*
ஒரேயடியாக படிப்பைப் பற்றி மட்டும் பேசிக்கொண்டே போகிறோமோ… வாழ்க்கையின் மற்ற சில பக்கங்களையும் கட்டாயம் புரட்டியாக வேண்டுமே …
பள்ளிப் படிப்பு முழுவதும் மதுரையில் அப்போதிருந்த இரு பெரும் பள்ளிகளில் ஒன்றான புனித மரியன்னை பள்ளியில் தான் முடிந்தது. அப்பாவும் இதே உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர். பள்ளி வளாகத்திலேயே புனித மரியன்னை கோவில் இரு பெரும் உயரக் கோபுரங்களோடு நின்றது. அல்லது … இப்படியும் சொல்லலாம் புனித மரியன்னை கோவில் இருந்த வளாகத்தில் எங்கள் பள்ளி இருந்தது. நாங்கள் பதினாறு ஆண்டுகளாக இருந்த வாடகை வீடும் இதற்கு அருகிலேயே இருந்தது., பக்தி வாழ்க்கை, பள்ளி வாழ்க்கை பற்றியெல்லாம் சொல்வதற்கு முன் அந்த வீட்டில் வாழ்ந்த வாழ்க்கையும் மிக முக்கியமல்லவா? அதைப் பற்றிக் கொஞ்சூண்டு சொல்லவா?
அப்பாவின் இரண்டாம் திருமணம் முடிந்ததும் அதுவரை கிராமத்திலிருந்த நானும், புது அம்மாவும் மதுரைக்கு வந்து சேர்ந்தோம். எனக்குப் புதிதாக பள்ளி வாழ்க்கை ஆரம்பித்தது. அம்மாவுக்குத் திருமண வாழ்க்கை ஆரம்பித்தது. வாடகை வீட்டில் வந்து இறங்கினோம். எனக்கு அப்போது எப்படி இருந்தது என்று நினைவில்லை. ஆனால் கிராமத்தில் பெரிய வீட்டில் வசித்திருந்த அம்மாவிற்கு இந்த புதிய வீடு எப்படி இருந்ததோ தெரியவில்லை.
நாங்கள் வந்திறங்கிய வீடுஅத்தனை சிறியது. அது மட்டுமல்லாமல் ஒண்டுக் குடித்தனம். மூன்று குடிகளில் நாங்களும் ஒன்று. சிறிது நீண்டு செல்லும் வீட்டின் கடைசியில் எங்கள் பகுதி. வீட்டின் நடுவில் இருந்த நாழிக்கிணறு அல்லது உரைக் கிணறு வீட்டை இரண்டாகப் பிரிக்கும். நாழிக்கிணறு என்றால் என்னவென உங்களில் பலருக்கும் தெரிந்திருக்காதே! இந்தக் காலத்தில் வீட்டுக்கு வீடு போர் போட்டு ஒரு குழாய் வைத்துக் கொள்வோமே … அப்போது அது மாதிரி வீட்டுக்கு வீடு ஒரு கிணறு இருக்கும். மூன்று நாலடி விட்டத்தில் சிமெண்ட் உரைகளை ஒன்றின் மீது ஒன்றாக கிணறைத் தோண்டி இறக்கியிருப்பார்கள். பத்துப் பதினைந்து உரை ஆழத்தில் தண்ணீர் இருக்கும். இப்போது மாதிரி நானூறு அறுநூறு அடி ஆழத்திற்கு போர் போட்டு தண்ணீர் இல்லை என்ற நிலை அப்போதில்லை. ‘நாழி’ என்றால் அளக்கும் படி என்று அர்த்தமாக்கும். இந்தக்கிணறுகள் குறுகலாக, ’படி’ மாதிரி இருப்பதால் அந்தப் பெயர்.
வெளிப்பக்கம் நான்கு பக்கம் கற் சுவர்கள் வைத்துக் கட்டியிருப்பார்கள். தலைக்கு மேல் இரும்பு உருளை இருக்கும். சாதாரணமாக கயிறும் வாளியும் இருக்கும். நீர் இரைத்துக் கொள்ள வேண்டும். பின்னாளில் கயிறுக்குப் பதில் டயரை வெட்டி கயிறு மாதிரி நீளமாக விற்பார்கள். இது அதிகமாக உழைக்கும் என்று இதனை வாங்கிப் பயன்படுத்தினார்கள். இதில் இரைப்பது கஷ்டம் என்பதால் கயிறுக்கே மவுசு அதிகம் ஆச்சு.
