Showing posts with label திரைமணம். Show all posts
Showing posts with label திரைமணம். Show all posts

Thursday, September 06, 2018

1002. எனக்குப் பிடித்த சீரியல்







*



 Bigg boss பார்க்கிறேன் என்றதும் நிறைய பேர் நேரிலும் வேறு வழியிலும் திட்டித் தீர்த்தார்கள். அவர்களிடம் இன்னொன்றை சொன்னால் இன்னும் திட்டுவார்கள். திட்டிட்டு போகட்டுமேன்னு நினச்சு, சொல்றேன்.

நான் சீரியலும் பார்க்கிறேன்.

 ”அடச் சீ .. இந்த ஆளு சீரியல் பாக்கிறான் பாரு”

 ”சுத்த அறிவு கெட்ட மனுசனா இருக்கானே ...”

 ”பரவாயில்லை ... ரிட்டையர்ட் ஆய்ட்டா இந்த மாதிரி ஜாலியா டிவி பாத்துக்கிட்டு பொழப்ப ஓட்டலாம் போல ...”

 “மடத்தனமான சீரியல்னு சொல்லிக்கிட்டே அத எப்படித்தான் பாத்துத் தொலைப்பாங்களோ!”

 “ஒரு சமுக அக்கறையுள்ளவனா இருந்தா இப்படி சீரியல் பாத்துக்கிட்டுக் கிடப்பானா?”

 “சுத்தமா அறிவே கிடையாதா?”

டெம்ப்ளேட் கொடுத்தாச்சு. அதில் எதை வேணும்னாலும் டிக் பண்ணிட்டு திட்டிக்கிங்க. . SET-UP BOX (சரிதானே .. அல்லது அது SET OF BOX ஆ?) மேல சத்தியமா ... S.C.V. மேல சத்தியாம நான் டிவி அதுவும் சீரியல் கூட பார்ப்பேன் என்பதை ஒத்துக் கொள்கிறேன்.

 சீரியல்னா .. அதில ஒரே ஒரு சீரியல் மட்டும் கட்டாயம் பாத்திருவேன் - மெளனராகம். சில லாஜிக் தகராறுகள். ஒரே ஒரு சஸ்பென்சை வச்சி எத்தனை நாளைக்கு இழுக்குறதின்னு இல்லையா? ஆனாலும் சீரியல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

 முதலில் அந்த இயக்குனருக்கு - தாய் செல்வம் - ஒரு பாராட்டு சொல்லணும். படப் பிடிப்பும் நல்லா இருக்கு. இடது பக்கம் இருட்டில் ஒரு கண்ணாடி chandelier .. அதன் பின்னால் ஒரு கதவு...அதன் பின்னால் நல்ல இருட்டு. அந்த இருட்டில் விளக்கொளியில் ஒரு பாக்கு மரம். வாவ் ...

 அதில வர்ர எல்லார் நடிப்பும் ரொம்ப பிடிச்சிருக்கு. வில்லி கண்ணை கண்ணை உருட்டுறதுல இருந்து, அவங்க அம்மா பண்ற உடை, ஸ்டைலில் இருந்து எல்லாமே பிடிக்குது. இந்த சீரியலில் நன்றாக நடிக்காதவரென்று யாருமே இல்லை. பாப்பாவும் பெரியப்பாவும் நல்லா பண்றாங்க. இயக்குனரின் முதுகில் ஒரு தட்டு, பாராட்டாக.

 கதாநாயகியா வர்ர சின்ன பொண்ணு ரொம்பவே நல்லா நடிக்குது. நல்ல பாடல்கள். பாடல்களுக்கு அந்தச் சின்னப் பொண்ணு அழகா வாயசைக்குது. இப்போ சில நாளைக்கு முன்னால் ஒரு பாட்டு பாடுவது போல் ஒரு சீன். அழகான வாயசைப்பு. சிவாஜியின் வாயசைப்பை அந்தக் காலத்தில ரசிச்ச ஆளு நானு. இப்போ இந்தப் பொண்ணைப் பார்த்ததும் மனசுக்குள்ள ’அட .. நம்மாளுக்கு அடுத்தபடியா உதட்டசைக்கிறதில இந்தப் பொண்ணுதான் டாப்புன்னு’ நினச்சேன். என்ன ஆச்சரியம் .. பக்கத்திலிருந்த வீட்டம்மா, ’சிவாஜி மாதிரி பாட்டுக்கு உதட்டை அசைக்குதுல்ல?’ அப்டின்னாங்க. என்னா ஒரு சின்க்!





 ********** 


இதோட வேற சீரியல்களில் சில சீன்கள் .. சில ஆட்களின் மொகறைகள் இதையும் பார்க்க வேண்டிய சூழல் நிலை வந்து தொலைச்சிருது.
புதுசா ஒரு தியரியை மேக்கப் ஆட்கள் உருவாக்கி இருப்பாங்க போலும். அரை இஞ்சி அளவுக்கு கண்மை போட்டா நல்ல பொம்பிளை... ஒரு இஞ்ச் அகலத்துக்குப் போட்டா அது ஒரு வில்லி.

 வில்லின்னா கழுத்து நிறைய இரவு பகல் எந்நேரமும் நகைகள். ராத்திரி திருடன் வர்ரான். அந்த வீட்டு அம்மா தூங்குது - அழகான பட்டுச் சேலை .. கழுத்தெல்லாம் நகை. தலை நிறைய மல்லிப்பூ!

neutral ஆன ஆட்களையே பார்க்க முடியலை. கொடுமைன்னா .. உங்க வீட்டு எங்க வீட்டு கொடுமை...  ஆட்கள், அதுவும் பெண்கள் / மாமியார்கள்.. நாத்தனார்கள். யாராவது நல்லவங்களா இருந்தா அந்த ஊரு நல்லவங்க இந்த ஊரு நல்லவங்க எல்லாம் தெறிச்சி ஓடணும். அந்த மாதிரி தெய்வீகப் பிறவிகள். பொதுவா அந்தத் தெய்வீகப் பிறவிகள் முட்டாள் நம்பர் ஒண்ணா இருப்பாங்க. மடிக்கணினி அழுக்கா இருக்குன்னு சோப்பு போட்டு கழுவி கொடியில் காய வச்சிருவாங்க.

 அவுங்க அடிச்சிக்கிட்டே இருப்பாங்க .. இவங்க வாங்கிக்கிட்டே இருப்பாங்க. 

புதுசா ஒரு #நயந்தாராeffect ஒண்ணு ஆரம்பிச்சிருக்காங்க. உதட்டைச் சுத்தி எங்காவது ஒரு கருப்பு மச்சம். அவங்க எல்லாரும் உடனே அப்படியே நயன்தாராவா மாறிடுறாங்க. என்னமோ போங்க!

 சொளவு அகலத்தில eye lashes வச்சிக்கிட்டு ...

கடவுளே! நம்ம சீரியல் டைரடக்கர்களுக்கு அழகுணர்ச்சி ரொம்ப ரொம்ப கம்மி போலும். கொஞ்சம் நல்ல மூஞ்சி உள்ளவங்களை நடிக்கக் கூப்பிட்டா நல்லது. சில மூஞ்சிகளைப் பார்த்தாலே ஓடத் தோணுது. அதிலேயும் இவங்க கதாநாயகிகளாகவும் இருந்து தொலைக்கிறாங்க.





 *

Wednesday, December 20, 2017

960. அருவி





*






முதல் பட இயக்குனருக்கு இருக்கும் திறமை அதை விட அவரது துணிவு மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது. அதே போல் ஆண் நடிகர்கள் தங்கள் உடம்பை கதைக்கேற்ப மாற்றுவது போல் கதைக்காக உடம்பை மாற்றிய கதாநாயகியின்  ஈடுபாடும் பாராட்டுதலுக்கு உரியது.


கதாநாயகனின்றி ஒரு தமிழ்ப்படம் – நான் மிகவும் ஆச்சரியப்பட்ட ஒன்று. இந்த தைரியத்திற்காகவே இயக்குனருக்கு என் பாராட்டுகள். இன்னும், ரசிகர்கள் பாட்டு, டான்ஸ் வேண்டுமென்று ”ஒத்தைக் காலில்” நிற்கிறார்கள் என்று வழக்கமாகச் சொல்லும் பெரிய டைரடக்கர்கள் இந்தப்படம் பார்த்தாவது தங்கள் முட்டாள்தனத்தை மாற்றிக் கொள்ளட்டும்.

அருவியின் வாழ்க்கை மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளது. பொங்கிப் பிரவாகமெடுக்கும் முதல் இளம் பகுதி அழகுப் பகுதி. பெற்றோரின் அன்பணைப்பில் வளரும் சிறு பெண் – பேதை. இப்பகுதியில் காமிரா தனித்து நிற்கிறது.  பிள்ளையும் அழகு; அதன் அப்பாவும் அழகு. அடுத்து  பட்டணத்து வாழ்க்கைக்கு மாறி உயரத்திலிருந்து கொட்டும் நீராக அடுத்த பகுதி – மடந்தை. கடைசியில் வரும் துன்பயியலில் வாடும் பேரிளம் பெண்.


பலவகையில் எதிர்பார்க்காத பல நிகழ்வுகளைப் படத்தில் பார்க்க முடிகிறது. முதல் பாதி ஏதும் பெரிதாகத் தெரியவில்லையே என்ற நினைப்போடு இரண்டாம் பாகம் உட்கார்ந்ததும் வித்தியாசமான நகைச்சுவைப் படம் போல் விரிந்து, இறுதியில் சோகச் சித்திரமாக மனதை உருக்கியது. நகைச்சுவை வலிந்து திணிக்கப்படாமல் காட்சிகளோடு ஐக்கியமாகி மிக இயற்கையாக இருந்தன. நல்ல நகைச்சுவை உணர்வு விரவி இருந்தது.

இதற்கு முன் மோகன்லால் படம். பெயர் ஞாபகத்தில் இல்லை.( சரித்திரம் என்ற படமோ?) முக்கால் வாசிப் படம் நகைச்சுவையோடு செல்லும்.

கடைசிப் பகுதி நெஞ்சைப் பிசைந்து விடும். இப்படமும் அது போல் நகைச்சுவை … சிரித்துக் கொண்டே இருந்து விட்டு… அவலப் பதிவிற்குள் இழுத்துச் செல்லப்படுகிறோம். அதனாலேயே பரிதாபத்திற்குரிய அருவியோடு இணைந்து விடுகிறோம்.

அலட்டிக் கொள்ளாமல் நேர்காணலில் இருக்கும் இயக்குனர் அருண் மீது நன்கு மரியாதை கூடுகிறது. வரும் படங்களில் இதே தரத்தை அவர் தர வேண்டும். கதாநாயகிக்கும் பாராட்டுகள்.


*****

தமிழ்ப்படங்களில் நடுவே வரும் பாட்டுகளின் வரிகளோ, பொருளோ பொதுவாக என் புத்திக்கு எட்டுவதில்லை. வீடியோ இல்லாமல் கேட்கும் போது மட்டும் தான் பாட்டு என் மண்டைக்குள் சிறிதாவது ஏறுகிறது. பொருளும்கொஞ்சமாவது புரிகிறது இது எனக்கு மட்டும் தானா…? 

இதனால் சினிமாவில் நடுவில் வரும் பாட்டுகள் – நல்ல பாட்டுகளாக இருந்தாலும் – எனக்கு எரிச்சலை மட்டுமே தருகின்றன. அதிலும் இப்படத்தில் அதிலும் ஒரு சிறிது வித்தியாசம் இருந்தது. குக்காட்டி குனாட்டின்னு ஒரு பாடல் …அது மட்டும் வித்தியாசமாக ஒலித்தது.





