*
*
வாசித்தது ...
வாசித்துக் கொண்டிருப்பது ...
வாசிக்க வேண்டியது ...
*
மதங்களைப் பற்றி பல நூல்கள் வாசிக்கும்போது அவ்வப்போது எழும் ஐயங்களைத் தொகுக்க ஓரிடம் வேண்டுமல்லவா? என் பதிவுகளில் அதற்கான ஒரிடம் இது. எனக்குள் எழும் ஐயங்களை இங்கே தொகுத்து வைக்கின்றேன். இதை நீங்கள் வாசிப்பீர்களா இல்லை தவிர்த்து விடுவீர்களா என்பதல்ல .. எனக்கு ஓரிடம் வேண்டும்; அங்கங்கே வாசிப்பதை நூல்களில் வெறும் கோடிட்டு வைத்து விட்டு மறந்து விடுவது போலல்லாமல் தொகுக்க என் இடம் இது.
*
விவிலியத்தில் கடவுள் தன் சாயலில் மனிதனைப் படைத்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இஸ்லாத்தில் இது முழுமையாக மாறி உள்ளதுபோல் தெரிகிறது. அல்லா மனித சாயலில் படைக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அல்லா மிகவும்
பெரியவன்; அல்லா பெரிதும்
கோபப்படுவான்; அல்லா மிகவும்
ரோஷக்காரன்; அல்லா வெட்கப்படுவான் - போன்ற சொலவடைகள் மிகவும் பிரபலம். அதாவது இங்கு கடவுள் / அல்லா மனித உருவில் பார்க்கப்படுகிறது / பார்க்கப் படுகிறான். சாதாரண மனித குணங்களைக் கடவுள் மீது ஏற்றுவது "If triangles have gods, those gods would be bigger triangles" என்ற கூற்றினை ஒத்து வருகிறது.
*
பிள்ளைப் பிராயத்தில் சொல்லித் தரப்படுவதால் என்றே நினைக்கிறேன் - பல இஸ்லாமிய நண்பர்களிடம் ஒரே மாதிரியான சில கருத்துக்கள் பொதுவாகப் பேசப்படும்.
*எங்களைப் பெற்றவர்களைவிடவும் நாங்கள் நபியை மதிக்கிறோம்.
*குரான் எந்த மனிதக் கரங்களாலும் மாற்றப்படவில்லை. -
(எல்லோரும் எத்துணை ஆராய்ச்சியில் இதைச் சொல்கிறீர்கள்? இவையெல்லாம் சின்னப் பிள்ளையில் சொல்லிக் கொடுக்கப்பட்ட விஷயம் - கத்தோலிக்க கிறித்துவக் குழந்தைகளிடம் "நன்மை"யில் ஏசு அப்படியே ரத்தமும் சதையுமாக இருக்கிறார் என்றும், ஏசு கன்னிமாதாவிடமிருந்து பிறந்தார் என்பதும், இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதைச் சொல்லிக் கொடுப்பதையும் அவர்கள் அப்படியே அதைக் காலம் காலமாய் நம்புவதைப் போல.)
பொத்தாம் பொதுவாக அப்படி சொல்லிக்கொடுக்கப்பட்ட விஷயங்களை வெறும் நம்பிக்கைகளால் மட்டும் சொல்லிக் கொண்டிருப்பதைக் காட்டிலும்
அதை ஆராய்ச்சி செய்தவர்களின் முடிவுகளைக் கேட்க மட்டுமாவது, கண்களையும் மனத்தையும் திறந்து நாம் தயாராக இருக்க வேண்டுமல்லவா? அதில் எது உண்மை என்று அதன்பின் யோசிக்க ஆரம்பிக்கலாமே .. அதைவிட்டு விட்டு 'என் நம்பிக்கை இது; இதை எப்படி யாரும் ஆராய்ச்சி செய்யலாம்' என நினைத்து அதனைப் புறந்தள்ளக் கூடாதல்லவா?
*குரான் அறிவியல் உண்மைகள் பல கொண்டுள்ளது.
(எல்லா மதக்காரர்களும் சமயம் கிடைக்கும்போது அறிவியல் உண்மைகள் எங்கள் மதத்தில் உள்ளது என்று கூறுவதில் ஏதும் வித்தியாசமில்லை. அப்படி "எல்லாம் தெரிந்த" கடவுள் அறிவியல் உண்மைகளைச் சொல்ல வேண்டுமென்றால், 2 + 2 = 4 என்றல்லவா சொல்ல வேண்டும். விந்திலிருந்து மனிதன் பிறக்கிறான் என்று சொல்வதை விட இடுப்பிலிருந்து வரும் திரவத்தால் மனிதன் பிறக்கிறான் என்பது என்ன அறிவியல்? 'ஏழு வானம்' என்பது என்ன அறிவியல். இரவுக்குள் பகலையும், பகலுக்குள் இரவையும் .... பூமியை நீட்டி விரித்து ... மலையின் வேர்... இப்படியே பல ...)
