Wednesday, November 02, 2016

914. GOD IS NOT GREAT ... CHRISTOPHER HITCHENS ... 1





*

                   இரண்டாம் பதிவு


             மூன்றாம் பதிவு 

                                            CHRISTOPHER HITCHENS'

                                    GOD IS NOT GREAT:  
                       HOW RELIGION  POISONS  EVERYTHING                                        
                                                          
                          

கிறிஸ்டோபர் ஹிட்சன்ஸ் (Christopher Eric Hitchens) இங்கிலாந்தில் உள்ள போர்ட்ஸ்மவுத் என்னுமிடத்தில் 1949 ஆண்டு பிறந்தார்.   1970ல் ஆக்ஸ்போர்டில் பட்டப்படிப்பை முடித்தார்.  1981 ஆண்டில் அமெரிக்காவிற்குப் பயணமானார். 2007ல் அமெரிக்க குடிமகனாக – ஆங்கிலேய-அமெரிக்கனாக -  ஆனார். டிசம்பர் 2011ல் உணவுக்குழல் கான்சரில் மரணமடைந்தார்.

அவர் சாகும் நேரத்தில் தன்னை எதிர் நோக்கி வந்த  மரணத்தை கம்பீரமாக அனைத்துக் கொண்ட மன வலிமையை அவர் அப்போது எழுதியிருந்த ஹிச்-22 (Hitch-22) என்ற நூலை வாசிப்பவர்களுக்கு மிக எளிதாகப் புரியும். அதில், “மரணத்தை நேர்கொண்டு சந்திக்க விரும்புகிறேன்; என்னைத் தேடி வரும் மரணத்தை அதன் நேர்பார்வையில் கண்ணோடு கண் நோக்கி ‘வந்து பார்’ என்று சொல்லி, சந்திக்க விரும்புகிறேன்” என்று அதில் எழுதியுள்ளார். அந்த வரிகள் நம் மகா கவியின் இரு வரிகளை என் நினைவுக்குக் கொண்டு வந்தது:

                                 “காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன்
                                  காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்”.

சாகும் தருணத்திலும் இறை சக்தி தன்னை விடுவிக்கலாம் என்று நம்புவது நான் முன்பு நினைத்ததை விடவும் வெறும்  அர்த்தமற்றதாகவும், மேம்போக்கான கருத்தாகவும் தோன்றுகிறது என்று எழுதியுள்ளார். இறை மறுப்பில் அத்துணை உறுதியோடு இருந்துள்ளார்.

ஏழு வயதிலேயே உலக அரசியலில் நாட்டம் ஆரம்பித்தது. அப்போதிருந்த உலகச் சூழலும் ஹங்கேரி, சூயஸ் பிரச்சனைகளும் தனக்கு அப்போதே நன்கு தெரிந்திருந்தன என்று  1997ல் கொடுத்த செவ்வியில் கூறியுள்ளார். முளையிலேயே அவருக்கு ஏற்பட்டிருந்த இந்த ஆர்வம் அவரை ஒரு பெரும் பத்தியாளராக உருவெடுக்க வைத்தது. அதோடு நில்லாது கட்டுரையாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர், இதழாளர், பேச்சாளர், சமூகத்  திறனாய்வாளர், மதத் திறனாய்வாளர் என்று பன்முகங்களோடு வெற்றிகரமாகச் செயல்பட்டார். வானொலி, தொலைக்காட்சி, விவாத மேடை என்று பல ஊடகங்களிலும் பேசுவதற்கு தொடர்ந்து அழைப்புகள் வந்தன. எளிமையான தோற்றத்துடன் சென்று வலிமையான வார்த்தைகளால் முழங்கி வந்து கேட்போரை ஈர்த்து வந்தார்.

பரம்பொருள் ஒன்று உண்டு என்பது ஒரு சர்வாதிக்காரத்தனமான நம்பிக்கை. இது முழுமையாக தனிமனித சுதந்திரத்தை முழுமையாக வேரரறுத்து விடும். சுதந்திரமான வெளிப்பாடுகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் – இவை இரண்டும் மதப்போதனைகளுக்கு சரியான மாற்றாக அமைய வேண்டும். அந்த இரு காரணிகளும் வாழ்வியலை, கலாச்சாரத்தை நமக்குப் போதிக்க வேண்டும். “சான்றுகள் இல்லாமல் அழுத்தமாகக் கூறப்படும் எதையும் சான்றுகள் கூட இல்லாமல் புறந்தள்ளி விடவேண்டும்” என்பது ஹிட்சன்னின் ஆணித்தரமான கருத்து.