*









Monday, October 10, 2016

909. ஆண்டவன் கட்டளை





*



 இந்தப் படத்தைப் பற்றி ரிவர்சில் சொல்லப் போகிறேன்.


படம் முடிந்து வெளியே வந்ததும் ஒரே ஆச்சரியம். அத்தனை இருசக்கர வாகனங்கள் வெளியே இருந்தன. ரொம்ப நாளாச்சு ... இத்தனை வாகனங்களை தியேட்டரில் பார்ப்பது. ஒரே தியேட்டர் காம்ப்ளக்சில்  இரண்டு படம் .. ஒரு வேளை அதனால் கூட இருக்கலாம்!

படம் முடியும் போது “சுபம்” அப்டின்னு திரையில் எழுத்துகள் வந்தன. அந்தக் காலத்தில சுபம் / வணக்கம் அப்டின்னு தான் படங்கள் முடியும். இப்போவெல்லாம் A film by ….. அப்டின்னு டைரடக்கர் பெயர் தானே வரும். ரொம்ப காலத்திற்குப் பிறகு படம் முடிஞ்சி வெளிய வரும்போது சுபம்னு வாசிச்சது சுகமாக இருந்தது.

படம் முடியிற சமயத்தில திடிர்னு எனக்கே ஆச்சரியம். என் வாய் ‘ஈ” என்று இளித்துக் கொண்டிருந்தது. எனக்கே ஆச்சரியம் ... படத்தோடு அப்படி ஒன்றிவிட்டேன் போலும். கதையோடு ஒட்டி இணைஞ்சிட்டேன். படத்தின் மகிழ்ச்சி மனதில் ஊறி ஒன்றி விட்டது என்பதை உணர்ந்து மறுபடி முகத்தைச் சாதாரணமாக்கிக் கொண்டேன். படம் முடிஞ்சி வெளியே போகும்போது அப்படி “ஈ”ன்னு இளிச்சிக்கிட்டே போனா நல்லாவா இருக்கும்?

படத்தில romance கடைசி ஐந்து நிமிடம் மட்டுமே. நம்ம தமிழ்ப் படங்களில் இதுவே ஒரு பெரும் புரட்சிதான். கடைசி சீனில் காதலிக்கு ‘காந்தி’ – அதான் கதாநாயகனின் பெயர் – விமான நிலையத்தில் டாட்டா சொல்லும்போது மாமியார் ஒரு வினாடி முகத்தை, அதைக் கண்டு கொள்ளாதது போல் வெட்கத்தோடு மறுபக்கம் திருப்பும் வினாடி அழகு.

இந்தக் கதாநாயகி உலகப் பெரும் ஆச்சரியமாக இருக்கிறார். முதல் படத்தில் குத்துச் சண்டை என்பதால் நன்கு நடித்தாரோ என்று நினைத்தேன். இந்தப் படத்திலும் அவரது ஸ்கோர் செமையாக இருக்கிறது. புது நடிகை .. புது மொழி.. என்று எந்த தடையும் இன்றி இயல்பாக, அழகாக நடிக்கிறார் ... இல்லை... இல்லை ... வாழ்ந்து விடுகிறார். இவரோடு நடித்தால் கதாநாயகர்கள் ஜாக்கிரதையாக ஒழுங்காக நடித்தாக வேண்டும். இல்லாவிட்டால் இவர் அவர்களைத் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடுவார் போலும்.

Passport officer ஒரே வினாடியில் பிரச்சனையை அனுசரணையாக முடித்து விடுவது கொஞ்சம் அதிகமாகத் தோன்றியது. ஒரு வேளை அதுதான் ஆண்டவன் கட்டளையோ என்னவோ!

இதுவரை தமிழ் சினிமாவில் இப்படி தத்ருபமாக ஒரு கோர்ட் சீனைக் காண்பித்ததாக நினைவில் இல்லை. அப்படியே அச்சு அசலாக இருக்குமே .. அப்படி ஒரு thickly packed dingy and dirty room. Thank you art director. அந்த அறையில் இருக்கும் கூட்டம் ... கண்ணில் படும் ஆ ட்கள் ... பல வகை வகையான முகங்கள்  .. மேசை மேல் குவிந்திருக்கும் பைல்களின் குவியல்கள் .. இடமில்லாத மக்கள் நெருக்கம் .... டைரக்டர் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றியது போல் என்பார்களே அது போல் உன்னிப்பாகக் கவனித்து செய்திருப்பது நன்கு தெரிகிறது.

கூத்துப்பட்டறை ஆட்கள் படத்தில் நிறைய என்று நினைக்கிறேன். அங்குள்ள அரங்கம், ஓப்பனை, ஒத்திகை, ‘ஐயா’வின் மேல் உள்ள பக்தி.. மரியாதை... எல்லாமே கூத்துப்பட்டறை இப்படித்தான் இருக்கும் என்று நானே உருவகப்படுத்திக் கொண்டேன். வக்கீலாக வருபவரை கூத்துப்பட்டறை  நிகழ்ச்சி ஒன்றில் எங்கள் கல்லூரியில் பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திருக்கிறேன். அப்போது அவர் நன்கு வளர்ந்து விடுவார் என நினைத்திருந்தேன்.

இந்தப் படத்தில் அவரும் அவரது அழகான ஜூனியரும் அசத்தலான மேட்ச். ஜூனியருக்கு சின்ன ரோல் தான் .. ஆனால் .. அசத்தி விட்டார். இலங்கை அகதியாக வரும் அரவிந்தனிலிருந்து ஒவ்வொரு சின்ன சின்ன பாத்திரங்களிலும் வருபவர்கள் என்று எல்லோரும் ஒட்டு மொத்தமாக நன்கு நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். கள்ளக் கையெழுத்து போடும் பெரியவர் கூட மனதில் பதியும்படி செய்திருக்கின்றனர். யோகி பாபு எனக்கு ஏமாற்றம் தான்.

முதல்பாதி பார்க்கும் போது நடுவில் சிறிது சுணக்கமாகத் தோன்றியது. ஆனால் அதன் பின் படம் டாப் கியர் தான்.

விஜயசேதுபதி பற்றி என்னத்தைச் சொல்ல? அந்த மனுஷனுக்கு நடிப்பு இயற்கையாக வருகிறது. எதைச் செய்தாலும் அது இயல்பாகத் தெரிகிறது. அவர் தமிழ் சினிமாவின் பெரிய லாபம். இன்னும் உயரணும்... உயர்வார். நல்ல இயக்குனர்களும் அவரை நன்கு “குறி” வைக்கிறார்கள். நமக்கு லாபம்தானே!

பலப்பல ஆண்டுகளுக்குப் பிறகு பழைய அனுபவம் கிடைத்தது. ஞயிற்றுக் (Sunday என்று தமிழில் அடிக்கத் தெரியவில்லையே!) கிழமை.  போன வெள்ளிக்கிழமை வந்த படமாச்சே ... இன்னும் படம் ஓடிக்கொண்டிருக்குமா என்று நினைத்துப் போனேன். ஆனாலும் கூட்டம் இருந்தது. அட ...டிக்கெட் எடுக்க வரிசையில் போக வேண்டுமோவென நினைத்தேன். நல்ல வேளை .. அப்படி எல்லாம் இல்லை. ஆனால் டிக்கெட்டு எடுத்த பிறகு உள்ளே செல்ல கொஞ்சம் கூட்டம். கூட்டத்துக்குள் போய் இடித்துப் பிடித்துப் படம் பார்த்த பழைய நினைவுகள் எட்டிப் பார்த்தன.

அந்தக் காலத்தில் மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரில் முட்டை போண்டாவும், பாப்கார்னும் ரொம்ப பேமஸ். அந்த இரண்டும் இல்லாமல் அங்கு அந்தக் காலத்தில் ஆங்கிலப் படங்களை அந்த தியேட்டரில் பார்த்த நினைவு இல்லை. பழைய நினைவில் இரண்டும் வாங்க நினைத்தேன். தங்ஸ் உருவம் கண்முன் வந்ததால் போண்டாவிற்கு முட்டை போட்டுவிட்டு வெறும் பாப்கார்னோடு ஆசையை அடக்கிக் கொண்டேன்.

*

வானத்தில் பறக்கும் விமானத்தை முதல் பாதியில் அடிக்கடி காண்பிப்பது பற்றியும் சொல்ல மறந்து போனேனே. அதுவும் இன்னும் பலவும் ... மணிகண்டனின் touch தான்.

 *

Wednesday, August 10, 2016

904. கபாலி பாத்துட்டேன் ……. I






*




முதல் பாகம். 

1.    படம் முதலில் துவங்கியதும் ஒரு வாய்ஸ் ஓவரில் ஆரம்பிக்கிறது. யாருடைய உச்சரிப்போ? ஒரு வேளை இயக்குனரின் குரலாக இருக்கலாம். 

எடுபடவில்லை. உச்சரிப்பு, குரலின் எடுப்பு என்று ஏதும் இல்லை. நம்முடைய ப்ளாக் ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால் ஆரம்பமே மொண்ணையாக இருந்தது. 

எனக்கு ஒரு ஐடியா அப்போது வந்தது. நம்ம ஆளு கல்யாண் ஜ்வெல்லர்ஸிடம் கொடுத்துப் பேசியிருக்க வச்சிருக்கலாமேன்னு தோன்றியது. நடிகர் திலகத்தின் சாயலைக் கொண்டு வந்திருக்கலாமேன்னு ஒரு எண்ணம். 

இன்னொரு ஐடியாவும் தோன்றியது. கமல்ஹாசனைப் பேசச் சொல்லியிருக்கலாம். இரண்டு நடிகர்களின் விசிறிகளுக்கும் நன்றாக இருந்திருக்கும். அதோடு விளம்பரமும் அசத்தலாகப் பண்ணியிருக்கலாம். அதிகமான ஆண்டுகள் கழித்து இருவரையும் ஒரே சினிமாவில் கொண்டு வந்திருக்கலாம். 

எப்படியோ அந்த வாய்ஸ் ஓவர் கொஞ்சம் தொல்லைதான். 


2. படத்தின் கடைசி சீன். 

கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் போது roster system பயன்படுத்த வேண்டுமென்று அரசும், பல்கலைக்கழகமும் ஆணையிட்டுள்ளன. அதாவது ஒவ்வொரு major subject-லும் சாதி அட்டவணை முறைப்படுத்த வேண்டும். இதனால் எல்லா சாதியினருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்பது அதன் மத்தியக் கருத்து. 

ஆனால் சில கல்லூரிகளில் முக்கியமான subjects - like chemistry, maths, physics – இவைகளில் பெருஞ்சாதியினருக்கு பெரும்பகுதியை அமுக்கி விடுவார்கள். அமுக்கப்பட்ட சாதியினருக்கென்றே இருப்பது போல் சில துறைகள் உள்ளன.

பல்கலைக்கு ஒவ்வொரு ஆண்டும் எந்த துறைகளில் யார் யாருக்கு அனுமதி கொடுக்கப்பட்டது என்பதை அனுப்ப வேண்டும். ஆனால் இப்படி செய்யப்படும் கல்லூரிகளில் மொத்த சீட்களும், அனுமதிக்கப்பட்டவரின் கூட்டுத் தொகையும் அனுப்பப்படும். எந்தெந்த துறைகளுக்கு யார் யாருக்குக் கொடுக்கப்பட்டது என்பதே தெரியாது. 

