Monday, November 07, 2011

534. அய்யனாரும் நானும்

*


கடந்த ஞாயிற்றுக் கிழமை நண்பர் வீட்டில் ஒரு விழாவிற்கு அழைத்திருந்தார்கள். போயிருந்தோம். சாப்பாட்டு நேரம். மாடியில் சாப்பாடு. கொஞ்சம் காத்திருக்க வேண்டியதிருந்தது. நானும் தங்க்ஸும் உட்கார்ந்திருந்த இடத்தில் என் வயதுக்காரர் ஒருவர் எதிரில் வந்து உட்கார்ந்தார். சைஸான தாடி வைத்திருந்தார். கலகலப்பாகப் பேசினார். இந்தியா முழுவதும் ரவுண்ட் அடித்தேன் என்றார். ஒரே மகளின் கணவர் இராணுவத்தில் இருந்ததால் இந்த வாய்ப்பு என்றார். கையில் தன் பெயரைப் பச்சை குத்தியிருந்தார். பெயர்: அய்யனார். தங்க்ஸ் அவர் கையில் இருந்த பெரிய மோதிரத்தைக் காண்பித்தார்கள். பெரிய எம்.ஜி.ஆர். படம் போட்ட தங்க மோதிரம். செம சைஸ். மோதிரத்தைப் பெருமையாகக் காண்பிக்கும்போது தான் அந்தக் கையிலும் ஒரு பச்சை பார்த்தேன். அ.தி.மு.க. படம் போட்ட பச்சை. எம்.ஜி.ஆர். தன் கட்சிக்காரர்கள் எல்லோரும் கையில் பச்சை குத்திக் கொள்ளுங்கள் என்றார். (ஆனால் அவர் மட்டும் பச்சை குத்திக் கொள்ளவில்லை.) பக்தர்கள் எல்லோரும் உடனே பச்சை குத்திக் கொண்டனர். இவரும் இதற்காகச் சென்னை போய் அங்கு பச்சை குத்திக் கொண்டாராம். அப்போதுதான் சொன்னார் அவர் ஊர் ஸ்ரீவில்லிப்புத்தூர் பக்கத்தில். தாமரைக்கனி நல்ல நண்பராம். அதுதான் அந்த சைஸில் மோதிரமா என்றேன். சிரித்துக் கொண்டார்.

அரசியல் பேசினோம். இன்னும் எம்.ஜி.ஆரின் பக்தர்தானாம். ஆனால் மம்மி பிடிக்காதாம். ஆனால் ஓட்டு மட்டும் எம்.ஜி.ஆருக்காக இன்றும் அ.தி.மு.க. தானாம். இருவரும் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் பற்றி பேசினோம். அப்போது அவர் என்னைவிடச் சின்னவர் என்று தெரிந்தது. அப்படித்தானா என்று கேட்டேன். என் வயதைக் கேட்டார். அவர் வயதைச் சொல்ல என்னமோ தயக்கம். ஆனால் அப்போது பள்ளியில் படித்ததாகச் சொன்னார். வயசெல்லாம் யாருக்குங்க தெரியும் என்று சொல்லி விட்டார். நன்றாகப் பேசிக்கொண்டிருந்தோம். இருவரின் wave length-க்கு ஒன்றும் குறைச்சலில்லை. வட இந்தியப் பயணம் .. பார்த்த இடங்கள் .. நன்கு நேரம் போய்க்கொண்டிருந்தது. பாவம் போல் தங்க்ஸும் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார்கள்.

எங்கள் ‘வண்டி’ நன்றாக ஓடிக்கொண்டிருந்த போது இன்னொருவர் எங்களருகில் வந்து உட்கார்ந்தார். அவரும் எங்கள் வயதை ஒட்டிய ஆள்தான். அய்யனார் ஊர்தானாம். சாப்பாடெல்லாம் முடித்து விட்டு வந்தவர் எங்கள் பக்கத்தில் உட்கார்வதற்குள் என் புதிய நண்பர் அய்யனாரைப் பற்றி சில குறைகள் சொல்ல ஆரம்பித்தார். அய்யனார் கொஞ்சம் திகைத்தார். அவரது uneasiness எனக்குப் புரிந்தது. புதிதாக வந்தவரிடம் வேறு பேச்சு பேசுவோமா .. நீங்கள் வருவது வரை வேறு பல விஷயங்கள் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தோம் என்றேன்.

அய்யனார் என்னிடம் நாம் எப்படி நன்றாகப் பழகிக்கொண்டிருந்தோம். இவர் வந்து கெடுத்து விட்டாரே என்றார். சமாதானம் செய்வதற்குள் புதிதாக வந்தவர் சாமி, கடவுள் என்று ஏதோ பேச ஆரம்பித்தார். அய்யனார் அப்போது சொன்னார் புதிதாக வந்தவர் ஒரு கிறித்துவ பாதிரி என்று. அவரிடம் நான் மறுபடியும் பேச்சை மாற்ற முயன்றேன். என்னைப் பேச விடாது மேலும் தொடர்ந்தார். நீங்கள் ஒரு பாதிரியார். எப்போதும் உங்களுக்கு நீங்கள் பேசி மற்றவர்கள் கேட்பதுதான் பழக்கமாக இருக்கும். மற்றவர்கள் பேசி நீங்கள் கேட்ட பழக்கம் உங்களுக்குக் கிடையாது என்றேன். உடனே கொஞ்சம் சுருதியைக் குறைத்தார். (இப்போது தங்க்ஸிடமிருந்து முதல் கிள்ளு கிடைத்தது.) ஆனாலும் பாதிரியாரின் வீரியம் குறையவில்லை. ஒரு விஷயத்தைப் போட்டு உடைத்தார். நம் நண்பர் அய்யனார் இப்போது ஒரு இஸ்லாமியர் என்றார். பாதிரியாருக்கு செம கோபம். அந்தக் கோபத்தில் தான் சூடாகப் பேசி விட்டிருப்பார் போலும். இஸ்லாமியராக ஆகி 19 வருஷம் ஆச்சாம்.

