக இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஆங்கிலத்தில் பயங்கரமாக வடி கட்டி விட்டார்கள். எங்கள் வகுப்பில் பலருக்கும் ஆங்கிலத்தில் பயங்கர அடி. அது பத்தாது என்பது போல் மேஜர் சப்ஜெக்ட்களிலும் இன்னொரு அடி காத்திருந்தது. இந்த இரண்டிலும் எங்கள் வகுப்பில் இருவரைத் தவிர - நானும் இன்னொரு ”பையனும்”! தப்பிப் பிழைத்தோம். அவர் இன்னொரு ’பையன்’ இல்லை! எங்களை விட ஐந்தாறு வயது மூத்தவர்; இலங்கையிலிருந்து படிக்க வந்திருந்தார்.  ஜாலியான பேர்வழி. அதோடு முதலாண்டில் எனக்கு பிறகு அட்மிஷன் வாங்கி சேர்ந்திருந்தார். பெயர் யோகேந்திரன். அவர் கடைசி நம்பர். எனக்கு அதற்கு முந்திய நம்பர். ஆங்கிலம் நன்கு பேசுவார்; எழுதுவார். தமிழ் சுத்தமாக வராது. எழுத்துக் கூட்டிதான் வாசிப்பார். சரோஜா தேவியின் பரமாத்ம விசிறி. அதிலும் சரோஜா தேவியின் நடைக்கு அவர் அப்படியே சரணாகதி அடைந்து விடுவார். பாவம்... அவர் ஒருவரை மட்டும் தமிழில் ‘போட்டுப் பார்த்து விட்டார்கள்”. அதாவது அவருக்கு தமிழ்த் தேர்வு ஆண்டிறுதியில் பல்கலையில் எழுத செலக்‌ஷன் கிடைக்கவில்லை. ஆக இரண்டாமாண்டில் எங்கள் வகுப்பில் எனக்கு மட்டுமே தமிழ், ஆங்கிலம், மேஜர், ஆன்சிலரி என்று எல்லாத் தேர்வுகளுக்கும் செலக்‌ஷன் கிடைத்திருந்தது. இதுனால இன்னும் கொஞ்சம் உயரத்திற்குப் போய்ட்டோம்லா ...!

ஆனாலும் ஆங்கிலத்தில் செலக்‌ஷன் அதிகமாக இருந்ததால் ஒரு ஸ்ட்ரைக் நடந்தது. அந்தக் காலத்தில் இல்லாத ஒரு பெயர் - cut off marks! அதை மிகவும் குறைத்து பலருக்கும் செலக்‌ஷன் அந்தப் போராட்டத்தால் கிடைத்தது. இந்தப் போராட்டத்தோடு மேஜர் தேர்வுகளுக்கும் செலக்‌ஷன் எளிதாகி விட்டது.

ஆனா... அதுக்குள்ள நம்ம நல்ல பெயர் வாங்கிட்டோம்ல ....






 *





Tuesday, June 16, 2015

843. ஆண்டவனால் அல்ல ... அப்பாவால் எழுதப்பட்ட “தலைவிதி” (தருமி பக்கம் 29)









*



யாகப்பன் சாரின் குட்டுகிற கையும், மனப்பாட சக்தி இல்லாமையும்  கணக்கிலிருந்து என்னை ஓட.... ஓட விரட்டின. ஏறத்தாழ வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடி விட்டேன். எஸ்.எஸ்.எல்.சி. மார்க் எல்லாம் இந்தக் காலத்தில் வெளியே சொல்ல முடியாத அளவில் தான் இருந்தது. இந்த ‘டோட்டல் மார்க்’ அப்டின்ற விஷயத்திலும் எனக்கு ஒரு குறை உண்டு.வாழ்க்கை முழுவதும் இந்த மதிப்பெண்கள் தொடர்ந்து வரும் என்ற நினைப்பெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. படிக்கணும் ... பாஸ் பண்ணணும் அப்டின்னு படிச்சது தான். நிறைய மார்க் வாங்க வேண்டும் என்ற முனைப்பே இல்லாமல் .... படித்தேன் .... தேர்ச்சி பெற்றேன் ... அவ்வளவு தான். வாத்தியார் பிள்ளைகளெல்லாம் மக்கு என்பதை நிரூபித்தேன். இதில் உள்ள ஒரு விஷயம் என்னன்னா ... அப்பாவும் ஒரு ஆசிரியர். நிறைய மார்க் எடுக்கணும் .. அதுதான் உன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்றெல்லாம் ஒரு ஆசிரியரோ, என் அப்பாவோ என்னிடம் ஒரு தடவை கூட சொன்னதில்லை. சித்தன் போக்கு ... சிவன் போக்கு என்பார்களே அது மாதிரி ஏதோ படித்து .. எதேதோ எழுதி .. எப்படியோ தேர்ச்சி பெற்றேன். ‘டோட்டல் மார்க்’, அதன் முக்கியத்துவம் எல்லாம் கல்லூரிக்குள் நுழைந்த பிறகு தான் தெரிய வந்தது. ஏன் அப்பாவும், மற்ற ஆசிரியர்களும் அப்போது வழிகாட்டவில்லை என்று தெரியவில்லை.


 பள்ளியில் கணக்குப் பாடம் பயமுறுத்தி விட்டதா. அதனால் கல்லூரியில் கணக்குப் பக்கமே போகக் கூடாதுன்னு நினச்சேன். அதற்கு ஏற்றது மாதிரி என் அப்பா தனித் தேர்வுகள் மூலம் பி.ஏ. பட்டம் முடித்து, அதே கையோடு பி.எட். படிக்க சில மாதங்கள் சென்னைக்குச் சென்றார்கள். குறுகிய காலப் படிப்பாம். என்னை பாளையங்கோட்டைக்கு அனுப்பி அங்கிருந்த சித்தப்பா பொறுப்பில் என்னை விட்டு விட்டார்கள். சித்தப்பா சேவியர் கல்லூரியில் இடம் வாங்கக் கூட்டிக் கொண்டு போனார். என்ன பாடம் படிக்கப் போகிறாய் என்றார். முன்பே யோசித்ததை வைத்து, கணக்குப் பாடம் இல்லாமல் natural science group எடுத்தேன். அதில் தமிழ், ஆங்கிலம் அடுத்து மூன்றாம் கோர்வையில் 4 பாடங்கள் இருக்கும். natural sciences (zoology + botany), physical sciences (chemistry + physics), economics and advanced Tamil- இந்த கோர்ஸைத் தேர்ந்தெடுத்தேன். இதை எடுத்து வகுப்பில் சேர்ந்த பிறகு அப்பா தாம் ..தூம் என்று குதித்தார். கணக்கெடுத்திருந்தால் என்னென்னமோ ஆக்கியிருப்பேன்/ ஆகியிருப்பாய் என்றார். நான் மனதுக்குள் சந்தோஷமாகக் குதித்துக் கொண்டேன்.

P.U.C. 'E' section. அப்போது என் வகுப்பில் படித்த ஒருவரை பல ஆண்டுகள் கழித்துச் சந்தித்தேன்.  வகுப்பு, அதில் நானிருந்த இடம், பாடம் எடுத்த ஆசிரியர்கள் என்று இருவரும் பரிமாறிக் கொண்டோம். படிக்கும் போது எனக்கு  கணக்கில் இருந்த வெறுப்பு விஞ்ஞானப் படிப்புகள் மேலும் தொற்றிக் கொண்டது. ஆங்கிலமும், அதை விட பொருளாதாரமும் மிகவும் பிடித்துப் போய் விட்டது.  பொருளாதார விற்பன்னர் ஆக வேண்டிய நான் வேறு வழியில் அடுத்த ஆண்டு தள்ளி விடப்பட்டேன் - அப்பாவினால்.

