Tuesday, May 14, 2024

1273. தனிநபர் நாடகம்: "க"வின் "ஜ"

அமெரிக்கன் கல்லூரி பழைய மாணவர் குழு ஒரு விசித்திரமான தலைப்பு கொண்ட ஒரு நாடகத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தார்கள் என்பது தெரியும். அது  மதுரையில் நடந்து கொண்டிருந்தது என்பதும் தெரியும். ஆனால் திடீரென சென்னையில் நடக்கிறது என்றும், அதுவும் என் இருப்பிடத்திற்கு  அருகிலேயே நடக்கிறது என்று தெரிந்ததும்,  “பல சீரியசான திட்டங்கள்” தீட்ட ஆரம்பித்தேன். வயதைக் காரணம் காட்டி  குடும்பம் ஏறக்குறைய வீட்டுச் சிறையில்’  வைத்து விட்டார்கள். இரண்டு மணி நேரம் அதிலிருந்து தப்பிப்பதற்காக, காலையிலிருந்தே  வீட்டில் நல்ல பிள்ளையாகநடக்க ஆரம்பித்து, மாலையில் அப்போதுதான் அந்த விளம்பரத்தைப் பார்த்தது போல் நடித்து ... ஒரு வழியாக அமெரிக்கன் கல்லூரியின் மீது பாரத்தைப் போட்டு, அவர்கள் நடத்தும் ஒரு சிறு கூட்டம் என்று சொல்லி, (நாடகமெல்லாம் இந்த வயதில் போய் பார்க்கணுமா? என்று கேள்விக்கணைகளுக்கு அஞ்சி...) புறப்பட்டுப் போனேன். சரியான நேரத்தில் இடத்தைக் கண்டுபிடித்து முதல் ஆளாகப் போனேன். நல்ல வேளை மற்றவர்களும் விரைவில் வந்து சேர நாடகம் ஆரம்பமானது.



கவின் ஜ ”என்பது நாடகத்தின் தலைப்பு. தலைப்பே வித்தியாசமானது தான். அதுவும் முழு நீள நகைச்சுவை தனிநபர் நாடகம் என்று விளம்பரம் கூறியது. ஒரு விஷயத்தை உடைத்து விடுகிறேனே ... தலைப்பை முழுவதுமாக விளக்கி விடுகிறேன். “கந்தவேலின் ஜட்டி”  என்பதே முழுத் தலைப்பு. நாமெல்லோரும் நம் உள்ளாடைகளை அதன் பெயரை வெளிப்படையாகச் சொல்வதே வெகு unparliamentary . என்றல்லவா நாம் நாகரிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே முதலில் சில நிமிடங்களில் ரொம்பவுமே கஷ்டப்பட்டு கந்தவேல் ஜட்டி” என்ற சொல்லை மிகவும் வெட்கப்பட்டுக் கொண்டே சொல்கிறார். 


இந்த நாடகத்தை நான் முழுவதுமாகச் சொல்லி அதன் நயத்தைக் கெடுக்க விரும்பவில்லை. ஆனால் விளையாட்டுத் தனமாக ஆரம்பித்து... மெல்ல மிகவும் முக்கியமான, ஆழமான காம வக்கிரங்களை நோக்கி கதை நகர்கிறது. இறுதியில் கந்தவேல் ஒரு கடிதம் வாசிக்கிறார். ஒரு பெண்ணின் தந்தையான அவர் தன் பெண்ணை நினைத்து அஞ்சி, ஆண்களின் வக்கிரப் புத்திக்கான காரணங்களை நம் முன் வைக்கின்றார்.  கேள்வியும் பதிலுமாக நாடகம் ஒரு serious tone-ல் முடிகிறது.




ஆனந்த குமார் தனி நபராக நிறைவாக நடித்துள்ளார். இறுதியில் கலங்கும் கந்தவேல் நம்மையும் கலங்க வைத்து விடுகிறார்.




