*
*
தொடர் பதிவுகள்:
1 ...... 2 ..... 3 ..... 4.......... 5..............
6 ........... 7..................
*
காஞ்சா அய்லய்யா
*
முனைவர் காஞ்சா அய்லய்யா உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் கற்பிக்கும் பேராசிரியர். ’தலித் பகுஜன்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி தலித் - மற்றும் பெரும்பான்மை மக்களுக்கும் இந்து மதத்திற்கும் உள்ள தொடர்பையோ, தொடர்பின்மையையோ இந்த நூலில் விளக்குகிறார். ‘இந்தியாவை இந்து மயமாக்குவோம்’ என்ற ஒரு புது முழக்கத்தோடு கடந்த சில ஆண்டுகளாக நம் நாட்டில் நடக்கும் முயற்சிக்களுக்கு எதிராக அறிவுத் தளத்தில் மேற்கொள்ளப்படும் முயற்சியே இந்த நூல்.
மதங்களை மறுப்பவன் என்ற முறையில் இந்த நூல் எனக்கு அதிகம் பயனளிப்பதில்லை. ஆயினும் மதங்கள் எப்படி ஒர் சமூகத்தை அடிமைப்படுத்தி, அதனை பல வடிவங்களில் காலப்போக்கில் மாற்றுகின்றன என்ற உண்மையை காஞ்சா இந்நூலில் கூறியதால் இந்து மதத்திற்கே எதிராக இக்கருத்துகள் எனக்குப் பயன்படும் என்பதால் இந்த நூலில் உள்ள முக்கிய கருத்துக்களை இங்கே கொடுக்க விரும்புகிறேன்.
இந்நூலுக்கு அ. மார்க்ஸ் அறிமுகம் அளித்துள்ளார். அவரது பல கருத்துக்கள் தமிழ்ச்சமுதாயத்தோடு ஒட்டியிருப்பதால் அதிலிருந்தும் சில பகுதிகளைத் தொகுத்துள்ளேன்.
**************************
அறிமுகம் - அ. மார்க்ஸ்
ரஸ்ஸல் தன்னைக் கிறிஸ்துவன் அல்ல என அறிவித்துக் கொண்டார். அய்லய்யாவோ தனது பிறப்பே இந்து மதத்திற்குள் நிகழவில்லை என்கிறார்.(9)
’பகுஜன்’ என்னும் அடையாளம் எண்பதுகளின் மத்தியில் கன்ஷிராம் அவர்களால் முன்னிறுத்தப்பட்டது. சூத்திர சாதியினரையும், பல்வேறு தலித் சாதியினரையும்’தலித் பகுஜன்கள்’ என அழைக்கின்றார் அல்லய்யா.(11)
இந்துக் கடவுளின் ஆயுதந்தாங்கிய வன்முறையின் தோற்றத்தை வெகுமக்கள் வழிபடும் சிறு தெய்வங்களோடு ஒப்பிடும் அல்லய்யா இந்துக் கடவுளர் கையில் ஏந்திய விற்களும், சக்கரங்களும் வெகு ஜனங்களை ஒடுக்கி அவர்களை இந்து மதப்படுத்தும் நோக்கிற்காகத்தான் என விளக்குகிறார். அவதாரக் கதைகளெல்லாம் அப்படிதான். வாமன அவதாரம் வெகுமக்கள் தலைவனகிய பாலி மன்னனை (மகாபலி)க் கொன்றொழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது. இராமயணக் கதையே தென்னிந்தியரைப் பார்ப்பனமயமாக்கிய கதைதான். (12)
தலித் பகுஜன்கள் மத்தியில் தனிச்சொத்து என்கிற கண்ணோட்டமே இல்லை என்பது அல்லய்யாவின் முன்வைக்கும் கருத்து. .... தமிழகத்தில் வசித்து வந்த ஆதிப் பழங்குடி மக்களிடையே இருந்த இந்தப் பொதுமைப் பண்பை அழித்த திருப்பணியைச் செய்து முடித்தது பார்ப்பனீயம். ... அம்மக்களின் நிலங்களைத் தனிச்சொத்துகளாக்கிப் பார்ப்பன, வேளாளக் குடும்பங்களுக்கோ கோயில்களுக்கோ தாரை வார்த்தது தான். பார்ப்பனர்களுக்கு இவ்வாறு வழங்கப்பட்ட நிலத்தைப் ’பிரம்மதேயம்’ அல்லது ‘சதுர்வேதி மங்கலம்; என்பர். தம் நிலங்களில் தங்கி உழைத்து அதன் விளை பொருடளில் பெரும் பகுதியை இத்தகைய ப்பர்ர்பன வேளாள உரிமையாளர்களுக்கு மேல்வாரமாக அளித்து, எஞ்சிய கொஞ்ச நஞ்சத்தைக் கீழ்வாரமாக அனுபவித்து, வறுமையில் உழல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாயினர் இந்த மண்ணின் மைந்தர்கள்.(13)
தமிழக வரலாற்றின் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகிய
வேள்விக்குடிச் செப்பேடும் (கி.பி.6-ம் நூ.) இதனைத் தெளிவாகச் சொல்கிறது.