பழைய பதிவிலிருந்து இரு பத்திகள்:    P.U.C. இரண்டாம் term முடிந்ததும் வாழ்க்கையில் சிறிது வெளிச்சம். அரையாண்டு மதிப்பெண்கள் வந்ததும் கல்லூரி முதல்வர் Father சூசை வகுப்பிலிருந்து சிலரைக் கூப்பிட்டனுப்பினார். முதல் term-ல் சாதா மாணவனாக இருந்தவன் இப்போது  நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். ’இப்படியே படி,  இரண்டாம் வகுப்பு கட்டாயம் கிடைக்கும் என்று ஆசி கொடுத்தார். (இரண்டாம் வகுப்பே அப்போ அப்படி கஷ்டம்!)

Britto Hostel-ல் தங்கியிருந்தேன். Warden, Father ஜார்ஜுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். அடிக்கடி திட்டு வாங்குவேன்; பைன் வேறு போடுவார்.  ஆனால் இரண்டாம் term முடிந்து ஜனவரியில் விடுதிக்கு வந்ததும் என் மேல் ஒரே அன்பைப் பொழிந்தார். இரண்டு நாள் கழித்து தன் அறைக்கு வரச்சொல்லியனுப்பினார். ஏதோ வாங்கிக் கட்டப் போகிறோமென நினைத்து பயந்து கொண்டே போனேன். மறுபடியும் ஒரே அன்பு. என்ன ஆச்ச்சுன்னா ... அவர்தான் எங்களுக்கு economics பாடம் எடுத்தார். எங்கள் வகுப்பில் முதல் மார்க் 58; எனக்கு 56. வகுப்பில் இரண்டாவது மார்க். 50க்கு மேல் வாங்கியது நானும் இன்னொருவனும் மட்டும் தான். அட .. நம்ம ஹாஸ்டல் பையன் நல்ல மார்க் எடுத்துட்டானேன்னு ஒரே அன்பாகிப் போச்சு. வருடம் இறுதி வரை அது நீடித்தது.  அது மட்டுமல்லாமல், எனக்கும் economics மேலே ஒரே லவ்வாகிப் போச்சு. கல்லூரியில் டெஸ்ட் எல்லாம் சீரியசாக நடக்கும். என் பக்கத்திலிருந்த மூன்றாமாண்டு economics அண்ணனை விடவும் நான் நிறைய additional sheets வேகமாக நிறைய வாங்கி எழுதியதை அண்ணன் ஹாஸ்டல் முழுவதும் பரப்பிட்டார்லா ..!



 P.U.C. முடிந்தது. பிரின்சிபல் கொடுத்த ஆசீர்வாதம் பயனில்லாமல் போயிற்று. மூன்றாம் வகுப்பு தான். ரிசல்ட் வந்தது... பார்த்தது இன்னும் நினைவில் உள்ளது. பெருத்த ஏமாற்றம்.

அடுத்து பொருளாதாரம் B.A.வில் சேர்ந்து ஏறத்தாழ 30 நாளும் முடிந்தது. பாடமும் பிடித்து, இனி  ‘பின்னிடலாம்னு’ நினச்சிக்கிட்டு இருந்த போது அப்பா shortened B.Ed. கோர்ஸ் முடிச்சிட்டு மதுரைக்கு வந்தாங்க. நான் B.A.வில் சேர்ந்தது தெரிந்ததும் அந்த படிப்பு வேண்டாம். மதுரையில் B.Sc. கோர்ஸில் சேர்த்து விடுகிறேன் என்று சொல்லி மதுரை வரச் சொல்லி விட்டார்கள். காலங்கடந்த முயற்சி. வேறு எதிலும் இடம் இல்லை... விலங்கியலில் ஒரே ஒரு சீட் என்றிருக்க அதை வாங்கிக் கொடுத்து விட்டார்கள்.

தலைவிதி ...  அங்கே, அப்போது ஆழமாக எழுதப்பட்டு விட்டது   :(





*

Wednesday, May 20, 2015

839. தமிழ் ஐயாவும் ஆங்கில சாரும் .... (தருமி பக்கம் 28)









*







கணக்கில் ஆரம்பிச்ச sliding மற்ற பாடத்தையும் தொத்திக் கொண்டதோ? ஏறக்குறைய அப்படித்தான். ஆனாலும் கணக்கு போன இடத்தில் கொஞ்சம் ஆங்கிலமும், நிறைய தமிழும் இடம் பிடித்தன என்று நினைக்கிறேன். அதனால் தான் அதைக் கற்பித்த ஆசிரியர்கள் இன்னும் மனதில் இடம் போட்டு உட்கார்ந்திருக்கிறார்கள். ஏனெனில், மறக்க முடியாத ஆசிரியர்கள் என்று ஆரம்பித்தால் தமிழ் ஐயா கந்தசாமிப் புலவர் அவர்களும், ஆங்கிலத்தில் நடித்துக் கொண்டே பாடம் நடத்தும் ராஜூ சாரும் மனதிற்குள் வந்து விடுவார்கள்.

அதிலும் கந்தசாமிப் புலவர் பாடம் நடத்துவது இப்போதும் அப்படியே நினைவில் இருக்கிறது. நான் முதல் பெஞ்சில் நடுவில் உட்கார்ந்திருப்பேன். ஐயா வந்தவுடன் மேடையிலிருக்கும் நாற்காலி எங்கள் பெஞ்சுக்கு முன்னால் வந்து விடும். ஐயா அந்தக் காலத்து ஸ்டைலான வேட்டி, கோட்டில் வருவார். தோளில் ஒரு துண்டு. சிறிது கனத்த உருவம். வட்டமான முகம். எப்போதும் கண்களும் வாயும் சிரித்துக் கொண்டேயிருக்கும். நாற்காலியில் உட்கார்ந்ததும் வலது காலை இடது முழங்காலில் மேல் போட்டுக் கொள்வார். பக்கத்தில் இருந்ததாலோ என்னவோ நன்றாக நினைவில் இருக்கிறது --- வலது காலின் கீழ்ப்புறத்தில் நமக்கு இருக்குமே அது போல் பாதம் வளைந்திருக்காது. ஏறத்தாழ பாதத்தின் நடுப்பாகம் வளையாமல் almost நேராக இருக்கும். இடது கையில் புத்தகம் இருக்கும். இடது முழங்கை நாற்காலியின் கைப்பிடியில் ஊன்றியிருக்கும். பாடம் நடத்தும் போது வலது கை விரல்கள் வலது பாதத்தின் அந்த மேடான இடைப் பகுதியை வருடிக் கொண்டிருக்கும். ஏதோ வீணை வாசிப்பது போல் அந்த விரல்கள் அந்த இடத்தை வருடி விட்டுக் கொண்டிருக்கும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வடக்கு ஆடி வீதியில் உள்ள திருவள்ளுவர் மன்றத்தின் தலைவராக இருந்தார் என்று நினைவு. பள்ளி முடித்த பல ஆண்டுகள் வரை கோவிலுக்குள் நுழைந்தால், வடக்கு வீதியும், திருவள்ளுவர் மன்றமும், ஐயாவும் கட்டாயம் நினைவுக்கு வருவார்கள்.

அவர் பாடம் நடத்துவதே ஒரு அழகு. அதுவும் செய்யுள்களை நடத்துவது மிக அழகாக இருக்கும். ஒரு பாடலை எடுத்துக் கொண்டால் முதலில் சாதாரணமாக வாசிப்பார். ஏதும் புரியாது. இரண்டாம் முறை சீரோடு வாசிப்பார். தடுமாறுவோம். மூன்றாவதாக சீர் தளை பிரித்து சொற்களைப் பிரித்து, அழகாக மெல்ல .. மெல்ல வாசிப்பார். கடினமான சொற்களைத் தவிர்த்து, செய்யுள் புரிந்து விடும். பின் கடினச் சொற்களுக்குவருவார். அதையும் சொல்லிவிட்டு மீண்டும் மெல்ல மெல்ல பிரித்து வாசிப்பார். தமிழ் வகுப்பின் மீது ஆசைப்பட வைத்த ஆசிரியர்.

