*
*
சில ஆண்டுகளுக்கு முன் முதுகலை மாணவர்களோடு அழகர்கோவில் மலைக்கு செய்முறை வகுப்புக்காக ஒரு பயணம். மலைமேல் வகுப்பு முடிந்து கீழே இறங்கியதும் கோவில் செல்ல மாணவர்களுக்கு சிறிது நேரம் ஒதுக்கப்பட்டது. மாணவன் ஒருவன் கோவிலில் வாங்கிய பிரசாத லட்டுகளை நண்பர்களுக்குக் கொடுக்க ஒரு கிறித்துவ மாணவி வாங்க மறுத்தார். இந்துக் கடவுளுக்குப் படைத்த பிரசாதம் சாப்பிட மாட்டேன் என்று மாணவி கூற, அதுவும் 'அந்த' மாணவி கூற மாணவர் கொஞ்சம் மனம் வெறுத்து விட்டார். விவாதம் நடந்திருக்கிறது. நானும் என் சீனியர் ஒருவரும் கோவிலை அடுத்துள்ள ஒரு மண்டபத்தில் மாணவர்களுக்காகக் காத்திருந்தோம். நான் அப்போது ஒரு 'தம்' கேசு. அதனால் இன்னும் கொஞ்சம் தள்ளி தனியாக அமர்ந்து நானும் எனது சிகரெட்டுமாக இருந்தோம். மாணவர்கள் இருவரும் எங்களிடம் வந்தார்கள். முதலில் சீனியரிடம் பையன் தர அவரும் மறுத்து விட்டார். அதன் பின் என்னிடம் வந்தார்கள்; கொடுத்தார்கள்; சாப்பிட்டேன். மாணவிக்குக் கோபம்; பையனுக்கு ஆச்சரியமும், சந்தோஷமும்.
மறுபடி விவாதம் என்னோடு. மாணவியிடம் கேட்டேன்: அந்தக் கோவிலில் உள்ளது உங்களைப் பொறுத்தவரை என்ன? கடவுளா, கல்லா என்றேன். வெறும் கல்தான் என்று மாணவி கூறினார். வெறும் ஒரு கல் முன்னால் வைத்து எடுத்தால் லட்டு என்ன ஆகும்; வெறும் லட்டாகத்தான் இருக்கும். நம்பிக்கையுள்ளவர்களுக்கு அது கடவுள்; அப்போது அவர்களுக்கு அந்த லட்டு பிரசாதமாகும். என்னைப் பொறுத்தவரை அவன் கொடுத்தது லட்டு; லட்டு எனக்குப் பிடிக்கும்; சாப்பிட்டேன் என்றேன். அந்த மாணவிக்கு மட்டுமல்ல இன்று வரையும் பல கிறித்துவர்களுக்கு இந்த விவாதம் பிடிக்காதுதான். இருப்பினும் என் எண்ணம் அதுதான். இவ்வளவுக்கும் இந்த விவாதம் நடந்த அன்று நான் ஒரு மிக நம்பிக்கையுள்ள, நடைமுறைகளை ஒழுங்காக அனுசரித்து வந்த 'நல்ல' கிறித்துவன்தான்!
A goose's sauce may be a gander's poison. எனக்கு அது லட்டு; உனக்கு அது ப்ரசாதம்னா அப்படியே வச்சுக்கோ. அத விட்டுட்டு நீயும் இதை ப்ரசாதமா நினச்சுதான் சாப்பிடணும்னு முரண்டு பிடிச்சா அது என்ன முரட்டுப் பிடிவாதம்?
பொங்கல் திருநாள் உழவர் திருநாள். உழவருக்கும், மாட்டுக்கும் நன்றி சொல்லும் நாள் என்று சொல்லிக் கொள்கிறோம். பட்டினத்து மக்கள் (நம் பதிவர்கள்) எல்லோரும் முற்றத்தில் புதுப்பானையில் வைத்து பொங்கலிட்டு, பொங்கிவரும்போது குரவையிட்டு அடுத்த நாள் மாட்டைக் குளிப்பாட்டி அலங்கரித்து ஊருக்குள் கயிறு பிடித்து அழைத்துப் போவது போல் இங்கே மக்கள் பேசுவதைப் பார்த்து ஒரு புறம் சிரிப்புதான் வருகிறது. கிராமங்களில் நடக்கும் பொங்கல் அந்த சீரோடு நடக்கிறது. பட்டணங்களில் என்ன நடக்கிறது. ஒருவர் ஒரு பின்னூட்டத்தில் சொன்னது போல் குக்கரில் அன்று காலை பொங்கல் செய்து சாப்பிட்டு விட்டு டிவி முன்னால் உட்கார்ந்து சிறப்பு பட்டிமன்றம் கேட்டுக்கிட்டு இருக்கிறதுதான் நடப்பாக இருக்கிறது.
