Showing posts with label அமினா. Show all posts
Showing posts with label அமினா. Show all posts

Thursday, January 03, 2019

1015 அமினா .. என் மொழிபெயர்ப்பு நூலைப் பற்றிய விமர்சனக் கட்டுரை. - முனைவர் வா.நேரு





*


அண்மையில் படித்த புத்தகம் : அமினா..முகமது உமர் (நைஜீரியா)....தமிழில் தருமி

அண்மையில் படித்த புத்தகம் : அமினா
மூல நூல் ஆசிரியர்         : முகமது உமர் (நைஜீரியா)
தமிழ் மொழிபெயர்ப்பு        : தருமி
முதல் பதிப்பு               : ஜீலை 2009
மொத்த பக்கங்கள்           : 368, விலை ரூ 200
மதுரை மைய நூலக எண்    : 187630



                       " ஒரு நைஜீரிய பெண் போராளியின் உணர்ச்சிகரமான வாழ்க்கை. 29 மொழிகளில் வெளிவந்து உலகக் கவனத்தை ஈர்த்த நாவல்" என முன் அட்டையில் அச்சிடப்பட்டிருக்கின்றது. மொத்தம் 27 அத்தியாயங்கள் கொண்ட ஒரு மொழிபெயர்ப்பு நாவல்.முதலில் மொழி பெயர்ப்பாளர் முன்னாள் அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் தருமி அவர்களுக்கு பாராட்டுகள். வாசிக்கும்பொழுது எந்த இடத்திலும் ஒரு அன்னிய மொழி நாவலை, மொழி பெயர்ப்பு நாவலைப் படிக்கின்றோம் என்ற எண்ணமே ஏற்படாத வண்ணம் மொழி பெயர்ப்பு செய்தமைக்கு பாராட்டுகள் வாழ்த்துகள். இது ஒரு பெண்ணிய அரசியல் நாவல். பெண்ணியமா? அரசியலா?  அச்சச்சோ என்று நினைக்கிறவங்க  எல்லாம் இதற்கு மேல் படிக்கவேண்டாம்....




                    பல்கலைக் கழக விடுதியிலிருந்து வெளியே வரும் ஒரு மாணவியாக அமினா அறிமுகப்படுத்தப்படுகின்றாள்.அவள் பல்கலைக் கழக மாணவி மட்டுமல்ல நைஜீரிய நாட்டின் மாநில மக்களைவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்ஹாஜி ஹருணாவின் 4-வது மனைவி என்றும் அறிமுகப்படுத்தப்படுகின்றாள். மூன்று மனைவிகள் உயிரோடு இருக்கும்போது 4-வது மனைவியாக அந்தப் பெரிய அரசியல்வாதி பணக்காரனுக்கு வாக்கப்படுகின்றாள் அமினா. அமினாவின் கணவனது செல்வச்செழிப்பும் அதனால் அமினாவுக்கு கிடைக்கும் சுகபோக வாழ்க்கையும் நாவலின் ஆரம்பத்தில் வர்ணிக்கப்படுகின்றது. தான் தனியாகத் தொழில் ஆரம்பித்து இன்னும் பெரிய பணக்காரி ஆக வேண்டும் என்பதுதான் அமினாவின் ஆசையாக திருமணம் முடிந்தவுடன் இருக்கின்றது.அமினாவைப் போன்றே மிகப்பெரிய பணக்காரியாக இருக்கும் குலு ஒரு பெரிய அரசு அதிகாரியின் மனைவி. அவள் இன்னும் பெரிய பணக்காரி ஆக வேண்டும் என ஆசை கொண்டவள். அமினாவைத் தன் பக்கம் இழுத்து தொழில் அதிபராக ஆக்கவேண்டும் என்பது குலுவின் எண்ணம்.

                 அமினாவின் பல்கலைக் கழகத்தோழி பாத்திமா. பெரிய பணக்காரனுக்கு வாக்கப்பட்டு விவாகரத்து செய்யப்பட்டவள். பெரிய பணக்காரனின் மகள். தன் அப்பாவும், கணவனும் பணத்திற்காக என்னவெல்லாம் செய்கின்றார்கள் என்பதனை அமினாவுக்கு எடுத்துச்சொல்கின்றாள். பாத்திமா ,நாட்டில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதற்காக உழைக்கும் ஒரு அமைப்பில் உறுப்பினராக இருக்கின்றாள். அமைப்பாகத் திரள்வதற்கு வேண்டிய வேலைகளைத் தீவிரமாகச்செய்கின்றாள். அவளது அமைப்பு பல்கலைக் கழகத்தில் அரசால் தடை செய்யப்படுகின்றது. ஆனால் அடுத்த கட்டத்திட்டங்களைச்செயல்படுத்த வேண்டும். அதற்கு கூடிப்பேச ஓர் இடம் வேண்டும். அமினாவின் வீட்டில் வந்து பேச அனுமதி கேட்கின்றாள் பாத்திமா. தோழி என்ற முறையில் வா, வந்து பேசுங்கள். நான் டீ,பிஸ்கட் தந்து உபசரிக்கின்றேன். எனக்கு அரசியல் தேவையில்லை என்று அமினா சொல்கின்றாள். அதே மாதிரியே செய்கின்றாள், தனது இயகக்திற்கு ஏதேனும் உதவி புரிவாள் என்று எதிர்பார்த்த பாத்திமாவிற்கு ஏமாற்றம் ஏற்படுகின்றது. இருந்தாலும் பாத்திமா நாட்டில் நடைபெறும் அரசியல் பற்றியும், படித்த அதிகாரிகளின் பேராசை பற்றியும், சொத்து சேகரிப்பு பற்றியும், அரசியல்வாதிகளின் ஆடம்பர ஊதாரி வாழ்க்கைகள் பற்றியும் பேசிக்கொண்டே இருக்கின்றாள். அமினாவிற்கு அதில் ஈடுபாடு ஏற்படவில்லை. 