அவரது நூலைப் பற்றி ...

கட்டுப்பாடுள்ள மதங்கள் மிகவும் வன்முறையான, அறிவுக்குப் பொருந்தாத, நல்லிணக்கமற்ற தன்மைகளைக் கொண்டுள்ளன. மேலும் அவை இனவெறி, குழுவெறி, மதவெறி போன்ற தேவையற்றவைகளைத் தூண்டி விடும் தன்மை வாய்ந்தவை. மதங்களின் முக்கிய முதலீடுகளே அறியாமையும், அறிவுத் தேடலுக்கு எதிர்ப்பும், பெண்களை அடிமைப்படுத்துவதும், குழந்தைகளை வலிந்து இழுத்து வைத்திருப்பதும் தான். பிளவு படுத்துதலே அவைகளின் முன்முதல் குறிக்கோளாக உள்ளது.

முதல் அத்தியாயத்தில், தான் தனது ஒன்பதாவது வயதிலேயே விவிலியத்தின் மீது கேள்விகளை எழுப்பியதாகச் சொல்லியுள்ளார். கிடைத்த பதில்களும், சொல்லப்பட்ட தெய்வீகத் திட்டங்களும் மிகுந்த குறையோடு இருப்பதாகத் தனக்குத் தோன்றியதாகச் சொல்லியுள்ளார்.

அத்தியாயம் நான்கில், மதங்கள் மருத்துவத்திற்கு எதிராக இருப்பதாகக் கூறியுள்ளார். போலியோவிற்கான தடுப்பு மருந்துகளுக்கு எதிராக இஸ்லாமியர் இருப்பதைக் குறிப்பிடுகிறார்.

ஆறாவது பகுதியில் ஆப்ரஹாமிய மதங்கள் நம்பிக்கையாளார்கள் எல்லோரும் தங்களைப் பாவிகள் என்று நினைக்க வைத்து சுய மரியாதையைக் கெடுத்து அவர்களைக்  குட்டிச்சுவராக ஆக்கி விடுகிறது.  அதே நேரத்தில் தங்களைப் படைத்த கடவுள்கள் தங்களைக் காத்து ரட்சிக்கக் காத்திருப்பதாக நினைக்க வைத்து கடவுள்களை பெரும் பீடத்தில் ஏற்றி நிறுத்தி விடுகின்றன.

ஏழாவது அத்தியாயத்தில் பழைய ஏற்பாட்டில் உள்ள குழப்பங்களைப் பற்றி எழுதுகிறார். பழைய ஏற்பாடு தலையைச் சுற்ற வைக்கும், அச்சுறுத்தும் முன்பின் தொடர்பில்லாத நம்பமுடியாதவைகளின் தொகுப்பு.

எட்டாவது அத்தியாயம்: புது ஏற்பாடு பழைய ஏற்பாட்டை விட தீயதாக இருக்கிறது என்கிறார். கிறிஸ்து சிலுவையில் மரித்த பிறகு பல ஆண்டுகள் கழித்தே புதிய ஏற்பாடுகள் பலரால் எழதப்பட்டன. அதுவும் அவைகளுக்குள் நிறைய வேற்றுமை உள்ளன. அவைகள் சொல்வதையெல்லாம் அப்படியே ஒப்புக்கொள்ளும்படியான உண்மைகளை அவைகள் சொல்லவில்லை. ஏசு என்று ஒருவர் இருந்ததற்கான வரலாற்றுக் குறிப்புகளும் ஏதுமில்லை என்கிறார்.