நான் சின்னப் பையனாக இருந்த போதே எனக்கு ஒரு முக்கிய வீட்டு வேலை வந்து விட்டது. ஏறத்தாழ குடும்பம் முழுமைக்கும் கிணற்றுக்குப் பக்கத்திலிருக்கும் இரண்டு ட்ரம்களில் தண்ணீர் பிடித்து வைக்க வேண்டும். சின்ன வயதில் சுற்றியிருக்கும் காவல் சுவரை விட கொஞ்சூண்டு என் உயரம் கூட இருக்கும். இதில் ஒரு வாளித்தண்ணீர் இரைக்க வேண்டுமென்றால் கஷ்டம் தான். ஓரு இயற்பியல் விதியை follow செய்து கடமையாற்றுவேன்! இடது முழங்காலை அந்தச் சுவற்றின் ஒரு பாய்ண்டில் வைத்து அழுத்திக் கொண்டு, வலது காலை பின்னால் வளைத்து வைத்துக் கொண்டு முக்கி, முக்கி கயிற்றை இழுத்து வாளியை மேலே கொண்டு வர வேண்டும். நான் கால் அழுத்தி வைக்கும் இடம் அந்தச் சுவற்றில் தடமாகப் பதிந்திருக்கும்.
அப்போது நான் தினமும் தவறாமல் கோவிலுக்குப் போய் விடுவேன். அங்கே முழங்கால் போட்டு ஜெபம் செய்வதால் இரு முழங்கால்களிலும் கருப்பாக முட்டி காய்ந்து போயிருக்கும். ஆக எனக்கு இப்போது இரு கால்களிலும் அந்தத் தடங்கள் இருக்கும். இப்போது பல இஸ்லாமியரின் நெற்றியில் தொடர்ந்த தொழுகையால் ஒரு கருப்பு காய்ப்பு இருக்குமே அதே போல் எனக்கு இரு கால்களிலும் இருக்கும். இடது காலில் கொஞ்சம் அதிகமாக, அகலமாக, கருப்பாக இருக்கும்!
வீட்டுக்கு நடுவில் இந்தக் கிணறு இருப்பதால் அந்தப் பகுதியே எப்போதும் ஈரத்தோடு இருக்கும். அதனால் வழியெல்லாம் பாசி படர்ந்திருக்கும். வீட்டிலிருக்கும் அனுபவசாலிகளுக்கு எங்கெங்கே கால் வைத்தால் வழுக்காது என்பது தெரியும். புதிதாக வருபவர்களுக்கு அது பெரும் ரிஸ்க் தான். அந்தப் பாதையில் வழுக்கி விழிந்தோர் நிறைய. சின்னப் பயலா … யார் விழுந்தாலும் விழுந்து விழுந்து நான் சிரிப்பேன். கொஞ்சம் வயதான பின் தான் புதிதாக வருபவர்களைப் பத்திரமாக வீட்டுக்குள் அழைத்துச் செல்லும் பழக்கம் வந்தது. ஏறத்தாழ கல்லூரி செல்லும் வயதில் நண்பர்களை இதனாலேயே வீட்டுக்கு அழைப்பதற்கு சங்கடமாக இருக்கும். முடிந்தவரை தவிர்த்து விடுவேன்.
இப்போதிருக்கும் மனநிலையில் அந்த வீட்டை நினைத்துப் பார்க்கும் போது ஆச்சரியாகவும், வினோதமாகவும் இருக்கும். அத்தனை சின்ன வீடு. இன்றைய நிலையோடு கணக்கிட்டுப் பார்த்தால் அது ஒரு எலி வளை. பதினாறு ஆண்டுகள்; மூன்று பேராக ஆரம்பித்து, ஏழெட்டு பேராகப் பெருகிப் போன பின் அந்த வீட்டை விட்டு விட்டு ஒரு பெரிய சொந்த வீட்டுக்குக் குடியேறினோம். வீடு மாறும் போது முதுகலை இரண்டாமாண்டின் ஆரம்பம். குடிசையிலிருந்து ஒரு கோபுரத்துக்குப் போனது போலிருந்தது. வாழ்க்கையின் தத்துவமே அது தானோ?