இளம் பிள்ளைகள் இந்த நாடகத்தைப் பார்ப்பது பல் நல்வினைகளை விளைவிக்கும் என்றே நம்புகிறேன்.







நண்பர்கள் பாஸ்கர், சுதன் எடுத்த படங்களுக்கு நன்றி.

பி.கு. அதென்னவோ, அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்கு அந்தக் கல்லூரிமேல் எப்போதுமே  அத்தனை காதல்!  நாடகம் நடந்த அறையில் பெரும் நடிகர்கள் சிலரின் புகைப்படங்கள் அலங்காரமாக மாட்டப்பட்டிருந்தன. அத்னோடு எங்கள் கல்லூரியின் கலைரசனையோடு கட்டப்பட்டுள்ள மணிக்கூண்டின் படமும் அவைகளோடு தொங்கியதில் அந்தக் காதல் வெளிப்பட்டது. மகிழ்ந்தேன். அதனை வீடியோவாக எடுத்தேன். பதிந்திருக்கிறேன்.


Sunday, February 25, 2024

1272. Samson and Delilah (1949) Samson kills a hundred men with the jawbone of...

Tuesday, January 16, 2024

1272. SAMSON AND DELILAH vs LEO

எந்த ஆண்டு அந்தப் படம் வந்தது என்று ஆண்டவரிடம் கேட்டேன். 1949 என்று போட்டிருந்தது. அதாவது எனக்கு நாலைந்து வயது. ஆனாலும் பாருங்க ... அந்தப் படத்தை ரொம்ம்ம்ம்ப சின்ன வயசில பார்த்திருக்கிறேன். எப்போ படம் இந்தியாவிற்கு வந்ததோ... நான் எங்கு, யாருடன் அந்தப் படத்தைப் பார்த்தேனோ என்பதெல்லாம் நினைவில் இல்லை. சின்ன வயதில் பார்த்த ஒரு படம். ஒருவேளை பைபிள் படம் என்பதால் பள்ளியில் காண்பித்திருக்கலாம்.(ம்ம்... அதற்கு வாய்ப்பில்லை.) எப்படியோ அந்தப் படத்தை அன்னாளில் பார்த்தேன்.


https://youtu.be/yMo3DL_KkHE?si=dl0b261hgoUwe0O7

அந்த சாம்சன், நம்ம கர்ணன் மாதிரி தன் சக்திகள் அனைத்தையும் தன் தலைமுடியில் வைத்திருந்தாராம். அதை வெட்டிட்டா அவரை எதிரிகள் அடித்து வீழ்த்த முடியும், டிலைலா  “முடிவெட்டும்” சீன் இன்னும் நினைவில் இருக்கிறது. இருந்தாலும் அவர் ஹீரோ அல்லவா... அதுனால் முடி போனாலும் முடிவில் ஹீரோ தான் ஜெயுக்கணும்.  கடைசியில் அவர் எதிரிகளோடு சண்டையிடுவார். அதில் நினைவில் இருப்பதெல்லாம், அவர் கையில் கழுதை அல்லது கோவேறிக் கழுதையின் கீழ்த்தாடை எலும்பு இருக்கும். அது மட்டுமே அவரது ஆயுதம். மயிரும் ஏற்கெனவே போய் விட்டது, இருந்தாலும் அந்த எலும்பை வைத்து எதிரிகளை அடித்துத் துவம்சம் செய்து விடுவார். அடின்னா அப்படி ஒரு அடி அடித்துக் கொல்லுவார்.

https://www.youtube.com/watch?v=yMo3DL_KkHE

அசந்து பார்த்தது அந்தக் காலம் அப்டின்னு நினச்சுக்கிட்டு இருந்தப்போ பொங்கலுக்கு லியோ படம் போட்டாங்க. அது ஒரு மூணு நாலு மணியளவில் ஓடுமா... நல்ல வேளை .. படம் பார்க்கிறப்போ பொங்கல் வாழ்த்து சொல்லி, கதையடிக்க மூணு நண்பர்களின் தொலைபேசி அழைப்பு வந்தது.  அப்பப்போ mute போட்டு பேசினேன். அப்போவெல்லாம் சில வெவ்வேறு மாநில ஊர்களின் பெயர்களின் ஸ்லைடுகளும் வந்திச்சு. அதையெல்லாம் வச்சி நானோ ஒரு கதை உண்டாக்கிக் கிட்டேன். 

