Showing posts with label 2-ம் நட்சத்திரப் பதிவுகள். Show all posts
Showing posts with label 2-ம் நட்சத்திரப் பதிவுகள். Show all posts

Sunday, November 23, 2008

285. மங்களம் ... மங்களம் ...

*

*

துணிந்து இரண்டாம் முறையாக என்னை நட்சத்திரமாகத் தேர்ந்தெடுத்த தமிழ்மண பொறுப்பாளர்களுக்கு என் நன்றி.

வரலாறு காணா வரவேற்பளித்த நண்பர்களுக்கு நன்றி.

அப்பாடா வாரம் முடிந்தது என்று பெருமூச்சு விடும் நண்பர்களுக்கும் நன்றி.

இந்த வாரத்தில் ரொம்பவும் திட்டாமல் இருந்த தங்கமணிக்கு நன்றி.


மீண்டும் வழமை போல் வராமலா போய்விடப் போகிறேன் என்ற பயமுறுத்தலோடு விடைபெறுகிறேன்.





*

284. ஒரு நிகழ்வு - ஒரு செய்திப்படம் - ஒரு நூல் .. 3

*


*
ஒரு நிகழ்வு - ஒரு செய்திப்படம் - ஒரு நூல்... 1

ஒரு நிகழ்வு - ஒரு செய்திப்படம் - ஒரு நூல்... 2

ஒரு நூல்

முந்திய பதிவுகள்; 1 .... 2

இத்தொடர் பதிவுகளின் முதல் பதிவில் பெரும்பான்மையான இந்து மக்களின் மத நம்பிக்கைகளுக்காக இஸ்லாமியர்கள் விட்டுக் கொடுத்திருக்கலாமே என்று நான் நினைத்ததைச் சொல்லியிருந்தேன்.

இரண்டாவது பதிவில் ஆனந்த் பட்வர்த்தனின் செய்திப் படத்தின் மூலம் ஆதிக்க சாதியினர் சிலரின் உந்துதலாலேயே இந்நிகழ்வு நடந்தேயன்றி பெரும்பான்மையான இந்துக்கள் மசூதியை இடிப்பதை விரும்பாதவர்களே என்று அறிந்து கொண்டேன்.

மூன்றாவது பதிவில் இதையெல்லாம் புரட்டிப் போட்டது காஞ்சா அய்லய்யாவின் நான் ஏன் இந்து அல்ல என்ற புத்தகம். அந்தப் புத்தகத்தில் நான் கண்ட செய்திகளைப் பகிர்வதே இப்பதிவு.

சண்டாளர்கள் -- மிலேச்சர்கள் -- தீண்டத்தகாதவர்கள் -- ஹரிஜன்கள் -- சூத்திரர்கள் -- ஆதி சூத்திரர்கள் -- அட்டவணை சாதியினர் -- ஒடுக்கப் பட்ட சாதியினர் (அம்பேத்கார்) -- இறுதியாக, தலித்துகள்

தாழ்த்தப்பட்ட குடியினருக்குத்தான் எத்தனை எத்தனை பெயர் மாற்றங்கள். பெயரை மாற்றி வைத்தாவது ஒரு 'மரியாதையை' பெயரளவிலாவது கொடுத்த விட முடியுமா என்றுதான் பலரும் பல கால கட்டங்களில் முயன்றார்கள். இந்த முயற்சிகளில் தாழ்த்தப்பட்டோரையும், பிற்படுத்தப் பட்டோரையும் ஒன்று சேரவிடாது தனித்து நிற்க வைக்கும் முயற்சிகளைப் பற்றியும் அய்லய்யா குறிப்பிடுகிறார். இந்த முயற்சியின் முழுவெற்றிதான் இன்று தலித்துகளும், தேவர்களும், தலித்துகளும் வன்னியர்களூம் அது சட்டக் கல்லூரியாக இருக்கட்டும், பஞ்சாயத்துத் தேர்தல்களாக இருக்கட்டும், கோவில்விழாக்களாக இருக்கட்டும் தமிழகமெங்கும் அடித்துக் கொண்டு நிற்கிறார்கள்.

இதைத்தான் அய்லய்யா "பல சமூகவியல் அறிஞர்கள் அட்டவணை சாதியினர்க்கு வெளியில் இருப்பவர்களைச் சாதி இந்துக்கள் என்று குறிப்பிட்டார்கள். இந்தச் சொல்லாக்கத்தில் பிற்பட்டவர்களையும் இணைக்கிற தந்திரம் உள்ளது. அன்றாட வாழ்க்கையில் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரும் தாழ்த்தப்பட்ட சாதியினரைப் போல்வே மேல்சாதியினரால் ஒடுக்கப் பட்டவர்களாகவே உள்ளனர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இந்து அமைப்பிற்கு உட்பட்டவர்களாக இருந்த போதிலும், அங்கே சமத்துவமில்லை. எனவே சாதி இந்து என்கிற சொல்லையும் நான் நிராகரிக்கிறேன்" என்கிறார்.(pp29)

இந்த நிலையை மாற்ற 1984-ல் திரு. கன்ஷிராம் பகுஜன் சமாஜ் கட்சியினைத் தோற்றுவித்தார். 'பகுஜன்' என்றால் பெரும்பான்மை என்று பொருள். தலித் என்று ஒரு சாராரைத் தனிமைப் படுத்தாமல் பகுஜன் என்பது அட்டவணை சாதியினர், மலைவாழ் மக்கள் இவர்களோடு பிற்படுத்தப்பட்டோரையும் இணைக்கும் விதமாக பகுஜன் - பெரும்பான்மை மக்கள் - என்ற சொல்லாடலைப் பயன்படுத்த ஆரம்பித்தார். எனக்கு இது மிகப் பொருத்தமாகத் தோன்றினாலும் அய்லய்யா தலித்-பகுஜன் என்றே தன் நூலில் பயன்படுத்துகிறார்.

சாதி அடையாளங்களோடுதான் ஒவ்வொரு இந்தியனும் பிறக்கிறான். ஆனால் கல்வியறிவு இல்லாமல் ஏழ்மையில் வாழும் மக்கள் "ஏதாவது ஒரு கடவுளை வணங்கும், ஆலயங்களுக்குச் செல்லும், மத சம்பந்தமான திருவிழாக்களில் கலந்து கொள்ளும் மக்களோடு மக்களாக வாழ்கின்ற போதுதான், அந்த மக்கள் ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் ஆகிறார்கள்". (pp33) சாதி பிறப்போடு ஒட்டி வருகிறது; மதம் வாழ்வியலோடு ஒட்டி வருகிறது.

ப்ராமணீய இந்து மதத்திற்கும் பகுஜன்களின் - அதாவது பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் - மத வழக்கங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லாதிருந்ததை, இன்றும் இல்லாதிருப்பதைக் காண முடியும். பின் எப்படி பகுஜன்கள் இந்து மதத்திற்குள் இழுக்கப்பட்டார்கள் அல்லது திணிக்கப்பட்டார்கள்? ஆங்கிலேயர் காலத்தில் நடந்த மக்கட் கணக்கெடுப்பில் இஸ்லாமியர், கிறித்துவர், பார்சிகள், சீக்கியர்கள், புத்தர்கள் என்ற எந்த மதங்களுக்குள்ளும் வராத அனைவருமே இந்துக்கள் என்ற அமைப்புக்குள் திணிக்கப்பட்டார்கள். பகுஜன்களின் மதங்கள் பெரும்பாலும் தம் முன்னோர்களை, சிறு தெய்வங்களைக் கும்பிடும் வழக்கம். அய்லய்யா சொல்வது போல் "நாங்கள் பள்ளிக்குச் செல்கிற வரையில் எங்களுக்கு பிரம்மா, விஷ்ணு, ஈஸ்வரன் ஆகியன பற்றி எதுவுமே தெரியாது. நாங்கள் முதன் முறையாக அவைகளைப் பற்றிக் கேட்டவுடன் அவைகள் எங்களுக்கு அல்லா, இயேசு போன்று புதியதாகத் தோன்றின. புத்தர் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. பிறகுதான் புத்தர் என்பவர் பார்ப்பனர்களுடைய யாகம், பலியிடல் போன்ற சடங்குகளுக்கு எதிராக தலித் பகுஜன்களைத் திரட்டியவர் என்று அறிந்தோம்"(pp40). "எங்கள் வீடுகளில் ஒரு பண்பாடும் பள்ளிகளில் வேறொரு பண்பாடும் இருந்தன"(pp49).

இந்த நூலை வாசித்த பிறகு இந்துக்கள் என்பவர்களே ஒரு சிறுபான்மையர், தலித்-பகுஜன்களே பெரும்பான்மை மக்கள் என்ற முடிவுக்கு வந்தேன். ஆனாலும் இந்தச் சிறுபான்மையர் பெரும்பான்மை மக்களையும் இந்துக்கள் என்ற ஒரு குடைக்கீழ் கொண்டுவந்தது மட்டுமின்றி இந்தக் கட்டுக்கோப்பை சிதையாமல் எடுத்துச் சென்று வருகிறார்கள் என்று புரிந்து கொண்டேன்.

பாபர் மசூதி விவகாரத்திலும் இதைத்தான் ஆனந்த் பட்வர்த்தன் தெளிவாக சில கேள்விகளை கர் சேவாக்களின் முன் வைத்து தெளிவாக்கியுள்ளார். கையில் கட்டையும் திரிசூலமும் ஏந்தி செல்வோர்கள் பலரிடம் கேட்ட கேள்விகள் இந்த உண்மையைத்தான் உரைத்தன. இந்த கட்டுக்கோப்பை மதம் வளர, நாடு முன்னேற பயன்படுத்தினால் மகிழ்ச்சியே. ஆனால் மேடையிலிருந்தும், ரதத்திலிருந்தும் சொல்லும் அழிவுக் காரியங்களைச் செய்து முடிக்க 'வானரப் படையாக' தலித்-பகுஜன்களைப் பயன்படுத்துவதும், இதற்கு இந்து மதம் என்ற கேடயத்தைப் பயன்படுத்தும் போதும்தான் இந்த விபரீதம் புரிகிறது.

இந்த கருத்துக்களை ஏற்கெனவே என் பழைய பதிவொன்றில் பேசி, அதற்கு அதிகமான எதிர்ப்புகளும் மறுப்புகளும் வந்தன. அதைவிட ஏறத்தாழ அதே சமயத்தில் பதிவர் தங்கமணி என்பவர் தன் வலைப்பூவில் இதைப் பற்றி எழுதி காரசாரமான நீண்ட விவாதங்கள் தொடர்ந்து வந்தன. (அப்பதிவிற்கு இங்கு தொடுப்பு கொடுக்க நினைத்துத் தேடினேன்; கிடைக்கவில்லை. யாரேனும் அப்பதிவை சேமித்து வைத்திருந்தால் அதை மீள் பதிவாகவோ, இல்லை நகலை எனக்கோ அனுப்பி வைக்க வேண்டுகிறேன். Please.) இந்தப் பிரச்சனைக்கெதிராக எனக்குத் தோன்றுவதெல்லாம் கிறித்துவத்திற்குக் கிடைத்த மார்ட்டின் லூதர் போல் இங்கும் ஒருவர் வரமாட்டாரா; வந்து, ப்ராமணீய இந்து மதத்திற்கும் தலித்-பகுஜன்கள் பின்பற்றும் நாட்டார் வழக்குகளையும் பிரித்து ஒன்றிலிருந்து ஒன்றை விலக்கி வைக்க மாட்டாரா என்று தோன்றுகிறது.

பி.கு.

நான் பிறப்பினால் கிறித்துவன் என்பதாலேயே, ஏன் நீ இந்து மதத்துக்குள் தலையை நுழைக்கிறாய் என்று கேட்கலாம். அதற்கு என்னிடம் பதிலில்லை. இது ஒரு மிச நரியின் வேலை என்று சொன்னால் ... சிரித்துக் கொள்வேன்.


*

*

Saturday, November 22, 2008

283. நம்பிக்கையாளர்களுக்கு ஒரு அறைகூவல்

*

*
நம்பிக்கையாளர்களுக்கு ஒரு அறைகூவல் ... அசோகச் சக்கரவர்த்தியிடமிருந்து,


The House of Blue Mangoes நூலை எழுதி, அந்த முதல் புத்தகத்திலேயே புகழ் பெற்ற David Davidar எழுதிய THE SOLITUDE OF EMPERORS புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன். அவரது முதல் புத்தகத்தின் முதல் சில பக்கங்களை வாசித்துவிட்டு அப்படியே விட்டு விட்டேன். ஆனால் இது நம் இப்போதைய நாட்டு நடப்போடு, அதுவும் அரசியல் - மதங்கள் என்பவைகளோடு தொடர்புள்ளது என்று பின்னட்டையில் இருந்ததைப் பார்த்து ஆஹா, நம்ம விஷயமாச்சேன்னு எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். விட முடியவில்லை.

நவீனம்தான்; ஆனால் தன்மையில் தன் சுயசரிதை போல் எழுதியிருப்பதால் உண்மையிலேயே அவரது வாழ்க்கைச் சரிதம் தானோ என்றுதான் நினைத்தேன். அந்த அளவு இயற்கையாக விறு விறுப்புடன் ஒரு personal touch-ஓடு நன்றாக இருந்தது. நான் அந்தக் கதையையெல்லாம் இங்கே சொல்லப்போவதில்லை. மூன்று பேரரசர்கள் - அசோகர், பாபர்,காந்தி - இம்மூவர்களின் வாழ்ககையில் சில பகுதிகளை நம் சிந்தனைக்குத் தருகிறார். அதில் அசோகர் பற்றியுள்ள பகுதி எனக்குப் பிடித்தது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல்.