                அமினா 4-வது மனைவி. அவள் கணவனின் 3-வது மனைவி அமினா பற்றி வத்தி வைத்து விடுகின்றாள். மாதம் ஒரு நாள் ,இரு நாள் மட்டும் வீட்டிற்கு வரும் அமினாவின் கணவன் ஒரு நாள் வந்து அமினாவை தாறு மாறாக அடிக்கின்றான். இவள் எதற்கு அடிக்கின்றான் எனப்புரியாமலேயே அழுகின்றாள். தான் செய்த குற்றம் என்ன என்று கேட்கிறாள். உனக்கும் நம் பங்களா கார் டிரைவருக்கும் தொடர்பு எனக் குற்றம் சாட்டுகிறான். தொலைத்துவிடுவேன் என்று எச்சரித்து உடம்பு முழுவதையும் ரண களமாக்கி விட்டு வெளியேறி விடுகின்றான். அவள் கணவனின் மூத்த மனைவி வந்து ஆறுதல் கூறி மருந்தெல்லாம் கொடுக்கின்றாள். அபாண்டமான குற்றச்சாட்டால் துவண்டு, நொந்து நூலாகிக் கிடக்கும் நிலையில் பாத்திமா வருகின்றாள்.கொடுமையைக் கண்டு அமினாவிடம் பேசுகின்றாள். " ஆண்கள் ஆளப்பிறந்தவர்கள். அதுதான் அல்லாவே விதிச்சது.அதை மாத்த யாரால் முடியும் ? " பக்கம்(35 ) என்று அமினா கூறுகின்றாள். பாத்திமா நம்மால் முடியும் என்று சொல்கின்றாள். அமினாவுக்கு உடன்பாடில்லை. பாத்திமா அப்பொழுது நீ அரசியலுக்கு எல்லாம் வரவேண்டாம். ஊருக்குள் சென்று சாதாரணப் பெண்கள் எப்படி வாழ்கின்றார்கள் என்று பார் எனச்சொல்லி, ஒரு முகவரியைக் கொடுத்து லாரா என்னும் பெண்ணைப் போய் பார்க்கச்சொல்கின்றாள். 

               மறுநாள் அந்த லாரா என்ற பெண்ணைப் பார்க்க அமினா செல்கின்றாள்.13 வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டு, 14 வயதில் ஒரு குழந்தைக்குத் தாயாகி,15 வயதில் சிறு நீரகத்தொற்று ஏற்பட்டு, ஒரு குடிசையில் குழந்தைக்கு கொடுக்க பாலில்லாமல் வற்றி வதஙகிப் போய் கிடக்கும் லாராவையும், அந்தச்சூழலையும் பார்த்தவுடன் அமினாவிற்கு புத்தருக்கு அரண்மனையை விட்டு வெளியில் வந்தவுடன் கிடைத்த அனுபவம் போல கிடைக்கின்றது. உனது கணவனை எங்கே என்று அமினா லாராவிடம் கேட்க ,அவன் வேறு ஒரு திருமணம் முடித்துக்கொண்டு சென்று விட்ட கதையை லாரா சொல்கின்றாள். லாராவையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு, தனது வீட்டில் ஒரு பகுதியில் இருக்கச்சொல்லி, உணவு கொடுக்க ஏற்பாடு செய்கின்றாள்.மருத்துவம் பார்க்கச்செய்கின்றாள். லாரா அமினாவிற்கு மிக நெருக்கமாகின்றாள். தன்னைப்போன்ற பல பெண்கள் இருப்பதையும் அவர்கள் கதையையும் அமினாவிடம் சொல்கின்றாள். இப்படிப்பட்ட பெண்களுக்கு உதவி செய்வதற்காக தான் வாழும் பகுதியான பக்காரோவின் அடிப்படையில் 'பக்காரோ உதவிக்குழு ' என்னும் பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி, பெண்களை ஒன்றுதிரட்டவும் அவர்களுக்கு கற்பிக்கவும் அமினா முற்படுகின்றாள். 

               அடித்த கணவன் மறுபடியும் வந்து அமினாவிடம் மன்னிப்பு கேட்கின்றான்.அமினா சமாதானமாகின்றாள். அமினாவிற்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கின்றது.பக்காரா உதவிக்குழுவில் நேரடியாகச்
செயல்படமுடியவில்லை என்றாலும் ஆலோசனைகள் சொல்கின்றாள்,வழிகாட்டுகின்றாள். பின் மூன்றுமாதம் கழித்து மறுபடியும் முழு மூச்சாக இறங்கி,சாதாரணப்பெண்களோடு இணைந்து வேலை செய்கின்றாள். பெண்களின் கல்வி,சுகாதாரம், வேலை வாய்ப்பு போன்றவைகளோடு கைவிடப்பட்ட பெண்களைப் பற்றியும் நிறையப்பேசுகின்றாள். அரசியல்வாதியான கணவன், இந்த வேலையெல்லாம் நமக்கெதற்கு ? நன்றாக உல்லாசமாக இருக்க, அனுபவிக்க பழகு என்று சொல்கின்றான். இவளுக்கு நாட்டமில்லை. கணவன் அமினா வீட்டிற்கு வருவதைக் குறைத்துக்கொள்கின்றான்.

              ஒரு நாள் அமினாவின் ஆறுமாதக் குழந்தைக்கு காய்ச்சல் மிக அதிகமாக அடிக்கின்றது.ஒரு கட்டத்தில் காய்ச்சலால் வலிப்பு வருகின்றது. உதவிக்கு யாரும் அருகில் இல்லாமல், மாத்திரை ,மருந்து வாங்க ஆளில்லாமல் தவிக்கின்றாள். இரவு நேரம் என்பதால், குதிரை மேய்க்கும் வேலைக்காரப்பையனை அழைத்து மாத்திரை வாங்கி வரச்சொல்கின்றாள், வாங்கி வருகின்றான்.அந்த மாத்திரையை தண்ணீரில் கலக்கிவிட்டு குழந்தைக்கு ஊற்றுவதற்காக அந்தப்பையனை உதவி செய்யச்சொல்லி, குழந்தைக்கு மருந்து ஊற்றிக்கொண்டிருக்கின்றாள். அப்பொழுது அங்கு வரும் அமினாவின் கணவன், அவளைச்சந்தேகப்பட்டு, அடிக்கின்றான். குழந்தைக்கு முடியவில்லை என்பதனைக் கவனித்திலேயே கொள்ள மறுக்கின்றான். விழுந்த அடியால் அமினாவிற்கு நகர முடியாத நிலைமை.வலிப்பால் துடிக்கும் குழந்தை... .அப்படியே போட்டுவிட்டு கணவன் போய்விடுகின்றான். குழந்தை இறந்து விடுகின்றது. உலகமே வெறுத்துப்போய் கொஞ்ச நாட்கள் இருந்த அமினா, நீண்டும் பக்காரோ உதவிக்குழுவில் மிகத்தீவிரமாக இயங்க ஆரம்பிக்கின்றாள்.

