Unveiled: As elsewhere in the Arab world, the expansion in communication tools has deprived the Saudi regime of the secrecy and deception its legitimacy relied. |
*
சில ஆண்டுகளுக்கு முன் செளதியில் வேலை பார்த்து பின் கனடாவிற்குக் குடியேறிய பதிவர் செளதியைப் பற்றிக் குறையாக பதிவுகள் எழுதிய போது வழக்கம் போலவே இஸ்லாமியப் பதிவர்கள் அவர் எழுதியதை வெறுத்தார்கள்; எழுதியதை மறுத்தார்கள். அந்த நாட்டில் இன்னும் அடிமைத்தனம் மாறவில்லை; இன்னும் இந்தியர்களின் பாஸ்போர்ட்டை தங்கள் பொறுப்பில் வைத்துக் கொள்கிறார்கள் என்று நான் சமீபத்தில் எழுதிய போது, நம்மவர்கள் ஏமாற்றுவதால் தானே அதனை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள் என்று இந்திய பாஸ்போர்ட்டுகளை வாங்கி வைத்துக் கொள்ளும் செளதிகளுக்கு நம்பிக்கையான பதிவர் சுவனப்பிரியன் சொன்னார். அமெரிக்கா போன்ற மற்ற நாட்டுக்காரர்களுக்கு இல்லாத இந்தச் சூழல் இந்தியர்களுக்கு மட்டும் ஏன் என்றும் அந்தப் பதிவர் சிந்திக்க மறுத்தார். அதையும் விட அவர் இஸ்லாமிய நாடுகளில் செளதியே இஸ்லாமியக் கொள்கைகளை முழுமையாகக் கையாளும் நல்ல அரசு; நாட்டை நன்கு ஆள்கிறது என்றார். நானும் இதையெல்லாம் கேட்டு அங்கு 'பாலும் தேனும் ஓடும்' என்றுதான் நினைத்தேன். ஆனால், அங்கு வேலை பார்த்த சில நண்பர்களிடம் கேட்ட போது வேறு கருத்துக்களே கிடைத்தன. மற்றவர்களுக்கு நரகம் என்பது இவர்களுக்கு சுவனமாகப் படுகிறது! (இந்த இடத்தில் வழக்கமாகப் பதிவர்கள் கேட்கும் கேள்வியை நானே கேட்டு விடுகிறேன்: நரகம் என்று நினைப்பவர்கள் ஏன் எங்கள் செளதியில் வந்து வேலை பார்க்க வேண்டும்?!!) என் மதத்துக்காரர்கள் என்பதாலோ, எனக்கு வேலை கொடுத்ததாலோ இப்படி சிலருக்கு அந்த நாட்டின் மீது பயபக்தியும், விசுவாசமும் வந்து விடுமோ என்னவோ?! 58 வயதில் இறக்கும் செளதி அரச குடும்பத்தவரைப் பற்றி எழுதும்போது கூட அதை ஒரு 'அகால மரணம்' என்று சொல்லுமளவிற்கு உள்ள பாசத்தினால் மட்டும் சிலருக்கு செளதியில் பாலும் தேனும் ஓடுகிறது என்று தோன்றுமோ?அதோடு அவரைப் போன்ற அடிப்படைவாதிகள் எப்போதும் தங்கள் மார்க்கம் பற்றி சில வழக்கமான cliche சொல்வார்களே அது போல்தான் இதுவும் என்பது இன்று இந்துவில் வந்த ஒரு கட்டுரையை வாசித்த போதுதான் புரிந்தது.
கட்டுரையின் தலைப்பு: Awaiting its spring. தலைப்பு புரிந்திருக்குமென நினைக்கிறேன். இப்போது இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் போராட்டங்களின் ஆரம்பமான எகிப்திய போராட்டத்திற்கு வைத்த பெயர்தானே spring! இதைப் போன்ற இன்னொரு spring செளதியில் நடக்கும் என்று ஒரு இஸ்லாமியர், Movement for Islamic Reform in Arabia என்ற அமைப்பின் தலைவர் Dr. Saad al-Faqih எழுதியுள்ளார். யார் பொய் சொல்லுகிறார்கள்; நம் பதிவர்களா, இல்லை இவரா?
அவர் சொல்லும் சில கருத்துகள்:
* "கடைசி மதக்குருவின் குடலை எடுத்து, கடைசி அரசனின் குரல் வளையைக் கட்டி .. முடித்து விடுங்கள்". - Denis Diderot என்ற தத்துவ ஞானியின் கூற்று. இப்போது செளதி அரேபியா என்றழைக்கப்படும் அரேபியாவில் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக இப்போது அங்கு அடிக்கடி கேட்கும் குரல் இது.