*இஸ்லாம் ஒரு வாழ்க்கை மார்க்கம்.
எப்படி வாழ வேண்டும் என்று கடவுள் கற்பிப்பதும், ஆணையிடுவதும் வேறு. ஆனால், நீ வெள்ளை சட்டை போடணும்; உட்கார்ந்து சிறுநீர் கழிக்கணும்; எப்போதெப்போது நீ நிர்வாணமாக இருந்தால் கடவுளுக்கு வெட்கம் வராது; அல்லது எப்போதெப்போது நீ நிர்வாணமாக இருந்தால் கடவுளுக்கு வெட்கம் வரும்; ஆண்கள் தங்க நகை அணியக்கூடாது;
( தங்கத்துக்கும், Y குரோமோசோமுக்கும் அப்படி என்ன பகை?)
இப்படிப்பட்ட கட்டளைகளை கடவுள் மனிதனுக்குத் தருவாரா? தர வேண்டுமா? sounds kiddish! பிள்ளையைப் பலி கொடு என்று கேட்கிற கடவுள் ஒருவேளை இதுபோன்ற கட்டளைகளைக் கொடுக்கலாமோ?!
இங்கே கடவுளை மனிதானாக ஆக்கும் முயற்சியே இது என்று தெரிகிறது.
*ஆண்கள் தாங்கள் ஆண்கள் என்பதைக் காண்பிக்க தாடியிடனும், பெண்கள் பர்க்காவுடனும் இருக்க வேண்டும்.
( ஆண்களும் பெண்களும் இப்படியெல்லாம் வித்தியாசமாக இருக்க வேண்டுமெனில் அவை அவரது படைப்பில் உள்ள குற்றமா? இப்படி ஆண்கள் பெண்களிடமிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டுமென்பது அவரது ஆசை என்றால் சில விலங்கினங்களில் போல் ( மான், கோழி-சேவல்) என்பவற்றில் ஆண் பெண் வேற்றுமை மாதிரி - ஆண்களை ஆண்களாகக் காண்பிக்க வேறு மாதிரியே படைத்திருக்கலாமே; பெண்களையும்தான். நீ தாடி வை; நீ பர்க்கா போடு என் அவரது படைப்பையே அவரே கேள்வி கேட்கிறாரோ?)
*
எங்கள் மார்க்கத்தில் எல்லா கேள்விகளுக்கும் பதிலுண்டு.
(கேள்விகளே கேட்கப்படும் முன் இப்படி ஒரு நல்ல நம்பிக்கை இருப்பது சரியா? இதற்குப் பெயர்தான் super confidence!
fossils, stem cell therapy, நாளைய CERN results இவைகளைப் பற்றி நான் கேட்டால் பதிலிருக்குமா? இல்லை மதத்தில்தான் கேட்கவேண்டும் என்றால் அதிலும் பல கேள்விகள் கேட்டாச்சே ... இதுவும் சிறுவயதிலிருந்தே சொல்லிக்கொடுக்கப்படும் பாடம்; அவ்வளவே.)
*
பரிணாமம் ஒரு கொள்கையேயன்றி நிரூபிக்கப்பட்ட ஒன்றல்ல.
(டார்வின் சொன்ன சில hypotheses அவரைப் பொறுத்தவரை அன்றைய அறிவியல் சூழலில் நிரூபிக்க முடியாத கருத்துக்கள். அவர் 'ஏதோ ஒரு factor' என்று சொல்லிச் சென்றதை இன்று அறிவியல் முழுமையாகப் 'பிரித்து மேய்ந்து' விட்டது. அந்த factor - chromosome, gene, nucleic acids என்று அறிவியலில் முழுமையாக அறிந்தாராயப்பட்டு விட்டது. பரிணாமம் இன்னும் ஒரு தியரி என்ற நினைப்பில் இந்தக் கருத்து ஒரு முகமாக எல்லா இஸ்லாமியர்களிடமும் பரவலாகக் காணப்படுகிறது. சிறுபிள்ளையில் போதிக்கப்பட்ட பாடம். எத்தனை பேர் டார்வினின் பரிணாமக் கருத்து தவறென்று டார்வின் கொள்கைகளைப் படித்துப் பார்த்துவிட்டு அப்படிச் சொல்கிறீர்கள்?
