நீதிமன்றம் கொடுத்த ஒரு ஆணையின் படி மதுரையில் உள்ள பல தெருவோர ஆக்கிரமிப்புகள் இடிக்கப் பட்டன. அதென்னவோ எப்பவுமே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதைப் பார்க்கும்போது - அது குடிசையாயிருந்தாலும், கோபுரமாயிருந்தாலும் - எனக்கு ஒரு மகிழ்ச்சி. பல கதைகள் அந்த சமயத்தில் வெளி வந்தன. ஒரு தெருவோரக் கோயிலை இடித்த போது அந்தக் கோயிலுக்குக் கீழே ஒரு ரகசிய இருப்பிடம் இருந்ததாகவும், அது அந்தக் கோயிலை, அதிலுள்ள சாமியைக் 'காப்பாற்றி' வந்த ஒரு தாதாவின் மறைவிடமாகப் பயன்பட்டு வந்ததாகவும், அதுனுள்ளே பல ஆயுதங்கள், ரகசிய torture chamber ஒன்று இருந்ததாகவும் சேதிகள் வந்தன.அந்தக் கோயிலை இடித்ததற்காக அந்தப் பகுதி மக்களும், சிறப்பாக வியாபாரிகளும் மிகவும் சந்தோஷப் பட்டார்களாம். இந்தக் கோயில்களைப் பற்றிக் கேள்விப் படும்போது பராசக்தி வசனம்தான் நினைவுக்கு வருகிறது.
இன்னொன்று - பிளாட்பாரம் முழுவதையும் ஆக்கிரமித்து, ரோட்டையும் கொஞ்சம் விழுங்கி ஒரு கோயில். நான் மிக அடிக்கடி அதனைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தாலும்,அந்த எந்த சாமிக்குரிய கோயில் என்பது இதுவரை எனக்குத் தெரியாது. ஏனெனில் அந்தக் கோயிலை வெளியிலிருந்து பார்க்கும்போது பிரமாண்டமாகத் தெரிவது சாமி சிலையல்ல; சாமியாக ஆக்கப் பட்ட ஒரு சமூக, அரசியல்காரரின் சிலைதான். அதை இடிக்க நகராட்சி ஆட்கள் வந்தபோது நடந்ததாக நான் கேள்விப் பட்டது: அந்தக் கோயிலைச் சார்ந்தவர்கள் தங்களுக்குள் பேசி, 'நீங்கள் இடிப்பதை விட நாங்களே இந்தக் கோயிலை முழுவதுமாக இடித்து விடுகிறோம்' என்று கேட்டுக் கொண்டார்களாம். அதிகாரிகளும் ஒத்துக் கொண்டு அந்தச் சிலையின் கால்பகுதியில் உள்ள ஓரிரு ஓடுகளை மட்டும் உடைத்துவிட்டு - ஒரு formality-க்குத் தான் - சென்றார்களாம். கதை அங்கேயே முடிந்துவிட்டது. அந்த சாமி தெரியாத அந்தக் கோயிலும், அதனுள்ளே இருந்த மனிதச் சிலையும் இன்னும் முழுவதுமாக பத்திரமாக இருக்கின்றன.
மாநகராட்சி அலுவலர்களுக்கு இடிப்பதற்காகச் செல்லும்போது போதுமான பாதுகாப்பு தரப்படவில்லை. அவர்கள் சிறப்புப் படி கேட்டு அது கொடுக்கப் படவில்லை. இடிக்கும் வேலைக்காக அவர்கள் வெளியே வந்தாலும் அலுவலக வேலையையும் பார்க்க வேண்டியிருந்ததால் அவர்கள் இந்த ஆக்கிரமிப்பை அகற்றும் வேலையில் தொடர விரும்பவில்லை. - இப்படி பல காரணங்கள் சொல்லப் பட்டன. அது பற்றாது என்பது போல் பின்னால் நீதிமன்றமும் பல தடைகள் இட்டதாகவும் சேதி. இதனாலெல்லாம் வெகு வேகமாக நடந்த அந்த ஆக்கிரமிப்பு அகற்றும் நல்ல வேலை நடுவிலேயே நின்று போனது.