உடனே பல்கலைக்கழகத்திலிருந்து அந்தக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் போகுமாம். உடனே அக்கல்லூரிகளிலிருந்து உடனே ஒரு பதில் போகுமாம். இந்த ஆண்டு தவறி விட்டது; அடுத்த ஆண்டிலிருந்து அப்படி அனுப்பி விடுகிறோம் என்று ஒரு பதில். அதாவது நான் அடிப்பது போல் அடிக்கிறேன்; நீ அழுவது போல் நடி என்ற தத்துவம் செயல்படுத்தப் படுகிறது. 

கடைசி சீனில் கபாலியிடம் ஒரு இளம்பெண் கேட்பாள். ‘நாங்க கல்லூரிக்குப் போனாலும் நாங்கள் கேட்காத ஏதோ ஒரு துறையில் தான் கொடுப்பார்கள். நாங்கள் அதைப் படித்தும் பயனில்லாமல் போய் விடுகிறது’ என்பாள். 


ஒரு கல்லூரி ஆசிரியனாக  பல்கலையில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்த நண்பர் சொன்ன சேதியைப் பங்கிட்டுக் கொண்டேன். இது  பல்லாண்டுகளாக நடக்கும் ஒரு அநீதியை அந்தப் பெண் போட்டு உடைக்கிறாள்

அனேகமாக,  “இது அடிபட்ட ஏதோ ஒரு உள்ளத்தின் பாவமான  ஓலம்” என்றே அதை நினைக்கிறேன்.


 அடுத்த பாகம் விரைவில் ……… 






 *

Friday, November 20, 2015

876. NUIT BLANCHE .... SLEEPLESS NIGHT ..... தூங்காவனம்








*




தூங்காவனம் படம் பார்க்க ஆசை. அதுவும் எந்தப் படத்திலிருந்து எடுக்கப்பட்டது என்பதையும் சொல்லியாயிற்று. அதனால் திருஷ்யம் பார்த்து விட்டு, பாபநாசம் பார்த்தது போல் இதிலும் ஒரிஜினலை முதலில் பார்த்தாலென்ன என்று சொல்லி அந்தப் படத்தை இறக்கியாயிற்று.

பார்க்க ஆரம்பித்ததும் RR ரொம்ப பிடித்துப் போனது. ஆனால் எனக்கெல்லாம் ஆங்கிலப் படங்களைப் பார்த்தால் ஒரு மண்ணும் புரியாது. அதுக்கு இங்கிலீசு தெரியணுமாமே! அதனால் sub-ttile போட்டுப் படம் பார்ப்பதே பழக்கம். இந்தப் படத்தில் சப் டைட்டில் வரத் தகராறு பண்ணியது. ஆங்கிலமே அப்படியென்றால் இது பிரஞ்சு படம். ‘merci, tres bien, s'il vous plait, comment allez vous, respondez s'il vous plait மட்டும் தான் தெரியும். ஆனாலும் விடாமல் பார்த்தேன்.  படம் நல்லா போச்சு. வேகமாக படம் நகர்ந்தது. முழுவதும் பார்த்துத் தொலைத்த பின் தான் கதை சுத்தமா புரியலை என்பது புரிந்தது. மறுபடி சப் டைட்டில் தேடிப்பிடித்து மறுபடி படம் பார்த்தேன். அப்பாடா ... ஒரு மாதிரி புரிஞ்சிரிச்சி...

கெட்ட போலிசுகளும் ... நல்ல போலீசுகளும் ...

படம் ஆரம்பித்ததும் மிஸ்கின் நினைவு வந்தது. அவர் படத்திலும் தெருவில் கதை நடக்கும். ஆனால் கதை நாயகர்களைத்தவிர வேறு யாரும் கண்ணில் பட மாட்டார்கள். இங்கேயும் முதல் சீனில் ஹீரோ அம்புட்டு வேகமாக காரை ஓட்டிட்டு, ஆளுகள சுட்டுட்டு போய்க்கிட்டே இருப்பாரு. ஊர்ல, நாட்ல, தெருவில ஆளுகளே இருக்காது. ஒரே ஒரு ஆளு அதப் பார்த்ததாக பின்னாலில் ஒரு சீன்.

அம்புட்டு பெரிய க்ளப்பில் வாசலில் மட்டும் இரண்டே இரண்டு அடியாட்கள். உள்ளே நடக்கும் எதிலும் ஏன் secyrutyகளே வரவில்லை - அத்தனை அடிதடிக்குப் பிறகும்?

கிளப் கிச்சனை அடித்து நொறுக்குவார்கள். ஆனால் சாப்பாடு சப்ளை தொடர்ந்து மட்டும் எப்படி நடக்குதுன்னு தெரியலை.


ஹீரோவை ஆளுக விரட்டிக்கிட்டு வருவாங்க. மெயின் ஸ்விட்சை ஆப் பண்ணிட்டு, இருட்டுக்குள்ள தன் மூஞ்சுக்கு மட்டும் செல் போன் லைட்ட அடிச்சிக்கிட்டே ஹீரோ போவாரு. நமக்கு தெரியணும்ல ... அதுக்காக இருக்கும்!

ஆளுகள சும்மா சும்மா ஷூட் பண்ணிட்டு தேவையில்லாம கொன்னுட்டுப் போவாங்களே ... அது மாதிரி இல்லாம கால்ல ஷூட் பண்ணிட்டு போனா என்னன்னு அடிக்கடி சினிமா பார்க்கும் போது நினைப்பேன். அப்பாடா ... அந்த சீன் இந்தப் படத்தில் வந்திருச்சி.

அங்கேயும் வீடு ஓட்டையா இருக்கே. அம்புட்டு பெரிய கிளப்ல மேல ஒருந்து தண்ணி சொட்டு சொட்டா ஒழுகுது. நம்மள மாதிரி கீழே ஒரு டப்பா வச்சி தண்ணி பிடிக்கிறாங்க. மழைக்காலத்துல பார்த்ததுனாலேயோ என்னவோ ... அது நல்லா இருந்தது. ஆனா எதுக்கு அந்த எபெக்ட் அப்டின்னு புரியலை!

இன்னொரு பெரிய சந்தேகம். இந்தப் படத்திலும் சரி... furious மாதிரி படங்களில் கார்கள் மொங்கு .. மொங்குன்னு மோதி விழும். ஆனாலும் ஒரு கார்லேயும் air-bags இருக்காதா? அத ஒரு படத்திலேயும் பார்த்த ஞாபகமே இல்லையே!

ஹீரோவுக்கு விலாவில சரியான கத்தி வெட்டு. அதோட சண்டை..கிண்டை எல்லாம் போடுவார். ஓடுவார். ஒரு சீன்ல அந்தப் புண்ணுக்கு மருந்து போட்டுக்குவார். அப்போ வலியில் கத்தாமல் வலியில் துடிப்பது போல் நன்றாகச் செய்திருப்பார். அந்த சீனை கமல் எப்படி செய்திருப்பார் என்று பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

சீக்கிரம் பார்க்கணும் ........






 *

Monday, November 16, 2015

874. THANK YOU GUYS....... I APOLOGIZE.......







*


 ........இப்படி ‘மசாலா’ படங்களாக என்னும் எத்தனை காலத்திற்குத்தான் பார்த்துக்கொண்டே இருக்கப் போகிறோம். ஆங்கிலத்தில் சொல்வார்களே -genre - என்று அது போல வகைப்படுத்தப் பட்ட படங்களைப் பார்க்கும் காலம் வரவே வராதா? நம் இந்தியப் படங்களில்தான் இப்படி ‘எல்லாமும்’ சேர்ந்த சினிமாக்கள் வருகின்றன. action, thriller, musical, mystery, suspense, western, war stories என்று எத்தனை வகைகள் மற்ற எல்லா மொழிப் படங்களிலும் இருக்க நம்மூர்ல மட்டும் ஏன் இப்படி ஒரே வகைப் படங்கள் வந்து தொலைகின்றன. 

.......... இப்படியெல்லாம் நான் பத்து ஆண்டுகளுக்கு முன்  பாடிய பிலாக்கணம் இங்கே இருக்கிறது. நடக்கவே நடக்காது என்ற தமிழ்ப்பட உலகத்தில் பெரும் மாற்றம் நடந்து வருகிறது. மகிழ்ச்சி.

காதல் கண்றாவி தவிர ஏதும் இல்லாமல் இருந்த தமிழ்ப்பட உலகில் சமீபத்தில் வந்த நல்ல படங்களை என் மதிப்பீட்டு வரிசையில் தந்துள்ளேன்.

குற்றம் கடிதல் பிரம்மா -  காக்காமுட்டை படத்திற்கு ஊடகங்களில் கிடைத்த அளவிற்கு இப்படம் கவனிக்கப் படவில்லையே. ஏன்?

காக்கா முட்டை மணிகண்டன் 

ஆரண்ய காண்டம் 2010 கூத்துப்பட்டறை சோமசுந்தரம் என்றொரு புது முகம் என்னமா நடித்தார்! அதன் பின் ஆளே காணோமே. மறுபடி இயக்குனர் குமாரராஜா படத்திலாவது வருகிறாரா என்று பார்ப்போம். அட... குமாரராஜாவையும் காணவேயில்லையே!

பீட்சா கார்த்திக் சுப்புராஜ் இவர் யாரென்று தெரிவதற்கு ஓராண்டிற்கு முன்பே அவர் எடுத்த the last train  என்ற குறும்படத்தை எனது ப்ளாக்கில் போட்டிருந்தேன். அர்த்தமுள்ள படம்.

சூது கவ்வும் நளன் குமாரசாமி .  இதில் வந்த ஒல்லிப்பிச்சான் ரமேஷ் திலக் கனா காணும் காலங்களில்  கேபிள் ஷங்கரோடு வந்த முதன் முதல் சீனிலேயே பிடித்துப் போயிற்று.

அழகர்சாமி குதிரை (கதை மூலம், பாஸ்கர் ஷக்தி)   சுசீந்திரன்

இன்று நேற்று நாளை திருப்பூர் ரவிக்குமார் 

ஜிகர்தண்டா கார்த்திக் சுப்புராஜ்

கோலி சோடா விஜய் மில்டன் 

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்- பாலாஜி தரணிதரன்


இந்த இயக்குனர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

தொடருங்கள்..............

Thursday, November 12, 2015

873. I.S.L. 2015. ......(2) & மூன்று விஜய் சீரியல்கள்







*



 என்ன எழுதுவதென்றே தெரியவில்லை.. தலையே சுத்துது. காரணம் - எல்லா அணியும் ரொம்ப நல்லா விளையாடுறாங்க. clear picture கிடைக்கலைன்னு சொல்வாங்களே அப்படித்தான் இருக்குது! ஒரு வேளை செமி பைனல் ரவுண்டுகள் வித்தியாசமா இருக்கலாம். ஆனாலும் அதுக்கு எந்தெந்த அணி வரும்னு தெரியலை. ஏன்னா எல்லா அணிகளும் நல்லா விளையாடுறதுனால ரிசல்ட்கள் எல்லாம் கோக்கு மாக்கா இருக்கு.

 பாருங்களேன் ... கோவா அணி பெரிய அணிகளில் நான் வச்சிருந்தேன்.  ஆனா நம்ம சென்னை டீம் கூட விளையாடி 0:4ன்னு தோத்து நின்னாங்க. முதல் லீக்கில் நடுவில் இருந்த சென்னை அணி கடைசியில் இருந்த வடகிழக்கு அணிட்ட ரெண்டு கோல் வாங்கி தோத்தாங்க. ஆனா புனே அணி டாப்ல இருந்தப்போ நம்ம சென்னை அணி 1:2 என்று வென்றது. இப்படி நடந்தா தலை சுத்தாதா?