இஸ்லாமியர் என்கிறார். கையில் எம்.ஜி.ஆர். மோதிரம். வீட்டுக்குப் போனால் பெரிய தாமரைக்கனியோடு உள்ள படம் அது .. இது .. என்று அய்யனாரை சாடினார் பாதிரியார். (அய்யனார் சொன்ன பெயர் என் மனதில் நிற்கவில்லை. அது ஒரு 'A'-ல் ஆரம்பிக்கும் ஒரு பெயர்.) நான் பாய்க்குப் பரிந்து பேசினேன். பாதிரியாரிடம் உங்களுக்கு ஏசுவைத்தவிர எந்த மனிதர் பிடிக்கும் என்றேன். ஒன்றும் சொல்லவில்லை. காந்தியைப் பிடிக்குமா என்றேன். ஆஹா என்றார். உங்களுக்குக் காந்தி பிடிப்பது போல் அவருக்கு எம்.ஜி.ஆர். பிடிக்குது; இதிலென்ன தப்பு என்றேன். எப்படி இஸ்லாமிற்குச் சென்றீர்கள் என்று அய்யனாரிடம் கேட்டேன். அவர் பதில் சொல்வதற்கு முன் பாதிரியார் எல்லாம் இஸ்லாமியரின் பிரச்சாரம் என்றார். நான் ‘கிறித்துவர்களை விடவா இஸ்லாமியர்கள் ‘ஆள் பிடிக்கிறார்கள்’ என்று கேட்டேன். மனிதர் பாவம் .. மயிலிறகு எடுத்துக்கிட்டு சாம்பிராணி தட்டோடு சில இஸ்லாமியர்கள் பாவம் போல் வருவார்களே ... அவர்களை பார்த்து, அவர்களெல்லோரும் மதம் பரப்ப வருபவர்கள் என்றார். மறுத்தேன்.காசு கொடுத்து மாற்றுகிறார்கள் என்றார். அதை வெளிப்படையாகச் செய்யும் மதம் எது என்று தெரியாதா என்றேன். (அடுத்த கிள்ளு ..) நாங்கள் உதவி மட்டும்தான் செய்கிறோம் என்றார். எப்படியென்று எனக்கும் தெரியுமே என்றேன். உங்கள் மதம் என்னவென்றார். ஒன்றுமில்லை என்றேன். அது எப்படி என்றார். கிறித்துவனாகப் பிறந்தேன்; இப்போது இல்லையென்றேன். அது எப்படியிருக்க முடியும் என்றார். நான் இருக்கிறேனே என்றேன். சாமி கும்பிடாதவர்கள் நல்லவர்களாக இருக்க முடியாது என்றார். உங்களால் முடியாது என்று சொல்லுங்கள். ஒப்புக் கொள்கிறேன் என்றேன். மற்றவர்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்றேன். (தங்க்ஸ் தோளைப் பிடித்து இழுத்து என் காதில் வன்மையாகக் ‘கடித்தார்’!) (ஆனால் இப்போது ‘மீனாட்சிபுர நிகழ்வு’ எப்படி நடந்தது என்று ஒரு கேள்வி என் மனதிற்குள் எழுந்தது.)

அய்யனாருக்கு இவரு நம்ம ஆளு என்று என்னைப் பார்த்து தோன்ற ஆரம்பித்து விட்டது. இருவரும் சேர்ந்து பாதிரியாரை ஓரங்கட்டி விட்டோம். அய்யனார் கடைசியில் ஒரு போடு போட்டார். நாங்கள் இப்போது தான் சந்தித்து நல்ல நட்போடு இருந்தோம். நீங்கள் வந்து கலைக்கப் பார்த்தீர்கள். நாளை நாம் இருவரும் வந்தால் சார் என்னோடுதான் பழகுவார் என்றார். நானும் அது சரியென்றேன். பாதிரியாருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை; எங்களை சாப்பிடப் போகச் சொல்லி வேகப்படுத்தினார்.

நானும் அய்யனாரும் சாப்பிடக் கிளம்பினோம். எனக்கு இரண்டு கேள்விகள் இருந்தன. எப்படி அல்லது ஏன் அய்யனார் இஸ்லாமிற்குச் சென்றார்; இஸ்லாம் பற்றித் தெரிந்த பிறகு அந்த மதத்திற்குச் சென்றாரா?