ஐயா யாரையும் திட்டியதாக நினைவில்லை. அவர் வகுப்பில் யாரையும் அதட்டுவதுமில்லை; குரலை உயர்த்துவதுமில்லை. ஆனால் வகுப்பு சீராக நடக்கும். வழக்கமாக தமிழ் வகுப்பு என்றால் மாணவர்கள் ஆடுவது வழக்கம் தான். ஐயா வகுப்பில் அப்படியேதும் நடக்காது. ஆச்சரியம் தான். கல்லூரிக்குப் போன் பின்பும் வாய்ப்பு கிடைக்கும் போது அவரைப் போய் பார்ப்பது ஒரு வழக்கம்.

 ராஜு சார். ஆங்கில ஆசிரியர். அதனால் தானோ என்னவோ மிக அழகாக உடை உடுத்துவார். அதுவும் அந்தக் காலத்தில் வெள்ளை சட்டை; வெள்ளை பேண்ட்; கருப்பு ஷூ. ட்ரிம்மாக வருவார். இவரும் பொதுவாக உட்கார்ந்து தான் வகுப்பு நடத்துவார்.(நான் ஆசிரியனாக ஆன பிறகு நாற்காலியில் உட்கார்ந்து பாடம் எடுப்பதை வெறுத்தவன். நகரணும்; நடக்கணும்; மேடையிலிருந்து இறங்கி வகுப்புக்குள் நுழைந்து வரணும்; உட்கார்ந்தால் மேசை மேல் உட்காரணும் என்ற விதி எனக்கு நானே எழுதிக் கொண்டது.) ஆனாலும் ராஜூ சார் உட்கார்ந்தது அப்போது வித்தியாசமாகத் தெரியவில்லை. பாடம் நடத்தும் போது அவரும் ஒரு நடிகராகி விடுவார்.

Merchant of Venice கதை சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது. எந்த சீன் என்று நினைவில்லை. ஒரு வேளை குமாரசாமி ...ஓ.. மன்னிக்கவும் ... நீதியரசர் அந்தக் கதையில் தீர்ப்பு சொல்வாரே ... அப்போது சார் தன் ஷூ காலை மேடையில் தேய்த்துக் கொண்டே ஒரு வசனம் சொன்னார். வகுப்பே நிமிர்ந்தது. ஸ்டைல் வாத்தியார். ஆள் பாதி; ஆடை பாதி என்பது போல் சார் தன் உடை, நடை, நடிப்பு எல்லாவற்றையும் சேர்த்து ஒரு கலவையாகப் பாடம் சொல்லித் தந்தார்.

இவர்களின் பாதிப்பு என்னிடம் நிச்சயம் இருந்தது.

 அடடா ... கணக்குப் பாடத்தில் புலியாக இருந்த நான் எப்படி புளியாகிப் போனேன் என்றல்லவா சொல்லிக் கொண்டிருந்தேன். மறந்தே போச்சே... digression ...என் ஆசிரியர் பணியிலும் இந்த digression எனக்கு நிறைய இருந்தது.

சரி...மீண்டும் கணக்கிற்கு வருவோமா ....?




*

படங்கள்;இணையம்

Saturday, May 02, 2015

834. புளியாய்க் கரைந்த கணக்குப் புலி - (தருமி பக்கம் 27)






*





*

நான் இப்போது கூட arithmetic-ல் புலிதான். விழுக்காடு போடுவது, சின்னப் பெருக்கல் / வகுத்தல் /கூட்டல் போடுவது இன்னும் பிடிக்கும். கடைகளில் சின்னக் கணக்குகளுக்கும் கால்குலேட்டர் பயன்படுத்துவது பார்த்து எரிச்சல் கொள்ளும் அளவு கணக்கில் புலி தான். மனக்கணக்காகப் போட்டுப் பார்ப்பதும் பிடிக்கும். அட ... எந்த அளவு நான் கணக்கில் புலி என்றால் அமெரிக்கா போயிருந்த போது, சைனாக்கார நண்பர் ஒருவர் நம் கணக்குத் திறமையைப் பார்த்து, ‘இதனால் தான் உங்கள் ஊர் ஆளுகள் software-ல் அம்புட்டு திறமையாக இருக்கிறார்கள்’ என்று நற்சான்றிதழ் கொடுத்தார்.

அது எப்போதுன்னா ....

பத்துப் பதினாலு வருஷத்துக்கு முன்னால் நூறே நூறு நாள் மட்டும் அமெரிக்கா போனோமா ... அப்போ ஒரு சைனாக்கார பேராசிரியர் ஒருவரோடு house mate-ஆக இருந்தேன். இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி புத்தி. எந்தக் கடைக்குப் போனாலும் அங்கிருக்கும் சாமான்களின் விலையை நம்மூர் காசுக்கு கணக்குப் போட்டு பார்ப்போம். அப்போ நம்மூர் ரூபாய் 52க்கு ஒரு டாலர் என்று இருந்தது என்று நினைக்கிறேன். ஐம்பதால் பெருக்குவது தான் எளிதாயிற்றே... நான் உடனே இத்தனை டாலருக்கு நம்மூர் கணக்கில் எத்தனை ரூபாய் என்று கணக்குப் போட்டு விடுவேன். அவர் டாலருக்கு எட்டால் பெருக்க வேண்டியதிருக்கும். அவர் அதற்காக தன் orgnaizer எடுத்து calculator தேடி கணக்குப் போட வேண்டியதிருக்கும். ஆனால் நான் அவரோடு இருக்கும் போது என்னிடம் கேட்பார். எட்டாம் வாய்ப்பாடுதான் நமக்கு எளிதாயிற்றே ... கேட்டதும் சொல்லிவிடுவேன். எட்டெட்டு என்றால் டக்குன்னு 64 அப்டின்னு சொல்லிடுவோம். ஆனால் 18 x 8 என்றால்,  10 x 8 =80 + 8 x 8 = 64; இரண்டையும் சேர்த்தால்144 அப்டின்னு சொல்லிடுவோம்ல .. அது மாதிரி நான் அவருக்கு மனக்கணக்காக, அவர் calculator எடுப்பதற்குள் சொல்லி விடுவேன். எப்படின்னு கேட்டார். இந்த 18 x 8 கணக்கு சொன்னேன்; அவருக்குத் தலை சுற்றியது. என்னால முடியலைங்க என்றார். அப்போது தான் நமது கணக்கு வித்வத்தையை புகழ்ந்து சொல்லிட்டு, அப்படியே நம்ம software ஆளுகளின் புகழ் பாடினார்.

இப்படி arithmetic-ல் புலியாக இருந்த (இருக்கும்) எனக்கு mathamatics-தான் ஆகாமல் போச்சு.........

அந்தக் காலத்தில் உயர்பள்ளிகளில் 6 வருடங்கள். ஒவ்வொரு வகுப்பும் பார்ம் - Farm - என்று அழைக்கப்படும்.  V Farm வந்த உடன் வகுப்புகள் இருவகையாகப் பிரிக்கப்படும். அதுவும் கணக்கை மட்டும் வைத்தே பிரிக்கப்படும். கணக்குப் புலிகளுக்கு Composite Mathematics  என்றும், சாதா கேசுகளுக்கு  General Mathematics என்றும் இருக்கும். நாம் தான் IV Farm வரை கணக்குப் புலியா ... அதனால் அப்படியே Composite Mathematicsக்கு அனுப்பி விட்டார்கள். அப்போதெல்லாம் இந்த குரூப்புக்கு கிராக்கி தான். 'A' Section boys நாங்க.

