ஏனைய பதிவுகள்
…….
1. https://dharumi.blogspot.com/2020/08/1103-1.html
3. https://dharumi.blogspot.com/2020/08/1105-3.html
4. https://dharumi.blogspot.com/2020/09/1107-4.html
*
கைத்தொலைபேசி
கையோடு இருந்ததால் நேரம் பார்க்க முடிந்தது. யார் கண்டது தேதியையும், நாளையும்? இது
பற்றாது என்பதுபோல் நினைவுகளும் அப்போது அத்தனை துல்லியமாக இல்லை. நாட்கணக்கு, கிழமைக்
கணக்கு என்று ஏதும் தெரியாது. இரண்டு நாட்கள் இந்த வார்டில் இருந்திருப்பேன். வேறு
நல்லதொரு அறைக்கு மாற்றலாம் என்று என்னை இரண்டாவது மாடியில் உள்ள அறைக்குச் செல்ல,
தள்ளு நாற்காலியில் வைத்து அழைத்துச் சென்றனர். ஒரு நடு வயது பெண்மணி அழைத்துச் சென்றார்கள்.
சமூக இடைவெளிக்காக மின்தூக்கி வேலை செய்யாது என்று என்னை வைத்துத் தள்ளிக்கொண்டே சென்றார்கள்.
பாவம் அவர்கள்.. மூச்சு அப்படி வாங்கியது. தள்ளிக் கொண்டு ஒரு ஹாலுக்குள் நுழைந்தார்கள்.
கீழே நானிருந்தது போலவே இதுவும் ஒரு நீண்ட ஹால்.. மத்தியில் மருத்துவர்களுக்கான சிற்றறை
இங்கே இல்லை. கட்டில்கள் அனைத்தும் ஓர் ஓரத்தில் கிடந்தன. ஒரு கட்டிலைத் தேர்ந்தெடுத்து மின் விசிறிக்கு அடியில்
நல்ல இடமாகத் தேர்ந்தெடுத்து எனக்காகத் தயார் செய்தார்கள். எல்லாம் முடிந்து நான் கட்டிலில்
உட்கார்ந்ததும் ஆக்சிஜன் மாஸ்க் போட தயாராகும் போது தான் தெரிந்தது - அந்த ஹாலில் ஆக்சிஜன்
கொடுப்பதற்கான வசதிகள் கிடையாது என்பது. உடனே
மீண்டும் பழைய ஹாலுக்குஏ திரும்பி வந்தோம். ஏறத்தாழ இந்த ‘பயணத்திற்கு’ 30 நிமிடங்கள்
எடுத்திருக்கலாம். ஆனால் அதற்குள் நான் படுத்திருந்த கட்டிலில் வேறு யாரோ “பால் காய்த்து”
குடியேறிவிட்டார்கள்.
நல்ல
வேளை இன்னொரு இடம் உடனே கிடைத்தது. அதுவும் முதலில் இருந்ததை விட நல்ல இடம். மருத்துவ
சிற்றறைக்கு ஒட்டிய கட்டில்; முன்பு போலவே சிற்றறைக்கு மேற்கு புறத்தில் கிடைத்தது.
பழைய சூழல். ஆனால் என்ன .. முன்பு கட்டிலின் இரு புறமும் என்னைப் போன்ற நோயாளிகள்.
இப்போது ஒரு புறம் மட்டும் அந்தத் ‘தாக்குதல்’ இருக்கும்; இன்னொரு பக்கம் மருத்துவ
அறைப் பக்கம் திரும்பியிருந்து கொள்ளலாம். இன்னொரு நாள் அங்கே கழிந்தது. அடுத்து சென்றது
வசதியான இன்னொரு வார்டு. அதன் பெயர் எல்லாம் சொல்ல மாட்டேன். எதற்கு இதை வாசிக்கும்
(எண்ணிக்கையில் மிக சிலரே இதை வாசிக்கிறீர்கள்; மற்றவர்கள் எல்லோருக்கும் வாசிக்க அச்சம்
போலும்!) எல்லோரையும் அச்சுறுத்த வேண்டும்.
