Saturday, February 21, 2009

295. நான் கடவுள் - 2

முந்திய பதிவு:'நான் கடவுள்' படம் பார்த்தேன்.


*

எல்லோரும் அக்கு வேறு ஆணி வேறு என்று அலசிக் காயப்போட்ட விஷயங்களைத் திருப்பித் திருப்பி சொல்ல வேண்டியதிருக்கலாமென்ற காரணத்தாலேயே இந்தப் படம் பற்றி எழுதுவதைத் தவிர்த்து விடலாமென நினைத்தாலும் .. 'தோள்கள் தினவெடுப்பதைத்' தவிர்க்க முடியாததாலும், எழுதியே ஆக வேண்டும் என்ற நினைப்பை இன்னும் தள்ளிப் போட முடியாதென்பதாலும் .. இதோ --

*

என்னைப் பொறுத்தவரை தமிழ்ப்பட இயக்குனர்களில் பாலாவுக்கு ஒரு தனியிடம். பாலா தனக்கென ஒரு பாதை அமைத்துக் கொண்டு வெற்றி நடை நடந்துகொண்டிருக்கிறார். பேசாப் பொருளை யாரும் முயலாத முறையில் பேசத் துணிந்து தொடர்கிறார். அவர் மீது நம்பிக்கை வைக்கும் அளவிற்கு, நான் 'நான் கடவுள்' பார்த்த இரண்டாம் நாள் படம் பார்க்க வந்திருந்த இளம் வயதினர் மீதும் நம்பிக்கை வைத்துள்ளேன். பாலாவின் வரவும் வெற்றியுமே, வேறு சில இளம் இயக்குனர்களை தமிழ் மக்கள்மீது நம்பிக்கையோடு புதிய தளம் காண வழிநடத்துவதாகவும் முழுதாக நம்புகிறேன்.

*

காசியில் நடந்த படப்பிடிப்பு, பிச்சைக்காரர்கள் பற்றிய செய்திகள், மூன்றாண்டு படப்பிடிப்பு, ஆர்யாவின், பூஜாவின் அசத்தலான ஸ்டில்கள் – இப்படி எத்தனையோ. படம் பார்க்க ஆரம்பித்தபோது, ஏதோ நானே என் கைக்காசு போட்டு படம் எடுத்துவிட்டு, படம் என்னாகுமோ என்று பதை பதைப்போடு இருப்பதுபோல் இருந்தது.

*

காசிக் காட்சிகளின் பிரமிப்புகளோடு ஆரம்பித்தது மிக நன்றாயிருந்தது. சுடலை நெருப்பின் சூடு நம்மையே தகித்தது. ஒளி விளையாட்டும், இசையும், ஆர்யாவின் macho தன்மையும் பிரமிப்பைக் கொடுத்தன. நம் பதிவுலக மொழியில்,அந்தக் காட்சிகள் தமிழ்ப் படங்களை அடுத்த நிலைக்கு நகர்த்திச் சென்றன. ருத்ரனின் தந்தை காசி சாமியாரின் காலில் விழுந்து அழும்போது காமிராவிற்காக முகத்தைத் திருப்பி அழுவது மட்டும் நெருடியது. அந்த ருத்ரனின் குருவாக தாடிமீசையோடு ஒருவர் வருகிறாரே அவரைப் பார்த்து அசந்தேன். என்ன அழகு அந்த தாடி மீசையில் இருந்ததோ அதே அளவு கம்பீரமும், களையையும் பார்த்தேன். நல்ல முகம். ருத்ரனின் ஒவ்வொரு still-ம் அங்க அசைவும் அசத்தின.

*

அடுத்து, அழுது அரற்றும் தாய், அவளோடு மோதும் ருத்ரனின் ரெளத்ரம், உடுக்கை ஒலி - இப்பகுதியில், கங்கை ஆற்றங்கரை சுடலை நெருப்பின் சூடு இன்னும் தகித்தது. சித்தரின் வார்த்தைகளால் தாயை விரட்டும் ருத்ரனின் பற்றற்ற நிலை, தாயின் கையறு நிலை எல்லாமே சிறப்பாயிருந்தது. தாய் அணிந்திருந்த உடை, நடிப்பு --ஒவ்வொன்றும் இயக்குனரின் சிரத்தையைக் காட்டியது.

