Monday, April 07, 2014

741. “கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார்”





*
”திண்ணை” இணைய இதழில் R.கோபால் என்பவர்  “கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார்”  என்ற தலைப்பில் 11 கட்டுரைகள் எழுதியுள்ளார். பொருளடக்கம் எனக்கு மிகவும் பிடித்தமையால், இக்கட்டுரையை என் இணையப் பக்கத்தில் வெளியிட விருப்பம் கொண்டேன். திரு கோபாலுக்கு தனி மயில் மூலமும், பின்னூட்டம் மூலமும் இக்கட்டுரையைப் பதிவிட சிலமுறை அனுமதி கேட்டேன். இதுவரை பதிலேதும் இல்லை; திண்ணை எடிட்டரிடமும்  அனுமதி கேட்டேன். பதிலேதும் இல்லை.

அரை மனத்துடன் அவர் பதிவுகளைச் சிறிது சுருக்கி இங்கு பதிவிடுகிறேன். ஒருவேளை அவர் அனுமதி மறுத்தால் அடுத்த கணம் இதனை எடுத்து விடுகிறேன்.  கோபாலனுக்கு மிக்க நன்றி.






*
1

R.கோபால்


 டெம்போரல் லோப் எபிலப்ஸி (Temporal lobe epilepsy) : ஆங்கிலத்தில் temple என்றும், தமிழில் ‘பொட்டு’ என்று நாமழைக்கும் பகுதியில் உள்ள மூளையின் பகுதி டெம்போரல் லோப் என்று அழைக்கப்படுகிறது. மூளையில் திடீரென்று நியூரான் செல்கள் ஒழுங்கற்று மற்ற மூளைப்பகுதிகளுக்கு தொடர்பில்லாமல் மின்சார சிக்னல்கள் பாய்வதால் வலிப்பு நோய் உருவாகிறது. வலிப்பு நடக்கும்போது, பிரமைகள், வன்மையான போக்கு, மனநிலையில் மாற்றம், நினைவில் பாதிப்பு ஆகியவை நடக்கலாம். சுய நினைவு இழப்பதோடு கூடவே, கை கால்களில் சில பகுதிகளில் ஒரே மாதிரி இழுத்துகொள்ளும் செய்கைகளுமோ, வாய் கோணிக்கொள்வதோ நடக்கலாம். அல்லது நகராமல் அப்படியே பார்த்துகொண்டிருப்பது, யாராவது கூப்பிட்டால் பதில் கூறாமல் இருத்தல் ஆகியவை நடக்கலாம்.
  டெம்போரல் லோப் வலிப்பு நோய் உள்ளவர்கள் தங்களது வலிப்பு அனுபவங்களுக்கு முன்னால், aura எனப்படும் ஒளிவெள்ளத்தை பற்றிக் கூறியுள்ளார்கள். இவை குத்து மதிப்பான எச்சரிக்கையிலிருந்து, மிகவும் ஆழமான அனுபவங்கள், விரிந்த மனநிலைகள் வரைக்கும் வித்தியாசனவை. இவை பாதிக்கப்படும் அந்த மனிதரின் உலகப்பார்வையையே மாற்றக்கூடியவை. ஒவ்வொரு நபருக்கும் இந்த வலிப்பு நோய் வருவதற்கு முன்னால் வரும் aura வித்தியாசனது என்றாலும், பெரும்பாலானவை கீழ்க்கண்டவற்றை கொண்டிருக்கின்றன(Taylor, 1987): -- hypergraphia (விடாது அதிகப்படியாக எழுதிகொண்டேயிருத்தல் அல்லது வரைதல், ), முன்னர் பார்த்தது போன்ற உணர்வு(deja/jamais vu ), புதியதாக நடப்பது ஏற்கெனவே நடந்தது போன்ற உணர்வு, ஏற்கெனவே நடந்தது முதன்முறையாக நடப்பது போன்ற உணர்வு, முன்னர் கேட்டது போன்ற உணர்வு (deja/jamais entendu ), முன்னர் கேட்டதை புத்தம் புதியதாய் கேட்பது போன்ற உணர்வு. பயம், அதி மகிழ்ச்சி, உச்சகட்ட உணர்ச்சிக்குவியல், கடவுளிடமிருந்து செய்தி வந்தது போன்ற உணர்வு.