அந்த
வார்டுக்குள் நுழைந்ததும் அத்தனை அழகாக இருந்தது அது. ஹாலிவுட் படங்களில் வரும் அமைப்பில்
இருந்தது. நட்ட நடுவே மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்குமான வட்ட வடிவமான
Doctors' Well. உள்ளே அவர்களுக்கான செயலிடங்கள் அழகாக இருந்தன. அந்த வட்டத்தைச் சுற்றி
இன்னொரு பெரிய வட்டமாக இருந்தது. படுக்கைகளும் ஒரு பக்கம் வரிசையாக இருந்தன. ஏ.சி.
இருந்தது. ஆனால் படுக்கைகளுக்கு நடுவே மிக மிகச் சிறிய இடம் மட்டுமே இருந்தது.அடுத்த
கட்டிலில் படுத்திருப்பவரைத் தொட்டுக் கொள்ளக் கூடிய அளவில் அருகாமை. அவ்வளவு வசதியிருந்தும்
கழிவறையில் இந்திய வகை மட்டுமே இருந்தது. ஜெகன் அதற்கு உடனே மாற்று ஏற்பாட்டுக்கான
வழியைக் கண்டு அதை வாங்கி வந்து விட்டார். இங்குள்ள பிரச்சனை என்னவென்றால் கோவிட் மட்டுமில்லாது
அனைத்து நோயாளிகளும் இங்கு வருவார்கள் போலும்; அதனால் தான் death rate அதிகமாகக் கண்ணில்
பட்டது .. சில சமயங்களில் அருகருகே…
அப்படியும்
ஒன்று நடந்தது. மாலை ஒருவர் பக்கத்து கட்டிலுக்கு வந்தார். அவருக்கு ஆக்சிஜன் மாஸ்க்
வைக்க மருத்துவர்களும் உறவினர்களும் முயற்சித்தும் முடியவில்லை. நான் தூங்கி விட்டேன்.
திடீரென்று இரவு கண் விழித்தேன். என்னைச் சுற்றி கூட்டமாக மருத்துவர்களும், செவிலியர்களும்
நிற்பது போல் தெரிந்தது. பிறகுதான் தெரிந்தது… பக்கத்துக் கட்டில் நோயாளிக்காக நிற்கிறார்கள்
என்று. அப்போது இரண்டரை மணி. அவருக்கான சிகிச்சை அடுத்த நாளும் தொடர்ந்து கொண்டிருந்தது.
அடுத்த நாள் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். திடீரென்று மருத்துவர் ஒருவர் வேகமாக ஓடி
வந்து எனது கட்டிலுக்கும் அடுத்த கட்டிலுக்கும் இடையில் இருந்த சிறு இடைவெளியில் நுழைந்து
CPR கொடுக்க முனைந்தார். அந்த முயற்சியில் என் கட்டிலும் சேர்ந்தே ஆடியது. எங்கே இனி
சாப்பிட முடியும். சிறிது நேரத்தில் கட்டில் ஆடியதும் நின்றது; அவரது வாழ்வும் முடிந்தது.
நல்ல
வேளை. இது நடந்து முடிந்த அடுத்த நாள் காலை மறுபடி என்னை பழைய green zone வார்டுக்கு
அழைத்துச் சென்றார்கள். இம்முறை மருத்துவச் சிற்றறைக்குக் கிழக்குப் பக்கம், அந்த மருத்துவ
அறைக்குப் பக்கத்திலேயே கட்டில் கிடைத்தது. இதில் அடுத்த இரு நாள் கழிந்தது. ஏனோ இப்பகுதி
அமைதியாகவும், அதிக இழப்பும் இல்லாமல் இருந்தது. என்னால் இப்போது ஓரளவு ஆக்சிஜன் இல்லாமல்
இருக்க முடிந்தது. தேவையான நேரத்தில் வைத்தால் போதும் என்பது போல் இருந்ததால் பக்கத்து
கட்டில் நடப்புகளையும் பார்க்க முடிந்தது.