திரும்பிப் பார்க்கும் போது பல விஷயங்கள் ஆச்சரியப் படுத்துகின்றன. வீட்டுக்கார அண்ணன் தம்பிகள் வீட்டின் முன் பகுதியில் குடியிருப்பு. பின் பகுதியில் நாங்கள். எங்கள் பகுதியில் அனேகமாக ஒரு அறை; 15 x 12 ஆக இருக்கலாம். அது மட்டுமே நான்கு பக்கமும் சுவரும், மேல் தட்டும் இருந்த அறை. இந்த அறைக்கு மேல் தான் நம் சாம்ராஜ்யம். மொட்டை மெத்தை. அங்கே இரண்டு மூன்று தென்னந்தட்டி போட்டு சின்ன கூரை. (ஜெயகாந்தனின் சாம்ராஜ்யம் எனக்கு டக்குன்னு நினைவுக்கு வருகிறது!) உயர்நிலைப் பள்ளிக்கு வந்ததும் மழைக்காலம் தவிர மற்ற மாதங்களில் நான் படிக்கும், தூங்கும் இடமாக இது இருந்தது.
கீழே ஒரே ஒரு அறை சொன்னேனே … அதை ஒட்டி ஒரு நாட்டு ஓடு போட்ட கூரை கொண்ட சின்ன தட்டடி / வெராண்டா …. அல்லது அது மாதிரி ஒண்ணு. மழை பெஞ்சா ஒழுகும். அங்கங்கே சில பாத்திரங்கள் வைத்தால் போதும். மழைக்காலத்தில் ஜலதரங்கம் வாசிக்கும் போது அங்கேயே படுக்கையைப் போட்டு, ராஜாக்கள் மாதிரி பின்னணி இசையோடு தூங்கலாம்.
கிணற்றை ஒட்டிப் பின்புறம் மூங்கில் பாய்கள் வைத்து ஒரு சமையலறை. விதவிதமான அடுப்புகள் இருக்கும். விறகு வைத்து எரிக்கும் நார்மலான அடுப்பு; கரி அடுப்பு; உமி அடுப்பு; மண்ணெண்ணெய் அடுப்பு … இப்படி வகைவகையாக அடுப்புகள் இருக்கும். கால தேச வர்த்தமான வித்தியாசங்களுக்கு ஏற்றது மாதிரி அடுப்புகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்துவோம்.
What a space management? கிச்சனுக்குள் ஒரே ஒரு அலமாரி உண்டு. அலமாரிகள் என்றால் அந்த வீட்டில் எல்லாமே ஓப்பனாக, மரத்தட்டு வைத்த சாதி அலமாரிகள் தான். சமையல் சாமான்கள் – அரிசி தவிர – எல்லாம் அங்கே அடக்கம். கடைசி ஓரத்தில் இரண்டு மூங்கில்களை வைத்து படுக்கை வசத்தில் உயரமாக ஓரமைப்பு. அதன் மேல் விறகும், எருவாட்டியும் இடம் பெறும். கீழே உள்ள இடத்தில் பலவகை movable அடுப்புகள் இருக்கும். இன்னொரு ஓரத்தில் தண்ணீர்ப் பானைகள்.
வெராண்டாவில் ஒரு பக்கம் ஒரு சின்ன அலமாரி.அதன் எதிர்ப்பக்கம் மாடிப்படியின் வளைந்த கீழ்ப்பகுதி. அந்தப் பகுதியில் தரையில் பதித்த ஒரு ஆட்டுக்கல். மீதி உள்ள இடத்தில் ஒரு நார்க்கட்டில். அது அப்பாவின் அரியணை. மழைக்காலத்தில் அந்தக் கட்டிலின் கீழே என் படுக்கை. Very cozy! மழை பெஞ்சாலும் தண்ணீர் என் மேல் ஒழுகாதுல்லா ….! குளிருக்கும் அடக்கமா இருக்கும்.