 பெடோர் தாஸ்தாவஸ்கி உலகத்தின் மிகச்சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அவருக்கு டெம்போரல் லோப் வலிப்பு நோய் இருந்ததாகவும், அதன் மீது ஏறத்தாழ இவர் காதலுடன் இருந்தார் என்பதும் ஆச்சரியமானது. நீண்ட நெடும் சிறைத் தண்டனைக்குப் பிறகு தன் வாழ்நாளில் மீதி நாட்கள் யாவையும் எழுதுவதிலேயே கழித்தார். இரவிலும் பகலிலும் தொடர்ந்து வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஒரு நாளைக்கு இரண்டு தடவையிலிருந்து நான்கு மாதங்களுக்கு ஒருமுறை என்ற விகிதத்தில் அவருக்கு டெம்போரல் லோப் வலிப்பு வந்தது என்பதைக் குறித்திருக்கிறார். அவரது வலிப்புக்கு சற்றுமுன்னர், அவர் எப்போதுமே, ”ஓரிரு கணங்கள் தனது முழு இதயமும், மனமும், உடலும் உச்சகட்ட உணர்வுக்கும், ஒளிவெள்ளத்துக்கும் எழுச்சி அடைந்து நின்றதையும், எல்லையற்ற பேரானந்தத்தையும் நம்பிக்கையும் நிறைந்து நின்றதையும், அவரது கவலைகள் அனைத்தும் துப்புரவாக நீக்கப்பட்டதையும், உணர்ந்தார்”.

 ஓவியர் வின்சண்ட் வான்கோ, லூயிஸ் கரோல், எட்கர் ஆலன் போ, குஸ்டாவ் ஃப்ளாபெர்ட், பிலிப் கே டிக், ஸில்வியா பிளாத், டிவைன் காமெடி எழுதிய இத்தாலியின் மிகச்சிறந்த கவிஞர் டாண்டே, 18ஆம் நூற்றாண்டின் நாடகாசிரியர் மோலியெர், இவான்ஹோ , வேவர்லி ஆகிய படைப்புகளை எழுதிய சர் வால்டர் ஸ்காட், கலிவர் ட்ராவல்ஸ் எழுதிய18 ஆம் நூற்றாண்டு எழுத்தாளர் ஜோனதன் ஸ்விஃப்ட், மாபெரும் ஆங்கிலக்கவிஞராக மதிக்கப்படும் அல்பிரட் லார்ட் டென்னிஸன், மாபெரும் கவிஞர் ஷெல்லி, சகலகலா வல்லவர் லியனர்டோ டா வின்ஸி – இவர்கள் அத்தனை பேரும் இந்த வலிப்பு நோய் வாய்ப்பட்டவர்களாக இருந்தார்கள்.

 பொதுவாக வலிப்பு வருபவர்களுக்கு பலவிதமான வேறுபட்ட குணநலன்கள் இருக்கும். மூளையின் ஒரு சிறுபகுதியில் நடக்கும் மூளை வலிப்பு (simple partial seizures ) இதனை aura அல்லது ஒளிவெள்ளம் என்று குறிக்கிறார்கள். இது முழு நினைவு இருக்கும்போதே நடக்கிறது. இந்த சிறு மூளைவலிப்பு அடைபவர்கள் நினைவு தவறிவிடுவதில்லை. ஏற்கெனவே இந்த உணர்வை அடைந்திருப்பது போன்ற உணர்வு (feelings of deja vu ), பழங்காலத்தில் நடந்த விஷயங்கள் மீண்டும் நினைவுக்கு வருதல், அல்லது நடந்ததை மறந்துவிடுதல் ஆகியவை பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. உணர்வுகளை ஒழுங்குபடுத்தும் டெம்போரல் லோபில் இந்த வலிப்பு வருவதால், இல்லாத மணத்தை நுகர்வது, ருசி, எதுவும் யாருமே பேசாமலிருந்தாலும் எதையோ கேட்பது, இல்லாததை பார்ப்பது போன்ற பிரமைகளை நோயாளிகள் அடையலாம்.