இந்த வேலை ஆரம்பித்தபோது இருந்த வேகத்தைப் பார்த்து 'ஆகா, நம் மதுரைக்குப் புதுமுகம் கிடைக்கப் போகிறது' என்று சந்தோஷமாக இருந்த எனக்கு 'அடப் போங்கப்பா, இவ்வளவுதானா?' அப்டின்னு ஆகிப் போச்சு.
இதில் இன்னொரு பெரிய வருத்தம். நான் பார்த்த ஒரு தெருக்கோயில் இடிபடாமல் போனதுதான் எனக்கு மிக வருத்தம். ஏனெனில், அந்தக் கோயிலை அந்த இடத்தில் அப்படிக்
கட்டியதை நினைக்கும் போது atrocious என்ற வார்த்தைதான் எனக்குத் தோன்றியது. எப்படி இப்படி மனசாட்சி இல்லாமல், எல்லோருக்குமே இடைஞ்சலான ஒரு செயலை அவ்வளவு தைரியத்துடன், அனாசியமாக,just like that, தான்தோன்றித்தனமாகச் செய்ய முடியும் என்பதை என்னால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. அதிகாரங்களும், சட்டங்களும் யாருக்காக; அவைகளைச் செயல்படுத்த வேண்டிய சமூக அமைப்புகளும் எதற்காக என்றுதான் அதைப் பார்க்கும்போதெல்லாம் தோன்றும். பேருந்துகள் செல்லும் முக்கியமான ஒரு ரோடு; அதனோடு நிறைய குடியிருப்புகள் இருக்கும் பகுதியிலிருந்து இந்த ரோட்டோடு வந்து சேரும் இன்னொரு பெரிய ரோடு. இந்த முக்கூட்டின் நடுவில், சாலையைப் பெருமளவு மறித்து, ரோட்டின் மேல் கட்டப் பட்டுள்ள இந்தக் கோயில்; இப்படி எல்லோருக்கும் இடைஞ்சலாக இருக்கும் இந்தக் கோயிலுக்கு மிக அருகிலேயே ஒரு police outspost! அது எதற்காக இருக்கும் என்பதை நாமே கற்பனை செய்துகொள்ள வேண்டியதுதான். நீங்கள் பார்க்க சில படங்கள் -
படம் 1. நீங்கள் நம்பித்தான் ஆகணும். சரியாக 3 ரோடு சேருமிடத்தில் கோவில்.
படம் 2. மேற்கிலிருந்து வரும் இந்த ரோடு கோயிலின் பின்புறச் சுவரில் 'கடவுளே!' என்று முட்டி நிற்கிறது.
படம் 3. முட்டி முடிந்து நிற்கும் சாலை
படம் 4.தெற்கிலிருந்து வரும் இப்பகுதிக்குரிய இம்முக்கிய சாலையின் முதுகில் முளைத்த கட்டியாய் தெருவை அடைத்து நிற்கும் கோவில்
படம் 5. அதே தெரு; வடக்கிலிருந்து தெற்காய். கோவிலுக்கு மிக அருகில் ஒரு சின்ன போலீஸ் அவுட் போஸ்ட். கடவுளைக் காக்கவா? கடவுளைக் காப்பவர்களைக் காக்கவா? (கடவுளுக்காய்?!) 'காத்திருந்து போகவும்' என்று ஒரு போர்ட் வேறு!
எத்தனை பேர் கடவுள் வழிபாட்டிற்காக இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள். எத்தனை மக்கள் நித்தம் நித்தம் இதனைக் கடந்து செல்கிறார்கள். அதில் எத்தனையோ பேர் சட்டம் ஒழுங்கோடு தொடர்புள்ள வேலையில் உயர் பதவிகளில், மாநகராட்சியின் உயர்பதவிகளில், நீதிமன்றங்களோடு தொடர்புள்ள உயர்நிலையில் இருப்பவர்களாக இருக்கும். ஏன் இந்த சமூக மீறலைக் கேள்வி கேட்க யாருக்கும் தோன்றவில்லை என்பதுதான் எனக்குப் புரியாத ஒரு விஷயம்.