கிறித்துவர்களிடமும் இதைப் பரவலாகக் காண முடியும். கடவுள் ஆணின் விலா எலும்பிலிருந்துதான் பெண்ணைப் படைத்தார்; ஆகவே, இன்னும் ஆண்களுக்கு ஒரு விலா எலும்பு பெண்களைவிட குறைவு என்ற தவறான கருத்து பல படித்த கிறித்துவர்களிடம் கூட உண்டு. என் மாணவன் ஒருவனுக்கு எலும்புக்கூட்டைக் காண்பித்து விளக்கினாலும் ஒத்துக்கொள்ள மறுத்தான். Fossils பரிணாமக் கொள்கையின் உண்மையை விளக்கும் பெரும் தூண்கள். ஆனால், அதெல்லாம் மனுஷனே பண்ணி வச்சிக்கிட்டது என்ற ஒரு பாடமும் போதிக்கப்படுகிறது பக்தர்களின் மனதில்!)
*
ஆதாமிலிருந்து பல நபிகள் தோன்றி அல்லாவின் சட்ட திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால் அந்த சட்டங்கள் மனிதக் கரங்களால் கறை படுத்தப் பட்டதால் இறுதியாக முகமது மூலமாக கடைசிச் சட்டம் தரப்பட்டுள்ளது. இது மனிதனால் மாற்றப்படாதது.
(சில ஐயங்கள்:
ஒரே கடவுளால் தரப்பட்ட சட்டங்கள் எப்படி வித்தியாசமாகின?
பழைய ஏற்பாட்டில் கண்ணுக்கு கண்; பல்லுக்குப் பல் என்ற பழி வாங்குதல் எப்படி கிறித்துவர்களின் - ஈசாவின் - சட்டத்தில் இடது கன்னத்தில் அடித்தால் வலது கன்னத்தைக் காட்டு என்றாயிற்று? பின் எப்படி குரானில் மறுபடியும் பழைய நிலை வந்தது?
600 வருஷத்துக்கு முன்னால் கடவுள் ஈசா நபியிடம் 'வாளை உன் உறையில் போடு; ஏனெனில் வாளை எடுத்தவன் வாளால் சாவான்' என்று அவரைச் சொல்லும்படி அறிவுறுத்தி விட்டு, அதன் பின் 600 வருஷம் கழித்து பல போர்க்களங்களை தன் நபியைக் காணச் செய்கிறார். ஏனிப்படி 600 வருஷத்தில் ஜெகோவாவிடம் / அல்லாவிடம் ஒரு மாற்றம்?
ஒரு பொது நிலைக்கேள்வி:
பல நபிகள்; பல சட்ட திட்டங்கள் கொடுக்கப்பட்டு எல்லாமே மாறி விட்டன. உலகம் தோன்றி பல கோடி ஆண்டுகள் என்று அறிவியல் சொல்ல, பரிணாமத்தை எதிர்ப்போர் ஆதாம் பிறந்தது வெறும் 6000 ஆண்டுகளுக்கு முன்புதான் என்பார்கள். இந்தக் கருத்தையே எடுத்துக் கொண்டாலும் முதல் 4500 ஆண்டளவாக கடவுளின் சட்டங்கள் மனிதக் கரங்களால் கைபட்டு மாறிப்போக, அதன் பின்னால் நபியின் மூலமாக 1400 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புதிய இறுதிச் சட்டம் கொடுக்கிறார் என்றால் --
*முதல் 4500 ஆண்டுகளாக ஆதாம், மோஸே, ஆப்ரஹாம் --- இப்படி மாறி மாறி வந்த சட்டங்களை வைத்து கடவுள் ஏன், எப்படி மனிதர்களைக் குழப்பினார்? முதலிலேயே இதுபோல் முழுமையாகக் 'காபந்து செய்யப்பட்ட ஒரு கட்டளைகளைக்' கடவுள் மனிதனுக்குத் தந்திருக்க முடியாதா? ஏன் அப்படி தராமல் இப்போது முகமதுவிடம் மட்டும் இப்படி ஒரு நூலைத் தரவேண்டும் - அதுவும் கடைசி என்ற அறிவிப்புடன். அப்படியானால் முதலில் நடந்த தவறைத் திருத்த, அல்லாவின் second thoughts மூலமாக இந்த நூல் வந்ததா? (இது கடவுளின் திருவுள்ளம் என்றோ, இது அவன் செயல் என்பதோ, அவனது "திருவிளையாடல்" என்பதோ, தீர்ப்பு நாளில் கேட்டுக் கொள்ளலாம் என்பதோ சரியான ஒரு பதிலாக இருக்கக்கூடாது; இருக்க முடியாது.)