அசோகப் பேரரசர்

அவருடைய காலத்தில் உலகத்திலேயே பெரும் பேரரசை ஆண்டிருந்தாலும் அவரைப் பற்றிய குறிப்புகள் வரலாற்றில் மிகவும் குறைவே. 1837ல் ஜேம்ஸ் ப்ரின்செப் (James Prinsep) என்ற ஆங்கிலேயர் ப்ராமி((Brahmi) எழுத்துக்களைப் பற்றிய தன் ஆராய்ச்சியின் நடுவே பியா பியதாசி (Piya Piyadassi) (கடவுளுக்கு மிகப் பிரியமானவன்) என்ற ஒரு அரசரைப் பற்றிய விவரங்கள் கிடைக்கப் பெற அதிலிருந்து அசோகரைப் பற்றிய முழு வரலாற்றுச் சித்திரம் உருவாக ஆரம்பித்தது.

மெளரிய பரம்பரையின் மூன்றாவது அரசனான அசோகன் (290 -232 B.C.)சண்டாள அசோகன் என்று அழைக்கப்படுமளவிற்கு பல கொடுமைகளைச் செய்ததாக அறியப்படுகிறார். நம்ம சிவாஜி நடித்த சாம்ராட் அசோகன் பார்த்திருப்பீர்களே, அதே போலவே கலிங்கத்துப் போரில் வெற்றி பெற்ற பின்னும் புத்த பிக்குவால் மனம் மாறி 'அன்பே மகா சக்தி' என்பதைப் புரிந்து இனி வாழ்நாளில் வாளெடுக்க மாட்டேன் என்று சூளுரைத்து, மக்கள் எல்லோரும் என் பிள்ளைகள் என்று பிரகடனப்படுத்தி சண்டாள அசோகன் என்றிருந்தவர் தர்ம அசோகர் என்றாகினார். புத்த மதத்தைப் பரப்புவதில் மிகவும் தீவிரமாக ஈடுபட்ட அசோகர் கல்வெட்டுக்களில் சமயங்கள் சார்ந்த தன் கருத்துக்களைப் பதிந்துள்ளார். அது எப்போதைக்கும் அதிலும் இந்தக் காலகட்டத்தில் நமக்கும் / எல்லா சமயத்தினருக்கும் பொருத்தமானதாக இருப்பதால் அதை உங்களுக்குத் தர விரும்பினேன். இதோ …

கடவுளுக்கு மிகப் பிடித்தமானவனான ப்யாதாசி மதிப்பது …. எல்லா சமயங்களின் அடிப்படைக் கருத்துக்களும் வளர்த்தெடுக்கப் பட வேண்டும் என்பதே.

இந்த வளர்ச்சியை பல வழிகளில் செய்ய முடியும்; ஆனாலும் அப்படி செய்யும்போது ஒவ்வொருவரும் தங்கள் பேச்சிலும் செயலிலும் மிகுந்த கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். தங்கள் மதத்தை மட்டும் உயர்த்திக் காண்பிப்பதும், அடுத்த மதத்தினை காரணமின்றி தாழ்த்திப் பேசுவதும் தவிர்க்கப் பட வேண்டும். விமர்சனங்கள் உண்டென்றாலும் அவைகளை மென்மையாக அந்த மதத்தினர் வருந்தாத அளவு செய்தல் வேண்டும். ஆனால் அதை விடவும் மற்ற மதங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இதனால் உங்கள் மதத்தின் மேல் மற்றவருக்கு மிகுந்த மரியாதை ஏற்படுகிறது. இல்லாவிடில் உங்கள் மதம் அடுத்தவர் மதம் என இரண்டுக்குமே நீங்கள் கேடு விளைவிக்கிறீர்கள்.

தங்கள் மதத்தின் மேல் உள்ள அளப்பரிய ஈடுபாட்டால் தன் மதத்தை உயர்த்திப் பிடித்து, ‘என் மதத்தை மகிமைப் படுத்த வேண்டும்’ என்ற நினைப்பில் அடுத்த மதங்களைச் சாடும்போது நீங்கள் உங்கள் மதங்களுக்கே கேடு விளைவிக்கிறீர்கள். மதங்களுக்குள் சீரான, ஆரோக்கியமான உறவு தேவை. அடுத்த மதத்தினரின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் காதுகொடுத்துக் கேட்கும் மனமும், அவைகளுக்கு மனமார்ந்த மரியாதை அளிக்கும் மாண்பும் நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.

மக்கள் எல்லோரும் தங்களின் மாற்று மதங்களின் அடிப்படைக் கொள்கைகளையும், அறிவுரைகளையும் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டுமென்பதே ப்யாதாசியின் விருப்பம்.




*

*

282. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள் - 4

*

*
ஒரு சின்ன சந்தேகம். சந்தேகத்தைப் பார்த்து எனக்கு அமெரிக்கா மேல என்ன கடுப்பு என்று யாரும், அதிலும் நம் அமெரிக்கப் பதிவர்கள் கேட்க வேண்டாம்.

விஷயம் என்னன்னா, 9/11 நமக்கு எல்லாம் தெரியும். அமெரிக்காவிற்கு பேரிடி; பேரிழப்பு; பெருத்த அவமானம். எல்லாம் சரிதான். உலகத்துக்கே ஒரு பெரிய ஷாக் என்பதும் சரியே. இதற்குப் பின்னே இருந்த ஒசாமா இன்னும் உயிருடன்தான் இருக்கிறான். இன்னும் மிரட்டல்கள் எல்லாம் வந்துகொண்டுதான் உள்ளன. அதுவும் புதிய அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமாவுக்கும் தொடர் மிரட்டல்கள் உள்ளன என்றும் சொல்லக் கேள்வி. ஆனாலும் 9//11-க்குப் பிறகு இத்தனை ஆண்டுகளில் எந்தவித பெரிய அசம்பாவிதமும் அமெரிக்காவில் நடந்ததாகத் தெரியவில்லை.

ஆனால் ...

நமது நாட்டில் 'மாதம் மும்மாரி மழை பொழிகிறதா' என்று கேட்பது போல் ஏனிப்படி அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள்? நமது அரசு, காவல்துறை, intelligence bureau, RAW எல்லாம் இன்னும் விழிப்போடு இருந்தால் இந்த குண்டு வெடிப்புகளை நிறுத்த முடியும் என்பதில்லையா? அந்த நாட்டுக்காரர்கள் எந்த வித அசம்பாவிதம் நடக்காமல் தற்காத்துக் கொண்டிருக்க, நமது அரசு, அரசியல் தலைவர்கள், மற்றைய அரசின் அங்கங்கள் முழு மனதோடு உழைத்தால் இந்த விபத்துக்களிலிருந்து நம்மை காக்க முடியாதா? ஒரு வேளை அந்த நாட்டு intelligence அமைப்புகள் மிகுந்த திறமைசாலிகளா? நம்ம ஆட்களுக்கு அந்தத் திறமையெல்லாம் கிடையாதா? ஒரு விபத்துக்குப் பின் விசாரணைகள் என்ன? கமிஷன்கள் என்ன? எல்லாம் நடக்குது; குண்டுவெடிப்புகளும் தொடருது! ஏனிப்படி?



அமெரிக்காவில ஒண்ணும் நடக்கலை. ஆனா அத கண்ணு வைக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க.அப்படியே வைத்தாலும் .............என்று சொல்லணுமாம்! எதுக்கு வம்பு.
சொல்லிர்ரேன்: TOUCH WOOD !

*************************************

என்ன இது தினசரி செய்தித்தாள்களில் அடிக்கடி சோமாலியா பக்கத்தில் கப்பல் கடத்தல் அப்டின்னு செய்திகள் வருகின்றன. அதுவும் கடந்த 20ம் தேதியன்று மூன்று கால்பந்தாட்ட மைதானத்தின் அளவை ஒட்டிய அவ்வளவு பெரிய கப்பல் கடத்தல் அப்டின்னு செய்தி. கடத்துவது சோமாலியர்களாம்; அவர்கள் விசைப்படகுகளும், நவீன ஆயுதங்களும் வைத்திருக்கிறார்களாம். கடந்த சில மாதங்களில் நடந்த கொள்ளைக்குக் கொடுக்கப்பட்ட பணயப் பணம் என்று சொல்வது பெரிய அளவாக இருக்கிறது. இதில் கடைசியாக வந்த ஒரு தகவலில் நமது கடற்படையினர் ஒரு கடத்தலைத் தடுத்தது மட்டுமல்லாமல் கடத்தல்காரர்களின் படகையும் மூழ்கடித்ததாக அறிந்து பெருமையாக இருந்தது.

ஆனாலும் செய்திப் போக்குவரத்து, நவீன போர்க்கருவிகள் என்றெல்லாம் வந்த பிறகும் இந்த கடத்தல் தொழில் எப்படி சாத்தியமாகிறது? போர்க்கருவிகள் என்றால் துப்பாக்கி வகையறாக்களைச் சொல்லவில்லை. ராடார் போன்ற தளவாடங்கள் மற்றும் அதுபோன்ற நவீன தொழில் நுட்பங்கள் வந்த பிறகும் எப்படி ஒரு விசைப்படகில் வந்து பெரிய பெரிய கப்பல்களைக் 'கவுத்து' விடுகிறார்கள்?

இதை எழுதி மேலேற்றும் நேரத்தில் நேற்று (21.11.'08) இந்தியன் எக்ஸ்பிரசில் ஒரு பக்கம் முழுமைக்கும் இரு நீள கட்டுரைகள் வாசித்தேன். இருந்தாலும் எழுதினது எழுதினதுதான்; மேலேற்றுவது மேலேற்றுவதுதான். உங்க தலைவிதி அப்படி இருந்தால் நானென்ன செய்ய முடியும். விதி வலியது; கொடியதும்கூட பல சமயங்களில்!


********************************



*

*

Friday, November 21, 2008

281. எங்க காலத்தில எல்லாம்… 2

*

*

"பண்புடன்" வலையிதழுக்காக எழுதிப் பதிப்பித்த இப்பதிவை மீண்டும் உங்கள் பார்வைக்கு ...

*

ரயில் பயணங்களில்



இன்றைக்கும் கூட மதுரை புகைவண்டி நிலையத்தைத் தாண்டி ஓவர் ப்ரிட்ஜ் வழியாகச் செல்லும்போது புகைவண்டிகள் வரும்போதும் கிளம்பும்போதும் அடிக்கும் அந்த மணிச்சத்தம் கேட்கும்போதெல்லாம் அடுத்த ரயில் பயணம் எப்போது என்ற ஆசை கிளர்ந்தெழுகின்றது. அது என்னவோ இன்னும் ரயில் பயணம் என்றால் ரொம்ப பிடிக்குது. விமானத்தில் போகும்போது கூட (அப்புறம் எப்படி நாங்க அமெரிக்காவுக்கெல்லாம் விமானத்தில் போயிருக்கோம் அப்டின்றதைச் சொல்றது ..) விமானத்தில் ஏறி ஓரிரு மணி நேரத்தில் செமையா போர் அடிக்க ஆரம்பிச்சிருது. அது என்ன, ஒரு ஆட்டம், குலுக்கல் இல்லாமல் நின்றுகொண்டு இருப்பதுபோலவே மணிக்கணக்கில் இருந்தால் போரடிக்காதா என்ன? ஆனா ரயிலில் பாருங்கள் .. ஓடும் சத்தம் ஒரு தொடர்ந்த B.G.M. போல் நம் கூடவே எப்போவும் வர, எப்பவும் மனுஷங்களுக்கு மத்தியில் இருக்கிறோம் அப்டின்ற நினைப்போடுதான் இருக்கணும் – ஒட்டுக் குடித்தனம் மாதிரி. ஊரும் உலகமும் நம் கூடவே பயணம் வரும். பகலோ இரவோ எந்தப் பயணமாயிருந்தாலும் அதில் ஒரு ஈர்ப்பு உண்டு. விமானப் பயணத்தில் everybody is an island அப்டின்ற உணர்வுதான் இருந்தது.


இப்போதே ரயில் பயணத்தில் இவ்வளவு ஆசையென்றால் சின்ன வயதில் கேட்க வேண்டுமா என்ன. வருடத்திற்கு இரண்டுதடவை – கிறிஸ்துமஸ் லீவு, அடுத்து கோடை விடுமுறை என இருமுறை – நெல்லை பக்கத்திலுள்ள சொந்த கிராமத்திற்குக் கிளம்பிப் போவதே ஒரு திருவிழா மாதிரிதான். அப்போதெல்லாம் இரவுப் பயணத்தைவிட பகல் பயணமே வாய்த்தது.


காலம்தான் எவ்வளவு மாறிப் போச்சு! இப்போவெல்லாம் முன்னமே சீட், பெர்த் எல்லாம் வாங்கிக்கிட்டு செளகரியமா போய் பழகியாச்சு. அப்போவெல்லாம் அதெல்லாம் ஏது? கூட்டமா இருந்தா சிகப்பு சட்டை போட்ட ஆளுககிட்ட கொஞ்சம் காசு கொடுத்து 'பெர்த்' வாங்கிடலாம்; அதாவது, மேலே சாமான்கள் வைக்கிற இடத்தில துண்டு போட்டு காசு வாங்கிட்டு நமக்குக் கொடுப்பாங்க. அப்போ ரயில்களில் மூன்று வகுப்புகள் இருக்கும். முதல் இரண்டைப் பத்தி எதுவும் தெரியாது; நினைத்தும் பார்த்ததில்லை. ரயில் பெட்டிகளிலும் பல மாறுதல்கள். ரொம்ப சின்னப் பையனாக இருந்த போது சீட்டுகள் இப்போ மாதிரி குறுக்காக இல்லாமல் நீளவாட்டில் இருந்தது நினைவிலிருக்கிறது. ஆனால் ரொம்ப முன்னால்தான். அதுக்குப் பிறகு இப்போதுள்ளது மாதிரி ஆகிவிட்டது. ஆனால் ஜன்னல்களுக்குக் கம்பிகள் ஏதும் இருக்காது. துண்டைப் போட்டெல்லாம் இடம் பிடிக்க முடியாது. ஆட்களே ஜன்னல் வழியே புகுந்து இடம் போடணும். அதுவே ஒரு ஹீரோ வேலைதான். அந்த ஜன்னல்களை மூடும் கதவெல்லாம் இப்போவெல்லாம் மேலிருந்து கீழே வருவதாகத்தானே இருக்கின்றன. அப்போவெல்லாம் கீழிருந்து மேலே வரும்படி இருக்கும். அதை சரியாகப் பொறுத்த தனித் திறமையே வேணும்.