அதோடு இக்கோவிலைப் படம் எடுக்கப் போகிறேன் என்று அந்தப் பகுதியில் உள்ள நண்பனிடம் சொன்னேன். அதற்கு அவன் 'உனக்கு ஏண்டா, இந்தப் பொல்லாப்பு. அப்படியே எடுப்பதானால் சுத்தி முத்தி பார்த்து எடு' என்று பயமுறுத்தினான். அதோடு 'வேணும்னா ராத்திரி வந்து எடேன்' என்றான் அப்பாவியாக! ஆக நான் படம் எடுக்கும்போது கொஞ்சம் சுற்றுச் சூழல் எல்லாம் கொஞ்சம் பார்த்துக்கொண்டு, ஏதோ ஒரு investigative journalism செய்யும் போது உண்டாகும் tension-ஓடுதான் படங்களை வேக வேகமாக எடுத்தேன்.
நாத்திகன் என்பதால் வரும் கோபமில்லை இது; ஒரு குடிமகனாக வரும் கோபம்.
பி.கு.
இப்பதிவுக்கு "நம் யாருக்கும் **** இல்லை." என்று தலைப்பிட நினைத்தேன். Fill up the blank என்பது போல் தலைப்பில் இடம் விட்டு அதை உங்கள் இஷடத்திற்கு நிறைவு செய்து கொள்ளச் சொல்ல நினைத்தேன். நாம் யாருக்கும் வெட்கம் / சுய ஒழுக்கம் / நியாய உணர்வு / தார்மீகக் கோபம் / தைரியம் / பொறுப்பு இல்லை - இப்படி ஏதாவது ஒன்றைப் போட்டு பூர்த்தி செய்து கொள்ளலாமே என்று நினைத்தேன்.
இன்னொரு பி.கு.
இந்தக் கோவில் முதலிலே இருந்து வேறு வழியில்லாமல் இந்த ரோடுகள் போடப் படவில்லை. ஏற்கென்வே இருந்துவந்த சாலைகளை மறித்து சமீபத்தில் எழுந்த கோவில் இது.
... ... ... ... ... தொடரும் ....
... ... ... ... யாரைத்தான் நொந்து கொள்வதோ ...2
26 comments:
கண்ணை மூடிக்கொண்டு போட்டுத்தள்ள வேண்டும்... கோவிலைத்தான்.
பல மாடிக்கட்டிடங்களை சும்மா பட்டனை தட்டி கீழே வைக்கிறார்கள்,தம்மாத்துண்டு கோவிலை அகற்ற இன்னும் நேரம் வரவில்லை போலும்.
இங்க வேண்டுமென்றால் தலைப்பை போட்டுக்கொள்ளலாம்.:-)
சார்.....
லோக்கல் ரவுடிகளுக்கு ஒரு சமூக அந்தஸ்து தேவை. அதற்கு ஒரு சங்கம். சங்கத்துக்கு வருமானம் தேவை. அதற்கு ஒரு சுலபமான வழி தேவை. கோவில் கட்டி நன்கொடை வாங்குவது ரொம்ப சுலபம். ரெண்டு கடைக்கு போய் "சமூக அந்தஸ்து தேவைப்படுவோர்" மருவாதியா கேட்டால் குடுத்துத்தான் ஆகனும். கோவில் கட்ட நிலம் தேவை. ஒரு டீக்கடைக்கே ரோட்டு மேல இடம் வேணும். அதனால ரோட்டு மேல கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணியாச்சு.
லோக்கல் ஜாதி சங்கத்துக்கு கவுன்சிலர் சப்போர்ட்.
கவுன்சிலருக்கு MLA சப்போர்ட்.
அவருக்கு மந்திரி
மந்திரிக்கு முதல்வர்.
எல்லாரும் ஓர் ""இனம்""
புரியுதா???
நன்றி வடுவூராரே.
ஆனா இது - ''இங்க வேண்டுமென்றால் தலைப்பை போட்டுக்கொள்ளலாம்.:-) // - புரியலையே! ஏதும் லின்க் விட்டுப் போச்சோன்னு ஒரு சந்தேகம்.
