*
சமஸ் எழுதும் நல்ல நடுப்பக்கக்
கட்டுரைகளை தமிழ் இந்துவில் வாசிக்கத் தவறுவதில்லை. இன்று (5.8.16) ”மேற்கை வெட்டுதல்’
என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் ‘தூத்துக்குடியை டூட்டுகொரின் என்றும்,
தரங்கம்பாடியை டிராங்கோபார் என்றும் … திருச்சியை டிருச்சி என்றும் சேலத்தை சலேம் என்று
எழுதுகிறோம்’ என்று எழுதியுள்ளார். மதுரையிலிருந்து இதை எழுதும் சமஸ் முக்கியமாக மதுரையின்
பழைய பெயரை விட்டு விட்டாரே என்று எனக்கு ஒரு கவலை. அது என் பழைய நினைவுகளையும் கிளறி
விட்டது. மதுரையில் ஆங்கிலேயர் விட்டுப் போன பழைய பெயரும் உச்சரிப்பும் என்னவென பலருக்கும்
தெரியாதென நினைக்கிறேன். வயசான ஆளுகளுக்குத் தானே அது தெரியும். அந்தப் பெயர் – மெஜுரா. ஆங்கிலத்தில் என்னமோ அன்றும் இன்றும் Maduraiதான்.
அதிலும் சிலர் Madura என்றும் எழுதுவதுண்டு.
ஆனால் அந்தக் காலத்தில் ரொம்ப ஸ்டைலாகச் சொல்வதென்றால் மெஜுரா அப்டின்னு சொல்லணும்னு
எங்க அப்பாகிட்ட இருந்து படித்தேன். படித்த நேரம், காலம், இடம் எல்லாம் நன்கு நினைவில்
இருக்கிறது.
அப்பா தூய மரியன்னை உயர்நிலைப்
பள்ளி ஆசிரியர். அந்தக் காலத்து ஆசிரியர்களுக்கான உடையும் ‘ஆங்கிலோ-தமிழ் ஸ்டைல்’ தான்.
கீழே அனேகமாக வேட்டி தான். சிலர் மட்டும் pantsம் போடுவதுண்டு. மேலே சட்டை. அதை வேட்டிக்குள்
அல்லது pantskகுள் ‘இன்’ செய்திருப்பார்கள். அதை அரைக்கைச் சட்டையாகவோ முழுக்கை சட்டையாகவோ
இருக்கும். காலர் பட்டன் எல்லாம் கிடையாது. இதற்கு மேல் ஒரு கோட்டு. சில தமிழாசிரியர்கள்
இதோடு ஒரு தலைப்பாகை வைத்துக் கொள்வார்கள். காலில் ஒரு பழைய செருப்பு. சிலருக்குக்
கையில் ஒரு குடை ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் மாதிரி இருக்கும்.
நினைவுக்கு வந்த பழைய
விஷயம் என்று சொல்ல ஆரம்பித்தேனே… அது அனேகமாக 60 ஆண்டுகளுக்கு முந்திய நிகழ்வுகள்.
எனக்கு பத்துப் பன்னிரெண்டு து வயது இருந்திருக்கும். மதுரையிலிருந்து திருநெல்வேலி-
தென்காசி வழியில் நடுவில் உள்ள ஆலங்குளத்தில் பேருந்தில் போய் இறங்கி அங்கிருந்து இரண்டு மூன்று மைல் இருக்கும் எங்கள் கிராமத்திற்கு
கூடு வைத்த மாட்டு வண்டியில் அல்லது நடந்தே போய்ச் சேருவோம். பொதுவாக குடும்பத்தோடு
போனால் மாட்டு வண்டி. அம்மா என் சிறு வயதிலேயே இறந்து போனதால் அடுத்த அம்மா வந்து விட்டார்கள்.
குடும்பத்தோடு கிறிஸ்துமஸ் லீவுக்கும், கோடை லீவுக்கும் தவறாமல் போய் விடுவோம். ஊருக்கு
வரும் போதெல்லாம் அப்பா வேட்டி சட்டை மட்டும் தான் போடுவார்கள். Pants are ruled
out. அதிலும் இப்போது யாரும் அப்படி வேட்டி கட்டியது போல் பார்க்கவில்லை. எப்படியோ
இரட்டையாக எட்டு முழ வேட்டியைக் கட்டுவார்கள். உள்ளே ஒரு சுற்று. அது முழங்காலுக்குக்
கொஞ்சம் கீழே இருக்கும். அடுத்தது வெளிச்சுற்று.
