என்னையும் இந்த எட்டாட்டத்துக்கு அழைத்த மணியனையும், கண்மணியையும் என்னவென்று சொல்லித் திட்டுவது என்று தெரியாமலேயே ... இதோ .. என் எட்டாட்டம்.
கண்திருஷ்டி பொம்மையாக என்னை நானே இந்த "8-பதிவு"களில் இணைக்க வேண்டியதுள்ளது வருத்தமாகத்தான் இருக்கிறது. இதுவரை எழுதியவர்களின் பதிவுகளில் பலவற்றை வாசித்ததும் பெருமூச்சு மட்டுமே வந்தது. இப்படி ஒரு கூட்டத்தில் நானும் கொஞ்சம் அங்கீகரிக்கப் பட்டுள்ளேன் என்பதை நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. வயதில் சின்னவர்களாக இருக்கும் பல பதிவர்களின் ஆழ்ந்த, தெளிந்த கருத்தோட்டங்கள் எப்போதும் வியப்பையையே அளித்து வந்துள்ளன. ஆனாலும், நான் இக்கூட்டத்து மக்களோடு பல விஷயங்களில் ஒட்ட முடியாதவனாக இருந்தும் எப்படியோ என்னை நான் இவர்களோடு இணைத்துக் கொண்டதை நினைக்கும்போது தாழ்வு மனப்பான்மையையும் தாண்டி ஒரு சந்தோஷம்.
விஷயத்துக்கு வருவோம் ...
If you want to be successful in life, take me as your model. ... But take me as your negative model! - என் மாணவர்களிடம் நான் சொல்வது. சும்மா humble pie எல்லாம் இல்லை.எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ அப்படி எல்லாம் இருந்தாச்சு. procrastination - எல்லாவற்றையும் எப்போதும் நாளைக்கு .. நாளைக்கு என்று தள்ளிப் போடுவது உடன் பிறந்த வியாதியாய் இன்னும் தொடர்கிறது. சாதித்திருக்கக் கூடியது என்று நிறைய இருந்தும் இதுவரை எதையுமே சாதிக்காமல், பிறந்தோம், இருந்தோம், இறந்தோம் என்ற வகையினுள் ஒருவனாய் இதோ இதுவரை இருந்தாயிற்று.
1. பள்ளிப் படிப்பில் தமிழ்,ஆங்கில, கணக்குப் புலி என்று ஒன்பதாம் வகுப்பு வரை - IV Form - இருந்தாயிற்று. அதன்பின் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சிறப்புக் கணிதம் எடுத்த அன்று வாழ்க்கையில் முதல் சறுக்கு. மனப்பாடம் செய்ய முடியாத ஒருவன் அல்ஜீப்ராவையும், தியரங்களையும், ரைடர்களையும் பார்த்து ஓட ஆரம்பித்தது கல்லூரி வரும்போது கணக்கே இல்லாத பாடத்திட்டத்தில் சேரும்வரை தொடர்ந்தது.
2. கல்லூரி வந்தபிறகு ஆங்கிலம் அல்லது பொருளாதாரம் எடுக்க ஆசைப்பட்டு, அதில் சேர்ந்து 30 நாட்கள் ஓட்டிய பின்னும், அப்பாவின் ஆசைக்கு அறிவியலில் தூக்கிப் போடப்பட்டேன். இளங்கலையில், ஆங்கிலத்திற்கும், தமிழுக்கும் கொடுத்த ஆர்வத்தை, முயற்சியை எடுத்துக் கொண்ட அறிவியலுக்குக் கொடுத்திருந்தால் முன்னேறியிருந்திருக்கலாம். அடுத்த சறுக்கு.
3. இளங்கலை முடித்ததும் எல்லா விலங்கியல் மாணவர்கள் போலவே மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்து, இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை; மருத்துவத் தேர்வு முடிவுகள் வெளியே வரும் முன் இடம் கிடைத்து விட்டதாக குறுக்கு வழித் தகவல்.பாதி டாக்டராகி விட்டது மாதிரி கனவுகள். ஆனால் முடிவு வெளியே வரும்போது பெயர் இல்லை. மதுரையிலிருந்து என் கூட வந்தவர் என்னை விடவும் குறைந்த மதிப்பெண்கள் வாங்கியும் அவருக்குக் கிடைத்திருந்தது. முதலில் தகவல் சொன்னவரிடம் கேட்ட போது (அந்தக் காலத்து) இடப் பங்கீடுதான் காரணமென்றார். இடம் கிடைத்த நண்பரோ இன்றுவரை உனக்கே அந்த இடம் கிடைத்திருக்கலாம் என்று வருந்துவது வழக்கம்.