டெம்போரல் லோபில் உருவாகும் மின்சார சிக்னல்கள்களால் வலிப்பு நோய் பெறுகிறவர்களுக்கு கடவுள் சந்திக்கிற உணர்வு, தேவதைகளை பார்ப்பது, மிகவும் வலிமையான ஆன்மீக உணர்வு அடைவது என்பதை மருத்துவவியலாளர்கள் வெகுகாலமாகவே அறிந்திருக்கிறார்கள். சில சமயங்களில் கடவுளோடு ஐக்கியமான உணர்வு, சில சமயங்களில் உலகம், பிரபஞ்சம், ஒவ்வொரு துகளோடும் ஐக்கியமான உணர்வு பெறுகிறார்கள். இதற்கு ஹெர்ப்பஸ் என்னும் பால்வினை நோய் வைரஸ் human herpesvirus 6 காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பெரும்பாலும் தலையில் அடிபடுவதோ, ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டதோ, முதுகுத்தண்டில் மெனிஞ்சிடிஸ் நோய் உருவாவதோ, மூளையில் கட்டிகள் உருவாவதோ காரணமாக அறியப்படுகிறது.

 விலயனூர். எஸ்.ராமச்சந்திரன் சாண்டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மனவியல் துறை பேராசிரியராகவும், நியூரோசயன்ஸ் க்ராசுவேட் புராகிராமின் இயக்குனராகவும் இருக்கிறார். நியூஸ்வீக் பத்திரிக்கை 1997-லும், டைம் பத்திரிக்கை 2011-லும் உலகத்தின் மிக முக்கியமான நூறு பேர்கள் பட்டியலில் இவரது பெயரையும் சேர்த்திருந்தன. மனித மூளை, அதன் இயக்கங்கள் குறித்த ஆய்வுகளின் மூலம் உலகம் அறிந்த விஞ்ஞானியாக இருக்கிறார்.

மனித மூளையின் விநோதங்களை ஆயும் இவர் Temporal lobe epilepsy பற்றிக் கூறும் சிலவற்றை இங்கு காணலாம். தன்னிடம் வந்த ஜான் என்ற ஒரு டெம்போரல் லோப் வலிப்பு நோய் கொண்டவரது அனுபவங்களை அவர் பகிர்ந்து கொள்கிறார்: ஒருமுறை தனது பெண் நண்பரோடு மலைகளுக்கு நடுவே நடந்துகொண்டிருந்தபோது ஜான் தனக்கு இந்த தாக்குதல் நடந்ததை உணர்ந்தார். அந்த நிகழ்வு முடிந்த பிறகு மிகவும் தத்துவரீதியில் அவரது மனது ஆன்மீகம், கடவுள், இந்த மாபெரும் நடனத்தில் தனது இடம் என்பதை மிகவும் ஆழமாக தீவிரவாக சிந்தித்துகொண்டிருந்ததை உணர்ந்தார். வலிப்பு வந்த போது, ”நான் கடவுளாக உணர்ந்தேன். சொர்க்கத்தையும் நரகத்தையும் உருவாக்கியது நானே என்று உணர்ந்தேன்” என்கிறார் ஜான். இந்த நிகழ்வுகளுக்கு பிறகு மிகவும் பலவீனமாக உணர்ந்தார். ஆனால் அதே நேரத்தில் எதையுமே சாதிக்கக்கூடிய வலிமை பெற்றவராகவும் தன்னை உணர்ந்தார். ஒருமுறை திடீரென்று தெருவில் நடந்துகொண்டிருந்தபோது இந்த உணர்வு வந்ததும், “நானே கடவுள்” என்று நடுத்தெருவில் கத்திகொண்டே ஓடினார். அவரது தந்தை அவரை திட்டி உள்ளே வா என்று கூட்டிக்கொண்டு சென்றதைக் கூறுகிறார். அந்த நிகழ்வு வரும்போது மிக அற்புதமான இன்ப உணர்வு பெறுவதும், மிகவும் அதிகமான துன்ப உணர்வை பெறுவதும், சில நேரங்களில் மற்றவர்களுக்கு அந்த உணர்வை விளக்கவே முடியாத துன்பத்தை அடைவதையும் விளக்குகிறார்.