பலரும்
தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சுற்றி நடந்தன. இதே வார்டில் இரு நாட்களுக்கு முன்
நானிருந்த போது பக்கத்து கட்டிலில் இருந்த கணவன் மனைவி இருவரிடமும் யாரோ ஏஜென்ட் ஒருவர்
ஒரு மருத்துவமனையைப் பற்றிச் சொல்லி, 4 லட்சம் வேண்டுமென்று பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது என் உடல் அந்த அளவு நன்றாக இல்லை. அவர்களிடம் நான் ஏதும் பேசவில்லை. ஆனால்
இப்போது உடல் கொஞ்சம் நலமாக இருந்ததால் இரண்டாவது கட்டிலில் இருந்த ஒரு தம்பதியிடம் நடந்த உரையாடலைக்
கேட்க முடிந்தது. ஒரு ஆட்டோரிக்ஷா ட்ரைவர் வந்து பேசியிருப்பார் போலும். ஒரு லட்சத்து
நாற்பதாயிரம் கொடுத்தால், சுகமாக்கி விடுவார்கள் என்று கூறியிருப்பார் போலும். கணவனுக்குத்தான்
உடல் நலமில்லை; இளம் வயது தான். அவரின் மனைவி கடன் வாங்க தொலைபேசியில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
அந்த அளவு வசதியில்லாத ஆட்கள். கடனுக்காக அலை மோதிக் கொண்டிருந்தார்கள். அவர்களின்
முடிவு தவறாகப் பட்டது. அந்தப் பெண்ணை அழைத்து உங்கள் முடிவு சரியில்லை; அவருக்கு இன்னும்
கட்டாயம் ஆக்சிஜன் தேவைப் பட்டது. அதுவே அந்தப் பெண்ணுக்கான கவலை. அவரிடம் நான் இரு
நாட்களுக்கு முன்பு அதே நிலையில் இருந்தேன். அதே போல் அவருக்கும் சுகமாகிவிடும். மருத்துவம்
மிகவும் சரியாகச் செய்கிறார்கள். யாரோ சொன்னதை நம்புவதை விட இங்கே இத்தனை பேர் மருத்துவம்
பார்க்கிறார்களே அவர்களை நம்புவது மேல் என்று சொல்லி விட்டு, ஆனால் முடிவை நீங்களே
எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். அவர்கள் இருவருக்கும் கொஞ்சம் நம்பிக்கை பிறந்திருக்கும்
என்று நம்பினேன். அவர்களிடம் பேசிய சில மணி நேரங்களில் என்னை மூன்றாவது மாடியில் உள்ள
தனி அறைக்கு எடுத்துச் சென்றார்கள். நல்ல வேளை இப்போது மின் தூக்கி வேலை செய்தது. அங்கே
தனி அறை. ஒரு மாலையும் இரவும் அங்கே தங்கியிருந்தேன். அங்கேயும் தொடர்ந்து மருத்துவக்
கவனிப்பு இருந்தது. வழக்கமாக இரவு இரண்டிலிருந்து இரண்டரை மணிக்குள் மருத்துவர்கள்
வந்து ஆக்சிஜன் அளவு அல்லது ஊசி மருந்து கொடுப்பது என்று கவனிப்பார்கள். இங்கும் அதே
கவனிப்பு இருந்தது.
அடுத்த
நாள் காலையில் இன்று வீட்டுக்குப் போகலாம் என்றார்கள். (இதன் தொடர்ச்சி முதல் கட்டுரையில்
…)
வீட்டிலும்
ஆக்சிஜன் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். முதல் இரண்டு மூன்று நாள் அவ்வப்போது
அது தேவையாக இருந்தது. இரவு நேரமாகினும் மகள் உதவியோடு சிறிது நேரம் தேவைப்படும் போது
வைத்துக் கொண்டேன். சிறிது நடந்தாலும் ஏறத்தாழ 15-20 நிமிடத்திற்கு மூச்சு வாங்கும்.
மனசுக்குள் பட்டாம்பூச்சி பறக்குது என்பார்களே, எனக்கு வயிற்றுக்குள் பெருச்சாளி ஓடும்.
நாளாக நாளாக பெருச்சாளி மெல்ல எலியாக,மூஞ்சூராக மாறியது.
ஆனாலும்
அனைத்து மருத்துவர்களும் என் வயதைக் காரணமாகச்சொல்லி முழுமையான குணம் பெற இரண்டு மூன்று
மாதங்கள் எடுக்கும் என்று கூறியுள்ளார்கள்.
வண்டியைத்
தள்ளிச் செல்ல வேண்டும்…..