4. முதுகலை முடித்ததும், எனக்குப் பிடித்த ஆசிரியருக்கு என்னைப் பிடித்துப் போக ஆராய்ச்சி மாணவனாக வரும்படி அழைத்தார். மூன்று ஆண்டுகள் வரை வீட்டில் உத்தரவு கிடைக்கவில்லை. அதற்குள் வயது கடந்து போட்டித் தேர்வுகள் எழுதும் வாய்ப்பை இழந்தாயிற்று. அதற்குப் பின்னும் ஆராய்ச்சியில் சேர்ந்து ஒரு பட்டம் வாங்கும் அந்த முயற்சியை கடைசிவரை முழுமையாக எடுக்காததற்கு இன்று வரை சரியான காரணம் ஏதும் கிடையாது.
5. கல்லூரியில் சித்தாள் வேலையில் சேர்ந்த பிறகு முதல் நான்கு வருடங்களில் கிடைத்த சில நல்ல அனுபவங்கள் ஆசிரியத்தொழில் ஈடுபாடு கொள்ள வைத்தது. அது என்ன மாயமோ .. முதலில் இருந்தே மாணவர்களோடு நல்ல உறவு; செய்யும் தொழிலில் ஒரு பெரிய பிடிப்பைக் கொடுத்ததே அந்த உறவுகள்தான். இன்னும் பல மாணவர்கள் தொடர்ந்து வைத்திருக்கும் உறவுகளே வாழ்க்கைக்கு வளம் தருகின்றன. சில ஆசிரியர்கள் தரும் testimonial-களை மாணவர்கள் பத்திரமாக வைத்திருப்பதுண்டு. நான் அதுபோல் மாணவர்கள் சொன்னவைகளை நினைவில் வைத்திருக்கிறேன்.
மாணவர்களை கன்னடர்-தமிழர் தகராறு இருந்த ஒரு சமயம் பெண்களூருக்கு அழைத்துச் சென்றபோது ரயில் நிலையத்தில் பதிவுச்சீட்டை மறுத்து தகராறு செய்த ரயில்வே ஊழியரிடம் முதலில் தயவாகவும், அதன் பின் எல்லாம் முற்றிய பின் மதுரை 'சலம்பலை' அரங்கேற்றியபோது பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மாணவன், You do what you say' என்று சொன்னதும்,
முதுகலை வகுப்பில் புதுப் பாடத்திட்டம் ஒன்றை புகுத்தி அதை 'I wont be a teacher for you. I will be just a lecturer' என்று கூறி பாடம் எடுத்து முடித்ததும் மாணவர் இருவர் பின்னாலேயே வந்து, 'Sir, ஒண்ணுமே புரியலை ..தலை சுத்துது' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே இரு மாணவிகள் வந்து, 'Sir, thank you for bringing in fresh breath into our class' என்று சொன்னதும்,
பழைய மாணவன் ஒருவன் படித்துச் சென்றபின் சில ஆண்டுகள் கழித்து கடிதத்தில், 'நீங்கள் சொல்லிக்கொடுத்தது எவ்வளவு புரிந்தது, நினைவில் இருக்கிறது என்பதையெல்லாம் விட இப்போதும் அந்தப் பாடத்தோடு தொடர்புள்ள விஷயங்களைப் பார்க்கும்போது உங்கள் நினைவு வந்துவிடுகிறது' என்று எழுதியதையும்,
I dont know how much you know things; but you always make us feel pretty awe about you' என்ற ஒரு மாணவியின் comment-யையும்,
மாணவனின் கல்யாணத்துக்குப் போயிருந்த போது அவனின் தந்தை மணப்பெண்ணின் தந்தையிடம் என்னை அறிமுகப் படுத்தும் போது, 'I am just his father; but he is his god-father' என்றதையும் எப்படி மறக்க முடியும்?
