*
அதீதம் இணைய இதழில் வெளி வந்த பதிவு
*
1961 - 62 ஆண்டில் ...
P.U.C. படிப்பை முடித்து விட்டு, அந்த சேவியர் கல்லூரியிலேயே எனக்குப் பிடித்த பொருளாதாரத்திலும் சேர்ந்து விட்டேன். அது B.A.வகுப்பு. ஆனால் என் அப்பாவுக்கு நான் B.Sc. வகுப்பில் சேர வேண்டுமென்ற ஒரு ‘தவறான’ ஆசை. மறுத்தும் கேளாமல், மதுரை தியாகராஜர் கல்லூரியில் மிகவும் கடைசி நேரத்தில் எது கிடைத்ததோ அதில் சேர வேண்டுமென்ற கட்டாயத்தில், கிடைத்த ஒரே இடமான விலங்கியலில் சேர்க்கப்பட்டேன். (‘சின்னூண்டு நெத்தியில் ஆண்டவன் எப்படியெல்லாம் எழுதி வச்சிர்ரான் - காதலிக்க நேரமில்லை.)
பிடித்ததோ பிடிக்கவில்லையோ .. தலைவிதியேன்னு வகுப்பில் சேர்ந்தேன்.
P.U.C. விடுதியில் என்னோடு படித்த மாணவன் ஒருவனை தற்செயலாக மதுரை தூய மரியன்னை கோவிலில் சந்தித்தேன். அவனின் இரண்டாவது பெயர் மைக்கிள். முதல் பெயரும் ஏதோ ஒரு ஆங்கிலப் பெயர். என்னைப் போல் நல்லவனாக (!) அவனும் சாமி கும்பிட அங்கே வந்திருந்தான். பழைய அறிமுகத்தையும், நட்பையையும் அங்கே புதுப்பித்துக் கொண்டோம். எங்கள் வீட்டுக்கும் அழைத்திருந்தேன். அதன்பின் அவன் அவ்வப்போது கோவிலுக்கும் வீட்டுக்கும் வர ஆரம்பித்தான்.
அவன் மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருந்தான். ஆள் செம குச்சி. நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு. தம் அடிக்க ஆரம்பித்திருந்தான். எங்கேயாவது சேர்ந்து, ஒளிந்திருந்து அடிப்போம். அதற்காகவே அவனும் அடிக்கடி கோவிலுக்கும் இதற்கும் சேர்ந்து வர ஆரம்பித்திருந்தான். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த பள்ளிவாசலுக்குப் பக்கத்தில் ஒரு சின்ன சந்து இருக்கும். அதில் உள்ள ஒரு குறுக்குச் ச்ந்துதான் எங்கள் புகைப்பிடமாக இருந்தது.
ஒரு வாரம் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தான். இருவரும் ஆளுக்கொரு சைக்கிளில் எங்கள் மறைவிடம் தேடிப் போய்க்கொண்டு இருந்தோம். இருட்டத் தொடங்கிய மாலை நேரம். தெற்குவாசல் பக்கத்தில் ஒரு டீக்கடையின் வாசலில் ஒரு போலீஸ்காரர் நிற்பது தெரிந்தது. அப்போதெல்லாம் சைக்கிளில் விளக்கு இல்லையென்றால் போலீஸ் புடிச்சுக்கும். என் வண்டியில் டைனமோ இருந்தது. ஆனால் அவன் சைக்கிளில் டைனமோ லைட்டோ மண்ணெண்ணெய் விளக்கோ எதுவும் இல்லை. அதற்காகவே நானும் என் சைக்கிளில் விளக்கைப் போடவில்லை.