நாணு,
சொன்னது சரியா படுதுதான். ஆனாலும் ஒரு லாஜிக் உதைக்குது ..]
//கவுன்சிலருக்கு MLA சப்போர்ட்.
அவருக்கு மந்திரி
மந்திரிக்கு முதல்வர்....//
இந்த சங்கிலி சரிதான்; ஆனாலும் எந்த அமைச்சர் / முதல்வர் வந்தாலும் இவைகள் அப்படியே நிரந்தரமாவது எப்படி?
அட இது என்ன தொல்லையாப் போச்சு ? வயசான காலத்துல உங்களுக்கு எதப் பாத்தாலும் தப்பாத் தெரியுது. மதுரை மக்கள் என்ன ரோட்ட மறிச்சு வீடா கட்டிப்புட்டாங்க பெங்களூர்காரங்க மாதிரி?
இதைப் பார்த்து ஆறுதல் பட்டுக் கொள்ளவும். :-))
http://www.deccanherald.com/Content/May312007/city200705314748.asp
//A house was constructed on the ‘site’, right on the road, blocking access to the connecting roads on either side of the house and obstructing continuity of the existing road//
***
எல்லா இடத்துலேயும் இருக்கும் இறைவன் ரோட்டுமேலயும் இருக்கான் என்பதை உணர்த்தவே இந்த ஏற்பாடு.
நாங்கள் எல்லாம் சேர்ந்து இந்த ரோட்டுச் சாமிக்கு "ஹெல்மெட் சாமி" (ரோட்டில் இருந்து மக்களைக் காப்பதால்) என்று பெயர் வைக்க உத்தேசம். :-))
***
//இந்த சங்கிலி சரிதான்; ஆனாலும் எந்த அமைச்சர் / முதல்வர் வந்தாலும் இவைகள் அப்படியே நிரந்தரமாவது எப்படி?//
எல்லாம் சொரணை கெட்ட மக்களால்தான். :-((
விடுபட்ட link
http://www.deccanherald.com/Content/May312007/city200705314748.asp
பலூனையா,
//வயசான காலத்துல உங்களுக்கு எதப் பாத்தாலும் தப்பாத் தெரியுது//
இது ரொம்பவே சரியாத்தான் இருக்கு. :(
//இறைவன் ரோட்டுமேலயும் இருக்கான் என்பதை உணர்த்தவே ..//
இப்படி ஒரு தத்துவம் இருக்கா; பரவாயில்லையே! இதுதான் எதிலயும், எதையும், பாஸிட்டிவ் ஆகவே பார்க்கணும்னு சொல்லுவாங்களே அதுதானோ?
தருமி சார், இதுல ரெண்டு விஷயம் இருக்கு. ஒன்னு பொது பிரச்சனைக்கு நாம ஏன் குரல் கொடுக்கணும் என்கிற சுயநலம். ஒரு கதை ஒன்னு நியாபகத்துக்கு வருது. ஒரு ராஜா ஏதோ ஒரு பூஜைக்காக பெரிய அளவுல பால் சேகரிக்கணும்னு நினைச்சானாம். அதுக்காக ஒரு மிகப்பெரிய அண்டா ரெடி செய்து அரண்மனை வாசலில் வைத்துவிட்டு நாட்டு மக்கள் எல்லாரும் ஒரு சொம்பு பால் கொண்டு வந்து இதற்குள் ஊற்றவும்னு முரசறைந்து அறிவிச்சானாம். அந்த அண்டாவுக்குள்ள பால் ஊத்தணும்னா ஒரு ஏணி மேல ஏறிப்போய் ஊத்திட்டு வரணும். அப்போ கூட எம்பித்தான் அதுக்குள்ள பால ஊத்த முடியும். அறிவிச்ச நேரக்கெடு முடிஞ்சதும் இன்னொரு உயரமான ஏணில ஏறி அந்த அண்டாவுக்குள்ள எட்டிப்பாத்த ராஜாவுக்கு பயங்கர கோபமாம். ஏன்னு கேக்கறீங்களா? அண்டா முழுக்க பச்சைத்தண்ணியில்ல நிரம்பியிருந்தது? பேருக்கு ஒரு பொட்டு கூட பால் இல்லையாம். ஏன்னா எல்லருமே அடுத்தவன் அத்தனை பேரும் பால்தான் ஊத்த போறான், நாம மட்டும் தண்ணி ஊத்தினா யாருக்கு தெரியபோவுதுன்னே நினைச்சு ஊத்தியிருந்திருக்காங்க. அதுதான் நம்ம மக்களோட குழுமனப்பான்மை - அதே எண்ணத்தோடுதான் ஏதோ ஒரு ஹீரோ வந்து எல்லா பொது பிரச்சனையும் தீத்து வைக்கணும்னு நம்ம மக்கள் காத்திக்கிட்டிருக்காங்க.