செப்பேட்டில் வரும் கதை: நெடுஞ்சடையன் என்ற பாண்டிய மன்னனிடம் கொற்கைக் கிழான் நற்சிங்கன் என்ற பார்ப்பனன் தன் முன்னோரு ஒருவர் செய்த யாகத்திற்காகக் கிடைத்த வேள்விக்குடி என்ற ஊரை அதன் பின் வந்த களப்பிரர் ஆட்சிக்காலத்தில் இழந்து விட்டதாகவும், அதனைத் திருப்பித் தரவேண்டுமென்ற வேண்டுகோளோடு வந்தான். பாண்டிய மன்னனும் வேள்விக்குடியைத் திரும்பத் தந்து விடுகிறான்.
இச்செப்பேட்டில் நான் காணவேண்டியவைகள் இவை:
பாண்டிய மன்னனின் வம்சப் பெருமையாக -- பரவரைப் பாழ்படுத்தியது; குறுநாட்டவர் குலங் கெடுத்தது; செந்நிலங்களைச் செறு வென்றது; துலாபாரம், இரண்ய கர்ப்பம் முதலான இந்து யாகங்களைச் செய்தது; பார்ப்பனருக்கு ஈந்தளித்தது; மகீதலம் பொது நீக்கி அரசாண்டது; பரவர், குறுநாட்டவர் முதலான பழங்குடி மக்களைப் பாழ்படுத்திக் குலங்கெடுத்து அவர்களது செந்நிலங்களைக் கைப்பற்றி, யாகம் செய்த பார்ப்பனர்களுக்கு ஈந்தளித்தது .... (14)
இவ்வாறு பொதுத்த்தன்மை அழிக்கப்பட்டு தனிவுடைமையை தமிழ்நாட்டு மன்னர்கள் நிலைநாட்டியது; முன்பு தாரை வார்க்கப்பட்ட நிலங்கள் களப்பிரர் காலத்தில் மீண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.
களப்பிரர் காலத்தை, சோழர் காலம் குறித்து ஆய்வுகள் நடத்திய வரலாற்றாசிரியர் பர்ட்டன் ஸ்டெய்ன் மீண்டும் பழங்குடியினர் மேலெழுந்து ஆட்சியைக் கைப்பற்றிய காலம் என்று கூறுகிறார். இதனை இன்றுவரை பார்ப்பன வேளாள வரலாற்றாசிரியர்கள் இருண்ட காலம் எனத் தூற்றி வந்துள்ளனர்.(15)
காலனிய ஆட்சியை எதிர்த்த இந்து மேல்சாதியினர் இரட்டை நிலையை எடுத்தனர்; ஒரு பக்கம் நவீன நிறுவனங்களைத் தங்களின் நலனுக்குப் பயன்படுத்திக் கொள்ளுதல். இன்னொரு பக்கம் காலனியத்திற்கு எதிராக இந்துத்துவத்தைக் காப்பது என்கிற நிலை எடுத்து, நவீனத்துவத்தின் இன்றியமையாத கூறாகிய மதநீக்கம், பகுத்தறிவாக்கம் என்பவற்றைத் தடுத்து நிறுத்தினர்..(16)
காலனியத்திற்குப் பிந்திய நிறுவனங்களெல்லாம் மதக் கறைபடிந்து போயுள்ளன எனச் சொல்லும் அல்லய்யா பள்ளிக்கூடமும் கல்வியும் எப்படி இந்துத் தன்மையாக உள்ளதென்பதையும், வெகுமக்களின் குழந்தைகள் எவ்வாறு இதிலிருந்து அன்னியப்பட வேண்டியதுள்ளது என்பதையும் விரிவாக விளக்குகிறார்.... சாதியப் பயிற்சியே இங்கு அளிக்கப்படுகிறது. சாதி மொழியே இதற்குக் கையாளப்படுகிறது என்கிறார் அல்லய்யா.(17)
