கணவனும் மனைவியும் வெவ்வேறு மதத்தினராகவும் இருந்துகொண்டு இரண்டு பண்டிகைகளையும் குடும்பத்தோடு கொண்டாடுவோம் என்று சொல்லும் சிலரையாவது வாழ்க்கையில் சந்தித்ததுண்டு. அவர்களைப் பார்த்து பெருமைப்பட்டுக் கொண்டதும் உண்டு. அவர்களுக்குள் இருப்பதாக நான் பார்ப்பது நாம் அடிக்கடி சொல்லும் மதச் சகிப்புத்தன்மை - religious tolerance என்பதில்லை. அவர்களுக்குள் இருப்பது religious acceptance - தமிழ் தாருங்களேன் இதற்கு.
இரண்டுக்கும்தான் எவ்வளவு வேற்றுமை! முதலாவது நமக்கு வரும் தலைவலி மாதிரி. தலைவலி தீரும்வரை நாம் சகித்து கொள்ளத்தான் வேண்டும். வேறு வழியில்லை. அதைப் போல் மதசகிப்புத் தன்மை என்பது பெருமைக்குரிய விசயம் கிடையாது. பல்லைக் கடித்துக் கொண்டு அடுத்தவனையும் அவன் மதத்தையும் சகிப்பது என்பதில் என்ன பொருளோ பெருமையோ உண்டு? religious acceptance-ல் நான் என் நண்பனை மட்டுமல்ல, அவனது மதத்தையும் மதிக்க வேண்டும். அதுவே உண்மையான மனிதநேயம். நண்பர்கள் வீட்டுக்கோ, அவனது கோவிலுக்கு அவர்களோடோ செல்லும்போது நான் கோவிலுக்கு வெளியே நின்று கொள்கிறேன் என்பதைவிடவும் நான் அவனோடு உள்ளே சென்று அவன் அங்கு நடைபெறும் விசயங்களில் அவனோடு பங்கு பெற்றுவிடுவதால் என் மதநம்பிக்கைகளை விட்டு விட்டேன் என்றா பொருள். என்னோடு மாதா கோயிலுக்குள் வந்து என் பக்கத்தில் அவனும் அமர்ந்துகொண்டு, சத்தமில்லாமல் என்னோடு மெல்ல பேசும்போது அதை அவன் என் வழிபாட்டு நிகழ்வுகளுக்குக் கொடுக்கும் மரியாதை, அதை அவன் என்பொருட்டு கொடுக்கிறான் என்னும்போது அதில் நான் மனிதநேயத்தைத்தான் பார்க்கிறேன்.
சின்ன வயதில் நடந்த சில தவறுகளே இப்போது இப்படியெல்லாம் மனதில் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்திருக்கின்றன். கிறித்துவனாகப் பிறந்தாலும் அம்மா வழியில் அம்மாவைத்தவிர மற்றவர்கள் இன்று வரை இந்துக்களாகவே இருக்கிறார்கள். சிறுவயதில் ஊருக்குச் செல்லும் சில வேளைகளில் அம்மா வீட்டில் ஏதாவது பூசை நடந்தால் நான் விலகி வெளியே தனித்து நிற்பது மட்டுமல்ல, படைக்கப்பட்ட பொருட்கள் எதையும் தொடவும் மாட்டேன். அதற்கு "அது பேய்க்குப் படைக்கப்பட்ட பொருட்கள்; ஆகவே அதைத் தொடவும் மாட்டேன்" என்று கூறுவதுண்டு. ஏனென்றால் அப்படித்தான் எனக்குக் கற்பிக்கப்பட்டிருந்தது. அதனாலேயே தாத்தா, பாட்டி, மாமா எல்லோரும் என் கண்முன்பாகவே படைக்கப்படப் போகும் பொருட்களில் எனக்கென்று பூசைக்கு முன்பே தனியாக எடுத்து வைப்பதுமில்லாமல், என்னிடம் அதைக் காண்பித்து உறுதி செய்துகொள்வார்கள். இல்லாவிட்டால் நான் சாப்பிடாமலிருந்து விடுவேனே என்ற பயம்.