ரயில் வண்டிகளின் மின்விசிறிகளில் ஏதும் மாற்றமில்லையோவென இப்போதும் ஒவ்வொரு ரயில் பயணத்திலும் தோன்றுகிறது. ஏனெனில் பார்ப்பதற்கு அப்படியே இருப்பது மட்டுமில்லாமல், அந்த விசிறிகள் எப்போதுமே அபார வேகத்தில்தான் சுற்றுகின்றன. அன்றைக்கும் அப்படித்தான். ஆனால் ஒரு முக்கிய வித்தியாசம். அப்போதெல்லாம் விசிறிகள் நம் இஷ்டத்துக்குத் திருப்பி வைத்துக் கொள்ளலாம். அதில் தான் பெரிய ட்ராமா, சண்டை எல்லாம் நடக்கும். அவரவர் இஷ்டத்துக்கு, வசதிக்கு ஏற்றாற்போல் அதை திசை திருப்புவார்கள். பல சமயங்களில் might is always right என்ற தியரி வேலை செய்யும். இல்லையென்றால் வெள்ளைச் சட்டை, ஓரிரு ஆங்கில வார்த்தைகளால் தங்களை மேல்மட்ட ஆட்களாகக் காண்பித்துக் கொள்பவர்களின் இஷ்டத்துக்கு அது வளையும். ஆனால் ராத்திரி எப்படியும் ஒரு சண்டை வரும். சாமான்கள் வைக்குமிடத்தில் எப்படியும் ஆட்கள்தான் இருப்பார்கள். ஒருவர் தூங்கியதும் எதிர்ப் பக்கத்தில் இருப்பவர் மெல்ல தன் பக்கம் மின்விசிறியை இழுத்துக் கொள்ள, இவர் தூங்கி அவர் முழித்ததும் மெல்ல அவர் தன்வழிக்கு இழுக்க … கதை தொடரும்.


இரண்டு மூன்று மணி நேரப் பயணம் முடிந்து ரயிலில் இறங்குபவர்களைப் பார்த்தாலே பாவமாயிருக்கும். நிச்சயமா சட்டையெல்லாம் கரி படர்ந்து, கண்ணெல்லாம் ரத்தச் சிவப்பாகி, தலைமுடியெல்லாம் கலைந்து ஒரு பெரிய போராட்டம் முடிந்து வருபவர்கள் போல்தான் எவரும் தோற்றம் தருவார்கள். ஏனென்றால், எல்லா ரயில்களும் கரிவண்டிகள்தான். அப்போ வச்ச பேருதான் "புகை வண்டிகள்" ! எவ்வளவு பொருத்தம் ! வண்டியில் எங்கு உட்கார்ந்து எழுந்தாலும் கார்மேக வண்ணனாகத்தான் எல்லோரும் மாறணும். எங்கும் எதிலும் கரிதான். ஜன்னல் ஓரத்தில் இடம் பிடித்து உட்கார்ந்தவர்களுக்கு இன்னொரு போனஸ்; கண்கள் எல்லாம் கரிவிழுந்து செக்கச் சிவப்பாய் ஆகிவிடும். வாழ்க்கையே போராட்டம் என்பது போல் ஒவ்வொரு ரயில் பயணமும் ஒரு போராட்டமாக அமைந்துவிடும்.


ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் எப்படியும் அங்குமிங்குமாய் குழந்தைகளுக்குத் தொட்டில்கள் தொங்கும். எங்கும் எந்த இடத்திலும் மக்கள் உட்காரத் தயங்குவதில்லை; அது பாத்ரூம் பக்கமாக இருந்தாலென்ன, நடைபாதையாயிருந்தாலென்ன. சமத்துவம் நிலவும் இன்னொரு இடமாக ரயில் பெட்டிகள் இருக்கும். இப்பவும் பொது ரயில் பெட்டிகள் அப்படித்தான் இருக்குமென நினைக்கிறேன். அதுபோல் பொது ரயில் பெட்டிகளில் பயணித்து நாளாகிவிட்டது.


ஏறக்குறைய எல்லா ரயில்களும் எல்லா நிறுத்தங்களிலும் நின்று நின்று போனதாக நினைவு. இரவுப் பயணங்களில் மிகவும் பிடித்ததும் இன்னும் நினைவில் இருப்பதும் ஒரு விஷயம்: பல ரயில்வே ஸ்டேஷன்களில் மின்சாரம் இல்லாத காலங்களில், ஒவ்வொரு ரயில் வரும்போதும் ஒருவர் அந்த ஸ்டேஷன் பெயரைச் சத்தமாக ஒரு ராகத்தோடு நீட்டி ஒலிப்பதும், ஒரு தீப்பந்தத்தோடு கையில் ஒரு வளையத்தோடு ஒருவர் நிற்பதுவும், அதை ரயில் ஓட்டுனரில் ஒருவர் லாகவமாக அந்த வளையத்தில் கையைக் கொடுத்து அதனைக் கைப்பற்றுவதும், அதற்கு சற்று முன்பு இன்னொரு வளையத்தைத் தூக்கி எறிவதும் … இன்னும் இருள்படிந்த ஓவியமாக மனதில் நிற்கிறது.


ஏறக்குறைய கொஞ்சம் வசதியான மக்கள் ரயில் பயணம் செய்யும்போது கட்டாயம் கையோடு கொண்டுவருவது ஒரு பித்தளை கூஜா. ஒவ்வொரு குடும்பத்தலைவருக்கும் இந்தப் பயணங்களில் கட்டாயமான ஒரு வேலை எந்த நிறுத்தத்தில் நின்றாலும் இறங்கி ஓடிப் போய் அங்கிருக்கும் குழாயில் தண்ணீர் பிடித்து வருவதுதான். இப்போவெல்லாம் நீங்கள் ஒரு பாட்டில் தண்ணீர் வைத்திருக்க, எதிரில் இருக்கும் எனக்கு இல்லையென்றால் நான் உங்களிடம் தண்ணீர் ஓசி கேட்க முடியுமா? அப்போவெல்லாம் வேண்டுமாவென்று கேட்டுகொடுத்தது நினைவில் இருக்கிறது, கூஜாவைத் திறந்து அதனுள்ளேயே இருக்கும் சிறு தம்ளரில் மக்கள் தங்கள் பரோபகாரத்தைக் காண்பிப்பார்கள்.


அந்தக் காலத்தில் ரயில் பயணத்திற்கென்று போனால் முதலில் ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் வைத்திருக்கும் கரும்பலகையைத்தான் பார்க்க வேண்டும். அதில்தான் ஒவ்வொரு ரயிலும் எத்தனை நிமிடங்கள் காலதாமதமாக வரும் என்பதை எழுதி வைத்திருப்பார்கள். அதுவும் எல்லாம் நிமிடக் கணக்குதான் – ரயில் எத்தனை மணி நேரம் தாமதமாக வந்தாலும்! ரயில்கள் தாமதமாக வருவதுதான் அப்போதைய நடைமுறை. சரியான நேரத்துக்கு ஒரு ரயிலும் வந்ததாகச் சரித்திரம் இருக்காது. அதை வைத்து ஒரு கதை – அனேகமாக எல்லோருக்கும் தெரிந்ததுதான் – உண்டு. ஆச்சரியமாய் ஒரு நாள் ஒரு ரயில் சரியான நேரத்துக்கு வர, எல்லோரும் வண்டி ஓட்டுனருக்கு மாலை போட்டார்களாம். அவரோ ரொம்பவே வெட்கப் பட்டு 'இந்த ரயில் நேற்று சரியாக இந்த நேரத்திற்கு வந்திருக்க வேண்டிய வண்டி' என்றாராம்.


மதுரையிலிருந்து ஊருக்குப் போக ரயிலில் போய் அதன்பிறகு பஸ், ஒத்தை மாட்டு வண்டி என்று கிராமத்துக்குப் பயணம் தொடரும். திரும்பி மதுரை போகும்போது ரயில் பயணத்திற்குப் பிறகு ஜட்கா பயணம். இதில் ஊருக்குப் போகும் பஸ் பயணம் ஒரு தனி ரகம்தான். ரொம்ப சின்ன வயசில் சில தடவைகள் ஸ்டீம் பஸ்களில் சென்ற அனுபவம் நினைவில் உண்டு. பஸ்ஸின் நுழை வாயிலுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய சிலிண்டர் இருக்கும். வெளிப்பக்கம் அதற்குக் காற்றடிக்க கையால் சுற்றக்கூடிய துருத்தி ஒன்று இருக்கும். பெரிய ஊர்களில் பஸ் நின்றவுடன் சின்ன பசங்க ஓடி வந்து அந்த துருத்தியைச் சுற்ற ஓடிவருவார்கள் - கிடைக்கும் சில்லரைக் காசுக்காக.


மதுரையில் இறங்கியதும் ஜட்கா வண்டிக்காகக் கட்டாயம் ஒரு பேரம் நடக்கும். எப்போதும் எனக்கு வண்டிக்காரர் பக்கத்தில் முன்னால்தான் இடம். ரொம்ப நாள் வரை ஒரு விஷயம் எனக்குப் புரிந்ததே இல்லை. ஒத்தை மாட்டு வண்டியானாலும் சரி, இரட்டை மாட்டு வண்டியானாலும் சரி, மாட்டின் மூக்கணாங்கயிறு வண்டிக்காரர் கையில் இருக்கும். அதை இழுத்து மாட்டை அல்லது மாடுகளை கன்ட்ரோல் பண்ணுவதைப் பார்த்திருக்கிறேன்.ஆனால் ஜட்கா வண்டிகளில் ஒரு கையில் வைத்திருக்கும் கயிற்றின் சிறு அசைவுகளை வைத்தே குதிரையைக் கன்ட்ரோல் செய்வது ரொம்ப நாட்களுக்குப் பிறகே புரிந்தது. அது புரிவதற்கு முன்பு எனக்குப் பெரிய ஆச்சரியமாக இருப்பது எப்படி குதிரை "தானாகவே" சரியான ரோட்டில் செல்கிறது என்பதுதான். ஒருவேளை குதிரைக்கு மதுரையில் எல்லா இடமும் தெரிந்திருக்குமோ? அதோடு நாம் பேரம் பேசும்போதே போகவேண்டிய இடத்தைத் தெரிந்து கொண்டு தானாகவே போகிறதோ என்று அதி புத்திசாலித்தனமாக நினைத்திருந்திருக்கிறேன். வெளியில் சொன்னால் வெட்கக் கேடுதான்!

சரி விடுங்க, யார்ட்ட உங்ககிட்ட மட்டும்தானே சொல்கிறேன்.



*

*

Thursday, November 20, 2008

280. ஒரு நிகழ்வு - ஒரு செய்திப்படம் - ஒரு நூல் .. 2

*

*
ஒரு நிகழ்வு - ஒரு செய்திப்படம் - ஒரு நூல்...1

ஒரு நிகழ்வு - ஒரு செய்திப்படம் - ஒரு நூல். 3




II. ஒரு செய்திப்படம்


மற்றைய தொடர்புடைய பதிவுகள் ... 1

Anand Patwardhan's "IN THE NAME OF GOD"

முந்திய பதிவில் சொன்னதுபோல் பெரும்பான்மை மக்களின் சமய நம்பிக்கைக்கு மதிப்பளித்து இஸ்லாமியர்கள் விட்டுக் கொடுத்திருக்கலாமே என்ற எண்ணத்தோடு இருந்த எனக்கு இந்த நிகழ்வின் மறுபக்கத்தைக் காண்பித்தது ஆனந்த் பட்வர்த்தனின் செய்திப் படம்: IN THE NAME OF GOD தான்.

ஆனந்த் பட்வர்த்தன் பற்றி ஒரு சிறு குறிப்பு: நம் நாட்டிலும், உலக அளவிலும் தன் செய்திப் படங்களுக்காக பல பரிசுகளை வென்றவர். பல படங்கள் நீதிமன்றங்களின் தாழ்வாரங்களில் அலைந்து திரிந்த பிறகே வெளியில் வந்துள்ளன.

அவரது சில முக்கிய செய்திப் படங்கள்:
Zameer ke Bandi ( 'Prisoners of Conscience’) (1978)
Ram ke Nam ('In the Name of God' (1992),
Pitr, Putr aur Dharmayuddha ('Father, Son and Holy War') (1995)
War and Peace (2002) [5


படத்தைப் பற்றிச் சுருக்கமாக:

பாபர் மசூதியும் ராம ஜன்மபூமியாகக் கருதப்பட்ட கோவிலும் ஒரே வளாகத்துக்குள் அடுத்தடுத்து இருந்து வந்திருக்கிறது. 1949 டிசம்பர் 22 இரவில் ராமர் என் கனவில் குழந்தையாக வந்து மசூதிக்குள் நிற்பதைப் பார்த்தேன் என்று பலரும் கூறி வர, அதைத் தொடர்ந்து அடுத்த நாளிரவு மசூதி பூட்டியிருந்த நேரத்தில் கோவிலுக்குள் இருந்த ராமர் சிலைகளை மசூதிக்குள் சிலர் வைத்து விடுகின்றனர். பிரச்சனை வழக்கு மன்றம் வர, பிரதமர் நெஹ்ரூவெ (நேரு) தலையிட்டும், Dt. Magistrate ஆக இருந்த K.K. NAYAR ஏதேதோ காரணங்கள் கூறி அச்சிலைகளை அகற்ற மறுத்துவிடுகிறார். (இந்த நய்யார் பின்பு ஜனசங்க கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் M.P. ஆகவும் பாராளுமன்றத்திற்கு செல்கிறார். வெகுமதி போலும்!) இதற்குப் பின் பல கமிஷன்கள்; போராட்டங்கள்; உயிர்ப் பலிகள் (1986-ல் 2500 கொல்லப்பட்டிருக்கிறார்கள்)இந்தப் பிரச்சனையைக் கையில் எடுத்துக் கொண்ட B.J.P. பாராளுமன்றத்தில் தங்கள் எண்ணிக்கையை இரண்டிலிருந்து 85க்கு உயர்த்திக் கொள்கிறார்கள்.