முந்தா நாள். 10ம் தேதி. இரண்டாம் லீக்கில் கேரளா அணியும் கல்கத்தாவும் மோதின. நினைத்துப் பார்க்க முடியாத கூட்டம். கொச்சின் மைதானம். 60,276ன்னு நினைக்கிறேன். அம்புட்டு கூட்டம் ...அதுவும் புட்பால் விளையாட்டுக்கு! கட்டாயம் கேரளா ஜெயிச்சிடும்னு நினச்சேன். விளையாட்டும் மகா தீவிரம். ஆனால் கடைசி நிமிடங்களில் 2:3 கல்கத்தா அணி ஜெயிச்சிருச்சி.

அதென்னமோ நிறைய விளையாட்டுகளில் கடைசி பத்து நிமிடங்கள் கதையவே மாத்தியிருது. நேத்து. 11ம் தேதி. சென்னையில் விளையாட்டு. சரியான மழை நடுவில். சென்னையும்,வ.கி. அணியும். 62% பந்து நம்ம கையில் ... ஐ மீன் .. காலில். ஆனால் இதிலும் மிகக் கடைசி நிமிடத்தில் சென்னைக்கு இரண்டாவது கோல் விழுந்தது. 1:2

சென்னைக்கு இன்னும் மூணு ஆட்டம் இருக்கு. எல்லாம் ஜெயிச்சா வரும், செமிக்கு சென்னை வருமோ... வராதோ...?


 ***********




இன்னைக்கி மேட்ச் இல்லை. அப்போ அந்த ரெண்டு சீரியலையும் பார்த்திரலாம் - விஜய் டிவியில். ஆனால் இந்த இரண்டு சீரியலுக்கும் நடுவில் ஒரு சீரியல் வருது பாருங்க .... கடவுள் தந்த வீடு  - அதுக்கு நான் வச்சிருக்கிற பெயர் - சைத்தான் கி கர்.  நிறைய கன்னாபின்னான்னு நகை போட்டுக்கிட்டு மகா கொடூரமா மூணு பொம்பிளைங்க வருவாங்க. கண் கொள்ளாக் காட்சி. அதிலும் நான் இதுவரை பார்த்த - முழுசாகவோ, அரைகுறையாகவோ - சீரியல்களில் இது போன்ற ஒரு முட்டாள்தனமான சீரியல் எதுவும் இல்லை. அட ... மடிக்கணினியை சோப்பு போட்டு சுத்தமா கழுவி வைக்கிற கதாநாயகில்லாம் இதில் உண்டு. ஆனா இந்த சீரியலில் நடிச்ச நிறைய பேருக்கு விஜய் அவார்ட் எல்லாம் கொடுத்தாங்க. (பாவம்,, சரவணா சீரியலில் வர்ர வில்லன் பாண்டிக்கு கொடுக்காம ஒரு பொம்பளைக்குக் கொடுத்தாங்க.) இந்த லட்சணத்தில் இந்த சீரியல் இந்தி, மலையாளத்திலும் ஓடுதாம். நம்மளை விட மலையாளத்துக்காரங்க பெட்டர்னு நினச்சிருந்தேன். அப்படியெல்லாம் இல்லை போலும். அவங்களும் நம்மள மாதிரி தர்த்திகள் தான் போலும்.

ஆனாலும் இந்த ஒரு சீரியலைப் பற்றி மட்டும் சொல்லிட்டா போதுமா? ஆண்டாள் அழகர்னு ஒரு சீரியல். ஒண்ணு இரண்டு வாரத்துக்கு முன்னால் அந்த சீரியலை வீட்ல சென்சார் பண்ணிட்டாங்க. என்ன மாதிரி சின்ன பசங்க எல்லாம் அதைப் பார்க்கக் கூடாதுன்னுட்டாங்க. ஒரு ஜோடி “அது” & “இது”ன்னு ”அதப்பத்தி” அசிங்கமா தொடர்ந்து பேசிக்கிட்டே இருந்தாங்களாம்.

ஆரம்பத்தில சரவணன் மீனாட்சி ரொம்ப பிடிச்சிது. காரணம் என்னன்னா ....நிறைய நல்ல விஷயங்களைக் காண்பிச்சாங்க.  வரதட்சணை கிடையாது; நல்ல நாள் பார்க்கிறது கூடாது; ஜாதகம் பார்க்கக் கூடாது; பெண்ணின் பழைய காதல் - அது infatuationஆக இருக்கலாம் - அதையெல்லாம் தாண்டும் கதாநாயகன்; இப்படி நிறைய பாசிட்டிவ் பாய்ண்டுகள் இருந்திச்சி. இப்போ கழுதை தேஞ்ச கட்டெறும்பா போச்சு. வேற வேற டைரடக்கர்களாம்!

sorry directors ...... கொஞ்சம் தேறப் பாருங்க’ப்பா ..........

Saturday, September 19, 2015

865. ”தனி ஒருவன்” - கிஸ் பண்ண விடுங்கப்பா ...







*



copy cat என்பதால் இயக்குனர் ராஜா மேல் பெரிய அபிமானம் ஏதும் கிடையாது. ஆனால் தனி ஒருவன் படம் பார்த்ததும் அவருக்கு என் பாராட்டுகளை அளிக்க விரும்பினேன். படம் நன்றாக, விருவிருப்பாக சென்றது.ஹை டெக் விஷயங்கள் .. வேகமாக நகரும் கதை .. நன்றாக நடித்த நடிகர்கள்.. அதிலும் அப்பாவாக வரும் ராமய்யா ... வழக்கமாக யோசித்து புரிய வேண்டிய காட்சிகள் தமிழ்ப்படங்களில் வந்தால் உடனே இயக்குனர்கள் அதற்கு ஒரு விளக்க உரை.. அது இதுன்னு கொடுப்பாங்க. இந்தப் படத்தில் அந்த மாதிரி ’நோட்ஸ் போடுறது’ இல்லை. அரவிந்த சாமி ரோலும் நல்லா இருந்தது. முரடன்கள் தான் வில்லன்களாக இருக்கணுமா? பெரிய விஞ்ஞானிகளும் பெரிய வில்லன்களாக முடியுமில்லையா?

படம் ஆரம்பித்த முதல் 10 நிமிடங்களுக்குள்ளே ரெண்டு மூணு டிவிஸ்ட் வந்தது படத்துக்கு நல்ல ஆரம்பம் கொடுத்தது. சின்னப் பயல் கட்சித் தலைவரிடம் போட்ட டீல் சூப்பர்ப்.

இந்த மாதிரி படங்களில் ரொம்ப லாஜிக் ஓட்டைகள் இருக்கும். இதில் ரொம்ப கொஞ்சம் மட்டும் தான். கடைசி சீனில் எப்படி அரவிந்த சாமி SD Cardல் எல்லா தகவலும் சொல்லி புல்லட் கோட்டில் வைக்கிறார் ....... எனக்குத் தெரிந்த பெரிய ஓட்டை இது தான்.

படம் பார்க்கும் போது ஆரண்ய காண்டம் படம் நினைவுக்கு வந்தது. ஏனென்று தெரியவில்லை. இதைவிட ஆரண்ய காண்டம் பிடித்தது என்றும் நினைவுக்கு வந்தது. ஏன் அந்தப் படம் க்ளிக் ஆகலை. திருட்டு சிடி கூட அப்படத்திற்கு இல்லையாமே...!

படத்தில் பிடிக்காத இடம் - இந்தப் படத்தில் வந்த காதல் டூயட். நயந்தாரா விரட்டி விரட்டி காதலிக்க, ஹீரோ மாட்டேன்றார். கடைசியா சரின்னு ஆனதும் நயந்தாரா அப்படி மூஞ்சை மேலே தூக்க ... கடற்கரையில் ஒரு பாடல். எரிச்சலா இருந்தது. படத்தின் வேகத்திற்கு சட்டென்று போட்ட கடிவாளம். நம்ம தமிழ்ப்படத்தில் இரண்டு கஷ்டம்: ஒண்ணு பாட்டு ... ரெண்டு நீளம். பாட்டைக் குறைச்சாலே நீளம் குறையும்.

அதோடு நம்ம படங்களில் கிஸ்ஸிங் சீன் இல்லாம எடுக்கிறது தான் நம் “தமிழ்ப்பண்பாடு”ன்னு யாரோ சொல்லிட்டுப் போய்ட்டாங்க. அதெல்லாம் வெட்டிக் கதை. அந்த மாதிரி சில வினாடிகளில் ஒரு கிஸ்ஸிங்கை காண்பிக்கக் கூடாது என்பதற்காக 3-5 நிமிடம் வரை அலையில் பெண்ணைப் புரட்டிப் போட்டு, மழையில் மஞ்சள் சேலையில் போட்டு நனைத்து எடுத்து, மரத்தைச் சுத்தி ஓட விட்டு மூச்சு வாங்க வைத்து ... இதுவே ஒரு சோதனையாக ஆகிவிடுகிறது.

இரண்டு மணி நேரம் இல்லாமல் ஒன்றரை மணி நேரத்தில் முடித்தால் இது மாதிரி படங்கள் இன்னும் நன்கு அமையும்.

தமிழ்ப்பண்பாட்டை மறந்து விட்டு ஒரு நாலைந்து வினாடிக்கு ஒரு கிஸ் சீனை வச்சிட்டீங்கன்னா... எங்களுக்கும் வசதி; உங்களுக்கும் செலவு குறைவு. கிளுகிளுப்புன்னு சொல்லி எங்களில் பலரையும் ஏமாத்திடலாம் ஈசியா...!



 *

Saturday, March 14, 2015

826. RELIGULOUS - ஒரு ஆவணப்படம்.





*




எப்படியும் இருபது முப்பது குறுந்தகடுகள் ... இறக்கி வைத்த சாப்ட் காப்பிகள் ... என்று நாற்பது ஐம்பது  திரைப்படங்கள் கைவசம் இருக்கின்றன. பார்ப்பதற்காக வாங்கியது ... இறக்கியது.

படம் பார்க்க நேரமே கிடைக்க மாட்டேங்குது! ஒய்வுக் காலத்திலும் அத்தனை பிசி!!

ஒரு படம் ... இறக்கி வைத்தது. எப்போது, எதற்காக இறக்கி வைத்தேன் என்பதே மறந்தே போச்சு. ஆனாலும் நம்ம தொகுப்புல அர்த்தம் தெரியாத ஒரு தலைப்பு இருந்தது இந்த ஒரு படம் தான். சரி ... மொதல்ல அர்த்தம் பார்ப்போமேன்னு அகராதி எடுத்துப் பார்த்தேன். அப்படி ஒரு வார்த்தையும் இல்லை. சரின்னு படம் பார்க்க ஆரம்பித்தேன். அது திரைப்படம் இல்லை. ஒரு ஆவணப் படம். கொஞ்ச நேரம் கழித்து தான் தலைப்பு புரிந்தது.

RELIGION + RIDICULOUS = RELIGULOUS!!!

 அழகான தொகுப்பு ... அர்த்தமுள்ள தொகுப்பு ... பார்க்க ஆரம்பித்ததும் நிறுத்த முடியவில்லை, அத்துணை interesting .... 

படம் பார்த்து முடிந்த பிறகுதான் படத்தைப் பற்றிய விவரங்களை கூகுளாண்டவரிடம் கேட்டேன். தலைப்பு பற்றியும் போட்டிருந்தது.  LARRY CHARLES என்பவர் இயக்கியுள்ளார்; BILL MAHER என்ற நகைச்சுவை நடிகர் பலரை நேர்காணல் செய்கிறார். படம் திரையிடப்பட்டு மிக வெற்றிகரமாக, நல்ல லாபத்தோடு ஓடியிருக்கிறது.

