ஆனால், கல்கத்தா - தில்லி பயணம், அம்மாடியோவ் மறக்க முடியுமா, என்ன? எல்லாமே மிக நன்றாக நினைவில் இருக்கிறது. அப்போதெல்லாம் ரயில் பயணங்களில் ரிசர்வேஷன் எவ்வளவு தூரம் நடந்தது என்றெல்லாம் எனக்குத் தெரியாது; ஏனென்றால், அப்படி ரிசர்வ் செய்து போன பயணங்கள் மிகக் குறைவாகவே இருக்கும். அதே நினைப்பில் தில்லி செல்ல ஓப்பன் டிக்கெட் வாங்கிக்கொண்டு தில்லிக்குக் கிளம்பினேன். ரயில் எண் ஒன்று என்றும், பெயர் 'கல்க்கா மெயில்' என்றும் ஞாபகம். ரயில் புறப்பட அரைமணி இருக்கும்போது பிளாட்பாரம் நுழைந்தேன். எல்லா கம்பார்ட்மெண்டும் ரிசர்வ்டு என்று போட்டிருந்தது. தேடி தேடிப் பார்த்து ஒரே ஒரு ஜெனரல் கம்பார்ட்மெண்ட் மட்டுமே இருந்ததைக் கண்டு பிடித்தேன். ஆனால், அங்கே பயங்கர கூட்டம். அதுவும் எல்லாருமே சிப்பாய்கள்; சிலர் குடும்பத்தோடு. வெளியே மொத்தம் 72 பயணிகள் என்று வழக்கமாகப் போட்டிருக்குமே அதற்குக் கீழ் 70 சிப்பாய்களுக்கு என்றொரு பேப்பர் ஒட்டியிருந்தது. ஆஹா, இன்னும் 5 பேர் ஏறலாமே என்று புத்திசாலித்தனமாக கணக்குப்போட்டு உள்ளே ஏறினேன். அதுவும் எப்படி? நடைபாதை முழுவதும் லக்கேஜ். சொன்னால் நம்பமாட்டீர்கள். மேல்கூறை வரை ஏறத்தாழ லக்கேஜ். சிப்பாய் மாதிரியே நான் அவை மேலே ஏறி, crawl பண்ணி அந்தப்பக்கம் வந்து சேர்ந்தேன். வேர்வையில் சட்டை நனைந்துதான் அதுவரை பார்த்திருக்கிறேன். அன்று எனக்கு சட்டை, பேண்ட் எல்லாமே நனைந்து ஒரு வழியாக வெற்றிவீரனாக உள்ளே நுழைந்தேன். நிற்கவும் இடமில்லை. எல்லோரும் என்னைப்பார்த்த பார்வை நன்றாக இல்லை. ஹும்..நானா அதையெல்லாம் கண்டுகொள்கிறவன்!
வண்டி கிளம்ப ஒரு 5 நிமிடம் இருக்கும்போது யாரோ சிலர் என்னைப்பார்த்து ஏதோ அவர்களுக்குள் பேசுவதுபோல் தெரிந்தது. வெளியில் நின்று கொண்டிருந்த ஒருவர் என்னைப்பார்த்து ஏதோ கேட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எனக்குத் தெரிந்த ஒரே இந்தியை எடுத்து விட்டேன்: 'இந்தி நஹி மாலும்' என்று. 'I.D. Card' என்று கேட்டார். சிப்பாய் இல்லைன்னா இறங்கு என்பது மாதிரி ஏதோ சொன்னார். எப்படி நம்மை சிவிலியன் என்று கண்டுபிடித்திருப்பார் என்பது பின்புதான் புரிந்தது. எல்லோரும் ஒட்ட முடி வெட்டியிருந்தார்கள். நானோ அப்போதிருந்த ஸ்டைலில் காதுக்குக் கீழே ஒரு இன்ச் வரை கிருதா வைத்திருந்தேன். ( உங்கள் அப்பா-அம்மா கல்யாண போட்டோ பாருங்களேன்!) I should have been standing out like a sore thumb among them.