இப்படி நடக்கும் பொங்கல் திருநாளை கேரள மக்கள் சாதி,
சமயம் என்ற எந்த வேறு பாடின்றி ஓணம் கொண்டாடுவது போல தமிழர்கள் நாமும் ஏன் பொங்கலைக் கொண்டாடக் கூடாது என்று நல்ல மனதோடு போன வருடமே சில பதிவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். ஜோவும் போன ஆண்டு ஒரு பதிவு போட்டார். அதையே இப்போது மீள் பதிவும் செய்து விட்டார். போன வருடம் இல்லாத எதிர்ப்பு இந்த ஆண்டு. ஆண்டொன்று போகப்போக பதிவர்களின் maturity, மனசு, நியாயங்கள் எல்லாம் சுருங்கி விடும் போலும்.
ஜோ தான் எப்போதும் பொங்கல் கொண்டாடுவது பற்றி எழுதிவிட்டு, இது தமிழர் பண்டிகை; இந்துப் பண்டிகை இல்லையென்று சொல்லிவிட்டாரென்று "சுத்த இந்து"க்களுக்குக் கோபம். பானையில் திருநீறு பூசுகிறார்கள்; ஆகவே இது இந்துத் திருவிழாதான் அதனால் நாங்கள் கொண்டாட மாட்டோமென்று முஸ்லீம்கள் வாதம். மதத்துக்கொரு கலர் கண்ணாடி. அதனால்தான் பார்வைகளில் இத்தனை வேறுபாடு. யார் சொன்னாலும் இது மாறவா போகிறது? ஆனால் விவாதிக்கப்படும் விஷயம் அடைத்து வைத்திருக்கும் மனக் கதவுகளைச் சற்றே திறந்தால் கூட போதும்; அதற்கும்கூட நாம் தயாரில்லை என்பதுதான் கவலைக்குறிய விஷயம்.
அணுவும் அண்டமும் பிறந்ததிலிருந்து இன்றைய ஸ்டெம் செல்கள் வரை எல்லாமே எங்கள் புத்தகத்தில் கூறப்பட்டு விட்டது என்கிறார்கள் இஸ்லாமியர். ஆனால், அது ஒரு text book level-ல் இருந்திருந்தால் நமக்கு நிறைய அறிவியல் உண்மைகள் instant - ஆக கிடைத்திருக்கும். இன்னும் nano technology, super conductivity என்று அறிவியலாளர்கள் தடுமாறிக்கொண்டிருக்க வேண்டியதிருக்காது. லட்டு லட்டாக அறிவியல் விஷயங்கள் நமக்கு readymade- ஆகக் கிடைத்திருக்கும். சரி, பொங்கலைப் பொருத்தவரை அவர்களது எதிர்ப்பு இணை வைக்கக் கூடாது என்பதுதானென்றால் பொங்கல் திருநாளை ஒரு சமூகம் சார்ந்த சமயச் சார்பற்ற விழாவாக இதைக் கொண்டாடலாமே. என் பிள்ளைகள் வளரும் வரை, கிறிஸ்துமஸுக்கு அப்பா நல்ல துணிமணிகள் வாங்கித் தருவார்கள் என்று புரிந்துகொள்ளும் வயது வரை அவர்களுக்கு தீபாவளிக்கும் புத்தாடை எடுத்ததுண்டு. பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் புதுத்துணி போட்டுக் கொண்டு, மத்தாப்பு கொளுத்திக்கொண்டு இருக்கும்போது என் பிள்ளைகள் நமக்கு இல்லையே என்று மருகக்கூடாதென்று புதுத் துணியும், மத்தாப்பும் வாங்கினேன். அவர்களும் போட்டு