*
’ஏங்க .. உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலையா? எப்படி இந்த ஆளை உங்களுக்கு வாரிசா தேர்ந்தெடுத்தீங்க? ’
‘அடுத்த ஆளா யாரைப் போடலாம்னு ஒரு லிஸ்ட் தயார் பண்ணி வச்சிருந்தேன். திடீர்னு நேத்து ராத்திரி கனவுல சிவ பெருமான் வந்துட்டாரு. என் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தாரு... அப்படியே பார்த்தவரு டக்குன்னு நித்தியானந்தா பெயரை ‘டிக்’ செஞ்சிட்டாரு .. அவரே சொல்லிட்டா ... பிறகு நான் எதற்கு கஷ்டப்படணும். அதான் நித்தியைக் கூட்டியாந்து பட்டாபிஷேகம் பண்ணியாச்சி’.
SELECTED & ATTESTED BY LORD SHIVA !! |
இப்படி மதுரை ஆதீனம் சொன்னதாக தினசரியில் படித்ததும் எனக்கு ‘சிலீர்’னு ஆகிப் போச்சு. எப்படி சில நல்ல மனுஷங்களுக்கு மட்டும் கடவுள் இப்படி நேரடியா வந்து ‘டிக்’ எல்லாம் போடுறார்னு பொறாமைப் பட்டுட்டேன். நமக்கெல்லாம் இப்படி ஒண்ணும் நடக்காம லைப் ரொம்ப டல் அடிக்குதேன்னு ரொம்ப கவலப் பட்டுட்டேன்.
கிறித்துவ நண்பர் ஒருவரிடம் இதைப் பத்தி கவலைப் பட்டு பேசினேன்.
’இன்னைக்கி மாலையில் வீட்டுக்கு வாங்க .. ஒண்ணு காமிக்கிறேன் .. அப்படியே நீங்க அசந்திருவீங்க’அப்டின்னார்.
சரின்னு நானும் அவர் சொன்ன டைமுக்கு வீட்டுக்குப் போனேன். ரெடியா இருந்தார். கணினியில் ஒரு படம் ஓட விட்டார். Medjugorje அப்டின்னு ஒரு சின்ன கிராமம். Bosnia-வில் இருக்கு. நம்ம டென்னிஸ் ஜோக்கோவிச் அந்த ஏரியாதான் போலும். அங்க ஒரு ஆறு சின்ன பிள்ளைகளுக்கு மேரி மாதா 1981-ல் இருந்து தொடர்ந்து ‘காட்சி’ கொடுக்குறாங்களாம். காட்சி ஆரம்பிச்சப்போ முதல் வாரம் முழுசும் காட்சி. இப்போவெல்லாம் எல்லா மாதத்திலும் இரண்டாம் தேதி டாண்ணு மாதா அந்த ஆறுல ரெண்டு பேத்துக்கோ, மூணு பேத்துக்கோ காட்சி கொடுக்குறாங்க. அதுவும் இந்த ஆளுக எங்க இருந்தாலும் அங்கே மாதாவும் போயிர்ராங்க. அமெரிக்கா அங்க இங்கன்னு இந்த ஆளுகளும் போறாங்க. அங்கே மாதாவும் டகார்னு காட்சி கொடுக்கப் போயிர்ராங்க. காட்சி குடுக்குறப்போ நிறைய ஆட்கள் கூட்டம் கூடிர்ராங்க. அவங்க யாருக்கும் மாதா கண்ணில பட மாட்டாங்க. அதில் அந்த Medjugorje ஆளுகளுக்கு மட்டும் மாதா கண்ணில படுறாங்களாம். அப்போவெல்லாம் மாதா அந்த ஆளுக கிட்ட ’மெசேஜ்’ குடுக்குறாங்க. நம்ம காதில, கண்ணுல ஒண்ணும் படாது. ஆனா அவங்களுக்கு மட்டும் தெரியுது. காட்சி முடிஞ்சதும் மாதா சொன்ன மெசேஜ்களை பக்கத்தில இருக்கிற ஆளுக கிட்ட இவங்க சொல்றாங்க. அதில் உள்ள இலக்கணப் பிழைகளை சரி செஞ்சிட்டு, (sic!!) அந்த மெசேஜை எல்லோரும் கேக்குறது மாதிரி வாசிக்கிறாங்க. (மெசேஜ்ல இலக்கணப் பிழையா? மாதா சொல்றதுல பிழையா? இல்ல .. காட்சி பார்க்கிற அந்த அம்மா சொல்றதுல்ல இலக்கணப் பிழையான்னு தெரியலை! அதோட எந்த மொழியில் மெசேஜ் வருதுன்னும் தெரியலை. கீழே உள்ள படத்தைப் பாருங்க. பொறுமை இல்லாட்டா கூட காட்சியை ஓட விட்டு, ஓரிரு நிமிடங்களாவது பாருங்கள்.