ஒழுங்கா பதில் சொல்லியிருக்கலாம். நானோ சட்டம் பேசினேன். அவர்களுக்குப் புரியவேண்டுமென்பதற்காக 'உடைந்த ஆங்கிலத்தில்' (இல்லாட்டாலும் என்ன வாழப்போகுது!) கணக்குப்பாடம் எடுத்தேன். 70 உங்களுக்கு; மீதி 5 சிவிலியன்களுக்கு என்று. வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தவர் ஏதோ சொன்னார். எனக்குச் சிறிது தள்ளி நின்று கொண்டிருந்த ஒரு சிப்பாய் - நல்ல முரட்டு கேசு - என்னை நோக்கித் தூக்கிய கைகளோடு அடிக்க பாய்ந்து வந்தார். 'முடிஞ்சிச்சு கதை'ன்னு நினைச்சேன்.
சரி, நம்ம கதை இப்படி ஓட்ற வண்டியிலதான் முடியணும்னு தலைவிதி இருந்தா என்ன பண்ண முடியும்னு நினைச்சேன். நல்ல வேளை, பாய்ந்து வந்த மனுஷன் கால் எதுலயோ மாட்டிக்கிச்சு. ஆனா, நல்லாவே கொலைவெறி இருந்துச்சு அந்த ஆளு மூஞ்சில. அதுக்குள்ள என் பக்கத்தில இருந்த ஒரு நல்ல மனுஷன் - அந்த ஏரியாவிலேயே ஆங்கிலம் தெரிந்த ஒரே மனுஷன் போலும் - 'Better you get down; you cannot travel with these ruffians', என்றார். சரி என்று சொல்லிவிட்டு, என் சின்ன பெட்டியை எடுத்துக்கிட்டு இறங்க முயன்றேன். என் முன்னால் தொபுக்கடீரென்று ஒரு பெண்ணும், ஆணும் அந்த நடைபாதை 'ல்க்கேஜ் மலை'மேலிருந்து குதித்தார்கள்; எல்லாம் மிலிட்டரி ஆட்கள்தான். அவர்களுக்கு வழி விட்டுக்கொண்டிருக்குபோதே வண்டி புறப்பட்டிருச்சி. என்னிடம் ஆங்கிலத்தில் பேசியவரிடம் 'இப்போது என்ன செய்வது' என்ற பொருளில் பார்த்தேன். ஆபத்பாந்தவன், அனாதை ரட்சகன் மாதிரி அவர் அங்கு இருந்தவர்களிடம், அதிலும் என்னிடம் I.D.Card கேட்ட நபரிடம் ஏதோ பரிந்து பேச, ஒரு வழியாக எனது உயிருக்கு ஆபத்தில்லாமல் ஆனது.
இந்த நிகழ்ச்சியில் நான் தப்பித்தது எவ்வளவு பெரிய விதயம் என்பது எனக்கு எப்போது தெரிந்தது தெரியுமா? இப்போது ஓரிரு மாதங்களுக்கு முன்புதான். இதுபோல நடந்த ரகளையில் வட இந்தியாவில் ராணுவ வீரர்கள் சக பயணிகளை வண்டியிலிருந்து வெளியே தள்ளிக் கொன்றுவிட்டதாக ஒரு முறை அல்ல, இரு முறை வந்த நாளிதழ் செய்திகளைப் படித்த போதே, அப்போது எனக்கு ஆயுசு கெட்டியாக இருந்திருக்கிறது என்று புரிந்து கொண்டேன்.
