ஆக, மீண்டும் மீண்டும் ஒரு அநியாயத்தைப் பற்றி 6.6.2006லும், பின் 14.7.2007லும் எழுதி, இதோ இப்போது இந்த ஆண்டும் அதே போன்ற ஒரு அநியாயத்தைப் பற்றி எழுதவேண்டிய நிலையில் தான் இருக்கிறோம். தொடர்ந்து ஒரு அநியாயத்தைச் சிலர் அரங்கேற்ற நாம் அதைப்பற்றி வெறுமனே எழுதிக்கொண்டேதான் இருக்கப் போகிறோமா?
பதிவர் புருனோ இதைப் பற்றி எழுதியிருப்பதை இங்கு நானும் பதிகிறேன்.
இதோ மறுபடியும் தொடரும் இந்த அநியாயத்தைப் பற்றிய விவரம்.
===========================================
"விடுதலை"
(09/25/2008 )இதழில் வந்துள்ள செய்தியை இங்கு நகல் எடுத்துத் தந்துள்ளேன்.
அகில இந்திய அளவில் மருத்துவ மேற்படிப்பு மற்றும் “எய்ம்ஸ்”
நுழைவுத்தேர்வுகளில் இட ஒதுக்கீட்டுக்குச் சாவுமணி!
அதிக மதிப்பெண் பெறும் தாழ்த்தப்பட்டோர் மற்றும்
பிற்படுத்தப்பட்டோரை பொதுப் போட்டியில் தேர்வு செய்ய தடை!
மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களே இதற்குப் பொறுப்பு.
சமூகநீதியைக் காப்பாற்ற செயல்பட வேண்டும் அமைச்சர்.
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
மருத்துவக் கல்லூரியில் மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வில் இட ஒதுக்கீடுக்குச் சாவு மணி அடிக்கும் கொடுமையைச் சுட்டிக்காட்டி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இதில் நியாயம் கிடைக்க வழி செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
மருத்துவக் கல்வித் துறையில் பட்ட மேற்படிப்புக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வில், இட ஒதுக்கீடு அளிப்பதில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பெருந்தவறையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சி அளிக்கிறது
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் இதற்கான தேர்வு நடைபெறுவது வழக்கமாகும். அதற்கான விண்ணப்பம் இம்மாதம் (செப்டம்பரில்) வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல் அறிக்கையில் (Prospectus)வெளியிடப்பட் டுள்ள விவரம் அதிர்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது.
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு எத்தனை விழுக்காடு என்று குறிப்பிடப்படவில்லை என்பது முதலாவது அம்சமாகும்.
இரண்டாவதாக அதில் காணப்பட்டிருப்பதாவது:
The Counselling shall only be done according to the category Rank (Unreserved, SC, ST, OBC & Other Physically handicapped) and not by the overall Rank.
உயர்ஜாதியினருக்கே தாரை வார்ப்பா?
கலந்தாய்வு என்பது அந்தந்தப் பிரிவினருக்கான தனிப்பட்ட தகுதி அடிப்படையில்தான் நடத்தப்படும் என்றும், ஒட்டுமொத்த மான தகுதி அடிப்படையில் அது இருக்காது என்றும் குறிப் பிடப்பட்டுள்ளது.
இதன் பொருள் - தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், அவர்கள் பொதுப் போட்டியில் கொண்டு வரப்படமாட்டார்கள். அவரவர்களுக்குரிய ஒதுக்கீட்டுப் பகுதியில் மட்டுமே கணக்கிடப்படுவார்கள். இதன்மூலம் சட்டப்படி இட ஒதுக்கீடு பெறாத பிரிவினரான உயர்ஜாதியினருக்கு மட்டுமே திறந்த போட்டியில் உள்ள அத்தனை இடங்களும் கிடைக்கும்.
இதுவரையில் கேள்விப்படாத ஒரு தனிப்பிரிவு U.R. (Unreserved) என்பது எங்கிருந்து குதித்தது என்று தெரியவில்லை. இதில் திட்டமிட்ட ஒரு சூழ்ச்சிப் பொறியிருக்கிறது. எந்த ஆணையின்கீழ் இது உள்ளே நுழைந்தது?