V Farm-ல் கணக்குக்கு யாகப்பன் என்று ஒரு இளம் ஆசிரியர் வந்தார். வயதான ஆசிரியர்கள் பெரும்பாலும் வேட்டி, கோட் என்று வருவார்கள். இவர் பேண்ட், கோட் என்று வருவார். ஒல்லியாக, உயரமாக இருப்பார். நான் முதலில் அவருக்கு வைத்த ‘பட்டப்பெயர்’ ஆப்ரஹாம் லிங்கன். தாடி மட்டும் வைத்தால் லிங்கன் மாதிரியே இருப்பார். புதிதாக வந்திருந்தாலும் என் அப்பாவிற்கு நண்பராக ஆகியிருந்தார். ஆக அவருக்கு நான் ரொம்பவும் ”வேண்டப்பட்டவனாக” ஆகி விட்டேன். ரொம்ப ஸ்பெஷலாக என்னைக் கவனிக்க ஆரம்பித்து விட்டார்.

இப்போ கணக்கில் புதிதாக வந்த அல்ஜிப்ராவும், தேற்றங்களும் ராட்சசர்களாக மாறிப் போனார்கள். தேற்றங்கள் குட்டி  போட்டு அதற்கு 'ரைடர்' அப்டின்னு பேர் சொன்னாங்க. இந்த மூணு பிசாசுகளும் என்னை ரொம்பவே கொடுமைப் படித்திட்டாங்க. என்ன பிரச்சனை என்றால் எனக்கு மனப்பாட சக்தின்னு ஒண்ணு சொல்லுவாங்களே அது 0-க்கு ரொம்ப பக்கத்தில் தான் இருக்கும். அட
... உண்மையைச் சொல்லிர்ரேனே .... மனப்பாடசக்தி என்பதும் என்னிடம் அன்றும் இன்றும் கிஞ்சித்தும் இல்லை.

(a+b)2  இதை ஒப்பேத்திட்டேன்.  (a+b+c)2 இது கூட பரவாயில்லை .. தேத்திட்டேன். (a+b+c)3   இங்க உதைக்க ஆரம்பிச்சிது. அப்படியே மனப்பாடம் பண்ணணுமாமே .. உழுந்துட்டேன். எழுந்திருக்கவே முடியலை.

இதை விட்டா தியரம் / தேற்றம். இதுல ஒரு வார்த்தை கூட மாறக்கூடாதாம்; அப்படியே சொல்லணுமாம். நம்மளால முடியுமா அந்த வித்தையெல்லாம்நிறைய பார்முலாக்கள். அதெல்லாம் கொடுத்து மனப்பாடம் பண்ணணும்னாங்க. அதுக்கு நான் எங்க போறது. இந்த தியரங்களை வைத்து ‘ரைடர்’ போடணும்னாங்க. திணறிட்டேன்.

இதுல நம்ம யாகப்பன் வாத்தியார் நம்மட்ட ரொம்ப பிரியமாயிட்டார். என்ன ஆச்சுன்னா.... அப்பா சாரோட நண்பராயிட்டாரா ... அதுனால எனக்கு ஸ்பெஷல் கவனிப்பு கொடுக்க ஆரம்பிச்சிட்டார். முதல் பெஞ்சில் ஒரு ஓரத்தில உக்காந்திருப்பேன். பக்கத்தில வந்து நிப்பார்; நல்ல எலும்பா இருபாரா ... அவர் கையை மடக்கி, குட்டு வைக்கிறது மாதிரி தலைக்கு மேல வச்சிக்கிட்டு ஏதாவது ஒரு கேள்வி கேட்பார். மனப்பாடப் பகுதின்னா என்ன ஆயிருக்கும்.ஒண்ணும் தெரிஞ்சிருக்காது ... நச்சுன்னு மண்டையில் ஒண்ணு விழும். கொஞ்ச நஞ்ச ஞாபகம் இருக்கிறதும் ஒண்ணுமில்லாமல் போகும். ஆக கணக்கில நம்ம ‘புலித் தன்மை’ வேகமாக மறைஞ்சி போக ஆரம்பித்தது. என்னடா .. போன வருஷம் வரை நல்லா கணக்கு போட்ட பயல் இந்த வருஷம் இப்படி ஆயிட்டானே .. ஏன்னு எங்க அப்பாவோ, யாகப்பன் சாரோ கொஞ்சம் யோசிச்சிருந்தா நிலமை மாறியிருக்கலாம். அதெல்லாம் இல்லை... நமக்கும் கணக்குக்கும் இருந்த ஒற்றுமை ஒன்றும் இல்லாமல் போச்சு ... ஒரே sliding தான்.

அப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன். இது வாழ்க்கையின் திசையையே முற்றிலும் மாற்றி வச்சிருச்சு. எப்படின்னு கேட்கிறீங்களா ... சொல்றேன் ... சொல்றேன்.





 *

Wednesday, March 04, 2015

824. தருமி பக்கம் ( அதீதம் 25) - உறைந்த நினைவுகள்







*

அதீதம் இணைய இதழில் வந்த கட்டுரையின் மறு பதிவு

*


இதுவரை வெளியில் சொல்லாத ஒரு ரகசியம். அன்று நடந்த போது இறுக்கமான மனச்சூழலைத் தந்தது. மனதிற்குள் வைத்தே புழுங்கிக் கொண்டேன்.  அது ஒரு பெரிய விஷயமாகத் தோன்றியது. அதனால் தானோ என்னவோ 60 ஆண்டுகள் ஆகியும் அந்த நிகழ்வு நடந்த ஒவ்வொரு வினாடியும் மனதில் நிலைத்து நின்று விட்டது. இத்தனை நாள் கழித்து, இன்று என்னவோ அதை வெளியில் சொல்லிவிட மனது ஆசைப்படுகிறது.

அதைப் புரிந்து கொள்ள நீங்கள் கட்டாயம் முந்திய பதிவு ஒன்றைப் படித்தாக வேண்டும்.

அம்மா இறந்து, அப்பாவிற்கு கல்யாணம் முடிந்ததும் என் கிராம வாழ்க்கை முடிந்தது. மதுரைவாசியானேன். அப்பா, அம்மா, நான் மூவரும் ஒரு ஒட்டுக் குடித்தனத்தில் வசிக்க ஆரம்பித்தோம். இப்போது நினைத்தாலும் எப்படி அந்த வீட்டில் இருபத்தி இரண்டு ஆண்டுகள் குடித்தனம் நடத்தினோம் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த ஆண்டுகளில் குடும்ப எண்ணிக்கையும் பெருத்துப் போனது. ஒரு வீட்டின் பின் பகுதியில் குடித்தனம். அறை என்று பார்த்தால் ஒரே ஒரு அறை தான். அதோடு  ஓடு மேய்ந்த ஒரு தாழ்வாரம்; தட்டியால் மறைக்கப்பட்ட ஒரு அடுப்படி; இரண்டு மூன்று குடும்பங்களுக்குப் பொதுவான ஒரு “கக்கூஸ்’; ஒரு மொட்டை மாடி.  அதில்அப்பா டியூஷன் எடுப்பதற்காக தென்னங்கீத்தில் ஒரு ஷெட். தனியாகப் படுக்க தைரியம் வந்த பிறகு, அதாவது ஏழெட்டு எட்டாம் வகுப்பு வரும் வரை,  நம் இரவுப் படிப்பு, தூக்கம் எல்லாம் அந்த ஷெட்டில் தான்.

நான்காம் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது அப்பாவும் அம்மாவும் காலங்கார்த்தாலேயே கோவிலுக்குப் போவார்கள். போகும் போது என்னை எழுப்பி விட்டு விடுவார்கள். அவர்கள் வந்த பின் நான் கோவிலுக்குப் போய், அப்படியே கோவில் காம்பவுண்டிற்குள் இருந்த சாமியார்களின் பால் பண்ணையில் பால் வாங்கிக் கொண்டு வீட்டிற்குத் திரும்புவேன்.