இப்படிக் கட்டுவதும் படித்தவர்கள் மத்தியில் தான். அதுவே அப்போ படித்தவர்கள் மத்தியில்
இருந்த பேஷன். அப்பா எப்போதும் அந்த தட்டுச்சுற்று வைத்து தான் வேட்டி கட்டுவார்கள்.
ஊருக்குப் போகும்போதே அப்பா அங்கிருக்கும் மக்கள் கூட்டத்தின் நடுவில் தனியாகத் தெரிவார்கள்.
Standing out from the crowd!
அப்பாவின் ஊருக்குத்
தான் முதலில் போவோம். அங்கு சில நாள். பிறகு அங்கிருந்து பத்துப் பதினைந்து மைல் தொலைவிலுள்ள
அம்மா ஊருக்குப் போவோம். என்னைப் பெற்ற, வளர்த்த இரு அம்மாக்களின் வீடும் ஒரே ஊரில்
தான். அங்கு என்னை பெத்த அம்மா வீட்டிற்கு சில நாட்களுக்கு அனுப்பி வைப்பார்கள். இது
தான் வழக்கம். சில சமயம் நானும் அப்பாவும்
மட்டும் பேருந்தில் என் அம்மா வீட்டிற்குப் போவோம். அப்பா என்னை விட்டு விட்டு ஒரு
அரை மணி நேரம் அந்த தாத்தா பாட்டி வீட்டில் இருந்து விட்டுப் போய்விடுவார்கள்.
இதுபோல் ஊருக்கும் போகும்
போது இரண்டு வேளைகளில் அப்பா பேஷன் இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலாக மாறும். கிறிஸ்துமஸ் அன்றைக்கு
எங்கள் கிராமத்தில் இரவு கோவிலுக்குப் போவோம். அப்போது அப்பா அந்த பேஷனுக்கு மாறுவார்கள்.
இன்னொரு சமயம் எப்போது என்றால் என் தாத்தா-பாட்டி வீட்டுக்கு அப்பா வரும்போதும் அந்த
பேஷன் வந்து விடும். கீழே தட்டுச்சுற்று வேட்டி. மேலே முழுக்கைச் சட்டை. இடது தோளில்
அங்கவஸ்த்திரம் என்பார்கள். அட … அது என்ன
என்று இந்தக் காலத்து ஆட்களுக்கு விளக்கமாகச் சொல்லணுமே!
இடது தோளில் போட்டால்
அது முன்னால் ஒரு அடி அளவிற்கும். முதுகில் ஒரு அரை அடி சேர்த்து ஒன்றரை அடி நீளமும்
துண்டு போல் தொங்கும். ஆனால் அது துண்டு போல் இருக்காது. வேட்டி மாதிரி மல் துணி. அதில்
ஒரு ஜரிகை பார்டர் இருக்கும், அதை எப்படித்தான் அந்த காலத்தில் அப்படி அழகாக iron செய்வார்களோ
தெரியாது. நம் கைவிரலின் மூன்று விரல் அகலத்திற்கு ஒன்றிற்கு மேல் ஒன்றாக மடிப்புகள்
வருவது போல அடுக்கடுக்காக தேய்த்திருப்பார்கள். இரண்டு பக்கமும் ஜரிகை பளபளக்கும்.
மாப்பிள்ளை ஜபர்தஸ்து போலும். கட்டாயம் முதல் தாத்தா-பாட்டி வீட்டிற்கு வரும்போது இது
தான் அப்பா போட்டிருக்கும் உடை.
எதற்கு அப்பா போட்டிருந்த
உடையைப் பற்றி சொல்கிறானே என்று நினைப்பீர்கள். எனக்கு சமஸின் கட்டுரை வாசித்ததும்
அடடா …’மெஜுரா’வை விட்டு விட்டாரே என்று நினைவுக்கு வந்த போது என் அப்பா எப்போதெல்லாம்
மெஜுரா என்று சொல்வார்கள் என்பது நினைவுக்கு வந்தது. ஒரு முறை அப்பா என்னை மட்டும்
அப்பா ஊரிலீருந்து அம்மா ஊருக்கு அழைத்துக் கொண்டு பேருந்தில் போனார்கள். ஊருக்குப்
போகும் போதெல்லாம் அப்பா பேருந்தின் கடைசி இருக்கையில் அனேகமாக நடுவே உட்கார்வார்கள்.
அதில் இருந்தால் தான் ஒரு கெத்து மாதிரி தெரியும்னு நினைக்கிறேன். பஸ்ஸில் இருப்பவர்கள்
நடுவே நடுநாயகமாக உட்கார்ந்து போல் இருக்கும்.