ரெண்டாவது காரணம் உம்மாச்சி கண்ணை குத்திடும் வகையறா பயமுறுத்தல்கள். அதை பயன் படுத்திக்கொள்ளும் நம்மூர் அரசியல் வியாதிகள். நான் உங்களோட போன பதிவுல சொன்னா மாதிரி சாமி சம்பந்த பட்ட விஷயத்தை , அது எந்த மதத்து சாமியானாலும் சரி அதை பத்தி விமர்சனம் பண்ண போயி வாங்கிகட்டிக்கற தெம்பு பொதுவா யாருக்கும் இருக்கறதில்லை.
இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு ஒரு சின்ன ஐடியா - சுத்து வழிதான்னாலும் இதுதான் நம்மூருக்கு சரிபட்டு வரும். எங்க ஊரில் சில பெரியவர்கள் சொல்லுவர் - ஒருத்தன் அரசுப்பணில செய்யற எந்த விஷயமும் அவனை தனிப்பட்ட முறையில எந்த விதத்திலும் பாதிக்காதுன்னு. இப்போ ஒரு மரத்துல முனி இருக்கறதா சொல்றாங்கன்னு வைங்க, அதை யாரவது தனி மனுஷன் வெட்டினா அவனை ரத்தம் கக்க வைக்குமாம். ஆனா ஒரு சாலை பணியாளர் அலுவல் நிமித்தம் அதை வெட்டினால் அவருக்கு ஒன்னும் ஆகாதாம். பொதுவா மூட நம்பிக்கைகள் வரிசைல இதையும் சேத்து கிண்டல் பண்றது நம்ம வழக்கம். யோசிச்சு பாத்தா, இந்த மாதிரி பாஸிடிவ்வான மூட நம்பிக்கைகளை கொஞ்சம் ஊதி பெருசு படுத்தினா நம்ம மக்களை கொஞ்சமாச்சும் திருத்த முடியுமோன்னு தோணுது - இந்த ராமானந் சாகரோட சீரியலில் வரும் சண்டைகள்ள நெருப்பு அம்பை சரி பண்ண தண்ணி அம்பு விடுவாங்களே அது போல பாஸிடிவ் மூட நம்பிக்கைகளை வச்சு நெகடிவ் மூட நம்பிக்கைகளை ஒரளவு சரி பண்ண முடியும்னு நம்பறேன். எங்க ஊர்ல சில இடங்களில்ல் இதை அப்பா பயன்படுத்தி வெற்றி கொண்டுமிருக்கிறார். அப்படித்தான் இந்த மாதிரி விஷயங்களை கொஞ்சம் மாத்த பாக்கணும்.
ரொம்ப நீண்ட பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும். உங்களோட ஆதங்கங்கள் பல விஷயங்களில் என் கருத்தையும் ஒத்துப்போறதால் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு ஒரு பதிவளவு எழுதி தள்ளிட்டேன். :)
இஇதிலென்ன சந்தேகம் தருமி ஐயா..
ரோடு அரசியல்கட்சிகளுடையது.. அதில் அவர்கள் என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய்து கொள்வார்கள்.. எப்படியோ ஒரு பிஸினஸ் கையில் அவர்களுக்கு வேண்டும். அவ்வளவுதான். இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகளுடன் ஆங்காங்கே சமரசமும் செய்து கொள்ளத் தயங்க மாட்டார்கள்.