*

இதன்பின், படத்தின் மற்றொரு பக்கம் திறக்கிறது. புதிய பக்கம் - நம் எல்லோருக்குமே. அந்த அநாதைகளை அடைத்து வைத்திருப்பதாகக் காட்டும் இடம், அது உண்மையான ஓர் இடமா இல்லை செயற்கையாக, படத்திற்காகச் செய்ததா?! அதற்குள் முதன் முதல் காமிராவோடு நாம் பயணிக்கும் பயணம் .. அந்த அநாதைப் பிச்சைக்காரர்களின் முகங்கள் ... அந்தப் பிச்சைக்காரர்களின் முதலாளி தாண்டவன் அவ்வப்போது ஆடும் வெறித்தாண்டவம் .. பகலில் தாண்டவனிடம் அடியும் மிதியும் படும் அவர்கள் இரவில் நடத்தும் பாட்டும் ஆட்டமும் ... குறையோடு பிறந்தும் குறும்புக்கு குறைவில்லாத அந்தப் பிறப்புகள், அவர்களுக்குள் இருக்கும் பந்தம், பாசம், அந்நியோன்யம் ... முருகனாக வருபவர் போதையில் இருக்கும்போது மற்றவர்கள் அடிக்கும் கூத்து ... யாருமே நடிப்பதாகவே தோன்றவேயில்லையே. - இந்த எல்லாவற்றிற்கும் என் ஒரே விமர்சனம்: இதெல்லாம் எப்படி பாலா? கொஞ்சம் தவறினாலும் காமெடியாகப் போகக்கூடிய சீரியசான இடங்கள் பல. அதே போல் காமெடியான இடங்களும் நிறைய. அதது அங்கங்கே அப்படி அப்படி இருக்கிறதென்றால் ... எல்லாப் புகழும் பாலாவுக்கே!

*

அடுத்தது அம்சவல்லி(வள்ளி?) மேக்கப் சீராக இல்லாமலிருந்ததுவும், அவள் பாடும் பாடல்கள் வெவ்வேறு குரல்களில் ஒரிஜினல் பாடல்களாக இருந்ததும் நிரடல்கள். ஒரே குரலில் அந்தப் பாடல்களை ரீமேக் செய்திருக்கலாம் - குறைந்த orchestra-வோடு. பொருந்தியிருந்திருக்கும். தூக்கிவரப்பட்டதும் துடிக்கும் அந்தப் பெண்ணை மற்ற பிச்சைக்காரர்கள் தங்களுக்குள் ஒருத்தியாக அணைத்துக் கொள்ளும் அன்பு, அப்போது பேசப்படும் வசனங்கள் எல்லாமே நன்கு பொருந்தியிருந்தன.

*

இந்தப் பகுதியில் வரும் காவல்நிலையத்தில் நடக்கும் கூத்தும் ஆட்டமும் நமக்குத் தேவையில்லை. பாலாவுக்கும்தான். பிதாமகனில் விநியோகஸ்தர்களுக்காகச் சேர்த்த பகுதியாக சிம்ரன் வரும் பகுதியைச் சொன்னார்கள். அதில் ஒரு relief இருந்தது உண்மை. ஆனால் இங்கே அந்த இடைச்செருகல் எரிச்சலைத்தான் தந்தது.

*

எனக்கு இதுவரை தமிழ்ப்படத்தில் பிடித்த சண்டைக் காட்சி பிதாமகனில் வரும் புரோட்டா கடை சண்டை. raw power தெரியும். இதிலும் அது குறைவில்லை. சண்டைக் காட்சி நன்றாக வந்திருக்கிறது. ஆர்யா மட்டுமல்ல அந்த தாண்டவனின் உடலும், போடும் சண்டையும் நிறைவாயிருந்தன.

*

நந்தாவில் ராஜ்கிரனுக்கு ஒரு புதிய முகம் கிடைத்தது. புதுக் கோணத்தில் அவரைப் பார்க்க வைத்தார் பாலா. பிதாமகனில் கஞ்சாத் தோட்டத்து உரிமையாளராக வரும் அந்த தெலுங்கு நடிகரின் நடிப்பு பிரமிப்பைத் தந்தது. அதே போல் இந்தப் படத்தில் வரும் தாண்டவன் என்னும் ராஜேந்திரன் என்ற நடிகரின் நடிப்பு படம் முழுவதுமே மிகச் சிறப்பாக இருந்தது. சின்னச் சின்ன வேஷங்களில் வந்தவரிடமிருந்து இப்படி ஒரு நடிப்பைக் கொண்டுவந்தது, இதைப் போலவே ஒவ்வொரு பாத்திரப் படைப்பையும் முழுவதுமாகச் செய்து அவர்களிடமிருந்து தேவையானதை மட்டும் வெளிக்கொணர்ந்த பாலாவுக்கு ஒரு "ஓ"!

*

பாலாவிற்கு உறுதுணையாக ஜெயமோகன், ஆர்தர் வில்ஸன், ராஜா - இதே வரிசையில் நின்று
தங்கள் 'கைவரிசையை'க் காண்பித்திருக்கிறார்கள்.

*

பாலாவின் முந்திய மூன்று படங்களிலும் அந்தக் கடைசி நிமிடங்கள்தான் படத்திற்கு உயிரையே கொடுக்கும். ஆனால் அது இந்தப் படத்தில் இல்லாமல் போய்விட்டது. கதையை மாற்றியதாலா, இல்லை, அது சொல்லும் கருத்து உடன்பாடான கருத்தாக இல்லாததாலா ... எதனால் என்று தெரியவில்லை.

அதோடு, தனிப்பட்ட முறையில், காசியில் நடக்கும் ஆரம்பக் காட்சிகள் மனதை மிகவும் ஈர்த்துவிட்டதால் படம் முழுவதும் மீண்டும் எப்போது காசி வரும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. வராமலேயே போய்விட்டதால் ஏற்பட்ட ஒரு emptiness, ஏமாற்றம் எல்லாமுமாகச் சேர்ந்து படத்தில் இறுதியில் வழக்கமாக பாலா தரும் punch இல்லாததுபோல் ஆகிவிட்டது.