கண்திறந்த பிறகு, இப்போது புரிகிறது நான் செய்தது எவ்வளவு கேவலம் என்று. பின்னாளில் நம்பிக்கையாளனாக இருந்த போதும் அந்தத் தவறை செய்ததில்லை. சூழிலியல் கற்பித்ததால் மாணவர்களோடு பல வருடங்கள் பல இடங்களுக்குச் சென்றிருந்த போதும் ராமேஸ்வரம் அடிக்கடி போன ஊர். கோவிலுக்குள் செல்வது என்பது என்னைப் பொறுத்தவரை கோவிலைப் பார்க்க. அது எல்லோருக்கும் தெரிந்ததுதானே. அதே போல் கோவிலை விட்டு வெளியே வந்ததும் ஒருமுறை மாணவர்கள் கொடுத்த கோவில் பிரசாதத்தை வாங்கிச் சாப்பிட்டேன். அன்று இரவு அதுவே ஒரு தர்க்கத்துக்கு வழி பிறப்பித்தது. கிறித்துவ மாணவன் அது தவறல்லவா என்று கேட்டான். நம்புபவருக்கு அது பிரசாதம்; மற்றவருக்கு அது வெறும் லட்டு அல்லது ஏதோ ஒன்று. நம்புவருக்கு அது கடவுள் முன்னால் படைக்கப் பட்ட பொருள்; எனக்கு அப்படியேதுமில்லை. Ladu remains a ladu for me but for a believer it changes to prasadam. அவ்வளவே என்றேன். கேள்வி கேட்ட மாணவனுக்கு அது திருப்தி தராது; ஏனெனில் அவன் கண்களை அவன் இன்னும் திறக்கவில்லை என்பது என் நினைப்பு; அது என் நிலைப்பாடு; அவ்வளவே.
அதேபோல் திருச்செந்தூர் சென்றபோது அரசியல் காரணங்களுக்காக, தடபுடலான மரியாதை கிடைத்தது. வாங்கிக் கொண்டேன். அவர்கள் எனக்குத் தலையில் தரித்த பட்டத்தினாலும், தலையில் கவிழ்த்து எடுத்த மகுடமும் என்னையோ என் மத நம்பிக்கைகளையோ எப்படி பாதிக்கும். மாணவன் பிரசாதமாக எனக்குக் கொடுத்தது எனக்கு வெறும் லட்டு என்பது எப்படியோ அதேதான் இங்கும்.
இவைகள் எல்லாம் என் நம்பிக்கைகளை உள்ளிருத்திக் கொண்டு என்னைச் சார்ந்தோரின் மகிழ்ச்சிக்காக நான் செய்வது. இது மனிதநேயத்தின் ஒரு சிறு வெளிப்பாடு. லட்டு கொடுக்கும் நண்பனுக்கும் தெரியும் நான் அதை பிரசாதமாக இல்லாது வெறும் தின்பண்டமாகத்தான் கருதுவேன் என்பது. ஆனால், அதைவிட்டு நான் அதை ஏற்க மறுத்தால் நான் என்னை அவனிடமிருந்து கடவுள் பெயரால் விலக்கிக் கொள்வதால் நிச்சயமாக மனத்தில் ஒரு உறுத்தலைத்தான் அது தரும்.
ஆனால் ஒன்று, இதைப் பற்றிப் பேசுவதாலெல்லாம் எந்த பயனும் இல்லை என்பதுவும் தெரியும். ஏனெனில் மதங்களைப் பற்றிய நம்பிக்கைகளெல்லாமே கற்பிக்கப்பட்டு மனதுக்குள் இறுகிப் போன விசயங்கள். இறுகிப் போன இந்த விசயங்களை நியாயப்படுத்தவென்றே தங்கள் தங்கள் புத்தகங்களிலிருந்து பொருந்துமோ பொருந்தாதோ ஏதோ ஒரு "வார்த்தை"யை வைத்துக் கொண்டு அடம் பிடிப்பார்கள். அடுத்தவர் சொல்லி மாறிவிடவா போகிறது. தானாகக் கண் திறந்து பார்த்தாலல்லவா முடியும். கற்றுக் கொடுத்ததை விட்டு விலகிவிடா வண்ணம் இருக்க நம்பிக்கை என்ற blinkers (குதிரைக்குப் போடுவது. அதற்குத் தமிழ்??) இருக்கவே இருக்கிறது. இதெல்லாம் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற கதைதான்.
உதாரணமாக, பிரிவினைக் கிறித்துவர்களில் பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்வதில்லை; ஆனால் கத்தோலிக்க கிறித்துவர்கள் வைத்துக் கொள்வார்கள். இதற்குக் காரணம் கேட்டால் சிலுவை போடும் இடம் என்று ஒரு சப்பைக் காரணம் சொல்வார்கள். பிரிவினைக்காரர்களைப் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள் என்றாலே ஏதோ சின்னத்தம்பியில் மஞ்சள் தண்ணீருக்கு மனோரமாவுக்கு வரும் ஆவேசம் போல் வந்துவிடும். இதைப் பற்றி நான் விரிவாக எழுதியதைப் படிக்க இங்கே போகலாம்.