இவ்வாண்டு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 9 சதவிகிதம், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் 22.5 சதவிகிதம் போக மீதியுள்ள 68.50 சதவிகித இடங்களும் உயர்ஜாதியினருக்குத் தாரை வார்க்கப்படும்.
(இந்தத் திட்டத்தின்படி மொத்தமுள்ள 3200 இடங்களில் தாழ்த் தப்பட்ட மக்களுக்கு 480 இடங்களும், மலைவாழ் மக்களுக்கு 240 இடங்களும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 9 விழுக்காடு கணக்குப்படி 290 இடங்களும், முன்னேறிய ஜாதியினருக்கு 2190 இடங்களும் கிடைக்கும்).
பிற்படுத்தப்பட்டவர்களைப் புறக்கணிக்கும் போக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக் கப்படும்பொழுது இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு பல கட்டங்களாக (In Phased Manner) என்று குறிப்பிட்டிருப்பது தேவையில்லாத ஒன்றாகும். ஏனெனில், ஏற்கெனவே இருக்கும் இடங்கள் தவிர புதியதாக அதிக இடங்கள் என்ற பிரச்சினைக்கே இதில் இடமில்லை. ஏற்கெனவே இருக்கும் இடங்களை தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் என்று இடங்கள் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன. இந்த நிலையில், புதிய வசதிகள், ஏற்பாடுகள் (Infrastructure) என்ற பிரச் சினைக்கே இடமில்லை என்கிறபோது, பிற்படுத்தப்பட்டோர்களுக் கான 27 சதவிகித இடங்களை இவ்வாண்டே கொடுக்க வேண்டியதுதானே!
தீர்ப்பினை தங்கள் வசதிக்கேற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளும் தந்திர உணர்வுதான் இதில் காணப்படுகிறதே தவிர, நேர்மையான அணுகுமுறை இதில் கிஞ்சிற்றும் இல்லை.
இதில் இன்னொரு திட்டமிட்ட விடுபடுதல் (Omission) நடந்தி ருக்கிறது. விவரக் குறிப்பு (Prospectus - Appendix-V) பகுதியில் வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில் தேதி வாரியாக தாழ்த்தப் பட்டோர், மலைவாழ் மக்கள், இட ஒதுக்கீடு இல்லாதவர்கள் (Unreserved) என்பவர்களுக்கான கவுன்சிலிங் விவரம் கொடுக் கப்பட்டுள்ளது; ஆனால், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான விவரம், தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
எந்த வகையிலும் மக்கள் தொகையில் மிகப்பெரும் பகுதியினரான இதர பிற்படுத்தப்பட்டவர்களைப் புறக்கணிக்கும் போக்கு, வஞ்சிக்கும் போக்கு வெளிப்படையாகவே தெரிகிறது.
இது எவ்வளவு பெரிய மோசடி, தில்லு முல்லு என்பது மட்டுமல்ல - முழுமையான சட்ட மீறலேயாகும்.
டில்லி எய்ம்சில் நடந்துள்ள மோசடி!
அதேபோல, டில்லியில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) என்று அழைக்கப்படும் மருத்துவக் கல்லூரி நிறுவனத்தில் சேருவதிலும் பெரிய மோசடி நடைபெற்றுள்ளது.
ஆண்டுக்கு இரண்டு முறை ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.
தகுதி மதிப்பெண்ணிலும் குளறுபடி!