இளம் காலையில் தனியாக ஒரு பால் பாத்திரத்தோடு நடந்து கோவிலுக்குச் செல்ல வேண்டும். வீட்டிலிருந்து இருநூறு மீட்டர் நடந்தால் தெரு - தெற்கு மாரட்டு வீதி - இடது புறம் திரும்பும். அங்கிருந்து பார்த்தால் இருநூறு மீட்டர் தொலைவில் புனித மரியன்னை கோவிலின் உயர்ந்த இரு கோபுரமும் தெரியும். அதென்னவோ அப்போதெல்லாம் அந்த முதல் இருநூறு மீட்டர் தூரம் நடக்கும் போது பல முறை மனதில் நெகட்டிவான நினைவுகள் இருக்கும். அம்மா நினைப்பும் வருவது அதிகம். ஆனால்கோபுரம் கண்ணுக்குத் தெரிந்ததும் ஏதோ வெளிச்சத்தைப் பார்த்தது போலிருக்கும். ஆனால் அது வரை பல நாட்களில் அம்மாவின் நினைவும் அதை ஒட்டிய வருத்தமும் நினைவுகளின் மேல் மட்டத்தில் அலையும்.

அப்போது என் மனதில் ஓடிய எண்ணங்களை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. ”இப்போது நடப்பது எல்லாமே கனவு தான்; இதில் இருந்து சீக்கிரம் விழித்து விடுவேன்; அப்படி விழிக்கும் போது அம்மா உயிரோடு என்னிடம் வருவார்கள்”.  இது என் மனதில் அவ்வப்போது வந்து சென்ற எண்ணங்கள். பின்னாளில் Lao Tzu என்ற சீன ஜென் அறிஞரின் , அனுபவம், அதை ஒட்டி அவர் எழுப்பிய கேள்விகள் எனக்குள் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

 Lao Tzu ஒரு கனவு காண்கிறார். அதில் அவர் ஒரு வண்ணத்துப் பூச்சியாக பறந்து திரிகிறார். இந்த நிகழ்வை அவர் ‘நான் கனவில் வண்ணத்துப் பூச்சியாக மாறினேனா ... இல்லை .. வண்ணத்துப் பூச்சியான நான் மனிதனாக என்னை நினைத்துக் கொண்டிருக்கிறேனா ...?’ என்பது அவரது கேள்வி. எது கனவு? எது நிஜம்?

I dreamed I was a butterfly, flitting around in the sky; then I awoke. Now I wonder: Am I a man who dreamt of being a butterfly, or am I a butterfly dreaming that I am a man?



எனக்கும் இதே எண்ணம் அந்தச் சிறு வயதில் வந்திருக்கிறது. எது நிஜம்? எது கனவு? என்ற கேள்விகளோடு சிறு வயது அனுபவங்கள் இருந்திருக்கின்றன.

(பெத்த) அம்மாவின் உருவம் எனக்கு நினைவில்லை. அவரின் நினைவுகளைச் சொல்ல இரண்டே இரு புகைப்படங்களை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். ஒரு படம் பிறந்த கோலத்தில் இருந்த  என் கையைப் பிடித்துக் கொண்டு  நின்று கொண்டிருக்கும்  படம்.
1945
இன்னொன்று அம்மா நாற்காலியில் அமர்ந்திருக்க அப்பா அதன் கைப்பிடியில் உட்கார்ந்திருப்பார். அது ஒரு அந்தக் காலத்து ஸ்டைலில் உள்ள புகைப்படம். அம்மா இறந்த பிறகு இந்த இரண்டாவது படத்திலுள்ள அம்மாவின் முகத்தை மட்டும் வைத்து இரங்கல் அட்டைகள் அச்சடித்திருப்பார்கள் போலும். ஒரு படத்தைச் சட்டமிட்டு வீட்டில் கொஞ்ச நாள் மாட்டியிருந்தார்கள். இவைகளில் மட்டுமே அம்மாவின் உருவத்தை நான் பார்த்திருக்கிறேன்.

ஒரு நாள் காலை. அனேகமாக பத்துப் பதினோரு வயதிருந்திருக்கும். கோவிலுக்குப் போகச் சொல்லி என்னை எழுப்பி விட்டு விட்டு அப்பா அம்மா கோவிலுக்குப் போய் விட்டார்கள். அப்பா கோவிலிலிருந்து அப்படியே ’வீட்டு ட்யூஷனுக்குப்’ போய் விட்டார்கள். அம்மா வரும் போது நான் வழக்கம் போல் தூங்கி விட்டேன். மறுபடி என்னை எழுப்பி விட்டு விட்டு கோவிலுக்குப் புறப்படச் சொன்னார்கள். அரையிருட்டில்  மெத்தைப் படியில் அமர்ந்து பல் விளக்கிக் கொண்டிருந்தேன். காலடியில் கசங்கிய பேப்பர் போல் ஏதோ ஒன்று கிடந்தது. மங்கிய வெளிச்சத்தில் அதனைப் பிரித்துப் பார்த்தேன். நான் இதுவரை பார்த்திராத அம்மாவின் புகைப்படம். கார்டு சைஸில் பாதியிருக்குமே 2B சைஸ் என்று சொல்வார்களே அந்த சைஸ். அரையிருட்டு; புதியதாய் பார்க்கும் படம்; கசங்கியிருந்ததால் முழுமையாகக் கூடப் பார்க்க முடியவில்லை. அதற்குள் அம்மா பல் விளக்கிட்டியா என்று கேட்டார்கள். ஏனோ தெரியவில்லை; அவர்களுக்குத் தெரியாமல் அந்தப் படத்தை மீண்டும் பார்க்க வேண்டும் போல் தோன்றியது. ஆனால் அவர்கள் பக்கத்தில் இருந்ததால் அந்தக் கசங்கிய போட்டோவை தலைக்கு மேலிருந்த ஓட்டுச் சரப்பின் மீது எறிந்து வைத்தேன். மீண்டும் எடுக்க வசதியில்லை. கோவிலுக்குப் போய் விட்டு வேகமாக வந்து நான் எறிந்த அந்த ஓட்டுப் பரப்பில் தேடிப் பார்த்தேன். அங்கே ஏதும் இல்லை.

கிடைத்த ஒரு அரிய படம். சரியாகக் கூட பார்க்காத அம்மாவின் படம். கையில் கிடைத்ததைக் காக்க முடியாமல் போயிற்றே என்ற கவலை. அப்பா படுக்கும் கட்டிலில் இருந்து சிறிது தூரத்தில் அது ஏன் அங்கு கசங்கிக் கிடந்தது? எப்படி காணாமல் போயிற்று?

பதில் தெரியாத கேள்விகள்......










Monday, February 09, 2015

820. தருமி பக்கம் 24 (அதீதம்) - இலக்கணம் படிப்போமா ...?






*

”அதீதம்” இணைய இதழில் வந்த கட்டுரையின் மறு பதிப்பு ....


*

ஐந்தாம் வகுப்பில் லூக்காஸ் வாத்தியாரிடம் நல்ல பெயர் வாங்கினேன். நல்ல மாணவனாக இருந்திருப்பேன் போலும்!  எனக்கு அவரிடம் தனி மரியாதை உண்டு. எங்கள் வகுப்பில் என்னை மானிட்டர் மாதிரி வைத்திருந்தார். நான் படித்து முடித்து கல்லூரியில் படிக்கும் போதும் அவரை அவ்வப்போது பார்ப்பேன். படிக்கும் போது வைத்திருந்த அதே அன்பை எப்போதும் என்னிடம் காட்டுவார்.