உங்களுக்குள்ள உரிமை கோயிலுக்குப் போகலாம். கும்பிடலாம். கண்டிப்பாக தட்சணை வைக்க வேண்டும். பேசாமல் போய்விட வேண்டும். அடுத்த முறை எலெக்ஷனில் ஓட்டுப் போடலாம்.. போட விருப்பமில்லையெனில் உங்கள் பெயரில் அவர்களே போட்டுவிடுவார்கள்.
ஆக சாதாரண பொதுஜனமான உங்களால் எதுவுமே செய்ய முடியாதெனில் பேசாமல் நீங்களும் ஒரு அரசியல் கட்சியைத் துவக்கி இந்தக் கோயிலை நீக்கி போக்குவரத்தைச் சீராக்கி மக்களுக்கு நன்மை செய்வதுதான் எனது கட்சியின் ஒரேயரு லட்சியம் என்று அறிவியுங்கள்.. நான் முதலில் ஓடி வருகிறேன்.. அடி வாங்கினாலும் அயோடெக்ஸ் தடவுவதற்கு துணைக்கு ஆள் வேண்டாமா?
வேற ஒண்ணுமில்லை. மதத்தின் பெயரால் எதைச் சொன்னாலும் கண்ணை மூடி ஏற்றுக்கொள்ளும் மந்தை ஆடுகள் இருக்கும் வரை இந்த நிலை தொடரத்தான் செய்யும்.
உண்மைதான் யாரை நொந்து கொள்ள முடியும். கையாலகாத அதிகாரிகள் மீதா? கோயிலை வைத்து பிழைப்பு நடத்தும் ம(ட)தச் சாம்பிராணிகள் மீதா? சுயநலப் பிசாசுகளாய் திரியும் அரசியல் வாதிகள் மீதா? இல்லை வெடகமில்லாமல் இந்தக் கோயிலிலும் வழிபடும் மக்கள் மீதா?
யாரை நொந்து கொள்ள முடியும்?
நடுத்தெருவில் கோவில் இருந்தால், அதனை அகற்றவேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு மட்டுமல்ல. நமக்கும் இருக்கிறது. நீங்கள் செய்திருப்பது நல்ல ஒரு விஷயம். தினமலரில் இதனை கொடுத்துப்பாருங்கள். அதில் இது போன்ற விஷயங்கள் வருகின்றன. அவர்கள் பதிப்பித்து அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கலாம்.
இல்லையேல், எந்த அடிப்படையில் இங்கே கோவில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது என்று பிரீடம் ஆஃப் இன்பர்மேஷன் ஆக்டின் படி அரசுக்கு கேள்வி அனுப்பலாம்.
திருச்சியில் மலைகோட்டை வாசலுக்கு எதிராக பிஸியான ரோட்டின் நட்ட நடுவே ஒரு தர்கா இருக்கிறது. எல்லோரும் சுற்றித்தான் சென்று கொண்டிருக்கிறார்கள்.
ஜெ ஆட்சியின் போது இது போன்ற ஆக்கிரமிப்புகளை அழித்ததாக செய்தி படித்த நினைவு. (ஒரு மசூதி இடித்தால் ஒரு கோவில் இடிப்பு என்று கணக்கு வைத்து இடித்ததாக நினைவு)
படங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது :-) இந்த வெயிலயையும் தாங்கிக் கொண்டு இப்படி "செவிடன் காதில் சங்கை" ஊதும் மேட்டருக்காக ஒளிஞ்சு மறைஞ்சு புகைப்படமெல்லாம் எடுத்து, யார்கிட்ட அய்யா சொல்லி பெலம்புறீங்க - மண்டபத்தில ஒத்தையாள நின்னுக்கிட்டு.
அந்த கடவுளே இரக்கமில்லாமல் நடு ரோட்டில் சிலை வைச்சவன் கையை பிடிச்சு இலுத்துப் போடாமல் 'சிவனே'ன்னு நிக்கும் போது வும்ம மனுசப் புலம்பல் யார் காதில் விழப்போதுங்கிறீங்க...