               பக்காரோ உதவிக்குழுவைப் பார்த்து அரசாங்கம் பயப்படுகின்றது. இவர்கள் புரட்சியெல்லாம் பேசவில்லை, பெண்களின் பிரச்சனைகளைப் பேசுகின்றார்கள், அதற்கு தீர்வு என்ன என்பதனைக் கேட்கின்றார்கள் என்று சொல்லும்போது அமினாவை மறைமுகமாகப் பயமுறுத்துகின்றார்கள். பணக்காரி குலுவை வைத்து ஆசை காட்டுகின்றார்கள். அமினா மயங்கவில்லை.அமினாவின் கணவனின் நண்பன் ஒரு வெளிநாட்டுக்காரன் வெள்ளைக்காரன்  வந்து அமினாவிடம் தொழில் தொடங்குவது பற்றிப் பேசுகின்றான். அவர்களின் திருட்டுத்தனத்தை,மொள்ள மாரித்தனத்தை பிட்டு பிட்டு அமினா வைக்க அவன் நைஜீரியா நாட்டில் தொழிலே தொடங்கவில்லை என்று ஓடி விடுகின்றான்.

               பெண்கள் ஒன்று சேரக்கூடாது,உரிமைகள் கேட்கக்கூடாது என்பதற்காக அந்த நாடு ஒரு சட்டம் போடுகின்றது. முழுக்க முழுக்க ஆணாதிக்கம் கொண்ட, பெண்களுக்கு எதிரான அந்தச்சட்டத்தை அமினாவும் பக்காரோ உதவிக்குழு அமைப்பும் எதிர்க்கின்றனர். பெண்கள் ஒன்றிணைகின்றனர். அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து தங்கள் கோரிக்கையை நிறைவேற்றச்சொல்லி போராடுகின்றனர். ஆனால் அவர்களின் நியாயமான போராட்டத்தை உருக்குலைக்க அரசு வன்முறையைக் கையில் எடுக்கின்றது. அந்த அமைப்பின் ஒரு தலைவி சுட்டுக்கொல்லப்படுகின்றாள். பெண்கள் அனைவரும் குண்டாந்தடிகளால் தாக்கப்படுகின்றனர். அரசு முழுமையான வன்முறையை தூத்துக்குடி போல உபயோகிக்கின்றது. அமினா குறிவைத்து தாக்கப்படுகின்றாள்.ஊமைக்காயங்களாக அரசு அதிகாரிகள் அவளுக்கு ஏற்படுத்துகின்றனர். சிறையில் அடைக்கப்படுகின்றாள். ஜெயிலுக்கு வரும் அமினாவின் கணவன் அவளைக் குறை கூறுகின்றான். இந்த வேளை உனக்கு எதற்கு என்று சொல்கின்றான். தன்னை நிரந்தரமாக சிறையில் வைக்க வேலைகள் நடப்பதை அமினா உணர்கின்றாள். 

              விசாரணை நீதிபதி நியாயமாக நடந்து கொள்கின்றார். அமினாவின் மீது குற்றமில்லை என்று உணர்கின்றார்.ஆனால் ஆண்களுக்கு எதிராக, அரசாங்கத்திற்கு எதிராக இப்படி போராடுவது தவறில்லையா என்று கேட்கின்றார். அமினா பதில் சொல்கின்றாள். அமினாவின் கல்லூரித் தோழி ,இப்போது வழக்கறிஞராக இருப்பவள் அமினா வழக்கை எடுத்து நடத்துகின்றாள். சிறைத்தண்டனை இல்லாமல் அமினாவும் அவளது தோழியர்களும்  விடுதலை செய்யப்படுகின்றார்கள்.

                    இதுதான் சுருக்கமான கதை. ஆனால் நாவலுக்குள் பெரும் அரசியல் உரையாடல் இருக்கின்றது. மதங்களைப் பற்றிய விமர்சனங்கள் இருக்கின்றன. உண்மையிலேயே கடவுள் பக்தனாகக் காட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் கடவுளுக்குப் பயப்படுவதில்லை என்னும் செய்திகள் இருக்கின்றன. உலகம் முழுவதும் இருக்கும் பெண்கள் நிலைமை, ஏன் இப்படி என்னும் கேள்விகள், அதற்கான பதில்கள் இருக்கின்றன. மார்ச்-8  சர்வதேசப்பெண்கள் தினத்தில் பக்காரோ உதவிக்குழு கூட்டத்தில் ஒவ்வொரு பெண்ணும் தங்கள் அனுபவங்களை, வேதனைகளைப் பகிர்ந்து கொள்ளும் பதிவு உலகம் முழுவதும் இருக்கும் பெண்களின் துன்பங்களைச்சொல்வது போல் இருக்கின்றது. 

                    மிக ஆழமான விவாதங்கள். நேரிடையாகக் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் நிகழ்வுகள் மூலம் அப்படியெல்லாம் ஒருவன் இல்லை என்பது அழுத்தமாகச்சொல்லப்படுகின்றது. பெண்கள் இணைந்தால் எவ்வளவு பெரிய மாற்றங்களைக் கொண்டுவர முடியும், பெண்கள் தங்கள் பிரச்சனைகளை பொதுவான அரங்கில் பகிர்ந்துகொள்ளும்போது எப்படிப்பட்ட உத்வேகத்தை அது தரும்,மாற்றத்திற்கு எப்படி காரணமாகும் என்பது போன்றவை சொல்லப்பட்டிருக்கின்றன. தங்கள் வீட்டுப்பெண்களாக இருந்தால்கூட அரசியல்ரீதியாக பெண்கள் ஒன்றிணையும்போது அரசியல்வாதிகள் எவ்வளவு கொடூரமாக,மோசமாக மாறுவார்கள் என்பதெல்லாம் இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கின்றது.இந்தியாவிற்கு, தமிழகத்திற்கு அப்படியே பொருந்தும் நாவல் இது. 