6. சார்ந்த துறையை ஒட்டி புத்தகங்கள் எழுத கிடைத்த வாய்ப்புகளைத் தவற விட்டதோடு, இப்போதும் ஒரு புத்தகமாவது எழுதவேண்டும் என்று மனத்தளவில் ஆவல்; ஆனால், நிறைவேற்ற முயற்சி இல்லாது .. காலம் நழுவிக்கொண்டிருக்கிறது விரைவாக.
7. creativity உள்ள ஆட்களைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு பொறாமை. அதிலும் ஓவியர்களுக்கும், பாடகர்களுக்கும் முதலிடம். சித்திரமும் கைப் பழக்கம் என்று யாரோ சொன்னதை நம்பி நானும் அந்தக் காலத்திலிருந்து கிறுக்கி கிறுக்கிப் பார்த்தேன்; கிறுக்கலாகவே நின்றுவிட்டது; ஓவியமாக என்றும் வரவேயில்லை. பென்சில், water colour, oil paint என்று பல முயற்சிகள். எல்லாம் விழல்கள்.
பாடத்தான் வராது; ஏதாவது இசைக்கருவி பழகலாமென்றும் பல முயற்சிகள். mouth-organ மிக எளிது என்று சொல்ல நாலைந்து டைப் mouth-organs வாங்கி ஊதி ஊதி .. சத்தம் மட்டும்தான் வரும்; அதிலிருந்து ஒருநாள்கூட சங்கீதம் வந்ததில்லை. இருப்பதிலேயே எளியது என்று சொல்ல, அடுத்து புல்-புல் தாரா ஒன்று வாங்கினேன். சொல்லிக் கொடுத்தவர் 'என்ன என்ன வார்த்தைகளோ ..' (வெண்ணிற ஆடை) பாட்டின் அந்த முதலடியை மட்டும் சொல்லிக் கொடுத்துவிட்டு மீதியை நீயே 'பிடித்துக் கொள்' என்று போய்விட்டார். எங்க பிடிக்கிறது? ஆன மட்டும் முயற்சித்தும் அது என் பிடிக்குள் அகப்படவேயில்லை.
8. சரி, சித்திரமும் இசையும்தான் நம்மளை விட்டு இப்படி ஓடுது; விளையாட்டில் ஏதாவது முயற்சிக்கலாமென நினைத்து முயன்றதும் உண்டு. இங்கு ஒரே ஒரு வித்தியாசம். யாரோடு சேர்ந்து பழக ஆரம்பித்தாலும் அந்தக் குழுவில் முதலாக எல்லோரையும் தோற்கடிக்கும்படி முதலிடத்தை முதலில் பெற்றுவிடுவேன். எல்லாம் ஒரு ஸ்டேஜ் வரைதான். அதன்பின் நான் அதிலேயே தேங்கிவிட எல்லோரும் என்னை ஓவர் டேக் செய்வது வழக்கம். அனேகமாக கிரிக்கெட் தவிர எல்லா விளையாட்டிலும் கொஞ்சமாவது கைவண்ணம் காட்டியிருப்பேன்.
.........அப்பாடா..ஒரு வழியா நம்ம பற்றி கொஞ்சம் சொல்லியாச்சு .. ஆள விடுங்கப்பா .. weird விஷயங்கள் எழுதச் சொல்லி 'i am a lousy guy' அப்டின்னு முன்னொரு பதிவில் சொல்ல வச்சாச்சு. இப்போ எட்டு கேட்டு உதவாக்கரைன்னு சொல்ல வச்சாச்சு. போதுமப்பா போதும்.. மக்கள்ஸ், இனிமேலும் இந்த மாதிரி confessions பண்ண வச்சு என்னை முழுசுமா வெளிக்காண்பிக்க வைக்காதீங்க. கட்டாயமா நம்ம பதிவர்களுக்கு என் சுயரூபம் தெரியணுமா, என்ன? பாவம் நானு .. உட்ருங்க...
ஓ! அடுத்து எட்டுபேரை கை காண்பிக்கணுமோ. பாவப்பட்ட அந்த எட்டு ஆட்கள்:
கடப்பாரை
ஜாலி ஜம்பர்
ஸ்ரீதர் வெங்கட்
ராம்
லிவிங் ஸ்மைல் வித்யா
ப்ரபு ராஜதுரை
தெக்கிக் காட்டான்
கல்வெட்டு
விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்