செய்திப் படம் இரு கூறுகளாக மாற்றி மாற்றிக் காண்பிக்கப் படுகிறது. சோமநாத்திலிருந்து புறப்படும் அத்வானியின் ரத் யாத்திரையும், அதைச்சுற்றி அர்த்தம் புரியாமல்கூட கோஷம் போடும் கூட்டம் ஒரு புறம். மற்றொரு பக்கம் அயோத்தியும் அதைச் சுற்றியுள்ள மக்களையும் சுற்றி வருகிறது.

அத்வானியின் ஆவேசப் பேச்சுக்கள், வழிநெடுக அவருக்கு ஆதரவான மக்கள் - இந்த மக்களிடம் கேட்கப்படும் எந்தக் கேள்விகளுக்கும் சரியான பதில்களோ விளக்கங்களோ வருவதில்லை. Such Q & A sessions are the comical part of this film! இந்த சமயத்தில் V.P சிங் அவர்களால் கொண்டுவரப்பட்ட மண்டல் கமிஷன் இவர்களால் கேள்விக்கு உள்ளாக்கப் படுகிறது. இப்போது இதற்கு என்ன அவசியம்; அவசரம்? இப்போது வேண்டுவதெல்லாம் அயோத்தியில் ராமர் கோவில் என்பது இந்து மடாதிபதிகளின் கூட்டத்தில் எழுப்பப்படும் கேள்வி. எல்லாமே mass psychology, mass effervescence என்பதாகத்தான் இருக்கின்றன. படித்த மக்களானாலும் சரி, படிக்காதவர்களாயினும் சரி ஒரே மாதிரி முழு நோக்கம் புரியாத ஒரு போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்றனர். அதைவிடவும், ஈடுபடுத்தப் பட்டனர் என்பதே சரியாக இருக்கும்.

அடுத்த பக்கத்தில் சில முக்கிய செவ்விகள். முதலாவதாக பூசாரி லால்தாஸ். இவர் அரசாங்கத்தால் ராம ஜன்மபூமி கோவிலுக்கென்றே அங்கீகரிக்கப்பட்ட பூசாரி. படித்த பண்புள்ள பேச்சாக இருக்கிறது இவர் தந்துள்ள செவ்வி. இந்து சமய வழிபாட்டு முறைகளில் எங்கே சாமி சிலைகளை வைத்து பூஜை செய்கிறோமோ அந்த இடம் கோவிலாகிறது. ராமஜன்ம பூமி அயோத்தியா தானேயொழிய இந்த இடம்தான் என்று எதையும் எப்படிக் கூறுவது என்கிறார். இதெல்லாம் அரசியல்; ஓட்டு சேர்ப்பதற்காக ஒரு புறம்; கோவில் பெயரைச் சொல்லி பணம் சேர்க்க இன்னொரு கூட்டம் என்கிறார்.

V.H.P.யினரைக் கடுமையாகச் சாடுகிறார் லால்தாஸ். இப்போதிருக்கும் இந்த ராமஜன்மபூமி கோவிலுக்கு இவர்கள் யாரும் வந்ததோ, இங்குள்ள சாமியைக் கும்பிட்டதோ கிடையாது. கோவில் பெயரைச் சொல்லி பெரும் பணத்தை தங்கள் சொந்த வங்கிக் கணக்கில் போடுவது மட்டுமே அவர்கள் தவறாமல் செய்வது. அவர்கள் எல்லோருமே உயர்த்திக் கொண்ட சாதியைச் சேர்ந்தவர்கள். துறவு மனப்பான்மையோ, தியாக உணர்வோ சிறிதும் இல்லாதவர்கள். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள மற்ற சாதி மக்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

நீங்கள் பேசுவது ஒரு பொதுவுடைமை வாதியின் பேச்சு போல் இருக்கிறதே என்று கேட்கப்பட்ட போது லால்தாஸ், ராம ராஜ்ஜியத்தில் எல்லோரும் எல்லாம் பெற்று மகிழ்ச்சியாக இருந்ததாகச் சொல்கிறார்கள். பொதுவுடைமைவாதிகளின் நோக்கமும் அதுவாகவே உள்ளது. அப்படியிருக்கும்போது நான் கம்யூனிசவாதி போல் பேசுவது தவறானதல்ல என்கிறார் லால்தாஸ். (மசூதி இடிக்கப்பட்ட பிறகு இவர் கொலை செய்யப்பட்டு விட்டதாக அறியப்படுகிறது.)

இன்னொரு செவ்வி Dy. Commissioner of Income Tax. அமெரிக்காவில் M.B.A. முடித்து அங்கு பார்த்துவந்த வேலையை விட்டுவிட்டு தாய்நாட்டில் வேலை செய்ய வேண்டுமென்று வந்தவர். V.H.P.-ன் அஷோக் சிங்கால் தன் வருமானவரி தாக்கீதை இவரது அலுவலகத்தில் 1989 அக்டோபர் மாதம் கொடுக்கிறார். பின்புதான் முதல் பக்கத்தில் சில தகவல்களைக் கொடுத்துவிட்டு, அதனோடு இணைக்க வேண்டியவைகளை எதையும் இணைக்காமல் கொடுத்திருப்பது தெரியவருகிறது. நகல்கள் கேட்டால் கொடுக்கப் படவில்லை. அயோத்தியாவில் உள்ள இவரது அலுவலகத்திலிருந்து அஷோக் சிங்காலுக்கு சம்மன் போகிறது. சம்மன் கொடுக்கப் பட்ட 24 மணி நேரத்தில் தில்லியில் பிரதமர் வீட்டின் முன் ஒரு பெரும்கூட்டம் ரகளையில் ஈடுபடுகிறது. அதே நாளில் இவர் சென்னை கிளைக்கு மாற்றப் படுகிறார். அதோடன்றி சில நாட்களில் வேலையிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப் படுகிறார். அஷோக் சிங்கால் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவேயில்லை.

இந்த நிகழ்வுக்கு முன்பே V.H.P. வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெற R.B.I.யிடம் அனுமதி கோருகிறது. ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் 200 கிளைகள் V.H.P.க்கு உள்ளன; மேலும் கனடா, இங்கிலாந்து என்று பல இடங்களிலும் கிளைகள் உள்ளன. நன்கொடையும் வசூலிக்கப் படுகிறது. செங்கல் செய்வதற்கென்று Rs.18,600,000 செலவு செய்திருப்பதாக கணக்குக் காட்டப் படுகிறது. தவறு ஏதும் செய்யாதவர்களாக இருந்தால் tax returns-யை ஒழுங்காகக் காண்பித்திருக்கலாமே என்கிறார் இந்த அரசு அதிகாரி.

சாதாரண மக்கள் பலரும் அவர்களின் உணர்வுகளும் தெளிவாகக் காண்பிக்கப் படுகின்றன.

சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் ஒரு முஸ்லீம் பெரியவர்: நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே இந்த அயோத்தியில்தான். நான் இங்குதான் பிறந்தேன்; சாவது வரையும் இங்குதான். நானென்ன பாக்கிஸ்தானுக்கா போக முடியும். நான் போகவும் விரும்பவில்லை. நாங்களும் இந்துக்களும் சகோதரர்கள். நான் வாழும் பகுதியில் எந்த வித்தியாசமுமில்லாமல் நாங்கள் ஒன்றாகவே ஏழ்மையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த கோவில் விவகாரத்தில் எல்லாம் எங்களுக்கு எந்த ஈடுபாடும் இல்லை. எங்கள் ஏழ்மையை நீக்க அரசு முயற்சி எடுத்தால் எங்களுக்கு நல்லது.

சாமர் என்னும் சாதியைச் சேர்ந்தவர்கள்: நாங்கள் தாழ்ந்த சாதிக்காரர்கள். எங்களுக்கு இந்து முஸ்லீம் எல்லோரும் ஒன்றுதான். இருவருமே எங்கள் கடைகளில் டீ குடிக்கவோ எங்களோடு உணவருந்தவோ வரமாட்டார்கள். நாங்கள் அவர்கள் இருவருக்குமே அன்னியப்பட்டவர்கள்.

இன்னொரு தாழ்த்தப் பட்ட பெண்: தானியங்கள் விளைந்து அறுவடை ஆகும் வரை எங்கள் உழைப்பு அவர்களுக்குத் தேவை. ஆனால் தானியங்கள் அவர்கள் வீடு போய் சேர்ந்ததும்தான் நாங்கள் தீண்டத் தகாதவர்கள் என்பது அவர்களுக்கு நினைவுக்கு வரும். இப்படித்தான் காலங்காலமாய் நடந்துவருகிறது. எந்த மசூதி அல்லது எந்த கோவில் எங்கிருந்தால் எங்களுக்கு என்ன?

சில ஏழை இந்துக் குடியானவர்கள்: இருக்கும் மசூதியை எதற்கு இடிக்க வேண்டும். அது தப்பு. புதிய கோவில் கட்டணும்னா எங்க வேணும்னாலும் கட்டிக்க வேண்டியதுதான். அதை மசூதியிருக்கும் இடத்தில்தான் கட்டவேண்டுமென்று சொல்வது தவறு.

இன்னும் சிலர்: நாங்களும் இஸ்லாமியரும் சகோதரர்கள்தான். எங்களுக்குள் எந்த துவேஷமும் கிடையாது.

சுப்ரீம் கோர்ட் மசூதி இடிக்கப் படாது என்று கொடுத்த உறுதி ஒரு புறம்; தடுத்தி நிறுத்தி விடுவோம் என்று சொன்ன மத்திய அரசின் சூளுரை ஒரு புறம்; மாநில அரசு கொடுத்த வார்த்தை ஒரு புறம். – இவையெல்லாம் ஒரு புறமிருக்க நாடெங்கிலும் இருந்து வந்த kar seva (labour of love) மசூதியை இடிக்கும் வேலையை செய்து முடித்தார்கள். இந்த கர் சேவாக்குகள் என்னென்ன சாதியினர் என்றும் கேட்கப்படுகிறது; அவர்களில் யாரும் பிராமணர்களில்லை.

6-ம் தேதி நடந்த மசூதி இடிப்புக்கு உடனேயே 12 டிசம்பர் 1982-ல் லிபர்கான் கமிஷன் ஒன்றிற்கு ஒரு முழு அறிக்கை தர உத்தரவிடப்பட்டது. பலப் பல நீடிப்புகள்; பிப்ரவரி 2008க்குள் கொடுக்க வேண்டுமென்று 2007ல் சொல்லப்பட்டது. இது நாள்வரை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்றே நினைக்கிறேன்.

மண்டல் கமிஷனின் தாக்கத்தைக் குறைக்கவே இந்த அழிப்புப் போராட்டம் ஆரம்பிக்க பட்டது என்ற ஒரு கருத்தும் இப்படத்தில் சொல்லப்பட்டது. அதற்காகவே B.J.P.,V.H.P. ராம ஜன்ம பூமி விவகாரத்தை முழுமூச்சில் அரங்கேற்றியுள்ளனர்.

இன்று டிசம்பர் 6 என்றாலே கருப்பு நாள் என்றாகிவிட்டது. எல்லோருக்குமே அந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் வரும்போதே அச்சம் நிறைந்த நாளாக ஆகிவிட்டது. எப்போது இந்த புண் ஆறும். இல்லை ஆறவே ஆறாதா?

முந்திய பதிவில் சொன்னதுபோல் இது ஒரு பெரும்பான்மையரின் சமய நம்பிக்கை சார்ந்த விஷயம்; ஆகவே சிறுபான்மையோர் விட்டுக் கொடுத்தாலென்ன என்ற என் நினைப்பு தவறென்பதை இந்த செய்திப் படம் அழகாக விளக்கியது. பெரும்பான்மை மக்களுக்கும் இந்த நிகழ்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை இந்த செய்திப்படத்தில் தெளிவாக இதன் இயக்குனர் காண்பித்திருப்பார். அதுவரை நான் கொண்டிருந்த என் கருத்தை இப்படம் முற்றிலுமாக மாற்றியது.

.....................................................இன்னும் வரும்.

279. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள் - 3

விளையாட்டுத் துறையில் சில சில ஆச்சரியங்களும், சில கேள்விகளும்.

1986-டிசம்பரில்தான் வீட்டில் தொலைக்காட்சி பொட்டி வந்தது. அந்த ஆண்டு மே-ஜூனில் நடந்த அகில உலகக் கால்பந்து போட்டிதான் - FIFA - முதன் முதல் பார்த்த ஒரு பெரிய நிகழ்ச்சி. மூன்றாவது வீட்டில் இருந்த நண்பரும் ஒரு கால்பந்து விசிறி. அவருக்கு தனியாக உட்கார்ந்து பார்க்க வேண்டுமே என்ற கவலை. எனக்கோ வீட்டில் தொலைக் காட்சிப் பொட்டி இல்லையே என்று கவலை. இருவரும் சேர்ந்து பார்க்க ஆரம்பித்தோம். அந்த வருடம் இரவு 11 மணிக்குப் போட்டிகள் ஆரம்பிக்கும். நான் பத்தரை மணிக்கெல்லாம் அங்கே ஆஜராகி விடுவேன். நான் வரத் தாமதமானால் நண்பருக்கு இருப்புக் கொள்ளாது வெளியே வந்து நின்று வரவேற்க நிற்பதுபோல் காத்திருப்பார்.

அடேயப்பா! உலகக்கோப்பை போட்டியை முதல் முறை பார்த்த அப்போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது rewinding-தான். அதெப்படி ஒரு கோல் விழுந்ததும் எத்தனை கோணங்கள் உண்டோ அத்தனை கோணங்களிலிருந்தும் உடனுக்குடனே காண்பிக்கிறார்கள் என்று ஆச்சரியமான ஆச்சரியம்! அதுவும் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி அப்படியே ஒரு சுற்று சுற்றி திரைக்கு நடுவே புள்ளியாய் மறைய அதே வினாடி அப்புள்ளியிலிருந்து rewinding-ல் பழைய காட்சி திரும்பி வர ஆவென வாய்பிளந்து ரசித்தது இன்னும் நினைவில் இருக்கிறது.


