*
தமிழ்மணத்தோடு என் பயணம் ஏறத்தாழ பத்து ஆண்டுகளாகத் தொடர்கிறது. இன்னும் இனிதே தொடர வேண்டுமென்பது என் ஆவல். தமிழ்மணத்தின் பங்கு இல்லையெனில் என் ஓய்வு வாழ்க்கை எப்படி இருந்திருக்குமோவென்று தெரியவில்லை. தமிழ்மணத்தோடு செல்வது ஒரு முழு வாழ்க்கையை வாழும் நினைவைக் கொடுத்திருக்கிறது. எனது வாசிப்பு மிகவும் குறைந்த காலத்தில் தமிழ்மணத்தில் இணைந்தேன். வாசித்தாக வேண்டிய கட்டாயமே வந்தது. வாசித்ததை சிந்திக்கவும், சிந்தித்ததை எழுதவும் முனைப்போடு இருக்க முடிந்தது.
இந்த தமிழ்மணம் வழியே தான் நூல் மொழியாக்க வழியும் பிறந்தது. முதல் மொழியாக்க நூலுக்கே இரு பரிசுகள். பரிசளிப்பு விழாவிலேயே நான் முதல் நன்றி கூறியது தமிழ்மணத்திற்கும், அதை உருவாக்கிய திரு. காசிலிங்கம் அவர்களுக்கும் தான். அறுபதுக்குப் பிறந்த புது வாழ்க்கை பொருளுள்ளதாக ஆனதற்கு தமிழ்மணம் ஒரு பெரிய காரணம். காசிக்கும், தமிழ்மணத்திற்கும், அதன் இப்போதைய நிறுவன உறுப்பினர்களுக்கும் எனது மனத்தின் ஆழத்திலிருந்து எழும் மிகப் பெரும் நன்றி உரித்தாகும். இதை நான் எப்போதும் மறந்ததில்லை.
திரைப்படங்கள் வந்ததால் ரேடியோ ஓய்ந்து விடும் என்றார்கள். தொலைக்காட்சி வந்ததால் சினிமா படுத்துவிடும் என்றார்கள். அது போலவே சமுக தொடர்புத் தளங்கள் வந்ததும் ப்ளாக் தொலைந்து விடும் என்றார்கள். எல்லாமே தவறாகி விட்டன. எந்த ஊடகமும் சாகவில்லை. அதிலும் சமுகத்தளங்களில் கிடைத்த சில அனுபவனங்களை வைத்துப் பார்க்கும் போது Google +, whatsapp, facebook, twitter - இவைகள் எல்லாவற்றையும் விட ப்ளாக் தான் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அதில் மட்டுமே முழுமை கிடைக்கிறது. துண்டு துண்டாக எழுதுவதை விட மொத்தமாகவோ, தொடராகவோ ஒரு பொருள் பற்றி எழுத முடிகிறது. அவை நல்லதொரு கட்டுரைத் தொடராக நிலைத்து நிற்கிறது. ஏனைய சமுகத் தளங்கள் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது சின்னச் சின்னச் செய்திகளை பரிமாற மட்டுமே வசதி போல் தோன்றுகிறது. ப்ளாக்கோடு தான் எனக்கு ஒட்டு. மற்றதெல்லாம் அரட்டை அடிக்க மட்டும் தான் சரி என்று நினைக்கிறேன். அதோடு அந்தத் தளங்களில் எழுத புத்தி கொஞ்சம் அதிகம் தேவை போலும். Meant for sharp witted and intelligent people. நமக்குத் தான் சட்டியில ஒண்ணும் இல்லையே!
தமிழ்மணம் இந்தக் காலக் களேபரங்களில் தன்னுடைய சில ’பழங்கள்’ சிலவற்றை இழந்து காய்ந்த மரமாக, சிறிது சோபை இழந்து தான் நிற்கிறது. சிறந்த பதிவுகளுக்கான இடம் போய் விட்டது. ’பூங்கா’ காணாமல் போய் விட்டது. வாரத்திற்கு ஒரு ’நட்சத்திரம்’ கண் சிமிட்டியது இப்போது இல்லாமல் போனது. நான் இரு முறை நட்சத்திரமாக இருந்ததும். அந்த வாரங்களில் என் மேல் அடித்த சிறப்பு வெளிச்சமும் இன்னும் நினைவில் இருக்கிறது. இந்த நல்ல பழங்கள் எல்லாம் காலப்போக்கில் கனிந்து விழுந்து விட்டன. தமிழ்மணம் நல்லன பல இழந்து மொட்டையாய் இருப்பது நன்றாகவா இருக்கிறது. ஏனைய சமுகத் தளங்களோடு போட்டியிட்டுக் கொண்டு சிறப்பிடம் வகிக்க வேண்டாமா?
