*
தூங்காவனம் படம் பார்க்க ஆசை. அதுவும் எந்தப் படத்திலிருந்து எடுக்கப்பட்டது என்பதையும் சொல்லியாயிற்று. அதனால் திருஷ்யம் பார்த்து விட்டு, பாபநாசம் பார்த்தது போல் இதிலும் ஒரிஜினலை முதலில் பார்த்தாலென்ன என்று சொல்லி அந்தப் படத்தை இறக்கியாயிற்று.
பார்க்க ஆரம்பித்ததும் RR ரொம்ப பிடித்துப் போனது. ஆனால் எனக்கெல்லாம் ஆங்கிலப் படங்களைப் பார்த்தால் ஒரு மண்ணும் புரியாது. அதுக்கு இங்கிலீசு தெரியணுமாமே! அதனால் sub-ttile போட்டுப் படம் பார்ப்பதே பழக்கம். இந்தப் படத்தில் சப் டைட்டில் வரத் தகராறு பண்ணியது. ஆங்கிலமே அப்படியென்றால் இது பிரஞ்சு படம். ‘merci, tres bien, s'il vous plait, comment allez vous, respondez s'il vous plait மட்டும் தான் தெரியும். ஆனாலும் விடாமல் பார்த்தேன். படம் நல்லா போச்சு. வேகமாக படம் நகர்ந்தது. முழுவதும் பார்த்துத் தொலைத்த பின் தான் கதை சுத்தமா புரியலை என்பது புரிந்தது. மறுபடி சப் டைட்டில் தேடிப்பிடித்து மறுபடி படம் பார்த்தேன். அப்பாடா ... ஒரு மாதிரி புரிஞ்சிரிச்சி...
கெட்ட போலிசுகளும் ... நல்ல போலீசுகளும் ...
படம் ஆரம்பித்ததும் மிஸ்கின் நினைவு வந்தது. அவர் படத்திலும் தெருவில் கதை நடக்கும். ஆனால் கதை நாயகர்களைத்தவிர வேறு யாரும் கண்ணில் பட மாட்டார்கள். இங்கேயும் முதல் சீனில் ஹீரோ அம்புட்டு வேகமாக காரை ஓட்டிட்டு, ஆளுகள சுட்டுட்டு போய்க்கிட்டே இருப்பாரு. ஊர்ல, நாட்ல, தெருவில ஆளுகளே இருக்காது. ஒரே ஒரு ஆளு அதப் பார்த்ததாக பின்னாலில் ஒரு சீன்.
அம்புட்டு பெரிய க்ளப்பில் வாசலில் மட்டும் இரண்டே இரண்டு அடியாட்கள். உள்ளே நடக்கும் எதிலும் ஏன் secyrutyகளே வரவில்லை - அத்தனை அடிதடிக்குப் பிறகும்?
கிளப் கிச்சனை அடித்து நொறுக்குவார்கள். ஆனால் சாப்பாடு சப்ளை தொடர்ந்து மட்டும் எப்படி நடக்குதுன்னு தெரியலை.
ஹீரோவை ஆளுக விரட்டிக்கிட்டு வருவாங்க. மெயின் ஸ்விட்சை ஆப் பண்ணிட்டு, இருட்டுக்குள்ள தன் மூஞ்சுக்கு மட்டும் செல் போன் லைட்ட அடிச்சிக்கிட்டே ஹீரோ போவாரு. நமக்கு தெரியணும்ல ... அதுக்காக இருக்கும்!
ஆளுகள சும்மா சும்மா ஷூட் பண்ணிட்டு தேவையில்லாம கொன்னுட்டுப் போவாங்களே ... அது மாதிரி இல்லாம கால்ல ஷூட் பண்ணிட்டு போனா என்னன்னு அடிக்கடி சினிமா பார்க்கும் போது நினைப்பேன். அப்பாடா ... அந்த சீன் இந்தப் படத்தில் வந்திருச்சி.
அங்கேயும் வீடு ஓட்டையா இருக்கே. அம்புட்டு பெரிய கிளப்ல மேல ஒருந்து தண்ணி சொட்டு சொட்டா ஒழுகுது. நம்மள மாதிரி கீழே ஒரு டப்பா வச்சி தண்ணி பிடிக்கிறாங்க. மழைக்காலத்துல பார்த்ததுனாலேயோ என்னவோ ... அது நல்லா இருந்தது. ஆனா எதுக்கு அந்த எபெக்ட் அப்டின்னு புரியலை!
இன்னொரு பெரிய சந்தேகம். இந்தப் படத்திலும் சரி... furious மாதிரி படங்களில் கார்கள் மொங்கு .. மொங்குன்னு மோதி விழும். ஆனாலும் ஒரு கார்லேயும் air-bags இருக்காதா? அத ஒரு படத்திலேயும் பார்த்த ஞாபகமே இல்லையே!
ஹீரோவுக்கு விலாவில சரியான கத்தி வெட்டு. அதோட சண்டை..கிண்டை எல்லாம் போடுவார். ஓடுவார். ஒரு சீன்ல அந்தப் புண்ணுக்கு மருந்து போட்டுக்குவார். அப்போ வலியில் கத்தாமல் வலியில் துடிப்பது போல் நன்றாகச் செய்திருப்பார். அந்த சீனை கமல் எப்படி செய்திருப்பார் என்று பார்க்க வேண்டும் என்று தோன்றியது.
சீக்கிரம் பார்க்கணும் ........
*