*
வீட்டுக்கு வந்த பேத்திக்கு இரண்டு சக்கர வண்டியில் போவதென்பதில் அப்படி ஒரு மகிழ்ச்சி. அந்த ஆர்வத்தில் ஓடியாடி ஏறியதில் புதிதாக வாங்கிய செருப்பு அறுந்து போய் விட்டது. அவள் அம்மாவிற்கு மகள் ஆசையாய் வாங்கிய செருப்பு அறுந்து விட்டதே என்று கவலை. செருப்பை எடுத்துக் கொண்டு செருப்பு தைப்பவர் இருக்குமிடம் தேடிப் புறப்பட்டேன். நாலைந்து கிலோ மீட்டர் அலைந்தும், ‘அந்தக் காலத்தில்’ அவர்கள் இருக்குமிடமான பஸ் நிலையம், தெரு மூலைகள் எங்கும் யாரையும் காணோம். ஒரே இடத்தில் கடை ஒன்றிருந்தது. பக்கத்தில் போனால் ஆளே இல்லை. மறுபடி வேட்டை தொடர்ந்தது. எங்கும் யாரும் இல்லை. திரும்பிப் போகலாம் என்று வந்த போது அந்தக் கடையில் ஆள் இருந்தது.
அப்பாடா என்று அந்தக் கடைக்குப் போனேன். இளைஞன் டி-ஷர்ட் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார். இடையில் ஒரு கைலி. அந்தக் கைலிக்குப் பதிலாக ஒரு ஜீன்ஸ் போட்டிருந்தால் --- there would be another decent good looking young man there - என்றிருந்திருக்கும் என்று நினைத்தேன். அவரைப் பற்றி நினைத்ததைச் சொல்லலாமா என்று நினைத்துப் போகும்போது அவர் என் மீது ஒரு ‘குண்டு’ போட்டார்;
‘வாங்க சார் .. யாரோ வெளிநாட்டுக்காரர் வந்திருக்கார்னு நினச்சேன்’ என்றார்.
‘அட .. என்னங்க இப்படி கேலி பண்றீங்க?’ என்றேன்.
‘இல்ல சார்’ அப்டின்னுட்டு நான் போட்டிருந்த ட்ரவுசரைப் பார்த்தார்.
‘கிழடுக எதைப் போட்டா என்னங்க ... வசதியாகவும் இருக்குதில்ல’ என்றேன்.
அடுத்து அவரிடம் செருப்பு தைக்க இடம் தேடியும் யாரும் கிடைக்கவில்லை. நீங்கள் தான் இந்த ஏரியாவிலேயே ஒரே ஆளு போலும் என்றேன்.சொல்லிட்டு,’அதிகமா யாருமே இல்லைன்னு பார்த்ததும் சந்தோஷமா இருக்குது’ என்றேன்.
’ஏன் சார்?’
‘குலத் தொழில்னு ஒண்ணை வச்சிக்கிட்டு நாங்கல்லாம் ஆட்டம் போடுறோம்ல ... அதெல்லாம் இப்ப குறைஞ்சதும் சந்தோஷம் தான். நீங்க கூட ஏன்யா இன்னும் இந்த தொழில் பாக்குறீங்க?’ அப்டின்னேன்.
அவர் பதில் சொல்வதற்குள் இன்னொரு இளைஞன் பாண்ட், ஷர்ட்டில் வந்தார். (செருப்பு தைப்பவர் பெயர் ஆனந்த் என்று ஏற்கெனவே பெயர் கேட்டு வைத்திருந்தேன். ) ஆனந்த், வந்தவர் தன் தம்பி என்றும் அவருக்கு அரசு வேலை கிடைத்திருப்பதாக மகிழ்ச்சியோடு சொன்னார்.
’நான் இந்த தொழிலை விட முடியலை,சார். ஆனா என் பிள்ளைகளை நல்லா படிக்க வச்சு கலெக்டர், டாக்டர் வேலைக்கு அனுப்பணும்னு ஆசையா இருக்கு’ என்றார்.
