*
அறுபது வருஷத்துக்கு முந்தின என் கதையைப் பற்றி பத்து வருஷத்துக்கு முந்தி எழுதியிருந்தேன். இப்போ இந்த
வருஷம் அதே மாதிரி இன்னொரு ஏமாற்றம். ஒரே சோகம்….. அந்த சோகத்தில முந்தி எழுதினதை எடுத்து வாசிச்சேன். அட
.. பரவாயில்லையேன்னு அதுக்கு வந்த பின்னூட்டங்களைப் பார்த்ததும் மனசில
தோணுச்சி …
சின்ன வயசில
போட்ட ஒரு நாடகத்தில நடிச்சி, நல்ல பேரு வாங்கி
…. அதப்பத்தியெல்லாம் எழுதிட்டு கடைசியா கொஞ்சம் விளையாட்டா
//நான் அப்டியே கொஞ்டம்
ட்ராக் மாறிட்டேன். மாறாம இருந்திருந்தா இன்னேரம் நானும் ஒரு பெரீரீரீரீய இஸ்டாரா
ஆயிருக்க மாட்டேனா?// அப்டின்னு என் முதல் star
weekல் எழுதியிருந்தேன். அப்போவெல்லாம் ப்ளாக்கர்கள்
எல்லாம் ரொம்ப ‘சொந்தமா .. நெருக்கமா’
இருப்பாங்கல்லா. அது மாதிரி இருந்த நண்பர்கள் நிறைய
பேர் என் ‘வருத்தம்’ போக நிறைய ஆறுதல் சொன்னாங்க.
சில உதாரணங்கள்...
//மகேந்திரனோட நண்டு பட சான்ஸை மிஸ் பண்ணவன் நான்// அப்டின்னு வெளிகண்ட நாதர்
அமெரிக்காவிலிருந்து தன் சோகம் சொன்னார்.
//இப்பகூட நாளாகலை
தருமி, நீங்க இன்னும் முயற்சி பண்ணலாம். அமிதாப் இன்னும்
நடிக்கலையா என்ன? // அப்டின்னு பத்மா அர்விந்த் சொன்னாங்க.
அடுத்து, மதுமிதா, //பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் தருமி. // என்று
சொன்னாங்க.
அடுத்து ramachandran
usha (November 6th, 2005) ஒரு ஐடியாவே கொடுத்தாங்க
..//தருமி மனம்தளர வேண்டாம். விளையாட்டுக்கு சொல்லவில்லை. சென்னை
போன்ற நகரங்களில் உள்ள பிரபல விளம்பர நிறுவனங்கள் எல்லா வயது ஆட்களையும் மாடலாய்
எடுக்கிறார்களாம். நீங்கள் முயற்சிக்கலாம். //
கட்டக் கடைசியில உஷா கொடுத்த ஐடியா
க்ளிக் ஆனது மாதிரி ஒண்ணு இப்போ
நடந்திச்சு. பழைய மாணவ-நண்பன் – தான்யராஜ், பழைய விஸ்காம்
மாணவன் - அவனிடமிருந்து ஒரு போன் வந்தது. சென்னையிலிருந்து பேசினான்.
சென்னைக்கு வருவீங்களா… வர்ரதுன்னா எப்போ வருவீங்க?
அப்டீன்னு கேட்டான். அவன் கேட்ட போது நான் இருந்ததே
சென்னையில் தான். சார் உங்களைப் பார்க்கணுமே… நான் சொல்ற இடத்துக்கு வர்ரீங்களான்னு கேட்டான். சரின்னேன்.
அடையாளம் கேட்டு டாக்ஸி அனுப்பினான். போன இடம்
பெரிய இடமாகவும் இருந்தது. என்னன்னு கேட்டேன். நடிக்க வர்ரீங்களான்னு கேட்டான்.
அட … போப்பா… தொப்பையும்
அதுவுமா இருக்கேன் அப்டின்னேன். அதெல்லாம் பொருத்தமா இருக்கும்
அப்டின்னான். என்ன ப்ரோஜக்ட் அப்டின்னும் சொன்னான். ஒரு சீரியல். தாத்தா வேடம். ஆனால் கம்பு ஊனாத கொஞ்சம்
energetic தாத்தா அப்டின்னான். நம்மளும் வாழ்க்கையில் துணிஞ்சி
நிக்கணும்லா. மூச்சை இழுத்துப் பிடிச்சிகிட்டு, நானும் துணிஞ்சி சரின்னு சொல்லிட்டேன். இன்னும் மூன்று
நாட்கள் சென்னையில் இருக்கும் ஏற்பாட்டோடு போயிருந்தேன். வேண்டுமானால் நீட்டித்துக் கொள்ளலாம் என நினைத்தேன்.