*சரி, இப்படியெல்லாம் இதுவரை தப்பு நடந்து போனது; இனி இப்படி நடக்கக்கூடாதென்று on second thoughts முகமதிடம் கடைசிச் சட்டத்தைக் கொடுத்தார் என்று கொள்வோம். அப்படியானால் அதுவே கடவுள் ஏற்கெனவே ஒரு தவறு செய்துவிட்டார் என்று நிரூபிக்கிறது.
*அப்படி சில தவறுகள் நடந்த பின் தன் சட்டத்தை மனிதனுக்காகக் கொடுக்க எண்ணிய அல்லா, சொல்லப்பட்டதை உடனே குறிப்பெடுத்து எந்த மாற்றமும் இல்லாமல் எழுதக்கூடிய ஒரு படித்தவரை அல்லவா தேர்ந்தெடுக்க வேண்டும். or atleast திருஞானசம்பந்தர், காளிதாசன் கதை மாதிரி ஏதாவது செய்திருக்கலாம்! ஜிப்ரெல் சொன்னதை அப்படியே ஒரு மனிதன் எதையும் மாற்றாமல் சொல்ல முடியுமா? சரி, அல்லாவின் அருளால் நபியை அப்படியே சொல்லும்படி அருளினார் என்று கொள்வதா? இவ்வளவு கஷ்டம் எதற்கு? இதற்குப் பதில், பேசாமல் ஒரு well written document ஒன்றை ஜிப்ரெல் நபியிடம் கொடுத்திருக்கலாமே. அல்லாவால் முடியாத ஒன்றா அது?
(ஒரு விளையாட்டு உண்டு. சிலரை வைத்துக் கொண்டு, அதில் முதல்வரிடம் ஏதாவது ஒரு statement ரகசியமாகக் கொடுங்கள். அவர் அதை அடுத்தவரிடம் சொல்லட்டும் ரகசியமாக. நாலைந்துபேர் தாண்டும் முன் அந்த statement முற்றிலுமாக மாறியிருக்கும்.)
*நபி முதலில் தனக்கு மலைக்குகையில் நடந்தது நம்ப முடியாமல் இருந்தது; அவரது மனைவி சொல்லி நம்பியது; ஜிப்ரெல் சொன்னதை மற்றவர்களிடம் சொல்லி, காலம் சிறிது ஆனபின் அவைகளை அவர்கள் எழுதியது; பின் வந்தவர்கள் அதைத் தொகுத்தது -- இத்தனை குழப்பமானவைகளை விடவும் கடவுள் ஒரு ஆணையை உருவாக்கி அதை அப்படியே நபியிடம் தந்திருந்திருக்கலாமே. எளிது; குழப்பமில்லை; குரானில் மாற்றமே இல்லையா என்று 1400 வருஷமாகக் கேட்கப்படும் கேள்விகளும் இருக்காதே.)
*இசை, கலை, பாடல்கள், ஓவியங்கள் - இவைகளை ஒதுக்கி வைக்கும்படி அல்லா நபியிடம் கூறியுள்ளார்.
(இது நான் பெரிதாக வியக்கும் ஒரு விஷயம். இசையின் ஆரம்பமே கடவுளோடு இணைந்தது என்பார்கள். கோவிலில் பாடப்பட்டு, பின்பு அரசர்களின் அரண்மனைக்குள் நுழைந்து, பின் மக்களிடம் இசை வந்ததென்பார்கள். Divine music -> Chamber music -> Popular music. ஆனால், இங்கு கடவுளே இசையை மறுக்கிறது; வெறுக்கிறது! பக்தியை இசையால் நிரப்பிய நம் சமூகத்தில் இந்தக் கருத்து ஒரு ஆச்சரியத்தைத்தான் அளிக்கிறது. பாடலும், இசையும், ஒவியமும் இச்சை தூண்டும் கருவிகளா? இது வெறும் ஆச்சரியம் மட்டுமல்ல; நம்ப முடியாத ஒன்று. நிச்சயமாக இது ஒரு தனிமனிதனின் (முகமது) விருப்பு வெறுப்பாக இருக்க முடியுமே ஒழிய சர்வ நிச்சயமாக 'ஒரு கடவுளின்' விருப்பு வெறுப்பாக இருக்கவே முடியாது. இஸ்லாமைப் புறந்தள்ள இந்த ஒரு காரணம்கூட போதும்.