'அப்போ உனக்கு இந்தி தெரிந்திருந்தால்...'- அப்டின்னு யாராவது பின்னூட்டம் இடணும்னு இந்த இடத்தில நினைச்சிருந்தீங்கன்னா, அவங்களுக்கு ஒரு சேதி: அப்படி இந்தியும் தெரிந்திருந்து நான் இந்தியில் பேசியிருந்தால், ஒண்ணு நான் பேசிய இந்திக்காகவே அடிச்சு கொன்னிருக்கலாம்; அல்லது, இந்தி தெரிந்த காரணத்தால் நான் அதிகமா பேசி நல்லா வாங்கிக் கட்டியிருக்கலாம். நல்ல வேளை, இந்தி தெரியாததால் அந்த நல்ல மனிதர் ஒருவர் உதவியுடன் பிழைத்தேன். அவர் பெயரை மறந்து விட்டேன். அஸ்ஸாம்காரர் என்பது மட்டுமே நினைவிலிருக்கிறது.
அதன் பிறகு இரண்டு மூன்று மணி நேரத்திற்கு நான் ஒரு கொக்காக மாறிவிட்டேன். அதாவது, நின்ற இடத்தில் ஒரே ஒரு கால் வைப்பதற்கு மட்டுமே இடம் கிடைத்தது. இன்னொரு காலை பக்கத்தில் உள்ள பெட்டியில் முழுவதுமாகக் கூட வைப்பதற்கு முடியாதபடி அதிலும் ஆட்கள் உட்கார்ந்திருந்தார்கள். பெட்டியில் கால் வைக்கிறேன் என்று அவர்கள் மேல் பட்டுவிட்டால் என்ன செய்வது. ஆக முழுசாக ஒரு கால் தரையிலும், இன்னொரு கால் அவ்வப்போது அங்கங்கே என்று, கால் மாற்றி மாற்றி நின்றாடும் தெய்வமாகி விட்டேன். மேலே லக்கேஜ் வைக்கும் இடத்தில் லக்கேஜ்களோடு ஆட்களும் படுத்திருந்தார்கள். என்ன ஆயிற்றோ, என் பக்கத்திலிருந்த மேல் தடுப்பில் படுத்திருந்தவர்களுக்கு என்னைப் பார்த்து திடீரென ஒரு பரிதாபம் ஏற்பட்டது போலும். மேலே அவர்களுக்குப் பக்கத்தில் உட்காரச் சொல்லி இடம் கொடுத்தார்கள். அவர்களே 'S' மாதிரி படுத்திருந்தார்கள். அந்த S-ல் உள்ள மேல் வளைவு இருக்குமே, அந்த இடம்தான் எனக்கு ஒதுக்கப்பட்டது. 'புட்டம்' என்றெல்லாம் எழுதினால் கெட்டவார்த்தை என்று நினக்க மாட்டீர்களே? எழுதிதான் ஆகவேண்டியதுள்ளது. அப்பாடா, கால் வலி போகும் என்ற நினைப்பில் மேலே சென்றால், அங்கே கிடைத்த இடத்தில் ஒரு சைடு புட்டம் மட்டும் வைக்கவே இடம் கிடைத்தது. இன்னொன்று வெளியே - இப்போவெல்லாம் ஆட்டோவில் சைடில் உட்கார்ந்து டபுள் புட்டம் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருக்குமே அது மாதிரி. பாலன்ஸ் செய்வதற்காக எதிரில் படுத்திருந்தவர் மேல் கால் படாதவாறு எதிர்த்தட்டில் காலை ஒரு மாதிரியாக வைத்துக்கொண்டு மேலும் சில மணி நேரங்கள்.அவ்வப்போது புட்டங்கள் மாற்றி..மாற்றி... எங்கேயாவது கிராஸிங் அது இது என்று வண்டி நிற்கும்போது மக்கள் எல்லோரும் இறங்குவார்களே அப்போது நாமும் இறங்கி நம்ம 'வேலை'யெல்லாம் முடிச்சுக்கணும். மண் சட்டியில் டீ கொடுத்ததில் ஒரு நல்ல பலன் இருந்தது - நம்ம குடிக்கிற சார்மினாருக்கு ash trayக்கு வேற எங்கு போறது. சாம்பலை நாம கீழே தட்ட, அது கீழே இருப்பவர்மேல் பட, அவர் அதற்குப்பிறகு நம்மளைத் தட்டும்படியாகி விடக்கூடாதே. சார்மினார் இன்னொரு உதவி செய்தது. மேலே படுத்திருந்ததில் ஒருவருக்கு ஓசி 'தம்' கொடுத்ததில் அவர் இரக்கமாகி, நட்பாகி ஒன்றரை பிட்டத்திற்கு இடம் கொடுத்தார்.