இதில் தாழ்த்தப்பட்டவர்களானாலும், பிற்படுத்தப்பட்டவர்க ளானாலும், முன்னேறிய ஜாதியினர் ஆனாலும் தகுதி மதிப்பெண் (நுழைவுத் தேர்வில்) என்பது ஒரே அளவில் அதாவது 50 விழுக்காடு பெற்றிருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், மற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு நடைபெறும் அகில இந்தியத் தேர்வுக்குத் தாழ்த்தப்பட்டோருக்குத் தகுதி மதிப்பெண் 40 சதவிகிதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனிந்த வேறுபாடு? எய்ம்ஸ் மட்டும் நெய்யில் பொரிக்கப் பட்டதா? 24.8.2001 உச்சநீதிமன்ற தீர்ப்பு இதற்குச் சாதகமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், இவ்வாண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி, உச்சநீதி மன்றத்தில் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் அமைந்த 5 நீதிபதிகளைக் கொண்ட ஆயம் தாழ்த்தப்பட்டவர்களுக்கான நுழைவுத் தேர்வில் மதிப்பெண் 10 சதவிகிதம் குறைக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளதே அது வசதியாக மறைக்கப்பட்டுள்ளது அல்லது மறக்கப்பட்டுள்ளது என்பது மறக்காமல் குறிப்பிடத்தக்க ஏமாற்று வேலையாகும்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்கள் போதிய எண்ணிக்கைக் கிடைக்கவில்லையென்றால், இந்த இரு பிரிவுகளுக் கிடையே பகிர்ந்து கொள்ளலாம். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் உடல் ஊனமுற்றோர் பிரிவுகளுக்கு உரிய எண்ணிக்கையில் விண்ணப்பதாரர் கிடைக்கவில்லையென்றால், அவை அத்தனை இடங்களும் பொதுத் தொகுதிக்கு (General Category) சென்று விடுமாம்.
இட ஒதுக்கீடு என்று வரும்போது எப்படி எப்படியெல்லாம் தடைக்கற்கள், குறுக்குச் சால்கள் தந்திரமாகச் செய்யப்படு கின்றன என்பதைக் கவனிக்கவேண்டும்.
மத்திய சுகாதாரத் துறையே பொறுப்பு
அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும் இந்த இருவகை மருத்துவக் கல்லூரி சேர்க்கை என்பது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கீழ்தான் வருகிறது. இந்தத் துறைக்கு அமைச்சராக இருப்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள். சமூகநீதிபற்றி அவருக்கு நாம் வற்புறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதே என்பதுதான் நமது வேதனை!
எய்ம்ஸ் மருத்துவமனைப் பிரச்சினையில் அவருக்கு ஆதிக்க சக்திகளால் சோதனைகளும், தொல்லைகளும் ஏற்பட்ட நேரத்தில், நாம் அவருக்குத் துணையாக அவர் கரத்தைப் பலப்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டுள்ளோம்.
இந்த நிலையில், அவர் அமைச்சராக இருக்கும் இந்தத் துறைகளில் சமூகநீதிக்குச் சவக்குழி வெட்டப்படலாமா?
அதிக மதிப்பெண் பெறும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோரை பொதுத் தொகுதியில் சேர்க்காமல், அவரவர்களின் இட ஒதுக்கீட்டுப் பிரிவில் கணக்கிடுவதும், பொதுத் தொகுதி என்பது (Open Competition) முழுக்க முழுக்க பார்ப்பனர்களுக்கு - உயர் ஜாதியினர்க்குத் திருப்பப்படுவதும் எவ்வளவு பெரிய மோசடி!
டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்தானே பொறுப்பு
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இதில் போதிய கவனம் செலுத்தாதது ஏன்? இதற்கான பொறுப்பு அவரைச் சார்ந்ததுதானே?
குற்றப் பத்திரிகை படிப்பது நமது நோக்கமன்று; சமூகநீதியில் இவ்வளவு பெரிய சதி நடந்திருக்கிறது - அதனைச் சரி செய்து தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் என்பதே நமது எதிர்ப்பார்ப்பு - செயல்படுவார் என்றும் எதிர்பார்க்கிறோம்.
இதற்குக் காரணமானவர்கள் எவராக இருப்பினும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதன்மூலம், குறுக்குவழியில் ஒடுக்கப்பட்டோரின் வாய்ப்புகளைத் தட்டிப் பறிக்கும் சூழ்ச்சி களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
சென்னை
25.9.2008
தலைவர்,
திராவிடர் கழகம்.
========================================
இக்கதை இப்படியே காலங்காலமாய் நடந்து கொண்டிருக்க நாம் வெறுமனே பதிவுகள் மட்டும் போட்டுக்கொண்டேதான் இருக்க வேண்டுமா? அதேபோல் தி.க.வினர் இதுபோல் வெறுமனே அறிக்கைகள் விட்டுக் கொண்டிருந்தால் போதுமா?
ஏதாவது உருப்படியாகச் செய்ய முடியாதா?
*