இஸ்லாமியர்களிலும் கேரளாவில் முழுமையான ஒரு இந்துப் பண்டிகையான ஓணத்தைக் அங்குள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடும்போது நம் தமிழ் இஸ்லாமியர்கள் பொங்கலைக் கூட ஒரு இந்துப் பண்டிகையாகவே பார்ப்பதுண்டு. அப்போதென்ன கேரள இஸ்லாமியர்கள் நல்ல இஸ்லாமியர்கள் இல்லையா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இரு இஸ்லாமியர்களும் சமூகத்தாலும், குடும்பத்தாலும் தங்களுக்குக் கற்பிக்கப் பட்ட விசயங்களை அப்படியே தொடர்கிறார்கள்.
ஏற்கெனவே சொன்ன ஒரு விசயம்தான். இங்கு மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன்.
கிறித்துவமும், இஸ்லாமும் இரண்டிலிருந்து நான்கைந்து தலைமுறைக்கு முந்திய நம் தாத்தா-பாட்டி காலத்தில் வந்தது. மதம் மாறிய நம் தாத்தாவும் பாட்டியும் மதங்களைச் சீர்தூக்கிப் பார்த்து, பெரும் ஒப்பீடு செய்து மாறியிருக்க வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது. பாவம் அவர்களுக்கு அந்த அளவுக்கு ஏது படிப்பறிவு. ஏதேதோ சமூகக் காரணங்களை வைத்து மதம் மாறியிருக்க வேண்டும். அந்தக் குடும்பங்களில் பிறந்ததாலேயே பலரும் அப்படியே அதை வாழ்க்கை முறையாக நம் நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்கிறோம். அதிலிருந்து வெளியே வருவதென்பது ஏறக்குறைய நடக்காத ஒரு விஷயம். மதங்களின் பிடிப்பு அப்படி. பல பயமுறுத்தல்கள்; பல மூளைச் சலவைகள் ... ஆனால் வெளியே வர முடியும். அதாவது என் தாத்தா ஒரு மதத்தில் இணைந்தார்; நான் விரும்பினால் அதை உதறி விட்டு வெளியே வர முடியும். ஆக மதம் ஒரு சட்டை. வேண்டுமென்றால், பிடித்தால் போட்டுக் கொள்ளலாம்; இல்லையேல் போடாமல் இருக்கலாம்; மாற்றிக் கொள்ளவும் செய்யலாம். என் உயிருக்கும் மேலானதாக அல்லவா நான் நினைக்கிறேன் என்பவர்களுக்கு - அதுவும் ஒரு கற்பிதம்தான். நானிருந்த மதத்தில் என் இளம் வயதில் கடவுளுக்காக நீ உயிர் விட்டால் நீ ஒரு வேத சாட்சியாகிறாய். உனக்கு direct ticket மோட்சம்தான் என்றுதான் சொல்லிக் கொடுத்தார்கள். (நல்ல வேளை, இப்போதெல்லாம் அந்த அளவு மோசமாக aggressive வேதபாடம் (catechism) இப்போதுள்ள பிள்ளைகளுக்குக் கொடுப்பதில்லை!!)
இப்படி மாற்றிக் கொள்ளக் கூடிய ஒன்றைப் பிடித்துக் கொண்டு மனிதநேயத்தைப் புறந்தள்ளுவது எந்த அளவு சரி - இப்பொருளில் அந்தக் காலத்தில் கவிஜ என்பதாக ஒன்றை எழுதியிருந்தேன். மீண்டும் இங்கே அது: (தலைவிதி வாசித்தவர்கள்கூட மீண்டும் வாசித்துக் கொள்ளுங்கள்!)
பாம்புகள்கூட தங்கள்
தோல்களையே
சட்டைகளாக உரித்துப் போடுகின்றன.
ஏன் இந்த
மனிதர்கள் மட்டும்
தங்கள் சட்டைகளையே
தோல்களாக ஆக்கிக் கொள்கிறார்கள்.
ஆனால் ஒன்று, இதைப் பற்றிப் பேசுவதாலெல்லாம் எந்த பயனும் இல்லை என்பதுவும் தெரியும்.
ரிப்பீட்டேய் ... ரிப்பீட்டேய் ... ரிப்பீட்டேய் ... !!!
*
தலைப்புக்கும் இந்தப் பதிவிற்கும் என்ன பொருத்தமென்று கேட்க மாட்டீர்களென நினைக்கின்றேன்.
*