அதுபோல அலகாபாத்திற்கு முன்பே ஏதோ கிராஸிங் என்று நெடு நேரம் வண்டி நின்றபோது break of journey பற்றி அந்த அஸ்ஸாம் நண்பர் சொல்லி, சரி, போதுமடா சாமி இந்த 'மிலிட்டரி பயணம்'என்று முடிவெடுத்து, அலகாபாத் வந்ததும் அந்த அஸ்ஸாமிய நண்பருக்கும், மேலே இடம் கொடுத்த இரு சிப்பாய்களிடமும், கடைசி வரை என்னை முறைத்துக் கொண்டேயிருந்த என்னை கல்கத்தாவில் அடிக்க வந்த ஆளிடமும் சொல்லிவிட்டு அலகாபாத்தில் இறங்கினேன். வைப்பு அறையில் பெட்டி வைக்கப்போகும்போதுதான் அது கட்டாயம் பூட்டி வைக்கப்படவேண்டும் என்பது தெரிந்தது. பெட்டியோடு வெளியே வந்தேன். பூட்டு வாங்க கடை தேடி இருநூறு, முன்னூறு மீட்டர் தூரம் நடந்து ஒரு கடையைக் கண்டுபிடித்தேன். பூட்டுக்கு யாருக்கு இந்தி தெரியும். நமக்குத்தெரிந்ததெல்லாம் இந்தி சினிமா பார்த்து, பார்த்து - துனியா, பியார், ப்ரேம், பக்ளி, தோ ஆங்கேன் (அதிலும் 'பாரா ஹாத்' அப்டின்னா என்னன்னு அப்போ தெரியாது), மக்ளப், ...இன்னபிற சொற்கள்தான் தெரியும். ஒண்ணு ரெண்டுகூட 'பாஞ்ச்' வரைதான் தெரியும். (இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் உதார் காட்னியே..இப்ப சொல்லு, இந்தி படிக்கணுமா..வேண்டாமா...அய்யோ, யாரு சார் பின்னாலிருந்து கையை முறுக்கிறது?) ஒரு வழியா ஒரு கடை கண்டு பிடிச்சேன். அங்க அந்தக்கடைக்காரர் நமக்கு இப்போ பின்னூட்டமிடுறவங்க மாதிரியே தகராறு பண்ணினார். நான் ஆங்கிலத்தில் கேட்க, அவர் இந்தியில் பதில் சொல்ல, நான் நமது வழக்கமான 'இந்தி நை மாலும்' என்று சொல்ல, 'ஆ, மேரே ராஷ்ட்ற பாஷா...' அப்படிங்க, ஒரு அஞ்சோ பத்தோ ரூபாய் நோட்டைக் கையில் கொடுத்து, 'ஸ்மால் டைகர் லாக் ஹை' என்றேன். கொடுத்த பூட்டில் ஒன்றை நான் எடுக்க, அவர் கொடுத்த மீதியை நல்ல பிள்ளையாய் பையில் போட்டுக்கொண்டு திரும்பினேன். கல்கத்தாவில் நடந்த கலாட்டாவில் இதற்கு முன்பு ஒரு முறை கேட்டது. அடுத்ததாக இந்தக் கடைக்காரர் ' தும் மதராஸி ஹை?' என்று ஒரு துவேஷத்தோடு கேட்டார். அதன் பிறகு இந்த வார்த்தைகளை அடிக்கடி கேட்கும் நிலை நிறைய தடவை வந்தது. Contemptuous toneல் வரும் அந்தக் கேள்விக்கு நான் வழக்கமாகத் தரும் பதில்: 'So what ?' என்பதே.