படியில் ஏறும்போது முதல் கேள்வி கேட்டேன். நானாகப் போனேன் என்று ரொம்ப சுருக்கமாகச் சொல்லிவிட்டார். அதற்குமேல் ஏதும் சொல்லவில்லை. விட்டுவிட்டேன். சாப்பிடும்போது இரண்டாம் தடவை சோறு வைக்க வந்த அவரது உறவினரிடம் நான் இரண்டாம் தடவை சோறு வாங்கக் கூடாது’ப்பா என்றார். நான் ஏனென்று கேட்டேன். எங்கள் மார்க்கத்தில் அப்படி சொல்லியிருக்கிறது என்றார். ஒரே தட்டில் பிரியாணி வைத்து அரேபியர்கள் உணவருந்துவார்கள் என்ற எண்ணம் நினைவுக்கு வந்தது. அது ஏன் என்றேன். அப்படித்தான் சொல்லியிருக்கிறது என்றார்.வாசிச்சீங்களா என்றேன். ஹஸ்ரத் (ஹஸ்ரத் என்றுதான் நினைக்கிறேன். இதுவா அல்லது வேறு வார்த்தை சொன்னாரான்னு தெரியலை.) சொன்னார் என்றார்.

நானும் அதோடு விட்டிருக்கலாம். ஆனால் அய்யனார் அடுத்த பாய்ன்ட் ஒன்று சொன்னார்: எங்கள் மார்க்கத்தில் எல்லாம் அறிவியல் படிதான் இருக்கும் என்றார். அப்டின்னு ஹஸ்ரத் சொன்னாரா என்றேன்.(ஆஹா .. எப்படியோ ஒரு brain washing தான்.) ஆமா, தங்க நகை போடக்கூடாதே ... எப்படி போட்டிருக்கிறீங்கன்னு கேட்டேன். போட வேண்டாம்னு சொன்னாங்க. ஆனா எனக்கு பிடிச்சது என்று சொல்லிவிட்டு இன்னொரு சமூகக் காரணம் சொன்னார். அவர் மட்டுமே இஸ்லாமிற்கு வந்தாராம். இவங்க ஊரில் பாய் என்றால் இவர் மட்டும் தானாம். நானே தங்க மோதிரத்தை எடுத்துட்டு நின்னா மக்கள் ஒரு மாதிரி பேசுவாங்கல்லா .. அதான் போட்டுக்கிட்டேன் என்றார். அதோடு நின்னாரா, தங்கம் பெண்கள் போடலாம். ஆண்கள்தான் போடக்கூடாது என்றார். ஏன் என்றேன். ஆண்கள் உடல் ரொம்ப சூடு என்றார். பெண்கள் உடல் என்று கேட்டேன். அப்படியெல்லாம் இல்லை என்றார். எனக்குத் தெரிஞ்சி அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. உங்கள் வயத்துக்கு எதெது சரியோ அதுவே பெண்கள் வயிற்றுக்கும் சரி என்றேன். (மாம்பழத்தை மாதிரிக்கு சொன்னேன்.)சிரித்துக் கொண்டார்.

சாப்பிட்டு விட்டு கீழே வந்தோம். அப்போது பார்த்தேன். வேட்டி கரண்டைக்காலுக்கு மேலே இருந்தது. ஓ! மார்க்கம் சொல்றது மாதிரி வேட்டி கட்டியிருக்கிறீர்களே என்றேன். ஆமாம் .. அது எதுக்குன்னா ... தொழுகை சமயத்தில் (சொன்ன ஒரு வார்த்தை புரியவில்லை .. மண்டி போடுவது பற்றி ஒரு வார்த்தை சொன்னார்; காதில் ஏறவில்லை.) நாங்கள் 16 தடவை மண்டியிடுவோம். அதனால் முழங்காலில் கூட வடு வந்து விடும் என்றார். அதற்காகத்தான் வேட்டியை ஏற கட்டணும் என்றார். அப்போ pants போடுவோர் என்ன செய்வார்கள் என்றேன். சிரித்தார்.

நானும் தாடிவைக்க இப்போது முயற்சியெடுத்துக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்து சில ஐடியா கொடுத்தார். அதோடு நிற்காமல், தாடி வைத்தால் கண் நன்றாகத் தெரியும் என்றார். யார் சொன்னது என்றேன். ஹஸ்ரத் என்று சொல்லவில்லை; ஆனால் அதைத்தான் சொல்ல வந்தார். எந்த கண் டாக்டரும் அப்படி சொல்லவில்லையே என்றேன். கண்னுக்கும் தாடிக்கும் என்ன இருக்கு? உங்க நபி இஸ்லாமியரை யூதர்கள், கிறித்துவர்களிடமிருந்து வேறுபடுத்த சொன்ன விஷயம்தானே தாடி என்றேன். ஒரு சின்ன சிரிப்பு அவரிடமிருந்து!

படாரென்று ஒன்றைப் போட்டு உடைத்தார். அதெல்லாம் அந்தக் காலத்திற்காக நபி சொன்னது என்று சொல்லி உண்மையை உடைச்சார். ஆமாங்க .. அன்னைக்கி சரியா இருந்த விஷயம் இன்னைக்கி சரியா இருக்கணும்னு இல்லை இல்லையா? அன்னைக்கு சண்டை போட்டுக்கிட்டு இருந்த காலத்தில் ஒரு ஆணுக்கு 4 பொண்டாட்டி சரி.. ஆனால் இன்னைக்கு அது தாங்குமா .. இல்ல .. சரியா என்றேன். கரெக்ட் என்றார்.