                  .முடிவாக மார்ட்டின் லூதர் கிங் ஜீனியர் சொன்னதாக புத்தகத்தின் உள்ளே போடப்பட்டிருக்கும் வாசகத்தோடு முடிக்கின்றேன். " நம்மை பாதிக்கும் விசயங்கள் குறித்து நாம் அமைதி காக்கத் தொடங்கும் தினத்தில் நம் வாழ்க்கை முடிவு பெற ஆரம்பிக்கிறது " ... மார்க்சீம் கார்க்கியின் 'தாய் ' நாவலைப் படித்து முடித்தவுடன் மனதில் ஏற்பட்ட ஒரு எழுச்சி போல எனக்கு இந்த 'அமிiனா' நாவலைப் படித்து முடித்தவுடன் ஏற்பட்டது. முழுக்க முழுக்க பெண்களின் போராட்ட பங்களிப்பை, பெண்களின் ஒருங்கிணைப்பின் அவசியத்தை வலியுறுத்தும் அதே நேரத்தில் அவர்களுக்கு உதவும் சில ஆண்களையும் குறிப்பிடும் நாவல் இது







*

https://vaanehru.blogspot.com/2018/11/blog-post_25.html



Monday, June 13, 2016

894. அமினா - (சந்தேகமான பார்வையோடு) ஒரு ஆய்வு







*

Abu Khalid's Review on AMINA in his facebook


*

 'ஆமினா' என்ற 368 பக்க நாவலை இரண்டே தினங்களில் படித்து முடித்தேன்..

ஒரு நைஜீரிய முஸ்லிம் பெண் போராளியின் உணர்ச்சிகரமான வாழ்க்கைக் கதையாக இது வரையப்பட்டிருக்கிறது.. நாவலாசிரியர்: முஹம்மது உமர். தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் : தருமி.[?]

 இஸ்லாத்தின் அடிப்படைகளான சமத்துவத்தை.. நீதிபோதத்தை..அன்பு, கருணை..மனிதநேயத்தை.. சாந்தி..சமாதானத்தை.. எல்லாம் தூக்கி ஓரத்தில் போட்டுவிட்டு.. சாரற்ற சக்கையாக.. உயிரற்ற பிணமாக.. தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற கிரியைகளை மட்டும் சடங்கு போல செய்து வருகிற முஸ்லிம் சமூகம்.. அதனால் பாதிக்கப்படுகிற மக்கள்.. அதிலும் குறிப்பாக பெண்கள்.. என்று சமூக அவலங்களை இந்த நாவல் நம்முடைய பார்வைக்கு கொண்டு வருகிறது..

மேற்கத்திய ஆதிக்க சக்திகளால் நிர்மாணிக்கப்பட்ட பொம்மையாட்சி.. அதன் மூலம் நாட்டின் இயற்கைவளங்கள் சுரண்டப்படுவது.. அதன் காரணமாக நாட்டின் பெரும்பான்மை மக்களை ஏழைபாழைகளாக.. அரசு வரிகளை சுமப்பவர்களாக ஆக்கப்படுவது.. அதே சமயம் ஆதிக்க சக்திகளின் அடிவருடிகளான ஆளும் வர்க்கமோ, கார்பரேட் பண முதலைகளோ கொஞ்சமும் இறையச்சமோ, மனசாட்சியோ இல்லாமல்.. தவறாக சேர்க்கப்பட்ட பெரும் செல்வத்தில் கொழிப்பது.. இவற்றையெல்லாம் இஸ்லாத்தின் பெயராலேயே நியாயப்படுத்துவது..இவற்றையெல்லாம் இந்த நாவல்.. வன்மையாக கண்டிக்கிறது..

 ஆங்காங்கே இஸ்லாத்தின் உண்மையான கொள்கைகளை எடுத்து வைத்தாலும்.. அவை முழுமையான முறையில் சொல்லவில்லை என்கிற குறை தவிர..[ இதனை தருமியே மெனக்கெட்டு செய்திருக்கலாம்.!] நாவல் நன்றாகவே பெயர்தாங்கி முஸ்லிம்களை வறுத்தெடுக்கிறது.. +




*




Monday, January 31, 2011

471. அமினா - ஒரு பார்வை

*


எப்படியோ, ஒரு நூலை மொழிபெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்காக இரு விருதுகளும் (1... , 2...) கிடைத்தன. மனதுக்கு மிக்க மகிழ்ச்சி.

Monday, November 29, 2010

459. அமினா - த.மு.எ.க.சங்கத்தின் விருது பெற்ற விழா

*

அமினாவிற்கு "திசைஎட்டும்" அளித்த விருது விழா ...


*
Image and video hosting by TinyPic




27.11.2010 அன்று மாலை 6 மணிக்கு சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் 2009 ஆண்டிற்கான மாநில இலக்கியப் பரிசளிப்பு விழா வெளியலங்காரங்கள் ஏதும் இல்லாமல் ஆனால்  அழகாக, இனிதாக நடந்தது. பதினெட்டு பேருக்கு மேல் பேச இருந்தும் கால அளவுகளை அழகாக அமைத்து கூட்டம் முறையாக நடந்தது.

Thursday, November 18, 2010

456. அமினா - இன்னொரு விருது

*

முந்திய விருது: “திசை எட்டும்”
*

என்னால் மொழியாக்கம் செய்யப்பட்ட “அமினா” என்ற புதினத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2009-ம் ஆண்டிற்கான த.மு.எ.க.ச. மாநில இலக்கியப் பரிசை - வ. சுப. மாணிக்கனார் நினைவு மொழி பெயர்ப்பு: இலக்கியப் பரிசை - அளிக்கிறது.

என் மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

Image and video hosting by TinyPic

Monday, August 30, 2010

429. அமினா -- பொள்ளாச்சியில் பரிசளிப்பு விழா




*
முந்திய பதிவு காண ...
*

நான் ஒரு பெரிய  பொறாமைக்காரன். குறிப்பாக,  இசை, எழுத்து, ஓவியம் சார்ந்த படைப்பாளிகளைப் பார்த்தாலே ரொம்ப பொறாமையாக இருக்கும்.

Saturday, August 21, 2010

428. பொள்ளாச்சி to ஆழியார்





*
பழைய கார் இருக்கும்போதே வெளியூருக்கெல்லாம் காரோட்டிச் சென்று வர ஆசை. தங்ஸிடம் பெர்மிஷன் கிடைக்கவேயில்லை. கார் மாற்றியதும் கட்டாயமாக ஊர் சுற்றிவர ஆசை.

Tuesday, July 20, 2010

419. ஒரு விருது - மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல்

*

சென்ற வாரம் கிழக்குப் பதிப்பகத்திலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. அப்பதிகத்திற்காக நான் மொழிமாற்றிய "அமினா" என்ற புதினத்திற்கு மொழியாக்க விருது ஒன்று எனக்குக் கிடைத்திருப்பதாக ஒரு செய்தி.