அவர் முன்னால் தான் நான் தமிழில் ஒரு சூரப்புலி (!) என்று ராஜாவுடன் நடந்த ஒரு போட்டியால் முடிவானது. முதல் வகுப்பின் முதல் நாளிலிருந்து ஐந்தாவது வகுப்பில் ராஜாவுடனான போட்டியும், சிவகுமாரோடு போட்ட சண்டையும் தான் நினைவில் உள்ளன. பழைய நினைவுகளில் ஆரம்பப் பாடசாலை நினைவுகள் இவை மட்டுமே நினைவில் உள்ளன.

ஆறாம் வகுப்பில் தான் அப்போதெல்லாம் எங்களுக்கு ஆங்கில எழுத்துக்கள் சொல்லித் தர ஆரம்பிப்பார்கள். ஆனால் ஐந்தாம் வகுப்பிலேயே எங்களுக்கு லூக்காஸ் சார் a .. b .. c .. d.. சொல்லிக் கொடுத்தார். ஆறாம் வகுப்பு a .. b .. c .. d.. ல் ஆரம்பித்து பாடங்கள் தொடர்ந்தன. எனது ஆறாவது வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் படங்கள் எல்லாம் குச்சி குச்சியாக வரையப்பட்டிருக்கும். அதென்னவோ தெரியவில்லை… அந்தப் புத்தகம் எழுதியவருக்கு ராமன் என்ற பெயர் அதிகம் பிடிக்கும் போலும். Raman is playing .. Raman is eating … Raman is a good boy … Raman is a thief … என்று நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும் ராமனைக் கூப்பிட்டிருப்பார். அப்போது இதை வைத்து ஏதோ ஒரு பத்திரிகையில் ஒரு கட்டுரை வந்தது. ஏன் இப்படி ராமனைப் போட்டு வதைக்கிறீர்கள் என்று கட்டுரையின் ஆசிரியர் கேட்டிருப்பார்.

ஏழாவது, எட்டாவது வகுப்பில் சந்தியாகு சாரும், என் அப்பாவும் ஆங்கிலம் எடுத்தார்கள். இருவரும் ஆங்கில இலக்கணத்தை எடுப்பது அவ்வளவு அருமை. நல்ல ஆழமான அஸ்திவாரம் போட்டார்கள். சந்தியாகு சார் வினைச் சொல் பயன்படுத்தும் முறை – conjugation of verbs – சொல்லிக் கொடுத்தார். வாய்ப்பாடு மாதிரி தான். ஒரு வினைச்சொல் சொல்லி, காலக் குறிப்பும் கொடுத்தால் I, we, you, he, she, it and they என்று கட கடன்னு 8 எழுவாய்களுக்கும் சொல்லணும். எட்டு வாய்ப்பாடுகள். மனப்பாடமா படிக்கணும். அவர் கேட்கும்போது வேகமாக ஒரே தடவையில் நடுவில மூச்சு விடாமல் சொல்லணும். மூச்சு விட்டுட்டா  மறுபடி முதலில் இருந்து சொல்லணும். எனக்கு இது ரொம்ப பிடிச்சிப் போச்சு .. இன்னைக்கி வரை அதை அப்படிச் சொல்லிப் பார்ப்பதில் ஒரு மகிழ்ச்சி உண்டு. வாழ்க சந்தியாகு சார்.





அடுத்து  அப்பா… நல்ல வாத்தியார். அப்பா என்பதை விட ஆசிரியர் என்ற முறையில் அவர் மேல் மரியாதை அதிகமாக உண்டு. ஆங்கில இலக்கணமும், கணக்குப் பாடமும் எடுப்பதில் மன்னர். பசுமரத்தாணி மாதிரி, சொல்லித் தருவதை மனதில் ஆழமாக இறக்கும் அசாத்தியத் திறமை. என் ஆசிரியர்களுக்குள் அவருக்குத்தான் முதலிடம். அப்பா என்பதால் அல்ல … அருமையான ஆசிரியர் என்பதால் மட்டுமே. சந்தியாகு சார் போட்ட இலக்கணத்தின் அடுத்த படி அப்பா போட்டது. என் மண்டையிலேயே அன்று சொல்லிக் கொடுத்ததும், சொல்லிக் கொடுத்த முறையும் இன்னும் நினைவில் இருக்கின்றன. சாதா வாக்கியத்தை கேள்வி வாக்கியமாக மாற்றுவது, எதிர்ப் பொருளாக மாற்றுவது .. direct, indirect speech, change of voices, degrees of comparison எல்லாம் எனக்குத் தண்ணி பட்ட பாடுதான்!

 இதில் எனக்கு இன்னொரு வசதி. அப்பாவிடம் ட்யூஷன் படிக்க கொஞ்சம் மக்குப் பசங்க வருவாங்க. எங்கள் காலத்தில் ட்யூஷன் படிக்க வர்ரதே மக்குப் பசங்க மட்டும் தான். ட்யூஷனுக்கு வர்ர பசங்களோடு நானும் உட்காரணும். அவங்க எழுதுறதைத் திருத்தணும்… சேர்ந்து எழுதணும். ஆக எனக்கு இலக்கணப் பாடம் டபுள் டோஸ்ல கிடச்சுது. அந்தக் கிளாஸ்லேயே பாதி வாத்தியாராக இருப்பேன். சிலருக்குத் திருப்பிச் சொல்லித் தரும் பொறுப்பும் கிடைக்கும்.

சில உண்மைகளையும் சொல்லணும். அன்று பல ஆசிரியர்களின் கற்பிக்கும் தன்மையின் சிறப்பு இன்று வரை நன்கு நெஞ்சில் இருக்கிறது. devoted teachers என்பார்களே அந்த வகைதான். தெரிந்து, தெளிந்து, விரும்பிக் கற்றுக் கொடுத்த பெரியவர்கள் அவர்கள். இன்னும் பல ஆசிரியர்களின் உருவம் கண்முன் வருகிறது. நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். ஆசிரியனாக இருந்த போது என் ஆசிரியர்களிடம் நான் பார்த்த பல நல்லவைகளை நான் ‘காப்பி’ அடிக்க முனைந்திருக்கிறேன். என்றாலும் என் அனைத்து ஆசிரியர்களிடம் நான் பார்க்காத ஒன்று உண்டு. பாடங்களை அழகாகக் கற்பித்தார்கள். ஆனால் மாணவர்கள் எதிர்காலத்தில் எப்படி இருக்க வேண்டும்; வாழ்க்கையில் மேலேறி வரவேண்டும் என்பதைச் சொல்ல விட்டு விட்டார்கள் என்ற எண்ணமும், ஏமாற்றமும் எனக்கிருந்தது. அதனால் தானோ என்னவோ நான் மாணவர்களுக்கு வெறும் ’சிலபஸ்’ என்பதோடு நில்லாமல் எல்லாமும், எல்லாவற்றையும் பற்றிப் பேசினேன். ஒரு வேளை கொஞ்சம் ‘அதிகமாகவே’ பேசியிருப்பேன் என்றே நினைக்கின்றேன்.