தங்கஸ் - இப்போ கொஞ்சம் தள்ளி நின்னுக்கிட்டு இருந்தாங்க - முறைச்சாங்க. மழைமேகம் கூடி இருட்டிக்கிட்டு இருந்தது. அய்யனார் குடும்பமும் புறப்படத் தயாரானார்கள். நானும் former-அய்யனாரும் கை குலுக்கிக் கொண்டோம் அடுத்த முறை வரும்போது கட்டாயம் வீட்டுக்கு வருவதாகச் சொன்னார். விடை பெற்றோம்.
*
இன்னொன்று சொல்ல மறந்தேனே!

பாதிரியார் அய்யனார் மதம் மாறியதைச் சொல்லி விட்டு, இதையெல்லாம் விட்டுட வேண்டியதுதானே என்றார். நான் எதற்காக அவர் நம்புறதை விடணும் என்றேன். அதற்குள் அய்யனார் நாங்க அப்படியெல்லாம் உட்டுட்டு வரக்கூடாது அப்டின்னார். பாதிரியாருக்கு உள்விஷயம் புரியலை. எடுத்துச் சொன்னேன் - அவங்க மதத்தில சேர்ந்துட்டு உட்டுட்டு வரமுடியாதுன்னேன். பாதிரியாருக்கு ஆச்சரியம். என்ன ஆகும் என்று கேட்டார். நம்மூர்ல ரொம்ப பெருசா தொல்லையில்லை. ஆனால் இஸ்லாமிய நாடுகளில் ரொம்ப ஆபத்து அப்டின்னேன்.

அய்யனாரைப் பார்த்து ஆனா இப்படி அடைச்சி வக்கிறது சரியான்னேன். பிடிச்சி சேர்ந்தா, நம்பிக்கை வச்சிட்டா அங்கதான இருக்கணும் அப்டின்னார். நீங்க இந்து மதத்தில இருந்து மாறுனது தப்பான்னு கேட்டேன். இல்லைன்னார். அப்போ அதேமாதிரி இந்த மதத்திலிருந்து மாறினால் மட்டும் என்ன தப்புன்னேன். ஒண்ணும் சொல்லலை.

பாதிரியாரின் ஆச்சரியம் இன்னும் தீரலை.

*


19 comments:

அ. வேல்முருகன் said...

மாற்றட்டும் மக்களை உங்கள் வாதம்

வவ்வால் said...

தருமிய்யா,

உங்களைப்பார்க்கவும் அப்புராணிப்போல தெரியவும் அய்யனார் வந்து பேசி மாட்டிக்கிட்டார், பேசினப்பிறகும் சொக்காப்புடிக்காம போனாரேனு சந்தோஷப்படுங்க, நான் மதுரை தாண்டி போறதா சொன்னா இங்கே எனக்கு கொடுக்கிற வார்னிங் மெச்சேச் இதான் அந்தப்பக்கம்லாம் போய் சட்டம் பேசாத குமுறிடுவாங்கணு!

//எம்.ஜி.ஆர். தன் கட்சிக்காரர்கள் எல்லோரும் கையில் பச்சை குத்திக் கொள்ளுங்கள் என்றார். (ஆனால் அவர் மட்டும் பச்சை குத்திக் கொள்ளவில்லை.) பக்தர்கள் எல்லோரும் உடனே பச்சை குத்திக் கொண்டனர். இவரும் இதற்காகச் சென்னை போய் அங்கு பச்சை குத்திக் கொண்டாராம்.//

இந்தக்கொடுமையை ஏன் கேட்கறிங்க , எங்க நைனாவும் இதே கன்றாவிய தான் செய்து வச்சு இருக்கார். எம்.ஜி.ஆர் கூட போட்டோ எடுத்ததை ஒரு சாதனையா சொல்லிப்பார் :-)) நீங்க சொல்லி இருக்காப்பலவே இன்னிய வரைக்கும் இலைக்கு தான் ஓட்டு போடுறார், கேட்டா எல்லாம் எம்ஜிஆர் காக தான் என்று, நான் கலிஞருக்கு பல தபா போட்டு நொந்து போய் இந்த தடவை பூத் பக்கமே போகலை.

49(ஒ) எல்லாம் சொல்றாங்க ஆனால் பூத்தில இருக்க எல்லாம் நன்கு அறீமுகமான நபர்கள். ஒரு ரகசியமே இல்லாம 49(ஓ) போட சொல்வது சரியல்ல.(போன தடவை 49(ஓ) போட்டே தீருவேன்னு கிளம்பிட்டேன் எங்க அம்மா தான் வேண்டாம்டா வீணா வம்ப விலைக்கு வாங்காத, வீட்டு மேல கல்லு விட்டு எறிவாங்கனு சொல்லி தடுத்துட்டாங்க.(இப்படி சில பல கல் வீச்சுகளை பார்த்திருக்கோம்)

நீங்க ,அய்யனாரை காப்பாத்தினீங்க ,நான் ரெண்டு பேருக்கும்போதுவான எதிரி ஆகி உதை வாங்கி இருப்பேன் :-))

தருமி said...

//உங்களைப்பார்க்கவும் அப்புராணிப்போல தெரியவும் //

மவராசா! நல்லா இருப்பா! இப்படி நாலு நல்ல வார்த்தை நம்பள பத்தி சொன்னா எம்புட்டு நல்லா இருக்கு!