Monday, June 28, 2010

406. அமினா - ஒரு 'திருட்டுப் பதிவு'

*

பதிவர் கபீஷ் நான் மொழிபெயர்த்த அமினாவைப் பற்றிய பதிவொன்றை 'போகிற போக்கில்' என்ற தன் கூட்டுப் பதிவில் இட்டிருந்தார்.  

அப்பதிவை அவரின் அனுமதியோடு இங்கு மறுபதிப்பாக இடுக்கிறேன். அவருக்கும் சஞ்சய்க்கும் மிக்க நன்றி.

முன்னுரை:

நூலகத்தில் இந்த புத்தகத்தை எடுக்கும்போது தருமி என்பது வலைப்பதிவர் தருமி என்று தோன்றவில்லை. யாரும் எனக்கு பரிந்துரைக்காத நூலை எடுத்து படிக்க வேண்டுமா என்று யோசித்தேன். 29 மொழிகளில் வெளிவந்து உலக கவனத்தை கவர்ந்த நூல் என்று அட்டையில் இருந்ததாலும், கிழக்கு பதிப்பக நூலானதாலும், எப்படியும் மோசமாக இருக்காது என்று எண்ணி எடுத்துவந்தேன். (காசு கொடுக்கமால் நூலகத்தில் இருந்து புத்தகத்தை எடுக்க எவ்வளவு யோசனை) புத்தகத்தின் முதல் பக்கத்தைப் படித்திருந்தால் வலைப்பதிவர் தருமி தான் நூலாசிரியர் என்று தெரிந்திருப்பேன். அவசரக் குடுக்கையாக நாவலைப் படிக்க ஆரம்பித்து விட்டேன். வேறு நாட்டைக் கதைக்களமாக கொண்டாலும் அந்நியத் தன்மை, ஆசிரியர் கருத்து இடைச்செருகல், தேவைக்கதிகமான விவரணை இல்லாதது, எளிமையான நடை மற்றும் பெரும்பாலும் உரையாடல் மூலமாக கதை இருந்தது நாவலை சுவாரசியமாக்கியது. ஒரு வேளை பதிவர் தருமியா இருக்குமோ என்று அவரிடம் கேட்டேன் ஆமாம் என்றார். ஒரு வேளை தருமி எழுதியது என்று தெரிந்து படித்திருந்தால் எதோ ஒரு முன்முடிவுடன் படித்திருப்பேனோ என்னவோ தெரியாது. முக்கியமாக தருமி என் வங்கிக்கணக்குக்குப் பணம் எதுவும் இதுவரை அனுப்பவில்லை :-(((

பதிவர் தருமியின் அமினா 

ஆங்கிலத்தில் முகம்மது உமர் எழுதி, தருமி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். நண்பரின் நூலைப் பற்றிய அறிமுகம், விமர்சனம் இல்லை :-))

நாவலின் பெயர், கதையின் நாயகியின் பெயரே, அமினா. நைஜீரியாவின் பக்காரோ நகரின், அழகான மேல்தட்டு வர்க்கப் பெண். பணக்கார, ஆளும் கட்சி அரசியல்வாதி கணவன் ஹாருணாவுக்கு வாழ்க்கையின் ஒவ்வொரு வெற்றியின் போதும் ஒரு கல்யாணம் செய்யும் பழக்கம், அமினா நாலாவது மனைவி. அமினாவின் கல்லூரி கால நெருங்கிய தோழி ஃபாத்திமா, ஒரு பணக்காரருக்கு மூன்றாவது மனைவியாகி, கணவர் கொடுமையின் காரணம் விவகாரத்து செய்து, வழக்கறிஞர் படிப்பைத் தொடர்கிறாள், மாணவ இயக்கத்தில் சேர்ந்து சமூகத்துக்காகப் போராடுகிறாள். அமினாவுக்கு, பெரிய தொழிலபதிராகி, நாட்டிலேயே பெரிய பணக்காரியாவது தான் நோக்கமாக இருக்கிறது, கணவர் ஹருணாதான் அமினா தொழில் செய்ய தூண்டுகோலாய் இருக்கிறார்.

கணவர் திடீரென அமீனாவின் நடத்தையின் மீது சந்தேகம் கொண்டு அடித்த தருணத்தில், ஃபாத்திமா கொடுத்த ஒரு புத்தகத்தை படிக்க நேர்ந்து, அவள் நோக்கத்தில் மாறுதல் ஏற்படுகிறது. ஃபாத்திமாவின் தூண்டுதலால், மற்ற பணக்காரப் பெண்களை உடன் சேர்த்து பெண்கள் இயக்கம் ஆரம்பித்து ஏழைப் பெண்கள் கல்வி கற்க உதவி செய்ய ஆரம்பிக்கிறாள், கல்வியின் மூலமே சமூகத்தில் மாறுதல் ஏற்படும் என்பதால். சமூகத்தின் மீது எந்தவித அக்கறையும் இல்லாமல் இருந்த அமினா படிப்படியாக பெண்களுக்காக போராட ஆரம்பித்து, பெண்களுக்கு எதிராக சட்டமியற்றும் அரசாங்கத்தை எதிர்க்க நேர்ந்து பக்காரோ நகரின் பெண்களுக்கு வழிகாட்டியாகி, ஐ நா சபை பாராட்டும் அளவுக்கு உயர்கிறாள்.

நைஜீரியாவின் அரசியல் நிலைமையையும் முஸ்லிம் பெண்களின் நிலைமையையும் இந்நாவல் அழகாகச் சொல்கிறது. நைஜீரியாவின் இயற்கை வளம் எவ்வாறு அன்னாட்டு அரசியல்வாதிகள் துணையுடன் ஏகாதிபத்திய அரசுகளால் சுரண்டப்படுகிறது என்பதை பாட்டூர் என்னும் கதாபாத்திரம் மூலம் விளக்குகிறார். பாட்டூர், லண்டனிலிருந்து நைஜிரீயாவில் குடியேறிய அரசின் தொழில் ஆலோசகர். அரசியல்வாதிகள் ஊழலில் சம்பாதித்த பணத்தை அவர்கள் சார்பாக ஐரோப்பிய நாடுகளில் முதலீடு செய்யும் சேவையை செய்து வருகிறார். நைஜீரியாவின் கல்வித்திட்டம் தொழில்நுட்பத்தை கற்க, ஆராய்ச்சி செய்ய ஏதுவாகவில்லை. முன்னேறிய நாடுகளில் உள்ள தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நைஜிரியாவிலுள்ள இயற்கை வளங்களை ஆராய்ச்சி செய்து, அரசியல் வாதிகள் உதவியுடன் மற்ற நாடுகளுக்கு அவை குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. இதற்கு பிரதிபலனாக அரசியல் வாதிகளுக்கு உள் நாட்டில் அரண்மணை போன்ற வீடுகளும், வெளிநாட்டில் விலையுயர்ந்த வீடுகள், வெளிநாட்டுச் சுற்றுலா, வெளி நாட்டு வங்கியில் பணம் முதலானவை கிடைக்கிறது, பாட்டூர் மூலம்.