*

பாலாவின் உழைப்பு, ஒவ்வொரு ப்ரேமையும் செதுக்கி செதுக்கி எடுத்திருப்பது, ஒவ்வொரு பாத்திரத்தையும் முழுமையாக்கியிருப்பது என்று தனித்தனியே பார்க்கும்போது பிரமிப்பைக் கொடுக்கின்றன. ஆனால் மொத்தத்தில் ஏதோ ஒரு வெறுமை.

The film is great in parts; but something is missing on the whole.

படங்களில் வழக்கமாக இறுதிக்காட்சிக்கான பில்டப் ஆரம்பித்திலிருந்து வந்து இறுதியாக அந்த punch இருக்க வேண்டும். ஆனால் இந்தப் படத்தில் ஆரம்பித்தில் இருக்கும் ஈர்ப்பு கடைசிக்காட்சிகளில் குறைந்துவிட்டது.

கரும்பை நுனியிலிருந்து சுவைக்க ஆரம்பித்து அடிக்கரும்புக்கு வந்தால்தான் சுவை. ஆனால்'நான் கடவுள்' பார்த்த அனுபவம், அடிக்கரும்பிலிருந்து நுனிக்கரும்பு வரை சுவைத்தது போலாகிவிட்டது.

=============================


மன உறுதி கொண்டோர் இந்தப் படங்களையும் பார்த்துக்கொள்ளுங்கள்:

Third Face Worshippers Of Lord Shiva-AGHORIES

*
அகோரமான அகோரிகள்

(இதில் மொத்தம் ஆறு பாகங்கள்)

*

SHIVA'S FLESH



*

7 comments:

Narayanaswamy G said...

Even I felt that emptiness and the emptiness is even prolonged by the long justification dialogue by Pooja for what is going to happen!

தருமி said...

same blood...!?

Thekkikattan|தெகா said...

பொறாமையா வருது, தருமி! எங்கூர்ல இந்தப் படம் திரையிடப்படவில்லை :-(. ஆனா, எது எப்படியோ திரையரங்கத்திலதான் பார்ப்பேன்னு அடமா இருக்கேன் பார்ப்போம்.

உங்க பார்வை பதிவுக்கு நன்றி. பின்னே, யுட்யூப் விசயம் பயங்கரமா இல்லை?

தருமி said...

//பயங்கரமா இல்லை?//

தெக்ஸ்,
படு பயங்கரம் ..!

SurveySan said...

//same blood...!? //

Yes! :)

ilavanji said...

தருமிசார்,

நன்றி! சுட்டிகளுக்கும் சேர்த்து... :)

கடவுள் இருக்கிறார் என நம்பித் தேடுபவர்களுக்கு முயற்சிக்க 1000 வழிகள். கடவுள் இல்லை என மறுப்பவர்களுக்கு இம்புட்டு கஷ்டமில்லைன்னு நினைப்பு வந்தது. கடவுளைத்தேடி ”உணர்வதை” விட இல்லாத ஒன்னை இல்லைன்னு தர்க்கரீதியானதாக ”நிறுவுவது” சற்று சுலபமானது என்றே நினைக்கிறேன். ”உணர்வதற்க்கு” சரியென்று உறுதியாகத் தெரியாத பல வழிகள் . ”நிறுவுவதற்கு” நாம் வாழ்ந்தறிந்த உண்மைகள் மற்றும் தரவுகள்.

இருக்கிறார் என்பவர்கள் நடத்தும் தேடல், இல்லை என்று நிறுவும் போது முடிவுக்கு வருவது விசித்திரமாக இல்லை!? :)

இந்த சப்ஜெக்ட்ல நீங்க கிங்ன்னு தெரிஞ்சும் அந்த சுட்டிகளைப்பார்த்தபோது தோன்றியதை அப்படியே சொல்லனும்னு தோன்றியதால் அப்படியே சொல்லிட்டேன். மதுரகாரரு வேற! தப்புன்னா ஆளவிட்டு தூக்கிறாதீக!! :)

வஜ்ரா said...

படத்தின் இறுதி வசனம் சென்சார் காரர்கள் கண்ணில் படாமல் போய்விட்டதோ என்னவோ அல்லது, இதற்கு முன் ஜெ.மோ பல உள்குத்து, வெளிகுத்து, சைடு குத்து வசனங்கள் வைத்து அதையெல்லாம் வெட்டியதால் இறிதிக்காட்சி வசனம் நீண்டு விட்டதோ என்று தோன்றுகிறது.

சில இடங்களில் கண்டினியுட்டி இல்லாதது போல் தெரிந்தது. எப்படி கிருத்தவராக மாற்றம் பெற்று ரட்சிக்கப்பட்ட அம்சவல்லி திரும்பவும் தாண்டவனிடத்தில் சிக்குகிறாள் ?

Post a Comment