அந்த அம்மாவுக்கு மாதா தெரியிறது உங்களுக்குத் தெரியுதா? காட்சி கிடைக்கிற அந்த அம்மாவுக்கு வலது பக்கத்தில் நிற்கிற அந்த Father ஏதாவது தெரியுதான்னு மேல மேல பார்த்துக் கொண்டு நிற்கிறார். கொஞ்ச நேரத்தில் அவருக்கும் போரடிச்சிப் போனது போலும். ஐந்தே முக்கால் நிமிடம் மாதா பேசுகிறார். அந்த செய்தியை வாசிக்க சரியாக ஒரு நிமிடம் மட்டும் ஆகிறது. மாதா பேசும் போது இந்த அம்மா இங்கே தலையாட்றாங்க; பரவாயில்லை. ஆனால் மாதா ஏதோ ஜோக் அடிச்சது மாதிரி சில இடத்தில் சிரிகிறாங்க. ஆனால் செய்தியை வாசிக்கும் போது அதில் ஜோக் ஏதும் இல்லையே என்று பார்த்தேன்.
இப்படி சில அதிசயக் காட்சிகள்
அங்கு தோன்றியதாகச்
சொல்கிறார்கள்.
வானில் சிலுவைக் குறிகள்
எனக்குப் பல ஆச்சரியம். ஏன் தொடர்ந்து 1981-ல இருந்து இன்னும் தொடர்ந்து மெசேஜ் கொடுத்துக்கிட்டே இருக்காங்க? 31 வருஷம் ஆகிப் போச்சு.எதுக்காக இப்படி நீளமா, 31 வருஷமா மெசேஜ் கொடுத்துக்கிட்டே இருக்காங்க. (சட்டுன்னு மண்டைக்குள்ள ஒரு ஐடியா வந்துச்சு ... ஒரு வேளை முகமதுவுக்கு 23 வருஷமா தொடர்ந்து ஜிப்ரேல் வந்து ‘சேதி’ சொல்லியிருக்கார். அதை ‘பீட்’ பண்றதுக்காக மாதா இன்னும் இழுத்து 31 வருசம் தாண்டியிருப்பாங்களோன்னு தோணிச்சி!)
மெசேஜ் கொடுக்குறது எதுவரை அப்டின்னு கேட்டேன். ஆறு பேத்துக்கு மெசேஜ் ஆரம்பிச்சாங்களா. அதில் ஒவ்வொருத்தருக்கும் ஆளாளுக்கு பத்து .. பத்து ரகசிய மெசேஜ் கொடுத்திருவாங்களாம். அது முடிஞ்சதும் மெசேஜ் முடிஞ்சிரும் அப்டின்னார் நண்பர். அதில இன்னும் ரெண்டு பேத்துக்கு மட்டும் தான் ரகசியம் பாக்கியிருக்குன்னார். என்ன மெசேஜ் .. எதும் அதிசயமான விஷயம் சொல்றாங்களா அப்டின்னு கேட்டேன். போற போக்குல CERN .. NEUTRINO ... இப்படி பெரிய அறிவியல் விஷயங்கள் சொன்னா கேட்டுக்கலாமேன்னு நினச்சேன். ஆனா .. எப்படி ஏசுவிடம் பிரியமா இருக்கணும்னு சொல்றாங்க .. அடுத்தவங்களுக்காக எப்போதும் ஜெபம் பண்ணணும் .. உங்களுக்காக கடவுளிடம் ஒண்ணும் கேக்க கூடாதுன்னு நண்பர் சொன்னார். சரி .. இது ‘அந்த’ விஷயங்களுக்கு மட்டும் அப்டின்னு நினச்சிக்கிட்டேன்.நண்பரின் நம்பிக்கையைப் பார்த்தால் அனேகமா சீக்கிரம் Bosnia-க்குப் புறப்பட்டுருவார்னு நம்புறேன்.