 அப்பாவும் மகனும் எந்த காலத்திலும் மத உணர்வாளர்களாகவே இருந்ததில்லை. இருப்பினும், ஏன் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நிகழ்வுகளுக்கு பின்னர் மத உணர்வை பெறுகிறார்கள் என்ற முக்கியமான கேள்விக்கு விடையறிய ராமசந்திரன் முயல்கிறார். ”உண்மையில் ஒருவேளை கடவுள் இந்த நோயாளிகளை மனத்தில் சந்திக்கலாம். அது உண்மையாக இருந்தாலும் அதனை ஒரு அறிவியலாளனாக என்னால் பரிசோதனை செய்து அறியமுடியாது. இன்னொரு விளக்கம், இந்த நியூரான்களின் வெடிப்புகள் அந்த உணர்வை இவர்களுக்கு அளிக்கின்றன என்று கூறலாம்.” என்கிறார் எஸ். ராமச்சந்திரன்.

”இந்த டெம்போரல் லோப் என்பது உலகத்தில் எது முக்கியம் எது முக்கியமில்லை என்பதை நாம் அறிய உதவும் பகுதி. நமக்கு முக்கியமானது, முக்கியம் குறைவானது என்பதைப் பற்றிய ஒரு வரைபடத்தை மனதிற்குள் வைத்து அதன் மூலம் நாம் உலகத்தோடு தொடர்பு கொள்கிறோம். இந்த டெம்போரல் லோப்பின் மிக அருகே அமைந்துள்ளது அமிக்டலா என்னும் பகுதி. இது உணர்ச்சிகளை நமக்கு உருவாக்கித்தரும் பகுதியோடு இந்த டெம்போரல் லோபை இணைக்கும் பகுதி. இந்த பகுதிகளுக்குள் இருக்கும் தொடர்பின் வலிமையே எந்த பொருள் நமக்கு முக்கியம், எது முக்கியமில்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது".

"டெம்போரல் லோபில் வலிப்பு நோய் உருவானார்களுக்கு என்ன ஆகும்? கன்னாபின்னாவென்று பாரபட்சம் இல்லாது ஏதேதோ இணைப்புகள் வலிமையாகும். மலை மேலிருந்து வழியும் தண்ணீர் ஒரு பாதையை உருவாக்க, தொடர்ந்து பாயும் தண்ணீர் அந்த பாதையை இன்னும் ஆழமாக இன்னும் அதிக வேகத்துடன் வருவதாக மாற்றுகிறது. இதனால் பல விஷயங்கள் மிகவும் முக்கியமானவையாக இவர்களுக்கு ஆகின்றன. இதனால் நமக்கு உணர்வு ரீதியில் முக்கியமாக இருப்பதை விட்டுவிட்டு, உலகத்தில் வேறு பொருட்களுமே மிகவும் உணர்வுப்பூர்வமாக முக்கியமானவையாக ஆகின்றன. ஒரு மணல் துகள், ஒதுங்கிக்கிடக்கும் ஒரு மரத்துண்டு, கடற்பாசி ஆகிய எல்லாமே மிகவும் ஆழமாக உணர்வுப்பூர்வமாக முக்கியமானவையாக, பெரும் பொருள் கொண்டவையாக ஆகிவிடுகின்றன. இப்படி உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களுமே மாபெரும் பொருள் கொண்டவையாக பிரபஞ்சத்தோடு தன்னை இணைத்து அவற்றோடு பங்குபெற்ற உணர்வைத்தான் நாம் ஆன்மீக உணர்வு என்று அழைக்கிறோம்..” என்று எஸ். ராமச்சந்திரன் கூறுகிறார்.