மூன்று ஆபிரஹாமிய மதங்களைச் சார்ந்த பலரைக் கேள்விகள் கேட்டு, அவையெல்லாம் அழகாகத் தொகுக்கப்பட்டு,  அர்த்தமுள்ள முடிவுகளோடு இருந்தது. எப்படி நம்புக்கையாளர்கள் தங்கள் நம்பிக்கை என்ற ஒரு கோட்டின் ஒரு பக்கமே நின்று விடுகிறார்கள் என்று மிகத் தெளிவாகக் காண்பித்துள்ளார். தங்கள் மதங்களின் “ஓட்டைகளைக்” கண் திறந்து பார்க்காமல்  நம்பிக்கையாளர்கள் எப்படி மிக அழகாகக் கடந்து சென்று விடுகிறார்கள். வரலாற்று  உண்மைகளைக் கூட நம்பிக்கையாளர்கள் கண்டுகொள்வதில்லை. விஞ்ஞான உண்மைகளா..... என்று எப்படி ஒதுங்கிப் போய் விடுகிறார்கள்!! 

தொய்வில்லாமல் இந்த மூன்று மதக்காரர்களைச் சந்தித்து, நகைச்சுவையோடு விவாதித்து செல்வது ஒரே மூச்சில் ஆவணத்தைத் தொடர்ந்து பார்க்க வைத்து விடுகிறது.

ஒரு பெரும் மகிழ்ச்சி ....  மதங்களைப் பற்றி நான் எழுதிய பல கருத்துகள் இந்த ஆவணப்படத்திலும் இடம் பெற்றன. சில விவாதங்கள் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே இருந்ததாகத் தோன்றியது. 

சில முத்தான முடிவுரைகள்:

In U.S. 12% are non- believers. 

So many gods (!!) were born on 25th December !!!
 
So many gods (!!) were born from virgins!!



The plain fact is 
Religion must die
For mankind to live.

Faith means making a virtue out of not thinking.

Religion is dangerous because it allows human feelings who don't have the answers to think that they do.

Those who preach faith and enable and elevate it are our intellectual slaveholders keeping mankind in a bondage to fantasy and nonsense that has spawned and justified so much lunacy and destruction.

RATIONAL PEOPLE. ANTI-RELIGIONISTS, MUST END THEIR TIMIDITY AND COME OUT OF THE CLOSET AND ASSERT THEMSELVES.

                                            YES, I AM OUT OF THE CLOSET AND ASSERTIVE!!!















 *

Friday, December 19, 2014

809. மெட்ராஸ் ... த்ரிஷ்யம் ...





*



மெட்ராஸ் .... 

படம் பிடித்தது. வழக்கம் போல் காதல் நடுப்புள்ளியாக இல்லாததே படம் பிடிப்பதற்கான முதல் காரணம். இயல்பு வாழ்க்கை, நிஜத்தை ஒட்டிய மனிதர்கள், அவர்களது அச்சு அசலான பின்புலம், நம்மூர் அரசியல், அரசியலின் நுண்ணரசியல் .... எல்லாம் இயற்கையாக நன்றாக இருந்தன.

கதாநாயகன், கதாநாயகி நன்றாக நடித்திருந்தார்கள். அவர்களை விடவும் இரண்டாம் கதாநாயகனும், கதாநாயகியும் மேலும் அழகாகத் தெரிந்தார்கள்; மிக நன்றாக நடித்திருந்தார்கள். படம் மிகவும் பிடித்திருந்தது ....

ஆனால் அந்தக் கடைசி சீனில் இருந்த எழுத்துப் பிழை படத்தின் சுவையை அப்படியே நம் மனதிலிருந்து பறித்து எறிந்தது போலிருந்தது. கதாநாயகன் உண்மையில் அந்தச் சுவர் தான். இறுதியில் அதிலிருந்த அரசியல்வாதியின் படம் அழிக்கப்பட்டு, கல்வி பற்றிய அறிவிப்பு ஒன்றோடு படம் முடிகிறது. நல்ல இனிப்பான ஒன்றைச் சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில் கசப்பான,உறைப்பான ஒன்றைக் கடித்து வைத்தது போல் இருந்தது. ரசித்த அனைத்தும் அந்த கசப்போடு / உறைப்போடு முடிந்தது போலாயிற்று. அதுவும் கல்வி பற்றி எழுதும் போது கூட இப்படி ஒரு பிழையோடு எழுதலாமா என்று சீத்தலைச் சாத்தனாரின் கோபம் தான் வந்தது!

கல்வி கற்பது
உலகை அறிவதற்க்காக அல்ல ;
உலகை மாற்றுவதற்க்கு.

படத்தோடு தொடர்புடையவர்கள் யார் கண்களிலும் இந்த எழுத்துப் பிழை கண்ணிலேயே படவில்லையா....? அட போங்கப்பா...!


 ************* *


த்ரிஷ்யம் ....

இந்திய சினிமாவின் ஒரு பெரிய வியாதி படம் கட்டாயம் இரண்டு,  இரண்டரை
மணியளவு ஓடியே ஆக வேண்டும் என்பதே. த்ரிஷ்யம் இடைவேளைக்குப் பிறகுதான் படம் ஆரம்பிக்கிறது. முதல் பாதியில் நடப்பவைகளை மிகச் சில காட்சிகளில் காட்டியிருந்திருக்க முடியும். ஆனால் படம் ஒன்றரை மணி நேரம் மட்டும் ஓடும்.  ஆனால் படம் ஒரு முழுமையான, இறுக்கமான படமாக இருந்திருக்கும். நாம் செஞ்ச பாவம் ... இரண்டு மணி நேரம் படம் நாம் பார்த்தாக வேண்டுமே....! மலையாளக்காரங்களாவது ஒன்றரை மணி நேர படம் எடுக்க ஆரம்பிக்க மாட்டீங்களா?

செய்த தவறை மறைக்க கதாநாயகன் எடுக்கும் முதல் சில முயற்சிகளில் இன்னும் கொஞ்சம் தெளிவாகச் செய்திருக்கலாமென்று தோன்றியது. காரை மறைக்க ஏதோ தெரியாத ஒரு பள்ளத்தில், பட்டப் பகலில் முயற்சி செய்ய வேண்டுமா? தண்ணீரின் ஆழம் போதுமா என்றெல்லாம் தெரியாமல் பலரும் நடமாடும் இடத்தில் காரை மூழ்கடிக்கிறார்.

ஆனால் அதன் பின் சில நிகழ்வுகள். அதை மற்றவர் மனதில் நிறுத்த கதாநாயகனின் தந்திரங்கள், ... காவல் துறையின் முயற்சிகள் ... விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை.

படப்பிடிப்பு நன்றாக இருந்தது. இரவில் தன் வீட்டுத் திண்ணையிலிருந்து மோகன்லால் அமர்ந்திருக்கும் காட்சியில் காட்டிய இரவு நேர இரவுக் காட்சி அவ்வளவு அழகு. இன்னும் அந்தக் காட்சி மனதில் உறைந்து நின்று விட்டது.எப்போதுமே கேரளத்தின் மீது எனக்கு ஒரு ‘கண்’ உண்டு. மோகன்லாலின் வீட்டைக் காண்பிப்பார்கள். ஆங்கிலத்தில் சொல்வார்களே .. அதே போல் ‘அந்த ஒரு வீடு கிடைக்க என் வலது கையையும் தர மறுக்க மாட்டேன்’!  கனவு வீடு.


இறுதிக் காட்சி ஒரு கவிதையை வாசித்தது போல் எனக்கிருந்தது.  மகனை இழந்த பெற்றோர் ... அந்த மகனைக் கொன்றவர் ...  மூவரின் சங்கமம். உண்மை மூவருக்கும் தெரியும். ஆனால் வெளிப்படையாகப் பேசாமல் அவர்களிடையே நடக்கும் உரையாடல்கள் ... வசனம் மிக நன்றாக எழுதப்பட்டிருந்தது. (கணினியில் பார்க்கும் போது ஒரு வசதி. நமக்குப் பிடித்த இடத்தை மீண்டும் மீண்டும் பார்க்க வசதியாக இருக்கிறது!) அந்தக் கடைசி சீனை மூன்று தடவை வசனத்திற்காகத் திருப்பித் திருப்பிப் பார்த்தேன்.

மோகன்லால் அளவு தமிழில் நமது கமல் நடிக்க மாட்டார் என்று நண்பர் சொன்னார். தெரியவில்லை; பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.



**********************


Wednesday, November 26, 2014

804. ஒரு கட்டப் பஞ்சாயத்து







*


மொத மொதல்ல ஒரு ஒப்புதல் வாக்கு மூலத்தோடு (confession) இதை ஆரம்பிக்கிறேன்: எனக்கு சுத்தமா இசையறிவு கிடையாது. என்னென்னமோ சொல்லுவீங்களே… ராகம், தாளம், பல்லவி, அனுபல்லவி (அனு பாடுற பல்லவியா இது?), சரணம் … இதெல்லாம் ”வீசை என்ன விலை”ன்னு கேட்கிற ஜென்மம் நான்.

பின் எந்த லட்சணத்தோடு பஞ்சாயத்து பண்ண வந்த அப்டில்லாம் கேக்கப்படாது. வந்தது வந்திட்டேன்.. சொல்ல நினச்சதை சொல்லிட்டு போய்றேன். அம்புட்டுதான் ………கொஞ்சம் பொறுங்க ... தோள்ல துண்டைப் போட்டுக்குறேன்... எங்கே அந்த சொம்பு...ம்.. இந்தா இருக்கு... ஆரம்பிப்போமா...

சார்லஸ் அப்டின்னு ஒரு புது பதிவர். பத்து பதிவு மட்டும் போட்டிருக்கார். அதில நாலு பதிவு இளைய ராஜா பற்றியது. தலைப்பே இசை ராட்சஷன் அப்டின்னு வச்சிட்டாரு. எப்படி சின்ன வயசில இருந்து பாட்டு கேட்டேன் … சர்ச்ல பாட்டு பாடினேன் … எப்படி என் இசை வளர்ந்தது. எப்படி ஒரு இசை அமைப்பாளரிடமிருந்து கடைசியில் ராஜாவின் ரசிகனானேன். எந்த பாட்டை எப்பெப்போ கேட்டேன். அது எப்படி என்னை ஈர்த்தது அப்டின்னு எழுதினார்.

இப்படி அவர் பத்த வச்சதும் சிலர் – குறிப்பாக இருவர் – அமுதவன், காரிகன் வந்து எதிர்க்கருத்து வைத்தார்கள். நானும் கூட அந்தப் பக்கம் போய் ஒன்று ரெண்டு பின்னூட்டம் போட்டேன். அங்க அவங்கவங்க பத்த வச்சதில ஒரேடியா புகையா வந்திச்சா. கண்ணும் மண்ணும் தெரியலைன்னு வெளியே வந்துட்டேன். ஆனால் அங்க ஒரேடியா இன்னும் புகை வந்து கிட்டே இருந்ததா … சரி .. நமக்கு தோன்றதைச் சொல்லலாமேன்னு ஒரு தைரியத்தில வந்திட்டேன் …

சாமிதான் என்னய காப்பாத்தணும்.

நான் பாட்டு கேட்பேன். ஆனாலும் என் வயசுக் காலத்தில வந்த தமிழ்ப்பாட்டுகள் ஒண்ணும் தேறலை. அனேகமா அப்போவெல்லாம் முழு கர்நாடக இசையே அதிகமா இருந்திருக்குமோ என்னவோ.. அதுனால சில தமிழ்ப் பாட்டுகள் பிடிக்கும். கைராசின்னு ஒரு படம். ஜெமினி நடிச்சதுன்னு நினைக்கிறேன். அதில் ஒரு காதல் பாட்டு. கதாநாயகன் பாடுற பாட்டு. அது தான் எனக்கு மொதல்ல முழுப் பாட்டும் மனப்பாடமா இருந்தது. என்ன பாட்டுன்னு இப்போ மறந்து போச்சு. பள்ளிப்பருவம் இப்படிப் போச்சு.