//அந்தப்பக்கம்லாம் போய் சட்டம் பேசாத குமுறிடுவாங்கணு!//

தப்பு தப்பா எங்க ஊரப்பத்தி மக்கள் புரளி கிளப்பி உட்டுர்ராங்க. சாந்த சொரூபனுங்க நாங்க எல்லாரும்!

//எம்.ஜி.ஆர் கூட போட்டோ எடுத்ததை ஒரு சாதனையா சொல்லிப்பார் :-//

நம்ம அய்யனாரை எம்.ஜி.ஆர். ஒத்த கையால தூக்கி ஸ்டேஜ்ல ஏர்ரதுக்கு உதவினாராம். ரொம்ப சந்தோசமா சொன்னார்.

தருமி said...

வேல்முருகன்,
இன்னும் அந்த மாதிரி நம்பிக்கை உங்களுக்கு இருக்கு??

வவ்வால் said...

தருமிய்யா,

//அய்யனாரை எம்.ஜி.ஆர். ஒத்த கையால தூக்கி ஸ்டேஜ்ல ஏர்ரதுக்கு உதவினாராம். ரொம்ப சந்தோசமா சொன்னார்.//

எம்ஜிஆருக்கு நல்லா சைக்காலஜி தெரிஞ்சு இருக்கு, ஏன்னா போட்டோ எடுக்கும் போது தோளில் கைவத்து இழுத்தாராம் , அதுக்கு முன்னர் காலில் வேற உழுந்தாங்களாம், அப்படியே தூக்குனாராம், சாப்பிட வச்சு தான் அனுப்புனாராம், எங்க நைனா முதல் செட் பச்சை , சொன்னவுடன், கடன் வாங்கி வாடகைக்கு கார் எடுத்து போன கோஷ்டி.இதெல்லாம் கதையா சொல்ல வேண்டாம்னூ விட்டுட்டேன், இது போல பல கதைகள் சொல்லக் கேட்டு இருக்கேன்.

இன்னமும் இந்தம்மாவை காப்பத்துவதே இது போல எம்ஜிஆர் ரசிகர்கள் தான்! யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க!

வவ்வால் said...

தருமிய்யா,

//மவராசா! நல்லா இருப்பா! இப்படி நாலு நல்ல வார்த்தை நம்பள பத்தி சொன்னா எம்புட்டு நல்லா இருக்கு!//

என்ன இப்படி சொல்லிட்டிங்க உங்களப்பார்த்தா சண்டைக்கு வலிக்கிறாப்போலவா இருக்கு,பார்த்தா பரமசாது போல தெரியுது, பேசினாத்தானே தெரியும் வில்லங்கம்:-))(தமாசு)

Philosophy Prabhakaran said...

// எம்.ஜி.ஆர். தன் கட்சிக்காரர்கள் எல்லோரும் கையில் பச்சை குத்திக் கொள்ளுங்கள் என்றார். (ஆனால் அவர் மட்டும் பச்சை குத்திக் கொள்ளவில்லை.) //

Well said...

Philosophy Prabhakaran said...

இந்தமுறை உங்கள் வாய் கடைசி வரை நீளாதது கொஞ்சம் ஆச்சர்யமாக இருக்கிறது... ஒருவேளை மனைவி பக்கத்தில் இருந்ததனாலோ...???

நம்பிக்கைபாண்டியன் said...

சுவாரஸ்யமான விவாதம், நேரில் பார்த்த உணர்வு ஏற்படுவது போல் ஏற்படும்படி எழுதி இருக்கிறீர்கள்!

\\\\\தங்கம் பெண்கள் போடலாம். ஆண்கள்தான் போடக்கூடாது என்றார். ஏன் என்றேன். ஆண்கள் உடல் ரொம்ப சூடு என்றார். பெண்கள் உடல் என்று கேட்டேன். அப்படியெல்லாம் இல்லை என்றார். எனக்குத் தெரிஞ்சி அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. உங்கள் வயத்துக்கு எதெது சரியோ அதுவே பெண்கள் வயிற்றுக்கும் சரி என்றேன்.////////

தங்கம் பற்றி இந்துமத சாஸ்திரங்களிலும் இப்படி ஒரு தகவல் இருப்பதாக கேள்விப்பட்டதுண்டு!

தங்கம் மிகுகாமம் எனப்படும் அளவுக்கு அதிகமான காம உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும்!பெண்கள் இடுப்புக்கு மேலேதான் தங்கத்தை அணியவேண்டும் என்றும் தங்கம் பற்றி இந்துமத சாஸ்திரங்களிலும் ஒரு தகவல் இருப்பதாக கேள்விப்பட்டதுண்டு!

பெண்கள் இயல்பாகவே ஆணைவிட உணர்ச்சிமயமானவர்கள் என்பதால் அவர்களுக்கு அழகுக்கான ஆபரணமாக மாற்றி (மறைமுக காரணமாக இதை வைத்து) அணியும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது!எனவே அந்த சரி என்றே தோன்றுகிறது!

Anna said...

:)

சித்திரவீதிக்காரன் said...