 ஜான் தான் வலிப்பில் அடைந்த அனுபவத்தைக் கூறுகிறார்: “நான்  ஒரு புதிய தீர்க்கதரிசி என்ற உணர்வை பெறுகிறேன். உலகத்தை காப்பாற்ற வந்தவன் நான். நான் இதுவரை மத நம்பிக்கையே இல்லாதவனாக இருந்தேன். ஆனால் இப்போதோ உலகத்தை நானே காப்பாற்ற வந்தவன் என்ற உணர்வைப் பெறுகிறேன்”.

 ராமச்சந்திரன் தவறாக இணைக்கப்பட்ட நியூரான் வயர்களே இப்படிப்பட்ட உணர்வுகளுக்கு காரணம் என்று கூறுகிறார். சில வருடங்களுக்கு முன்னால், பத்திரிக்கைகள் மூளையில் கடவுள் பகுதி இருக்கிறது என்று செய்திகளை வெளியிட்டன என்பதையும் குறிப்பிடுகிறார். டெம்போரல் லோபில் சில நியூரான்கள் ஆன்மீக உணர்வை உருவாக்குபவையாக இருக்கலாம். இந்த உணர்வை ஆன்மீக உணர்வு என்று பெயர் வைத்து அழைக்கப்பட்டிருக்கலாம். உலக மனிதர்களிடம் இப்படிப்பட்ட மத உணர்வு எல்லா சமூகங்களிலும் இருக்கின்றன. இப்படிப்பட்ட மத உணர்வுகள் ஒரு சமூகத்தை நிலையாக வைத்திருக்க உதவுவதாலும் அவை பரிணாமக் கொள்கையின் படி நம்மிடம் இருக்கலாம் என்று கூறுகிறார்.




 *




4 comments:

வவ்வால் said...

தருமிய்யா,

ஆராய்ச்சி செய்றவங்கலாம் உண்மைய சொல்லுறாங்கனு மட்டும் நினைச்சிடாதிங்க :-))

#கடவுள், உலகம் இப்படிலாம் என்னனே தெரியாத "சின்னதம்பிகளூக்கு" டெம்போரல் லோப் வலிப்பு வந்தால், அவனே அவனுக்கு அப்பானோ இல்லை அவங்க வீட்டுல இருக்க எருமை மாடே "உலகின் முக்கியமான ஜீவன்" என்றோ நினைப்பு தான் வரும் :-))

மனித மூளை 'ரியாக்ட் செய்வதே" கற்றலின் பயனாய் தான்" மற்றப்படி மனித மூளை ஒரு "எழுதப்படாத வெற்றுப்பதிவு" :-))

ஹி...ஹி பின்னூடம்லாம் என்னை போல போட்டு சொல்லிக்கொடுக்கோனும் அவ்வ்!

தருமி said...

//"சின்னதம்பிகளூக்கு" டெம்போரல் லோப் வலிப்பு வந்தால், ..//

பதில் - அடுத்த பதிவின் முதல் வரி!!

தருமி said...

//பின்னூடம்லாம் என்னை போல போட்டு சொல்லிக்கொடுக்கோனும்//

நல்லாவே ’போட்டு கொடுக்குறீங்க’!! தெறம ...!

DEVAPRIYA said...

http://pagadu.blog.com/2012/01/05/%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95/
முன்பு பகடு முகம்மது நபிக்கு காக்காய் வலிப்பு என்ற ரீதியில் பதிவிட்டபோது ஜாகீர் நாயக் பதிவிட்டு பின் நீக்கினார்.

நம் தளத்திற்கு அவ்வப்பொது வந்து கருத்து சொல்லவும்.
கர்த்தரின் கிறிஸ்து கோரேசு ராஜா
-http://pagadhu.blogspot.in/2014/04/blog-post_2734.html
இயேசு கிறிஸ்துவரா - இல்லையே?- http://pagadhu.blogspot.in/2014/04/blog-post_8.html

Post a Comment