‘ரொம்ப நல்ல ஆசை. வழிநடத்துங்க; பிள்ளைகளிடமும் எல்லாமும் சொல்லுங்கள்; நல்லா படிக்க வையுங்கள். இன்னும் காலம் காலமா ‘குலத்தொழில்’னு ஏதாவது ஒண்ணை சுமந்துகிட்டு இருந்தது போதும்’யா. செத்தா சங்கு ஊதணும்னு நினைச்சா, செத்தவன் வீட்ல உள்ள ஒரு ஆள் அப்படி ஊதிக்கட்டும்; சாவுக்கு டான்ஸ் ஆடணுமா .. அவங்க வீட்ல இருக்கிறவனுங்க ஆடட்டும். குலத் தொழில்னு பழைய வேலையெல்லாம் இன்னும் பாத்துக்கிட்டே இருக்கிறது தப்புல்ல’ என்றேன்.
ஆனந்த் நான் சொன்னதை முழுமையாக ஆதரித்தார். தன் குடும்பத்தின் அடுத்த வாரிசு செருப்பு தைக்காது’ என்று முழு நம்பிக்கையோடு சொன்னார்.
மகிழ்ச்சியாயிருந்தது. ஆனாலும் ஆனந்த் தன் வாழ்க்கையை அதுபோல் ஆக்க வேண்டும் என்ற ஆவலில் இல்லையே என்று சிறிது கவலைதான். அந்தப் ‘பொறி’ இவர்களிடையே இல்லாமல் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
தாழ்த்தப்பட்டவர்களாக பலரை முடக்கி வைத்து, குலத்தொழில் அப்டின்னு அவங்க தலையில மிக மோசமான வேலைகளை ஏற்றிவைத்து மேலும் அவர்களை முடமாக்கி வைத்துள்ளோம். எல்லோருக்கும் இதில் முழுப்பங்கு இருக்கிறது. பீ அள்ளணும், செருப்பு தைக்கணும், அர்ச்சகர் ஆகணும்; துணி துவைக்கணும்; மயிர் வெட்டணும்; -- இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு சாதியை அடையாளப்படுத்தி, மனிதர்களை மேம்படுத்தி அல்லது சிறுமைப் படுத்தி வைத்திருக்கும் இந்த இடப் பங்கீடு போதுமே. இன்னும் காலங்காலமாய் குலத் தொழில் என்ற பெயரில் அடிமைத்தனம் இன்னும் நீண்டு கொண்டே போகணுமா?
இந்த சாதிக்கு இந்த வேலை என்ற இடப்பங்கீடு தோற்க வேண்டும்; அது விரைவில் சாக வேண்டும்.
தலித் கலை விழாக்கள் என்று அடிக்கடி நடத்துகிறார்கள். அந்தச் சாதியில் பிறந்து உழைப்பால் முன்னுக்கு வந்தவர்கள், உயர் கல்வி பெற்றவர்கள், அறிவியல் துறையில் முன்னேறியவர்கள், வியாபாரம் செய்பவர்கள் ... இவர்களை அடையாளப்படுத்தி இந்த விழாக்களில் அவர்களின் உயர்வைக் கொண்டாடினால் நல்லது. அதை விட்டு விட்டு இன்னும் குலத் தொழிலாகவே பார்க்கப்படும் சில கலைகளை அந்த மேடைகளில் ஆண்டு தோறும் நடத்துவது யாருக்கும் பெருமையுமில்லை; அதனால் எந்த நல் விளைவும் இருக்கப் போவதுமில்லை. அந்தக் கலைகள் சாதியோடு பின்னப்பட்டிருந்தால் பிறகு எதற்கு அந்தக் கலைகள்? பின் ஏன் இந்த விழாக்கள்? அந்த விழாக்கள் நடப்பதாயிருந்தால் அது அந்த சாதியினருக்கு உயர்வைத் தர முயல வேண்டும். இல்லாவிடில் அந்த விழாக்கள் நடத்தாமல் இருப்பது நல்லது.
*
தொடர்புள்ள பழைய பதிவொன்று இங்கே
*
*
14 comments:
நாளைக்கே செருப்பு தைக்கிறவனுக்கு அறநிலையத் துறை அர்சகர் பதவி தருமா?
சட்டம் இருக்கிறது சட்டத்திற்குள்ளே
கடந்து வர பிராமணனுக்கும் துணிவில்லை செருப்பு தைக்கிறவனுக்கு செருப்பால் அடிக்க துணிவில்லை
//செத்தா சங்கு ஊதணும்னு நினைச்சா, செத்தவன் வீட்ல உள்ள ஒரு ஆள் அப்படி ஊதிக்கட்டும்; சாவுக்கு டான்ஸ் ஆடணுமா .. அவங்க வீட்ல இருக்கிறவனுங்க ஆடட்டும். குலத் தொழில்னு பழைய வேலையெல்லாம் இன்னும் பாத்துக்கிட்டே இருக்கிறது தப்புல்ல’ //
நச்சுன்னு சொல்லியிருக்கீங்க பெரிய வாத்யாரே.