காலேஜ் வந்ததும் இந்திப் பாட்டுகள் தான் பிடிச்சிது. ‘பார்ரா..அம்பது, நூறு வயலின் வச்சி இழைக்கிறாண்டா இந்த சங்கர் ஜெய்கிஷன்’ அப்டினு சொல்லுக்குவோம். தெரிந்த இன்னொரு பெயர் லஷ்மண் – பியாரிலால் மட்டும் தான். அப்பா கூட ஒரு தடவை கேட்டார்; ஏண்டா! இந்தி வேண்டாம்னு போராட்டம்; ஆனால் கேக்குறது இந்திப் பாட்டா?’ நாங்க பதில் வச்சிருந்தோம்ல … இந்தி படிக்கிறது திணிப்பு; இந்தி கேக்கிறது இனிப்பு! 


கல்லூரி வந்ததும் சிலர் ஆங்கிலப்பாடல்கள் அப்டின்னு ஆரம்பித்தார்கள். நமக்கு அதெல்லாம் எட்டவில்லை. அன்னையிலிருந்து இன்னைக்கி வரை தெரிஞ்சதே நாலஞ்சு இங்கிலிபீசு பாடல்கள். அதுக்கு மேல ஏறலை. அதுக்கெல்லாம் இங்கிலிபீசு தெரியணுமாமே… நமக்கெதுக்கு வம்பு.


எம்.எஸ்.வி. வந்ததும் தமிழ்ப் பாட்டுகள் பிடிக்க ஆரம்பிச்சது. இதுவரை வார்த்தைகள் மட்டுமே பாடல்களின் முத்திரைகளாக இருந்தன. எம்.எஸ்.வி. பாடல்களில் இசை வார்த்தைகளோடு இணைந்தன. வார்த்தைகள் மெருகேறின. வார்த்தைகளும் புரிந்தன; இசையும் அவற்றோடு இணைந்தன. கேட்க இன்பமாக இருந்தது. அன்று கேட்ட பாட்டுகள் இன்றும் நினைவில் இருக்கின்றன. என்றும் இருக்கும்.

70களின் நடுவில் ராஜா வந்தார். அதன் பின் அவரது ராஜ்ஜியம் தான். நான் பார்த்த ஒரு திருப்பம்;- வெறும் வார்த்தைகளாக இருந்த பாடலில் இசையை இணைத்தார் எம்.எஸ்.வி.. அந்த இசையை மேலும் மேலும் மெருகேற்றி பாடலுக்குள் ஏற்றினார் ராஜா. 2000 வரை அவர் பாடல்கள் தான் காதில் ரீங்கரித்தன. ஆனால் இன்று ராஜாவின் புதிய பாடல்களைக் கேட்கும் போது பழைய பாடல்கள் தான் நினைவுக்கு வருகின்றன. அது போல் தல ஏன் இப்போ ஒரு பாடல் கூட போட முடியவில்லை என்ற ஏக்கம் தான் வருகிறது. 


ராஜாவிற்குப் பிறகு மற்ற இசை அமைப்பாளர்களின் நல்ல பாடல்கள் பிடித்தன. ’அன்னக்கிளி என்னைத் தேடுதே’ கேட்ட போது எழுந்த நினைப்புகளும் நினைவில் இருக்கு. ’சின்னச் சின்ன ஆசை’ பாட்டு முதல் முறை கேட்ட நேரம், இடம் எல்லாமே நினைவில் இருக்கிறது. ஆனாலும் ரஹ்மான் ராஜா போல் சிம்மாசனம் போட்டு அமர முடியவில்லை, வார்த்தைகள் புரிந்து பாடல் கேட்ட காலம் முடிந்து, இசைக்கு மட்டுமே முதலிடம் கொடுக்கப்பட்டதாலோ என்னவோ பழைய பாடல்கள் போல் புதுப் பாடல்களில் மனம் ஒன்று படவில்லை. இது நான் ரசித்த விதம்.

சார்லஸ் ரசித்ததும் இதுபோல் தான் என்று நினைக்கிறேன். அதனாலேயே அவரது பதிவு எனக்கு உடந்தையாக இருந்தது. ஆனால் அமுதவனும் காரிகனும் முற்றிலும் வேற்றுச் சுவையோடு இருக்கிறார்கள். இதுவும் இயற்கையே…. Tastes differ.

ஆனால் அவர்கள் எனக்கு இந்த இந்த இசையமைப்பாளர்கள் பிடிக்கிறது; ராஜாவைப் பிடிக்கவில்லை  என்று சொன்னால் சரி தான். ஆனால் ராஜாவின் மேல் ஏதோ வன்மம் கொண்டது போல் எழுதுவது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது.

பஞ்சாயத்தில் இதைப் பற்றிப் பேசுவோமே …. 

காரிகனுக்கு … 

உங்கள் பதிவைப் பார்த்தால் நீங்கள் இசையில் நிறைய அறிவுள்ளவர் என்று தெரிகிறது. நல்லது.  மகிழ்ச்சி.

இருப்பினும் உங்கள் சில கருத்துகளுக்கான என் எதிர் கருத்துகள்: காரிகன் என்னிடம் -- //இணையத்தில் நீங்கள் இளையராஜா பதிவுகளைப் படிப்பதில்லை என்று தெரிகிறது.// என்று கேட்டிருக்கிறார். என் பதில் -- ஒரு வேளை நான் அதிகம் வாசித்திருக்க மாட்டேனாக இருக்கலாம். ஆனால் சில வாசித்திருக்கிறேன். அதிலும் மதுரைக்காரர் ஒருவர் - குமரன் - இளையராஜாவின் இயற்பியல் என்று எழுதுகிறார்.  அந்த தலைப்பில் அவர் எழுதிய அழகான பதிவுகளும் நினைவுக்கு வருகிறது. //இளையராஜாவின் பாடல்களைக் கேட்பது எப்படி? வாழ்க்கையை வாழ்வது எப்படி? இந்த இரண்டு கேள்விகளுக்குமே கிட்டத்தட்ட ஒரே விதமான பதில் இருக்கக்கூடும்.// இது போல் அழகாக எழுதிச் செல்வார். வாசிக்கவே இன்பம் வாசித்துப் பாருங்கள் காரிகன். (இப்போது எனக்குப் பின்னால் ‘சங்கீத ஜாதி முல்லை’ பாடல் கேட்கின்றது…. நல்ல பாட்டு …இல்லீங்களா?)இது போல் சில பதிவுகளைப் படித்திருக்கிறேன். ஆனால் என் கண்பார்வையில் ராஜாவைப் ‘போற்றிப் பாடடி கண்ணே…’ பதிவுகள் தான் அதிகம் பட்டன. அதனாலேயே உங்கள் கருத்துகள் துருத்திக் கொண்டு தெரிகின்றன.

உங்களின் இன்னும் சில கருத்துகள் என் பதில்களோடு;

//உங்கள் இசைமேதையின் கறுப்புப் பக்கத்தை சமாளிக்கமுடியும்?// காரிகன் நாம் யாருக்கும் conduct certificate கொடுக்க வேண்டியதில்லை. யார் இசை யார் யாருக்குப் பிடிக்கிறது என்பது மட்டுமே ‘பஞ்சாயத்தின் முன் உள்ள கேள்வி’. ?/

ராஜாவின் இசையில்தான் கேட்கச் சகிக்காத அருவருப்பான ஓசைகள் மெட்டுகள் குரல்கள் வரிகள் எல்லாமே உண்டு.// ஓ! இசை அறிஞர் நீங்களே இப்படிச் சொல்லும் போது நான் என்ன சொல்ல? என் ஒரே பதில்: அப்படியா? //

ராஜா ரசிக மணிகளெல்லாம் ஒரே சுருதியில் அபஸ்வரம் வாசிப்பதைக் கேட்டபிறகு சரி இது அது போன்ற எல்லா மரமண்டைகளுக்கும் போய்ச் சேரட்டும் என்று எழுதுகிறேன்.// ஓ! நானும் ஒரு மர மண்டை தான். //

இளையராஜாவின் வதவதவென்ற எண்ணிலடங்கா பாடல்களில் ஒரு கைப்பிடி அளவே சிறந்த கிளாசிக் வகைப் பாடல்கள் என்றே நான் சொல்லிவருகிறேன்.// 
காரிகன் , This shows just how biased you are. 

காரிகன், உங்கள் இசையறிவைப் பார்த்து வியக்கிறேன்.இருப்பினும் இன்னும் சில பதிவர்களின் பதிவுகளை வாசித்த போது உங்களைப் போல், அல்லது - என் பார்வையில் உங்கள் அளவோ அல்லது அதற்கு சிறிது மேலோ உள்ள - சில பதிவர்களின் பதிவுகளைப் படித்தேன். படித்தவை எனக்கு மகிழ்ச்சியளித்தன. உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 செளந்தர் 
ராகங்களைக் கையாள்வதில் இசைமேதை ஜி.ராமனாதனையும் , இசைமேதை கே.வீ.மகாதேவனையும் , மெல்லிசைப்பாங்கில்உயர் பிரகோகங்கள் காட்டிய மேதைகள் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி , பின்னர் தனி ராஜ்ஜியம் அமைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனையும் ஒன்று கலந்து ,அவற்றுடன் தனக்கேயுரிய சப்தஜாலங்களைக் காட்டி நம்மை தன் இசையோடு கட்டி வைத்து , நினைவில் நின்றகலாத பாடல்களைத் தந்த இசைஞானி இளையராஜா அமைத்த இன்னும் சில மாயமாளவ கௌளை ராகத்தில் அமைந்த பாடல்கள் வருமாறு ....

பால ஹனுமான்
ஓர் இசையமைப்பாளர் ஏற்கனவே இசையமைத்து, பாடல் வரிகள் எழுதப்பட்டு, (ஹே ராம்) படமாக்கப்பட்டு விட்டது. அந்த சவுண்ட் ட்ராக்கை அப்படியே நீக்கிவிட்டு, அந்தக் காட்சியை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு, உதட்டசைவு, உடலசைவு, காட்சித்தேவை அனைத்துக்கும் பொருத்தமாக புதிய இசையை எழுதி, இயக்க வேண்டும். அது மிகச் சிறப்பானதாகவும் இருக்க வேண்டும். உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் முயற்சி செய்திருக்கவே முடியாத விஷயம்.

காரிகன், எனக்கும் இது மிகவும் ஆச்சரியமான ஒன்றாக உள்ளது.

 செழியன்
ஒரு பொழுதுபோக்கு ஊடகத்துக்குள் சிக்கிக்கொண்டதால் மட்டுமே இளையராஜா என்கிற கலைஞனை இவ்வளவு பிரலாபிக்க வேண்டியிருக்கிறது. அவர் கலிபோர்னியாவில் இருந்து இசைத்தொகுதி எழுதுபவராகவோ, ஐரோப்பிய தேசத்தின் வயலின் கலைஞராகவோ இருந்திருந்தால் இவ்வளவு பிரயத்தனங்கள் தேவைப்படாது. (அமுதவன், இதே கருத்தை நாம் சிவாஜிக்கும் வைத்தோம்...)

இசை விதிகளுக்கு முரணான மீறல்களை தனது பாடல்கள் பெரும்பாலானவற்றில் நிகழ்த்துவதன் மூலம் விதிகளை திருத்தி எழுதியுள்ளார்.