லூக்காவின் விவிலியத்தில் ஏசுவின் பிறப்போடு ஒட்டியுள்ள மூன்று நிகழ்வுகளில் உள்ள பொருத்தமின்மையைக் குறிப்பிடுகின்றார். அகஸ்டஸ் ரோம ராஜ்ஜியம் முழுமைக்குமான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுத்தது, ஹெரோது மன்னன் யுதேயாவை ஆண்டுகொண்டு இருந்தது, சிரியாவின் கவர்னராக குயிரினியஸ் இருந்தது – இந்த மூன்று நிகழ்வுகளும் வரலாற்றின்படி சரியான தகவல்கள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அகஸ்டஸ் எடுத்த கணக்கெடுப்பு பற்றி எந்த வரலாற்றுக் குறிப்புகளும் கிடையாது. யூத வரலாற்றாசிரியர் ஜோசபஸ் அப்படி நடந்த ஒரு கணக்கெடுப்பில் மக்கள் தங்கள் பிறந்த ஊருக்கே திரும்ப வேண்டுமென்று எந்த உத்தரவும் தரவில்லை. அந்தக் கணக்கெடுப்பும் ஏசு பிறந்து ஆறு ஆண்டுகள் கழித்த பின்பே எடுக்கப்பட்டது. அடுத்து, ஹெரோது மன்னன் 4 BC-லேயே இறந்ததே வரலாறு தரும் செய்தி. மூன்றாவதாக குயிரினியஸ் சிரியாவின் கவர்னராக இருந்தது அந்தக் காலக்கட்டத்தில் இல்லை.


ஒன்பதாவது பகுதியில் இஸ்லாமிய மதம் பற்றிய தன் கருத்துகளைக் கூறுகிறார். முகமதுவும் அவரது வழியைப் பின்பற்றியவர்களும் ஏனைய மதங்களிலிருந்து கடன் வாங்கியவைகளை வைத்தே இம்மதத்தை உருவாக்கினர். ஹதிஸ் அனைத்தும் அப்போது  அரேபியாவிலும், பெர்ஷியாவிலும் பரவலாகப் பேசப்பட்டவைகளின் தொகுப்பு என்கிறார்.

அடுத்த பத்தாவது அத்தியாயத்தில் புதுமைகள் என்பவை எல்லாம் வெறும் கட்டுக் கதைகள் அல்லது புரிதல் இல்லாத, நம்ப முடியாத மக்களின் பிதற்றல்கள் என்பது அவர் கருத்து.

பதினொன்றாவது அத்தியாயத்தில் எப்படி மதங்கள் உருவாகின; எப்படி ஒழுக்கமில்லாத, தவறான மனிதர்கள் அவைகளை உருவாக்கியதாகச் சொல்லிக் கொள்கிறார்கள் என்று விளக்குகிறார். மார்ஜோ கார்ட்னர் (Marjoe Gortner) பெந்தகொஸ்தே சபையை உருவாக்கியதையும், ஜோசப் ஸ்மித் என்பவர் மார்மோனிசம்  என்ற ஒரு வழிபாட்டு முறையை உருவாக்கியதையும் விளக்கியுள்ளார்.

அடுத்து, பதினாலாவது பகுதியில் இந்து மதமும் புத்த மதமும் வறுமையையும், தவறான தகவமைப்புமுள்ள பிரபுத்துவத்தின் ஆளுமையையும் கொண்டுள்ளன.  “நிர்வாணம்” என்பதன் மூலம் முக்தியடையலாம் என்று திபெத்திலும் இலங்கையிலும் இம்மதங்கள் கற்பிப்பதை முற்றிலுமாகப் புறந்தள்ளுகிறார்.





கோவிலுக்கு வெளியே செருப்பைக் கழட்டி வைப்பது போல் உங்கள் மனதையும், காரண காரியங்களையும் கழற்றி வைத்துவிட்டு வாருங்கள் என்பதைப் பொருளற்றது என்று எதிர்க்கிறார்.  அவர் இந்தியாவிற்கு வந்து புனேயில் தங்கியிருந்த போது காசு பிடுங்கும் உத்தியில் சிறந்து பணம் பறித்திக்கொண்டிருந்த சந்திர மோகன் என்பவரையும், சத்யநாராயண ராஜூ என்பவரையும் சந்தித்தது பற்றியும் குறிப்பிடுகிறார்.

பதினைந்தாம் அத்தியாயத்தில் மதம் தான் முதல் பாவம்என்று கூறிவிட்டு, மதங்களில் உள்ள ஐந்து பெரும் முறையற்ற கொள்கைகள் என்று வரிசைப்படுத்துகிறார்.
1.             மிக எளிதாக நம்பும் மக்களிடம் இந்த உலகைப்பற்றிய தவறான ஒரு பார்வையை ஏற்படுத்துதல்.
2.             (அஸ்டெக் மதத்தில் இருப்பது போல்) உயிர்ப்பலி கொடுத்து கடவுளை ‘குளிர’ வைக்கலாம் என்று புகட்டுவது.
3.             பாவப்பட்ட மக்களை ‘பரிகாரம்’ என்ற குழிக்குள் தள்ளுவது.
4.             மறுமையில் நித்தியமான மோட்சம் / சுவனம் / முக்தி என்றோ, நித்தியமான நரகம் என்றோ சொல்லி ஏமாற்றுவது.
5.             எளிதில் கைக்கொள்ள முடியதவைகளை – பாலினக் கட்டுப்பாடுகள் போல் – மக்கள் தலையில் சுமத்துவது.