நலம்தானா, நலம்தானா~~~
உடலும் உள்ளமும் நலம்தானா~~~~ :-P
லக்ஷ்மி,
//எங்க ஊர்ல சில இடங்களில் இதை அப்பா பயன்படுத்தி வெற்றி கொண்டுமிருக்கிறார்.//
அதையெல்லாம் கொஞ்சம் சொன்னால் எல்லாருக்குமே நல்லா இருக்குமே
//ரொம்ப நீண்ட பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்.//
மன்னிக்கிறதா இல்லை :)
இன்னும் இதுபோல "தவறுகளைத்" தொடர்ந்து செய்யும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்...
உண்மைத் தமிழன்,
அடப் போங்க'ய்யா! அயோடெக்ஸ் தடவி விடக்கூட நீங்கதானா நம்ம கட்சியில ... ஒரு தலைவனுக்கு இப்படி ஒரு நிலையா ?!
நந்தா,
நேர்மையான சட்ட திட்டங்கள் போடணும்.
அவைகளை ஒழுங்கா கடைப் பிடிக்க வைக்கணும்.
இந்த இரண்டும் ஒழுங்கா நடந்திட்டா ... முடவனின் கொம்புத்தேனா அது?
எழில்,
நீங்கள் சொன்ன இரண்டில் ஒன்றிற்கு கொஞ்சம் முயற்சியெடுத்துள்ளேன்.
//திருச்சியில் மலைகோட்டை வாசலுக்கு எதிராக பிஸியான ரோட்டின் நட்ட நடுவே ஒரு தர்கா இருக்கிறது. எல்லோரும் சுற்றித்தான் சென்று கொண்டிருக்கிறார்கள். //
எழில், நீங்கள் சொல்லும் தர்காவுக்கு வரலாற்றுப் பின்புலம் உண்டு. அந்த இடமே வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடம். மேலரன் வாசலும் சூசையப்பர் ஆலயமும் அங்கேயே இருக்கின்றன. என்னைப் பொருத்தவரையில் அங்கேயே இருக்கும் தெப்பக்குளம் அஞ்சலகம் கூட வரலாற்று முக்கியத்துவம் கொண்டது என்றே கூறுவேன். பாதுகாக்கப்படவேண்டிய இடம்.
டெல்பின்,
//LOTS OF differences of OPINION உண்டு. //
நல்லதுதானே; தப்பேயில்லையே!
//ஏன் நாம் adjust பண்ணிக் கொள்ளலாமே! //
பண்ணிக்கலாமே! நானும் சொல்லியிருக்கேனே: //எனக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது -பரவாயில்லை நம் மக்கள் adjust செய்து கொள்ளுகிறார்களே என்று.//
ஆயினும் இவ்விஷயம் பற்றி என் முடிவுரையை எனது அடுத்த ஓரிரு பதிவுகள் - எல்லாமே இந்தப் பதிவின் தொடர்புடையதாகவே இருக்கும் - முடித்த பிறகு சொல்ல நினைத்துள்ளேன். தொடர்ந்து வாருங்களேன் ...
//இந்த மாதிரி விஷயங்களில் நானும் உங்கள் கட்சித்தான்//
நன்றி'ங்க.
//My question is why you want to impose your views on other people?//
where or what is imposition here? it is my view on something and am sharing it with you all. as simple as that. right?
தெக்ஸ்,
யாருப்பா அது? ஆளே காணோம்?! வாங்க'ய்யா, வந்து ஜோதியில் கலந்துக்குங்க. உங்க அறிவியல், சூழலியல் கட்டுரை இல்லாம என்ன பசியோட இருக்கோம் .. இப்படி உட்டுட்டு காணாம போனா எப்படி?
மண்டபத்தில ஒத்தையாள நின்னுக்கிட்டு- அப்படித்தான் ஆரம்பிச்சேன். இப்போ பாத்தீங்கல்ல... நாங்க எம்புட்டு பேரு இருக்கோம்னு ..