இதில் இன்னொரு சந்தேகம் என்னன்னா, மாதா middle east asian ஆளு. ஆனா அவங்களைப் பார்க்கிறவங்க எல்லாரும் சொன்னதை வச்சி செய்ற சிலை, படங்கள் எல்லாத்திலேயும் அவங்க அப்படியே அமெரிக்க / ஐரோப்பிய ஆளு மாதிரி, அதாவது ‘வெள்ளைக்கார பொண்ணு’ மாதிரிதான் இருக்காங்க. இது எப்டின்னு தெரியலை!
( 1981-லிருந்து இந்தப் ‘புதுமை’ நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். இதே போல் போர்ச்சுகல் நாட்டில் பாத்திமா என்ற இடத்தில் 1917-ல் 3 சின்னக் குழந்தைகளுக்கு மாதா காட்சி அளித்தாராம். அதனால் அவருக்கு பாத்திமா மாதா என்று பெயருமுண்டு. சரியாக 13 தேதியில் மாதம் ஒவ்வொன்றாக ஆறு மாதங்களுக்கு இந்தக் காட்சி நடந்ததாம். அப்போது இந்தக்
குழந்தைகளுக்கு மாதா 3 ரகசியங்களைக் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். அதில் முதல் ரகசியம் நரகம் பற்றியது. இந்த நரகம் நம் பூமிக்கு அடியில் இருப்பதாம். இதனாலேயே இந்த ‘ரகசியத்தின்’ உண்மை புரிகிறது. என்னுடன் வேலை பார்த்த ஒரு “நல்ல” கிறித்துவர் பூமிக்கு அடியில் நீண்ட துளை போட்ட போது அங்கிருந்து ஆட்களின் அழுகை ஒலி கேட்டதாகக் கூறினார்! இரண்டாவது ரகசியம் உலக யுத்தங்கள் பற்றியதாம். மூன்றாவது ரகசியத்தைப் பற்றிப் பல கதைகளும், விவாதங்களும், முரண்பாடுகளும் உண்டு. இதையெல்லாம் தெரிந்த பின்னும் இப்போது மாதா ரகசியங்கள் கொடுக்கிறார்கள் என்பதை எப்படி நம்புவது என்பது எனக்குப் புரியவில்லை.)
சரி .. மதுரை ஆதீனம் சும்மா சிவன் வந்து ’டிக்’ பண்ணினதைச் சொல்லிட்டார். இவங்க வீடியோவெல்லாம் நிறைய எடுத்து வச்சிருக்காங்க. இருந்தும் நம்மட்ட இன்னும் ஒரு கடவுளும் வரலையேன்னு ஒரு வருத்தத்தோடு இருந்தேன். அப்போ முக்கியமா மீதியிருந்த இன்னொரு கடவுளும் வந்ததாக ஒரு நிகழ்ச்சி நடந்தது.
நான் இங்க பதிவிட ஆரம்பித்த பிறகு ஏன் கிறித்துவத்தை விட்டு வெளியே வந்தேன்னு எழுத ஆரம்பிச்ச பிறகு கொஞ்சம் மற்ற மதங்களைப் படிக்க ஆரம்பித்தேனா .. அப்போதான் குரான் ஒன்று வேண்டியதிருந்தது. என்னிடம் படித்த இஸ்லாமிய மாணவர் ஒருவரிடம் ஒரு புத்தகம் கேட்டேன். தானே வாங்கித் தருவதாகவும், ஆனால் ஒவ்வொரு முறையும் நான் குரானைத் ‘தொடும்போது’ நான் செய்ய வேண்டிய கடமைகள் பற்றியெல்லாம் கூறினார். அதெல்லாம் நமக்கு லாயக்கு படாது. எங்கே புத்தகம் கிடைக்கும்னு சொன்னா வாங்கிக்கிறேன் என்றேன். எப்படியோ அவரிடமிருந்தே ஒரு புத்தகம் கிடைத்தது. அதில் எனக்கு இறையருள் கிடைக்க வேண்டும் என்றெல்லாம் எழுதி அன்பளிப்பாகக் கொடுத்தார். நானும் பயன்படுத்த ஆரம்பித்தேன். அங்கங்கே அடிக் கோடுகள் போட்டு பயன்படுத்தினேன். அதன்பின் அதில் அராபியும் தமிழும் இருந்ததாலும், தலைகீழாகப் புத்தகத்தைப் பயன்படுத்த வேண்டியதிருந்தாலும் வேறொரு புது குரான், தமிழ் மட்டும் உள்ளது, IFT வெளியீடு ஒன்று வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன்.