நைஜீரியாவில் மேல்த்தட்டு முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளலாம். இந்திய பெண்களின் நிலை போலத்தான் இருக்கிறது, குறிப்பாக சொன்னால் இந்தியப் பெண்களைவிட இந்த நாவலில் காட்டப்பட்ட நைஜீரிய முஸ்லிம்கள் நிலை பரவாயில்லை போல என்று தோன்றுகிறது. ஒரு வேளை பணக்கார பெண்ணின் நிலையை மட்டும் ஆழமாக விவரித்ததன் மூலம் இப்படித் தோன்றியிருக்கலாம். கணவன் வந்தவுடன் அமினாவும் அவள் தோழி ஃபாத்திமாவும் முழந்தாளிட்டு முகமன் சொல்கிறார்கள்(இது இந்தியாவில் நடப்பதில்லை என்று நினைக்கிறேன்) சமையல் வேலை அமினாவுக்கு கிடையாது, நாவலின் சந்தோசமான இடம் இது.:-) ஒரே ஓர் இடத்தில் அவள் சமைப்பதற்காகச் சீக்கிரம் செல்ல வேண்டும் என்று ஒரு பொதுக்கூட்டத்திலிருந்து செல்கிறாள், தருமியிடம் ஏனென்று கேட்க முடியாது, உமரிடம் கேட்க வேண்டிய கேள்வி.:-)))


அமினா வீட்டிலிருந்து வெளியே செல்ல காரில் ஏறும் போதும், இறங்கும் போதும், அவளைத் துதித்து பாட்டு பாடி சில நாய்ராக்கள் பெறும் சிறு கூட்டம், அமினாவின் கணவனின் ஒரு மனைவியின் மகனான அப்துல்லாஹியுடன் ஃபாத்திமா செய்யும் சீண்டல்கள், அமினாவின் கல்லூரி கால ஒரு தலைக் காதல், அமினாவின் பெண்கள் அமைப்பு தோழி பில்கிசு, குலு, "பக்கோரோவின் ரேடியோ" என்று அழைக்கப்படும் மைரோ, இதுபோல சுவாரசியமான சம்பவங்களும், பாத்திரங்களும் நாவல் வறண்டு போகாமல் இருக்கச் செய்கின்றன.

அமினா பெண்கள் அமைப்பைத் தொடங்கி உரையாற்றும் போது இவ்வாறு முடிக்கிறாள்

"ஒரு சொலவடை உண்டு:
ஓராண்டுக்குத் திட்டமிட்டால் சோளம் விதை;
பத்தாண்டுக்குத் திட்டமிட்டால் ஒரு மரம் நடு;
நீண்ட நெடு வாழ்க்கைக்குத் திட்டமிட்டால் கல்வி கொடு.

பெண்கள் நாங்கள் பக்காரோவின் எதிர்காலத்தைத் திட்டமிட ஆரம்பித்திருக்கிறோம் வளமான, சந்தோஷமான, ஒளிமயமான, எதிர்காலத்தை பக்காரோ காணவேண்டும். அதற்காகவே பெண் கல்வியோடு எங்கள் திட்டத்தை ஆரம்பிக்கிறோம். பெண்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்ந்தாலே, நகரம், மாநிலம், நாடும் வளம் பெறும். நன்றி ! "



ஆங்கிலத்தில் படிக்கவில்லை. தமிழில் இயல்பாக, படிக்கத் தொய்வில்லாமல் இருக்கிறது. அமினாவின் அழகை விவரித்து சொல்லும் இடங்களில் என் தோழி ஞாபகத்துக்கு வந்தாள். நம் நாட்டு நிலைமையுடன் பெரிதும் ஒப்புமைப் படுத்தி பார்க்கும் விதமான சூழலைக் கொண்டது நைஜிரியா என்று எனக்குத் தோன்றுகிறது. என்னுடைய சில ஆஃப்பிரிக்க தோழிகள் சொல்லியிருக்கிறார்கள் எங்கள் நாடும் உங்கள் நாட்டைப்போல இயற்கை வளங்கள் அதிகம் கொண்ட, அரசியல்வாதிகள் மற்றும் முன்னேறிய நாடுகளால் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்ட, பட்டுக்கொண்டிருக்கும் நாடு என்று. உண்மை தான் என்று தோன்றுகிறது. இங்குள்ள (இங்கிலாந்து) அருங்காட்சியகங்களில் பெரும்பாலான பழம்பொருட்களின் கீழ், ஆஃப்ரிக்காவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் ராணிக்கு அன்பளிப்பாக கிடைத்தவை என்ற குறிப்பு இருக்கும்.


மொத்தத்தில், அமினாவின் மூலம் சின்ன குழுவின் மூலமே பெரிய மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்திவிட முடியும் என்ற நேர்மறைச் சிந்தனையைத் தருகிறார் நாவலாசிரியர். தனி மனிதன் நினைத்தாலே மாற்றம் வரும் என்பதற்கு 2004 ல் நோபல் பரிசு வென்ற கென்ய நாட்டு வாங்கரி முடா மாத்தாய் (Wangari Muta Maathai) மற்றும் தமிழக்தின் கிருஷ்ணம்மா முதலிய சமூக ஆர்வலர்கள் வாழும் சாட்சிகளாய் இருக்கிறார்கள்.

இந்த புத்தகத்தைப் பற்றிய ஒரு விமர்சனத்தில் இது ஒரு பெண்ணீய நாவல் என்று படித்தேன். முதல் முறையாக பெண்ணீயத்தின் பொருள் தேடினேன் கூகிளில். இதைப் பற்றி பிறகு எழுதுகிறேன்.