15 x 12 அறை ஒண்ணு சொன்னேனே … அதில் உயரத்தில் ஒரு ஜன்னல். அது வழியாகப் பார்த்தால் அடுத்த வீட்டு மெத்தை வீடு தெரியும். அவுங்க பார்த்தால் நம்ம வீடு அனைத்தும் தெரியும். அப்படி ஒரு வசதி. அங்கே ஒரு பெண்ணும் இருந்தது என்பது டபுள் விசேஷம்! ரெண்டு பக்கமும் கட்டை போட்ட சேந்தி (loft) இருக்கும். கிழக்குப் பக்கத்தில் இருக்கிறது பெருசா இருக்கும். பெட்டிகள் எல்லாம் அதன் மேல். இதுக்குக் கீழே எப்போதும் பத்துப் பன்னிரண்டு நெல் மூட்டைகள் இருக்கும். மூட்டைகளுக்கும் சேந்திக்கும் நடுவில் உள்ள இடத்தில் படுக்கிற படுக்கை … தலையணை…
இதை ஒட்டி ஒரு அலமாரி. அதில் மேல் தட்டு எனக்கே எனக்கு மட்டும். புத்தகம் வைத்திருக்கிற இடம். இதுக்குள்ள தான் தெரியாமல் கதைப் புத்தகங்களை செட்டப் செஞ்சி ஒளிச்சி வச்சி அப்பா அம்மாவுக்குத் தெரியாம படிக்கணும். என் தட்டின் ஒரு ஓரத்தில் சீப்புகள் வைக்கிற இடம், இதை ஒட்டி ஒரு பெல்ஜியம் கண்ணாடி. இதுக்கு அப்பா ஒரு கதை சொல்வாங்க. அவருக்குத் தெரிஞ்ச சலூனில் பெரிய கண்ணாடி ஒண்ணு இருந்துச்சாம். சுதந்திரத்துக்கு முன்னால் இது நடந்தது. சலூன்காரர் காந்திக்காரர். அது தெரிஞ்ச போலீஸ்காரங்க இவரு கடையில நுழைஞ்சி எல்லாத்தையும் உடச்சிட்டுப் போய்ட்டாங்களாம். உடஞ்சதில சில துண்டுகளை எடுத்து வாடிக்கையாளருக்கு அன்பளிப்பா கொடுத்திருக்கார். ஆனால் நல்ல கண்ணாடி… no aberrations at all! எல்லாம் கிளியரா காமிக்கும். அதுக்காக அப்பா ஸ்பெஷலா போட்ட கட்டை பிரேமும் நல்லா இருக்கும் – கலரே மங்காமல் அப்படியே இருந்திச்சி.
நெல்மூட்டைகளைத் தாண்டி ஒரு மேசை .. ஒரு நாற்காலி. தெருவில் விற்றுக் கொண்டு போனதை வாங்கியதாக அப்பா சொல்வார்கள். செம ஸ்ட்ராங்க். நல்ல வெய்ட்டாக இருக்கும். புது வீட்டுக்கு அதை எடுத்துக் கொண்டு போக வேண்டாம்; புதுசு வாங்குவோம்னு அப்பாட்ட சொன்னேன். ‘போடா இவனே… பழச மறக்கக் கூடாது’டா’ன்னு சொல்லி புது வீட்டுக்கும் கொண்டு வந்துட்டார். நான் அந்த வீட்ல இருக்கிற வரைக்கும் ஒரே இடத்தில இருந்து ’தன்னிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருந்தது’!
மேஜையை அடுத்து ஒரு சின்ன மாடக்குழி. அதில் ரொம்ப வருஷத்துக்கு ரெண்டே ரெண்டு விஷயம் இருக்கும். ஒண்ணு பெத்த அம்மாவின் முதல் நினைவு நாளன்று அடித்த ஒரு சிறு அட்டை. அம்மாவின் படம் சிறிதாக இருக்கும். ப்ரேம் போட்டிருக்கும். அது ஒன்று; இன்னொன்று ஒரு மிக அழகான கண்ணாடித் தட்டு. வெளிநாட்டு சரக்காம்! நிறைய பூ வேலகள் செய்த சின்னக் கண்ணாடித் தட்டு. அதில் தான் வீட்டுச் செலவுக்கான சில்லறைக் காசுகள் கிடக்கும். அப்பா வாட்ச் வைக்கிறதும் இங்கே தான்.