சில நாட்களுக்கு முன், ரம்ஜான் மாதத்தில் அந்த நண்பரிடமிருந்து ஒரு தொலைபேசி. என்னவென்றேன். நான் கொடுத்த குரானைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றார். இதென்ன, அன்பளிப்பாகக் கொடுத்து விட்டு இப்போது திருப்பிக் கேட்கிறாரேன்னு யோசித்தேன். இருந்தும் தருவதாகச் சொல்லிவிட்டு, சில நாளில் இன்னொரு நண்பர் மூலம் திருப்பிக் கொடுத்தனுப்பினேன். அதோடு, இது அன்பளிப்பாக வந்ததால் என் புத்தகமாக நினைத்து, நிறைய குறிப்புகளும், அடிக்கோடிட்டும் வைத்துள்ளேன் என்று சொல்லிக் கொடுக்கச் சொன்னேன். எடுத்துச் சென்ற நண்பரும் புத்தகம் கொடுத்தவருக்கு வாத்தியார் தான். இவர் புத்தகம் கொடுத்த போது நான் சொன்னதை அவரும் சொல்லியிருக்கிறார். வந்த பதில் நன்றாக இருந்தது.
ரம்ஜான் மாதத்தில் அல்லா அவரிடம் வந்து அந்தப் புத்தகத்தை என்னிடமிருந்து வாங்கி விடு என்று அடிக்கடி சொல்லியிருக்கிறாராம்! அதனால் தான் புத்தகத்தைத் திருப்பிக் கேட்டாராம்.
அதிக நாட்களாக என் கண்ணில் படாத அந்த நண்பர் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்த நாலைந்து நாட்களில் அதிர்ஷ்ட வசமாக (??) எதிர்த்தாற்போல் வந்தார்.
என்னிடம் வந்து, ’சார், அல்லா அடிக்கடி வந்து கேட்டதால் தான் அப்படி வாங்கினேன்’ என்றார்.
நான், ‘இதையெல்லாம் நம்பிக்கையுள்ளவர்களிடம் சொல்லுங்கள். நானெல்லாம் இதை நம்புவேனா?’ என்றேன்.
’இல்லை சார், ரம்ஜான் மாதம் நோம்பு காலத்தில் முழுவதும் அடிக்கடி அல்லா வந்து என்னிடம் புத்தகத்தை வாங்க திருப்பி திருப்பிச் சொன்னார்’ என்றார்.
’அட போங்கப்பா ...gift கொடுத்த புத்தகத்தைத் திருப்பி வாங்குன்னு சொன்ன உங்க கடவுள நினச்சா சிரிப்பு சிரிப்பா வருது; நீங்களும் .. உங்கள் கடவுளும் ..!. bye' அப்டின்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.
இப்போதும் எனக்கு ஆச்சரியம். அது சிவபெருமானோ, மாதாவோ, அல்லாவோ இப்படி அடிக்கடி சிலருக்குப் ‘பிரசன்னம்’ ஆகிறார்களே என்று வருத்தமாகப் போச்சு. ஏன் எனக்கு மட்டும் அந்த ‘அதிர்ஷ்டம்’ வரவே மாட்டேங்குதுன்னு ஒரே கவலை.
ஆமா .. இந்த மாதிரிக் கவலைகள் என்னை மாதிரி உங்களுக்கும் இருக்குதா ...?
-------------------------------------
திருவிளையாடல்
கீழேயுள்ள காணொளி ரொம்ப நல்லா இருக்கு. தலைப்பு: JESUS PRANKS.
இப்பதிவுக்குத் தொடர்பில்லாத ஒரு காணொளி. மதச்சர்ர்புள்ளது தான். ஆனால் ....
இதைப் பார்த்து யாரும் யாரையும் அடிக்கவில்லை;
போராட்டமில்லை;
அட .. ஒரு கண்டனம் கூட இல்லை.
எங்க கடவுளை நான் காப்பாற்றியே ஆக வேண்டும் என்று யாரும் ஒரு கடப்பாரையைக் கூட தூக்கவில்லை.
எங்க கடவுளைக் காப்பாற்றினால் ஒரு லட்சம் டாலர் தர்ரேன்னு எந்த அமைச்சனும் சொல்லவில்லை.
ஆனாலும் ... நல்ல கற்பனைகள் .. பாருங்க.
*
*