ரயில் நிலையத்தில் வைப்பு அறையில் பெட்டியை வைத்து விட்டு, ஒரு குளிப்பு போடலாமென இடம் தேடலானேன். ரயில் நிலைய ரெஸ்ட் ரூம் போகலாமாவென நினைத்துக் கொண்டிருக்கும்போது பிளாட்பாரத்தின் கடைசியில் பீச்சி அடிக்கும் பெரிய குழாயிலிருந்து தண்ணீர் அருவியாய் கொட்டிக்கொண்டிருக்க, நிறைய பேர் குளித்துக்கொண்டிருந்தார்கள். அங்கே குளிக்கலாமேவென அருகே சென்றேன். ஆஹா, 'காதில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது'. குளித்துக்கொண்டிருந்த கூட்டம் எல்லாம் அப்படியே நம்ம தமிழ்க் கூட்டம். தமிழ் கேட்டு, பேசி மூன்று நான்கு நாளாயிருக்கும். எல்லாம் நெல்லைத் தமிழ். கேட்க கேட்க தனி சுகம். கொஞ்சம் கேட்டுக் கொண்டிருந்தேன். பிறகு அருகில் போய் 'அண்ணே, நானும் கொஞ்சம் குளிச்சுக்கட்டுமா?' என்று கேட்டதும் ஒரு நிமிஷம் நிசப்தம். அவர்கள் எதிர்பார்க்காத இடத்தில் தமிழ் கேட்டதும் அவர்களுக்கு அப்படி ஒரு வியப்பு. 'டேய், தம்பி குளிக்க இடம் கொடுங்கடா' என்று அதன் தலைவர் கட்டளையிட ராஜ குளிப்பு ஒண்ணு போட்டேன். தமிழ் கேட்டதில் பாதி அலுப்பும், தண்ணி பட்டதில் மீதிப் பாதி அலுப்பும் ஓடியே போச்சு.
அடுத்த ட்ரெயின் பிடிச்சு சாவதானமா தில்லி பயணமானேன்.
அந்தப் பயணத்தின் இறுதிக்கட்டம். தில்லிக்கு நெருங்கி வந்து கொண்டிருக்கும்போது கூடவே பயணம் செய்த ஒருவர் - இந்தி, தமிழ், ஆங்கிலம் தெரிந்த தெலுங்கர் ஒருவர் கொஞ்சம் பயம் காட்டிவிட்டார். தில்லியில் இந்தி தெரியாமல், தனியாகத் தங்குவதில் உள்ள பாதகங்களை விவரிக்க ஆரம்பித்துவிட்டார். சரி, என்று ஒருவாராக மனதைத் திடப்படுத்திக்கொண்டு ஸ்டேஷனைவிட்டு வெளியே வந்தேன். சிறு தூறல் விழுந்துகொண்டு இருந்தது. வெளியே வந்ததும் பெரிய அதிர்ச்சி. கோட்டு, பேண்ட் எல்லாம் போட்டுக்கொண்டு ஒருவர் குதிரைக்கு லாடம் அடித்துக்கொண்டிருந்தார். நமக்கு அப்பல்லாம் கோட்டு, சூட்டுன்னாலே ஒண்ணு பெரிய ஆபிசர், அல்லது கல்யாண மாப்பிள்ளை இதுதான் ஞாபகத்திற்கு வரும்; இங்க என்னடான்னா...! அதுக்குப் பிறகுதான் ஞானம் பிறந்தது. இங்க குளிருக்கு எல்லாருமே இது மாதிரி போடற விஷயம்தான்னு. இதுக்குள்ள இன்னொரு ஆசை வந்திருச்சி. நல்லதா ஒரு காஃபி குடிக்கணும்னு. ஒரே 'சாயா'வா குடிச்சி, குடிச்சி காஃபி நினப்பு வந்து ரொம்பவே வாட்டிடிச்சி - இடை மெலிஞ்சு பசலை வராத குறைதான். முதல்ல ஒரு காஃபி; அதுக்குப்பிறகுதான் மற்ற