நம்ம பெரிய அறைக்கு ஒரு பெரிய கதவு. உட்பக்கமாகத் திறக்கணும். கதவின் நடுவில் ஒரு மரப்பட்டி இருக்கும். அது எனக்கு நல்ல வசதி. இந்தக் கதவை ஒட்டி மேலே ஒரு சேந்திக் கட்டை இருக்கும். அம்மா நிறைய பலகாரம் செய்வாங்க. முருக்கு முக்கிய பண்டம். அதுக்கு மேல லட்டு, அதிரசம் .. இப்படியானவைகளைச் செய்து பத்திரமாக இருக்கணுமேன்னு ஒரு டப்பாவில போட்டு அந்த சேந்தியில வச்சிருப்பாங்க. முருக்கு இருக்கிறப்போ அம்மா லேசா வீட்டுக்கு வெளிய போனாக்கூட நான் கதவில் அந்தப் பட்டியில கால் வச்சி ஏறி இருக்கிறதில்ல கொஞ்சம் எடுத்து கால்சட்டைப் பைக்குள் போட்டு ஒரு தட்டு தட்டினால் எல்லாம் உடைந்து இருக்கும். அப்பப்போ எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.
இப்படி சாப்பிடுவதில் ஒரு பிரச்சனை உண்டு. அனேகமாக உங்களில் மிகப் பலருக்கும் அது தெரியாது.அது என்னன்னா …. இப்போவெல்லாம் துணி துவைக்கிறது வீட்ல மட்டும் தான். Hand wash … machine wash…. ஆனா அப்போவெல்லாம் வீட்டுக்கு வீடு வண்ணார்கள் வருவார்கள். துணியெடுத்துட்டு, வெளுத்து, பெட்டி போட்டுக் கொண்டு வருவார்கள். துவைப்பது காய வைப்பது எல்லாம் ஏதாவது ஒரு ஆத்தோரம். வெளுக்கிறதுக்கு முன்னால் வெள்ளாய் வைப்பார்கள். அப்டின்னா …. துணிகளை பெரிய மூட்டையா கட்டி ஒரு அடுப்பு மேல வச்சி கீழே நெருப்பு வச்சி சூடாக்குவாங்க. அட … அதுக்கு முன்னால துணிகளை உவர் மண்ணில் தோய்த்து எடுப்பார்கள். உவர் மண்ணுன்னா … உப்பு மண்ணு. இப்படி துவைத்தால் தான் துணிமணி நல்லா இருக்கும். அழுக்கு போகும். இதில் எனக்கு என்ன பிரச்சனைன்னா … உவர் மண்ணு போட்டு துவைப்பாங்களா… கால்சட்டைப் பையில் எப்போதும் பொடி மணல் இருக்கும். அது நம்ம ஆட்டை போட்ட கடைசி முருக்கில் ஒட்டிக் கொள்ளும். ஆகவே நம்ம முருகப் பெருமான் ஒளவைப் பாட்டிக்கு சொன்னது மாதிரி முருக்கை ஊதி ஊதி சாப்பிடணும். இப்பவும் கால்சட்டைக்குள் கையை விட்டு ஏதும் எடுக்கும் போது அப்பப்போ அந்த மண் நினைவு வருவதுண்டு.
கதவு சொன்னேனே … அதை முழுவதுமாகத் திறக்க முடியாது. ஏன்னா கதவுக்குப் பின்னால் அம்மா தைக்கிற தையல் மெஷினும், அரிசி ட்ரம் ஒண்ணும் இருக்கும். அரிசி ட்ரம் தான் அம்மா தைக்கும் போது நாற்காலியாக மாறி விடும்.