அதிலும் பிக்பாஸ் ஜனனி, மாயா இவங்கல்லாம் ஒத்த ஒத்த சீனுக்கு வந்தாங்க... எதுக்கு வந்தாங்கன்னு தெரியலை. அப்புறமா காணாம போய்டுறாங்க. திரிஷா எங்கேயோ போய் டிடக்டிவ் வேலை செய்றாங்க. இப்படியெல்லாம் போச்சா ... கடைசி சீன் வந்திருச்சா .... அதுல, சாம்சன் கையில் கழுதையின் தாடை எலும்புன்னா இங்க பார்த்திபன் அலையாஸ் லியோ - அதாவது விஜய் அண்ணா - கையில் ஒண்ணறை இஞ்சி சைசில் சின்னப் பேனா கத்தி மட்டும் இருந்தது. ஆனால் mortality rate இன்னைய படத்தில் அதிகம். ஏறத்தாழ ஐநூறு பேரை அந்த ஒண்ணரையணா... இல்லைங்க .. ஒண்ணறை இஞ்ச் கத்தியே வச்சி அத்தனை பேரையும் வெட்டிச் சாய்ச்சிட்டார் விஜய் அண்ணா.

சாம்சன்னை விட நம் விஜய் அண்ணாதான் பெட்டர்.


Friday, January 12, 2024

1271. kathal, the core #dharumispage

1270 . சென்னைப் புத்தக விழாவில் இரண்டாவது புத்தகம் - சூத்திரர்

இந்த நூலுக்கு “சூத்திரன்” என்றே பெயர் வைக்க விரும்பினேன். அந்தச் சொல்லே சூத்திரர்களைக் குத்தும் என்று நினைத்தேன்; அதையே விரும்பினேன். ஏனெனில், இந்த நூலை வாசிக்கும் போதே என்னை நானே நொந்து கொண்டேன்.... இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக நான் ஏன் சுத்தமாக சுய மரியாதை இல்லாமல் இருந்து தொலைத்தேன். (இங்கே நானென்பது என் மூதாதையரையும் சேர்த்து அனைத்து சூத்திரன்களையும் ஒன்று சேர்த்தே சொல்கிறேன்.) சில ஆண்டுகள், சில நூற்றாண்டுகள் என்றாலும் பரவாயில்லை. ஆனால் அன்றிலிருந்து இந்த வினாடி வரை கூனிக் குறுகி, சுயமரியாதை என்றால் என்னவென்று தெரியாமல், அறியாமல், புரியாமல் இருந்திருக்கிறேனே என்று நினைத்துக் கொண்டே இந்த நூலை வாசித்தேன். நூலில் கொடுத்துள்ள உண்மைகள் அத்தனை வன்மையானவை; உண்மையானவை; உணர்ந்து படிக்க வேண்டியவை.

சூத்திரன் என்று நம்மை ஒதுக்கி வைத்த மக்களும் இதைக் கட்டாயம் வாசித்தாக வேண்டும். ஒரு வேளை இத்தனைக் கொடுமையானவர்களா நாம் என்ற கேள்வியும், மனிதத்தன்மையிலிருந்து எவ்வளவு விலகிப் போய்விட்டோம் என்பதை அவர்களும் இந்நூலை வாசிக்கும்போது (ஒருவேளை) உணரலாம்.

கட்டாயம் வாசிப்போம் .... திருந்துவோமா என்பது அதற்கடுத்த நிலை !!!