Saturday, March 08, 2014

723. தருமி பக்கம் – 14 -- அந்தக் காலத்தில ...




*

அதீதம் இணைய இதழில் வந்த கட்டுரையின் மறு பதிப்பு ....

*


 சின்ன வயதில் ஊருக்குப் போனதும் பகலில் பல விளையாட்டுகள் – பிள்ளையார் பந்து, குச்சி விளையாட்டு, குண்டு விளையாட்டு, கிட்டிப் புள்ளு, அகத்தி மட்டையும் பனங்கொட்டையும் வைத்து ஹாக்கி விளையாட்டு … இப்படி பல. இது பற்றாது என்பது போல் அரைக்கால் சட்டையில் சொருகி வைத்துள்ள வாதமடக்கிக் குச்சியுடன் ஓடைக் காடுகளில் ‘வேட்டைக்குப்’ போவோம். வேட்டைன்னா பெருசா ஏதுமில்லை; ஒணான் அடிப்பது தான். 

இதில் பல விளையாட்டு விளையாட கிராமமே சரியான இடம். வேறு எங்கு இது போல் அகத்திக் குச்சியில் ஹாக்கி மட்டை செதுக்கி பனங்கொட்டையுடன் விளையாட முடியும். அகத்திக் கம்பு அரை குறையான மட்டை என்றால் பனங்கொட்டை உருண்டையாகவா இருக்கும்? நாம் ஒரு பக்கம் அடித்தால் அது வேறொரு பக்கம் போகும். இதை நகரத்துக்குள் எங்கே விளையாட முடியும். குச்சி விளையாட்டும் இப்படியே… குச்சி முனையைக் கல்லில் வைக்காமல் மாட்டிக் கொண்டால் நம் குச்சியைத் தரையில் போட, மற்றவர்கள் குச்சியைத் தட்டித் தட்டி தொலைவாகப் போவார்கள். எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் கிராமத்தில் போக முடியுமே. பிள்ளையார் பந்து விளையாடும் போது எப்படியோ கைக்கு வரும் பழைய டென்னிஸ் பந்து வைத்து எறிந்து எறிந்து விளையாடணும். இதுக்கும் கிராமம் தான் சரியான ப்ளே கிரவுண்டாக இருக்கும். அந்தக் காலத்து விளையாட்டுகள் பலவும் இப்படி கிராமப்புற விளையாட்டுகளாகவே இருந்திருக்கும் போலும்!
நானும் ரோஸ் அத்தையும்....எம்புட்டு அடக்கமான பையன்!


பகலில் இந்த ஆட்டங்கள் என்றால் மாலையில் ஒரே பக்தி மார்க்கம் தான். கடைசி அத்தைக்கு முந்திய அத்தையின் பெயர் ரோஸ் அத்தை. இவர்கள் பின்னாளில் மிகுந்த பக்தியான ’சிஸ்டராகப்’ போய் விட்டார்கள். ஆனால் என் சின்ன வயதில் பாட்டையா நடத்திய பள்ளியில் ஆசிரியை. கோவில் வேலைகள் எல்லாவற்றிலும் முதல் ஆள். முதல் ஆள் என்று கூட சொல்ல முடியாது. ‘ஒரே ஆள்’ என்று வேண்டுமானால் சொல்லலாம்.

 ஏப்ரல் கடைசியில் ஊருக்குப் போவோமா. அதுக்கு அடுத்த மாதம் மே மாதம். இந்த மாதம் (மேரி) மாதாவிற்குரிய மாதம் என்பார்கள். இதனால் மே மாதம் மாலையில் ஒவ்வொரு நாளும் அத்தை ஜெபம் நடத்துவார்கள். மின்சார விளக்கு இல்லாத காலம். ஒரு அரிக்கேன் விளக்கு; இரண்டு மெழுகு வர்த்தி வெளிச்சம் மட்டுமே வைத்து, பகலில் பள்ளியாக இயங்கும் கட்டிடம் மாலையில் கோவிலாக மாறி விடும்.

 கிராமம் அல்லவா… விரைவில் இருள் கவிந்து விடும். வெளிச்சம் இல்லாத இடம். கருங் கும் என்ற இருட்டு என்பார்களே … அது தான் இருக்கும். மதுரையிலிருந்து நாங்களும், இன்னொரு பெரியப்பா வீடும், பாளையங்கோட்டையிலிருந்து மற்றொரு பெரியப்பா வீடும் விடுமுறைக்காக வந்திருப்போம். எங்கள் குடும்பத்துப் பிள்ளைகள், எங்களோடு கிராமத்தில் இருக்கும் கிறித்துவ உறவினர் வீட்டுக் குழந்தைகள் என்று ஏறத்தாழ பத்து, பன்னிரண்டு பேர் சேர்ந்து விடுவோம்.

எங்களையெல்லாம் முன்னால் உட்காரவைத்து அத்தை எங்கள் பின்னாலிருந்து ஜெபம் செய்வார்கள். அன்றிலிருந்து இன்று வரை எனக்குப் புரியாத ஆச்சரியம் ஒன்றிருக்கும். சின்னப்பசங்க என்ன சேட்டைசெய்தாலும் அத்தையின் பக்தியை அது எவ்விதத்திலும் தடம் மாற்றாது. அதிலும் எங்களுக்குள் பெரிய சிரிப்பைக் கொடுக்கும் விஷயம் என்னவென்றால், எங்களில் யாராவது உட்கார்ந்து கொண்டோ, முழங்காலில் இருந்தோ தூங்க ஆரம்பித்து விடுவார்கள். எங்கள் பாஷையில் அப்போது அதை நாங்கள் ’கத்திரிக்காய் விற்கிறது’ என்று சொல்வோம். யாராவது கத்திரிக்காய் விற்க ஆரம்பித்தால் எங்கள் மத்தியில் அப்படியொரு சிரிப்பும், கும்மாளமும் இருக்கும். ஆனாலும் அத்தைக்குப் பயந்து கள்ளத்தனமாய் சிரிப்போம். ஆனால் இதெல்லாம் அத்தை கண்டு கொள்ளவே மாட்டார்கள்.