'அய்யனாரும் நானும்' என்ற தலைப்பை பார்த்ததும் நம்ம நாட்டுப்புறக் காவல்தெய்வம் அய்யனார்னு நினைத்து வாசிக்கத்தொடங்கினேன். ஆனாலும், வாசித்த பிறகு அய்யனாரை மிகவும் பிடித்தது. ஒவ்வொருக்கும் பலவிதமான நம்பிக்கைகள். அதே போல் என்னைப் பொருத்தவரை ஒவ்வொருக்கும் தனித்தனி கடவுள்கள். டேப் வைத்து பாடி வருபவர்களை பார்த்து நானும் கொஞ்ச வருடத்திற்கு முந்தி ஒரு டேப் வாங்கி அதை அடித்து பாடிக் கொண்டிருந்தேன். எம்.ஜி.ஆர் மாதிரி கடல் மேல் பிறக்க வைத்தான் பாடலைத்தான் அப்ப அதிகமுறை பாடியிருப்பேன். பகிர்வுக்கு நன்றி அய்யா!

சார்வாகன் said...

நல்ல எதார்த்தமான பதிவு!!!
இப்படி வெள்ளந்தியாக பேசும் மனிதர்கள் இபோதைய தலைமுறையில் மிகவும் அரிது.பாருங்கள் தெரிந்ததை,தெரியாததை,மனதில் பட்டதை இயல்பாகவே பேசிய‌ அய்யனார் அய்யாவிற்கு வாழ்த்துகள்.
பெரும்பாலான ஆத்திகர்கள் அவர்கள் வாழ்வில் பெற்ற அனுபவங்களின் மீதான நம்பிக்கையே கொண்டிருப்பார்கள்.அந்த வாழ்வு முறை அவர்களுக்கு பிடித்திருக்கிறது அல்லது ஒரு அங்கீகாரம்.பெரும்பாலான மத மாற்றங்கள் ஒருவ்ரின் தனிப்பட்ட வாழ்வின்,சமூக‌ பிரச்சினையின் போது அதனை தவிர்க்க செய்யப்படும் ஒரு செயலே.
ஒருவருக்கு வியாபாரத்தில் தோல்வி அல்லது ஒரு தனிப்பட்ட சமூக பிரச்சினை என்று வைத்துக் கொள்வோம்,சோர்ந்து போய் விட்டார். சொந்தங்கள் விலகி நிற்கிறார்கள்.இன்னொரு நண்பர் வந்து எங்களுடன் பிரார்த்தனை செய்தால் உன் பிரச்சினை சரியாகி விடும் என்கிறார்.இவரும் அவருடன் சில கூட்டங்களுக்கு செல்கிறார்.இவரின் எப்படியாவது மீடேற வேண்டும் என்ற நோக்கத்திற்கு அக்கூட்டத்தில் ஒரு நம்பிக்கை ஊன்று கோல் கிடைக்கிறது.புதிய நண்பர்கள் தொடர்பும்,புதிதாய் கிடைத்த உறசாகமும் பிரச்சினையில் இருந்து மீண்டு வர முடிகிறது.

இவை அனைத்தும் புதிய‌ கூட்ட‌த்தின் வாழ்வுமுறையினால் என்று நம்புவதால் ம‌த‌ மாற்ற‌ம் ந‌ட‌க்கிற‌து. ஆனால் பெரும்பாலும் புதிதாய் ம‌த‌ம் மாறிய‌வ‌ர்க‌ளுக்கு ம‌த‌த்தின் கோட்பாடுக‌ள்,மத புத்த‌க‌ம் ஆகிய‌வை தெரியாது.ஆனால் ந‌ம்பிக்கை ம‌ட்டும் இருக்கும். இதனால் அவ‌ர்க‌ள் குழ‌ந்தைக‌ளை ம‌த‌ கோட்பாடுக‌ளை க‌ற்க‌ ஊக்குவிப்பார்க‌ள்.அக்குழ‌ந்தைக‌ள் ம‌த‌ கோட்பாடுக‌ளை சிறு வ‌ய‌தில் இருந்தே க‌ற்ப‌தால் இது ம‌ட்டுமே ச‌ரி அத‌னால்தான் என் பெற்றோர் 'அ' ம‌த‌த்தில் இருந்து 'ஆ' ம‌ததிற்கு வந்துள்ளன்ர் என்று உறுதிப் ப‌டுத்திக் கொள்வ‌ர்.இவ‌ர்க‌ள் ம‌த‌ பிர‌ச்சாரக‌ர்க‌ள் கூட‌ ஆக‌லாம்.ப‌ழைய‌ விஷ‌ய‌ங்க‌ள் அனைத்தும் ம‌ற‌க்க‌டிக்க‌ப் ப‌டும்.ஒரு வித‌ ம‌த‌ பெருமித‌மும் தானாக‌ வ‌ந்துவிடும்.இந்த‌ ம‌த‌ பிர‌சார‌க‌ர்க‌ளின் பெருமித‌ அள‌வை உற்று கவனித்தால் மிக‌வும் நகைச்சுவையாக‌ இருக்கும்!!!!!!!!My favorite time pass!!!!!!!!!!!!!!!!

மத மாற்றம் என்பது ஒரு உளவியல்,சமூகம் சார்ந்த ஒரு மாற்றம்.மத மாற்றம் என்பது தேவையற்ற ஒன்று என்றாலும் இதனை இப்பார்வையில் அனுகுவது பல சமூக பிரச்சினைகளை தவிர்க்கும்.