அப்படி வாய்பிளந்து ரசித்தது இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதுவும் விளையாட்டு போட்டிகளில்தான் எத்தனை எத்தனை தொழில்நுட்பங்கள். அவை எல்லாம் எப்படித்தான் செய்கிறார்களோ என்ற ஆச்சரியம் இன்னும் வளர்ந்துகொண்டேதான் போகிறது.


கால்பந்து போட்டிகளையே எடுத்துக் கொள்ளுங்களேன். கிரிக்கெட்டில்தான் பயங்கர புள்ளிவிவரங்கள் அடுக்குவார்கள் என்று பார்த்திருக்கிறேன். இப்போதெல்லாம் கால்பந்து விளையாட்டில் வரும் புள்ளிவிவரங்கள் ஆச்சரியமானவைகளாகவே இருக்கின்றன. ஒவ்வொரு ஆட்டக்காரரும் எவ்வளவு தொலைவு ஓடியிருக்கிறார் என்ற கணக்கெடுத்து அந்த புள்ளிவிவரம் வருகிறது. அதோடு அவர்கள் ஒவ்வொருவரும் அந்த போட்டியில் (precentage of passes) எத்தனை விழுக்காடு பந்தை சரியான ஆளுக்கு அனுப்பியுள்ளார் என்ற புள்ளிவிவரமும் வருகிறது.

எல்லாம் எப்படி?


ஓட்டப் பந்தயத்தில்தான் எத்தனை எத்தனை நுணுக்கங்கள் ...


காத்தடிச்சா பறந்துருவான் போல இருக்கு என்று ஒல்லிப்பசங்களைப் பார்த்து சொல்வதுண்டு. 100 மீட்டர் பந்தயத்தில் காற்று எந்தப் பக்கம் எவ்வளவு விரைவாக வீசியது என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகிறது. ஒரு பந்தயத்தில் காற்று வேகமாக அடித்ததால் 9.78 வினாடியில் ஓடியதை ரிகார்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இவ்வளவு துல்லியமாக கணக்குப் போடுகிறார்கள் அல்லவா, ஆனால் Formula 1 பந்தயத்தில் காலக் கணக்கை 3 டெசிமல் வரை துல்லியமாகச் சொல்லுகிறார்கள். ஆனால் அதே மாதிரி ஏன் 100 மீட்டர் பந்தயத்தில் சொல்வதில்லை - இரண்டு டெசிமல்களோடு நிறுத்திக் கொள்கிறார்கள். ஏன்?

டென்னிஸ் விளையாட்டில் இதுபோன்ற தொழில்நுட்பத்தில் முதலில் வந்தது let balls- களுக்கு ஒரு சத்தம் வந்து காட்டிக் கொடுக்கும். அடுத்து ஒவ்வொரு service-ம் எவ்வளவு வேகத்தில் அடிக்கப்பட்டன என்று உடனுக்குடன் தெரிய ஆரம்பித்தது. இப்போது challenges .. umpire, line umpire-களின் தீர்ப்புக்கு எதிர்த்து விளையாட்டு வீரர்கள் கேள்வி எழுப்பும்போது பந்து விழுந்த இடத்தை உடனே படமாகக் காண்பிக்கிறார்கள். எப்படி ஒவ்வொரு பந்து விழுந்த இடம் உடனே graphics-ல் தெரிகிறது என்று ஆச்சரியம். அப்படியானால் lines முழுதும் sensor இருக்குமா?
என்னமோ போங்க ... மற்ற விளையாட்டு எப்படியோ .. போற போக்கைப் பார்த்தால் டென்னிஸுக்கு நடுவர்களே யாரும் தேவையில்லை என்றே நினைக்கிறேன். இப்போதே கூட நடுவர் இல்லாமலே டென்னிஸ் போட்டிகளை நடத்திட முடியும் என்ற நிலைக்கு வந்தாகி விட்டது என்றே நினைக்கிறேன்.
அப்படி நடுவரில்லாமலேயே ஒரு பந்தயம் நடந்தால் எப்படி இருக்கும்?

ஆனால் ஒன்று எந்த விளையாட்டு எப்படியோ, கால்பந்து போட்டிகளில் வீரர்களோடு வீரர்களாக ஓடிக்கொண்டே இருக்கும் நடுவர் இல்லாமல் போக முடியாது; போனாலும் நன்றாக இருக்கவே இருக்காது. இல்லீங்களா ...?




278. ஒரு நிகழ்வு - ஒரு செய்திப்படம் - ஒரு நூல். 1

*

*
ஒரு நிகழ்வு - ஒரு செய்திப்படம் - ஒரு நூல்... 2

ஒரு நிகழ்வு - ஒரு செய்திப்படம் - ஒரு நூல்... 3

I. ஒரு நிகழ்வு .....


*
LUKAT - L ET US KNOW AND THINK இந்தப் பெயரில் மரத்தடிக் குழுமம் ஒன்றை என் மாணவர்களுக்காகத் தொடர்ந்து நடத்தி வந்தேன். ஆரம்பிக்கும்போது U.P.S.C. தேர்வுகளுக்கு மாணவர்களை உந்துவதற்கு என்ற எண்ணத்தில் ஆரம்பித்தாலும் அதன் பின் பொதுவான எந்த விஷயங்களையும் பற்றிப் பேசவும், விவாதிக்கவும் ஒரு களமாக ஆக்கிக் கொண்டோம். சில ஆண்டுகளில் ஓரிருவர் மட்டுமே வந்ததுமுண்டு; பத்துப் பதினைந்து பேர் என்று பெருங்கூட்டமாக இருந்ததுமுண்டு. நான்கு சுவர்களுக்குள் இருந்துகொண்டு ஆசிரியர்-மாணவர்கள் என்ற நினைப்போடும், ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டுமோவென்ற தயக்கத்தோடும் இருப்பதைத் தவிர்க்க மரத்தடி கல் பெஞ்சுகளே எங்கள் இடமாயிற்று.

இதில் ஆர்வம் காட்டிய சில மாணவர்கள் நல்ல பதவிகளுக்குச் சென்றது திருப்தியளித்தது. அதைவிடவும் இக்கூட்டங்களுக்கு வந்த மாணவர்கள் எல்லோருமே நியாய உணர்வோடு வாழ்க்கையில் சில திடமான வரைமுறைகளோடுதான் பணியாற்ற வேண்டுமென உறுதியோடு இருந்ததே மிக்க பெருமைக்குரியதாகவும் மகிழ்ச்சிக்குரியதாகவும் இருந்தது. கல்லூரி முடித்து நல்ல 'வரும்படி' வரும் வேலையில்(Excise Dept), வீடு தேடி காசு வரும் ஊரில் (ஊர் பெயர் எதுக்கு?!) கிடைத்த ஊரை விட்டு உடனே மாற்றல் வாங்கிய ஒரு மாணவனும், அப்படி ஒரு வேலையையே உதறிவிட்டு வேறு வேலைக்குச் சென்ற மாணவனும் இன்னும் நினைவில் இருக்கிறார்கள். ஆசிரியர் தொழிலில் செய்த வெகு சில நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று என்ற திருப்தி எப்போதும் மனதின் ஒரு ஓரத்தில் உண்டு.

இதில் நான் கற்றதும் அதிகம். Zen பற்றி நான் முதன் முதலில் ஒரு மாணவன் மூலம் கேள்விப்பட்டதும் விளக்கம் பெற்றதும் இங்குதான். ஹைக்கூ பற்றியும் தான் எழுதிய ஹைக்கூகளை எங்களிடையே அரங்கேற்றம் செய்த மாணவனிடமிருந்து அறிந்தேன். ஓஷோ, ஜிட்டு,ஹிட்லர்,பாலஸ்தீனம், கம்யூனிசம், பொருளாதாரம், பட்ஜெட், - எல்லாம் அந்த மரத்தடியில் இடம் பெற்றன(ர்).

டிசம்பர் 6, 1992 இந்திய வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுவிட்ட நாள். அதிலும் ஏதோ சாகா வரம் பெற்றதுபோல் அந்த நாள் ஆகிவிட்டதை நினைக்கும்போது அச்சமாகவும், வருத்தமாகவும் உள்ளது. இந்த நாள் நினைவு நாளாக நின்று நிலைப்பது எந்த அளவு நமக்கும், நம் நாட்டு இறையாண்மைக்கும், நம் எதிர்கால சந்ததிக்கும் நல்லது என்பதை நினைத்துப் பார்ப்பது நல்லது. வளர ஆரம்பித்த வன்மங்களை நீர் ஊற்றி வளர்த்து வேர் விடச்செய்யும் நாளாக இந்த நினைவு நாள் இருப்பது யாருக்கும் நல்லதில்ல; அதிலும் வளர்ந்து வரூம் சமூகத்திற்கு மிகவும் கெடுதலே என்பதை எப்போது எல்லோரும் புரிந்து கொள்ளப் போகிறோமோ?

எங்கள் குழுமத்தில் இந்த நிகழ்விற்கு முந்திய வாரத்திலும், முடிந்த அடுத்த வாரத்திலும் இதைத்தான் விவாதப் பொருளாகக் கொண்டிருந்தோம்.

முந்திய வாரத்தில் பேசும்போது ரொம்ப நிச்சயமாக பாபர் மசூதியில் வன்முறை நடக்கும்; பாபர் மசூதிக்குக் கேடு வரும் என்று பேசினோம். இடித்து விடுவார்கள் என்று நினைக்கவில்லை; ஆனால் ஓர் அடையாளத்திற்காவது ஏதாவது அரங்கேற்றப்படும் என்பதில் நிச்சயமாக இருந்தோம். நரசிம்ம ராவ், கல்யாண் சிங்கிற்கு உத்தரவு தருவதும், நீதி மன்றங்கள் கல்யாண் சிங்கிற்கு உத்தரவு தருவதும் வெறும் கண்துடைப்பே; நடக்கப் போவது நடந்தே தீரும் என்பதே எங்கள் விவாதங்களில் இருந்தது.

நிகழ்வு நடந்து முடிந்த பிறகு அதன் காரணங்கள், விளைவுகள் இவற்றைப் பற்றிப் பேசினோம். எங்களுக்கே இது இப்படிதான் நடக்கப் போகிறது என்பது தெரிந்திருந்த போதும் மத்திய, மாநில அரசும் அமைச்சர்களும் ஏதோ எதிர்பாராதது நடந்தது போலவும், தங்களையும் மீறி இவைகளெல்லாம் நடந்தது போலவும் ஒரு நாடகம் நடத்தியது வேடிக்கையான, வேதனையான விஷயம். passing the buck விளையாட்டு போல் ஒருவரை ஒருவர் குறை சொல்வதும், நடத்தி முடித்த B.J.P., V.H.P., பஜ்ரங் தள் பெரிய காரியம் ஒன்றை செய்து முடித்த மகிழ்ச்சியில் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்ததும் நடந்தேறியது.

இப்படியெல்லாம் நடந்ததற்காக யாரும் மகிழ்ச்சியடையவில்லை. ஆனாலும் காரண காரியங்களைப் பற்றிப் பேசினோம்.

மசூதியை இடித்தது சரி என்று யாருமே நினைக்கவில்லை. அது நடந்திருக்கக்கூடாத ஒரு காரியம்.

ஆனால், 1949 டிசம்பர் 23ம் தேதியன்று மசூதிக்குள் அதே வளாகத்தில் இருந்து வந்த இந்து மதக் கோவிலிலிருந்த ராமர் சிலைகளை இரவோடிரவாக வைத்து அதன்பின் இரு தரப்பினரும் வழக்கு மன்றம் சென்ற பின்,

(1) அதுபோன்ற விவாதங்கள் - disputes - இருக்குமிடங்களை தொழுகைக்குப் பயன்படுத்தக் கூடாது என்பதாக (அந்த சமயத்தில் ஊடகங்களில் வந்த செய்தி) இஸ்லாமிய ஒழுங்கு இருப்பதால் அங்கு இஸ்லாமியர்கள் எந்த தொழுகையும் நடத்துவதில்லை. இது ஒரு புறம்.

அடுத்ததாக, (2) இங்குதான் எங்கள் கடவுள் ராமர் பிறந்தார் என்பது ஒரு சமய நம்பிக்கை சார்ந்த விஷயம். அதற்கு அத்தாட்சி வேண்டுமென்றால் எங்கு போவது? ஒவ்வொரு மதத்திலும் சில நம்பிக்கைகள். இது கிறிஸ்து பிறந்த இடம் என்று ஒன்றைக் காண்பித்து அங்கு ஒரு கோயிலும் கட்டினால், அதற்கு சான்று என்று எப்படிக் கேட்க முடியும்? கேட்டால்தான் எதைச் சான்றாக காண்பிக்க முடியும்? இது நபியின் தாடியிலுள்ள முடி என்று சொன்னால் அது ஒரு நம்பிக்கை சார்ந்த விசயம்தானே ஒழிய சான்றோடு நிரூபிக்க முடிந்த ஒன்றல்ல.

(3) அப்படி நம்பிக்கை கொள்பவர்கள் பெரும்பான்மை மக்களான இந்துக்கள்.

இந்த மூன்றையும் வைத்துப் பார்க்கும்போது இஸ்லாமியர்கள் தாங்கள் தொழுகைக்காக பயன்படுத்தாத ஓரிடத்தை, பெரும்பான்மை இந்துக்களின் சமய நம்பிக்கைக்கு மதிப்பு கொடுத்து ஏன் விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது.

ஆனால், அவ்வாறு அவர்கள் விட்டுக் கொடுத்திருந்தால் இரண்டு காரியங்கள் நடந்திருக்கக் கூடும் என்றும் பேசினோம். இதுதான் சரியான நேரமென்று இந்துக்கள் காசி, துவாரகை போன்ற இடங்களிலும் இதுபோல் பிரச்சனையுள்ள மற்ற இடங்களையும் கேட்க ஆரம்பிக்கலாம். இஸ்லாமியர்கள் விட்டுக் கொடுப்பதை அவர்களின் பெருந்தன்மை என்று பார்க்காமல் அவர்களது பலவீனம் என்று எடை போட்டுவிடவும் கூடும். மைனாரிட்டிகளாக இருப்பவர்களின் எதிர்காலத்துக்கு இது நல்லதல்ல.