 ஒரு கலைஞனின் ஆயுட்காலத்திற்கு பின், அவனது படைப்புகளை ஆய்வு செய்வதை விடவும், அவ்வாறான ஆய்வுகள் அவனது காலத்திலேயே நிகழ்த்தப்படுவது, அவன் திசைகள் கடந்து... தனது படைப்பின் எல்லைகளை, மேலும் விஸ்தரித்து செல்கின்ற வீச்சினை, அவனுக்குத்தரும். 

அடித்துச்சொல்கிறேன்.. உலகின் தலை சிறந்த இசை அமைப்பாளர்களான ஜான் வில்லியம்ஸ், ஜெர்ரி கோல்ட் ஸ்மித், எனியோ மரிக்கோன் போன்றவர்களை தாண்டி இருக்கிறார் ராஜா. (ஹே ராமில்) இப்படி ஒரு காட்சியை லட்டு மாதிரி கமல் அமைச்சு கொடுக்க, கொடி பிடிச்சு ஆடியிருக்கார் நம்ம ஆளு. ஆஸ்கார் வாங்கிய இசை அமைப்பாளர்கள், தயவு செய்து இந்த தரத்தை எட்ட முயற்சிக்கவும்.

அமுதவனுக்கு ….
நீங்கள் சிவாஜி பற்றி எழுதி, அதற்கு வவ்வால் பதில் சொன்னது போல் இங்கு நீங்கள் எதிர்க் குரலில் பேசுவது போல் தெரிகிறது. சிவாஜி ஒரு பெரும் நடிகர்; அவரது ரசிகர் நீங்கள். வவ்வால் குறை சொன்னது உங்களுக்கு எந்த அளவு கோபம் தந்தது. இப்போது வவ்வாலின் ரோலை நீங்கள் இதில் எடுத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

பீத்தோவனின் சித்தப்பா எங்கள் ராஜா; மொசார்டுக்கு இசை சொல்லிக் கொடுத்தவர்; பாக்கிற்கு ட்யூஷன் எடுத்தவர் – இப்படியெல்லாம் ராஜாவின் ரசிகர்கள் சொல்கிறார்கள் என்பது உங்கள் குற்றச்சாட்டு. சிவாஜியைப் பற்றி நீங்கள் சொன்ன சில வாசகங்களைத் தருகிறேன். நம்மைப்போல் சிவாஜி மேல் பற்றில்லாத ஒருவருக்கு நீங்கள் சொன்னவை எப்படி பொருள் படும் என்று யோசித்துப் பாருங்களேன்.

சிவாஜி உருவானவரோ, உருவாக்கப்பட்டவரோ அல்ல,

சிவாஜிக்கு இணையாக இத்தனைப் பல்வேறு பாத்திரங்களை ஒருவரே ஏற்று நடித்த கதாநாயகர்களாகவும் அவர்கள் இல்லை.

அவர் நடிக்க ஆரம்பித்து ஒரு சில படங்களிலேயே ஒரு பரிபூரண படைப்பாளியாய் இருந்தார்.

உலகில் வேறு எந்த நடிகரைக் காட்டிலும் சிவாஜி கணேசன் நடித்த படங்களைப் பார்த்துக் கண்ணீர் விட்டு அழுத மனிதர்கள் மிக மிக அதிகம்.

வசன உச்சரிப்பில் சிவாஜியின் சாதனைக்கு ஈடு இணை கிடையாது. 

அத்தனையையும் குரலிலேயே கொண்டு வந்த மகா கலைஞன் உலகத்திரை வரலாற்றிலேயே இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். இத்தனை வித்தியாசமான தொனிகளுடன் வசனங்களை உச்சரித்த நடிகன் சிவாஜியைத் தவிர யாருமே இல்லை.

அமுதவன்,  எனக்கும் மிக மிகப் பிடிக்கும் சிவாஜியைப் பற்றி நமது ஆர்வத்தில் சொல்லும் வார்த்தைகளாகத்தான் இவை இருக்க முடியும். இதைப் பல்லைக் கடித்துக் கொண்டு எதிர்க்கும் ஆட்களுக்கும் பஞ்சம் இருக்காது என்பது தெரியாதா உங்களுக்கு?

உங்களைப் போல் இங்கே ராஜாவை விரும்புவோர் சிறிது உயர்வுபடுத்திப் பேசினால் என்ன தவறு? அவர்கள் ரசிகர்கள் - நாம் சிவாஜிக்கு இருப்பது போல்.- உயர்த்திதான் பேசுவார்கள்.

தீர்ப்பு.........

நானே ஒரு கட்சிக்காரனாகப் போயாச்சு .. இதில் என்ன தீர்ப்பு!

ஒரு எம்.ஜி.ஆர். ரசிகனையோ, ரசினி ரசிகனையோ என்னால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இவர்களையெல்லாம் எப்படிடா ரசிக்கிறாங்கன்னு தான் வருஷக் கணக்கா நினச்சிக்கிட்டு இருக்கேன். ஆனாலும் இந்த ஆளுகளுக்கு அதீத ரசிகர்கள் இருக்கிறார்கள். நிச்சயமாக இந்தப் பட்டியலில் ராஜைவைச் சேர்க்க அமுதவனும், காரிகனும் கூட சம்மதிக்க மாட்டார்கள். ராஜாவை மிக அதிகமாக நேசிப்பவர்கள் இருக்கிறார்கள் ... அதுவும் அவர்களில் பல விஷய ஞானத்தோடு இருக்கிறார்களும் என்பதும் உண்மையே.

சமீபத்தில் நண்பன் ஒருவனோடு காரில் செல்லும் போது அவன் சேமித்து வைத்திருந்ததில் Stanford Universityல் It's Different என்ற FM நிகழ்ச்சியைக் கேட்டேன். கேட்டுப் பாருங்கள். ராஜாவின் இசையை முழுக்க முழுக்க analysis செய்து, மற்ற பெரும் இசையமைப்பாளர்களோடு ஒப்பிட்டு.... மிக அருமையான நிகழ்ச்சி. இசையறிவு உள்ளவர்களுக்கு அது ஒரு உயர்ந்த விருந்து.

எனது வருத்தம் இரண்டு;
1. How to name it?, Nothing but wind போன்ற தனி இசைத்தட்டுகளை வெளியிடாமல் போய் விட்டாரே ...
2. இன்று போடும் பாடல்கள் அவரின் பழைய பாடல்கள் போல் கொஞ்சமும் இல்லையே என்ற வருத்தம் ...

ராஜா 142 ராகங்களிலோ, 846 ராகங்களிலோ பாடல்கள் அமைத்திருக்கலாம். அவர் ரசிகர்கள் அவரை ரசிக்கட்டும். முடியாதவர்கள் ஒதுங்கிக் கொண்டு, அவர்கள் ரசனையைத் தேடி செல்லட்டும்.. It is all so simple!

My reqyest:
//The perfect porn music director of the Tamil film music industry//..

—  My very sincere request: better all of you stop talking about this porno music. Who is to be condemned for this – the directors, lyricists, music directors or above all, WE, the audience? இதைப் பற்றி அப்பதிவில் பேசியது நமது தரத்திற்கு மிகவும் கீழான ஒன்று.


சொம்பை எடுத்து உள்ளே வைங்க’ப்பா ... !!

*












 *

Friday, March 07, 2014

722. பண்ணையாரும் பத்மினியும்










*




 //நம்ம தமிழ்ப்படம் எது புதுசா வந்தாலும் இயக்குனர்கள் வழக்கமா சொல்றது: இந்தப் படத்தில நீங்க எதிர்பார்க்கிற எல்லாமும் இருக்கும் - பாட்டு, டான்ஸ், குத்துப் பாட்டு, சென்டிமென்ட், காமெடி - இப்படி எல்லாம் வச்சிருக்கோம். தயவுசெஞ்சி எல்லோரும் தியேட்டருக்கு வந்து படம் பாருங்க அப்டிம்பாங்க. ஐயா, சாம்பார் செய்யும்போது சாம்பார் பொடி மட்டும்தானே போடணும்; ஸ்டாக்கில இருக்கிற பொடி எல்லாத்தையும் ஒண்ணா போடுவேன்னா, அது என்ன குழம்புன்னு சொல்றது. அதைச் சாப்பிட்டு தொலைக்க வேண்டியதிருக்கே ... (உன்ன யாரு படம் பார்க்கச் சொன்னா அப்டின்னு கேட்டுராதீக !)//

 //படம் பார்க்குறது entertainment-க்குத்தான்; அதனால் படம்னா இப்படித்தான் இருக்கணும் அப்டின்னு மேதாவித்தனமா பேசிட்டு, அந்தப் பக்கம் போய் வெள்ளைக்காரன்னா வெள்ளைக்காரந்தான்யா, எப்படி படம் எடுக்குறாய்ங்க அப்டின்னு சொல்லிட்டு போறோம்.// 

 //நம் படங்களைப் பொறுத்தவரையில் யார் பெரிய மடையர்கள்? நிச்சயமா நம்மை மடையர்களாக நினைத்து படம் எடுக்கும் நம் டைரடக்கர்களா? என்ன மசாலா கொடுத்தாலும் விசிலடிச்சி படம் பார்க்கும் நாம்தானா?//

 இதெல்லாமே பதிவுலகிறகு வந்த புதிதில் எழுதிய சில எழுத்துகள். மிக மிக மோசமான நிலை என்று நம் படங்கள் பற்றிய என் கருத்து அப்போது. சுருக்கமாகச் சொல்லணும்னா - முட்டாள்களுக்காக, முட்டாள்களால் எடுக்கப்படும் முட்டாள் தனமான படங்கள் என்பதே என் கருத்தாக ஆழமாக மனதிற்குள் பதிந்திருந்தது. இதற்கு விடிவு என்பதே வரப்போவதில்லை என்று மிகவும் ஆணித்தரமாக நினைத்தேன்.

பழைய படங்களின் பட்டியலைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு கோபமும், ஆத்திரமும் வரும். அவைகளில் 99% படங்கள் புராணப்படங்கள். இப்படி எடுக்க ஆரம்பித்ததால்  எல்லாமே மிகுந்த நாடகத் தன்மையோடு இருந்தன. நிஜ வாழ்க்கையிலிருந்து வெகு தூரம் தள்ளிப் போய்க் கொண்டிருந்த படங்களின் வளர்ச்சியும், வரலாறும் அப்படியே நின்று போனது. அதுவும் பின்னாளில் காதல் என்பதைத் தவிர படங்களின் கதைகளில் வேறு ஏதுமில்லாமல் போயிற்று. எத்தனை எத்தனையோ பிரச்சனைகள் வாழ்க்கையில். அவை ஒன்றுமே சினிமாவில் வருவதேயில்லை. சினிமா வெறும் entertainment என்ற கருத்தே இது போன்ற காதல் சினிமாக்களால் வளர்ந்து வலுப்பட்டது. ஈரான், ஜப்பான், கொரியா என்று எட்டிப் பார்த்தலே அடுத்த வழி என்றானது.

ஆனால் நல்ல வேளை ....  குறும் படங்கள் வர ஆரம்பித்த போது கொஞ்சம் நம்பிக்கை வர ஆரம்பித்தது. last train என்று ஒரு படம் மிகவும் பிடித்தது. அவர் ‘பீட்சா”வாக உருவெடுத்து விட்டார். வரிசையாக சில ‘வித்தியாசமான படங்கள்’ தொடர்ந்து வருகின்றன.