இம்மாதிரியான‌ சார்ப‌ற்ற‌ ஆய்வுக‌ள் ம‌த‌மாற்ற‌ங்க‌ளின் மீது நடத்த‌ப் ப‌ட்டு அத‌ன் உண்மையான் பிர‌ச்சினைக‌ளை தீர்க்காத வ‌ரை ம‌த‌ மாற்ற‌ம் ந‌ட‌ந்து கொண்டே இருக்கும்!!!!!!!!

அருமையான‌ ப‌திவு.நானும் அங்கு ந‌ட‌ந்த‌வ‌ற்றை நேரில் பார்த்த‌து போல் இருந்த‌து.
நன்றி

வால்பையன் said...

பாதிரியார் வாயை இன்னும் கொஞ்சம் கிண்டியிருக்கலாம்!

தருமி said...

இன்னொன்று சொல்ல மறந்தேனே!

பாதிரியார் அய்யனார் மதம் மாறியதைச் சொல்லி விட்டு, இதையெல்லாம் விட்டுட வேண்டியதுதானே என்றார். நான் எதற்காக அவர் நம்புறதை விடணும் என்றேன். அதற்குள் அய்யனார் நாங்க அப்படியெல்லாம் உட்டுட்டு வரக்கூடாது அப்டின்னார். பாதிரியாருக்கு உள்விஷயம் புரியலை. எடுத்துச் சொன்னேன் - அவங்க மதத்தில சேர்ந்துட்டு உட்டுட்டு வரமுடியாதுன்னேன். பாதிரியாருக்கு ஆச்சரியம். என்ன ஆகும் என்று கேட்டார். நம்மூர்ல ரொம்ப பெருசா தொல்லையில்லை. ஆனால் இஸ்லாமிய நாடுகளில் ரொம்ப ஆபத்து அப்டின்னேன்.

அய்யனாரைப் பார்த்து ஆனா இப்படி அடைச்சி வக்கிறது சரியான்னேன். பிடிச்சி சேர்ந்தா, நம்பிக்கை வச்சிட்டா அங்கதான இருக்கணும் அப்டின்னார். நீங்க இந்து மதத்தில இருந்து மாறுனது தப்பான்னு கேட்டேன். இல்லைன்னார். அப்போ அதேமாதிரி இந்த மதத்திலிருந்து மாறினால் மட்டும் என்ன தப்புன்னேன். ஒண்ணும் சொல்லலை.

பாதிரியாரின் ஆச்சரியம் இன்னும் தீரலை.

SURYAJEEVA said...

நல்ல ஒரு விவாதத்தை பதிவாக்கியதற்கு நன்றி

NO said...

// பாதிரியாரின் ஆச்சரியம் இன்னும் தீரலை.//

எங்கோ படித்தது நினைவிற்கு வந்தது. ஒரு பார்ட்டியில் கலந்துகொண்ட பாதிரியார் அங்கே ஒருவர் ஒரு குறிப்பிட்ட ஆப்பிரிக்க பழங்குடி இனத்தின் மத / கடவுள் நம்பிக்கைகளை பற்றி பேசப்பட்டதை கவனித்தார். ஆருவத்துடன் கேட்டுவிட்டு, அவர் சொன்னது அடச்சே சுத்த பைத்தியக்காரத்தனமான ஒரு கடவுள் உருவகம் இவர்கள் வைத்திருப்பது. அதைப்போயா வணங்கி கொண்டாடுகிறார்கள் என்று ஆச்சரியப்பட்டார்!! அதை கவனித்த ஒருவர் சொன்னது விர்ஜின்
மேரி, செத்த பின் எழுவது, சாத்தான், பத்து கட்டளை போன்றவைகளை நாம் நம்பும்பொழுது அதைவிட எந்த விதத்திலும் குறைவில்லாமல் இருக்கும் ஒன்றை அந்த சில ஆப்பிரிக்கர்கள் நம்புவது எந்த விதத்தில் தவறு என்றார்!

அதை கேட்ட பாதிரிக்கி இன்னும் ஆச்சரியம். அட இந்த ஆளு லூசு மாதிரி பேசறான். அது எப்படி என் கடவுளும் மதமும் ஒரு ஆப்பிரிக்க ஆதிவாசி மதத்திற்கு
ஈடாகும்? அதை விட மிக மிக ஆச்சரியம் எப்படி இவர் இந்த மாதிரியெல்லாம் சொல்லலாம் என்பதுதான்! பாவம் அந்த பாதிரியால் அதை ஏற்க்க முடியவில்லை. ஏனென்றால் அவரின் மதம் மற்றும் கடவுள் புனிதத்திலும் புனிதம் என்ற பிரைன் வாஷிங் செய்யப்பட்டு ஆண்டாண்டு காலம் அதில் முழிகி முத்தெடுத்து அதுதான் உண்மை மற்றவைஎல்லாம் பொய் என்ற கதையில் அமுக்கப்பட்டு விட்டார்! அவரின் கடவுளாரின் கதைகளில் உள்ள மடத்தனம் மற்றும் தமாஷு அவரின் கண்களுக்கு முன் வரவில்லை. அது புனிதமாக ஆக்கப்பட்டு விட்டது! அதே சமயம் ஆப்பிரிக்க கடவுள் பைத்தியக்கார கட்டமைப்பால் உருவானது என்ற "உண்மை" மட்டும் அவரின் கண்களுக்கு தெரிகிறது! அவருக்கு இந்த பாகுபாடு புரியாது!! சில
ஆப்பிரிக்கர் வணங்கும் பழங்குடி கடவுளின் சக்தியும் தான் வணங்கும் கடவுளின் சக்தியும் ஒன்றுதான் என்பதை அவரால் ஏற்றுகொள்ள முடியாது! (அது என்ன சக்தி என்றால் - ஜீரோ சக்தி. ரெண்டும் ஒன்றும் இல்லாதவையே என்பதுதான் உண்மை)