எப்போதுமே எங்களின் விவாதங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட முடிவைத் தரவேண்டும் என்று நாங்கள் நினைப்பதில்லை. யாரு யாருக்கு எந்த விஷயங்கள் சரியாகப் படுகிறதோ அதை நாங்கள் எடுத்துச் சொல்வதுண்டு. எல்லோரும் ஒருமித்த கருத்தொன்றுக்கு வரவேண்டுமென எப்போதும் நினைப்பதில்லை.

அன்றைய சந்திப்பிலும் இதுபோன்று அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பேசிக் கலைந்தோம்.


........................................................ தொடரும்.

Wednesday, November 19, 2008

277. பொன்னியின் செல்வனும் EXODUS-ம்

*

*

வாழ்க்கையில் இதுவரை மும்முறை வாசித்த நூல்கள் இரண்டே இரண்டு. முதல் நூல்: கல்கியின் பொன்னியின் செல்வன். இரண்டாவது: LEON URIS எழுதிய EXODUS. ஒவ்வொரு முறையுமே இரண்டு கதைகளுமே புதியதாய்த் தோன்றின. இரண்டுமே வரலாற்றை வைத்து புனையப்பட்ட நவீனங்கள்.

முதல் நூலை முதலாவதாக வாசித்தபோது பள்ளிப் பருவத்தின் இறுதி நிலை. நானும் வந்தியத்தேவனைத் தொடர்ந்து அவர் பின்னாலேயே இன்னொரு குதிரையில் சென்றேன். ஆழ்வார்க்கடியானும், பூங்குழலியும், பொன்னியின் செல்வரும், எல்லாரையும் விட குந்தவியும் மிகவும் பிடித்துப் போனார்கள். நந்தினியையும் பெரிய பழுவேட்டரையும் பார்த்து கொஞ்சம் பயந்ததும் உண்மை. மூன்றாம் பாகத்தின் நடுவில் என்றுதான் நினைக்கிறேன்; சிறையில் இருக்கும் வந்தியத்தேவனை குந்தவி சந்தித்து உரையாடும் இடம், அதற்கு மணியம் வரைந்த ஓவியம் .. ம்ம்.. எல்லாமே மிகவும் ருசித்தது. அந்தக் காலத்தில் பிறக்காமல் போனோமே என்று வருந்த வைத்த கதை.

இரண்டாம் முறையும் உருகி உருகி வாசித்து மகிழ்ந்தது முதலில் வேலைக்கமர்ந்த இடம் தஞ்சை அருகில் உள்ள ஒரு கல்லூரி. வாசம் தஞ்சாவூர். அவ்வப்போது பெரிய கோயிலுக்கும், சிவகங்கை தோட்டத்துக்கும் செல்லும்போதெல்லாம் கூடவே வந்தியத்தேவனும் குந்தவியும் வருவதுபோல் நினைத்துக் கொண்டதும் உண்டு. அந்தப் பெரிய கோவில் கோபுரத்தை அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் ராஜராஜனின் காலத்தை நினைத்துப் பெருமூச்சு விட்டதும் உண்டு. அந்த கோபுரத்தின் உச்சியில் இருக்கும் அந்தப் பெரிய கல், அதனை எப்படி மேலே ஏற்றியிருப்பார்கள் என்ற கேள்வியும், சாரப்பள்ளம் என்ற ஊரிலிருந்து சாரம்கட்டி ஏற்றினார்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டதை வைத்து ஆழ்ந்த பிரமிப்பில் இருந்து வந்திருந்தேன். அந்த பிரமிப்பு ஓகை எழுதிய கப்பிப்பயல் வலைப்பதிவு வாசிப்பது வரை நீடித்தது.


இஸ்ரேல் என்ற நாடு உருவான நிகழ்வை வைத்து, உண்மையான மனிதர்களைக் கதை மாந்தர்களாக வைத்து புதினமாக எழுதப்பட்ட Exodus வெவ்வேறு இடங்களில் கண்ணீரை வரவைத்த வரலாற்று நவீனம். ஹிட்லரின் வெஞ்சினமும் யூதர்கள் ghetto-க்களில் பட்ட வேதனைகளும், kibbutz-களில் யூத இளைஞர்களின் வாழ்க்கையும் எல்லாமே கற்பனை என்ற சுவடே இல்லாதபடி நேரில் கண்முன் விரிவதுபோல் நகரும் கதை. இஸ்ரேல் என்றொரு நாடு உருவாவதற்கு U.N.O.- வில் ஓட்டெடுப்பு நடந்த பகுதியை வாசிக்கும்போது மூச்சை இறுக்கிப் பிடித்துதான் வாசிக்க வேண்டியதிருந்தது. ஐரோப்பிய நாடுகள் பெரும்பான்மையாக ஆதரித்து ஓட்டிட இந்தியாவும் இன்னும் சில கீழ்த்திசை நாடுகளும் எதிர்த்து ஓட்டுப் போட,பத்து நாடுகள் ஓட்டு போடாமல் "நடுநிலை" வகிக்க, 33:10 என்ற கணக்கில் இஸ்ரேல் ஒரு புதிய நாடாக அங்கீகரிக்கப் படும்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது.

இந்தப் புத்தகத்தின் தாக்கத்தால் Leon Uris எழுதிய மற்ற நாவல்களையும் தொடர்ந்து வாசித்தேன். எல்லாமே இஸ்ரேல் நாட்டின் அல்லது யூதர்களின் இரண்டாம் உலக யுத்த காலத்தை ஒட்டிய கதைகளே. வாசிக்க வாசிக்க யூதர்களின் மேல் ஒரு ஈர்ப்பு. அதோடின்றி அதன் பின் படித்த சில நூற்கள், அதிலும் முக்கியமாக 90 minutes at Entebbe. ஓ! இஸ்ரேயலர்கள் மேல் ஒரு பாசமே பிறந்துவிட்டது. கடைசியாகச் சொன்னது கதையல்ல; நடந்த ஒரு நிகழ்வு. சினிமாவாகவும் வந்தது. இடி அமீனின் ஆட்சிக்காலத்தில் உகண்டாவிலுள்ள Entebbe விமான நிலையதிற்குக் கடத்தப்பட்ட விமானத்தில் இருந்த ஏறத்தாழ 150 யூதர்கள் மட்டும் பிணைக்கைதிகளாக வைக்கப் பட மூன்றே நாட்களில் ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயமும் முன்பாகவே திட்டமிடப்பட்டு 53 நிமிடங்களில் இரவோடிரவாக அனைவரும் காப்பாற்றப் படுகிறார்கள். யூதர்களின் பக்கம் உயிர்ச்சேதம் - கமான்டோக்களைத் தலைமை ஏற்றுச் சென்ற இளம் வயது Netanyahu மட்டுமே. கதையை வாசிக்கும்போதே நம்மை அது முழுமையாக ஈர்த்துவிடும்.

இஸ்ரேல் தோற்றுவிக்கப்பட்ட பின் அதன்பிறகு 1967-ல் நடந்த 'ஆறு நாள் யுத்தம்' - Six days war - அதில் அவர்கள் நடத்திய வியூகங்கள் எல்லாமே ஆச்சரியமாக இருந்தது மட்டுமில்லாமல் இப்போதுள்ள 'அகண்ட இஸ்ரேலுக்கு' அந்தப் போர்க்களமே வித்திட்டது. இது பற்றாது என்பது போல் உலகத்தில் இதுவரை அறிவுக்கூர்மைக்கு யூதர்கள் போல் வேறு எந்த race-ம் இணை இல்லை என்பதாக - உதாரணமாக, இதுவரை நோபல் பரிசுகள் வாங்கியவர்களில் 60 விழுக்காடு அவர்கள்தானாம்; மார்க்ஸிலிருந்து ஸ்பீல்பெர்க் வரை எந்த துறையிலும் அவர்கள் பெயர்களே; அந்தக் காலகட்டத்தில் ஆங்கில நாவல்கள் நன்றாகவே வாசித்ததுண்டு.அது Irving Wallace ஆக இருக்கட்டும் இல்லை Arthur Hailey ஆக இருக்கட்டும் அமெரிக்கர், கனடாக்காரர் என்று நினைத்துக் கொண்டிருப்போம்; பார்த்தால் யூதராகவே இருப்பார்கள். இதையெல்லாம் பார்த்து ஒரு பிரமிப்பு.

EXODUS வாசிக்க ஆரம்பித்து யூதர்களின் அபிமானியாக ஆகிப் போனேன். இந்த நிலை முற்றிலும் இப்போது மாறிவிட்டதாகச் சொல்ல முடியாவிட்டாலும் பாலஸ்தீனப் பிரச்சனையில் அவர்களின் விடாப்பிடியும், எந்த சமாதான உடன்படிக்கைக்கும் வராத சண்டித்தனத்தையும் பார்க்கும்போது பிரமிப்பையும் தாண்டி எரிச்சல்தான் வருகிறது.

இந்த நேரத்தில் நினைவுக்கு வரும் இன்னொரு விதயம்: எனக்கோ EXODUS வாசித்து இப்படியான பிரமிப்பு உண்டானது. கதையும் மிகவும் பிடித்துப் போக சில நண்பர்களிடம் இந்தப் புத்தகத்தைப் பரிந்துரைத்திருக்கிறேன். அதில் இருவர் என்னால் இதை வாசித்தார்கள். ஆனால் எனக்கு வந்த பிரமிப்பும் பச்சாதாபமும் அவர்கள் இருவருக்கும் ஏற்படவேயில்லை. அதிலும் ஒருவர் நல்ல கிறித்துவர்; அவருக்கு ஏசுவை சிலுவையில் அறைந்து கொன்றது யூதர்கள்தானே என்ற வெறுப்பு! (அவருக்கு அடுததாக Holy Blood; Holy Grail வாசிக்கக் கொடுக்கணும்; அதில் ரோமர்கள்தான் ஏசுவைக் கொன்றார்கள்; யூதர்கள் அல்ல என்று எழுதியிருக்கிறார்கள்.)இன்னொருவருக்கு இந்த யூதப் பசங்க எப்பவுமே இப்படிதான்; very cunning .. dubious .. undependable என்று adjectives-ஆக அடுக்கினார்.

ஒரே புத்தகம்தான்; ஆனால் எனக்கு ஏற்பட்ட தாக்கம் அவர்கள் இருவரிடமுமில்லை. perspectives - நாம் பார்க்கும் பார்வைகள்தான் எவ்வளவு ஆளாளுக்கு வேறு படுகின்றன!


பி.கு.
எனக்கு யூதர்களோடான ஒரு first hand experience: வியாபாரம் செய்வதில், பேரம் பேசுவதில் கெட்டிக்காரர்கள் என்பது ஒரு பரவலான செய்தி.

அமெரிக்கா சென்றிருந்த போது ஒரு டிஜிட்டல் கேமிராவை நியூயார்க்கின் பெரிய போட்டோ கடை ஒன்றில் வாங்கினேன். அது ஒரு யூதர்களின் கடை. அதோடு வைத்திருந்த Nikon SLR காமிராவிற்கு ஒரு குளோசப் ரிங் வாங்க நினைத்தேன். ஒன்றைக் காண்பித்தார்கள். பிசிக்கி பிசிக்கி செலவு செய்த எனக்கு அவர்கள் சொன்ன விலை அதிகமாயிருந்தது. யோசித்தேன். அதற்குள் விற்பனையாளன் இந்த ஒன்று மட்டும்தான் இருக்கிறது என்றான். கடைசி piece .. அதனால் விலை குறைத்து கொடுக்கலாமே என்றேன். ஒரே piece .. அதனால் விலை கூடத்தான் சொல்லவேண்டும் என்றான் சட்டென. ராசா, நல்லா பேசுறப்பா என்று நினைத்துக் கொண்டு வந்துவிட்டேன்.


*

Tuesday, November 18, 2008

276. உங்களுக்குப் பிடித்தவைகள்- ஒரு புள்ளிவிவரக் கணக்கு

*

*

'The proof of pudding is in the eating' அப்டின்னு சொல்லுவாங்க. சரியா சமைச்சா சட்டிதான் மிஞ்சும் என்று தமிழ்ப்படுத்துவோமா? இந்த லாஜிக்கை அப்படியே நம்ம பதிவுகளுக்குக் கொண்டுவந்து நல்ல பதிவுன்னா நிறைய பின்னூட்டம் அப்டின்னு சொல்லலாமா கூடாதா? கூடாதுன்னுதான்னு நினைக்கிறேன். ஏன்னா ரொம்ப நல்ல சீரியசான பதிவுகள் பக்கம் நிறைய பதிவர்கள் எதுக்குடா வம்புன்னு போறதேயில்லை; அப்படியே போய் எட்டிப் பார்த்தாலும் பின்னூட்டம் போடாம ஜகா வாங்கிக்கிறதுதான் நடப்பு. மொக்கைப் பதிவுன்னா கேக்காம கொள்ளாம கும்மிதான். மீ த பர்ஸ்ட் ... ஸ்டார்ட் த ம்யூஜிக் ... ஐ'ம் த எஸ்கேப் .. ரிப்பீட்டேய் .. இப்படி பல டெம்ப்ளேட் இருக்கவே இருக்கு. காசா பணமான்னு அதில ஒண்ணை எடுத்துப் போட்டுட்டு போய்க்கிட்டே இருப்போம்.

இந்த உண்மையெல்லாம் தெரிஞ்சாலுமே புதுசா ஒரு பதிவு போட்டுட்டு, உடனே சில பல பதிவுலக நண்பர்களுக்கு - நான் உனக்கு; நீ எனக்கு அப்டின்ற ஒரு உடன்படிக்கையோடு - பதிவு ஒண்ணு புதுசா போட்டிருக்கேன் அப்டின்னு சேதி சொல்லி, உருமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கு மாதிரி யாருடா பின்னூட்டம் போட வருவாங்கன்னு காத்திருந்து, ஆளு வரலைன்னாலும் test அப்டின்னு நமக்கு நாமே திட்டத்தை நிறைவேற்றி பின்னூட்ட கயமை செய்திட்டு, வந்த பின்னூட்டத்துக்கும் நன்றின்னு ஒரு வார்த்தை சொன்னாலும் அதையும் ஆளாளுக்குத் தனித் தனியா போட்டு பின்னூட்ட எண்ணிக்கையைக் கூட்டிக்கிட்டு .... இதெல்லாம் பதிவுலகில் சகஜமப்பா .. இல்லீங்களா?