.
நான் சொல்றதைக் கேட்டு யாருக்கும் கோபம் வரக்கூடாது ...
//செருப்பு தைக்கிறவனுக்கு செருப்பால் அடிக்க துணிவில்லை //
குலத் தொழிலை இன்னும் விடாமல் பற்றிக்கொண்டிருப்பவர்கள் தான் தங்களைத் தாங்களே அடித்துக் கொள்ள வேண்டும். இன்னும் அவர்களுக்கு அரசு கொடுத்துள்ள உரிமைகளைப் பற்றிக் கூட இன்னும் தெரிந்து கொள்ளாமல் இருப்பதும் அவர்களின் தவறே. தூக்கியெறிய வேண்டியதை இன்னும் ‘தலைவிதி’ என்ற பெயரில் தலையில் தூக்கி வைத்துக் கொண்டிருப்பவர்களும் அவர்கள் தானே .. இந்தக் கொடுமையாத் தாண்டணும் என்ற நினைப்பில்லாமல் உழன்று கொண்டிருப்பவர்கள் தான் தன்னையே அடித்துக் கொள்ள வேண்டும்.
//நச்சுன்னு சொல்லியிருக்கீங்க//
அட போங்க கல்வெட்டு. ரொம்ப நாளா சொல்லிக்கிட்டுதான் இருக்கேன். MAY 2, 2005 தேதிப் பதிவிலும் அதுதான். யாரு காதிலேயும் எதுவும் விழுகுறதும் இல்லை.
good shot... :)
//good shot//
but, theks, target badly missed, as always!
சார்! ரொம்ப அருமையாச் சொல்லியிருக்கீங்க. எனது நண்பரின் கார் டிரைவரோட சேர்ந்து உணவு உண்ட போதும் அவரின் தேவையை நம்முடன் கூட செல்லும் போது கவனித்துக் கொள்ள முற்படும் போது கொஞ்சம் வித்தியாசமாகப் பார்த்தனர். என்னைப் பொறுத்தவரை எனக்கு காரோட்டி உதவுபவராகத் தான் நோக்கினேன்.
பியிந்த செருப்புகளை நாமே தைக்க முற்படும் போது அல்லது வேறு வாங்க முற்படும் போது, அவர்கள் தேவைகள் குறையலாம். மாற வேண்டியவை மாறலாம்.
நன்றி ஓலை.
//மாற வேண்டியவை மாறலாம். //
மாற வேண்டியவை மாறணும்.
ஆனந்தின் சில படங்களைச் சேர்த்துள்ளேன்.
நல்ல பதிவு,
மாற்றங்கள் ஒரே நோடியில் நடப்பதற்கு கடவுளின் கட்டளையா என்ன? சமூக மாற்றங்கள் மெல்ல மெல்லத்தான் வரும்.
இடஒதுக்கீடு என்ன செயதது, இருக்க வேண்டுமா என்று கேள்வி கேட்பவர்களுக்கு, சரியான எளிமையான பதில் இந்த பதிவு. சமுதாய மாற்றதிற்கு உதவியது, மேலும் மாற்றதிற்கும் வித்திடும். குலத்தொழில் செய்வது தலைமுறை மாற்றங்களால் அழிந்துபோய்விடும், இனி வரும் சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களால் அழிந்து போய்விடும்.
தலித கலைவிழாக்கள் அவசியமே. ஏனென்றால் செய்யும் குலத்தொழில் ஒரு கலையாகவே வளர்ந்து வந்திருக்கிறது. அது சமூகத்தின், சரித்திரத்தின் சான்று. பறையடிப்பது என்பது கலையாகவே செய்யபடுகிறது, குலத்தொழிலாக அல்ல. அப்படி செய்யவில்லை என்றால் கர்நாடக சங்கீதம்தான் மிஞ்சும்.
நன்றி.
இப்போதுதான் உங்களுடைய மின்னூலை படித்தேன்,
தெளிவாக, எளிமையாக விளக்கம். இடஒதுக்கீடு எதிரான கேள்விக்கு சரியான பதில்கள். நேரமிருந்தால் அதற்கு மேலும் விளக்கமளித்து பதிவிடுகிறேன்.