,
அவன் என்னிடம் படித்து சில வருஷம்
ஆகியிருந்தது.
அவன் சொன்ன கதைக்கு எப்படி என்னை ஞாபகம் வச்சிக் கூப்பிட்டான் எனக் கேட்டேன்.
அங்கும் நம் ப்ளாக் தான் வேலை செய்திருக்கிறது. நமது "பழைய" ப்ளாக்கர் ஒருவர்தான் இந்த சீரியலுக்கு வசன கர்த்தா. பெயர் வரவனையான்.
(நிறைய அருமையாக எழுதிக் கொண்டிருந்த ஆளு .. அம்புட்டு
நகைச் சுவை உண்டு. இப்போ ப்ளாக் பக்கமே வருவதில்லை.
சமூக ஊடகங்களில் மட்டும் எழுதுகிறார். ) அறுபது
எழுபது வயசில ஒரு ஆளு வேணுமேன்னு அவங்க டீம் யோசிச்ச போது வரவனை
என் பெயரைச் சொல்லியிருக்கிறார். (எம்புட்டு ஞாபக சக்தி!) தான்யா – அவன்
தான் இயக்குனர் - சரின்னு என்னைக் கூப்பிட்டிருக்கிறான்.
வாழ்க்கையில் ப்ளாக் நிறையவே உதவியிருக்கிறது!
வாழ்க்கையில் ப்ளாக் நிறையவே உதவியிருக்கிறது!
அடுத்த நாள் ஷூட்டிங் அப்டின்னான். காஸ்ட்யூம் என்னன்னு கேட்டேன்.
முதல் ஷெட்யூலில் வேஷ்டி, முழுக்கை பனியன் அப்டின்னான்.
பனியன் போடுற கெட்ட பழக்கமே கிடையாது. வேட்டி சுத்தமா
கிடையாது. அட .. என்னிடம் தான் இல்லையென்றால்
நம்ம மருமகன்களுக்கும் அந்தப் பழக்கம் கிடையாது. சொன்னேன்.
சரி வாங்க என்றான். அடுத்த நாள் அவனே புது காஸ்ட்யூம்
ரெடி செய்து விடுவதாகச் சொன்னான். இரண்டாவது ஷெட்யூலுக்கு வழக்கமான
உடை. டி-ஷர்ட் என்றான். அதுக்குப் பஞ்சமில்லை. காலையில் வீட்டுக்கு வந்து அழைத்துப்
போகிறேன் என்றான்.
முதல் ஷெட்யூல் ஒரு வீட்டில். வேறு ஏதோ ஒரு சீரியலுக்காக வாடகைக்கு எடுத்த வீடு. புதிதாக
இவர்களும் சில “props” (எப்பூடி…! நாங்களும்
அவுக professional slang எல்லாம் use பண்றோம்ல…)
சேர்த்துக்கிட்டாங்க. சுவத்தில இருக்கும் சின்ன
படம் கூட வாடகைக்கு வருகிறது. காமிரா, ஸ்டாண்ட் எல்லாம் ஒரு பக்கம் இருந்தும், லைட் வகையறாக்கள்
இன்னொரு இடத்திலிருந்தும் வரும் போலும். என் பார்வைக்கு எல்லாமும் புதியதாக இருந்தது. ஓ!
இப்படித்தானோ என்று பல விஷயங்கள் தோன்றின. அதற்குப்
பிறகு இப்போவெல்லாம் சினிமா, சீரியல் பார்க்கும் போது படத்தை இப்படித்தான் எடுத்திருப்பார்களோ
என்று technical-ஆக
தோன்ற ஆரம்பித்து விட்டன. முன்பெல்லாம்
இரண்டு பேர் பேசும் போது அதை ஒரே sequence என்பது போல் தோன்றும்.