ஒரு பதிவர் ஏ.ஆர். ரஹ்மான் இசையை விட்டு விட வேண்டுமென்று எழுதியிருந்ததை வாசிக்கும்போது, அதைவிட 'நீ உன் மூச்சை நிறுத்திக்கொள்' என்று சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது.)
*
*
சமயங்களைப் பற்றி மட்டும் பேச நினைத்த எனக்கு இன்னொரு சின்ன சமூக வேண்டுகோள் உண்டு.
நம் பதிவர்களிடையே சில முறை ஓர் அனுபவம் கிடைத்தது. இஸ்லாமிய மன்னர்கள் நம் நாட்டிற்குள் நுழைந்த அன்னியர் என்ற நினைவு பலரிடம் இல்லை. ஒளரங்கசீப் ஜிஸ்யா வரி வசூலித்தாரே என்றால் நம் நாட்டில் அவரது ஆட்சி முறையாக இருந்த ஒரு அரசு போலவும், அவர் வரி வசூலிப்பது நம் நாட்டை நன்றாக ஆள்வதற்கு என்றும் ஒரு கூற்று வருகிறது. அப்போது ஆங்கிலேயர் விதித்த உப்பு வரியும் சரிதானா? அதை எதிர்த்த காந்தி தவறு செய்து விட்டாரா? இஸ்லாமிய அரசர்கள் அந்நியர்கள்; ஆக்கிரமிப்பாளர்கள். நம் நாட்டைப் படையெடுத்து, அடிமைப் படுத்தி, நம்மை ஆண்டவர்கள் - ஆங்கிலேயர்களைப் போல; பிரெஞ்சு நாட்டுக்காரர்கள் போல; போர்த்துக்கீசியவர்கள் போல. இந்த வெள்ளைத் தோல் கொண்ட இவர்கள் எல்லோரும் கிறித்தவர்கள் என்பதற்காக, எந்த நம் நாட்டு கிறித்துவனும் அவர்களைப் போற்றிப் பாடுவதில்லை.
இஸ்லாமிய அரசர்கள் நம்மை அடிமைப்படுத்தியவர்கள். அதோடு நிற்க வேண்டும். ஏன் மதங்களை அவர்கள் மேல் சாற்றி அவர்கள் துதி பாட வேண்டும்? ஜெனரல் டயர் ஒரு கிறித்துவன் என்பதற்காக நம்மூர் கிறித்துவன் ஜெனரல் டயர் தன் கடமையைத்தானே செய்தான் என்று சொல்லி அவனின் பெருமை பேசுவானா?
மதங்களைத் தனித்துப் பாருங்கள். அதை மனிதர்கள் மேல் ஏற்றி, 'என் மதக்காரன் என்றாலே அவன் எனக்கு உறவு' என்று சொந்தம் பாராட்டாதீர்கள். நிச்சயமாக அரசியலோடு மதங்களை இணைக்காதீர்கள். படும் துன்பம் போதும்.
இன்னொன்றும் சிலர் சொல்வதுண்டு. அந்நிய நாட்டுப் படையெடுப்பாளர்களில் பலரும் நம்மிடம் கொள்ளையடித்து தம் நாட்டுக்கு நம் செல்வங்களைக் கொண்டு சென்றார்கள். அதைவிட நம் நாட்டுக்குப் படையெடுத்து வந்து, இங்கேயே அரசாட்சி செய்து நம் நாட்டுக்கு "நல்லது" செய்தார்கள் இஸ்லாமிய மன்னர்கள். இதுவும் ஒரு வேடிக்கையான விளக்கம்தான். கொள்ளைக்காரன் ஒருவன் நம் வீடு நுழைந்து, நம் சோற்றுப் பானையைத் தூக்கிக் கொண்டு போய் அவன் வீட்டில் வைத்து சாப்பிட்டான்; இன்னொருவன் கொள்ளையடித்து வெளியே செல்லாமல் நம் சோற்றை நம் வீட்டிலேயே வைத்து நமக்கெதிரே வைத்தே சாப்பிட்டான் - இப்படித்தான் இருக்கிறது அந்த விளக்கம்.
இதையெல்லாம் சொல்வதை வைத்து பாபர் மசூதி விஷயத்தை இங்கு இழுக்க வேண்டாம். ஏனெனில் அதைப் பற்றிய
என் கருத்துக்கள் இருப்பது வேறோரிடத்தில் ...
*
*
*