நல்ல கடமையுணர்வோடு இருந்த ஆசிரியர்களின் அர்ப்பணிப்பைக் கெடுத்த ஒரு விஷயமும் நினைவுக்கு வருகிறது. அது ஆசிரியர்களே கண்டு பிடித்த ஒரு ’மட்டமான தயாரிப்பு’ தான். நான் படித்த காலத்தில் ஆங்கில இலக்கணம் என்றால் Wren Martin தான்.  ஆதிகாலத்து ஒரிஜினல் நூல். மாணவர்களை விட ஆசிரியர்களுக்கு இது ஒரு நல்ல கற்பிக்கும் நூல். ஆசிரியரை நன்றாகவே தயார் செய்யும். இப்படி இருந்த நிலை மாறி ஆசிரியர்களையும் இலக்கணத்தையும் முழுவதுமாகப் பிரித்தது – the so called ‘exercise books’ – hell with them ! இந்த நூல் முதலில் ஆசிரியர்களின் வேலையை எளிதாக்கியது; இதனால் அவர்களும் இலக்கணம் கற்றுக் கொள்ள வேண்டிய நிலை மாறியது;



ஆசிரியர்கள் இலக்கணம் படிக்க வேண்டிய கட்டாயத்திலிருந்து விடுபட்டார்கள். மாணவர்களுக்கு வேலை எளிதாயிற்று. ஏன் எதற்கு என்று தெரியாமல் பதில் மட்டும் கிடைக்கும் வகையான நூல்கள்.
ஒரு பள்ளி மாணவன் தன் exercise bookல் தப்பும் தவறுமாகப் பதில் எழுதியிருந்தான். அவனிடம் கேட்டேன். - பத்து கேள்விகளுக்கும் ஆசிரியர் பதிலைக் கரும்பலகையில் எழுதினார்; அப்படியே பார்த்து எழுதினேன் என்றான். பிறகு தான் புரிந்தது – ஆசிரியர் பதில் எழுதிப் போட்டதில் இவன் தவறுதலாக ஒரு பதிலை விட்டு விட்டு எழுதியிருக்கிறான். பல குழப்படிகள். He was eating football …. Meena wrote an apple …. Krish is waiting for a poetry…. இப்படி அர்த்தமில்லாமல் அனர்த்தமாக இருந்தது. ஒரு பதிலைத் தப்பாக எழுதியதால் அதன் பின் வந்தவை அனைத்தும் தப்பு. ஆக, ஆசிரியர் படிக்க வேண்டாம் … கற்றுக் கொடுக்க வேண்டாம் .. வெறும் புள்ளிக் கோலம் போடுவது போல் வெற்றுப் புள்ளிகளில் வார்த்தைகளைப் போட்டு விடலாம். மாணவனுக்குப் புரிகிறதோ இல்லையோ … இப்படியே போயிற்று ஆங்கில இலக்கணம்.

ஆங்கில இலக்கணம் இந்த லட்சணத்தில் போனதென்றால், தமிழ் வளராமல் போனதற்கு எனக்குத் தெரிந்த ஒரு காரணம் நம்ம “கோனார்” தான்! யார் தமிழ்ப் புத்தகங்களைப் படித்தார்கள். பார்த்தது .. படித்தது .. உருப்போட்டது எல்லாமே கோனார் தான். இதற்கு ஆசிரியர்கள் அருளிய வரம் என்னவென்றால் இலக்கணக் குறிப்புகள் எல்லாமே கோனாரிடமிருந்து கடன் வாங்கி தான் தேர்வில் கேட்பார்கள். மற்ற கேள்விகளும் அனேகமாக கோனார் சொன்ன கேள்வி பதில்கள் தான். கோனார் நோட்ஸோடு தமிழும், இலக்கணமும் சவமாகிப் போய்விட்டன. அப்பாவிடமும், சந்தியாகு சாரிடமும் படித்த ஆங்கில இலக்கணம், கந்தசாமிப் புலவரின் தமிழ் வகுப்பு இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் இந்த exercise books பள்ளிப் படிப்பை எப்படி நாசமாக்கியது என்பது தான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. இன்றைக்கு அறிவியலை ஏகத்துக்கும் சொல்லித் தருகிறார்கள். ஆனால் அதை வெளிப்படுத்த வேண்டிய மொழித் திறமையைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகவே தெரியவில்லை. எவ்வளவு பெரிய அறிவியல் அறிவாளியாக இருந்தாலும் அதைத் திறமையாக வெளிப்படுத்தும் மொழித்திறமை இல்லாமல் மாணவர்கள் இருப்பதைக் காண்பது பெரும் சோகம். அந்த சோகத்தின் வெளிப்பாடே இந்த digression. விஷயத்துக்கு வருவோம்.

அப்பாவிடம் படித்துவிட்டு அவரிடம் அடி வாங்கியதைச் சொல்லாமல் போவதெப்படி? எட்டாம் வகுப்பு. அப்பா ஆங்கில வாத்தியார். அதனால் வகுப்புக்கு அவர் தான் ஆல் இன் ஆல் அழகு ராஜா. தங்கவேல் எங்கள் வகுப்பிலேயே பெரிய பையன். ஒல்லியாக உயரமாக இருப்பான். சின்னச் சின்னதாக முகத்தில் எங்காவது ஓரிடத்தில் வெள்ளை ப்ளாஸ்டர் ஒட்டி ஸ்டைலாக வருவான். அனுப்பானடியில் இருந்து வருவான். அப்பாவிடம் ட்யூஷன் வேறு படித்தான். அங்கு என்னிடம் மாட்டியிருப்பானோ என்னவோ ...! இரண்டு வகுப்புகளுக்கு நடுவே இருந்த நேரத்தில் வகுப்பில் பேசுவோர் பெயரைக் கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும். என் பெயரை ஒரு நாள் எழுதினான். நான் பேசவில்லை என்று அவனிடம் விவாதித்துக் கொண்டிருந்தேன். அப்பா வகுப்பு. உள்ளே நுழைந்தார். என் பெயரை போர்டில் பார்த்தார். கையிலிருந்த டஸ்டர் என்னை நோக்கிப் பறந்து வந்து மண்டையில் விழுந்தது. மகன் தவறு செய்ததும் தேரேற்றிக் கொன்றானே … மனுநீதிச் சோழன் .. அப்படி ஆகி விட்டார் அப்பா. பொறிந்து தள்ளி விட்டார். அன்று வாங்கிய அடி மாதிரி அவ்வளவு அடி அவரிடமிருந்து எப்போதும் வாங்கியதில்லை. செமத்தி …! அதன்பின் வகுப்பிற்கு வெளியே நிற்க வைத்தார். வர்ர போற ஆசிரியர்கள் எட்டிப் பார்த்து பாவம் போல் என்னைப் பார்த்து விட்டுப் போனார்கள். (ஆமா … அது என்ன நீதிச் சோழன் என்பதில்லாமல் ஏன் “மனு” நீதின்னு அந்த மன்னனுக்குப் பெயர் வைத்தார்கள்; இங்கே எங்கே வந்தார் ’மனு’?)

இப்படி சோகமாக என் எட்டாம் வகுப்பை முடித்து வைத்தேன் ……….


 *

Saturday, January 31, 2015

819. தருமிப் பக்கம் (அதீதம்) - புத்தக வாசிப்பின் ஆரம்பம்









*

அதீதத்தில், தருமிப் பக்கம் - 23ம் கட்டுரையின் மீள் பதிவு

*


 முதல் வகுப்பில் மாணிக்கம் சாரிடம் சேர்ந்த அந்த முதல் நாள் நினைவு மட்டும் நீங்காமல் மனதில் நின்று விட்டது. அதன் பின் நடந்தவைகள் அதிகம் நினைவில் இல்லை. மூன்றாம் வகுப்பில் கரும்பலகைக்குக் கருப்பு வண்ணம் ஏற்ற கண்டங்கத்திரி வேரை அரைத்து, சட்டையைக் கறையாக்கி வீட்டில் அடி வாங்கியது…. மதுரையில் நடந்த குத்துச் சண்டை வீரர்கள் எங்கள் வளாகத்திலிருந்த புனித மரியன்னைக் கோவிலுக்கு வந்த போது கோவில் ஜன்னல்கள் வழியே ஏறி எட்டிப்பார்த்தது … டென்னிஸ் பந்தை வைத்து ஆடிய கால்பந்து விளையாட்டுகள் …. என் முதல் நட்பு முறிந்து போனது … ஐந்தாம் வகுப்பில் ராஜாவுடன் ஏற்பட்ட தமிழ்ப் போட்டி  .... (எம் தமிழ்ப் பெருமை தெரிய இதைக் கட்டாயம் வாசித்துப் பாருங்கள்.) …. இவைகள் மட்டும் தான் நினைவில் இருக்கின்றன.