மூல ஆசிரியர்: முகம்மது உமர்
தமிழில்: தருமி
பதிப்பகம்: கிழக்கு
விலை : Rs. 200/-

Post by : Kabheesh

பின்னூட்டங்கள்:
ரோகிணிசிவா – (June 24, 2010 7:22 PM)
i have not read the book u have shared , but u have put it in good way, i wil seek to read it, thank u for sharing

முத்துலெட்சுமி/muthuletchumi – (June 24, 2010 7:22 PM)
நல்லதொரு அறிமுகம் கபீஷ்..வாசிக்க ஆவலைத்தூண்டுகிறது.

வினையூக்கி – (June 24, 2010 7:23 PM)
அக்கா நல்லதொரு அறிமுகம் !! நன்றி

அதிஷா – (June 24, 2010 7:25 PM)
பிம்பிலிக்கி!

Thekkikattan|தெகா – (June 24, 2010 7:28 PM)
நல்ல அறிமுகம், சீராக சென்றது - வாசிப்பதற்கு. நன்றி!

அத்திவெட்டி ஜோதிபாரதி – (June 24, 2010 7:50 PM)
GOOD

ஆதிமூலகிருஷ்ணன் – (June 24, 2010 10:33 PM)
தருமி ஐயாவுக்கு வாழ்த்துகள்.

Chitra – (June 25, 2010 1:46 AM)
Seems to be an interesting book. பகிர்வுக்கு நன்றி.

ராஜ நடராஜன் – (June 25, 2010 2:18 AM)
அறிமுகத்திற்கு நன்றி கபீஷ்!
இது மாதிரி இன்னும் நிறைய சொல்லலாமே?

cheena (சீனா) – (June 25, 2010 8:22 AM)
அன்பின் கபீஷ்
புத்தகம் வாங்கி விட்டேன் - படிக்கிறேன் - கருத்து சொல்கிறேன்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

SanjaiGandhi™ – (June 25, 2010 9:09 AM)
சூப்பரப்பு.. படிக்கும் ஆவலைத் தூண்டுது..
//இது மாதிரி இன்னும் நிறைய சொல்லலாமே?//
நல்லா சொல்லுங்க நடராஜன்.. நான் சொல்லி சொல்லி களைச்சிட்டேன்.. கேக்க மாட்டேங்கறா..

Bharath – (June 25, 2010 2:22 PM)
pretty crisp review rather intro. :)

//இந்த புத்தகத்தைப் பற்றிய ஒரு விமர்சனத்தில் இது ஒரு பெண்ணீய நாவல் என்று படித்தேன். முதல் முறையாக பெண்ணீயத்தின் பொருள் தேடினேன் கூகிளில். இதைப் பற்றி பிறகு எழுதுகிறேன்.
//
பொம்பளை, சாதனை, பாராட்டுனாலே பெண்ணியம்ன்னு ப்ராக்கெட் போட்டுர்றாங்கப்பா.. கூகிள் என்ன சொல்லிச்சுன்னு தெரிஞ்சுக்க ஆசயா இருக்கோம்..




Thursday, June 10, 2010

400. அமினா - ஒரு திறனாய்வு

*
அமினா பற்றிய முந்திய பதிவு ..... 

*
மதுரையிலிருந்து பேரா. ஜேம்ஸ் என்பவரால் நடத்தப்படும் சிறு மாத இதழ் "மனித நேயம்". வழக்கமாக இவ்விதழில் எழுதி வரும் முனைவர் பேரா.டாக்டர் வின்சென்ட் இவ்வாண்டின் மே மாத இதழில் அமினா என்ற என் மொழிபெயர்ப்பு நூலின் மீது ஓர் ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார். டாக். வின்சென்ட் நைஜீரிய புதின எழுத்தாளர் சினு அச்சிபி்யின் புதினங்கள் மீது Ph.D.க்கான தன் ஆய்வுக்கட்டுரை எழுதியவர். அவரது கட்டுரை:






நூல் :         அமினா 
ஆசிரியர்: முகமது உமர்

தமிழில்: தருமி 
பதிப்பு: கிழக்கு

பக்கம்: 368 
விலை: ரூ. 200

ஆப்ரிக்க நாடுகளின் ஆங்கிலப் படைப்புகள் உலக இலக்கியத்தில் உயர்வாக மதிக்கப்படுபவை. குறிப்பாக நைஜீரிய நாட்டின் வளமான இலக்கியப் படைப்புகள் அரை நூற்றாண்டிற்கு மேல் வாசகர்களையும் திறனாய்வாளர்களையும் பெரிதும் கவர்ந்திருக்கின்றன. சினு அச்சிபியும், நோபெல் பரிசு பெற்ற ஓலே சோயிக்காவும் உலகப் பெரும் எழுத்தாளர்கள் வரிசையிலே இடம் பெற்றவர்கள். எனினும் வடக்கு நைஜீரியாவிலிருந்து இப்போதுதான் ஆங்கிலத்தில் படைப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன. அவற்றில் முதன்மையாகக் கருதப்பட வேண்டியது முகமது உமர் எழுதிய அமினா என்ற நூல்.

இந்தப் புதினம் நைஜீரியாவில் இஸ்லாமியர் நிறைந்த பக்காவோ நகரினைப் பின்புலமாகக் கொண்டு இஸ்லாமியப் பெண்களின் அவலநிலையை சிந்திக்கிறது. கதைத் தலைவி அமீனா மாநில மக்களவை உறுப்பினர் ஹமணாவின் நான்காவது மனைவி. படித்தவள். தொடக்கத்தில் தன் அழகு, செல்வம், கணவரின் பதவி தந்த செருக்கில் மிதந்தவள்.  ஆனால் அவளுடைய தோழி பாத்திமா என்ற பெண் விடுதலைப் போராளி அவளைத் தன் பக்கம் ஈர்க்கிறாள்.  ஹருணாவின் வீட்டில் பாத்திமாவின் கூட்டாளிகள் சந்திக்கிறார்கள். முதலில் அவர்களுடைய வழியில் செல்லாத அமீனா, பிறகு தன்னையும் அவர்களோடு இணைத்துக் கொண்டாள்.  அவளுடைய நடத்தையில் சந்தேகப்படும் கணவன், அவனுடைய பெண்ணடிமைக் கொள்கையை எதிர்த்துப் போராடும் கூட்டம் என்று அலைக்கழிக்கப்படுகிற அமீனா பெண்கள் இயக்கத்தில் தலைவியாகிறாள். அவளுடைய கணவன் மக்களவையில் கொண்டு வந்த பெண்ணடிமைத் தீர்மானத்தை எதிர்த்தும் போராட்டம் நடத்துகிறார், அவள் காப்பாற்றி வளர்த்த பெண் லாராய் துப்பாகிச் சூட்டில் இறக்கிறாள். அமீனாவும் தாக்கப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறாள். வழக்கு மன்றத்தில் அமீனாவே தனக்காக வாதாடுகிறாள். வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற பாத்திமா அமீனாவிற்கு ஐ.நா. சபை மாநாட்டுப் பத்திரம் தரப் போவதாக அவளுக்குத் தெரிவிக்கிறாள். இந்தப் போராட்டம் தோற்றாலும், அடுத்த போராட்டம் வெற்றி தரும். "ஒளிமயமான எதிர்காலம் கைக்கெட்டும் தூரத்தில் தான்" என்ற் நம்பிக்கைச் சொற்களோடு நாவல் முடிகிறது.