மகிழ்ந்தார்கள். அதனால் நான் இந்து மதத் திருவிழாவைக் கொண்டாடினேன் என்றா பொருள்? - அப்படியே கொண்டாடினாலும் தவறில்லையென்றாலும்! இன்றும் துணைவியார், பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் என்று புதுத்துணியணிந்து கிறிஸ்துமஸ் கொண்டாடும்போது நானும் புதுத்துணியோடு அவர்களோடு சேர்ந்து கொண்டாடுகிறேன். அதில் என்ன தவறு? பக்கத்து வீட்டில் இஸ்லாமியர் இருந்து பக்ரீத்துக்கு பிரியாணி செய்திருந்தால் நானும் என் வீட்டில் அன்று பிரியாணி செய்து பக்ரீத்தை 'கொண்டாடியிருப்பேன்'. அதற்காக என் கடவுளுக்கு இணையாக மற்றைய கடவுளர்களை வைத்துவிட்டேன் என்றா பொருள்? பக்கத்து வீட்டுக்காரன் சிரித்து மகிழ்ந்திருக்கும்போது நானும் சிரித்து அவனோடு சந்தோஷமாக இருப்பதுதான் மனித நேயம் என்பது. அதை விட்டு நான் 'தேமே' என்று மூஞ்சைத் தூக்கி வைத்துக் கொண்டு இருப்பதுவா சகோதரத்துவம். தமிழர் திருநாள், உழவர் திருநாள் என்ற பெயரில் இந்துக்கள் பானைக்குப் பொட்டிட்டு, நீறிட்டு அவர்கள் சாமியை துணைக்கழைத்துக் கொண்டாடினால், மற்றவர்கள் அவர்கள் சாமியை நினைத்தோ, இல்லை சாமித் தொடர்பே இல்லாமலோ இப்பண்டிகையைக் கொண்டாடுவதில் என்ன தவறு இருக்க முடியும்.
பழையபடி மேற்சொன்ன பழமொழிக்கே வருவோம்: A goose's sauce may be a gander's poison. ஆனால் நம் இஸ்லாமிய நண்பர்களைப் பொருத்தவரை one goose's sauce becomes poison to another goose. நம் பக்கத்து மாநிலத்தில் ஓணம் பண்டிகையை - அது முழுக்க முழுக்க இந்து புராணம் தொடர்பான ஒரு பண்டிகையாக இருந்தும் - இஸ்லாமியர்கள் (அந்த மாநிலத்தில் அவர்களின் விழுக்காடு அதிகம், இருப்பினும் ..) அதை மாநில விழாவாக, சமயச் சார்பற்ற விழாவாகக் கருத முடியும்போது ஏன் நம் மாநில இஸ்லாமியர்களால் அது முடியவில்லை? இருவருக்கும் நம்பிக்கைகளும், புத்தகமும் ஒன்றுதானே? அவர்களுக்குள்ள விசாலப் பார்வை நம் நண்பர்களுக்கு ஏனில்லை? இவ்வளவுக்கும் பொங்கல் பண்டிகையைப் பொருத்தவரையிலும் ஓணம் போலவோ, தீபாவளி போலவோ எந்த வித புராண அடிப்படையும் இல்லாத திருவிழா.
பொங்கல் இந்துப் பண்டிகை அல்ல; ஒரு தமிழர் திருநாள் என்று சொன்னதற்காக 'சுத்த இந்துக்கள்' சிலர் வரிந்து கட்டிக் கொண்டு வந்திருக்கிறார்கள். போன வருடம் இந்த அளவுக்கு 'வரிந்து கட்டல்' இல்லை. நியூட்டனின் கோட்பாடு செயலாக்கப் படுகிறது போலும்!