இப்போதெல்லாம் எல்லாம் துண்டு துண்டாகத் தெரிகிறது. வெற்றுவெளியைக்கூட எதிரில் வைத்து இன்னொருவரிடம் பேசுவது போல் நடிப்பார்கள் என்ற எண்ணம் தோன்றுகிறது.
அட …lip synch ஆகுதான்னு கூட மனசு பார்க்கச் சொல்லுது.
நானும் என் ‘பேத்தி’யும் நடிக்கணும். அவர் ஒரு RJ. ஏற்கெனவே
நடித்திருப்பார் போலும். என்னைப் போல் அவர் காமிராவிற்குப் ‘பயப்படவில்லை’. அவர் வசனத்தை அவர் பேசும் போது நான் frameல் இல்லாவிட்டாலும் பயங்கரமாக சாதாரணமாக நம் வாழ்க்கையில்
இருப்பது போல் அவர் பேசுவதைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். ஆனால்
நான் மட்டும் frameல் இருக்கும் போது அவர் என்னைப் பார்க்காமல்
casualஆக ஏதாவது செய்து கொன்டு இருப்பார். எனக்கு அது புரிந்து விட்டாலும்
அந்த atmos பிடிக்கவில்லை. அதனால் அவரிடம்
நான் பேசும் போது என்னைப் பார்த்துக் கொண்டிருங்க என்று கேட்டுக் கொண்டேன்.
அதாவது எதிரில் இல்லாத ஒன்றை இருப்பது போல் கற்பித்துக் கொண்டு நடிக்க
வரவில்லை. அவரைப் பார்த்துக் கொண்டே பேச வேண்டிய கட்டாயம் எனக்கு.
ரொம்ப டேக்குகள் வாங்கவில்லை. ஒரு வேளை trial run மாதிரி இருந்திருக்குமோன்னு நினச்சேன்.
இப்போது நான்கைந்து ஆட்கள் மட்டும் சுற்றி நின்றார்கள். கூட்டம் அதிகம் இல்லை. முதல் ஷெட்யூல் முடிந்தது. கொஞ்சம் தெளிச்சியானது மாதிரி
எனக்குத் தோன்ற ஆரம்பித்தது. இதே ஷெட்யூலை மறுபடி எடுத்தால் இன்னும் பின்னி
விடலாம் அப்டின்னு தோன்றியது.
ஆனால் மதியம் இரண்டாம் ஷெட்யூல். இதில் நான் மட்டும் காமிராவிற்கு எதிரில். ஆனால் என்னைச் சுற்றி நிறைய ஆட்கள் – எல்லாம் ஒரு ambience வேண்டுமென்பதற்காக. ஒரு coffee shop situation. சுற்றி நிறைய பேர் இருந்தார்களா … கொஞ்சம் கை கால் உதறல். எப்படியோ ஒப்பேற்றினேன். இரண்டாம் ஷெட்யூல் முடிந்தது. இதற்கு dubbing நாளைக்கு என்றார்கள். அது ரொம்ப கஷ்டம் என்று எனக்குள் ஒரு நினைப்பு.
வீட்டிற்கு வந்து படுத்தால்
ஒரே கனவு.
அட … போங்கய்யா… கனவுல தான பாதி வாழ்க்கை எப்பவுமே போகுது!
மைக் முன்னால் என்னை உட்காரவைத்து வசனம் சொல்லணும் – நம்ம சீனும் கண் முன்னால் ஓடும். Dubbing monitor சில இடங்களில் நடிப்பை விட வாய்ஸ் நல்லா கொடுக்குறீங்க அப்டின்னார். ஒரு வேளை தட்டிக் கொடுத்து வேலை வாங்க அப்படி சொல்லியிருப்பாரோன்னு நினச்சேன்.
இந்த dubbingல எனக்கு ஒரு சின்னப் பிரச்சனை.
உட்கார்ந்து கொண்டு அந்த வசனங்களைப் பேசச் சொன்னார். ஏறக்குறைய எல்லாம் முடிந்த போது
ஒரு சின்ன ஐடியா வந்தது. நின்று கொண்டு பேசியிருந்தால் இதை விட நன்றாக குரலில் emote
பண்ண முடியும்னு தோன்றியது. அவரிடம் சொன்னேன். அடுத்த தடவை அப்படி செய்யலாம் என்றார்
– அடுத்த தடவை என்பதே இல்லாமல் போய்விடும் என்பது தெரியாதவராக …. L
கொஞ்ச நாள் காத்திருக்கணும் என்றான் இயக்குனர். தலைவர் பார்த்து சரின்னு சொன்ன பின் தொடரலாம் என்றான். சில நாளில் செய்தி வந்தது. தலைவரும் ஓகே சொல்லிட்டாராம்.