நைஜீரியாவில் பரவி இருக்கும் ஊழல், பதவிப்போர் ஆகியவற்றைப் படம், பிடித்துக் காட்டும் இந்நாவல் இஸ்லாமியப் பெண்களின் அவல நிலையை நெஞ்சுருகச் சொல்லுகின்றது. பலதாரமணம், பெண்களுக்கு மறுக்கப்படும் அடிப்படை உரிமைகள், பெண்களை அடித்துத் துன்புறுத்துதல் முதலியன நைஜீரிய இஸ்லாமிய சமூகம் அங்கீகரித்தவை. மகன் ரஷித்தின் உயிரைக் காப்பாற்றக் கதறியழும் அமீனாவை ஹருணா சந்தேகத்தின் பேரில் கண்மண் தெரியாமல் அடித்துத் துன்புறுத்துவது கொடூரமான சோகம்.

நைஜீரியாவின் பெண்ணடிமைத்தனத்தையும், ஊழலையும் விவரிக்கும் முயற்சியில் உயர்நாவலின் கட்டமைப்பை மறந்து விடுகிறார். பாத்திரப்படைப்பில் அழுத்தமில்லை. எனினும் ஒரு பெண் போராளியின் கதை என்ற முறையில் நைஜீரிய இஸ்லாமிய சமூகத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிற புதினம் இது. 'தருமி' என்ற புனைப்பெயரில் எழுதுகின்ற பேராசிரியர் சாம் ஜார்ஜ் நாவலைத் தமிழாக்கம் செய்திருக்கிறார்.  ஆற்றொழுக்கான நடை. ஒரு சில இடங்களில் சொற்களில் தடுமாற்றம் இருந்தாலும், கதை சொல்லும் பாணி மிக நன்று. பெண்ணிய ஆர்வலர் அவசியம் படிக்க வேண்டும்.

.................... பேராசிரியர் ச. வின்சென்ட்


*










Thursday, September 10, 2009

334. அமினா

*

அமினா*


ஒரு நைஜீரிய பெண் போராளியின் உணர்ச்சிகரமான வாழ்க்கை.

29 மொழிகளில் வெளிவந்து உலக கவனத்தை ஈர்த்த முக்கியமான நாவல்.


ஆசிரியர்: முகமது உமர்

தமிழில்: தருமி





பின்பக்க அட்டையில் உள்ள சிறு குறிப்பு:

சிறுமியோ, வயதான கிழவியோ எல்லோரும் முகத்திரை அணிந்துதான் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். உடைக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். வியாபாரமோ தொழிலோ செய்ய முடியாது. தனியாக வசிப்பவர்களுக்கு வேலை கிடையாது. வேலையில் இருப்பவர்கள் வரி செலுத்த வேண்டும். திருமணமானவர்களுக்கு பேறுகால விடுப்பு கிடையாது. நிலம், சொத்து வாங்க முடியாது. இப்படித் தொடர்கிற அடக்கு முறைக்கு ஒரே காரணம் அவர்கள் பெண்கள். அதுவும் இஸ்லாமியப் பெண்கள்.

எங்கோ நைஜீரியாவில் ஒரு பொந்தில் வசிக்கும் அமினா, பெண்களுக்கு எதிரான ஆதிக்கப் போக்கையும் கடுமையான சட்ட திட்டங்களையும் எதிர்கொள்ளத் துணிகிறாள். முடிவற்றுத் தொடர்கிறது அவளது உணர்ச்சி பூர்வமான போராட்டம். நைஜீரியாவையும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்க்கையையும் கண் முன் நிறுத்தும் அபூர்வமான படைப்பு இது.





*
"புத்துணர்ச்சி அளிக்கும் புத்திசாலித்தனமான படைப்பு."

Malak Zaalouk, Author and Sociologist.


*

"நம்பிக்கையூட்டும் பாஸிடிவ் கதை. உத்வேகம் அளிக்கும் ஒரு புதிய உலகத்துக்கு வாசகர்களை அழைத்துச் செல்கிறது இந்நாவல்."

Anne - Marie Smith, Canadian critic



*

"ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஓர் உலகில் ஒரு பெண்ணாக இருப்பதன் பொருள் என்ன என்பதை முகமது உமர் இந்நாவலில் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் இஸ்லாமியப் பெண்களுக்கு இந்நாவல் நம்பிக்கையளிக்கும் தீபமாகத் திகழ்கிறது.

Kholood Alqahatani, Journalist, Arab News (Saudi Arabia)



*

*16ம் நூற்றாண்டில் இன்றைய நைஜீரியாவின் ஒரு பகுதியில் அரசாண்ட இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த அமினா தன் போர்குணத்திற்காகவும், வீரத்துடன் தன் நாட்டை விரிவு படுத்தியமைக்காவும் வரலாற்றில் தனியிடம் பெற்றவள். அப்போர்க் குணத்திற்காகவே இப்பெயரைத் தன் கதாநாயகிக்கு வைத்துள்ளார் ஆசிரியர்.


*

AMINA

Kizakku,
New Horizon Media Pvt. Ltd;
No. 33/15 Eldams Road,
Alwarpet, Chennai -18

e-mail: support@nhm.in

பக்கங்கள்: 368

விலை: Rs. 200


*


இந்த நூலைப்பற்றி ஒரு குறிப்பு தருகிறார் ஸ்ரீதர்.


*

*