வட இந்தியாவில் கல்விநிலையங்களில் இடஒதுக்கீட்டு மூலம் வரும் மாணவர்களை, முன்னேறிய சாதியைச் சார்ந்த ஆசிரியர்கள் தேர்வில் தேர்ச்சி பெற விடமாட்டார்கள். இந்த பிரச்சனை ஐ.ஐ.டியிலும் உள்ளது.
அடுத்து, பணியிடங்களை நிறுப்பாமலும், அந்த பணியிடங்களை பொது வகுப்பாக மாற்றும் கூத்துகளும் நடக்கின்றன். பிரோமோஷன் அளிக்க மறுக்கும் உத்தியும் உள்ளது.
திறமை என்ற ஒரு புண்ணாக்கும் கிடையாது. யார் நன்றாக மனனம் செய்து நன்றாக வாந்தி எடுப்பார்கள் என்று தான் பார்க்கிப்படுகிறது. இதில் எங்கேயிருந்து திறமை வந்தது. அந்த திறமையிருந்தால் இந்தியா 1970 களிலேயே வல்லரசாக மாறியிருக்குமே.
நேரமிருந்தால் இதை பற்றி விரிவாக எழுத நினைக்கிறேன்
நன்றி
நரேன்
//செய்யும் குலத்தொழில் ஒரு கலையாகவே வளர்ந்து வந்திருக்கிறது//
இப்பதிவிட்டதற்கே முக்கிய காரணம் குலத்தொழிலை தலித்துகள் மூட்டை கட்டி ஒதுக்கி விட வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் நீங்களோ அவைகளைக் கலை என்ற போர்வைக்குள் மூடி வைக்கிறீர்கள். அது கலையோ, குலத் தொழிலோ .. பார்ப்பவர்களுக்கு அவை சாதியோடு பிணைக்கப்பட்டுக் கீழாகப் பார்க்கப்படுகின்றன. பின் ஏன் அவைகளைக் கட்டி மாரடிக்க வேண்டும். பறையடிப்பது கலையென்றால் பீ அள்ளுவதும் செருப்பு தைப்பதும் கலைகள் தான்; அதையும் நீங்களே செய்து வாருங்கள் என்று சொல்லும் சமூகம் இது.
மரியாதையற்ற அந்த குல வழக்கங்களை ஒழித்தாலொழிய தலித்துகள் முன்னேற முடியாது.
//ரொம்ப நாளா சொல்லிக்கிட்டுதான் இருக்கேன். MAY 2, 2005 தேதிப் பதிவிலும் அதுதான். யாரு காதிலேயும் எதுவும் விழுகுறதும் இல்லை//
2005 இருந்து இப்போ வரை வந்த புது புது மொபைல் மொடல்கள் பலவற்றை தங்களுக்கு மாற்றியிருப்பார்கள் இந்தியர்கள்.ஜாதி பார்ப்பது ஜாதி இழிவு செய்வதை விடவே மாட்டார்கள்.
சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு – பலமும் பலவீனமும் என்ற உங்க நூல் இப்போ தான் கண்டேன். பதிவு செய்து வைத்துள்ளேன். பின்பு படிக்கிறேன்.
உங்க செருப்பு தைக்கும் இளைஞனை பற்றி படித்த கவலையிலே சப்பாத்து திருத்தும் கடை ஒன்றை மிக அவதானமாக இன்று பார்த்தேன்(வெளிநாட்டில்).
அந்த அழகான கடைக்குள் தமிழ்நாட்டு வங்கியின் முக்கிய அதிகாரி மாதிரியே ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் தான் கடையின் உரிமையாளரா அல்லது வேலை செய்பவரா என்று தெரியாது. எல்லோரும் ஒரோ மாதிரியா தான் இருப்பார்கள். நான் இந்த சப்பாத்து திருத்தும் கடைக்குள் இது வரை போனதே இல்லை. இங்கே சென்று அதிக கட்டணம் கொடுத்து திருத்தும் அளவுக்கு எனது சப்பாத்து பெறமாதியானது இல்லை. மிகவும் விலை உயர்ந்த சப்பாத்துக்கள் வாங்குபவர்கள் பழுது வந்தல் திருத்துவதற்க்கு அங்கே செல்வார்கள்.
Post a Comment