(என் 3வது கட்டுரையை அதிகமாக யாரும் வாசிக்க விழையவில்லை போலும். ‘எத்ற்கு இந்தக் கழுதையை வாசிக்க வேண்டு’மென்று நீங்கள் நினைத்திருக்கலாம். அதனால் சிறிது விவரணைகளைச் சுருக்கி இதோடு முடித்துக் கொள்கிறேன்.
முக்கியமாக இதை எழுத இரு காரணங்கள்:
வீட்டோடு முழுமையாக இருந்தும் எனக்கு வந்து விட்டது --
1. கொரோனாவைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
2. அரசு மருத்துவ மனையில் நான் பெற்ற மருத்துவம் முழுமையாகவும், சிறப்பாகவும் இருந்தது.
3. ஆனால் தனி மருத்துவ மனைகளுக்கு இது ‘காசு பார்க்கும்’ நேரமாக ஆகிவிட்டது. ஒரு ஊசி 60,000 ரூபாய் என்று மூன்று ஊசி போட்டு முதல் 3 நாளிலேயே நண்பர் ஒருவரிடம் இதற்கான 1.80,000 வாங்கி விட்டார்கள். எனக்கும் முதல் நாள் போட்ட ஊசி கொஞ்சம் விலை அதிகமானது என்றார்கள். ஆனால் இப்படி ஒரு பகல் கொள்ளை அங்கு ஏதுமில்லை. நானும் யோசித்துப் பார்த்தேன்... 60,000 ரூபாய்க்கு ஒரு ஊசி. ஒரு வேளை உலகிலேயே மிக அதிகமான விலையுள்ள PLACEBO என்ற மருந்தாக இருக்குமோ? (PLACEBO பொருள் தெரியாதவர்கள் அகராதியைப் பார்த்துக் கொள்ளுங்கள். இதுபோன்ற பகல் கொள்ளைகள், ஏஜெண்டுகள் என்பவையிலிருந்து சிலர் தற்காத்துக் கொள்ள முடியும் என்ற காரணத்தால் இதை எழுதினேன். கசப்பாக, நீண்டதாக போனமைக்கு மன்னிக்கவும்.)
,
8 comments:
/என் 3வது கட்டுரையை அதிகமாக யாரும் வாசிக்க விழையவில்லை போலும்/ அப்படியில்லை sir. வாசித்த பின் என்ன சொல்வதென்றே தெரியவில்லை என்பதுதான் உண்மை. மிகச் சிரமமான கட்டத்தை உற்றாரின் அரவணைப்போடும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் கவனிப்பினாலும் கடந்து வந்து விட்டீர்கள். விரைவில் நீங்கள் முழுமையாகக் குணமடையப் பிரார்த்தனைகள். மற்றவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகளோடு உங்கள் அனுபவத்தைப் பதிந்திருப்பதற்கும் நன்றி.
இதமான ஒரு பின்னூட்டம்.
மிக்க நன்றி.
சார் படிப்பதைக் காட்டிலும் எழுதுவதற்கு அதிக துணிச்சலும் முனைப்பும் தேவை என நினைக்கிறேன்
சார் படிப்பதைக் காட்டிலும் எழுதுவதற்கு அதிக துணிச்சலும் முனைப்பும் தேவை என நினைக்கிறேன்
கட்டில் ஆடியதும் நின்றது, அவரது வாழ்வும் முடிந்தது....ஒவ்வொரு சொல்லும் சொற்றொடரும் நீங்கள் பட்ட வேதனைகளை முன்வைத்தன. எச்சரிக்கையாக இருக்கவேண்டியது இக்காலகட்டத்தின் அவசியம் ஆகும். அனைவருக்கும் ஒரு படிப்பினையாக இப்பதிவுகள் அமையும் ஐயா. நன்றி.
கமல், ஜம்புலிங்கம் ஐயா, //பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சுற்றி நடந்தன.// இதற்காகவே கட்டாயம் எழுத வேண்டுமென நினைத்தேன்.
மீண்டு வந்ததற்கு வாழ்த்துகள் 🎊. எல்லா நலமும் ,வளமும் பெற இறைவனை வேண்டுகிறேன்.
ஆசிரியர் தின வாழ்த்துகள் Sir.
100/100
Post a Comment