இன்று வரை நிலைமை இப்படித்தான் என்றாலும் பதிய ஆரம்பித்த காலத்தில் யாருக்குமே இது ஒரு expecting mother-ன் காத்திருப்புதான். அப்படி காத்திருந்து என் முதல் பதிவுக்கு வாராது வந்த மாமணியாக வந்த முதல் பின்னூட்டக்காரர் பெனாத்தல். அவரு என்ன இம்புட்டு நல்லவரா.. ஒரே பின்னூட்டத்தை இரண்டுதடவை போட்டு என்னை மகிழ்வித்தார். இன்று வரை அந்தப் பதிவில் நான் அவருக்கு 'நன்னி'கூட சொல்லவில்லை. அடுத்து வந்த பதிவுகளுக்கெல்லாமே ஒற்றைப்படை எண்ணளவில்தான் பின்னூட்டங்கள். ஒன்பதைத் தாண்டுவேனா என்றது. 13 பதிவு போட்டதும் ஏறத்தாழ ஒரு மாசம் ப்ரேக்.நியுமராலஜி எஃபெக்ட் போலும்! அடுத்து 14-வது பதிவு போட்டேன் பாருங்க ... 21 பின்னூட்டம் (என்னுடைய நன்றியறிவிப்புகளையும் சேர்த்துதான்!) அசந்திட்டேன். அப்படி என்னதான் எழுதிட்டோம்னு இப்ப எடுத்துப் பார்த்தேன். நிச்சயமா இன்னைக்கி நான் எழுதுற அழகைவிட அன்றைக்கு நல்லாத்தான் 14. சொந்தக்கதை...சோகக்கதை என்ற தலைப்பில் எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது. அந்த நாள் மகிழ்ச்சியைக் கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்து மகிழும்போது ஒரு எண்ணம்: ஏன் நம் பதிவுகளூக்கு இதுவரை வந்த பின்னூட்டங்களை வைத்து ஒரு - statistical analysis - புள்ளிவிவரக் கணக்கை வைத்து ஆராய்ச்சி ஒண்ணு செய்யக்கூடாதுன்னு தோன்றியது. அதன் பலன் கீழே!

இதுவரை அதிகப் பின்னூட்டங்கள் பெற்ற என் பதிவு: 09.11.06-----187. CATCH 22* / மதவாதம் - யெஸ்.பா.வுக்கு பதில் -- 152 பின்னூட்டங்கள்.

அடுத்து 115 பின்னூட்டங்கள் பெற்ற பதிவு: 20.09.08-----269. சல்மான்கான் பிடித்த பிள்ளையார்

இந்த இரு பதிவுகளுமே மதங்களைப் பற்றியவை.

மூன்றாவதாக, 26.12.06-----194. LET'S HIT THE NAIL....*** 110 பின்னூட்டங்கள்.


இது சாதிகளைப் பற்றிய பதிவு. சென்ற வாரம் நடந்தேறிய Dr. அம்பேத்கார் சட்டக் கல்லூரி தகராறுக்கும் இப்பதிவின் அடக்கப் பொருள் சரியாகவே பொருந்துகிறது. (இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன .. இந்தப் பதிவின் அடக்கப் பொருள் நம் சமூகத்திற்கு எப்போதும் பொருந்தும் என்பதே ஒரு வேதனையான காரியம்தான்.)

எந்த அறிவியல் சோதனையின் முடிபும் அந்த கண்டுபிடிப்போடு சார்ந்த வேறு சில விசயங்களோடும் ஒத்திருக்க வேண்டும்; correlation இருக்கவேண்டுமென்பது நியதி. அப்படி மேலே சொன்ன புள்ளிவிவரம் மற்ற என் பதிவுகளூக்கும் பொருந்தி வருகிறதா என்று பார்க்க நினைத்தேன்.

அதன்படி, என் பதிவுகளின் (category) வகைகளிலிருந்து நான் அதிகமாக எழுதிய 6 வகைகளை எடுத்தேன்.

1) இடப் பங்கீடு ---மொத்தம் 21 பதிவுகள்; 301 பின்னூட்டங்கள். கணக்கிட்டால்
301/21 = 14.3/Post
சராசரியாக ஒவ்வொரு பதிவுக்கும் 14.3 பின்னூட்டங்கள்.

2) ஜோதிடம் --- மொத்தம் 12 பதிவுகள்; 195 பின்னூட்டங்கள். 195/12 = 16.3/post சராசரியாக ஒவ்வொரு பதிவுக்கும் 16.3 பின்னூட்டங்கள்.

3) சொந்தக் கதை : மொத்தம் 47 பதிவுகள்; 833 பின்னூட்டங்கள்; 833/ 47 = 17.7/post
சராசரியாக ஒவ்வொரு பதிவுக்கும் 17.7 பின்னூட்டங்கள்.

4) சமூகம் --- மொத்தம் 53 பதிவுகள்; 1475 பின்னூட்டங்கள்; 1475 / 53 = 27.8/post
சராசரியாக ஒவ்வொரு பதிவுக்கும் 27.8 பின்னூட்டங்கள்.

5) திரைப்படங்கள் --- மொத்தம் 24 பதிவுகள்;726 பின்னூட்டங்கள்; 726 / 24 = 30.3post சராசரியாக ஒவ்வொரு பதிவுக்கும் 30.3 பின்னூட்டங்கள்.

6) மதங்கள் --- மொத்தம் 25 பதிவுகள்; 824 பின்னூட்டங்கள்; 824 /25 = 33/post
சராசரியாக ஒவ்வொரு பதிவுக்கும் 33 பின்னூட்டங்கள்.

இந்த முடிவுகளை histogram-ல் காண்பித்துள்ளேன்.



கிடைத்திருக்கும் முடிவுகளை சிறிது ஆராய்ந்தால் ....

இதில் சில ஆச்சரியங்கள்.

இடப்பங்கீடு பற்றி எண்ணிக்கையில் குறைவான பதிவுகள் இட்டிருந்தாலும், 'திசைகள்' இணைய இதழுக்காக அழைப்பின் பேரில் எழுதி என் வலைப்பூவில் அதனை மீள் + நீள் பதிவாக போட்ட போதும், அதன் பின் நான் அதே வகையில் எழுதிய பதிவுகளிலும் சூடான சில சர்ச்சைகள் வந்து கொண்டிருந்தமையால் அதற்கு வந்த பின்னூட்டங்கள் அதிகமாக இருக்குமென அனுமானித்திருந்தேன். ஆனால் அப்படி வராமலிருந்திருப்பதைப் பார்க்கும்போது சிறிது ஏமாற்றம்தான்.

மதங்கள் பற்றிய பதிவுகளை ஆரம்பித்தபோது முதல் பதிவிற்கே நிறைய கேள்விகள் வர ஆரம்பித்தன. அவைகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தால் நான் நினைத்திருப்பவைகளைக் கோர்வையாகச் சொல்ல முடியாமல் போய்விடும் என்பதால் பின்னூட்டப் பெட்டியைப் பூட்டி வைத்து விட்டு, நான் நினைத்த பகுதிகளை எழுதிவிட்டு பின்னூட்டப் பெட்டியைத் திறந்த போது பின்னூட்டங்கள் எதிர்பார்த்தது போல் கொட்டவில்லை; ஆனால் அதன்பின் பின்னூட்டங்கள் ஓரளவு வந்தன. ஆனாலும் இருக்கும் வகைகளில் மதங்களுக்குத்தான் அதிக பின்னூட்ட சராசரி வந்திருக்குமென்று நினைக்கவில்லைதான்.

மற்ற வகைகளின் முடிவுகளில் சொல்லுமளவிற்கு ஏதுமில்லை.


இதுபோன்ற "ஆராய்ச்சிகளில்" வரும் முடிவுகளை வைத்து சில உறுதிப்பாடுகளை எடுக்க முடியும். அதுபோல் இந்த முடிவுகளை வைத்து நான் சில உறுதிப் பாடுகளை எடுத்துள்ளேன்; சரியா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். ஆனாலும் முடிவுகளுக்கு முன்னால் சொல்லவேண்டியது: பதிவுகளின் தாக்கமும் வீச்சும் அந்தப் பதிவு பெரும் பின்னூட்ட எண்ணிக்கையோடு பிணைந்த விஷயம் என்ற ஒரு கருத்தாக்கத்தோடுதான் இந்த முடிவுகள்.

இந்த முன் முடிவோடு பார்க்கும்போது --

என் பதிவுகளில் மதங்கள் பற்றியவைகளின் வீச்சு அதிகமாக இருந்திருக்கிறது; படிக்கப் பட்டிருக்கிறது; அதிக தாக்கம் கொண்டிருந்திருக்கிறது. ஆகவே அவைகளை இன்னும் ஆழமாக அதிகமாக எழுதுவது பதிவர்களுக்கு ஏற்புடைத்ததாக இருக்கும்.

அப்ப, நீங்க என்ன சொல்றீங்க ... ?

Monday, November 17, 2008

275. எங்க காலத்தில எல்லாம் ..…

*

*
"பண்புடன்" வலையிதழுக்காக எழுதிப் பதிப்பித்த இப்பதிவை மீண்டும் உங்கள் பார்வைக்கு ...



விலைவாசி அன்று ...


அப்பா ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்த போது 20 ரூபாய் சம்பளமாம்; அதில் 10 ரூபாய் கொடுத்து மதுரை வெங்கலக்கடைத் தெருவில் இன்றும் உள்ள பாண்டியன் ஹோட்டலில் இரண்டுபேர் திருப்தியாக ஒரு மாத முழுமைக்கும் மதிய எடுப்புச் சாப்பாடு முடித்து விடுவோம் என்பார்கள். கேட்கும்போது ஆச்சரியாக இருந்தது. பவுன் விலை எட்டு ரூபாய் பத்து ரூபாய் என்னும்போதும் அப்படித்தான் தோன்றியது.


ஆனா இப்போ நான் கடந்து வந்த பாதையிலே அதேபோல பழங்கதையைப் பேசினா எனக்கே ரொம்பவே இன்ட்ரஸ்டிங்காகத்தான் இருக்கு. விலைவாசியில் இந்தக் காலத்தோடு ஒப்பிட்டு பார்க்கிறதுக்கு ரெண்டு விஷயம் நினைவிலிருக்கு. அது இந்த நாட்டு வாழைப்பழமும் உப்பும். உப்பு வண்டிக்காரர் ரோடு வழியே தள்ளுவண்டி தள்ளிக்கிட்டு சத்தம் போட்டு கூவி வித்துட்டுப் போவார். 'ரூவாய்க்கு 20 படி உப்பே' அப்டின்னு கூவிக்கிட்டு போற சத்தம் இன்னும்கூட கேக்குது. கொஞ்ச நாள் கழிச்சி அதே வியாபாரி 'அணாவுக்கு ஒரு படி உப்பு' அப்டின்னு கத்திக்கிட்டு வித்தார். இந்த அணா விவரம் புரியாத பசங்களுக்கு விவரம் சொல்லணுமே; அதாவது ஒரு அணான்றது இன்னிய கணக்குக்கு 6 பைசா; ரூபாய்க்கு 16 அணா.


இந்த ஓரணாவுக்கு அப்போவெல்லாம் வாழைப்பழம் வாங்க அப்பா தெரு முக்குக்கடைக்கு அனுப்புவாங்க. போகும்போதே அணாவுக்கு எத்தனைன்னு கேளு; நாலு'ம்பான்; ஆறு கேளு; அஞ்சு தருவான்னு மொதல்லேயே திரைக்கதை வசனம் எல்லாம் சொல்லித் தந்துருவாங்க. கடைக்குப் போனா அதே மாதிரிதான் நடக்கும். அஞ்சு பழம் – அப்போ பொதுவா கிடைக்கிறது நாட்டுப் பழம்தான்; எப்போவாவது பச்சைப் பழம் கிடைக்கும் – அப்பா சொன்னது மாதிரி வாங்கிட்டு வருவேன். இன்னைய கணக்குக்கு ஒரு ரூபாய்க்கு 80 பழம் வாங்கிட்டு வர்ரது மாதிரி ! ஆனா இப்போ நிலவரம் நாட்டு வாழைப்பழம் ஒண்ணே ரெண்டு ரூபாயை நெருங்கியிருச்சி ! ம்ம்..ம் .. அது அந்தக் காலம்.


அக்டோபர் 1966-ல் தஞ்சையருகில் உள்ள ஒரு கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்தேன். "சித்தாளு: வேலை. அதாவது அப்போதிருந்த demonstrator என்ற வேலை. விரிவுரையாளர் வேலைக்குரிய தகுதி இருந்தாலும் wire pulling போன்றவைகள் இல்லாமல் போவதாலோ, இல்லை நமது 'ராசியினாலோ' இந்த சித்தாள் வேலையில் சேருவதுண்டு. அப்படி சேர்ந்த போது முதல் மாதச் சம்பளம் 198 ரூபாய். அதில் வீட்டுக்கு வேறு கட்டாயம் 30 – 50 ரூபாய் அனுப்பணும். முடிவெட்ற கடை, சினிமா தியேட்டர்கள் தவிர எல்லாத்துக்கும் இருக்கவே இருக்கு மாத அக்கவுண்ட். அதுனால கையில காசு இல்லாட்டியும் பிரம்மச்சாரி வாழ்க்கை நல்லாவே போச்சு. நானும் அறை நண்பன் கன்னையனும் மாதச் சம்பளம் – கவரில் போட்டு ரூபாய்,பைசா கணக்கில் தருவார்கள் – வந்ததும் மாலை அறைக்கு வந்ததும் படுக்கையைத் தட்டி விரித்துப் போட்டு ரூபாய் பைசா எல்லாத்தையும் அதில் பரப்பி, அதுக்கு மேல் ஹாயாக சாய்ந்து ஒரு 'தம்' இழுக்குறது அடிக்கடி நடக்கும். அதாவது, நாங்கல்லாம் அப்படி 'காசுல புரளுரோமாம்'! அடுத்த நாளிலிருந்து மறுபடி அக்கவுண்ட் தான்.