பாடநூற்களில் எங்காவது விளிம்பு நிலை மனிதர்களின் பண்பாடுகள் பேசப்பட்டதுண்டா? ... ஏன் எங்களுக்குக் கதையாடல்கள் கிடையாதா? பெருங்கதையாடல்களுக்கு மட்டும்தான் உங்கள் பாட நூற்களில் இடமுண்டா? அல்லய்யாவின் இந்தக் கேள்விகள் தமிழ்ச்சூழலுக்கு அப்படியே பொருந்தும் என்பதில் அய்யமில்லை. (18)
தரப்படுத்துதல் என்கிற பெயரில் மய்யங்களில் வீற்றிருந்து ஆட்சி செலுத்தக் கூடியவர்கள் தமது பண்பாட்டுக் கூறுகளை விளிம்பு நிலையினர் மீது திணிக்கும் ஆபத்தையும் அய்லய்யா சுட்டிக் காட்டுகிறார். ‘பிராமண போஜன ஓட்டல்கள்’ என்கிற பெயரில் பார்ப்பன உணவையும், சுவையையும் பொதுமைப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியை அவர் அடையாளம் காட்டுகிறார். சுவை, விருப்பு ஆகிய தளங்களிலும் வெகுமக்களைக் கட்டுப்படுத்த நினைக்கும் ஒரு அரசியல் முயற்சியாக நாம் இதனை அணுக வேண்டி இருக்கிறது.(19)
இந்து மயப்பாட்டிற்கு எதிராக தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிறப்டுத்தப்பட்டோர், சிறு பான்மையினர் ஆகியோரின் அய்க்கிய முன்னணி மட்டுமே நமது ஒரே நம்பிக்கையாக உள்ளது என்று முடிக்கிறார் அய்லய்யா.
ஏனிந்த நூல் - அய்லய்யா
திடீரென்று தொண்ணூறுகளில் இந்தியாவில் இருக்கிற முஸ்லீம்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள் அல்லாத எல்லோரும் இந்துக்கள் என்ற பொருளில் இந்துத்வா என்ற வார்த்தை நமது காதுகளில் ஒலித்தது.
உண்மையில் இவர்கள் முன் வைக்கிற இந்தக் குங்குமப் பொட்டுக் கலாச்சாரத்தின் தோற்றமே எங்களை அலைக்கழிப்பதாய் உள்ளது. (23)
இந்திய தலித் பகுஜன்கள் அத்தனை பேரும் இளமையிலிருந்தே கலாச்சாரத்தின் பெயராலோ ஒரு மதம் என்கிற அடிப்படையிலோ இந்து என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டதேயில்லை. முஸ்லீம்கள், கிறித்துவர்கள், பார்ப்பனர்கள், பனியாக்கள் இவர்களிலிருந்து நாங்கள் வேறுபட்டவர்கள் என்று சொல்ல மட்டும் கேட்டிருக்கிறோம். இந்த நான்கு வகைகளில் பார்ப்பானும், பனியாவுமே முற்றிலும் வேறுபாடானவர்கள்.
தலித் பகுஜன்கள் முற்றிலுமாக இந்துக் கலாச்சாரத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர் .(25)
....... தொடரும்
=============================================================
என் வார்த்தைகள் சில:
// பிராமணத் தமிழ் அன்றும் இன்றும் ஊடகங்களில் ஓங்கி ஒலிக்கிறது.