நம் நாட்டிலேயே பல வேறு பெயர்களில் இந்தப் பண்டிகை கொண்டாடப் படுகிறது; அதுவும் இந்து சமயத் தொடர்போடு என்கிறார்கள். ஆனால் பல நாடுகளில் அறுவடைத் திருநாளாக கொண்டாடப்படுவதே இப்பொங்கல் திருநாள். யூதர்கள் கொண்டாடும் பண்டிகையின் பெயர்: சுக்கோத் என்கிறார்கள். (//அதை யூதப் பண்டிகை இல்லை அல்ல என்று எவனாவது சொன்னால் செருப்படி கிடைக்குமாம்.//! நான் சொல்லவில்லை அப்படி...) ஒன்று தெரிகிறது; இந்த வகைப் பண்டிகைகள் உலகம் முழுக்க ஏதோ ஒரு பெயரில் கொண்டாடப்படுகின்ற ஒரு விஷயம் என்று. அதைச் சிலர் சமயச் சார்புள்ளதாகவோ இல்லை சமுதாயச் சார்பாகவோ கொண்டாடுகிறார்கள். ஒரு நாடு; ஒரு மதம் என்றிருக்கும் நாடுகளில் (உதா: இஸ்ரேல்!) அது எப்படியிருந்தாலும் அதனால் எந்தப் பிரச்சனையுமில்லை; ஆனால் பலகோடி மக்கள், பல் வேறு சமயங்கள்; பல்வேறு சமுதாயக் கூறுகள்; பல்வேறு மொழி, கலாச்சாரம்; பல்வேறு சாதிக் கட்டமைப்புகள் என்றிருக்கும் நம் திருநாட்டில் அந்த ஒரு முனைப்பு இருக்க முடியாது; தேவையுமில்லை. ஒரு மாநிலத்தில் கொண்டாடுவது போலவே எல்லா மாநிலங்களும் கொண்டாட வேண்டும் என்ற விதியுமில்லை. அதோடு நம் மாநிலத்தைப் பொருத்தவரை இந்த பொங்கல் விழாவுக்கு இந்துப் புராணங்களோடு எத்தொடர்பும் கிடையாது - வலிந்து இனி ஏதும் உருவாக்கினாலொழிய..! பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட பிள்ளையார் சதுர்த்தி நாடு முழுவதும் ஒரே மாதிரியாகவா கொண்டாடி வந்தோம்? ஒரு incursion நடந்தேறவில்லையா கடந்த சில ஆண்டுகளில். இப்போதும் அதே போல நாடு முழுவதும் ஒரே மாதிரியாக ( இதற்கு bracket போடுவது என்று ஒரு பெயர் வைக்கலாமென நினைக்கின்றேன் ) பொங்கல் திருநாளைப் பொதுவாக்கி - அதை இந்துச் சமயத்தின் விழாவாக முழுமையாக மாற்ற - எடுக்கப்படும் முயற்சியாகவே இதைப் பார்க்கிறேன். நாம் எல்லோரும் ஒரு மதம்; நம் நல்ல நாட்கள் எல்லாமே இந்து மத திருநாட்கள் என்பதாகக் கொண்டு வரும் முயற்சியாகவே இதைப் பார்க்கிறேன். இந்த முயற்சி எடுப்போரைப் பார்க்கும்போது வரும் எண்ணம்தான் இது. விநாயகர் சதுர்த்தியில் பெற்ற வெற்றி அவர்களை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர வைக்கிறது. இது நல்லதா; தேவையா என்பதற்குப் பதில் ... ?
பொங்கலை எல்லோருமாக ஒரு சமுதாயத் திருநாளாகக் கொண்டாடுவோம் என்று குரல் எழுப்புவர்களும் "இந்துக்களே"; இல்லை ... இல்லை.. இது இந்துத் திருவிழா என்று சொல்பவர்களும் "இந்துக்களே". ஏற்கெனவே சொன்னது போல இந்த இரு இந்துக் குரல்களும் யாரிடமிருந்து எழுகின்றன; ஏன் இப்படி அவர்களிடமிருந்து இரு வேறு பட்ட குரல்கள் என்பதற்குப் பதில் இங்கு தேவையா என்ன? உள்ளங்கைப் புண்... பின் எதற்குக் கண்ணாடி?
இந்துக்களல்லாத தமிழர்கள் பொங்கலை ஒருமித்து அதை ஒரு சமுதாயப் பெரு விழாவாகக் கொண்டாடப் போகிறார்களா, இல்லை அதையும் விநாயகர் சதுர்த்தி போல் ஆக்கி, பொங்கலையும் ஒரு pan-indian / pan-hindu festival என்று ஆக்குவதற்கான முயற்சிக்குத் துணை போகப் போகிறார்களா என்று இன்னும் ஒரு சில ஆண்டுகளில் தெரிந்துவிடும் என்றே நினைக்கிறேன். இளைஞர்களே ! எழுமின்; விழிமின்! ....
*
பி.கு.
பின்னூட்டங்களில் என்னைக் கண்டிப்பவர்கள் / என் கருத்தை எதிர்ப்பவர்கள் தயவு செய்து 'மிஷ நரித்தனம்', 'ஆபிரஹாமிய சூழ்ச்சி' போன்ற சொல்லாடல்களைத் தவிர்த்தால் தன்யனாவேன்...
*
*