பதினெட்டாம் அத்தியாயம்: சாக்ரட்டிஸ், ஐன்ஸ்டீன், வால்டர்(Voltaire), ஸ்பினோசா(Spinoza), தாமஸ் பெய்ன்(Thomas Paine), சார்ல்ஸ் டார்வின், ஐசக் ந்யூட்டன் போன்ற பெரும் அறிஞர்கள் பற்றிய விளக்கங்களைத் தருகிறார். இவர்களில் சாக்ரட்டிஸ், ந்யூட்டன்தவிர மற்றவர்கள் அனைவரும் இறை மறுப்பாளர்களாகவோ, இயற்கை வழிபாட்டாளர்களாகவோ, இறைநாட்டம் இல்லாதவர்களாகவோ இருந்ததைக் குறிப்பிடுகிறார்.

ஞ்னத்திற்குப் புது வழி” என்ற தலைப்பில் கடைசி அத்தியாயத்தில், முன்பு இருந்தது போல் இல்லாமல் இப்போதைய உலகில் மனிதர்களிடம் மதங்களின் தேவை மிகவும் குறைந்து விட்டது என்று விவாதிக்கிறார். நிகழ் காலத்தில்  தனிமனித வாழ்விலும், பொதுக்கலாச்சாரத்திலும் அறிவியலுக்கும், காரணகாரியங்களுக்குமே பெரும் பங்கு இருக்கிறது.  மதங்களிலிருந்து மானுடர்களை மீட்டால் அது தனிமனித உயர்விற்கும், சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

இறைமறுப்பாளர்கள் சமுதாயத்தை மதங்களின் பிடியிலிருந்து விடுவிக்க உழைக்க வேண்டும்.






*




11 comments:

kasampattysuresh said...

நன்றி சார்!
படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைப் பன்மடங்கு உயர்த்திவிட்டது உங்கள் கட்டுரை!!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

(Hitch-22) பற்றி படித்துள்ளேன். தற்போது கூடுதல் செய்திகளை அறிந்தேன். நன்றி.

G.M Balasubramaniam said...

எத்தனை ஒத்த கருத்துகள்

தருமி said...

kasampattysuresh........... நன்றி

தருமி said...

Dr B Jambulingam,

Hitch-22 - இது அவரது நினைவலைகள்

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

G.M Balasubramaniam,

//எத்தனை ஒத்த கருத்துகள்// ... இதுக்குத்தான் பெரியவங்க நீங்க வரணும் அப்டிங்கறது. நன்றி

velvetri.blogspot.in said...

உண்மைதான். இந்த அறிமுகமே இறை மறுப்பை பரவலாக்குவதுதான். நன்றி

சார்லஸ் said...

இறை மறுப்பை மக்களிடம் விதைக்கும் எண்ணமே அணு குண்டு போன்ற அபாயகரமான கருத்துதான் . அணு குண்டு பற்றிய விழிப்புணர்வு இருக்கிறதோ இல்லையோ இறைவன் இருத்தலைப் பற்றிய கருத்துக்கு மறு கருத்து பேசுவதையே கொடும் பாவமாக கருதும் மக்களிடம் இதைக் கொண்டு செல்வது மிகவும் கடின காரியம். மதத்தை நிராகரிக்கும் மனிதனைக் காண இன்னும் எத்தனை காலம் ஆகுமோ தெரியவில்லை. கற்காலம் இரும்பு காலம் என்று காலங்கள் மாறியது போல தற்செயலாக மாறினால்தான் உண்டு. அதுவரை ஹிச்சன்ஸ் போல பலர் வந்து போய்க் கொண்டே இருப்பார்கள்.

தருமி said...

சார்லஸ்

நேற்றைக்கு இன்று பரவாயில்லை!!!

வளரும் ... வளரணும்

வேகநரி said...

மிகவும் அருமையான பதிவு தகவல்கள். நன்றி.

Post a Comment