சைக்கிளை ஓட்டிக் கொண்டு வந்தவர்கள் ‘தல’யப் பார்த்ததும் மரியாதையாக இறங்கி சைக்கிள்களை உருட்டிக் கொண்டு வந்தோம். ஆனால் தல எங்களைக் கண்ணி வச்சி பிடிச்சிட்டார். ‘யார்ரா நீங்க?’ அப்டின்னார். மைக்கிள் வேகமாக ‘இருவரும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள்’ என்றான். அப்போதெல்லாம் மக்களிடையே மருத்துவக் கல்லூரி மாணவர் என்றால் பெரிய கித்தாப்பு தான். தல அதுக்கு மேல எங்கட்ட பேச விரும்பலை; எங்க ‘ஸ்டேட்டஸ்’ அப்டி ஆகிப் போச்சு!.
ஆனாலும் ’வாங்க .. ஸ்டேஷனுக்கு வந்து ஐயாட்ட சொல்லிட்டு போங்க’ அப்டின்னு பக்கத்தில் இருக்கிற தெற்குவாசல் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போனார். நாங்க ரெண்டு பேரும் தலைக்குப் பின்னால் போகும் போது அட்ரஸ் எல்லாம் கேட்டா பெயரை மாற்றிக் கொடுத்துர்ரதுன்னு பேசி முடிவு பண்ணிட்டோம்.
அங்க போனா ‘ஐயா’ இல்ல. ரைட்டர் மட்டும் இருந்தார். இப்போ எங்களுக்கு ரைட்டர் தலையாயிட்டார். ’என்ன கேசு?’ என்றார்; ’லைட் இல்லாம போனாங்க’ என்றார் போலீஸ்காரர். ‘நீங்க யாரு ... என்ன செய்றீங்க?” என்று எங்களைப் பார்த்து ரைட்டர் கேட்டார். ‘மருத்துவக் கல்லூரியில் படிக்கிறோம்’. ரைட்டர் இது பெரிய கேஸ் அப்டின்னு நினச்சுட்டார் போலும். உங்க முகவரி கொடுத்துட்டு போங்க .. நாளைக்கு வந்து ஐயாவைப் பார்க்க வாங்க’ அப்டின்னார். எங்கள் பெயர், முகவரி எல்லாம் கேட்டார்.
நான் ஏற்கெனவே அந்த சமாச்சாரங்களை ரெடி பண்ணி வச்சிருந்தேன். ஒரு பெயர், ஒரு இனிஷியல், இனிஷியலுக்கு ஏத்த மாதிரி ஒரு அப்பா பெயர் ... இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வாரத்திற்கு முன்னால் விருதுநகருக்கு அப்பாவுடன்சென்று வந்திருந்தேன். அங்கே ஒரு தெப்பக்குளம் பார்த்திருந்தேன். வடிவேலுவிடம் பார்த்திபன் துபாய் முகவரி சொன்னது மாதிரி நானும், வீட்டு நம்பர், தெப்பக்குளம் மேலத்தெரு, விருது நகர் அப்டின்னு சொல்லிட்டேன். எழுதிக்கிட்டார்.
ஆனால் அடுத்த நம்ம நண்பனைக் கேட்டார். பயல் எதுவும் யோசிச்சி வைக்கலை போலும். தனது சரியான இனிஷியலைச் சொல்லித் தொலைத்தான். அடுத்தது அப்பா பெயர் கேட்க இவன் ஏதோ ஒரு பெயர் சொன்னான். எனக்கு உதைப்பு. அப்பா பெயரும் இனிஷியலும் ஒத்துப் போகலைன்னு இன்னைக்கு தலயும், நாளைக்கு ‘ஐயா’வும் கண்டு பிடிச்சிட்டா என்ன பண்றதுன்னு பயம். ஆனால் இப்போ தல கண்டு பிடிக்கலை.
’போய்ட்டு நாளைக்கு வந்து ஐயாவைப் பாருங்க’ என்றார் ரைட்டர்.
வெளியே வந்ததும் ‘ஏண்டா இப்படி மடத்தனம் பண்ணுன ..?’ அப்டின்னு கேட்டேன்.
’ஏண்டா .. என்னாச்சு?’ என்றான்.
‘இனிஷியல் ஒண்ணு; அப்பா பேரு வேற ... நாளைக்கு இன்ஸ்பெக்டர் மாட்டப் போறார்’ என்றேன்.