அதுவும் அந்தக் காலத்தில் பஸ்ஸின் இடது பக்கம் இப்போது போல் இல்லாமல் ஜன்னல்களை ஒட்டி
ஒரே ஒரு நீள சீட்டாக பஸ்ஸின் முழு நீளத்திற்கு இருக்கும். அந்த sitting
arrangementல் அப்பா தான் நடுநாயகமாக எனக்குத் தெரியும்.
அப்பா வேட்டி கட்டியிருப்பது
… தோளில் அங்கவஸ்த்திரம் போட்டிருப்பது … எல்லாமே அப்பாவைத் தனியாகக் காட்டி விடும்.
நிச்சயமாக பஸ்ஸில் இருப்பவர்களில் யாராவது ஒருவராவது ‘சார்வாள் … எந்த ஊர்க்காரவிய
நீங்க?’ அப்டின்னு ஒரு கேள்வி கட்டாயம் வந்து விடும். அப்பா அப்படியே ரொம்ப ஜெண்டிலாக
‘மெஜுரா’ என்பார்கள். அனேகமாக கேள்வி கேட்டவருக்கு மெஜுரா அப்டின்னா எந்த ஊர்னே தெரியாது.
உடனே அப்பா ’மதுரை’ என்பார்கள். இது போல் சில முறை நடந்தது என் நினைவில் இன்னும் இருக்கிறது.
சமஸ் இதை அடிமைத் தனத்தின்
எச்ச ருசி என்கிறார். Yes, remnants of
British legacy!
*
8 comments:
Tanjore for தஞ்சாவூர் விட்டு விட்டீங்களே?
Cape comorin for கன்னியாகுமரி!
Dindigul for திண்டுக்கல்!
Sadras for சதுரங்கப்பட்டினம்
இலங்கை Tincomalle போர் திருகோணமலை!
______________
பெயர் நம்மவா மாத்தினது; Mayuram - Mayavaram: இதன் உண்மையான் பெயர் மயிலாடு துறை!
பெயர் நம்மவா மாத்தினது;vedaranyam - இதன் உண்மையான் பெயர் திருமறைக்காடு
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்!
சமீபத்தில் வந்த அப்பா சினிமா பார்த்ததன் விளைவோ?
--
Jayakumar
[[குடை ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் மாதிரி இருக்கும்.]]
எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் குடுமியில்லையா? ஹ! ஹா!
_____________
என் தாத்தா சென்னை வாசி! மத்திய அரசில் வேலை; கோட்டு, தொப்பி, டை, காலில் செருப்பு! குடை, தெர்மொஸ் ப்ளாஸ்க்! நெற்றியில் மூணு பட்டை--போட்டோ பார்த்துள்ளேன். கேள்வி தான்! எனக்கு இருபத்து ஐந்து வயதில் தான் இறந்தார்!
அவர் ஓய்வுக்கு அப்புறம் தான் நான் பிறந்தேன். ஆபிஸ் சென்று பார்த்ததில்லை. அதனால், எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் குடுமி இருந்ததா என்று தெரியவில்லை?
உண்மை ஐயா
வெள்ளையர்களின் நாக்கில் வராத சில இடங்களை அவர்களுக்கு வந்தபடி அழைத்தார்கள். அதையே நம்மவர்கள் ஸ்டைலுக்காக சொல்லுவார்கள்
டிராங்கோபார் - தரங்கம்பாடி! ஊர் பெயர்கள் சுவரஸ்யம்.
//நம்பள்கி said... இலங்கை Tincomalle போர் திருகோணமலை!//
நீங்க இலங்கை சென்றதால் தெரிஞ்சிருப்பீங்க Adams Peak என்ற மலை பகுதி தமிழில் சிவனொளிபாதம் மலை.
அடிமைத்தனம் என்பதைவிட அடிமைத்தன மனநிலை என்பதானது இன்னும் நம்மைவிட்டு அகலவில்லை.
[[[வேகநரி said...
டிராங்கோபார் - தரங்கம்பாடி! ஊர் பெயர்கள் சுவரஸ்யம்.
//நம்பள்கி said... இலங்கை Tincomalle போர் திருகோணமலை!//
நீங்க இலங்கை சென்றதால் தெரிஞ்சிருப்பீங்க Adams Peak என்ற மலை பகுதி தமிழில் சிவனொளிபாதம் மலை.]]]
எல்லாம் சரி! பண்டாரங்கள் செய்த மற்றுமொறு கூத்து...அதாவது Adams Bridge"--ஐ ராமர் பாலம் ஆக்கிய கதை!
இது ஒரிஜினல் ராமர்; மூலிகை மூலம் பெட்ரோல் தாயரிக்கும் ராமர் பிள்ளை இல்லை!
Post a Comment