பொருட்களின் விலைகள் பற்றி பேசும்போது நினைவுக்கு வர்ர இன்னொரு விஷயம். இந்த பெட்ரோல் விலை. 1970 அக்டோபரில் ஜாவா பைக் வாங்கினேன். அப்போது ஒரு லிட்டர் விலை ஒரு ரூபாய் ஏழு காசுன்னு நினைக்கிறேன். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலையேறி மூன்று ரூபாய் சில்லரை ஆயிற்று. அதிலிருந்து முதல் தடவையாக ஒரு பெரிய ஜம்ப்; ஆறு ரூபாயும் சில்லறையுமாயிற்று. அது ஒரு பெரிய oil shock ஆக இருந்தது. பிறகு .. பழகிவிட்டது ... இன்றுவரை !


75-லிருந்து 90 வரை hard to meet both ends meet என்பார்களே அந்த நிலைதான். ஒரு மாதிரி வண்டி ஓடும். பல சிக்கன வழிகள் அது இதுன்னு செய்து பார்த்து வாழ்க்கையை ஓட்டணும். அதில் ஒரு முயற்சியாக ஒவ்வொரு தினச் செலவையும் எழுதி வைத்துப் பார்த்தோம். எல்லாம் ஒண்ணாதான் இருந்திச்சின்னு பிறகு அந்த முயற்சியையெல்லாம் விட்டுட்டு வாழ்க்கையை ஓட்டினோம் சந்தோஷமாக. அந்த சமயத்தில் எழுதிய கணக்கு நோட்டின் சில பக்கங்களை இன்னும் பத்திரமா வச்சிருக்கேன். அதைப் பார்க்கும்போது எனக்கே ஆச்சரியமா இருக்கு. ரொம்ப பெர்சனலானதுதான். இருந்தாலும் போனா போகுது ஒண்ணுரெண்டை உங்களுக்கும் காண்பிக்கிறேன். பார்த்துக்கங்க. வேற யார்ட்டயும் சொல்ல வேண்டாம், சரியா?


படம்: 1


மூன்றுமாதக் குழந்தையாயிருந்த மகளுக்கு வாங்கிய Farex டப்பாவின் விலையைப் பார்த்துக் கொள்ளுங்கள்! ஏழே முக்கால் ரூபாய்! இன்னைக்கி என்ன விலைன்னு தெரிஞ்சிக்குவோமே என்று கடையில் போய்க் கேட்டேன். 120 ரூபாயாமே!

படம்: 2



1975, ஜூலை சம்பளம் 600 வாங்கி 623 ரூபாய் செலவழித்து கணக்கை எப்படியோ தங்கமணி டகால்டி வேலை செஞ்சு ( நம்ம நிதியமைச்சர்களெல்லாம் இவங்கள எல்லாம் பாத்துதான் பட்ஜெட் போடுவாங்களோ?) 598.35-க்குக் கொண்டுவந்து பட்ஜெட்டைச் சரி கட்டியிருக்காங்க பாருங்க!



படம் 3:



அக்டோபர் 75 .. சம்பளம் 600 ரூபாய்.. முதல் தேதி அன்னைக்கி குடும்பத்தோடு வெளியே ஜாலியா போய் டிபன் சாப்பிட்டுட்டு காய்கறி வாங்கிட்டு வீட்டு வாடகை 80 ரூபாயை கொடுத்துட்டு …. அன்னைக்கி மொத்த செலவு = ரூ. 88



படம் 4 :


அந்த மாச நடுவில் இன்னொரு சினிமாவுக்கு டாக்டருக்கு அதுக்கு இதுக்குன்னு ஒரு 20ரூபாய் 60 பைசா செலவு.அனேகமா மூணு அல்லது அஞ்சு மாச தவணையில் வாங்கின சீலிங் ஃபேனுக்கு 45 ரூபாய்; ஜாவாவுக்கு பெட்ரோல் 7.50(அப்போ ஒரு காலன் ஃ 5 லிட்டர் போட்டிருப்பேன் ஆயிலோடு சேர்த்து!)

படம்: 6


சே! பின்னிட்டம்ல … ஆகஸ்ட் மாசம் 7ரூபாய் 25 பைசா பட்ஜெட்டில் உபரித்தொகை இருந்திருக்கிறதே!


*

*

274. திண்ணை காலியாயிருச்சு.

ஆரம்பத்திலேயே கொஞ்சம் தடுக்கிக்கொண்டேனோ? நான் புரிந்துகொண்ட வரை ஞாயிற்றுக்கிழமை காலை 10.30க்கு முதல் பதிவிடச் சொன்னதாக நினைத்து அப்படியே போட்டும் விட்டேன். அதிலும் கூட அப்பதிவை - upload - ஏற்றுவதில் ஒரு சின்னத் தகராறு. எழுதிய தேதியில் ஒரு புள்ளி விட்டுப் போக நான் ஏறுவேனா என்று பதிவு அடம் பிடிக்க கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து சீனா உதவ .. ஒரு வழியாக ஏற்றி முடித்தேன். ஏன் இன்னும் 'வினவு' இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, பதிவுலகில் பழம் தின்று கொட்டை போட்ட துளசி வந்து மண்டையில் ஒரு சின்னத் தட்டு தட்டிய பிறகுதான் ஏதும் தவறு செய்திருப்போமோவென தோன்றியது. வழக்கமாக திங்கட்கிழமைதான் புதிய நட்சத்திரங்கள் தமிழ்மண முகப்பு வானத்தில் தோன்றும் என்பது தெரிந்திருந்தாலும் ஒருவேளை இப்போது ஞாயிறன்றே (ஞாயிறும்)சூரியனும் நட்சத்திரமும் ஒரு சேர வரவைக்க ஆரம்பித்திருக்கலாமோ என்று எண்ணியதால் இந்த தவறு.

யாருக்கும் இதனால் ஏதும் பாதிப்பு இல்லைதான். இருந்தாலும் 'வினவு' இருக்கும்போதே நானும் தலையைக் காட்டியது கொஞ்சம் சின்ன நெருடலாக இருக்கிறது. புஷ் இருக்கும்போதே ஒசாபாமா தேர்ந்தெடுக்கப் பட்டு விட்டாலும் ஜனவரி மாதம் வரை பின்னவர் பொறுத்திருக்க வேண்டுமல்லவா .. இப்படி 'முந்திரிக்கொட்டை' மாதிரி முந்திக் கொண்டமைக்கு வருந்துகிறேன். வினவு குழுவினரிடம் மாப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அட! நான் தான் மொடாக்குத்தனமா தப்பு பண்ணியிருந்தேன் என்றால் அதோடு தமிழ்மண அறிவிப்பாக இப்படி ஒன்று வருகிறது ....

//தளத்தின் பராமரிப்பு வேலைகளுக்குப் பிறகு புது இடுகைகளை தமிழ்மணத்தில் இணைப்பதில் பிரச்சனைகள் உள்ளது //

பிரச்சனைகள் தீர்ந்த பிறகு அடுத்த பதிவிடலாமா அல்லது காத்திருக்கலாமா என்று தெரியவில்லை.
உன் கடன் பணி செய்வதே; பலனை எதிர்பாராதே அப்டின்னு நினச்சுக்கலாமா அப்டின்னா, சூப்பர் ஸ்டார் வேற ஒரு கீதாபதேசம் செஞ்சிருக்கார்.

பதிவைப் போடு; பின்னூட்டம் எதிர்பார்க்காதே - இதுதான் சரியா? இல்லை சூ.ஸ். சொன்னது மாதிரி பதிவைப் போடு; பின்னூட்டம் எதிர்பார் அப்டின்றது சரியா? பின்னதுதான் எல்லாப் பதிவர்களுக்கும் சரி என்று தோன்றும். அதனால், நான் காத்திருக்க வேண்டும்.

ம்ம்...ம்ம்.. மதுரைக்கு இப்படி ஒரு சோதனையா!!??

Sunday, November 16, 2008

273. மீண்டும் - வந்தனம்..வந்தனம்...மகா ஜனங்களுக்கு வந்தனம்

*

*

24.04.2005-ல் முதல் பதிவு; நம் தமிழ்மணப் பதிவுலகத்தின் 465-வது netizen என்று நினைக்கிறேன். 02.10.2005-ல் 78 வது பதிவு -- 78.வந்தனம்..வந்தனம்...மகா ஜனங்களுக்கு வந்தனம். -- முதல் முறை நட்சத்திரமாக ஆனதும் இட்ட பதிவு. அதனால் அதே தலைப்பு இன்றும்.


அந்த முறை நட்சத்திரமானது மிகவும் கிளர்ச்சியாயிருந்தது உண்மை. இந்த முறை மறுபடியும் நட்சத்திரமானது நிச்சயமாக முதல் முறை கொடுத்த அளவிற்குக் கிளர்ச்சியைக் கொடுக்கவில்லை என்றாலும் மிக்க மகிழ்ச்சியே. இம்முறை முதல்முறை இல்லாத சிறிது தயக்கமும் சேர்ந்து கொண்டது. முதல்முறை ஆசை ஆசையாய் மகிழ்ச்சியோடு மதியிடமிருந்து வந்த மயிலை வாசித்து மகிழ்ந்ததுபோல் இப்போது இல்லைதான். அதோடு முதல்முறை ஏதோ நான் நன்றாக எழுதுவதால் என்னைத் தேடி அந்த பெருமை வந்ததாக நினைத்தது மாதிரி இப்போது என்னால் நினைத்துக் கொள்ள முடியவில்லை. இருந்திருந்து எதற்காக எனக்குக் கொடுத்திருப்பார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றியது; தோன்றுகிறது. முதலில் கொஞ்சம் தயக்கமிருந்தாலும் 'சரி, பதிவர்களின் தலைவிதி' என்று நினைத்துக் கொண்டு சம்மதித்தேன். அதோடு எனக்கே ஒரு சந்தேகம் வந்து விட்டது என் மீதே!


பதிவெழுத ஆரம்பித்தபோது என்ன எழுதிவிடப் போகிறோம் என்று நினைத்து ஆரம்பித்தாலும் அதன் பின் என் மனதுக்கு நிறைவான பல பதிவுகளை அந்த முதல் ஆண்டிலும் அதற்குப் பின்பும் சில காலம் வரை எழுதியதாகத் தோன்றியது. இன்றும் அப்படித்தான் பழைய என் பதிவுகளை வாசிக்கும்போது தோன்றுகிறது. ஆனால் இப்போதெல்லாம் அதுபோன்ற பதிவுகளை என்னால் கொடுக்க முடியவில்லை என்பது கஷ்டமாயிருக்கிறது. பதிவுகளின் எண்ணிக்கை மட்டுமல்லாமல் எழுதும் விஷயங்களும் சரக்கில்லாத விஷயங்களாகவே இருந்து வருவது 'அவ்வளவுதான் சட்டியில' என்ற எண்ணத்தைத்தான் கொடுக்கிறது. 200-வது பதிவை பெனாத்தல் சுரேஷின் விமர்சனப் பதிவாக பதிவேற்றினேன். அதில் அவரும் முன்பு போல் variety-ஆக எழுதவில்லை; ஆழமாகவும் எழுதுவதில்லை என்று கூறியிருந்தார். உண்மைதான். ஆனாலும், ஏதோ முதலில் எல்லாம் பெரிய writer-ஆக இருந்ததுபோலவும் இப்போது writer's block வந்துவிட்டது போலவும் ஒரு அயர்ச்சி. இந்த அயர்ச்சியிலிருந்து ஒருவேளை வெளியே வர இந்த நட்சத்திர வாரம் ஒரு வரமாக அமைந்துவிடாதா என்ற ஒரு நப்பாசை ...

முயற்சிக்கிறேன் ... அதற்கு முன் ..

வயதானதாலோ, 'நீண்ட நெடுங்காலமாக' பதிவுலகில் இருப்பதாலோ என்னதான் முயற்சித்தாலும் பழைய கதைகளை, பழைய காலத்தைத் திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியாதெனவே தோன்றுகிறது. "எங்க காலத்திலெல்லாம் .." என்று சொல்லித்தான் ஆகவேண்டியதிருக்கிறது. இப்போதுகூட பாருங்களேன். முதல் தடவை நட்சத்திரமாக இருந்த போது பதிவுலகில் இருந்த நல்ல சில பதிவர்கள், நண்பர்கள் இப்போது பதிவுலகத்திலிருந்தே விலகி நிற்பது அல்லது முழுமையாகவே விலகி விட்டது மனதை உறுத்துகிறது. அவர்களின் எழுத்து, கருத்துக்கள் ஏனைய திறமைகள் எல்லாம் நினைவுக்கு வருகின்றன. ஒரு நீண்ட பட்டியலே தரலாம். பழைய பதிவுகளைத் தூசி தட்டிப் பார்க்கும்போது பின்னூட்டங்களில் வந்து தட்டிக் கொடுத்தவர்கள், தட்டிக் கேட்டவர்கள், விட்டுக் கொடுத்தவர்கள், விட்டுக் கொடுக்காதவர்கள், புத்திசாலித்தனமாகக் கேள்வி கேட்டவர்கள், மடத்தனமாகப் பதில் சொன்னவர்கள், தேன் தடவி வார்த்தைகளைத் தந்தவர்கள், விஷம் தோய்த்த எழுத்தம்புகளை எய்தியவர்கள் என எத்தனை எத்தனை பேர். தங்கள் தனித்திறமைகளால் தனித்து நின்றவர்கள் - இப்படிப் பலர். பெயர்களைச் சொன்னால் நீநீநீ..ண்டு விடும்.

Folks, I miss you all . But ...

... men may come and men may go,
But I go on for ever -- என்று பதிவுலகம் நகர்ந்துகொண்டே, வளர்ந்து கொண்டே போகிறது -- மாற்றங்கள் மட்டுமே மாறாதவை என்பதை நினைவூட்டிக் கொண்டே.











--