இந்தப் பழைய கனிகள் மீண்டும் வருவதற்கு நிர்வாகத்தினர் மட்டும் பொறுப்பாக இருந்தால் மிகவும் சிரமமே!ஆனால் இந்த சிரமமான வேலைகளை பொறுப்புள்ள சிலரிடம் ஏன் subletக்கு விடக்கூடாது? பதிவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது? இறுதிப் பொறுப்பு நிர்வாகத்தினரிடம் இருக்கட்டும். ஆனால் நல்ல பதிவுகளைத் தேர்ந்தெடுப்பது, பூங்காவில் அவற்றிற்கு இடமளிப்பது, நட்சத்திரங்களைத் தேர்ந்தெடுப்பது போன்ற பணிகளை ‘விவரமான’ பதிவர்களிடம் கொடுக்கலாமே. நிர்வாகத்தினரின் பழு குறையும்; ஆனால் தமிழ்மணம் தனித்து அழகாக நிற்குமே!
சில பதிவர்களும், அவர்களின் ஆற்றலும் இப்போது என் நினைவுக்கு வருகிறது.
சீனா - தமிழ்வாசியின் துணையோடு ‘வலைச்சரம்’ என்னும் ஒரு இணைய இதழை பல ஆண்டுகளாகத் திறமையோடு நடத்தி வருகிறார். எப்படி இவ்வளவு சரியாக தொடர்ந்து இந்தச் சேவையை அவரால் செய்ய முடிகிறது என்று நான் ஆச்சரியப்படுவதுண்டு. புதிய பதிவர்களையும் தேடிப்பிடித்து, வாசித்து, நல்ல பதிவர்களை அடையாளம் காண்பது அவ்வளவு எளிதா என்ன?
ராமலட்சுமியும் இன்னும் இரு நண்பர்களும் இணைந்து ‘அதீதம்’ என்றொரு மின் இதழைக் கொண்டு வருகிறார்கள். இவர்களின் தேடுதல்களும் இதேபோல் ஆச்சரியமளிப்பவை. வித விதமான - assorted - கட்டுரைகள் ...புகைப்படங்கள்.. நல்ல தொகுப்புகள். நல்ல பத்திரிகைக்குரிய லே அவுட்.
எந்தப் பதிவுகளுக்கும் நான் புதிதாகப் போனாலும் அங்கு அனேகமாக இருவர் பின்னூட்டமிட்டிருப்பார்கள். ஒருவர் திண்டுக்கல் தனபாலன்; இன்னொருவர் பகவான் ஜி. தமிழ்மண மறுமொழியாளர்கள் பகுதிகளில் இவர்கள் இருவர் பெயர் இல்லாமல் இருப்பது மிகக் கடினம். பதிவுகளைப் படிக்காமலா மறுமொழியளிக்க முடியும். ஆக, அத்தனை பதிவுகளைப் படிக்கிறார்கள். இதில் சேர்த்துக் கொள்ள வேண்டிய இன்னொருவர் கரந்தை ஜெயக்குமார். இவரது பதிவின் தரமும் மிகவும் உயரம்.
நான் வாசிக்கும் பதிவுகள் மிகவும் குறைவு. என் சிறிய வாசிப்பின் மூலம் நான் கண்ட சிலரைப் பற்றி மட்டுமே நான் குறிப்பிட்டுள்ளேன். (இதில் நிறைய மதுரைக்காரர்கள் இருப்பது ஒரு தற்செயல் என்று தான் நினக்கிறேன்!)
இவர்கள் போல் பல திறமையான / நிறைய பதிவுகளை வாசிக்கும் / நல்ல பதிவர்கள் நம்மிடம் உண்டு. அவர்களில் பொருத்தமானவர்களை தமிழ்மண நிர்வாகத்தினர் கண்டுணர்ந்து, அவர்களை விரும்பிக் கேட்டுக் கொண்டால், ஒவ்வொரு தமிழ்மண தனிச் சிறப்பு பகுதிகளுக்கும் குழுக்கள் அமைத்தால் அவர்கள் அப்பொறுப்பினை அழகுறச் செய்ய மாட்டார்களா? மேற் பொறுப்பை நிர்வாகத்தினர் வைத்திருந்தால் ‘பழைய மவுசு’ தமிழ்மணத்திற்கு மீண்டும் வந்து விடாதா என்ற நப்பாசை எனக்கு!
தமிழ்மண நிர்வாகத்தினரிடம் எனது புதிய கோரிக்கை இது.
நல்லது நடக்கக் காத்திருக்கிறோம் .........
*
கடைசி இரு பதிவுகளும் தமிழ்மணத்தை மேலும் பயனுள்ளதாக்குவது பற்றியான பதிவுகள். இரு பதிவுகளும் ஆயிரம் பதிவர்களுக்கும் மேலானவர்களால் வாசிக்கப்பட்டுள்ளன. இது போன்ற எல்லோருக்குமான பதிவுகளில் பலர் பின்னூட்டமிட்டால் தானே நிர்வாகத்தினரின் கண்களுக்கு அது போய்ச் சேரும் என்று நினைக்கிறேன்.
ஆனால் பதிவர்களே!
எப்படி அந்த எண்ணம் உங்களுக்கு வரவில்லை? ஏனிந்த மெளனம்?? இதில் கூடவா ஒற்றுமை வரக்கூடாது?!