இரு நாட்களுக்கு முன் ‘பண்ணையாரும் பத்மினி’யும் பார்த்தேன். இதனைக் குறும்படமாகப் பார்த்து மிகவும் பிடித்துப் போனது. இன்று அதே கதையை நீள் படமாக எடுக்கிறார்கள் என்ற போது, அதை எப்படி இழுப்பார்கள்; இது தேவையா என்றும் நினைத்தேன். ஆனால் படம் பார்த்த போது படம் மிகவும் பிடித்துப் போனது. ஒரு சின்ன வருத்தமும் எட்டிப் பார்த்தது. நான் பார்த்த வரை இந்தப் படத்தைப் பற்றி நல்லதாக நாலு பேர் பதிவுகள் போடவில்லையோ என்று தோன்றியது.

உள்ளூர் சின்னப் பையனாக இருந்த முதல் சீனில் வரும்  அட்டக்கத்தி கதாநாயகனின் (?) முகம் இப்படக் கதாநாயகனுக்குத் தெரியாத முகமாக இருக்க முடியாதே என்று கடைசி சீனில் தோன்றியது. என்னைப் பொறுத்தவரை படத்தில் இருந்த ஒரே ஒரு ஓட்டை இது மட்டும் என்பேன். இதைத் தவிர படம் பத்மினி மாதிரி மெல்ல அழகாக சென்றது. (நானும் ஒரு ‘பத்மினி’யைச் சில காலம் வைத்திருந்தேன். அந்தப் பாசம் வேறு!!) இதுவரை எந்தப் படத்திலும் வயதான ஒரு ஜோடிகளின் அன்பை, romance-யை இவ்வளவு நேர்த்தியாக பார்த்த நினைவு சுத்தமாக இல்லை. கதாநாயகனை முதலில் காட்டும் போது வரும் சீனை parody என்று எடுத்துக் கொள்ளலாம். எங்கும், எதிலும் overdo என்பதே இல்லாமல், இயல்பான ஒரு படம். பண்ணையாரின் மகள் வீட்டைக் காண்பிக்கும் ஒரே சீனில் அவள் அப்பா வீட்டிலிருந்து ‘ஆட்டை’ போட்ட அனைத்தையும் காண்பித்திருப்பதில் இயக்குனர் யோசித்து படம் எடுத்திருக்கிறார் என்று தெரியும் போது மிக்க மகிழ்ச்சி.

வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களுக்கு என் வாழ்த்துகள். நிறைய தைரியமாக பழைய பாதைகளிலிருந்து விலக ஆரம்பித்து விட்டார்கள்.  
முட்டாள்களுக்காக, முட்டாள்களால் எடுக்கப்படும், முட்டாள் தனமான படங்கள் இனி குறைந்து விடும் என்ற நம்பிக்கை துளிர் விட்டு விட்டது.




*





Saturday, February 22, 2014

718. பாலு மகேந்திரா






*
*




எத்தனை வருஷம் ஆச்சோ .. நினைவில்லை ... ’பல்லவி அனு பல்லவி’ என்ற படம் என்று நினைக்கிறேன். படம் பார்க்க சிறிது தாமதமாகப் போனேன். படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ‘கெட்ட வார்த்தை’ வர்ர அளவிற்கு அழகான படப்பிடிப்பு பார்த்தேன். அந்தி நேரம் ஒன்றில், நீர்க் கரை அருகே இருவர் நடக்க, அவர்களின் நிழல் தண்ணீரில் தெரிய ... அடடா என்றிருந்தது. யாரடா இவன், இப்படி படம் எடுத்திருக்கிறான் என்று நினைத்து, இடைவேளையில் வெளியே வந்து ஒளிப்பதிவாளர் பெயரைப் பார்த்தேன். பாலு மகேந்திரா. ஏற்கெனவே அவரைப் பற்றித் தெரிந்திருந்ததால் ஆச்சரியம் எல்லாம் மகிழ்ச்சியாக மாறியது.

புகைப்படம் என்றால் அப்போது ரகு ராய் என்றும், சினிமா என்றால் பாலு மகேந்திரா என்றும் மாணவர்களிடம் சொல்லித் திரிந்த காலம் அது. 1985-ல் மாணவர்களோடு பெங்களூரு சென்ற போது .. அதென்ன .. லால் பார்க் என்று நினைக்கிறேன். அந்தப் பக்கம் சுற்றிக் கொண்டிருந்த போது சில மாணவர்கள் ஓடி வந்து, ‘சார்.. உங்க குரு படம் எடுத்துக்கிட்டு இருக்கிறார்’ என்றார்கள். பாலு மகேந்திரா ஏதோ ஒரு படத்திற்கு ஒளிப்பதிவாளராக படம் எடுத்துக் கொண்டிருந்தார்; காத்திருந்தோம். ஒரு ‘பிரேக்’கில் அவரிடம் சென்று சில நிமிடங்கள் பேசி விட்டு, அவரோடு என் மாணவர்களும் நானுமாய் நின்று ஒரு படம் எடுத்துக் கொண்டோம். (படம் எங்கேயோ வைத்திருக்கிறேன். இப்போது தேடி எடுக்க முடியவில்லை.  )

எல்லோரும் அவரைப் பற்றி எழுதிக் குவித்த போதெல்லாம் பல நாளாய் மனதிற்குள் இருந்து நெருடிக்கொண்டிருந்த ஒன்று மீண்டும் மீண்டும் மனதிற்குள் இருந்து எட்டிப் பார்த்தது. எனக்கு மிகவும் பிடித்த படம் யாத்ரா. அதில் இருந்த திரைக்கதை அப்படி ஒரு அழகு. ஒரே இடம். திரும்பத் திரும்ப வரும். அதன் அருகாமை நமக்குப் பிடித்து விட்டு, அதனோடு ஒன்றி விடுவோம். அழியாத கோலங்களில் டைட்டில் வரும் போது இருட்டாக முதலில் தெரிந்த ஒரு இடம் மெல்ல மெல்ல வெளிச்சம் தெரிய, ஒரு ஓடை அதன் அருகே வெள்ளைப் பூவுடனிருக்கும் நாணல் புற்கள் ... டைட்டில் எழுத்துகளை யார் பார்த்தது. எழுத்துக்களின் வழியே தெரிந்த அந்த கவிதைகளை மட்டுமே காண முடியும். இப்படியெல்லாம் அவரை ரசித்த எனக்கு எல்லோராலும் புகழப்படும் மூன்றாம் பிறை படம் மட்டும் ஒரு எரிச்சலைத் தான் தந்தது. இருந்தாலும் அதை மனதுக்குள் வைத்து இறுகப் பூட்டி வைத்திருந்தேன். ஆனால் இப்போது அவர் மறைவுக்குப் பின்னும் அந்தப் படம் பற்றிய அரிய பெரிய உண்மைகளையும், உன்னதத்தையும் பேசும் போது உள்ளிருந்த எரிச்சல் மீண்டும் தலை காட்ட .... இன்று அதை வெளியே கொட்டி விடுவோம் என்று நினைத்தேன்.

படம் நன்றாக இருந்தது. எப்போதுமே மயில் ஸ்ரீதேவி அப்டின்னா அப்போதும் இப்போதும் பிடிக்காது. இந்தப் படத்தில் அவரின் நடிப்பு ஒன்றும் பெரிதாகப் பிடிக்கவில்லை. ஒரு மன நோயாளிக்கு இப்படியெல்லாமா நடக்கும் என்ற நினைப்பு வேறு. அதனால் இப்பட்த்தின் கதாநாயகியோடு ஒட்ட முடியாது போனது. கதாநாயகனாக கமல் மிக நன்றாகச் செய்திருந்தார். தலையில் பானையைச் சுமந்து கொண்டு கதாநாயகிக்காக முதலில் கூத்தடிப்பது எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் கடைசியில் கதாநாயகி முழுமையாகக் குணமடைந்து விடுகிறாள். ரயில் ஏறிப் பயணப்படுகிறாள். கதாநாயகன் ஓடி வருகிறான். அவளிடம் பேச முயல்கிறான். அவளோ இப்போது முழுமையான குணமடைந்த சாதாரணப் பெண். அவள் முன்னால் குரங்கு போல் ஆடினால், அவள் காசுதான் தருவாள். அவளிடம் கதாநாயகன் ‘பேச’ வேண்டும். நீ எப்படி இருந்தாய்; நான் என்ன செய்தேன் என்றெல்லாம் கூறாமல் கூத்தடிதத்தைப் பார்க்கும் போது எனக்கு – கூத்தடிக்க வைத்த இயக்குனர், கூத்தடித்த நடிகர், இதை உச்சுக் கொட்டிப் பார்த்த ரசிகர்கள் என்று எல்லோர் மீதும் எரிச்சல் மட்டுமே வந்தது. அறிவுக்குப் பொருத்தமில்லாத அந்தக் காட்சியே மனதில் நின்று போனது. அப்படத்தை யாரும் பாராட்டும் போது எனக்கென்னவோ எரிச்சல் தான் மனதில் எழுந்தது. Emotional-ஆகக் காட்டவேண்டுமென்பதற்காக sensible-ஆக அதைக் காட்டக் கூடாதா?

எப்படியோ பாலு மகேந்திராவின் வீடு போன்ற படங்களின் சிறப்பும், கதை நேரங்களில் வந்த தொலைக்காட்சி படைப்புகளும் நிறைவைத் தருபவை. ஆனால் மூன்றாம் பிறையின் இறுதிக் காட்சி ....? stupid என்றே தோன்றுகிறது. ஆனால் பொதுவாக நம் ரசிகப் பெருமக்கள் இது போன்ற .... தனமான காட்சிகளுக்கு நன்றாகவே கை தட்டுகிறார்கள்.

மேலும், சில உதாரணங்கள் –

’முதல் மரியாதை’ நல்ல படம். ஆனால் ஒரு ஆணின் கட்டை விரலைத் துண்டாகக் கடித்து எடுத்து விடுவாளாம். ... அதுவும் சாவோடு தண்ணீருக்குள் போராடும் ஒரு பெண் ... கடவுளே! (இது ஒரு கதையிலிருந்து சுட்டது என்று பின்னால் சொன்னார்கள். காப்பியடிக்கும் போது கூட சரியானதை காப்பி அடிக்கக் கூடாதா?)

 ’புத்தம் புது அர்த்தங்கள்’ இப்படி ஒரு நல்ல தலைப்பு. ஆனால் கதை மகா நொண்டிக் கதை. கதை இறுதியில் காலின்றி, கோலூன்றி மிக மட்டமான மனிதன் வருகிறான்; காற்றில் கோல்கள் பறந்து விடுகின்றன. எந்த மனிதத் தன்மையில்லாத அவனை கதாநாயகி தோள் கொடுத்துத் தாங்கி .... அட போங்கப்பா ...!

‘அந்த ஏழு நாட்கள்’ – கடைசி சீனை எப்படி வைப்பது என்று மூன்று பெரும் இயக்குனர்கள் ஒன்றாக இருந்து யோசித்து ... கல்யாணம் ஆவதற்கு முன் இருந்த அந்தப் பெண் வேண்டும் என்று தாலியை மய்யமாக வைத்து கதாநாயகன் மறுத்து விடுவான். Too many directors spoil the movie என்றானது. (எங்கள் ஊரில் சந்திரபாபு திருமணத்திற்குப் பிறகு மிக நல்ல மனிதராக நடந்திருப்பதும் நினைவுக்கு வந்தது.)

இதையெல்லாம் கேட்டால் ‘படங்களில் லாஜிக் பார்க்கக் கூடாது’ன்னு சொல்லும் தமிழ்ச் சாதி ரசிகர்கள் நிறைய உண்டு நம்மைச் சுற்றி ....




*


 

717. சிநேகாவின் காதலர்கள் -- எங்கள் மதுரை

* *