ஆனால் கொஞ்ச நாளில் இன்னொரு செய்தி; தொடரவில்லைன்னு செய்தி வந்தது. நம்ம ப்ளாக் நண்பர் வரவனையான் இந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்குப் போய் விட்டாராம். அதனாலோ என்னவோ project dropped!
பல கனவுகள் போல் இதுவும் ஒரு கனவு…..
ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது. காமிராவிற்குப்
பின்னாலேயே நிற்பது பழகிப் போன விஷயம். புதிதாக முன்னாலும் நின்று “நடித்து” ஒரு அனுபவம்
பெற்றது ஒரு சின்ன மகிழ்ச்சி.
இப்படி காமிரா முன்னால் நின்னதை யாரிடமும்
சொல்லவில்லை. மனசுக்குள் ஒரு பயம். முதலில் என் நடிப்புக்கு பாஸ் சரி சொல்லுவாரா …? அடுத்து,
இந்த சீரியல் – தமிழ்நாட்டில் ஒரு புது முதல் முயற்சி என்றான் இயக்குனர் –தொடர்ந்து
எடுக்க சரி சொல்வார்களா என்ற கேள்வியும் இருந்தது. இப்படிப் பல குழப்பங்கள். அதனால் வெளியே சொல்ல
வேண்டாமென்று யாரிடமும் சொல்லவில்லை. வீட்டுக்கு மட்டும் தெரியும். இல்லையென்றானதும்
செய்தியை குடும்பத்தில் ஒலிபரப்பியாகிற்று. ஆனாலும் பிறகு போட்டோக்களைப் பார்த்த்தும்,
சரி இதை இனி உலகத்திற்கே ஒளிபரப்பி விடுவோம் என நினைத்தேன். நண்பர்களிடம் கேட்டேன்.
எழுதிக் கொள்ளுங்கள் என்றார்கள். அதனால் தான் – ஒரு டயலாக் மாதிரி சொல்லிர்ரேன் – உங்கள்
எல்லோரிடமும் என் வாழ்வின் ஓரு பெரும் சோகத்தையும், ஏமாற்றத்தையும் இப்போது உரித்து உங்கள்
முன் கொட்டி விட்டேன் .. L
சீரியலில் நடிக்கப் போகிறேன் என்று சொல்லி
மிச்சமானது கொஞ்சம் போட்டோக்கள் மட்டும் தான். அவை கைக்கு வந்த பிறகு தான் “இந்த உண்மையை உலகத்தின் முன் உடைத்து விடுவோம்”
என்று தோன்றியது. கொட்டி விட்டேன்.
இதில் இன்னொரு சந்தோஷமான விஷயம். இந்த
creativity மதுரக்காரங்க கிட்ட கொட்டி குவிஞ்சி கிடக்கோ… இந்த சீரியல் அனுபவத்தில்
நான் சந்தித்த பலரும் மதுரைக்காரர்கள். இயக்குனர், கதாசிரியர், dubbing monitor,
photographer என்று மட்டுமல்ல அதன் பின் இதன் தொடர்பாக நான் சந்தித்த முக்கிய நபர்களில்
பலரும் எங்க ஊர்க்காரர்கள் தான். அந்த விதத்தில் மிக்க மகிழ்ச்சி.
*
பதினோரு வருஷத்திற்கு முன் என் நாடக அனுப்வத்தை
எழுதிய போது அனுபவித்து நன்றாக எழுதியது போன்று ஒரு நினைப்பு. ஆனால் இந்த சீரியலைப்
பற்றி எழுதணும்னு நினச்சி ரொம்ப நாளாச்சு. ‘mood’ வரவே மாட்டேன்னு சொல்லிரிச்சு. இப்போ
எழுதினதை வாசிக்கும் போது எனக்கே ஒரே dryயாக இருப்பது போல் தோன்றுகிறது. ஏன் இப்படி
ஆகிப் போச்சு?
I know I should improve …but how?
தெரியலையே!!!
*