இந்த இங்கல் இடுக்கலில் அப்பா சைக்கிள், நான் கல்லூரி போன பின் என் சைக்கிள்; ஆக இரண்டு சைக்கிள்களுக்கும் எப்படியோ இடம் பிடித்து விடுவோம். முன்னால் உள்ள போர்ஷனிலேயே வைத்து விடுவோம். எல்லாத்தையும் சொன்னேன். ‘கக்கூஸ்’ பத்தி மட்டும் சொல்லவேயில்லை. அவ்வளவு பேருக்கும் ஒண்ணே ஒண்ணு. எப்படி .. என்னன்னு இப்போ யோசிச்சா …. பயமா இருக்கு. அதப் பத்தி மட்டும் சொல்ல வேணாம். Choice-ல விட்டுருவோம்!!! Let it be a completely forgotten page ……
*
17 comments:
உங்கள் வாழ்க்கை அனுபவத்தோடு கூடவே நான் வசித்த வீடுகள் , இறைத்த கிணறுகள் , கூத்தடித்த நண்பர்கள் என்று என் அனுபவத்தையும் அசை போட வைத்து விட்டீர்கள் . இயல்பான அழகிய நடையில் ஒரு பெரிய நாவலின் முதல் அத்தியாயம் வாசித்த அனுபவம் ஏற்பட்டது .
Correct. Let it be a forgotten page.
அருமையா கதை மாதிரி சொல்லறீங்க. நல்லா இருக்கு.
அது நாளி இல்லை நாழி. ம்ம்ம் கண்டின்யூ :)
தற்போதைய சிறுவர்கள் கிணறு என்ற ஒன்றை பார்த்திருக்கவே வாய்ப்பில்லை ஐயா
தம 1
இந்த மாதிரிய சிந்தனைகள அன்று இருந்ததா.?
அந்த நாள் வாழ்க்கைச் சூழலை எழுத்தால் படம் பிடித்துக் காட்டி விட்டீர்கள்.
தனித்தமிழ் பற்றிய என் பதிவின் பின்னூட்டத்தில் தவறான இணைப்பின் சுட்டி கொடுத்து விட்டீர்கள் ஐயா! சரியான சுட்டி அளிக்கவும்
கொத்ஸ்,
நாழியில் சரியாக அளந்து தந்தமைக்கு நன்றி. திருத்தி, திருந்தி விட்டேன்.
கன்டினியூட் ......
சென்னைப் பித்தன்,
உங்கள் பானைச் சோற்றை உங்களுக்கே படைத்தது போல் செய்து விட்டேனே!! மன்னிகவும். சரியான தொடுப்பு : http://dharumi.blogspot.in/2006/05/159.html
G.M.B.,
அன்றும் இருந்தது - அப்பாவுடன் அதே பள்ளியில் வேலை பார்த்த பெரியப்பாவின் வீட்டை ஒப்பிட்டிருக்கிறேன் - மனதிற்குள், மெளனமாக ... அது ஒரு a comparative study!!
க. ஜெயக்குமார்
வீட்டுக்கு ஒரு கிணறு என்பது இன்று யோசிக்கவும் முடியாத ஒன்று தான். கிணறு இன்றும் வெட்டலாம் .... தண்ணீருக்கு எங்கே போவது..??
கந்தசாமி அண்ணன், சார்லஸ்,
அப்டீன்றீங்க ....??
நன்றி
சுவையாக ஓர் வீட்டை படம் பிடித்து காட்டி விட்டீர்கள்! காட்சிப்படுத்தியவிதம் சிறப்பு! வலைச்சரம் 7-7-15 செவ்வாய் கிழமை உங்கள் தளம் அறிமுகம் செய்துள்ளேன்! நேரமிருப்பின் சென்று பாருங்கள்! நன்றி!
வலைச் சரத்தில் என்னைக் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி. அங்கே நன்றி சொல்ல வேண்டாமென நினைத்து இங்கு நன்றி சொன்னேன்.
சுவரஸ்சியமாக சொல்லியுள்ளீர்கள்.
ஏதோ எங்கள் வீட்டில் நடப்பதைப் போல உள்ளது. தங்களது எழுத்து எங்களை உங்களுடன் கைகோர்த்து அழைத்துச் செல்கிறது. நன்றி.
ஐயா,
உங்கள் எழுத்துக்கள் சொல்லும் செய்திகள் தெளிந்த நீரோடையாய் மனதில் இதம் சேர்க்கும் எதார்த்த உண்மை சம்பவங்கள் படிக்கும்போதே காட்ச்சியை விவரித்து மதுரைக்கு இட்டு செல்கின்றது.
சுவாரசியமான வாழ்க்கை பகிர்வு.
நன்றி
கோ
Post a Comment