*
11 comments:
அத்தியாவசியமான வேண்டுகோள்.தமிழ்மணம் தளர்வாக செயல்படுவது வருத்தமளிக்கிறது. பல்வேறு பதிவகளை அடையாளம் காட்டிய தமிழ் மணம் முன்பைப் போல் செயல்படவேண்டும் என்ற உங்களின் விருப்பமே அனைவரின் விருப்பமாகும். நன்றி ஐயா.
நல்ல ஆலோசனை! செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும்! நன்றி!
நல்ல ஆலோசனை! செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும்! நன்றி!
முன்பு தமிழ்மணம் நிர்வாகம் உயிர்ப்புடன் இருந்தது. நிறைய ஆட்களும் இருந்தார்கள். அப்போதைய இடுகையில் யார் என்ன செய்கிறார்கள் என்று போட்டிருந்தார்கள். சாந்தி சமாதான இடுகையில் வெகு சிலர் மட்டுமே இப்போது நிருவாகத்தில் உள்ளார்கள் என்பது தெரிந்தது. தமிழ்மணத்தின் தற்போதைய பிரச்சனைக்கு காரணம் நிருவாக ஆள் பற்றாக்குறைதான். இதற்கு என்ன செய்யலாம் என்று தமிழ்மணம் யோசிக்க வேண்டும்.
முகநூல் அப்போதைய அரட்டை என்றாலும் அதில் தேடல் வசதி இல்லை. கருத்துள்ள நிலைச்செய்திகளை போட்டாலும் பகிர்ந்தாலும் பின்னாளில் அதை காண்பது\தேடுவது இயலாது அல்லது மிக மிக .... கடினமான செயல்.
பதிவே எல்லாவற்றையும் விட சிறந்தது. நான் தமிழ்மணத்தை தவிர வேறு திரட்டியை பார்ப்பதில்லை. பழைய ஆட்கள் நிறைய பேர் இப்போது பதிவு அல்லது அடிக்கடி பதிவு எழுதுவதில்லை என்பது குறையே.
உங்கள் ஆலோசனையும் கவனிக்கதக்கது. இதையும் அவர்கள் பரிசீலிக்க வேண்டும்.
//தமிழ்மணத்தின் தற்போதைய பிரச்சனைக்கு காரணம் நிருவாக ஆள் பற்றாக்குறைதான்//
இதற்காகவேதான் பதிவர்களைப் பங்களிக்க இணைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்.
//பழைய ஆட்கள் நிறைய பேர் இப்போது பதிவு அல்லது அடிக்கடி பதிவு எழுதுவதில்லை என்பது குறையே.//
இதனால் முன்பு போல் சத்தான பதிவுகள் மிகக் குறைவே! (வழக்கமாக வயதானவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு என்று தான் இதனை எடுத்துக் கொள்வீர்கள்.)
பின்னூட்டங்களிலும் முன்பிருந்த personal touch/ அன்னியோன்யம் இப்போது இல்லை! ;(
ஏனிப்படி ஆனது?
தருமி சார்
தமிழ் மணத்தை மணக்க வைக்க உங்களைப் போன்ற நல்ல பதிவர்கள் நிறைய இருக்கிறார்கள் . நம்பிக்கை வைப்போம் அது மென்மேலும் மெருகேறட்டும் என்று!
நல்ல ஆலோசனைகள் பலவற்றை அளித்திருக்கின்றீர்கள். இணையும் கரங்களால் நடைமுறைப்படுத்தக் கூடியதுதான்.
பதிவர்களிடமும் ஒரு தளர்ச்சி தெரிகிறது. சினிமா பற்றி நிறையே பேர் எழுதப் போய்விட்டார்கள். அதனால் படைப்பிலக்கியத்தில் அவர்களின் பங்களிப்பு குறைந்துவருகிறது. (2) தமிழ்மணத்தின் பணி மிகவும் உயர்வானது. ஆனால் உரிய மனிதவளம் இல்லையேல் அவர்களால் முழுமையான செயல்பாட்டை வழங்க இயலாதுதானே! ஆவான் செய்யவேண்டியவர்கள் அவர்களே. என்ன மாதிரியான உதவி அல்லது ஒத்துழைப்பு வேண்டும் என்றால் பதிவர்கள் நிச்சயம் முன்வரத் தயாராகவே இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
வணக்கம் அய்யா. பதிவர் திருவிழாவில் தங்களைச் சந்தித்ததும் உரையாடியதும் மகிழச்சியூட்டும் நிகழ்ச்சிகளாயின.
தாங்கள் தந்திருப்பது ஆக்கப்பூர்வமான யோசனை. செயல்படுத்தினால் தமிழ்மணமும் மேம்படும், நல்ல பதிவர்களும் உற்சாகமாக எழுத்தைத் தொடர்வர். இணையத் தமிழ் வளரும். பார்க்கலாம் என்ன செய்கிறார்கள் என்று.
//பார்க்கலாம் என்ன செய்கிறார்கள் என்று.//
குளத்தில் எறிந்த கல் ..........!
Post a Comment