* அரேபிய போராட்டங்களுக்கான வித்து இங்கேயும் உண்டு.
* தனிப்பட்ட குற்றச் சாட்டுகள் இல்லாமலேயே லட்சக்கணக்கான அரசியல் கைதிகள் சிறையில்.
* ஊழல் மிகப் பெருமளவில் நடக்கிறது. சமீபத்திய பட்ஜெட்டில் 100 பில்லியன் டாலருக்கு கணக்கேதும் இல்லை.
* வேலையில்லாத் திண்டாட்டம் மிக அதிகம்.
* சராசரி மாத வருமானம் - எண்ணெய் பணம் குவிந்தாலும் - வெறும் 820 பவுண்டு.
* 22 விழுக்காட்டு மக்கள் ஏழ்மையில் இருக்கிறார்கள். ( ஆனால் நம் பதிவர்கள் சிலர் நம் நாட்டு மக்கள் மட்டுமே ஊழல்காரர்கள்; மக்கள் ஏழ்மையில் உழலுகிறார்கள்; எங்கே சிறுநீர் பெய்வது என்றுகூடத் தெரியாத மாக்கள் என்கிறார்கள்!)
* தகவல் தொடர்பு அதிகரித்துள்ளதால் அரசின் மீதான கசப்பு நாடெங்கும் விரைவாகப் பரவுகிறது.
* @mujtahidd என்ற டிவிட்டருக்கு 2,20,000 followers. இந்த டிவிட்டர் மூலம் அரசரைப் பற்றியும், மற்ற அரசக் குடும்பத்தினைரைப் பற்றியுமான சரியான பல தகவல்கள் பரப்பப்படுகின்றன. கேள்விகளும் கேட்கப்படுகின்றன. இவை இப்போது அந்த நாட்டில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு டிவிட்டர்.
* இந்த அழிவுகளிலிருந்து மீள வேண்டும் என்ற ஆவல் மதக் காவலர்களின் மத்தியில் தான் அதிகமாகத் தென்படுகிறது. (நம் பதிவர்களைவிடவும் அவர்கள் பெரிய அடிப்படைவாதிகளா ... என்ன?)
* ஷியாவின் போராட்டங்கள் அதிகமாக நடக்கின்றன. ஆனால் அரசு இவைகள் ஷியாவின் போராட்டங்கள் என்று பெரும்பான்மையான சன்னிகளிடம் சொல்லி சமாளிக்கிறார்கள்.
* இரு பாலருமே அடிப்படை உரிமைகள் ஏதுமின்று இருக்கிறார்கள். இதைப் பற்றிப் பேசினாலே அது மேற்கத்தியக் கலாச்சாரம் என்று கூறப்படுகிறது.
* அரசு கட்டாயம் மாறும். அதற்கான போராட்டங்கள் கட்டாயம் வரும் என்றாலும், ஊடகத்தில் பரப்பப்படும் அச்சுறுத்தல்கள் இதனைச் சிறிது தள்ளி வைத்துள்ளன.
* எதிர்ப்பாளர்களுக்குள் நிலவும் நம்பிக்கையின்மையினால் ஒத்த முனைப்பு ஏற்படவில்லை.
* ஆனால் நிச்சயம் எதிர்ப்பு வளரும். இளவரசர் Nayef மீது மரியாதை மிகக் குறைந்து போய்விட்டது. ஆனாலும், (நமது பதிவர்கள் அரச குடும்பத்தினர் மீது புகழை வாரி வழங்குவதுண்டே! More loyal than the king!!??)
* இளவரசர் மீது வழக்குகள் தொடுத்து அவரைக் கூண்டில் ஏற்ற வேண்டுமென்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
* 90 வயதாகும் அரசரின் மரணத்திற்குப் பின் இளவரசர் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமடையும்.
* மத குருமார்கள் அரசக் குடும்பத்தோடு இணைந்து செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உண்டு.
* நிச்சயம் போராட்டம் வெடித்தே தீரும் - சரியான தருணத்திற்காகவே அது காத்திருக்கிறது.
பி.கு.:
தயவு செய்து இந்தப் பதிவை வாசிப்பவர்களில் 30 -35 பேர் இப்பதிவிற்கு ஓட்டு போட்டு, இப்பதிவை தமிழ்மண முகப்புப் பக்கத்தில் சிறந்த பதிவாக "மகுடம்" சூட்டி விடாதீர்கள். அதற்கான தரமே வேறு. Please ...!
.