 வழக்கமான இந்த மாலை ஜெபத்தைத் தவிர வாரம் ஒரு நாள் ஜெபம் முடிந்ததும் நாங்கள் எல்லோரும் ஏதாவது ஒரு கிறித்துவர் வீட்டிற்கு ஜெபம் செய்து கொண்டும், மாதா பாடல்கள் பாடிக்கொண்டும் போவோம். இப்படிப் பாடியதால் ‘மாதாவே சரணம்’ என்ற பாடலும், ’மாதாவே துணை நீரே’ என்ற பாடலும் இன்று வரை மனதில் ஆழமாகப் பதிந்து விட்டன. இன்றும் என்றைக்காவது தங்க்ஸ் ஆசைப்பட்டு கேட்டால் இருவரும் சேர்ந்து இப்பாடல்களைச் சத்தமாக இரவில் நாங்கள் பாடுவதுண்டு!

 இப்படி எல்லோரும் போகும் போது சரியான இருட்டுக்குள் நடந்து போக வேண்டும். ஒரே ஒரு அரிக்கேன் லைட்டை எங்களில் ஒருவன் தூக்கிக் கொண்டு போக வேண்டும். பின்னாலேயே மற்றவர்கள் ஜெபித்துக் கொண்டும், பாடிக்கொண்டும் வருவார்கள். இந்த விளக்கைத் தூக்குவது எனக்கு மிகவும் பிடிக்கும். சண்டை போட்டு பல தடவை நானே தூக்கி முன்னால் செல்வேன். இதில் ஒரு பெரிய பிரச்சனை உண்டு. விளக்கைத் தூக்கி, தோளில் வைத்துக் கொண்டு போவேன். அனேகமாக என் முகத்தில் விளக்கு விழுவதால் முன்னிருக்கும் இருட்டு இன்னும் அதிகமான இருட்டாக இருக்கும். கண்ணும் தெரியாது. எங்கேயாவது போய் முட்டிக்கிட்டு நிற்பேன். எல்லோரும் பலமாகச் சிரிப்பார்கள் – அத்தையிடம் எந்த மாற்றமும் வராது. 

வரிசையாகப் போய் அன்று எந்த வீட்டில் ஜெபமோ அந்த வீட்டுக்குள் போவோம். எங்கள் பாட்டையா வீடு, பெரிய பாட்டையா வீடு தவிர மற்ற உறவினர்கள் வீடுகள் எல்லாமே பொதுவாக மிகச் சிறியதாக இருக்கும். அங்கே போய் கொஞ்சம் ஜெபம், இரண்டு மாதாப்பாட்டுகள் பாடுவோம். முடிந்ததும் அந்த வீடுகளில் அரிசி முறுக்கும் கடுங்காப்பியும் கிடைக்கும். முறுக்கை உடைத்து காப்பியில் போட்டு ஊற வைத்துச் சாப்பிடும் சுவை இன்னும் நாக்கில் நிற்பது போல் தோன்றுகிறது.

மறுபடியும் ஜெபம், பாட்டோடு கோவிலுக்கு வந்து ஜெபத்தோடு அன்றைய ஜெபக் கூட்டம் முடியும்.





 *

1 comment:

வவ்வால் said...

தருமிய்யா,

//இன்றும் என்றைக்காவது தங்க்ஸ் ஆசைப்பட்டு கேட்டால் இருவரும் சேர்ந்து இப்பாடல்களைச் சத்தமாக இரவில் நாங்கள் பாடுவதுண்டு//

GREAT!

யோசிக்க வச்சிட்டிங்க, மலரும் நினைவுகளே, நினைவுகளே மலர்கள்,நல்ல வாசனை!

#//முறுக்கை உடைத்து காப்பியில் போட்டு ஊற வைத்துச் சாப்பிடும் சுவை இன்னும் நாக்கில் நிற்பது போல் தோன்றுகிறது.//

தென் மாவட்டங்களில் இப்படி வித்தியாசமான பழக்கங்கள் உணவு சார்ந்து அதிகம் போல, எஸ்.ரா எழுதிய அனுபவக்கட்டுரையில்,கருப்பட்டியக்கூட டீல தொட்டு சாப்பிடுவோம்,எதுக்கிடைக்குதோ அது டீக்கு "தொட்டுக்க" தான் என எழுதியிருந்தார்.

வட இந்தியர்கள் ரொட்டியை டீயில் முக்கி சாப்பிடுவதையும் பார்த்திருக்கிறேன்.

நாடோடிப்போல அலையும் வட இந்தியர்கள் ,கையோடு லோட்டா, பெரிய டம்ளர் என எடுத்துப்போய் நிறைய டீ வாங்கி "தெளிவா" குடிக்கிறாங்க, நம்ம மக்கள் வெட்கப்பட்டுக்கிட்டு "நாகரீகமாக" ஆகிட்டாங்க :-))

Post a Comment