ஓகை,
சரியான தகவலைத் தந்தமைக்கு நன்றி. எந்தவித மனமாச்சரியங்கள் இல்லாமல் வரலாற்றிடங்களுக்குத் தனி மதிப்பு கொடுக்கவேண்டும்.
//அடப் போங்க'ய்யா! அயோடெக்ஸ் தடவி விடக்கூட நீங்கதானா நம்ம கட்சியில ... ஒரு தலைவனுக்கு இப்படி ஒரு நிலையா ?!// இந்த வரிகளை படிச்சுட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன். மதுரக்காரவுளுக்கு வயசானாலும் குசும்பு போகாதுன்றது சரியாத்தேன் இருக்கு. ஒரு ஐடியா, வெள்ளித்திரை, சின்னத்திரைலேர்ந்தெல்லாம் காணாம போன யாராவது ஒரு ஹீரோயினை பிடிச்சு உங்க கட்சிக்கு கொ.ப.செவா ஆக்கிருங்க. அப்புறம் பாருங்க, உங்க கட்சியோட அயோடெக்ஸ் துறையின் வளர்ச்சியை...
///லக்ஷ்மி said...
//அடப் போங்க'ய்யா! அயோடெக்ஸ் தடவி விடக்கூட நீங்கதானா நம்ம கட்சியில ... ஒரு தலைவனுக்கு இப்படி ஒரு நிலையா ?!// இந்த வரிகளை படிச்சுட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன். மதுரக்காரவுளுக்கு வயசானாலும் குசும்பு போகாதுன்றது சரியாத்தேன் இருக்கு. ஒரு ஐடியா, வெள்ளித்திரை, சின்னத்திரைலேர்ந்தெல்லாம் காணாம போன யாராவது ஒரு ஹீரோயினை பிடிச்சு உங்க கட்சிக்கு கொ.ப.செவா ஆக்கிருங்க. அப்புறம் பாருங்க, உங்க கட்சியோட அயோடெக்ஸ் துறையின் வளர்ச்சியை...///
ஐயா இனமானப் பேராசிரியரே.. மேடமே ஐடியா கொடுத்திட்டாங்க.. உத்தரவிடுங்கள்.. வேண்டாம்.. கண் ஜாடை காட்டுங்கள் போதும்.. அள்ளிக் கொண்டு.. ச்சே..ச்சே.. வேணாம்.. தூக்கி வந்து சிம்மக்கல் கண்மாயில் வைத்து தீர்த்தநாரி செய்து கட்சியில் சேர்த்துவிடுவோம்.. அப்புறம் கொ.ப.செ.வா ஆக்குவீங்களோ.. அல்லாட்டி கொ.வி.செ. ஆக்குவீங்களோ எனக்குத் தெரியாது.. ஆனா நான்தான் அவுங்களோட பி.ஏ. டீலிங் ஓகேவா பேராசிரியரே..?
லஷ்மி,
எங்களுக்கென்ன அயோடெக்ஸ் துறையின் வளர்ச்சியா முக்கியம்? என்னங்க நீங்க...!
உ.தமிழன்,
வேணாங்க .. கட்சியில் இருப்பதே நாம ரெண்டுபேரு. நீங்க கொண்டுவர்ர மூணாவது ஆள வச்சி நம்ம ரெண்டுபேரும் தனித் தனிக் கட்சி ஆரம்பிக்க வேண்டியதாயிரும்போல!
யாரையும் நொந்துக்க வேண்டாம். சந்துல சிந்து பாடுற இந்த சிங்காரங்களைச் சீவீட்டாலே போதும். வேற என்ன பண்றது. ஆனா ஒன்னு அங்க ஆக்கிரமிச்சுக் கோயில் கட்டுனானே...அவனுக்கு ஆண்டவன் வைக்கிற ஆப்பு இருக்கு.
ரோடு போட்ட பிறகு 'முளைச்ச' கோயிலா? உடனே அதை 'காவு' கொடுத்தே தீரணும்.
அதுதான் நியாயம்.
வரவர அராஜகமால்லெ இருக்கு(-:
Post a Comment