 புனித மரியன்னை ஆரம்பப்பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிக்க்கு வந்தாகி விட்டது. விட்ட குறை .. தொட்ட குறை என்பது போல் இங்கேயும் I Form ‘A’ Section-ல் சேர்ந்தாச்சு. எங்கள் பள்ளியில் எப்போதும் நல்லா படிக்கிற பசங்களை ‘A’ Section-ல் தான் சேர்ப்பார்கள். நான் அங்கு வாத்தியார் பையன் என்பதாலோ என்னவோ ஒன்றாம் வகுப்பிலிருந்து VI Form வரை ‘A’ Section தான். மற்ற படி என் படிப்பிற்காக இருந்திருக்காது என்று தான் நினைக்கிறேன். இந்த ‘Form’ என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. அந்தக் காலத்தில் S.S..L.C. இருந்த போது 1 – 5 வகுப்பு வரை Standard; 6லிருந்து 11 வரை Form என்று அழைக்கும் வழக்கம் இருந்தது.

 III Form வரை நடந்தவைகளில் இரண்டு விஷயங்கள் மனதில் வாழ்நாள் முழுமைக்கும் ஆழமாக நிலைத்து நின்று விட்டன. ஒன்று – ஆங்கில இலக்கணம் பயின்றது. அது பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.



இரண்டாவது – எனக்கு ஏற்பட்ட வாசிப்புப் பழக்கம். பள்ளி நூலகத்தில் இருந்த ஆசிரியர் அப்பாவுக்கு நண்பர். ஆனாலும் அப்பாவுக்குத் தெரியாமல் எனக்கு நிறைய தொடர்ந்து பல கதைப் புத்தகங்களைத் தருவார். அவரின் பெயர் ராயர். எங்கள் பள்ளியில் புத்தகம் எடுக்க நாங்கள் விரும்பும் நாலைந்து புத்தகங்களின் தலைப்புகளைத் தரவேண்டும். அதில் உள்ள புத்தகங்களில் இரு புத்தகங்களை நூலகர் தருவார். ஆனால் எனக்கு இந்த வழக்கம் கிடையாது. பள்ளி முடிந்தவுடன் போகாமல் சிறிது நேரம் கழித்து போக வேண்டும். எனக்குப் பிடித்தப் புத்தகங்களை நான் எடுத்துக் கொள்ளலாம்.

அப்பா ஒரு ஆசிரியர் என்றாலும் ஏனோ பாடப்புத்தகங்கள் தவிர வேறு புத்தகங்களைப் படிக்க என்னை அனுமதிப்பதில்லை. அது இன்று வரை எனக்கு ஒரு பெரும் புதிர் தான். ராயர் சாரிட,மும் புத்தகங்கள் கொடுக்க வேண்டாமென்று சொல்லி விட்டார். ஆனால் என்னவோ நான் தொடர்ந்து கேட்டதும் அவர் வழக்கம் போல் கதைப்புத்தகங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார். நூலகத்தின் அலமாரிகளில் அங்கிருந்த சிறு ஏணியில் ஏறி பிடித்த புத்தகம் எடுத்து வருவது இன்னும் நன்கு நினைவில் இருக்கிறது.


முதலில் வாசித்த புத்தகங்கள் தமிழ்வாணனின் சங்கர்லால் கதைகள் தான். நூலகத்தில் எடுக்கும் புத்தகங்கள்  புத்தகப் பை வழியாக வீட்டுக்குப் போய்விடும். புத்தகம் வைக்கும் அலமாரிக்குப் பக்கத்தில் வீட்டில் எப்போதும் சில அரிசி மூட்டைகள் இருக்கும். அதில் ஏதாவது ஒரு இடைவெளியைத் தேர்ந்தெடுத்து வைத்திருப்பேன். பையிலிருந்த புத்தகம் சரியான நேரத்தில் சாக்குமூடைகளுக்குள் போய்விடும்.

பொதுவாக வீட்டில் வைத்து புத்தகம் படிக்க நல்ல தருணம் கிடைக்காது. ஆனால் மண்டைக்குள் முடித்து வைத்த கதையின் கடைசிப் பகுதி  சிறகடிக்கும். அடுத்து என்ன என்பது பெரும் முடிச்சாக மனதுக்குள் நோகடிக்கும். அம்மா கடைக்குப் போகச் சொல்லும் நேரம் தான் சரியான வாய்ப்பாக இருக்கும். கடைக்குப் போகச் சொன்னதும் உடனே ஓடிப்போய் சட்டை எடுத்து மாட்டிக் கொள்வேன். அதே தருணத்தில் திருட்டுத் தனமாக சாக்குக்குள் இருக்கும் புத்தகம் சட்டைக்கும், கால்சட்டைக்கும் இடையில் போய் விடும். கால்சட்டைக்குள் திணித்து இடுப்பில் புத்தகத்திற்கு இருக்கை கிடைக்கும்.

வீட்டிலிருந்து சில வீடுகள் தாண்டியதும் ஒரு சந்து வழியாக அடுத்த சாலைக்குச் சென்றால் முதல் கடையாக அருணாசலம் அண்ணாச்சி கடை இருக்கும். அவர் கடையின் முன்னால் ஒரு சின்ன மரம் வளர்ந்து கொண்டிருந்தது. அண்ணாச்சி கடையில் எப்போதும் சில ஆட்களாவது இருப்பார்கள். நான் எங்கள் ரோட்டிலிருந்துஅந்த சந்து முனைக்கு வந்ததுமே புத்தகம் கைக்கு வந்து விடும். சந்தின் ஓரத்தில் நடந்து கொண்டே வாசித்துக் கொண்டு வருவேன்.அந்தச் சின்ன மரத்தடியில் கதை தொடரும். கூட்டம் குறைந்த பிறகு வாங்கலாம் என்று வாசித்துக் கொண்டிருப்பேன். ஆனால் அண்ணாச்சிக்கு அப்பாவிடம் மரியாதை. ஆகவே அவர் கொஞ்சம் நேரம் என்னை வாசிக்க விட்டு விட்டு அதன் பின் என்னப்பா வேணும் என்று கேட்பார். சொன்ன பட்டியலைப் போட்டுக் கொடுப்பார். அவருக்கும் அப்பாவின் கெடுபிடி தெரியும். ஆனாலும்  கொஞ்சம் டைம் கொடுத்த பிறகே என் பக்கம் வருவார். இப்போதும் எப்போதெல்லாம் அண்ணாச்சி கடைப் பக்கம் வண்டியில் செல்லும் போது கட்டாயமாக அந்தக் கடை இருந்த இடத்தைப் பார்த்து விட்டுச் செல்வேன். இப்போது அந்தக் கடை அங்கே இல்லை. அந்த மரமும் இல்லை. நினைவுகள் மட்டும் இன்னும் அங்கே உயிரோடு நிழலாடுகின்றன.

இப்படி ஆரம்பித்த ‘திருட்டுப் பழக்கம்’ ரொம்ப காலம் தொடர்ந்தது. எந்த ஆசிரியர் பிடிக்கிறதோ அவரின் எல்லா புத்தகங்களையும் வாசிக்கும் பழக்கமும் தொடர்ந்தது. வாசிப்பு தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிகளிலும் தொடர்ந்தது. கல்லூரி ஆசிரியர்களில் இரு மொழியிலும் வாசிக்கும் ஆசிரியர்கள் மிகக் குறைவே. அவர்களில் ஒருவனாக பல காலம் இருந்து வந்தேன்.

என்ன ஆச்சோ... எப்படி ஆச்சோ ... வாசிப்பு இப்போது நிறைய குறைந்து போனது. ஆனாலும் ஒரு வசதி .... பதிவுகளில் மதம் பற்றி எழுத ஆரம்பித்ததால் நிறைய நூல்களை வாசிக்கும் கட்டாயம் வந்தது(!!!). மற்ற வாசிப்புகள் மிகக் குறைந்த அளவில் போகிறது ..............








 *