வரும் விளம்பரங்களில் அறுபது எழுபது விழுக்காட்டில் பிராமணத் தமிழ்
ஒலிக்கிறது. காரணம் புரியவில்லை. இதெல்லாம் விளம்பரப் படம் எடுப்பவர்கள்
செய்யும் கோமாளித் தனமா? இல்லை விளம்பரதாரர்களின் ‘புத்திசாலித்தனமா’? இந்த மொழியைப் பயன்படுத்துவதால் எதிர்ப்புகள் ஏதும் இருக்காது என்று விளம்பரதாரர்கள் ஏன் நினைப்பதில்லை?//
காரணம் புரியவில்லை - என்று கூறியுள்ளேன். ஆனால் இப்பதிவில் இறுதியாக சிகப்பு வண்ணத்தில் வரும் பத்திகள் இதைப் பற்றியே பேசுகின்றன. இது வெளியே பேசப்படாத ஒரு அரசியலாக இருந்து வருகிறது. இது ஒரு மெளனமான சாதி ஆக்கிரமிப்பு அரசியலோ?
சுவை, விருப்பு ஆகிய தளங்களிலும் வெகுமக்களைக் கட்டுப்படுத்த நினைக்கும் ஒரு அரசியல் முயற்சியாக நாம் இதனை அணுக வேண்டி இருக்கிறது. இதுதான் அந்தக் காரணமா...?
நம் தொலைக்காட்சிகளில் சில நிகழ்வுகள்:
சமையல் போட்டி ... கறியும், கோழியும் கருவாடும் கூட சமைக்க வேண்டுமாம். ஆனால் மூன்று ஜட்ஜ்களில் இருவர் அதைத் தொடவும் மாட்டார்களாம்.
பாட்டுப் போட்டி ... சிறுவயதிலிருந்தே சில மக்கள் கர்நாடக சங்கீதம்
கற்பார்கள்; ஆனால் நீங்கள் எப்படி இஸ்லாமியராக இருந்தும் நன்றாகப்
பாடுகிறீர்கள் என்று ரிஸ்வானைப் பார்த்து ஒரு கேள்வியை நடத்துனர் க.கா.பா.கேட்டார்.
ரொம்ப நியாயமான கேள்விதான்!
பாட்டுப் போட்டி ... தெய்வீகப்பாடல்கள் என்று ஒரு பிரிவு; பாவம் .. இதில் அல்கேட்ஸ், ரிஸ்வான், ரமேஷ் போன்ற முறையான சங்கீதம் - அது என்ன முறையான சங்கீதம என்றாலே கர்நாடக இசைதானா என்பதும் ஒரு கேள்வி - கற்காத இவர்களைத் தோல்வி தருவதற்கே இப்போட்டிகளோ? சூப்பர் சிங்கர் தானே... சூப்பர் கர்நாடக சிங்கரா இது?
யார் கேள்வி கேட்பது இவைகளை?
பாட்டுப் போட்டி ... பாட்டு பாடவே பிறவி எடுத்த குழந்தைகள் பாட வருதுகள். அதோடு வேறு சில அபிஷ்டுகளும் போட்டிக்கு வந்திட்டாங்க. நடுவர்களிலும் ‘எல்லோரும்’ இருக்கலாமே?
எங்கள் கல்லூரி போட்டிகளில் எங்கள் மாணவர்கள் இருந்தால் நாங்கள் நீதிபதிகளாக இருப்பதில்லை என்பது போல் இங்கும் ‘பொதுவான’ நடுவர்கள் இருக்கலாமே! அல்லது இசை தெரிந்த ‘பொதுவானவர்கள்’ என்று யாருமேயில்லையோ?
பிராமணர் அல்லாதவர் பலர் பரிசுகளைப் பாட்டுப் போட்டியில் வாங்கினார்கள். என்றாலும் ...
இதெல்லாமே நான் சொன்ன மெளனமான சாதி ஆக்கிரமிப்பு அரசியலோ?
இதையெல்லாம் கண்டுகொள்ள வேண்டுமா ... கூடாதா?
எனக்குத் தெரியவில்லை; சொல்லிக் கொடுங்கள்.
மேலே எழுதியவைகளை எழுத மனம் சிறிது கூசியது. casteist என்ற பழி வந்து சேருமே என்றும் தோன்றுகிறது. ஆனாலும் ...I want to call a spade a spade ! Just belling the cat !!
============================