’அட போடா ... நாளைக்கு வந்தாதான ...’
‘அப்போ வர வேண்டாமா?’
எனக்குப் பயம். வீடு வேற பக்கத்தில இருக்கு. மறுபடி போலீஸ் கண்ணுல பட்டா என்ன ஆகும்னு பயம்.
’அட போடா! அதெல்லாம் ஒண்ணும் ஆகாது’ என்றான் தைரியமாக. ஆனால் அவன் தைரியமெல்லாம் எப்டின்னு தெரியுமா ...? அதுக்குப் பிறகு வீட்டுக்கு வருவதை உட்டுட்டான். அவனை அதற்குப் பிறகு பார்க்கவே இல்லை. போலீஸ்காரங்க புண்ணியத்தில் ஒரு நண்பன் காணாமல் போய்ட்டான்!!
*
அந்தக் காலத்தில் சாலைகளில் விளக்கு அதிகம் இருக்காது, சைக்கிளில் லைட் இல்லாமல் போனால் விபத்து நடக்க வாய்ப்புகள் அதிகம். ஆகவே
இந்த லைட் எல்லாம் பார்த்திருக்கீங்களா? கொஞ்சூண்டு தேங்காய் எண்ணெய்யும், மண்ணெண்ணெயும் சேர்த்து போட்டு எரிய வைக்கணும். காத்து வேகமா அடிச்சா அணைஞ்சிரும். அத ‘உயிரோடு காப்பாத்தி’ போறதே பெரிய வேலை !!! |
சைக்கிளில் கட்டாயம் லைட் தேவை. அப்போ இதெல்லாம் எனக்குப் புரியலை.
அன்னைக்கும் இன்னைக்கும் ஒரு பெரிய வித்தியாசம். நாங்களும் அப்போவெலலாம் தப்பு செஞ்சோம். லைட் இல்லாம இரவில் சைக்கிள் ஓட்றது ... டபுள்ஸ் போறது ... NO ENTRY-ல் போறது .... ஆனால் தப்பு செய்றோம் அப்டின்ற பயத்தில் பயந்து பயந்து போவோம். மனசாட்சி குத்தும்.
இப்போ மக்களுக்கு இது மாதிரி தப்பு செய்யும் போது கொஞ்சம் கூட பயம் இல்லையே.
ஏன்?
*
3 comments:
அருமையான பதிவு அய்யா
தங்கள் வாழ்வில் நட்பு தான் ஆணிவேரா இருக்குது னு நான் நினைக்கிறன் ...தங்கள் அளவு யாராலும் நட்பு பத்தி இந்த அளவு ஆழமா எழுத முடியாது....இத்தனை நண்பர்கள் ..அதுவும் உண்மையான நட்பு ....நீங்க ரொம்ப லக்கி....
ஆனா என் கெட்ட நேரம் நண்பன்னு நினைச்சவங்க தான் என்னோட முதல் எதிரின்னு சமீப காலமா தான் உணர்ந்து கொண்டேன்...அத்தோட பாடசாலை நட்புக்கு முழுக்கு போட்டுட்டேன்....இப்போ சம வயது தோழர்கள் இல்லை ,அலுவலக தோழமை மட்டுமே
DYNAMO விளக்கு இப்பவும் பார்த்து இருக்கேன் ,மன்என்னை
விளக்கு அறியாத ஒரு விடயம் ....புகைப்படம் இப்போ தான் பார்கிறேன்
//இப்போ சம வயது தோழர்கள் இல்லை //
வயதுக்கு மீறிய சுமைகள் என்று மட்டும் நினைத்தேன். இப்போது இதுவும் தெரிவது கஷ்டமாக இருக்கிறது.
பதிவுலகம் கட்டாயம் புதிய தோழர்களைத் தரும்.
நன்றி அய்யா ,
எனக்கு பதிவுலகத்தில் ஆசான்+நண்பர் தருமி/ சாம் ஜார்ஜ் அவர்களின் நட்பு கிடைத்து உள்ளது ..தங்களின் கரிசனைக்கு நன்றிகள்
Post a Comment