எல்லாம்னு முடிவு பண்ணினேன். நானும் கஜினி மாதிரி ஒவ்வொரு கடையா ஏறி இறங்கினேன். ஒரு ஹோட்டலிலும் காஃபி இல்லை. உடம்பு அலுத்துப்போச்சு. கடைசியா ஒரு ஹோட்டல் கொஞ்சம் பெரிசாவே இருந்தது. கிடச்சா பாப்போம்; அல்லது கெடச்சதைக் குடிப்போம்னு நுழைஞ்சேன். வழக்கமான கேள்விக்கு வழக்கமான பதில் கிடைத்தது. ஆனாலும் ';சாயா' குடிக்க மனசே வரல. வேற என்னன்னு கேட்டேன். என்னமோ 'லஸ்ஸி' என்றார். கொடுங்கள் என்றேன். குடிச்ச பிறகுதான் தெரிந்தது அது மோர் + சீனி என்று. அதில என்ன விசேஷம்னா, அதுவரை லஸ்ஸி என்னான்னு தெரியாது. அநேகமா இந்தப் பக்கம் - நம்ம மாநிலம் பற்றி சொல்றேன் - அது அப்போ இருந்தது மாதிரி தெரியலை. (உங்க ஊரு மதுரயில இருந்திருக்காதுன்னு சொல்லுப்பா..). அது என்னமோ, நம்ம மாநிலத்தில அப்படி ஒண்ணு இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.
அதுக்குப்பிறகு கொஞ்சம் பயமுறுத்தாததா ஒரு லாட்ஜ் பார்த்து 'குடியேறி' அடுத்த நாள் ஊர் சுற்றிப்பார்க்க அரசாங்க டூரிஸ்ட் பஸ்ஸில் ஏறின பிறகுதான் அடுத்த adventure.
to be continued...
8 comments:
பெரிய எழுத்தாளர் ஆகுற அறிகுறி தெரியுது!
நல்ல இடத்துலே 'தொடரும்' போட்டதைச் சொல்றேன்:-)
ஓ! இப்பதான் அறிகுறியே தெரியுதா? நான் ஆயிட்டதாகவே அல்லவா நினைச்சிக்கிட்டு இருக்கேன். என்னங்க நீங்க...!
நீங்கள் குறிப்பிட்ட hairstyle சிரிப்பை வரவழைத்தது :)
On this day, my birthday
As for myself, I celebrated this morning at breakfast with the family since I have a dinner with clients tonight.
I really like your blog and will come back often.
We have a autocad drafting services related site ourselves an would very much like you to browse it and see what we have to say about autocad drafting services.
"20 varusathula andha mudi ellam enga poochu saar?"
அவ்வை, விதயம் தெரியாதா? 'god created some heads beautiful; and for the rest he covered with hair' - என்ற உண்மை தெரிந்ததும் நானும் 'அழகாக' மாறிவிட்டேன்!
Voice on Wings - நன்றி
:-)))))))))))))))))))
ம்... அப்புறம்?
என்ன ஒய்யாரே...இதான வேணாங்கிறது...
துளசி, உங்க அடக்கமுடியா ஆர்வத்தை யாம் மெச்சினோம். இருப்பினும் 'இந்த மாதிரி' நல்ல விதயங்களுக்கு கொஞ்சம் காத்திருந்தா தப்பே இல்ல!!
Post a Comment