The religious ones love to claim purity and infallibility of their own illogical and nonsensical faith stories and at the same time use all available opportunity to villify when the same story's come out of other religions. They are dead to the fact that their god, prophets, books and all things holy have everything in common to the ones they take pride in villifying!!!

naren said...

கசகச போட்ட பிரியாணியைதான் சாப்பிட்டிங் என்று நம்புகிறேன்.

ஐயா அய்யனார் எந்த ஜமாத் என்று தெரியவில்லை. ஆனால் அதிகார்பூர்வ தவ்வீது ஜமாதாக இருந்தால் அவர்...
அண்ணன் சொல்லும் எளிய மார்க்க முறை.

* தலைக்கு தொப்பி போட அவசியமில்லை.

* தாடி வைக்க வேண்டிய அவசியமில்லை.

* முக்கால் பேண்ட் போட வேண்டிய அவசியமில்லை. புல் பேண்ட் O.K. ஷைத்தான் போல பெருமையாகது.

*அண்ணன் தொழுகை செய்வதில்லை என்று எதிரி அண்ணன் சொல்கிறார். அல்லாவின் அதிகார்பூர்வ தளத்தில் இதற்கு மறுப்பு இல்லை. அதனால் தொழுகை அவசியமில்லை கட்டாயமுமில்லை. அண்ணனைப்போல் தொழுவாமல் இருக்கலாம்.

* ஜகாத் வருடா வருடம் தேவையில்லை. ஒரே தடவை போதும் ( cheap and best மற்ற இயக்கத்தினருக்கு ஆப்பு: வருமானம் போச்சு). அல்லா போதுமானவன்.


* அண்ணன் பண வசதியிருந்தும் உடல் வசதியிருந்தும் ஹஜ் கடமையை நிறவேற்றவில்லை என எதிரி அண்ணன்கள் கூறிகின்றனர். இதற்கு மறுப்பு வந்ததாக தெரியவில்லை. அதனால் அது உண்மையானதாகத்தான் இருக்க வேண்டும். அதனால் அண்ணனின் செய்கை மூலம் ஹஜ் கடமையில்லை என அறியலாம்.


* அண்ணன் நாத்திகராக இருந்து மூமினானதாக கூறுயுள்ளார். எதிரி அண்ணன், கலிமா சொன்னாரா, சொன்னால் திரும்ப சொல்வதற்கு என்ன தயக்கம் என்று அண்ணனை பார்த்து கேட்கிறார். இதற்கு மறுப்பு வந்ததாக தெரியவில்லை. அதனால் அது உண்மையானதாகத்தான் இருக்க வேண்டும். அதனால் கலிமா சொல்லத்தேவையில்லை. ஆனால் கலிமாவே தேவையில்லையா என்று அண்ணன்தான் சொல்லவேண்டும்.

மேலே சொன்ன எளிய, இனிய, அமைதியான, கவர்ச்சிகரமான இஸ்லாம் மார்க்க முறைகள், அண்ணனின் RESEARCH AND DEVELOPMENT LABORATORYல் ஆராய்ந்து குரான் மற்றும் அதீஸ் அடிப்படையில் சொன்ன மார்க்கமாகும், அதுதான் உண்மை, சத்தியம், மார்க்கம் என எடுக்கவேண்டும். அது யூத, நஜாராக்கள் சதியாக இருக்காது.
மேலே சொன்ன கவர்ச்சிகரமான, எளிய நடைமுறை மார்க்கம் கொண்ட வாஹாபி இயக்கங்கள் எப்படி பழமைவாதத்தையும் தீவிரவாதத்தையும் ஊக்குவிக்கமுடியும். ஷேக் ஜமாலி சிந்திப்பாரா!!!!

வவ்வால் said...

தருமிய்யா,

என்ன புது சொக்காவா? சோக்கா கீது, ஹி...ஹி..நேத்து சாயங்காலம் உங்க பதிவு பார்க்க வந்தா பிலாக்கர் காணாம பூட்டுச்சுனு சொல்லிச்சா உடனே அவசரப்பட்டு காணவில்லைனு ஒரு பதிவப்போட்டுட்டேன்..ச்சாரிங்கய்யா போய் தூக்கிடுறேன். நெடுநல் உளனொருப் பதிவு இன்றில்லை என உடைத்து பதிவுலகு! :-)) அப்படி ஆக்கிடுச்சு இந்த பிலாக்கர்.

தருமி said...

வவ்வால்

இது பழைய சொக்காதானே... தலைகீழ் பார்வையின் பிரச்சனை இது!
:)

உங்க பதிவு பார்த்தேன்.

Post a Comment